Advertisement

பகுதி – 25
“ஏய் ரோட்ட பார்த்து ஓட்டுடா… இங்கென்ன பார்வை” என மிரட்டலாக உச்சரித்தான் பிரியனின் கையாள் ஒருவன்.
அவன் இப்படி மிரட்டலாக எச்சரித்தது பார்த்திபனை தான். ஏனென்றால், பயந்த பார்வையுடன் மலர் தன்னுடைய தோள் வளைவில் ஒளிந்துகொள்ளவும் மிகச் சரியாகப் பிரியனின் வண்டி அவர்களுக்குச் சமீபத்தில் எதிர் திசையில் நிற்கவும் மிகச் சரியாக இருந்தது.
யோசனையுடன் முதலில் அந்தத் திசையில் பார்த்தவன், உள்ளிருந்த பிரியனை பார்த்துவிட்டிருந்தான். பிரியனை பார்த்ததும் அவன் யாரென்று இனம் கண்டுகொள்ள வெகு நேரம் பிடிக்கவில்லை. முன்பே அவனைத் திருமுண அழைப்பிதழ் சுவரொட்டியில் பார்த்திருந்தானே ?
பிரியனின் வரவும் மலரின் அச்சமும் நடுக்கமும் ஒன்றோடரொன்று தொடர்புடையது என்று யூகிக்கப் பார்த்திபனுக்கு வெகுநேரம் பிடிக்கவில்லை. இன்னதென்று தெளிவாகப் புரியாது போனாலும், ஏதோவொன்று இருக்கிறதென்று அவன் உள் மனம் அடித்துக் கூறியது. அந்த உள்ளுணர்வின் அடிப்படையிலையே, பிரியனை தனது வண்டியிலிருந்தபடியே ஆராய்ச்சியாகப் பார்க்க, அக்கணம் பிரியனும் எதேர்ச்சியாக அந்த வாகனத்தைப் பார்க்க, அவனுக்குப் பார்த்திபன் மட்டுமே கண்களுக்குத் தென்பட்டான்.
காரணம் பிரியன் அமர்ந்திருப்பது கார். லாரி உயரத்தில் பெரிது என்பதாலும் பக்கத்தில் இருக்கிறதென்றதாலும் லாரியிலிருந்து தன்னைக் காணும் பார்த்திபன் மட்டுமே, பிரியனுக்குத் தென்பட்டான்.
பனிமலரோ பூதமோ காரிலிருப்பவர்களுக்குத் தென்படும் சாத்தியமில்லாமல் போனது. பார்த்திபனின் பார்வை வெகு கூர்மையாக இருந்தது… பிரியனை ஆராயும் கூர்மையுடன் குத்தி கிழிக்கவே, தற்செயலாகப் பார்த்த பிரியனின் பிருவங்கள் முடிச்சிட்டன.
பக்கத்திலிருந்த அவனின் ஆட்களிடம் பிரியன் பார்த்திபனை நோக்கி சமிஞை செய்ய, உடனே அவர்களும் தான் தான் வீரன் சூரன் என்ற ரீதியில் பார்த்திபனை எச்சரித்தனர்.
ஒருவன் எச்சரிக்கை, மற்றொரு கையாளோ, பார்த்திபனை யோசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தான். அவனுடைய சிந்தனையோ, ‘இவன எங்கையோ பார்த்துருக்கேனே’ என ஓடியது.
ஆம்! அவனுடைய யோசனை சரியே! இப்போது யோசிக்கின்ற அவன் தான், அன்று அவர்களின் ஊரில் பார்த்திபன் மற்றும் பூதத்தை விசாரித்துக் கிளப்பிவிட்டவனில் ஒருவன். ஆனால், அவனுக்குப் பார்த்திபனை பார்த்த நினைவு இருந்ததே ஒழிய, எங்குப் பார்த்தோமென்று பிடிபடவில்லை….
அதைக் கண்டுபிடிக்க, தலையைத் தட்டி யோசிக்க, அதற்குள் இரண்டு வண்டிகளும் எதிரெதிர் திசையில் முன்னேற தொடங்கியிருந்தன. 
வண்டிகள் கிளம்பினாலும், தலையைத் திருப்பிப் பார்த்திபன், செல்கின்ற பிரியனை பார்த்த பார்வையில் எச்சரிக்கை கலந்த ஆராய்ச்சி இருக்கவே, பிரியன் நிதானித்தான்.
“டேய்! வண்டிய திருப்புடா…அவன் பாக்குறது சரி இல்ல. என்னவோ இருக்கு….” என அவசரப்படுத்த, பிரியனின் வண்டி ஓட்டுனரோ, “அண்ணே! ஜாம் ஜாஸ்தி அண்ணே..இன்னு ஒருகிலோ மீட்டருக்கு வண்டிய திருப்ப முடியாது.
அண்ணே..போய்ப் போய் அவன்னெலாம் ஒரு ஆளுனு…. இத்தாம்பெரிய வண்டிய பாத்துருக்கமாட்டான். உங்க வண்டிய பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பார்த்தது போலப் பார்த்திட்டுப் போறான். அவனைப் போய்ப் பாலோவ் பண்ண சொல்லுறீங்களே…” எனக் கூற,
பார்த்திபனை நோக்கி எச்சரிக்கை குரலில் கூறிய கையாளும், “ஆமா அண்ணே! அவன் நம்ம வண்டிய தான் பார்த்தான்” என ஒத்து ஊதினான்.
ஆனால் மற்றொரு கையாளோ, ‘இவன எங்கென்ன பார்த்தோம் ?’ என்ற சிந்தனையிலையே ஆழ்ந்திருக்க, பார்த்திபனின் லாரியும், பிரியனின் வண்டியும் கொஞ்சம் கொஞ்சமாக எதிரெதிர் திசையில் முன்னேறி மெல்ல மெல்ல விலகத் தொடங்கியது…
பிரியனோ, மீண்டுமொருமுறை வண்டியின் ஜன்னல் வழி எட்டி பார்த்திபனின் லாரியை காண, இப்போது அந்த லாரியின் நம்பர் பிளேட் அவன் கண்களில் பட்டது….
பிரியனின் பார்வை, பார்த்திபனை தேட, அப்போதோ பார்த்திபன் இவனைக் காண முயலவில்லை. அக்கணம், மலரின் கரத்தை ஆதரவாகப் பற்றியபடி, “வண்டி நகர ஆரம்பிச்சிடுச்சு மலரு…வீட்டுக்குப் போய்டலாம்” எனச் சிறு குழந்தைக்குச் சொல்பவனைப் போல ஆறுதல் கூற, அதைக் கேட்டபின் தான் மலர் தலையை நிமிர்த்தினாள்.
மூச்சும் அப்போது தான் அவளுக்குச் சீராக மாறியது….
பார்த்திபனின் வீட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பேச்சும் சிரிப்புமாக இருந்தது. அதற்குக் காரணம் சூரியவர்மனே!
“அம்மா! தம்பி சொந்தமா லாரி வாங்கிட்டான். அதோட இன்னைக்கு அவன் மட்டும் வராமல் இருந்திருந்தால்…” எனத் தொடங்கி நிகழ்ந்த அனைத்தையும் சொல்லி முடிக்கவும், நித்ய கலா கூட ஒருநொடி நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
“என்னங்க உங்களுக்கு ஒண்ணுமில்லைல?” எனப் பதறினாள். அந்த நொடி, பார்த்திபனை, நித்யாவினால் தள்ளி நிறுத்தி பார்க்க முடியவில்லை. அதற்காக அவள் அடியோடு மாறிவிட்டாள், அவளின் குணம் மாறிவிட்டதென்று சொல்லமுடியாதென்றாலும், அந்த நொடி பார்த்திபனை ஒதுக்கி வைத்து அவள் மனம் பார்க்கவில்லை.
சூரியவர்மனை போன்று நித்ய கலாவும் உடனடியாக மாற்றம் கொள்ள முடியாதே…முன்பெல்லாம் பார்த்திபனென்றால் இரண்டாம் பட்சம் என்ற எண்ணம் இருக்கும். இனிமேல் குறைந்தது அந்த எண்ணம் இருக்காது…
பார்த்திபனை ஒதுக்கி வைக்கவேண்டுமென்று மட்டும் அவள் மனதில் எழாது. அதற்காகத் தான், தன் கணவன் என்ற குடும்ப அமைப்பே அவளின் பிரதானமாக இருக்கும் வருங்காலங்களிலும் இருக்கும்…ஒருவேளை, பிற்காலத்தில் மாறலாம்! மாறவேயில்லாமலும் போகலாம்!
எதுவாகினும் தற்சமயம், பார்த்திபனை அவள் தள்ளி வைக்க நினைக்கவில்லை. பார்த்திபனிடம் மனதார நன்றி கூறினாள்…
அதே போல, பார்த்திபனே எதிர்பார்த்திடாத அதிசயம் ஒன்றும் நிகழ்ந்தது. அது பார்த்திபனின் அக்கா தாரா தேவியின் வார்த்தைகள்…
“பார்த்தி… எம்புட்டு லோன் எடுத்துருக்கடா? என் வீட்டுக்காரு பணம் அனுபுறேன்னு சொன்னாரு டா… இப்ப வாங்கிக்கோ…பின்னாடி இங்க வந்து அவர் தொழில் தொடங்கும் போது கொடுத்தால் போதும்” எனக் கூற, குடும்பமே அவளை விசித்திரமாகப் பார்த்தது.
தாரா தேவியின் வார்த்தைகளை அங்கிருந்த எவராலும் நம்ப இயலவில்லை… ஆனால், அந்த வார்த்தைகளை ஒரு மென்முறுவலுடன் மலர் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.
ஆம்! மிதமான முறுவலொன்று மலரின் இதழில்!! மலர் வீட்டுக்கு வந்த பிறகு தான் சற்றே ஆசுவாசமாக உணர்ந்தாள்!
வீடு வந்து சேரும் வரையிலும் கூட அவளுடைய படபடப்பு அடங்கவே இல்லை. ஏதேதோ எண்ணங்கள் அவள் உள்ளத்தே தோன்றி அவளை மிரட்டின. பயணம் முழுவதிலும் பார்த்திபன், பிடித்த அவளுடைய கரத்தை விடவே இல்லை. அவனுடைய கரம் மலரின் மனதிற்கு அத்தனை இதத்தைக் கொடுத்ததென்றால் அது மிகையல்ல….
வீடு வந்து சேர்ந்த பிறகு தான், முழுவதுமாகத் தெளிந்தாள். மற்றவர்கள் ஒவ்வொன்றாக லாரியை பற்றியும் காலையில் நிகழ்ந்த சம்பவத்தைப் பற்றியும் விசாரித்துக்கொண்டிருக்க, அங்கு இருவர் மெளனமாக நின்றனர். ஒருவர், பார்த்திபனின் தாய்… மற்றொன்று பார்த்திபனின் தாரம் என்ற பெயரில் உள்ள மலர்!
மலர் தன்னுடைய படபடப்பை குறைத்து, தனது நினைவை பிரியனிடமிருந்து பிரித்து  வெளிவர முயன்றுகொண்டிருக்க, தாமினி தேவியோ முதல் முறையாகக் குற்ற உணர்வுடன் அமர்ந்திருந்தார்…
அவருடைய கண்கள், பார்த்திபனை தழுவினாலும், அவரால் சட்டென்று எதுவும் பேச முடியவில்லை. அவருக்குத் தாய் பாசம் இல்லாமலில்லை…ஆனால் அதையும் தாண்டியதொரு நம்பிக்கை. அது நிச்சயமாக மூடநம்பிக்கையே! அது அவரையும் அறியாமல் வளர்ந்து கொண்டே வந்து, ஒருநாள் வெடித்தும் சிதறியிருந்தது….
அதை அவர் மறுநொடி உணர்ந்தாலும், அவரைப் பெரும் குற்ற உணர்வு ஆட்கொண்டுவிட, அந்தக் குற்ற உணர்வு பெரும் தளையையும் ஸ்ருஷ்டித்தது. பார்த்திபனிடம் பேசும் எண்ணம் இருந்தும், அப்படிப் பேசினால் பார்த்திபன் தன்னிடம் கேட்க போகும் கேள்விக்கு அவரிடம் பதில் இல்லாத காரணத்தினால் மெளனமாக இருந்தார்…
நெருப்பை கையாள்வதை போன்று வெகு கவனத்துடன் வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும் என்பது தாமினி தேவியின் விஷயத்தில் மெய்யானது…
“எப்படிம்மா? பெத்த பிள்ளையை இப்படி ஒரு காரணத்துக்காகப் பிரிச்சு பார்க்க முடுஞ்சது ?” என்ற கேள்வியே! இந்தக் கேள்வியைப் பார்த்திபன் நேருக்கு நேராகக் கேட்டுவிட்டால், அதற்கான பதில் அவரிடம் இப்போதென்றில்லை, வேறு எப்போதுமில்லை!
இப்போது, தன்னுடைய கர்வமாக நினைக்கும் சூரியவர்மனின் மரியாதை பார்த்திபனால் தான் காப்பாற்ற பட்டது என்று அறிந்ததும் சென்று பேசினால், மீண்டும் எங்கே தன்னுடைய மூத்த மகனுக்காக மட்டுமே பேசவந்துள்ளார் என்று பார்த்திபன் எண்ணிவிடக் கூடுமோ என அவர் உள்ளம் பயம் கொள்ளத் தொடங்கியது.
ஏதோவொரு வகையில் தாமினி மறுகிக்கொண்டே இருந்தார் என்பது மட்டுமே உண்மை. அதற்குக் காரணம், அவருடைய குற்ற உணர்வே…பிறர் நம் மீது சொல்லும் குற்றங்களைக் கடந்தும் வர இயலும் உடைத்தும் வர இயலும்… ஆனால், நம் மனசாட்சி நம் முன் விஸ்வரூபம் எடுத்து எழுப்பும் கேள்விகளுக்கு நம்மால் ஒருபோதும் பதிலளிக்க முடியாது. அந்த நிலையில் தான் அவர் நின்றார்…
இதை அவரைத் தவிர, அவரின் நிலையிலிருந்து அனுபவிக்கும் ஒருவரை தவிர வேறு எவராலும் உணர்ந்துகொள்ள முடியவே முடியாது.
மெளனமாக எழுந்து உள்ளே செல்ல, பார்த்திபனின் கண்கள் ஏக்கத்துடன் தாயை தொடர்ந்தன. செல்கின்றவரை தடுத்த சூரியவர்மன், “என்னமா ? உள்ள போறீங்க ?” எனக் கேட்டு தடுக்க,
“கொஞ்சம் தல சுத்துதுயா… நீங்க பேசிட்டு இருங்க. பார்த்தியையும் மலரையும் சாப்பிடவாச்சு அனுப்புங்க. நாளைக்குக் காலைல முதல் வேலையா நம்ம குல தெய்வ கோவில்ல பூஜை போட சொல்லிடு. பக்கத்தில இருந்து பார்த்துக்க…” எனப் பொதுப்படையாகக் கூறி செல்ல,
பார்த்திபனின் கண்கள் வேதனையில் சுருங்கின. பார்த்திபனிடம் நேரடியாகப் பேசவில்லை என்றாலும், அவர்களை இங்கே சாப்பிட்டுவிட்டுச் செல்லும்படியாகச் சொல்லியிருந்தது அன்னையின் மனம். இது மாற்றம் தான்…நிச்சயமாகத் தாமினியின் மனதில் வந்துள்ள மாற்றம்தான்… ஆனால், இது பார்த்திபனின் ஏக்கத்திற்குப் போதாதே!
மேற்கொண்டு அவனைச் சிந்திக்கவிடாமல் மீண்டும் ஒலித்தது அவனுடைய அக்காவின் குரல்.
“சொல்லு டா…எம்புட்டுப் பணம் ?” எனக் கேட்க, சூரியவர்மன் நேரடியாகத் தாமினியிடம் கேட்கவே செய்துவிட்டான்.

Advertisement