Advertisement

“ஏன் இப்படித் தோணுது? என்ன ஆச்சு எனக்கு ? பார்த்திபா சூதானமா இரு… ” என அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டு அங்கிருந்து விறுட்டென்று வெளியேறிவிட,
பனிமலரோ கோபமாக, “எல்லாரும் ஏன் அவரைச் சாப்பிடவிடாம அனுப்பிவிடீங்க ?” எனக் கேட்க,
“ஓ அவன் சாப்பிடாமல் போய்ட்டானு நினைச்சியா? தட்டு காலி ஆகிடுச்சு…அவன் தட்டுமட்டுமில்ல. நீ கொண்டுவந்த தட்டே காலி ஆகிடுச்சு…. பையன் போனதுக்குக் காரணம் பலகாரம் காலினு” எனக் கிண்டலாகப் பாட்டி சொல்ல,
“பலகாரம் இல்ல பாட்டி பால் பக்கோடா” எனப் பூதம் எடுத்துக்கொண்டான்.
இவர்களின் இந்தப் பேச்சு பனிமலருக்கு அவஸ்தையான இன்பத்தை அள்ளி கொடுத்தது…
நாட்கள் அழகாக நகரத் தொடங்கின. அதாவது, நாளும் கிழமையும் வழமை போலவே தான் இருந்தன…. ஆனால் தலைவன் தலைவியின் இருதயத்தில் அரும்பிட தொடங்கிய காதல், அவர்களுடைய நாட்களை மணக்க செய்திருந்தன….
இப்போதெல்லாம் ஒருவரை ஒருவர் பார்க்கும் பொழுதில் ஒருவித பரவசம் உண்டானது… பார்த்திபனின் முகம் பார்த்து பனிமலர் பேச தொடங்கியிருந்தாள்…. அவளுக்குப் பிடித்தது!
பார்த்திபன் சிரிப்பது பிடித்தது…அவனைச் சிரிக்கவைத்துப் பார்ப்பது இன்னமும் பிடித்தது….
அவன் சாப்பிடுவது பிடிதத்து, அவனுக்குப் பிடித்தவைகளைச் சாப்பிடவைத்துப் பார்ப்பது இன்னமும் பிடித்தது…
அவன் இரசித்துப் பேசுவது பிடித்தது, அவனுடைய வாழ்க்கையை அவன் இரசிக்கும் நொடிகள் அதை அவள் இரசிக்க வைக்கும் நொடிகள் அவளுக்கு இன்னமும் பிடித்தது…
ஆனால், அவனுடைய சிரிப்பை தான் ரசிப்பதற்குப் பெயர் காதலென்று அவள் உணரவில்லை. அவனுடைய பிடித்தவைகளைத் தனக்கும் பிடித்ததாக எண்ணும் அவள் மனதில் உண்டான உணர்வின் பெயர் காதெலென்று அவள் உணரவில்லை…
அவனுக்காக அவள் காத்திருக்கும் நொடிகளில் பெயர் காதெலென்று அவள் உணரவில்லை. காதலென்ற சொல் அவளுடைய இதயத்தில் இருந்ததை, இதயத்தின் நரம்புகள் மூளைக்குக் கடத்திச்செல்லவில்லை… அவள் மனம் உரைத்திருந்தாலும் அவளுடைய மதி ஏற்றிருக்குமோ ?
அவளுடைய அறிவை தேவையற்ற சில இருண்ட காட்சிகள் சிறைபிடித்து வைத்திருந்தன, காதல் என்ற சொல்லில் மட்டும்!
ஆனால், பார்த்திபன் உணர ஆரம்பித்தான்… மெல்ல மெல்ல பனிமலரை அவன் தேடுவதை அவன் உணர ஆரம்பித்தான். அப்படி உணரும் நேரத்தில், அங்கிருந்து ஒதுங்கவும் ஆரம்பித்தான்…
அதற்குக் காரணம், இயல்பான அந்தஸ்த்து பிரிவினையே! பணத்திலும் படிப்பிலும் இருவருக்கும் உள்ள ஏற்ற தாழ்வு… இது பார்த்திபனை, பனிமலரிடம் நெருங்காமல் தடுக்கும் பெரும் வேலியாகி போனது.
இந்தவொரு சூழலில் தான், பனிமலருக்கு ஒரு யோசனை தோன்றியது.
அது அவளின் நகைகளைக் கொண்டு தான்…ஆனால் விற்று அல்ல! அப்படிச் செய்வதைப் பார்த்திபன் இப்போதில்லாவிடிலும் எப்போதுமே ஒப்புக்கொள்ளமாட்டான் என அறிந்தவளாய், அதை அடகு வைக்கும் எண்ணத்திற்கு வந்திருந்தாள்.
அதேவேளையில், நகைகளை வைத்து தான் பணம் வருகிறதென்ற செய்தியும் அவனுடைய செவியை எட்ட கூடாது… அதோடு மீண்டும் அவனே உழைத்து நகைகளைத் திருப்ப வேண்டும்…. இதை எப்படிச் சாத்தியப்படுத்தலாம் என்ற சிந்தனை கடந்த சில தினங்களாகவே அவள் இதயத்தில் ஓடிக்கொண்டிருந்தது.
இன்று அவளுக்கு ஒரு யோசனையும் பிடிப்பட்டது… அது பூவம்மாள் பாட்டியின் தயவால் நிகழுமென்று அறிந்தே, பாட்டியை தேடி ஓடினாள்.
கிராம சொசைட்டிகளில் நிலகாரர்கள், நில பத்திரங்களைக் காண்பித்து, நகைகளைச் சொசைட்டியில் அடகு வைத்தால் , சாமானிய வட்டி விகிதத்தை விட, இதன் வட்டி விகிதம் மிகவும் குறைவு…
இவளுடைய நகைகள் மொத்தமும் வைத்தால், பார்த்திபனால் கூட அதைத் திருப்ப முடியாமல் போகலாம். அப்படிப் போனால், பின்னாளில் பார்த்திபன் அறிய நேர்ந்தால், அவனுடைய செயல் என்னவாக இருக்குமென்று மலர் சற்றே அஞ்சவே செய்தாள்.
ஆம்! இந்த இடத்தில மலர் அச்சம் கொள்ளத் தான் செய்தாள். பார்த்திபனின் செயல் பார்த்திபனின் கோபம் பார்த்திபனின் கொள்கை இப்படி அனைத்தையும் கருத்தில் கொண்டு அஞ்சவே செய்தாள். ஒருவருடைய செய்வினையும் நமது செயலுக்கு அவருடைய எதிர்வினையும் என்னவென்று நாம் கருத்தில்கொள்கிறோமென்றால், அந்த நபர் நமது மனதிற்கு அத்தனை நெருக்கம் என்பது பொருள்.
நாம் நெருக்கமாக நினைக்காதவரின் கோபமோ ஆத்திரமோ வெறுப்போ மகிழ்ச்சியோ எதுவும் நம்மைப் பாதிக்காது. ஆனால், நாம் ஒருவரை நம்மை அறியாமலே நமது மனதிற்கு நெருக்கமாக உணர தொடங்கிவிட்டால் கூட, அவருடைய சிறு சுணக்கம் கூட நம்மையும் ஆட்கொண்டுவிடும்….
அந்த நிலையில் தான் மலர் இருந்தாள்…
அவளுடைய வினையும் அதற்கு அவனின் எதிர்வினையும் என்னவென்று கணித்தே செயல்பட்டாள். அதற்கு மலர் தனக்குத் தானே ஒரு பொய் சமாதானமும் சொல்லிக்கொண்டாள். தன்னால் பார்த்திபன் நொந்ததும் இழந்ததும் போதும்…. இனி தன்னால் அவன் மகிழ்ச்சி மட்டுமே கொள்ளவேண்டுமென்று சொல்லிக்கொண்டாள்.
“பாட்டி….” என மூச்சிரைக்கச் சென்றவள், அவளுடைய திட்டத்தைவிவரிக்க,
“நான் சொன்னால் உன்னோட மாமன் கேட்டுருவானா? கொள்கை கொள்ளிக்கட்டைனு வாய்ப் பேசுவான்” எனப் பூவம்மாள் பாட்டி எடுத்து கூற,
“அட அதுக்குத்தானே நான் பூதம் அண்ணனை வரசொல்லிருக்கேன்…இப்போ வந்திரும் பாருங்க… ” என மலர் நம்பிக்கையாகக் கூறிக்கொண்டிருந்தாள்.
அவளுடைய பேச்சை கேட்டபடியே உள்ளே நுழைந்த பூதமோ,
“வேல வெட்டி இல்லாட்டியும் கூட எல்லா நேரமும் பிஸியா இருக்க ஒரே மனுஷன் இந்தப் பிஸி பூதம் தான்…நச்ச்சு நச்சுனு ஒரே நச்சரிப்புப்பா” எனப் பந்தாவாகச் சலித்துக்கொண்டே உள்ளே வந்தான்.
“சொல்லுமா… என் சேவையில் உனக்கென்ன தேவை? சொல் தங்கச்சி சொல்” என டிஆர் பாணியில் கேட்க, பனிமலரும் பாட்டியும் இணைந்து திட்டத்தைக் கூறினர்.
“இது தான் அண்ணே…இது எல்லாமே பாட்டியோட காரண்டீ கையெழுத்துல கடன் தராங்கனு சொல்லி அவரை நம்பவைக்கணும். அதோட சொசைட்டில இருக்க ஆளுங்ககிட்ட அவரு எதையும் விசாரிக்காமலும் பார்த்துக்கணும்…
எப்போ முடிச்சு தருவீங்க ? இங்க இருக்கு நகைப்பெட்டி” எனப் பனிமலர் கூற,
“இது நகைப்பெட்டியில்ல எனக்குச் சவப்பெட்டி….நல்லா போடறமா பிளானு… ” எனப் பூதம் பதில்கொடுக்க,
“எப்படா முடியும்?” எனப் பாட்டி அதிகாரமாகக் கேட்டார்.
“என் சோலிதானே? இந்தா செத்தநேரத்துல முடிஞ்சிடும்” எனப் பூதம் கூறினான்.
“அண்ணா! விளையாடாதீங்க”
“எது நானா நீயா? அவனே ஒரு கொள்கை கோவிந்தசாமி… தெரிஞ்சால் அவன்கிட்ட நான்தான் காலி”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை…பண்ணுங்க”
“ஒண்ணுமே இல்லாம பண்ணிடுவான் மா…என்ன விட்டுரு” எனப் பூதம் கதறினாலும், மலர் விட்டபாடில்லை. பாட்டியும் பனிமலரும் பூதத்தைப் பேசி பேசியே கரைத்து, பார்த்திபனின் கண்மறைவில் அனைத்து ஏற்பாடுகளையும் தொடங்கியிருந்தனர்.
வேலையைத் தொடங்கிய அன்று இரவே,
பார்த்திபன் முன்னிலையில், “பூதம் அண்ணே! நீங்க விளக்குல இருந்து வர்ற பூதமா இருக்கக் கூடாது. அந்த விளக்கை தேய்கிற அலாவுதீனா இருக்கணும்” என ஜாடையாகப் பனிமலர் கூறினாள்.
“ஆத்தா அவிச்ச முட்டை சோத்துக்கு வைக்குமான்னு இருக்கவன்கிட்ட போய் அலாவுதீனா இரு, அலமாரியா இருனு சாவடிக்கிறானுங்களே” என முணுமுணுத்துக்கொண்டான்.
பார்த்திபனை, ஓர கண்ணால் பார்த்தபடியே, மலர், “என்ன அண்ணே புருஞ்சுதா ?” எனக் கேட்க,
“நல்லா புரிஞ்சது! பூதம்ங்கிற பேர சீக்கிரம் மாத்தணும்னு புரிஞ்சது” எனப் பூதம் பதில்கொடுத்து, பனிமலரின் முறைப்பை பெற்றுக்கொண்டான்.
“ஏம்மா என்ன ஏன் முறைக்கிற? எதுனாலும் உன்னோட மாமன்கிட்ட நேர சொல்லிடு… மாமா மாமா இதுதான்மா பிளான்மா… கொஞ்சம் கேளும்மானு பேசேன்மா” எனப் பூதம் எடுத்துக்கொடுக்க,
பூதம் கோர்வையாகக் கூறிய விதத்தில், மலர் வார்த்தை தவறி, “மாமா மாமா….” எனப் புன்னகையுடன் சட்டென்று வார்த்தையை விட்டிருந்தாள்.
அந்த வார்த்தைகளை உச்சரித்த பிறகே, அது அவளுடைய புத்திக்கு எட்ட, சட்டென்று நாக்கை கடித்து, உதடை மடக்க, அவளின் அந்தப் பாவனை, மலரின் ஏதார்த்தமான அழைப்பில் அதிர்ந்து ஏறிட்டு பார்த்த பார்த்திபனின் பார்வையில் தப்பாமல் விழுந்தது.
அவளுடைய இந்தப் பாவனைப் பார்த்திபனின் இமைகளுக்குத் தளையிட்டன. இமைக்கமறந்து, இமைகளை அசைக்கமறந்து பார்த்தது பார்த்தபடி அவனுடைய கட்டுப்பாட்டையும் மீறி, மலரின் முகத்தினில் பார்த்திபனின் கண்கள் நிலைத்துவிட,
மலர், காதுகளைச் செல்லமாகப் பிடித்துக்கொண்டு, “சாரி” என உதடசைத்தாள்….
“ஒரு புளோவுல வந்திடுச்சு” எனப் பார்த்திபனுக்குச் சமாதானம் கூறுவதைப் போன்றே தன்னுடைய மனசாட்சிக்கும் சேர்த்துகூறிக்கொண்டாள்….
அவளின் இந்தச் செயல், மெய்மறந்திருந்த பார்த்திபனை சட்டென்று சுயத்திற்கு இழுத்தது… அப்படி அவன் சுயஉணர்வு கொண்டதும், “அவ வேற, நீ வேற…இது வேணாம்” எனத் தலையை உலுக்கி தனக்குள் முணுமுணுத்துக்கொண்டவன், குனிந்து இரவு சாப்பாட்டைச் சாப்பிடுவதைப் போன்ற பாவனையில் தலையைத் தட்டில் நுழைத்துக் கொள்ள,
அதேவேளையில் இதை எதையும் அறியாமல், மலர் மெல்ல பேச்சை ஆரம்பித்தாள்.
“வேலை தேடிக்கிட்டே இருந்தால், எப்பவும் தேடிகிட்டு மட்டும் தான் இருக்கணும்ங்க… உங்களுக்கான வேலையை நீங்க உருவாக்கிட்டால், உங்களை யாராலயும் வெளில போகச் சொல்லமுடியாது….கொஞ்சம் யோசிச்சு பாருங்களேன்…இதை இதுக்குமேல எப்படி நீங்க செயல்படுத்துவீங்கன்னு எனக்குத் தெரியாது.
ஆனால், எனக்குத் தோணினதை சொல்லிட்டேன்” எனப் படபடவென்று கூறிவிட்டு, அவனுடைய சிந்தனைக்குப் பிள்ளையார்ச்சுழியைப் போட்டுவிட்டதாக எண்ணி அங்கிருந்து அகன்றாள்.
ஆனால், பனிமலருக்கு தெரியவில்லை…. அவள் அவனை யோசிக்கவைத்துவிட்டு செல்லவில்லை…அவன் யோசனைகளையே களவாடி செல்கிறாளென்று…

Advertisement