Advertisement

பகுதி – 35 (2)

“எனக்குத் தெரியும் மலர்… உன்னால அப்படிச் சட்டுனு என்ன எல்லாரு முன்னாடியும் காட்டி கொடுக்க முடியாது. ஏதோவொரு வகையில நான் உன்ன பாதிச்சிருக்கேன். சரிதானே ?

எனக்குத் தெரியும் மலர்…

நான் ஏன் தெரியுமா நீ குளிக்கிறப்ப வீடியோ எடுத்து மிரட்டினேன். எல்லாம் உன்மேல உள்ள காதல் தான். உன்ன மிஸ் பண்ணிட கூடாதுனு ஒரு பதற்றம் தான்…

என்ன இருந்தாலும் நான் உன்ன முழுசா பாத்துருக்கேன். நம்ம கலாச்சாரம் படி , இதுக்குப் பிறகு வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க உன்னோட மனசு ஒத்துக்காது.” என இந்த வாக்கியங்களைப் பிரியன் பேசி முடித்த மறுநொடி, ஓங்கி ஓர் அரை வைத்திருந்தாள், மலர்!

“என்ன ? கலாசாரம் கள்ளசாராயம்னு டைலாக் விட்டுட்டு இருக்க ? இன்னொருக்க நீ வாய் திறந்த, அடுத்த அடி உன் செவுலுல விழும்.

புரிஞ்சுதா ?

இங்க வந்திருக்கிறதே, நான் சொல்லணும் நீ கேட்கணும். அதுக்கு மட்டும் தான்… புரியுதா ?” எனப் புருவத்தை உயர்த்தி எச்சரிக்கை குரலில் கேட்க,

அந்த எச்சரிக்கையிலும் அவளுடைய உடல் மொழியிலும் ஓர் அசாத்திய கம்பீரம் மிளிர, அந்நிமிடம் அவள், சர்வ ஆளுமையுடன் நிற்கும் மகாராணியைப் போலத் தோற்றமளித்தாள்!

“சரி! நான் எதுக்கு உன்ன கூப்பிட்டேன் தெரியுமா ? உன்னோட முகமூடியை கிழிக்குமுன்னாடி சிவகாமி அத்தை கண் முன் வந்தாங்க. அதான் உன்னை எச்சரிக்கை செய்யலாம்னு நினச்சேன்…இனியாவது திருந்தி வாழ ஒரு வாய்ப்பு தரலாம்னு முடிவு செஞ்சேன்.

ஆனால், நீ பேசுற தோரணையைப் பார்த்தால், நீ இப்ப மட்டுமில்லை எப்பவும் திருந்த மாட்டேன்னு தெரிந்து போச்சு.

உன்னைத் தோலுறிச்சு காட்ட வேண்டிய நேரம் வந்தாச்சு…” எனச் சொல்லிவிட்டு, அந்த அறையை விட்டு வெளியேற முயல,

சட்டென்று பிரியன் அவளுடைய கைகளைப் பற்றித் தடுத்தான்.

அவள் கையைப் பிடித்திருந்த அவனுடைய கையின் மீது ஒரு அழுத்தமான பார்வையைப் பார்க்க, பிரியன் தன்னைப் போலக் கையை விலக்கிவிட்டு,

“இல்ல! நீ என் பேரை சொன்னால் யாரும் நம்பமாட்டாங்க….” என நம்பிக்கையற்ற குரலில் கூறினான்.

“அப்படியா ?” என ஒற்றைப் புருவத்தைச் சுவாரசியமான பாவனையில் ஏற்றி இறக்கினாள். ஒரு அலட்சியமான சிரிப்பு மட்டுமே மலரிடமிருந்து பதிலாய் வர, மேலும் பிரியம் பதற்றம் ஆனான்!

“ஏன் நம்பிக்கை இல்லையா ? யாரோ ஒருத்தன் தப்பு பண்ணினானு சொன்னால் நம்பிருப்பாங்க. ஆனால், அந்தத் தப்பை செஞ்சவன் நானு சொன்னால் யாரும் நம்பமாட்டாங்க. என்னோட அம்மா அப்பா எனக்காகப் பேசுவாங்க….” எனத் தனது தடுமாற்றத்தை மறைக்க முயன்றபடி பிரியன் பேச முயல,

“நல்ல கற்பனை… ஆனால் வாய்ப்பில்லை பிரியன். ஏனால், நான் உன்னைக் காட்டிக்கொடுக்கப் போறதில்லை. நீ தான் உன்ன காட்டி கொடுக்கப் போற” என நிதானமாகச் சொல்ல,

பிரியனுள் பெரும் பரபரப்பும் பதற்றமும் தொற்றிக்கொண்டது!

ஒரு மனிதன் அவசரமாக முடிவை எடுத்தாலே அந்த முடிவு அவனைக் கரை சேர்க்காது…இன்னமும் பதற்றத்துடனும் பரபரப்புடனும் முக்கியமாகப் பயத்துடனும் சிந்திக்காமல் எடுக்கப்படும் முடிவோ அவனின் அஸ்திரத்தை ஆட்டம் காண வைத்து, அவனை அதளபாதாளத்தில் தள்ளிவிடும்.

இங்கு, பிரியனின் நிலை அதளபாதாளத்தை நோக்கி விரைந்து சென்றுகொண்டிருந்தது…

“அதெப்படி ? நான் எப்படி என்னை நானே காட்டி கொடுப்பேன் ? எதுவும் ரெகார்ட் பண்றியா ? மைக் வச்சிருக்கியா ? ?” என மேலும் பரபரப்பாக வினவ,

மிக மிதமான சிரிப்பொன்று மலர்விழியின் உதட்டினில் தவழ்ந்தது…அந்த மிதமான சிரிப்பில் மிதமிஞ்சிய எள்ளல் இருந்தது…

“என்னை பிரியன்னு நினைச்சியா ? நான் மலர்! புரியுதா ?

நான் ஏன் தனியா ரெகார்ட் பண்ணனும். அதான் நீயே என்னோட வீடியோ வச்சிருக்கியே ? உன் கூடவே உன் போன்ல. உன் மெயில்-ல… எல்லாத்துலயும்.

அது போதுமே உன்னோட மூக முடிய நீ கிழிக்க” எனக் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியபடி வினவ, பிரியனின் முழி பிதுங்கியது!

அவனுடைய குரல் நடுங்கவே தொடங்கியது….

“நா…நா…நான் ஏன் என்னோட போன் மெயில் எல்லாம் ஓபன் பண்ணி காட்ட போறேன்?” என விடாமல் கேட்க,

இப்பொது பெருங்குரலெடுத்து சிரித்தாள் மலர்!

“எங்க அண்ணன் சொல்றது போல, நீ வில்லன் இல்ல போலவே….பபூன் தலையனோ? இப்படி ஒரு அறிவில்லாத கேள்வியைக் கேட்குற ?” என அவனைச் சீண்ட,

“அடியே…” எனப் பிரியன் உறுமினான். .

“என்ன டி ஆ ? மரியாதை! அது ரொம்ப முக்கியம்…?” என அதட்டும் குரலில் கூற, சட்டென்று பின்வாங்கினான்.

“சரி! நானே விஷயத்துக்கு வரேன். உன்னோட போன் மெயில் பார்க்க போறதும் ஓபன் பண்ணப்போறதும் நானோ நீயோ இல்லை. பெண்களைப் பாலியல் துன்புறுத்தல் பண்றதை விசாரிக்கும் போலீஸ். அதோட டெக்நால்ஜிய தவறா பயன்படுத்தினா கண்டுபிடிக்கிற சைபர். இப்போ புரியுதா ? நீ எப்படி மாட்ட போறேன்னு?

இத்தனை நாளா போலீஸ் கேஸ்-னு போனால் என்னை சேர்ந்தவங்களை நான் எப்படி எதிர்கொள்வேன் ? எப்படி நான் வளர்ந்த ஊரும் உறவும் என்னை பார்க்கனும்னு தான் பயந்தேன்….

ஆனால் இப்போ அந்த பயம் இல்லை! ” எனக் கூற, பிரியன் முகத்தில் வேர்வை துளிகள் அரும்பத் தொடங்கின.

“சரி… வெளில வா… நீ எப்படி மாட்டுறனு நீயே புருஞ்சுப்ப” என நக்கலாகச் சொல்ல,

அவசரமாகக் கைபேசியை எடுத்த பிரியன், மலரின் நிர்வாண காணொளியை வேகமாக அழித்தான். அவனுடைய மின்னஞ்சலை உயிர்பித்தவன் அதற்குள்ளும் சேமித்து வைத்திருந்த காணொளியை நிரந்தரமாக அழித்தான்…

அதோடு நில்லாமல், அவனுடைய கைபேசியில் உள்ள தகவலை மொத்தமுமாகவும் நிரந்தரமாகவும் அழித்தான். இதையெல்லாம் சில நொடிகளில் செய்தவன், பெருங்குரலெடுத்துச் சிரித்தான்.

“என்ன பாக்குற ? இனிமேல் உன்னால என்னை ஒன்னும் பண்ணமுடியாது. நான் போன் முழுசும் ரீஸ்டோர் பண்ணிட்டேன். இப்போதைக்கு இதுல எந்தத் தாகவுலும் இல்லாத ஒரு புதுப் போன் போலத் தான் இருக்கும்…. மெமரி கார்டு முதல் கொண்டு.

அப்புறம் என்னோட மெயிலையும் பெர்மனெண்ட் டெலிட் பண்ணிட்டேன். அதுனால இனி அதையெல்லாம் நீ எங்க இருந்தும் எடுக்கவே முடியாது…

இனி உன்னால எதுவும் பண்ண முடியாது” என அதீத சந்தோஷத்தில் பித்துப் பிடித்தவனைப் போல மீண்டும் மீண்டும் சொல்ல,

மலரோ, “இல்ல அதை நான் நிச்சயம் எடுப்பேன்… ” எனக் கூற,

“முடியாது…” எனத் திட்டவட்டமாகக் கூறினான்.

மீண்டும் அவனே தொடர்ந்து, அறையிலிருந்த குளியலறைக்குப் போனவன் தன்னுடைய கை பேசியைத் தண்ணீர் நிறைந்த வாளிக்குள் தூக்கி வீசினான்!

“மிச்ச சொச்சமும் போச்சு…இனி எதுவும் முடியாது” எனத் திட்டவட்டமாக பிரியன் அறிவிக்க,

இப்பொது மலர் நிதானமாக அடுத்த வார்த்தைகளை உச்சரித்தாள்!

“ஆமாம்! மிச்ச சொச்சமும் போச்சு…இனி எதுவும் முடியாது. ஆனால் அந்த முடியாதுங்கிற வார்த்தை உனக்கு இல்லை…எனக்கு…அதாவது இனி நீ எதைவச்சும் மிரட்ட முடியாது.

என்னோட வீடியோ உன்கிட்ட இப்ப இல்ல” என அறிவிக்க, பிரியன் அதிர்ந்தான்! அப்போது தான் சுதாரித்தான்.

எதைப் பிரியன் கூரிய ஆயுதமெனக் கொண்டு மலரை குத்தி கிழிக்கப் பிரயோகித்தானோ அந்த ஆயுதத்தின் கூர் முனையை அவனுடைய கைகளினாலே மழுங்கடிக்க வைத்திருந்தாள், மலர்!

“இப்போ உன்கிட்ட என்னோட வீடியோ இல்ல..இனி எதுக்காகவும் எப்பவும் என்னோட வாழ்க்கைல வர முயற்சி பண்ணாத. பண்றது என்ன யோசிக்கக் கூடச் செய்யாத… நாட் பார் எவர்…புரியுதா ?

நல்லா நியாபகம் வச்சுக்கோ…இது என்னோட வீடு…என்னோட உறவுகள்… நீ என்ன செய்யணும்னு நினைச்சாலும் மொதெல்ல உன்னோட நியாபகத்துக்கு வரவேண்டியது, நீ என்னோட இடத்தில இருக்கங்கிறது தான்…

இந்த வீடியோ இல்லாமலும் உன்ன தோலுரிக்க என்னால முடியும். ஆனால் அதை எப்படினு சொல்லி உன்னோட சுவாரஸ்யத்தைக் குறைக்க விரும்பல.

எனக்கு எதிரா ஒரு ஸ்டெப் வச்சாலும், உன்னோட ஆட்டத்தை மொத்தமா முடிச்சிடுவேன். அது எப்படிங்கிறதை நீ முடுஞ்சிபோன பிறகு தெருஞ்சுக்கவ! ” என எச்சரித்தவளின் வார்த்தைகள் தீர்க்கத்தின் அகராதியை, கட்டளையின் அடையாளமாய், துணிச்சலின் உறைவிடமாய் இருந்தது.

அடுத்து என்ன என்று சிந்திக்கவோ, சிந்தித்ததைப் பிரியன் சொல்லவோ அங்கு மலர் இல்லை…

ணமேடையில் பனிமலரின் அருகே பார்த்திபன் அமர்ந்திருந்தான். பிரியன் சற்று எட்ட முகத்தை நிமிர்த்தமுடியாமல் நின்றிருக்க, சிவகாமி முகத்தினில் அயர்ச்சியும் மகிழ்ச்சியும் என மாறி மாறிப் பிரதிபலித்துக்கொண்டிருந்தது. அவருடைய முகம் பிரதிபலித்துக்கொண்டிருக்கும் விசித்திரமான உணர்வுகளை, அவருடைய கணவனாலையே புரிந்துகொள்ள முடியாமல் ஒருவித தடுமாற்றத்துடன் நின்றுகொண்டிருந்தார்.

பிரியனே விருப்பமில்லை என்ற பின், மலரின் மனதை புரிந்த ஒருவன் மணாளனாக வருவதே சிறப்பு என்ற மனநிலையில் நின்றிருந்தார்…

ஆம்! பனிமலர் பார்த்திபனை திருமணம் செய்யச் சம்மந்திருந்தாள். ஆனால் அதை அவள் சம்மதம் என்ற வார்த்தை மூலம் தெரியப்படுத்தவில்லை…

“என்னமா மலர் பிரியன்கிட்ட பேசிட்டியா ? எங்களுக்கு என்னவோ உனக்கு வாழ்க்கை மேல பிடிப்பை ஏற்படுத்தின இந்தப் பார்த்திபனை கல்யாணம் செஞ்சால் நீ நல்லா இருப்பனு தோணுது…

பார்த்திபனுடைய குடும்பம் பாரம்பரியம் இதெல்லாம் இப்ப இந்தப் பூதம் தம்பிகிட்ட கேட்டு தெருஞ்சுகிட்டோம்.

அதோட நீ தான் இத்தனை நாள் அங்க இருந்திருக்கியே? உனக்கே, நிச்சயமா சரினு பட்டதுனாலதான் அங்க இருந்திருக்க” என யூகித்தகவராக மலரின் மாமன் முறையில் இருந்தவர் கூறிவிட்டு,

“பார்த்திபனோட கல்யாணத்துக்கு உன்னோட முடிவென்ன ?” என வினவ,

“இங்க என்னோட அப்புறம் அவரோட முடிவு முக்கியமில்லை…” என மலர் கூற, அனைவரும் வேறு யாருடைய முடிவு இங்க பிரதானம் என்ற கேள்வியோடு ஏறிட,

மீண்டும் மலரே தொடர்ந்து, “அவரு முக்கியமா நினைக்கிற அவரோட அம்மாவோட முடிவு தான் முக்கியம்…” எனக் கூற, அவளின் அந்தப் பதிலில் பார்த்திபன் ஒரு நொடி தடுமாறித்தான் போனான்….

தன்னைச் சட்டென்று சுதாரித்துக்கொண்டவன், “அம்மா உன்னை நான் பார்த்ததும், உன்கிட்ட பேசணும்னு சொல்ல சொன்னாங்க… போன் பண்ணி தரேன்” எனக் கூறி கைபேசியில் அவனுடைய அம்மாவிற்கு அழைத்துக் கொடுக்க,

“ஹெலோ… ” என ஒருவித எதிர்பார்ப்போடு மலர் தாமினியை அழைத்தாள்.

“மலர்… நீயும் பார்த்திபனும் உன்னோட உறவுகளைச் சமாதானம் செய்யப் போயிருக்கீங்க… அப்படினு தான் இங்க வீட்ல சொல்லிருக்கேன். எப்படிப் போன முறை தாலியோடு வந்தியோ இந்த முறையும் என் மகன் கட்டுற தாலியோட வா!” எனக் கட்டளை போலத் தாமினி சொல்ல,

“அம்மா… உங்களுக்கு எப்படி ?” எனத் தடுமாறி கேட்டாள்.

“அப்போ எப்படிக் கூப்பிடணும்னு கேட்டியே… ? எப்பவும் அத்தைனு உரிமையோடு கூப்பிடு. அங்க என்ன நடந்திருந்தாலும் எனக்குத் தெரியவேண்டாம்.

என்னோட பார்வையில நீங்க இரெண்டு பேரும் பொருத்தமான தம்பதிகள். இனி இந்த ஊரும் மெச்ச உண்மையான வாழ்க்கையை வாழுங்க.

சீக்கிரம் வீட்டிக்கு வந்துடுங்க” எனக் கூறி வைத்துவிட, அதீத மகிழ்ச்சியில் பணிமலரின் கண்கள் பனித்தன!’ 

ற்று முன் நிகழ்ந்தயாவும் மீண்டும் மலரின் மனக்கண்ணில் படமாக ஓட, ஒரு புறம் மந்திரங்கள் ஓதப்பட்டுக்கொண்டிருந்தது…

இன்னும் சில நிமிடங்கள் மட்டுமே முகூர்த்த நேரத்திற்கு எஞ்சியிருந்தன…

மேளதாளங்கள் இசைக்கப் பொன்மஞ்சள் நாணை கைகளில் வாங்கியவன், மலரின் கழுத்தில் மூன்று முடிச்சிட, பார்த்திபனையே இமைக்காமல் பார்த்திருந்தாள், மலர்!

‘என்ன?’ என்பதாகப் பார்த்திபன் புருவம் உயர்த்த,

“எப்படி வந்தீங்க ?” என உதடைசைத்து, பெரும் ஆவலுடனும் பெரும் காதலுடனும் அந்தக் கேள்வியை முன்வைத்தாள்!

“நீ தானே சொன்ன ? உன்னுடைய குரல் கேட்குற தூரத்துல, உன்னுடைய பார்வை படுற தொலைவுல தான் நான் இருக்கணும்னு…மறந்துட்டியா ?

கேட்டதை நீ மறக்கலாம்…கொடுத்ததை நான் மறப்பேனா என்ன ?” எனப் பார்த்திபன் கண்சிமிட்டி கேட்க, அந்தப் பாவனையில், அவனின் காதலில் பனிமலர் உருகாமலும் மலராமலும் இருந்தால் தான் ஆச்சர்யம்…

ங்கு ஒருபுறம் பனிமலர் பார்த்திபனின் காதல் சொல்லாமலே மலர்ந்துகொண்டிருக்க, திருமணக் கூட்டம் மலர்தூவி அவர்களுக்கு ஆசி கூற, நின்றுகொண்டிருந்த பிரியனின் காலில் பூதம் , தாம்பூலத்தில் வைத்திருந்த தேங்கையொன்றை எடுத்து தற்செயலாய் தவறவிடுவதைப் போல ஓங்கி போட்டிருந்தான்.

பிரியன் அலறிய சப்தம், கொட்டப்பட்ட மேள சப்தத்தில் கரைந்து போனது….

கோபத்துடன் ஏறிட்ட பிரியனை, பூதமோ, “இது என்ன அடிச்சதுக்கு இல்ல ? தங்கச்சிய மிரட்டுனதுக்கு” எனக் கிசுகிசுக்கவும் தவறவில்லை….

லரின் மொத்த உறவினர் கூட்டமும், அவளை இந்த நிலைக்கு ஆளாக்கியவன் யாரென்று கேட்க, மலருக்கு முன்னால், பார்த்திபன் கூறியிருந்தான்.

“அவன் யாருனு மலர் ஏனோ நம்ம எல்லார் முன்னவும் சொல்ல தயங்குறாள். அதுக்குக் காரணம், அவனுக்கு மலர் இன்னோரு வாய்ப்பை கொடுக்கிறதாக இருக்கலாம்…

எனக்கும் தெரியல!

ஆனால் நம்புங்க…இனியொரு பிரச்சனை மலருக்கு வராது. எதுனாலும் அவளுக்கு முன்னாடி நான் இருப்பேன்.” எனப் பிரியனை ஓர் அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்தபடியே அழுத்தமாக உச்சரித்தான்.

Advertisement