அத்தியாயம் – 9

அவர்கள் கீழே சென்ற போது நிறைய பேர் இரவு நேர வாக்கிங் செய்து கொண்டிருந்தனர்.  அவர்கள் பிளாக் எதிரே இருந்த பூங்காவைத் தவிர்த்து விட்டு குடியிருப்புப் பகுதி முழுவதையும் ஒருமுறை வலம் வந்தனர் அம்மா, பெண் இருவரும். 

அன்று தான் அந்தக் குடியிருப்பின் அமைப்பையும் அதன் பிரம்மாண்டத்தையும் முதல் முறையாகப் பார்க்கிறார் சுகந்தி.  சுற்றுச் சுவரை ஒட்டியிருந்த செடிகளில் வண்ண வண்ண பூக்கள் பூத்து குலுங்கின.  அந்த இரவு வேளையில், செய்றகை வெளிச்சத்தில், அவை வெகு அழகாக தெரிந்தன.

“என்ன பவி, இத்தனை பூ செடி வைச்சிருக்கா? எங்கேயிருந்து தண்ணி கிடைக்கறது.”

“எல்லாம் ட்ரிடெட் வாட்டர் (treated water) ம்மா.”

“நிஜமா வா?”

“ஆமாம்..நம்ம வேஸ்டை டிரிட் செய்து ரியுஸ் செய்யறா..நம்ம பாத்ரூம் ஃப்ளஷ்லே ரியுஸ்ட் தண்ணீர் தான்..ஜப்பனீஸ் ப்ளாண்ட் போட்டிருக்கா.” என்றாள் பவி.

“என்ன டி சொல்ற? ஒரே தண்ணியை எத்தனை தடவை யூஸ் செய்ய முடியும்?’

“எத்தனை தடவை வேணும்னாலும்..நில் (nil) வேஸ்ட் கான்ஸெப்ட் இந்த இடத்திலே..இல்லைன்னா நம்மை காலனியைச் சுற்றி இதுக்குள்ளே சாக்கடை வந்திருக்குமே..இங்கே சுற்றுபுறம் நீட்டா இருக்கு..எல்லாமே யோசிச்சு பண்ணியிருக்கா.”

“இதுக்கெல்லாம் நிறைய பணம் செலவாகுமே?”

“எல்லாம் ஒனர்ஸ்கிட்டே முன்னாடியே வாங்கியிருப்பா..இல்லை மாசம் மாசம் வாங்குவாளா இருக்கும்..நோக்கு எதுக்கு அந்தக் கவலை?”

“நம்ம வாடகையை ஏத்திட போறா டீ.”

அதற்கு, சிரித்துக் கொண்டே,“கவலைப்படாத.. அப்ப நாம இங்கேயே ஒரு கேக் ஷாப் ஒபன் செய்திடலாம்.” என்றாள் பவி.

 அப்போது மெயின் கேட்டை ஒட்டியிருந்த “A” பிளாக்கை அடைந்திருந்தனர்,

“என் கிளாஸ்லே நிவேதிதான்னு ஒரு பெங்காலி குழந்தை படிக்கறா..அவ இந்தப் பிளாக்லதான் பதினைந்தாவது மாடிலே இருக்கா.” என்றாள் பவி.

“நோக்கு எப்படித் தெரியும்?”

“அவளோட பாட்டி சொன்னா..அவா தான் தினமும் காலம்பற ஸ்கூல் பஸ்லே அவளை ஏத்திவிட வரா.”

“நம்ம காலனிலேர்ந்து எத்தனை குழந்தைகள் ஸ்கூல் பஸ்லே வர்றா?”

“என் கிளாஸ் குழந்தை இவ ஒருத்திதான்..வேற கிளாஸ் குழந்தைகள் நிறைய பேர் இருக்கா..நம்ம பிளாக்லேர்ந்தும் இரண்டு, மூணு பேர் வர்றா.”

“நம்மாத்துக்கு யாரும் வர்றதில்லையே.”

“ஸுகூல் ரூல்ஸ்..பெரிய குழந்தைகளுக்கு நோ பர்ஸனல் காண்டாக்ட் வித் டீச்சர்.”

“நோக்கு அதெல்லாம் கிடையாதா?”

“சின்ன குழந்தைகளோட அப்படி இருக்க முடியாதே ம்மா.. நர்ஸரிலே ஒவ்வொரு கிளாஸ்லேயும் பன்னெண்டு குழந்தைகள் தான்..அதனால் தான் எல்லாரையும் கவனமாப் பார்த்துக்க முடியறது..ஒவ்வொரு குழந்தையோட  அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, கிரெஷ்ன்னு எல்லாரோடேயும் பேச வேண்டியிருக்கு..இன்னைக்குக்கூட நிவேதிதா பாட்டியோட பேசினேன்..

அவ ஏன் ஸ்கூலுக்கு வரலேன்னு கேட்க அவளோட அப்பா, அம்மா இரண்டு பேருக்கும் ஃபோன் பண்ணினேன்..இரண்டு பேரும் ஃபோனை அட்டெண்ட் செய்யலே..அப்புறம் அவளோட பாட்டிக்கு ஃபோன் போட்டேன்..அப்ப அவா ஆஸ்பத்திரிலே இருந்தா..நிவேதிதாவுக்கு ஜுரமாம்..டாக்டர் ஸர்ட்டிஃபிகேட் வாங்கிக்கச் சொன்னேன்..ஸ்கூல் ரொம்ப ஸட்ரிக்ட்..ஒரு நாள் லீவுக்கு கூட தகவல் சொல்லணும்..பேரண்ட்ஸ் தகவல் கொடுக்கலைன்னா நாங்க ஃபோன் பண்ணி விசாரிக்கணும்.” என்றாள் பவி.

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டே கம்யுனிட்டி ஹாலின் வாயிலை அடைந்திருந்தனர்.  அந்தக் கம்யுனிட்டி ஹாலின் வெளிப் பறம் அழகான வண்ண விளக்குகள், வண்ண, வண்ண பிளாஸ்டிக் பூக்கள், பலூன்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.  வெளிப் புறம் இருந்த புல்வெளியில் பார்ட்டி நடந்து கொண்டிருந்தது.  அங்கே எழும்பிய இசையும் சிறார்களின் சிரிப்பும், கை தட்டலும் அது பர்த்டே பார்ட்டி என்று பறைசாற்றியது.

“என்ன டீ..இத்தனை லேட்டா பர்த்டே பார்ட்டி கொண்டாடறா? நீங்கெல்லாம் சின்னதா இருக்கறச்சே ஆறு மணிகெல்லாம் பார்ட்டியே முடிஞ்சு போய்டும்..இங்க இப்பதான் கேக் வெட்டறா போல.’ என்றார் சுகந்தி

“வேலைக்குப் போனவா எல்லாம் திரும்பி வர வேண்டாமா..என்னை மாதிரி பக்கத்திலேயே எல்லாரும் வேலை பார்க்கறாளா? எங்க காலத்திலேப பர்த்டே பார்ட்டின்னா நீ பண்ற கேக்கும் ரிப்பன் பக்கோடாவும் தான்..இப்ப  வெளிலேர்ந்து சாப்பாடு வரவழைக்கறா..

இந்த ஸ்கூல்ல சேர்ந்த அப்பறம் நேக்கு இரண்டு, மூணு குழந்தைகளோட பர்த்டே பார்ட்டி இன்விடேஷன் வந்தது..எல்லாத்திலேயும் டயம் ஏழு மணின்னு எழுதியிருந்தது..இப்பெல்லாம் குழந்தைகளும் லேட்டாதான் தூங்க போகறதுகள், எழுந்துக்கறதுகள்.” என்றாள் பவி.

“நீயும் காலைலே எழுந்துக்க ரொம்ப அடம் பிடிப்ப..தீபக் சமத்தா எழுந்துப்பான்..ருக்மிணி மாமிகூட சொல்லுவா..நோக்கு நான் ரொம்ப செல்லம் கொடுக்கறேன்னு.”

“ஆமாம்..மாமி வாக்கு நோக்கு வேதவாக்கு..ஞாயிற்றுக் கிழமை லேட்டா எழுந்தா தப்பா? இப்பவும் அந்த மாதிரி தான் எழுந்துக்கறேன்…நல்லவேளை இப்ப மாமி நம்ம பக்கத்திலே இல்லே.” என்றாள் பவி.

“மாமி போல ஆள் இந்தக் காலத்திலே பார்க்க முடியாது..உன்னையும் தீபக்கையும் உங்கப்பாவோட விட்டிட்டு உங்க பாட்டியைப் பார்த்துக்க நான் ஆஸ்பத்திரிக்குப் போனதெல்லாம் மாமி இருக்கற தைரியத்தலேதான்..கூப்பிட்ட குரலுக்கு உதவி செய்வா..மாமி பரோபகாரி.” என்றார் சுகந்தி.

கம்யுனிட்டி ஹாலை அவர்கள் கடந்தவுடன் மறுபடியும் அவர்களை அமைதி சூழ்ந்து கொண்டது.

“நீயும் அப்பாவும் பாட்டிக்கு, சித்தப்பாக்கு நிறைய பண்ணினேள். அதையெல்லாம் நினைச்சுப் பார்க்காம, கடைசிலே எல்லாமே பணத்துலதான் வந்து நின்னுது..நம்ம பணத்திலே பங்கு கேட்க சித்தப்பாக்கு எப்படிம் ம்மா மனசு வந்தது?” என்று கேட்டாள் பவி.

“நம்ம மூணு பேரையும் வாழ்க்கை முழுக்க எப்படி ஆதரிக்க முடியும்னு அவனுக்கு திடீர்னு பயம் வந்திடுத்து..அதான் பணம் கொடுத்தா பார்த்துக்கறேன்னு சொன்னான்.”

“அவர்கிட்டே பணத்தைக் கொடுத்திட்டூ நாம என்ன பண்றது?..அதான் நான் முடியாதுன்னு சொன்னேன்.” என்றாள் பவி.

“நீ தான் நிறைய கஷ்டப்பட வேண்டியிருந்தது பவி..பர்த்டேக்கு கேக், சாக்லெட்டுன்னு ஆத்துலே பண்ணி கொடுத்து சின்ன வயசுலேயே சம்பாதிக்க ஆரம்பிச்ச.” என்றார் சுகந்தி.

“நீதான் ம்மா எல்லாம் வேலையும் பண்ணினே..நான் சும்மா நோக்கு ஐடியா தான் கொடுத்தேன்..வெறும் கேக் மட்டும் விக்காதுன்னு தான் சாக்லெட்டையும் சேர்த்திண்டேன்..நீ கேக்…நான் சாக்லெட்….நோக்கு கேக் செய்ய பொறுமை இருந்தது..நேக்கு சாக்லெட் சாப்பிட ஆசையிருந்தது.” என்றாள் புன்சிரிப்போடு.

“அது சரி..ஆர்டர் பண்ணின கேக்கை நாம வெட்டி சாப்பிட முடியாதே..ஆனா சாக்லெட் எத்தனை வேணும்னாலும் சாப்பிடலாமே.” என்றார் சுகந்தி.

“யெஸ்..மொல்ட் டூ மவுத் (mould to mouth)..தீபக் லீவுலே வர்றதுக்கு முன்னாடி நிறைய சாக்லெட் பண்ணி வைக்கணும் ம்மா..இந்த மூணு மாசமா எதுவுமே பண்ணலை..டெய்லி ஸ்கூலோடேயே போயிடறது..இன்னைக்குதான் வாக்கிங் வர்றதுக்கு கூட நேரம் கிடைச்சிருக்கு.”

“இப்பதான் நீயும் கொஞ்சம் ஃப்ரீயா இருக்க..திருச்சிலே விடாது வேலை இருந்திண்டு இருக்கும்..ஆர்டர் பிடிக்கறது..டெலிவரி பண்றதுன்னு ஓடிண்டே இருப்ப..அதனால் தான் செலவைச் சமாளிக்க முடிஞ்சது….எல்லாம் உன்னாலதான் பவி..நேக்கு போறாது..உங்கப்பாக்கு அப்புறம் நான் தான் பெரியவளா உங்க இரண்டு பேரையும் பார்த்திண்டு இருந்திருக்கணும்..இப்போ வரை நீதான் பெரியவளா இருந்து பார்த்துக்கற.” என்று சொல்லி கண் கலங்கினார் சுகந்தி.

“நேக்கும் முதல்லே எதுவும் தெரியலே ம்மா..பாங்க்லேர்ந்து சின்ன செலவுக்கெல்லாம் பணம் எடுத்த போதுதான் அறிவு வந்தது..இதே மாதிரி கொஞ்சம் கொஞ்சமா எடுத்து எல்லாம் முடிஞ்சுப் போயிடுத்துன்னா என்ன பண்றதுன்னு யோசிச்சேன்..சின்ன செலவைச் சமாளிக்க நம்ம ஆத்திலே இருந்த தேவையில்லாத சாமனை வித்துடலாம்னு மாமா சொன்ன போது என் கண்ணுலே கேக் செய்யற அவன் (oven) பட்டது..சரி டிரை செய்து பார்போம்னு ஆரம்பிச்சேன்..உன்னோட கேக் அத்தனை ஃபேம்ஸாயிடுத்து  ஐயங்கார் பேக்கரி மூடிண்டு போயிட்டான்.” என்று சொல்லி சிரித்தாள் பவி.

“இங்கேயும் ஆரம்பிக்கட்டுமா பவி..ஆத்துலே சும்மாதானே இருக்கேன்..இரண்டு காசு கைலே பார்ப்போம்..நோக்கும் உதவியா இருக்கும்.” என்றார் சுகந்தி.

“வேண்டாம் ம்மா..இங்கே ஆத்துலே எந்த கமர்ஷியல் அக்டிவிட்டியும் செய்யகூடாதுன்னு ரூல் இருக்கு.. இங்கே யாரும் நம்மகிட்டே வாங்கவும் மாட்டா ம்மா..முட்டை போடாம, க்ரீம் கம்மியா, சர்க்கரை கம்மியான்னு ஸிம்பில்லா செய்வோம்..இங்கே அது ஸேல்ஸ் ஆகாது ம்மா…இது மிடில் கிளாஸ் ஏரியா இல்ல..இங்கே எல்லாரும் பார்பி கேக்கும், சோட்டா பீம் கேக்கும் இரண்டு கிலோக்கு ஆர்டர் பண்றா.”

“நோக்கு எப்படித் தெரியும்?”

“ஸ்கூல்ல மாசத்துக்கு ஒரு தடவை அந்த மாசத்திலே பிறந்த குழந்தைகள் எல்லாருக்கும் சேர்த்து பார்ட்டி செய்யறோம்…அதுக்கு கேக், வெஃபர்ஸ் எல்லாம் ஆர்டர் பண்றா..ஒவ்வொரு மாசமும் ஒவ்வொரு மாதிரி கேக்.” என்றாள் பவி.

அதற்குபின் மௌனமாயினர் இருவரும்.  அவர்கள் பிளாக்கிற்கு அருகே வந்த போது,””அம்மா, நீ ஆத்துக்கு போ..நான் இந்த பார்க்கலே கொஞ்ச நாழி வாக் பண்ணிட்டு வரேன்.” என்றாள் பவி.

“எதுக்கு பவி?” போதுமே இந்த வாக்கிங்” என்றார் சுகந்தி.

“இல்ல மா..நான் கொஞ்சம் ஃபாஸ்ட் வாக்கிங் பண்ணிட்டூ வரேன்.” என்றாள் பவி.

“சரி..சீக்கிரம் வந்துடு.” என்றார் சுகந்தி

அன்றிலிருந்து அம்மா, பெண் இருவருக்கும் இரவு வாக்கிங் வழக்கமானது. அவர்கள் குடியிருப்பை ஒருமுறை சுற்றி வந்த பின் சுகந்தி வீட்டிற்கு சென்று விட, பவி மட்டும் சிறிது நேரம் தனியாகப் பூங்காவில் வாக்கிங் செய்ய ஆரம்பித்தாள். 

ஒருமுறை நிவேதிதாவின் பாட்டியை “A” பிளாக் அருகில் இருவரும் சந்திக்க நேர்ந்தது.

“நீங்க இராத்திரிலே இந்த நேரத்திலேதான் வாக்கிங் வரீங்களா?” என்று இவர்களிடம் கேட்க,

“இப்பதான் கொஞ்ச நாளா வரோம்.” என்று அவருக்கு பதில் அளித்தாள் பவி.

“சாயந்திரம் நிவி பார்க்லே விளையாடும் போது நான் வாக்கிங் போவேன்..இவங்க உங்க அம்மாவா?” என்று பவி அருகில் மௌனமாக நின்றிருந்த சுகந்தியைப் பற்றி விசாரித்தார் மிஸஸ் ஸென்.

“ஆமாம்.. நாள் பூரா வீட்டுலேயே இருக்காங்க அம்மா..அதான் அவங்களை வெளியே வாக்கிங் அழைச்சுக்கிட்டு வந்தேன்.” என்றாள்.

“இன்னைக்கு என் பையன், மருமக இரண்டு பேரும் வேலை முடிஞ்சு வீட்டுக்கு வர லேட்டாகும்..நாளைக்கு பிரேக்ஃபாஸ்ட்டுக்கு பிரெட் வேணும்.. கேட் பக்கத்திலே இருக்கற கடைக்கு ஃபோன் போட்டேன், அவன் எடுக்கலே, அதான் கடை மூடறத்துக்குள்ளே நானே போய் வாங்கிட்டு வரலாம்னு நினைச்சேன்.” என்றார் நிவியின் பாட்டி.

“நிவி எங்கே?” என்று பவி கேட்க,

 “கேட் வரைக்கும் நடந்து வர அவ வம்பு செய்வா அதான் எதிர் வீட்லே விட்டிட்டு வந்திருக்கேன்….அவங்க அவளைக் கவனமாப் பார்த்துப்பாங்க..

இன்னைக்கு லேட்டாயிடுச்சு..இன்னொரு நாள் எங்க வீட்டுக்கு நீங்க வரணும்..நீங்க இங்கே புதுசா வந்திருக்கீங்க, எனக்கு தெரிஞ்சவங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கறேன்..எங்க எதிர்வீட்லே இருக்கறவங்களும் தமிழ் தான்.. நல்ல டைப்…ஃபிரண்ட்லி..ஹெல்ப்ஃபூல்..உபகாரி.” என்று அவரின் எதிர்வீட்டுப் பெண்மணியைப் புகழந்தார் நிவியின் பாட்டி. 

“எங்களோட ஸ்கூல்லே படிக்கற குழந்தைங்க வீட்டுக்கு டீச்சர்ஸ் ஸொஷியல் விஸிட் பண்ணக்கூடாது..தாங்கஸ் ஃபார் தி இன்விடெஷன்.” என்று கண்ணியமாக அவர் அழைப்பை மறுத்தாள் பவி.

“நீங்க வர வேணாம்..அம்மாவை அனுப்பி வைங்க.” என்று வலியுறுத்தினார் நிவியின் பாட்டி.

“பார்க்கலாம்.” என்று அவருக்கு பிடி கொடுக்காமல் பேசி அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டாள் பவி.

“இந்தக் காலத்திலேயும் இன்னொருத்தர் ஆத்துலே சின்ன குழந்தையை விட்டிட்டு வந்திருக்கான்னா அவா நல்லவாளாதான் இருக்கணும்.” என்றார் சுகந்தி. 

நிவி பாட்டியின் உபகாரியும், சுகந்தியின் பரோபகாரியம் ஸேம் பர்ஸனென்று பஷனெட் டீச்சர் உணரவில்லை. இன்ஸ்பிரெஷன் ஸ்கோர்ட் ஜீரோ இன் காம்பிரிஹென்ஷன் (comprehension).