அத்தியாயம் – 8

வாசல் அழைப்பு மணி விடாமல் அழைக்க, டி ஷர்ட், ஷார்ட்ஸில் இருந்த ஜெய் கதவைத் திறந்தான்.  வெளியே அவர்கள் எதிர் ஃபிளாட்டில் குடியிருந்த ஆன்ட்டியும் அவருடைய பேத்தியும் நின்று கொண்டிருந்தனர். முந்தைய இரவு உடுத்தியிருந்த பைஜாமாவில், கையில் ஒரு டெட்டி பொம்மையைப் பற்றியபடி அந்தக் குழந்தையும், அந்தக் குழந்தையின் மற்றொரு கையைப் பற்றியபடி அந்தப் பெண்மணியும், அவருடைய மற்றொரு கையில் அவருடைய கைப்பையும் இருந்தது.

அந்த ஆன்ட்டி வாயைத் திறக்குமுன்,“நமஸ்தே ஆன்ட்டி..மம்மி கிட்சேன் மே ஹே.” என்று சொன்ன ஜெய் “அம்மா, எதிர்தாத்து ஸென் ஆன்ட்டியும் அவா பேத்தியும் வந்திருக்கா.” என்று குரல் கொடுத்தான்.

“உள்ள வாங்கோ.” என்று ஹிந்தியில் வரவேற்று அவர்கள் இருவரையும் சோபாவில் உட்காரச் சொன்னான் ஜெய்.

அந்த வயதான பெண்மணி சோஃபாவில் அமர்ந்தவுடன் அவருடைய பேத்தி அவர் மடியில் உட்கார்ந்து கொண்டாள்.  அந்தக் குழந்தையின் சோர்வானத் தோற்றத்தைப்  பார்த்து,

“இவளுக்கு உடம்பு சரியில்லையா?” என்று விசாரித்தான் ஜெய்.

“ஆமாம் பேட்டா (beta), அதான் உங்கம்மாகிட்டே உதவி கேட்கலாம்னு வந்தேன்.” என்றார் மிஸஸ் ஸென்.

அப்போது,”இன்னைக்கு நிவி குட்டி ஸ்கூல் போகலையா?” என்று விசாரித்தபடி சமையலறையிலிருந்து வந்தார் ருக்மிணி.

“இல்லை மிஸஸ் கிருஷ்ணன்..அவளுக்குப் புகார் (ஜீரம்). “ என்று மிஸஸ் ஸென் ருக்மிணிக்கு பதில் சொல்லும் போது அவளது நெற்றியில் கை வைத்து, “புகார்” என்றாள் நிவி குட்டியும்.

“அச்சசோ..எப்படி?” என்று ருக்மிணி விசாரிக்க,

“நேத்து மத்தியானம் வெயில்லே ஸ்கூலேர்ந்து வந்தவுடனே இரண்டு ஐஸ்க்ரீம்..இன்னைக்கு காய்ச்சல், ஸ்கூலுக்கு சுட்டி (chutti, leave).” என்று அவளின் புகாரின் காரணத்தைப் புகார் போல் வாசித்தார் நிவியின் பாட்டி.

“மருந்து கொடுத்தாச்சா?” என்று கேட்டார் ருக்மிணி.

“இல்லே..இவளை டாக்டர்கிட்டே காட்டிட்டுதான் மெடிஸென் கொடுக்க முடியும்..இவளுக்கு ஃபீவர்னாலே காம்ப்ளிகேஷன்ஸ் வரும்..அதனாலே டாக்டர் செக் செய்திட்டுதான் மெடிஸன் தருவார்..என் பையன் ஆபிஸ்லேர்ந்து வந்து ஆஸ்பத்திரிக்கு அழைச்சுக்கிட்டு போறேன்னு சொன்னான். ஆனா, ‘என்னாலே வர முடியாது அவசரமான வேலை இருக்குன்னு’ கொஞ்சம் நேரம் முன்னாடி ஃபோன் செய்திட்டான்..இவளை டாக்டர்கிட்டே அழைச்சுகிட்டுப் போக முடியாதுன்னு காலைலேயே இவளோட அம்மா சொல்லிட்டா..இப்போ நான் தான் இவளை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுகிட்டு போகணும்..நீங்க என்கூட துணைக்கு வர்றீங்களா? என்று ருக்மிணியிடம் கேட்டார் மிஸஸ் ஸென்.

ருக்மிணிக்கு தர்மசங்கடமான சூழ்நிலையானது. மிஸஸ் ஸென்னிற்கு சென்னை பற்றி தெரியாததால் ருக்மிணியுடன் வெளியிடங்களுக்குச் செல்வது அவ்வப்போது நடப்பதுதான். ஆனால், காலை வேளையில் அவரது சமையல் வேலை முடியாத போது எப்படி ஆஸ்பத்திரி வரை செல்வது என்று யோசனையானது அவருக்கு.

பாலகிருஷ்ணனை அவருக்குத் துணையாக அனுப்பலாமென்றால் அவரது தினசரி பூஜை இன்னும் முடிந்தபாடில்லை, அதனால்,”ஜெய்..ஆன்ட்டியோட ஆஸ்பத்திரி போயிட்டு வர்றியா?” என்று கேட்டார்.

“இப்பவா?..நான் இன்னும் குளிக்கவே இல்ல ம்மா.’ என்றான் ஜெய்,

அவர்கள் உரையாடலை ஓரளவு புரிந்து கொண்ட மிஸஸ் ஸென்,

“நோ பிராப்ளம் மிஸஸ் கிருஷ்ணன்..நானே தனியாப் போயிடறேன்..தொந்தரவுக்கு மன்னிச்சிடுங்க.” என்று சொல்லி நிவியைத் தூக்கியபடி எழுந்து கொண்டார். அப்போது,”நம்ம வீட்டுக்குப் போகலாம்.” என்று அழ ஆரம்பித்தாள் நிவி.  உடம்புக்கு முடியாத குழந்தையுடன் அவர் கஷ்டப்படுவதைப் பார்த்து,”நம்ம கார்ல அழைச்சிண்டு போய்ட்டு வாடா ஜெய்..குழந்தைக்கு முடியலேடா..ஆஸ்பத்திரிக்குப் போயிட்டு வந்து குளிச்சுக்கோ.” என்றார் ருக்மிணி.

“சரி..டிரெஸ் மாத்திண்டு வரேன்.” என்று சொல்லி விட்டு அவனறைக்கு சென்றான் ஜெய்.

“உட்காருங்கோ..ஜெய் உங்களை ஆஸ்பத்திரிக்கு அழைச்சிண்டு போவான்..அவனுக்கு நீங்க வழி மட்டும் சொல்லிடுங்கோ..அவனுக்கு கொஞ்சம் கன்ஃயுஷன் இருக்கு இன்னும்.” என்றார் ருக்மிணி.

“தாங்க்ஸ்.” என்று சொல்லி மறுபடியும் சோஃபாவில் அமர்ந்து கொண்டார் மிஸஸ் ஸென்.

பதினைந்து நிமிடங்கள் கழித்து மிஸஸ் ஸென்னுடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்தான் ஜெய். அந்தக் காலை வேளையில் வெய்யிலில் தகித்துக் கொண்டிருந்தது சென்னை மாநகரம்.  அதைப் பொருட்படுத்தாமல், டூ வீலர், பஸ், ஆட்டோ, கார் என்று பலதரப்பட்ட வாகனங்களில் அவரவர் கடமையைச் செய்ய பயணம் செய்து கொண்டிருந்தனர் பெருநகர்வாசிகள்.

அவர்கள் குடியிருப்பிலிருந்து வெளியே வந்தவுடன் சுமார் பத்து நிமிடங்கள் வரை சாலையில் போக்குவரத்து குறைவாக தான் இருந்தது.  அதன்பின் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் காரை கவனமாக செலுத்துவதில் அதிக கவனம் செலுத்தினான் ஜெய்.  

மிஸஸ் ஸென்னையும் அவர் பேத்தியையும் அவன் ஆஸ்பத்திரி கொண்டு வந்து சேர்ப்பதற்குள் வேறு உலகத்துக்கு பயணம் செய்தது போல் உணர்ந்தான் ஜெய்.  அதுவும் ஆட்டோ, டூ வீலர்கள் போட்டி போட்டுக் கொண்டு சாலையை ஆக்கிரமித்துக் கொண்டிருந்ததால் அவனது காரை ஒற்றையடிப் பாதையில் ஓட்டுவது போல் இருந்தது ஜெய்க்கு.

ஆஸ்பத்திரியினுள் அவர்கள் நுழைந்தபோது ரிசெப்ஷன் பிஸியாக இருந்தது. நோயாளிகளும் அவர்களுக்குத் துணையாக வந்திருந்தவர்களும் ரிசெப்ஷன் மேஜையையும் அதற்கு அருகிலிருந்த நாற்காலிகளையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தனர். அங்கே ஒரு காலி நாற்காலி கூட  கிடைக்காததால், ரிசெப்ஷனின் மறு கோடிக்கு சென்று அமர்ந்து கொண்டனர் ஜெய்யும் மிஸஸ் ஸென்னும்.  

அவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் கூட்டம் அதிகமாக இல்லை. எனவே அவளுடைய பாட்டியின் மடியில் படுத்துக் கொண்டு அடுத்த சேரில் கால் நீட்டியபடி எதிரே சுவரில் மாட்டியிருந்த அனைத்து மதக் கடவுள் படங்களையும் அதற்கு அடுத்து நோய்களும் அதை தடுக்க மேற் கொள்ள வேண்டிய தற்காப்பு முறைகளைப் பற்றிய சித்திரப் படங்களையும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள் நிவேதிதா. 

அவருடைய பேத்தியின் உடல் நிலையைப் பற்றிய கவலையில் மிஸஸ் ஸென் மௌனமாக இருக்க, அவரிடம் அவனது வேலையை ஆரம்பித்தான் ஜெய். அவனது குரல் கேட்டவுடன் அவன் மீது பார்வையைத் திருப்பினாள் நிவேதிதா.

“ஆன்ட்டி.” என்று ஜெய் அழைத்தவுடன்,

“என்ன ப்பா?” என்று கேட்டார் மிஸஸ் ஸென்.

“உங்களுக்குத் தமிழ் தெரியாது..அப்புறம் எப்படி நானும் அம்மாவும் என்ன பேசினோம்னு கண்டு பிடிச்சீங்க?” என்று கேட்டான்.

அவன் கேள்வியில் லேசாக சிரித்த மிஸஸ் ஸென்,”பாஷை தெரிய வேண்டாம்..பார்வை இருந்தா போதும்..கண்கள் எப்போதும் உண்மையைத் தான் பேசும்.” என்றார்.

“நீங்க என் அம்மாவோட கண்ணைப் பார்த்து கண்டுபிடிச்சீங்களா?” என்று ஜெய் கேட்க,

“யாரா இருந்தாலும் அவங்களோட கண்களைப் பார்த்து தான் பேசுவேன்..இன்னைக்கு உங்கம்மாவோட  கண்ணுலே தயக்கம்..அப்புறம் உன்கிட்டே அவங்க ஏதோ சொன்னங்க..உடனே உன்னோட கண்ணைப் பார்த்தேன் அதிலேயும் தயக்கம் தெரிஞ்சுது..நீங்க இரண்டு பேரும் என்ன பேசினீங்கன்னு புரியலை அதனாலே தயக்கத்தோட காரணம் தெரியலை.” என்றார் மிஸஸ் ஸென்.

“ப்ரிலியண்ட் ஆன்ட்டி.” என்றான் ஜெய். அப்போது மிஸஸ் ஸென்னின் கைப்பையில் இருந்த கைப்பேசி அழைத்தது.  அவருடைய மடியிலிருந்த நிவேதிதாவை பக்கத்து சேரில் அமர வைக்க அவர் முயற்சி செய்ய,”நோ” என்று சொல்லி, பாட்டியின் மடியில் பிடிவாதமாகப் படுத்திருந்தாள் நிவி.  

“பேட்டா..என் பேக்லேர்ந்து ஃபோனை வெளியே எடு ப்பா.” என்று அவரது ஹாண்ட் பேக்கை ஜெய்யிடம் கொடுத்தார்.

அவரது பேக்கைத் திறந்து ஃபோனை வெளியே எடுத்த ஜெய், அதில் ஒளிர்ந்த பெயரைப் பார்த்து,”நிவேதிதா ஸ்கூலேர்ந்து ஃபோன்.” என்றான்.

“ஓ” என்று சொல்லி அவனிடமிருந்து ஃபோனை வாங்கிக் கொண்டு, “ஹலோ மேம்” என்று பேச ஆரம்பித்தார். அதன் பின் அந்தப்  புறம் சொன்னதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவர், கடைசியில்,

“ஸாரி..காலைலே அவளோட அப்பா ஃபோன் செய்யறேன்னு சொன்னான் மறந்து போயிட்டான்னு நினைக்கறேன்…இப்ப நான் ஆஸ்பத்திரிலே இருக்கேன்..அவ என் மடிலேதான் படுத்துக்கிட்டு இருக்கா..இல்லை வெறும் ஃபீவர்தான்..டாக்டர்கிட்டே ஸர்ட்டிஃபிகேட் வாங்கறேன்..வேற எதுவுமில்லை.” என்றார் மிஸஸ் ஸென். அதற்கு அந்தப் புறத்திலிருந்து என்ன பதில் வந்ததென்று ஜெய்க்குத் தெரியவில்லை.  அவரது கைப்பேசியை ஸ்பீக்கரில் போட்டார் மிஸஸ் ஸென்.

“குட் மார்னிங் நிவேதிதா.” என்றது ஒரு பெண் குரல்.

அதற்கு, “குட் மார்னிங் மேம்.” என்று சுரத்தேயில்லாமல் பதிலளித்தாள் நிவேதிதா.

“நிவிக்குப் ஃபீவரா?” என்று டீச்சர் கேட்க,

“யெஸ்” என்றது அந்தக் குட்டி.

“என்ன பண்ணிட்டு இருக்க?”

“பாட்டி மடி மேலே படுத்துக்கிட்டு இருக்கேன்.” என்றாள் நிவி.

“பாட்டி மடிலே படுத்துகிட்டே கலர், ஷேப், கவுண்டிங் பிராக்டீஸ் செய்யலாமே நீ..அடுத்தமுறை ஸ்கூலுக்கு வரும் போது ஆஸ்பத்திரிலே எத்தனை ஷேப், என்ன ஷேப், என்ன கலர்ன்னு எல்லாம் என்கிட்டே சொல்லுணும்..ஓகே.” என்றாள் நிவேதிதாவின் டீச்சர்.

“ஓகே மேம்.” என்று சொன்ன நிவேதிதா ஃபோனை அவள் பாட்டியிடம் கொடுத்துவிட்டு எழுந்து உட்கார்ந்து கொண்டாள். அதற்கு பின் நிவேதிதா முற்றிலும் வேற நிவேதிதாவாக மாறிப் போனாள்.  ரிசெப்ஷனில் இருந்த அத்தனை  பொருட்களையும் எண்ணி, அதை வர்ணம், வடிவம் என்று பிரித்து அந்த ஆராய்ச்சியின் முடிவில்,”பாட்டி, டுவெண்டி பிளாக் ஸர்கிள்ஸ், டூ ரெட் சர்க்கில்ஸ், ஃபைவ் ரெட் ஸ்குவையர்ஸ், எயிட் ரெட் டிரையங்கில்ஸ், த் ரீ பிளாக் டிரையங்கில்ஸ்.” என்று கணக்கு வைத்துக் கொண்டாள்.

நிவேதிதாவின் நடவடிக்கையைப் பார்த்துக் கொண்டிருந்த ஜெய் பிரமித்துப் போனான்.  

“எப்படி  எல்லாத்தையும் கலர், ஷேப், நம்பர்ஸைக் கனெக்ட் செய்ய கத்துக்கிட்டா?” என்று மிஸஸ் ஸென்னிடம் கேட்டான்.

“இந்த வருஷம் புதுக் கிளாஸ் டீச்சர் வந்திருக்காங்க…வேற விதமா குழந்தைங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கறாங்க..முதல்லே வீட்ல இருக்கற பொருட்களோட கலர் கண்டு பிடிக்க கத்துக் கொடுத்தாங்க..

அதிலேர்ந்து ஆப்பிள் மட்டும் ரெட் இல்லை, மிர்ச்சி ரெட், பூ ரெட், பேக் ரெட் கலர், சோபா ரெட் கலர் அப்படின்னு ஒரே கலர்லே நிறைய ஷேப், நிறைய பொருள் இருக்கலாம்னு சொல்லிக் கொடுத்தாங்க..இப்ப நாங்க எங்கே போனாலும் அங்கே இருக்கற பொருட்களோட கலர், ஷேப், கவுண்ட் எல்லாம் அவளா சொல்றா..

நாங்க தனியா கவுண்டிங், கலர் எல்லாம் சொல்லிக் கொடுக்க வேணாம்..அவளே கண்டு பிடிச்சிடறா..இப்ப ஃபோன்ல பேசினது அவளோட கிளாஸ் டீச்சர் தான்..கொஞ்சம் டைவர்ஷன் பண்ணி விட்டது நல்லாதாப் போச்சு.” என்று நிவேதிதாவின் பாட்டி அவளின் கிளாஸ் டீச்சரைப் புகழ்ந்தார்.

“சின்ன குழந்தைங்களுக்கு இவ்வளவு இன்வால்வ்மெண்டோட சொல்லித் தர்றாங்க..ஷீ ஹாஸ் காட் பஷன் (passion).” என்றான் ஜெய்.

அவன் பஷனேட் (passionate) என்று புகழந்த நிவேதிதாவின் டீச்சர்தான் அவனின் இன்ஸ்பிரெஷனென்று ஜெய்யும் அவனின் AIயும் உணரவில்லை. இருவரும் ஸ்கோர்ட் ஜீரோ இன் வாய்ஸ் ரெகக்னிஷன் (scored zero in voice recognition).

அதற்கு பின் நிவேதிதாவை டாக்டரிடம் காட்டிவிட்டு அவர்கள் வீடு திரும்பிய போது மதிய வேளை தாண்டியிருந்தது. அவ்வளவு நேரமாகும் என்று எதிர்பார்க்காத மிஸஸ் ஸென் ஜெய்யிடம் பலமுறை மன்னிப்பு கேட்டு கொண்டார்.  அந்த நேரத்தை அவன் சரியாக உபயோகித்து கொண்டதால், அந்த ஆஸ்பத்திரி விஸிட் ஜெய்யினுடைய ஆராய்ச்சிக்கு உதவியாக அமைந்தது.

வீட்டிற்குள் நுழைந்த ஜெய்யிடம்,”ஸாரி டா..இத்தனை நாழியாகும்னு நானும் நினைக்கலே.” என்று ருக்மிணியும் அவனிடம் மன்னிப்பு கேட்டார்.

“நோ பிராப்ளம்..நேக்கு நன்னா பொழுது போச்சு.” என்றான் ஜெய்.

“ஆஸ்பத்திரிலேயா?”

“ஆமாம் ம்மா..எல்லாரும் ஒரே விதமா தான் யோசிக்கறா…பத்து பேரும் ஒரே கேள்வியைக் கேட்கறா..ரிசெப்ஷன்லே ஒரு பாட் இருந்தா போதும்..ஒரே பதிலை சலிக்காம சிரிச்சுண்டே பல தடவை சொல்லும்..அந்த ரிசெப்ஷனிஸ்ட் பொண்ணு இரண்டு பேருக்கு கூட பொறுமையாப் பதில் சொல்லலே.” என்றான் ஜெய்.

“அவ ஏன் சலிச்சுக்கணும்..அவ வாங்கற சம்பளத்துக்கு ஒழுங்கா வேலை செய்யணும்..பதில் சொல்லணும்..பெஷண்ட்ஸ்கிட்டே சலிச்சுக்ககூடாது.” என்றார் ருக்மிணி.

“அதுக்குதான் சொல்றேன் அவ இடத்திலே பாட் இருக்கணும்னு..இந்த மாதிரி ஒரே வேலையைச் செய்ய மெஷின் போதும் ம்மா..மனுஷா வேண்டாம்.” என்றான் ஜெய்.

“போடா ஜெய்..எல்லாம் வேலையும் பாட்  பண்ணினா அவ பொழைப்புக்கு என்ன பண்ணுவா?” என்று கேட்டார் ருக்மிணி.

“ஒரே வேலையா இருந்தாக்கூட பிடிச்ச வேலையா இருந்தா சலிப்பே வராது..போர் அடிக்காது…சின்ன வேலையைக் கூட சிறப்பா செய்ய முடியும்.”

“அதான் சலிக்காம தினமும் இராத்திரி உன் பால்கனிலே உட்கார்ந்து மணிக்கணக்கா வானத்தை வேடிக்கை பார்த்திண்டு இருக்கியா?”

“அதைச் செய்யறத்துக்குதான் இந்த ஃபிளாட்டை வாங்க சொன்னேன்..டாப் மோஸ்ட் ஃப்ளோர்.. ஜஸ்ட் ஸ்கை அண்ட் ஜெய். (Just sky and jay)” என்றான் ஜெய்.

“இந்த மாதிரி முடிவேயில்லாத வானத்தையும், முழு நிலாவோட பிரம்மாண்டத்தையும், வெள்ளி நட்சத்திரக் கூட்டத்தையும் விடிய விடிய சலிப்பே இல்லாம பார்த்துதிண்டே இருக்கலாம் ம்மா.” என்றாள் பால்கனி சுவரைப் பிடித்து கொண்டு வானத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த பவி.

“பதினைஞ்சாவது மாடிங்கறதுனால பார்க்க முடியறது…நமக்கு கீழே இருக்கறவாளுக்கெல்லாம் அடுத்த பிளாக்கோட சுவர்தான் தெரியும்.” என்றார் சுகந்தி.

“அதனால் தான் இந்த ஃபிளாட்டுக்கு வர பிரியப்பட்டேன்..நம்ம டவுன்ஷிப்லே இருக்கும் போது இப்படித் தானே இராத்திரிலே, தோட்டத்திலே எல்லாரும் சேர்ந்து வானத்தைப் பார்த்திண்டு பார்ட்டி செய்வோம்..சாக்லெட், பேஸ்ட்ரி, டிக்கி, கச்சோடி..எல்லாம் ஹோம் மேட்.” என்று அந்த நாள்களில் மூழ்கிப் போனாள் பவி.

“அங்கே வேற பொழுதுபோக்கு கிடையவே கிடையாது..நம்ம ஆடிட்டோரியத்திலே இரண்டு வாரத்துக்கு ஒரு தடவைதான் புதுச் சினிமா..ஹோட்டல் போகணும்னா ஒரு மணி நேரம் பயணம்..அதனாலே எல்லாம் ஆத்துலேயே பண்ணினோம்..இப்ப அதே இடத்திலே நிறைய ஹோட்டலெல்லாம் வந்திருக்கும்..அங்கேயும் எல்லாரும் ஆன்லைன்ல ஆர்டர் பண்ணிண்டு இருப்பா..இப்ப அங்கே போனா நமக்கே அந்த இடத்தை அடையாளம் தெரியுமோ? தெரியாதோ? உன்னோட சித்தப்பா ஆத்துக்கும் அதுக்கு அப்புறம் நாம போகவேயில்லை.” என்றார் சுகந்தி.

அதற்குப் பவியிடமிருந்து பதில் வரவில்லை.  அவள் நட்சத்திரக் கூட்டத்துடன் கலந்து விட்டாள். அதனால் சுகந்தியே தொடர்ந்து பேசினார்.

“மாறி தான் போயிருக்கும்..நாமளும் மாறிண்டு வரோம்..திருச்சிலே யாராவது நம்ம ஆத்துக்கு வந்துண்டே இருப்பா..இப்ப ஒரு வாரம் கூட ஆகறது உன்னைத் தவிர வேறு முகத்தைப் பார்க்கறத்துக்கு.” என்றார்.

அதைக் கேட்டவுடன், அவள் நினைத்ததைச் செயல்படுத்த கிடைத்த வாய்ப்பைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டாள் பவி.

“வா..இன்னைலேர்ந்து வாக்கிங் ஆரம்பிக்கலாம்.” என்று சொல்லி சுகந்தியைக் கையோடு கீழே அழைத்துச் சென்றாள்.