“நான் தான் அடிச்சிண்டு இருந்தேன்.. ஆனா இப்பெல்லாம் வெளியே வரண்டாவுல நின்னு காத்தடிச்சா எங்கம்மா என்னைத் திட்டறா..காத்தடிகணும்னா ஆத்துள்ள சைக்கிளைக் கொண்டு வரச் சொல்றா..அதுக்கு முதல்லே நான் அதைக் குளிப்பாட்டணும்..
நீயே சொல்லு ஜெய் என்ன நியாயம் இது..ரோட்லே ஓட்டினா அழுக்குதானே ஆகும்..அதைக் குளிப்பாட்டி, காத்தடிச்ச அப்புறம் திரும்ப ரோட்லேதான ஒட்டணும்…திடீர்னு இறக்கை முளைச்சுப் பறந்தா போக முடியும்?..ரொம்ப ஸில்லியா பேசறா அம்மா..
நேக்கு குளிக்கவே வணங்காது எங்கேர்ந்து நான் என் சைக்கிளைக் குளிப்பாட்டறது….அதனாலே அப்பாகிட்டே காத்து அடிச்சு கொடுக்க சொன்னேன்..அப்பா முடியலைன்னு சொல்றா..எங்காத்து பம்பு ஏதாவது ரிபேர் ஆகியிருக்கும்னு நினைக்கறேன்.” என்றாள்.
“அதுக்கு காலம்பற பத்து நிமிஷம் சீக்கிரமா எழுந்துக்கணும்..என்னாலே முடியாது..இப்பதான் போக போறேன்.” என்று பிடிவாதம் பிடித்தாள் பவி.
“சரி..நானும் வரேன் உன்கூட.” என்று இருவரும் சைக்கிள் கடைக்குச் சென்றனர்.
காலனியின் இன்னொரு கோடியில் இருந்தது டவுன்ஷிப்பின் ஜீவனாடியான ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்.அங்கே துணிக்கடை, மளிகைக்கடை, மாவு மில், சைக்கிள் கடை என்று ஒரே வரிசையில் இருந்த கடைகளின் சொந்தக்காரரும் ஒருவரே. அவருக்கு எப்போதும் மளிகைக் கடையில் வாசம்.அங்கிருந்தே மற்ற கடைகளுக்கு வரும் கஸ்டமர்களை கவனிப்பது வழக்கம்.அவரின் மகன்களில் பொறுப்பில் இருந்தன மற்றக் கடைகள். பவி சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வருவதைப் பார்த்து,
“சோட்டூ.” என்று அவரின் கடைசி மகனை அழைத்தார்.மளிகைக் கடையின் உட்புறத்திலிருந்து வெளியே வந்த விடலைப் பையன்,
“ஹாங் பாப்பா (papa, appa).” என்றான்.
“காத்து அடிக்க வந்திருக்காங்க பாரு.” என்றார்.
சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த பவியின் முகத்தைப் பார்த்த சோட்டுவின் முகம் மலர்ந்தது.
சைக்கிள் கடையினுள் சென்று காத்தடிக்கும் பம்புடன் திரும்பி வந்த சோட்டு பவியைப் பார்த்து பரவசமடைந்தபடி குத்து மதிப்பாக வேலையை ஆரம்பித்தான்.
சைக்கிளை சோட்டூவிடம் ஒப்படைத்தபின் அவளின் புத்தகப் பையுடன் சற்று தள்ளி நின்று கொண்டாள் பவி.அவளுக்கு பின்னால் அவன் சைக்கிளிருந்து இறங்காமல் ஒற்றைக் காலை தரையில் ஊன்றியப்படி காத்திருந்தான் ஜெய்.
“தோனோ க்யா? (இரண்டு வண்டியுமா?)” என்று ஜெய்யின் சைக்கிளுக்கும் காத்து நிரப்ப வேண்டுமா? என்று சோட்டூ கேட்க,
“நஹி..காலி மேரா சைக்கிள். (இல்லை..என்னோட சைக்கிள் மட்டும் தான்)” என்றாள் பவி.
“தோனோ டயர்மே பர்தே தா ஹூ. (இரண்டு டயர்லேயும் காத்து அடிச்சுக் கொடுக்கறேன்)” என்று பவிக்கு உதவுவது போல் முன்னால், பின்னால் என்று இரண்டு டயர்களுக்கும், பவியைக் கண் கொட்டாமல் பார்த்து கொண்டே காத்து அடித்தான் சோட்டூ. பஞ்சர் டயருக்கு அவன் காத்து அடித்து முடிக்கும் வரை காத்திருந்ததில் களைத்துப் போனான் ஜெய்.
காற்று அடித்து முடித்த பின் பவியிடம் சைக்கிளை ஒப்படைத்த சோட்டு காற்றடிக்கும் பம்பை எடுத்த இடத்தில் வைத்துவிட்டு அவன் தலையை ஸ்டைலாகக் கோதியபடி அவள் அருகில் வந்தான்.
அவளது புத்தக பையை சைக்கிளின் கேரியரில் வைத்த பவியோ அவன் ஸ்டலைக் கவனிக்காமல் அவளுடையப் பையினுள் கையை விட்டு எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.
“என்ன தேடற?” என்று அவளிடம் கேட்டான் ஜெய்.
“சில்லறை தேடறேன்.”
“நான் கொடுக்கறேன்.” என்று அவன் பாக்கெட்டில் கைவிட்டு சில்லறையை எடுத்து பவியிடம் கொடுத்தான் ஜெய்.
அவளது தேடலைக் கைவிட்டு விட்டு அவனிடமிருந்து சில்லறையை வாங்கி கொண்ட பவி அதை சோடூவின் கையில் வைத்து விட்டு,”தாங்க்ஸ்” என்று சொன்ன போது அவளைப்பார்த்து கண் சிமிட்டினான் சோட்டூ.அதைப் பார்த்தவுடன் தான் ஏன் பஞ்சரை சரி செய்யாமல் காற்று அடித்து கொள்ளும்படி பவிக்கு சோட்டூ அட்வைஸ் செய்தானென்று ஜெய்க்குப் புரிந்தது.
அவனுடைய அப்பா பக்கத்து கடையில் அமர்ந்தபடி அவர்களைப் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே சோட்டூ அப்படி செய்தது ஜெய்யை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. சோட்டூவைப் போன்று பொதிப்பருவத்தில் இருந்த ஜெய் அதுவரை எந்தப் பெண்ணையும் பார்த்து கண் சிமிட்டியதில்லை. கண் சிமிட்டவும் தோன்றியதில்லை.
சோட்டூவின் முகத்திலிருந்து பவியின் முகத்திற்கு ஜெய்யின் பார்வை தாவியது.சோட்டூ கண் சிமிட்டியதைப் பவியும் கண்டு கொண்டாள் என்பதை கண்டு கொண்டான் ஜெய். ஆனால் அதைக் கண்டு கொள்ளாதது போல் அவள் சைக்கிளில் ஏறியதையும் கண்டு கொண்டான் ஜெய்.ஜெய்யும் பவியும் மெதுவாக வீடு நோக்கிச் செல்ல, அவனது வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாமல்,
“உன்னோட சைக்கிள் பஞ்சர் ஆயிருக்கு..காற்று அடிச்சா சரியாப் போயிடும்னு அந்த சோட்டூ பொய் சொல்றான்..அத்தனை நாழி எடுத்திண்டான் அந்த ஒரு டயருக்கு..ஒரு நாள் கழிச்சு திரும்ப நீ இவன்கிட்டே தான் வந்து நிக்க போற..உன்னோட டயம் தான் வேஸ்ட்டாகப் போகறது.” என்றான் ஜெய்.
“என்ன செய்யச் சொல்ற? ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸ்லே எல்லா கடையும் அவாளோடது தான்..இந்த ஊர்லேயே ஒரே ஒரு சைக்கிள் கடைதான் இருக்கு..அவன் சொல்றதைக் கேட்டுதான் ஆகணும்..இல்லேன்னா அவாளோட எந்தக் கடைக்குப் போனாலும் ஒரு நிமிஷ வேலையை ஒரு நாள் ஆக்குவான்..பெரிசா டயம் வேஸ்ட்டாகிடும்.” என்றாள் பவி.
“இப்ப அவன் என்ன பண்ணினான் பார்த்தியா?” என்று பொறுக்க முடியாமல் கேட்டான் ஜெய்.
“என்னைப் பார்த்து கண் சிமிட்டினான்..காலிப்பையனெல்லாம் கண் சிமிட்டுவான்னு எங்கம்மா சொல்லியிருக்கா.” என்று சோட்டூவின் செய்கையை அதே வயதில் இருந்த இன்னொரு பையனிடம் விமர்சித்தாள் பவி.
“காலிப்பையனா? அப்படின்னா?” என்று அர்த்தம் தெரிந்தே கேட்டான் அந்த நல்ல பையன்.
“நேக்கு அவ்வளவு தமிழ் தெரியாது.. எங்கம்மாகிட்டேயே அர்த்தம் கேட்டுச் சொல்றேன்.” என்றாள் அர்த்தம் தெரிந்திருந்த அந்த நல்ல பெண்.
பவியின் பதிலில் பதற்றமடைந்த ஜெய்,”வேணாம்..கண் சிமிட்டறாவாளைக் கெட்டாவான்னு மாமி சொல்றா.” என்று அப்போதுதான் அதன் அர்த்தம் புரிந்தது போல் நடித்தான்.
அவர்கள் இருவரும் மெதுவாக சைக்கிளில் போய் கொண்டிருக்க, மாலை நேர வாக்கிங் செய்ய ஆரம்பிருத்திருந்தனர் குடியிருப்பு வாசிகள்.அவர்கள் இருவரும் பார்க்கைக் கடக்கும் போது சிறு குழந்தைகள் விளையாடி முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.சில வீடுகளில் வாசலில் விளக்கு எரிய ஆரம்பித்திருந்தது.
“இன்னைக்கு ரொம்ப லேட்டாயிடித்து ஜெய்..லைப்ரரி, பாட்டு கிளாஸ் இரண்டும் கட்..எங்கம்மா என்னைக் கோவிசுக்க போறா..அப்பாக்கு இன்னைக்கு மத்தியான ஷிப்ட் வேற..அம்மாகிட்டேயிருந்து என்னை யார் காப்பாத்துவா?” என்று கவலைப்பட்டாள் பவி.
“இப்ப போக வேண்டாம்னு நான் சொன்னேன்..நீதான் கேட்கலே..காலம்பற வந்திருந்தா அவன் கண் சிமிட்டியிருக்க மாட்டான்..இருட்டலே யாருக்கும் தெரியாதுன்னு செய்திருக்கான்.” என்றான் ஜெய்.
“அதெல்லாம் இல்லை..நான் எப்ப காத்து அடிக்க வந்தாலும் அவன் கண்ணடிக்கறான் ஜெய்.. என்ன பண்ண ஜெய்?” என்று ஜெய்யிடம் அட்வைஸ் கேட்டாள் பவி.
அதற்கு என்ன செய்வதென்று அவளைவிட இரண்டு வயதே பெரியவனான ஜெய்க்கும் புரியவில்லை.
ஜெய் அமைதியாக இருந்ததால்,“அடுத்த தடவை இந்த மாதிரி பண்ணினா ஆஸ்பத்திரிக்குப் போய் கண்ணைச் செக் செய்யதுக்க சொல்லப் போறேன்..நர்வ் பிராப்ளம்னு அவனை பயமுறுத்தப் போறேன்.” என்று திட்டமிட ஆரம்பித்தாள் பவி.
“வேண்டாம்..அவன்கிட்டே எதுக்கு வாயை விடற..இந்த ஸண்டே நானே உன்னோட சைக்கிளைக் கொண்டு போய் பஞ்சர் போட்டு எடுத்திண்டு வரேன்..அதுக்கு அப்பறம் நானே காத்தும் அடிச்சுக் கொடுக்கறேன்.” என்று அவள் பிராப்ளத்திற்கு தீர்வு சொன்னான் ஜெய்.
“வேண்டாம்..நீ காத்து மட்டும் அடிச்சுக் கொடு..நான் அதுக்கு உங்காத்து வாசல்லே கோலம் போடறேன்..காத்துக்கு கோலம் சரியாப் போயிடும்..பஞ்சருக்கு என்னாலே காம்பன்ஸேட் செய்ய முடியாது..மினி மாமி பெரிய வேலை ஏதாவது செய்ய சொல்லுவா..நான் மாட்டேன்.” என்று பவி மறுக்க,
“சுப் (chup)..நீ சைக்கிள் கடைக்குத் தனியாப் போக வேண்டாம்..நான் தான் இனி நோக்கு சைக்கிள்காரன்.” என்று பவியிடம் குரல் உயர்த்தினான் ஜெய்.
அவள் மீது கோபப்பட்ட ஜெய்யைப் பாரத்து,”தூ சுப்..உங்கம்மாக்கு என்னாலே வேலை செய்ய முடியாது..இந்த ஸ்ண்டே எங்கப்பாக்கு ஆஃப் அவரை அழைச்சிண்டுப் போய் நானே பஞ்சர் போட்டுக்கறேன்.” என்றாள் பவி.
அவனுடைய அம்மாவை அறிந்திருந்த ஜெய்யும்,“ஓகே..சுதர்ஷன் மாமாவை உன்கூட அழைச்சிண்டு போ.” என்று பவியின் பிளானிற்கு ஒப்புதல் கொடுத்தான்.
“நீ காத்து மட்டும் அடிச்சுக் கொடு.. அது போதும்..அப்புறம் இன்னைலேர்ந்து நீதான் என்னோட சைக்கிள்காரன்.” என்று சொல்லிவிட்டு வேகமாக அவள் சைக்கிளை மிதித்து, ஜெய்யை முந்திக் கொண்டு சென்றாள் பவி.
அதற்கு பின் பவியின் சைக்கிள் ஜெய்யின் பொறுப்பானது. பவியின் ஆஸ்தான சைக்கிள்காரனான் ஜெய்.
பால்கனியில் அமர்ந்தபடி அவனது சைக்கிளை மஹாபலிபுரம் பயணத்திற்குத் தயார் செய்து கொண்டிருந்த ஜெய்யின் மனத்தில் எப்போதும் போல் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் விடை தெரியாமல்மனப் பெட்டகத்திற்குள் போக மறுத்தது.
‘சோட்டூவைப் போல் அவனும் பவியைப் பார்த்து கண் சிமிட்டியிருந்தால் அவள் என்ன செய்திருப்பாள்? அவனையும் காலிப்பையல் என்று சுகந்தி மாமியிடம் கம்ப்ளெயண்ட் செய்திருப்பாளோ?’ என்ற கேள்விக்கு விடையைத் தெரிந்து கொள்ள ஆவலானான் பவியின் ஆஸ்தான சைக்கிள்காரன்.
ஸ்கூல் பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த பவியின் மனதும் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் தேடிக் கொண்டிருந்தது.
‘சோட்டூவைப் போல் ஏன் அவளைப் பார்த்து கண் சிமிட்ட தோன்றவில்லை ஜெய்க்கு? அவளுடைய ஆஸ்தான சைக்கிள்காரனுக்கு அவள் மீது ஆர்வம் ஏற்படவில்லையா?’என்ற கேள்விக்கு விடை கிடைக்காததால் அவளது மனதை விட்டு அது விலக மறுத்தது.
பொதிப்பருவத்திற்குப் பின் சந்தித்திராத ஜெய், பவி இருவரும் அவர்கள் சம்மந்தப்பட்ட எல்லா நிகழ்வுகளையும் அணு அணுவாக ஆராய்ந்து, ஒருவர் மேல் இன்னொருவர் கொண்டிருந்த பிரியத்தைத் திரி திரியாகப் பிரித்துப் பார்த்து அதற்குப் பெயர் வைக்க பிரம்ம பிரயத்தனம் செய்து கொண்டிருந்தனர்.
இப்பொழுதெல்லாம், தினமும், காலையில் அவளின் தற்போதைய சைக்கிள்காரனின் தரிசனம் சூர்யோதத்தைப் போல் தவறமால் கிடைத்தது பவிக்கு. சில நாள்கள் பள்ளி செல்வதற்குத் தயாராகி, அவளது பிளாக்கிலிருந்து வெளியே வந்த போது அவளை க்ஷண நேரத்தில் கடந்து சென்றான் இந்த சைக்கிள்காரன்.
பத்து வருட இடைவெளி இடையூறாக மாறியதால் பத்து அடி இடைவெளியில் அறிமுகமில்லாத அந்நியர் போல் ஒருவரையொருவர் கடந்து போயினர் இருவரும். இரண்டு இன்ஸ்பிரெஷன்ஸ் இடையில் ஜீரோ அட்ராக்ஷன் (zero attraction).