அத்தியாயம் – 6 

அந்த விடியற்காலை வேளையில் அவனுடைய மரிடா சைக்கிளில் அவர்கள் குடியிருப்பை வலம் வந்து கொண்டிருந்தான் ஜெய். அவன் பைக்கின் வேகத்தைப் பார்த்து,  நடை பழக வந்திருந்த பலர் சில நிமிடங்கள் நின்று வேடிக்கை பார்த்தனர். தலைக்கவசத்துடன் சைக்கிளை ஓட்டிக் கொண்டிருந்தவனைப் பார்த்த வித்தியாசப் பார்வைகளுக்குப் பழகிப் போயிருந்தான் ஜெய்.

அதே அதிகாலை வேளையில், பதினைந்தாவது மாடி பால்கனியில் ஆதித்ய ஹிருதயம் சொல்லிக் கொண்டிருந்த பவியும் சில நாள்களாக அந்த சைக்கிள்காரனைக் கவனித்து வந்தாள்.  முதலில் அது சைக்கிளென்றே அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் சூர்யோதயம் வரை பால்கனியில் அவள் குடியிருப்பதால் விடியலின் வெளிச்சத்தில் அது சைக்கிள் என்று உறுதியானது.  

அந்த சைக்கிளைப் பார்த்த பவிக்கு அவளுடைய சைக்கிள் தினங்கள் நினைவிற்கு வந்தன.  திருச்சியில் வீட்டின் அருகிலேயே ஸ்கூல் இருந்ததால் சைக்கிளுக்குத் தேவையிருக்கவில்லை.  கல்லூரிக்கும் வேலைக்கும் பஸ்ஸில் போய் வந்ததால் சைக்கிளுடன் இருந்த ஆழமான உறவு அறுந்து போனது.  இப்போது இந்த சைக்கிள்காரன் அவளின் ஆஸ்தான சைக்கிள்காரனை அவளுக்கு நியாபகப்படுத்தினான்.

“என்ன பவி, இன்னைக்கு ஸ்கூலுக்கு போற ஐடியா இருக்கா? இல்லையா?” என்று கிட்சனிலிருந்து சுகந்தி குரல் கொடுத்தார்.  அதற்குமேல் பால்கனியில் இருக்க முடியாது என்று உணர்ந்த பவி, அவசர அவசரமாக பள்ளி செல்வதற்குத் தயாராகி வந்தாள்.

மஞ்சளில் கறுப்பு பார்டர் போட்ட லைனன் சேலையில் ஸிம்பிலாகத் தயாராகி வந்த மகளிடம்,”காதுல சின்னதா தோடு..கைல தங்க வளையல்..கழுத்துலே மெல்லிசு செயின்..ஒரே மாதிரி தினமும் டிரஸ் பண்ற..புடவைக்கு ஏத்த மாதிரி மேட்சிங்கா போட்டுக்கலாமே.” என்றார் சுகந்தி.

“சின்ன குழந்தைகளைப் பார்த்துகணும் படிப்பு சொல்லிக் கொடுக்கணும் அழுதா மடிலே தூக்கி வைச்சுக்கணும்..அதெல்லாம் செய்யணும்னா நான் ஃப்ரீயா இருக்கணும்..நீ சொல்றதெல்லாம் போட்டிண்டா என் காதையும் கையையும் பிடிச்சு அதுகள் இழுக்கும்…கழுத்தைக் கட்டிண்டு மடியை விட்டு இறங்காதுகள்.” என்றாள் பவி.

“என்னமோ மனசுலே தோணித்து அதான் சொன்னேன்.” என்றார் சுகந்தி.

“திருச்சிலேயும் தான் வேலைக்குப் போயிண்டு இருந்தேன்..அப்ப இந்த மாதிரி ஏதுவும் நீ சொல்ல மாட்ட.” என்றாள் பவி.

அதற்கு பதில் சொல்லாமல் அவளுடைய காலை டிஃபனை டைனிங் டேபிளில் வைத்தார் சுகந்தி. திருச்சியில் பவியின் வயதை ஒத்த இளம் பெண்கள் இருவர் இருந்ததால் பவிக்கென்று தனியாக அவர் எதுவும் செய்ய முடியவில்லை, சொல்ல முடியவில்லை.  தனிக் குடித்தனமென்றாலும் குழந்தைகள் அனைவருக்கும் ஒரே போல்தான் பொருள் வாங்கினர்.  அதனால் சுகந்தியோ இல்லை பவியோ அவர்கள் சொந்த விருப்பத்தை வெளிப்படுத்தியதில்லை. 

இங்கு, சென்னை வந்த பின், இந்த மூன்று மாதங்களில் அவள் வேலை பார்க்கும் பள்ளியின் தரத்திற்கு ஏற்றார் போல் உடை உடுத்தப் பழகியிருந்தாள் பவி.  அவளைச் சந்திக்க வரும் பெற்றோர்களுக்கும் அவளுடன் வேலை பார்க்கும் மற்ற ஆசிரியர்களுக்கும் அவளின் தோற்றம் மரியாதையை ஏற்படுத்த வேண்டுமென்பதை மனத்தில் வைத்துக் கொண்டு வெகு கவனமாக அவளது உடைகளைத் தேர்வு செய்திருந்தாள். 

சுகந்தி சொன்னது போல் அந்தப் புடவைக்கு ஏற்றார் போல் காதணியும் வளையளும் அணிந்தால் அவள் கல்லூரி பெண் போல் தோற்றமளிப்பாள்.  அந்த தோற்றத்தை தவிர்க்கத்தான் தங்கத் தோடு, வளையல் போதுமென்று இருந்தாள் பவி.  அதைப் புரிந்து கொண்ட சுகந்தியும் விவாதத்தை வளர்க்காமல் அவளுக்கு டிஃபன் பரிமாற, அதை மௌனமாகச் சாப்பிட்டு முடித்து பள்ளிக்குப் புறப்பட்டாள் பவி.

“ம்மா வரேன்.” என்று சுகந்தியிடம் சொல்லிக் கொண்டு பதினைந்தாவது மாடியிலிருந்து கீழ் தளத்திற்கு மின்தூக்கியில் பயணித்த போது, ‘அது ஏன் சைக்கிள்காரியாக இருக்கக் கூடாது?’ என்று பவியின் மனது ஒரு புறம் சிந்தித்தாலும், அது ஆணாகாத்தான் இருக்க வேண்டுமென்று மற்றொரு புறம் அறிவு அறிவுறுத்தியது.  விடியற்காலையில் எந்த பெண்ணிற்கு இவ்வளவு நேரமும் சுதந்திரமும் கிடைக்கப் போகிறது என்று எண்ணியபடி மின்தூக்கியிலிருந்து அவள் வெளியே வந்த போது அந்த சைக்கிள்காரன் அவள் கண்ணில் படவில்லை.  அவள் பார்வையில் படாமல் மறைந்து போன இந்த சைக்கிள்காரனால் பள்ளி சென்றடையும் வரை அவளின் ஆஸ்தான சைக்கிள்காரன் அவள் மனதைவிட்டு மறைய மறுத்தான். 

அழைப்பு மணி சத்தம் கேட்டு வாசல் கதவைத் திறந்த ருக்மிணி, கையில் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த ஜெய்யைப் பார்த்துக் கோபம் கொண்டார். அவரின் கோபப் பார்வையைப் பொருட்படுத்தாமல்  சைக்கிளை உள்ளே எடுத்து வந்து பால்கனியின் ஒரு மூலையில் வைத்தான் ஜெய்.

“ஏன் டா..இதை என்துக்கு பதினைஞ்சாவது மாடி வரைக்கும் தூக்கிண்டு வந்திருக்க?” கீழ வைக்க வேண்டியதுதானே.” என்று கோபத்தை வார்த்தைகளாக வெளியிட்டார் ருக்மிணி.

“இதை கொஞ்சம் செக் பண்ணனும் ம்மா..ஸட்டர்டே மஹாபலிபுரம் போகப் போறேன்.” என்றான் ஜெய்.

‘சைக்கிள்லேயா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் ருக்மிணி.

அடுத்த தெருவிற்கு சைக்கிளில் போவதைப் போல், சாதாரணமாக,“ஆமாம்..இங்கே சில பைக்கர்ஸோட டை அப் பண்ணியிருக்கேன்..இதுக்கு அடுத்த ட்ரிப் பாண்டிச்சேரி.” என்றான்.

“டேய்..என்ன டா இது? மெஷினோட வேலை பார்க்கறவன் இப்படி இரண்டு சக்கர சைக்கிள்லே டூர் பண்ணிண்டு இருக்க?”

“அது வேற..இது வேற..என்னை ஆரோக்கியமா வைச்சுக்க நான் தான் முயற்சி எடுக்கணும்..ஆரோக்கியத்தை டிராக் பண்ண, கெட்டுப் போயிடுத்தான்னு கண்டு பிடிக்க மெஷின் உதவ முடியும்..ஆனா அதை சரியா வைச்சுக்க நமக்கு எது சரியான வழின்னு மெஷின் சொல்லித் தர முடியாது..சில பேருக்கு வாக்கிங், சில பேருக்கு ஸுவிம்மிங், சில பேருக்கு வெயிட்ஸ்..யாருக்கு எதுன்னு சொல்ற அளவுக்கு மெஷின் இண்டலிஜ்ன்ஸ் வரலே, வளரலே.” என்றான் ஜெய்.

“அமெரிக்காலேர்ந்து வந்ததுலேர்ந்து ஆத்துலே சும்மாதானே இருக்க.. நீ உன்னோட இண்டலிஜன்ஸை அதுக்கு கொடு.” என்று வேலைக்குப் போகாமல் வெட்டியாக இருப்பதைச் சுட்டிக் காட்டினார் ருக்மிணி.

“சும்மா இருக்கேனா?..யார் சொன்னா நோக்கு? இண்டரெஸ்டிங் வேலை பண்ணிண்டு இருக்கேன்.”

“என்ன டா இண்ட்ரெஸ்டிங்? பொழுது விடிஞ்சு பொழுது போனா ஆத்துக்குள்ளேயே சுத்திண்டு இருக்க.. என்னோட வம்பு பேசிண்டிருக்க.” என்றார்.

“உன்கூட பேசறது இண்ட்ரெஸ்டிங் இல்லையா?..நீ என்ன நினைக்கறேன்னு கண்டுபிடிக்கறது அவ்வளவு இண்ட்ரெஸ்டிங்கா இருக்கு ம்மா..அப்புறம் ஆத்துக்குள்ளே சைக்கிளை ஓட்டலே ஆத்துக்கு வெளிலேதான் ஓட்டறேன்.”

“என்னவோ போ..நீ இப்படி சைக்கிள்லே சுத்தறதைப் பார்த்து நேக்கு டவுன்ஷிப் நியாபகம் வந்திடுத்து.  அங்கே வேற வழியில்லேன்னு தினமும் ஸ்கூல்லுக்குப் போயிண்டு இருந்த..இப்ப அதேயே தினமும் வழிபாடாட்டம் ஸிரத்தையா செய்யற.” என்று அலுத்துக் கொண்டார்.

அந்தக் காலை வேளையில் ருக்மிணியின் பேச்சு ஜெய்க்கு பவியை நியாபக்படுத்தியது.  அவளுடைய சைக்கிளும் அவளின் ஆஸ்தான சைக்கிள்காரனாக அவன் பதவியெற்றதும் அவன் நினைவுப் பெட்டகத்திலிருந்து வெளியே வந்தது.

“நான் எதுக்கு உன் சைக்கிளுக்கு காத்து அடிச்சு கொடுக்கணும்..நான் எங்காத்துலே ஈ அடிச்சிண்டு இருக்கேனா?” என்று சைக்கிளைத் தள்ளியபடி நடந்து கொண்டிருந்த பவியிடம் அவன் சைக்கிளைத் தள்ளியபடி நடந்து வந்த ஜெய் கேட்டான்.

“நீ உங்காத்துலே ஈ அடிச்சிண்டு இரு இல்ல ஸ்கூல்லே காப்பி அடிச்சிண்டு இரு..நேக்கு என்ன?” என்று ஜெய்யுடன் வாயடித்தாள் பவி.

“நான் உன்னை என்ன கேட்டேன்? நீ என்ன பதில் சொல்ற?”

“நான் உன்னை மாதிரி இல்லேன்னு சொல்றேன்..ஐயாம் வெரி பிஸி..இப்ப ஆத்துக்குப் போயிட்டூ லைப்ரரிக்குப் போய் புக்ஸ் மாத்திண்டு வரணும்..அப்புறம் பாட்டு கிளாஸ் வேற இருக்கு.” என்று ஸ்கூலைத் தவிர அவளுக்கு இருந்த மற்ற தினசரி வேலைகளைப் பட்டியலிட்டாள் பவி.

“டெய்லி புக்ஸ் மாத்தற ஆள் நீ ஒருத்திதான்..ஒரே நாள்லே படிச்ச முடிக்க அது என்ன பாடப் புஸ்தகமா?” என்று ஜெய் கிண்டலாகக் கேட்க,

“நான் எந்தப் புஸ்தகம் வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் படிப்பேன்..நோக்கு என்ன?”

“பத்தாவதுலே படிப்புக்கே டயம் பத்தாது எல்லாருக்கும்..நோக்கு எப்படி தான் மத்ததுக்கு டயம் கிடைக்கறதோ?” என்று அவன் அவளைக் கோபப்படுத்த,

“நேரமேயில்லாம எல்லாரும் இருக்கறச்சே நேக்கு மட்டும் எல்லாத்துக்கும் எப்படி நேரம் கிடைக்கறது?..அதனாலே என் நேரத்திலே நான் ஏதாவது எக்ஸ்டரா செய்யணும்னா நேக்கு யாராவது எக்ஸ்ட்ரா செய்யணும்..உங்காத்து வாசல்லே நான் கோலம் போடணும்னா என் சைக்கிளுக்கு நீ காத்து அடிச்சுத் தரணும்.” என்று அவன் வார்த்தைகளாலேயே அவனை மடக்கினாள் பவி.

அவள் சைக்கிளின் முன் டயரைப் பார்த்தவன்,”இது காத்து கேட்கலே..மாத்துன்னு சொல்றது.” என்றான் ஜெய்.

“ஹாங்..டயரை மாத்தணுமா?” என்று கேட்டாள் பவி.

“ஆமாம்..இல்லேன்னா இரண்டு நாளுக்கு ஒரு தடவை காத்து அடிச்சிண்டு இருக்கணும்..நீ ஒரே ஒரு நாள் கோலம் போட்டிட்டு என்னை இரண்டு நாளைக்கு ஒருதரம் வேலை வாங்கலாம்னு பிளான் போட்டு வைச்சிருக்கியா?” என்று கேட்டான்.

அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவளருகில் நடந்து வந்த ஜெய்யை யோசனையாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் பவி.  இருவரும் அப்போதுதான் ஸகூலிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தனர்.  அவள் பத்தாம் வகுப்பிலும் அவன் பன்னிரெண்டாம் வகுப்பிலிருந்ததால் இருவருக்கும் பள்ளி முடிந்த பின் ஸ்பெஷல் கிளாஸஸ் இருந்தன.  அது முடிந்து தோழிகளுடன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த பவியின் சைக்கிளில் திடீரென்று காற்று குறைந்தவுடன் அதை மிதிக்க முடியாமல் போனதால், தள்ளிக் கொண்டு செல்ல முடிவு செய்தாள். தோழிகள் அனைவரும் அவர்களுடைய சைக்கிளை ஓட்டிக் கொண்டு முன்னே செல்ல, அவர்கள் பின்னே மெதுவாக அவள் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு போனாள் பவி.  அப்போது அவளை முந்திக் கொண்டு சென்ற ஜெய், அவன் சைக்கிளிருந்து இறங்கி அவளுடன் சேர்ந்து கொண்டான்.

“என்ன பார்க்கற?” என்று அவனை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்த பவியிடம் கேட்டான் ஜெய்.

“நோக்கு சைக்கிளைப் பற்றி என்ன தெரியும்னு யோசிக்கறேன்.”

“பட்டினியா இருக்கறவனுக்கு ஒரு வேளை சாப்பாடு போடற மாதிரி தான் பஞ்சரான டயருக்கு காத்து போடறது…உயிர் கொடுக்கற மாதிரி..உடனே உழைப்பை எதிர்பார்க்க முடியாது.”

“ஆனா அவன் அப்படி சொல்லலையே..நன்னாதான் இருக்கு.. டயர்  நிறைய நாள் உழைக்கும்ணு சொன்னான்..அதான் இப்ப அவன் கடைக்குக் காத்தடிக்கப் போயிண்டிருக்கேன்.” என்றாள் பவி.

“யாரு?” 

“சைக்கிள் கடை சோட்டூ.”

“என்ன சொன்னான்?”

“காத்து இறங்கின போதெல்லாம் கடைக்கு வந்து காத்து அடிச்சுக்க சொன்னான்.” என்றாள் பவி.