ஜெய்யை முதன்முதலாக எப்போது அவள் சந்தித்தாள் என்று யோசித்த போதுஒட்டடைக் குச்சி தோற்றத்தில் வேகமாக சைக்கிளில் ஸ்கூலுக்கு சென்ற ஓர் உருவம் தான் அவள் நினைவுக்கு வந்தது. கடைசியாக அவள் ஜெய்யை சந்தித்தது அவனின் கல்லூரியின் முதல் வருடத்தில்.அவளுக்காக அவனுடைய ஷேர் பிரசாதத்தைக் கொண்டு வந்து கொடுத்த ஜெய் இப்போது அவள் கண்ணுக்கு முன்னால் அல்ல கண்ணுள்ளே தோன்றினான்.
வட இந்தியாவில் விநாயகர்சதுர்த்தி அன்று பள்ளிகளுக்கு விடுமுறை இல்லாததால், காலையில் பள்ளிக்குச் செல்வதற்கு முன் அவளால் முடிந்த அளவிற்கு சுகந்திக்கு உதவி செய்துவிட்டு சென்றவள், மாலை வீடு திரும்பியவுடன், ‘அவள் ஆத்துலே இல்லை’ என்ற செய்தியைக் கேட்டு அவளுக்குப் பிரசாதம் கொடுக்க மறுத்து விட்டார் சுகந்தி.
பிரசாதம் வேண்டுமென்று அவள் அழுது ஆர்பார்ட்டம் செய்ய, அதை சட்டை செய்யாமல் பிள்ளையார் கோவிலில் ஏற்பாடு செய்திருந்த மாலை நேரத்துப் பூஜையில் கலந்து கொள்ள சென்றனர் சுகந்தி, சுதர்ஷன், தீபக் மூவரும்.அவளுடைய பசி அவளது கோபத்தை மேலும் தூண்டி விட, கையில் கிடைத்த சிப்ஸ் பாக்கெட்டை காலி செய்தபடி அவள் டி வி பார்த்து கொண்டிருந்த போது தான் அவர்கள் வீட்டுப் பிரசாதத்தை அவளுக்காக கொண்டு வந்தான் ஜெய்.
அதற்குமுன் அவர்கள் இருவரும் தனிமையில் பலமுறை சந்தித்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அன்றைய சந்திப்பின் முடிவில் பவியினுள் மாற்றம் ஏற்பட்டிருந்தது.அந்த மாற்றம் அவள் மீது ஜெய் காட்டிய கரிசனத்தினாலா? அவளுக்குள் இருந்த திறமையை அவன் அங்கீகரித்ததாலா? இல்லை அவளுக்கு அவன் மேல் ஏற்பட்ட ஆர்வத்தினாலா? என்று அன்றையே மாற்றத்தை இன்று ஆராய்ந்து கொண்டிருந்தாள் பவி. அந்த ஆராய்ச்சியின் முடிவில் ஜெய்யின் மீது அவளுக்கு இருப்பது இதுவரை வேறு யார் மீதும் ஏற்படாத உணர்வு என்று புரிந்தவுடன் படுக்கையில் எழுந்து அமர்ந்து கொண்டாள். அவளின் அந்த தீடீர் செயலில்,
“என்ன டீ? ஏன் எழுந்திண்டே?” என்று அவள் அருகில் உறங்கிக் கொண்டிருந்த சுகந்தி, உறக்கம் கலைந்து கேட்க,
“நீ தூங்கு ம்மா..நேக்குத் தூக்கம் வரலை..நான் ஹால்லே போய் உட்கார்ந்துக்கறேன்.” என்று பவி பதில் சொல்ல,
“வேணாம் ம்மா..இப்ப தூங்கினா நாளைக்கு ஸ்கூல்லையும் தூக்கம் வரும்..நீ படுத்துக்கோ..நான் புஸ்தகம் ஏதாவது படிச்சிண்டு இருக்கேன்.” என்று சொல்லி வரவேற்பறைக்கு வந்தாள் பவி.அங்கே வரவேற்பறையில் அவளுக்காகவே காத்திருப்பது போல அமர்ந்திருந்தார் அன்று காலையில் பிறந்த நாள் கொண்டாடிய பிள்ளையார்.
அவரெதிரே கண்மூடி அமர்ந்த பவி,”உன்கிட்டே ஒண்ணே ஒண்ணுதான் கேட்கப் போறேன்..என் இன்ஸ்பிரெஷனை என் கண்ணுக்கு ஒரே ஒரு தடவை காட்டிடு..நோக்கும் அடுத்த விநாயகர் சதுர்த்தி வரைக்கும் டயம் தரேன்.” என்று வேண்டிக் கொண்டாள். அதற்கு மேல் வரவேற்பறையில் இருக்க முடியாமல் படுக்கையறைக்கு வந்து, சுகந்தியின் அருகில் படுத்து மறுபடியும் தூங்க முயற்சி செய்தவளை மறுபடியும் ஜெய்யின் நினைவுகள் தூங்க விடவில்லை.
சுதர்ஷனத்தின் மறைவிற்குப் பின் வாழ்க்கையை கடந்து வர உதவும் வழிகாட்டியாக ஆனது அவளும் ஜெய்யும் சேர்ந்து உருவாக்கிய A2I2 அணு சூத்திரம்.
அந்த வழிகாட்டியின் வழியைப் பின்பற்றியதால் தான் தினசரியில் பார்த்த அந்த விளம்பரத்திற்கு விண்ணப்பம் செய்தாள்.பாடத் திட்டதிலிருப்பதை இப்படித்தான் சொல்லித் தர வேண்டும் என்று கட்டுப்பாடு இருந்த பள்ளியிலிருந்து விடுபட்டு பாடத் திட்டத்தில் இருப்பதை எப்படி வேண்டுமானாலும் சொல்லித் தரலாம் என்று ஆசிரியர், மாணவர் இருதரப்பினருக்கும் சுதந்திரம் அளித்து, கல்வி புகட்டுவதில் புது முயற்சிகளை மேற்கொண்டிருந்த, சென்னையில் பிரபலமாகிக் கொண்டிருந்த இண்டர்நேஷ்னல் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தாள்.
நர்ஸரி குழந்தைகளுக்கு எப்படியெல்லாம் சொல்லிக் கொடுக்க முடியுமென்று யோசித்து, அவள் வகுப்பிலிருந்த பன்னிரெண்டு குழந்தைகளுக்கென்று புது விதமாக கலர்ஸ், கவுண்டிங், ஷேப்ஸ், அல்ஃப்பட்ஸ் என்று எல்லாவற்றையும் கலவையாக, தினமும் அறிமுகப்படுத்தி வைத்தாள். ஒவ்வொரு குழந்தையையும் அந்த வகுப்பிலிருந்த மற்ற குழந்தைகளுடன் தினமும் ஒருமுறையாவது சினேகம் கொள்ள செய்தாள்.இவை அனைத்தும் நான்கு மணி நேரத்திற்குள் செய்து முடிக்க வேண்டிய சாதனைகள்.
காலையில் குழந்தைகள் அனைவரும் பஸ்ஸிலிருந்து இறங்கியவுடன் அவர்களை வரவேற்று, மதியம் அனைவரையும் அவரவர் பஸ்ஸில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பும் வரை அவர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுத்து, தானாகச் சாப்பிட கற்றுக் கொடுத்து, ஆயாவுடன் பாத்ரூமிற்கு அனுப்பி, தேவைப்பட்டால் அவர்களுக்கு உடை மாற்றி, உடம்பு சரியில்லையோ என்று சந்தேகம் வந்தால், அவர்களின் பெற்றோருக்கு உடனடியாக தகவல் கொடுத்து என்று ஒரு நிமிடமும் ஓய்வு எடுத்துக் கொள்ள முடியாமல் வேலை செய்தாலும், அந்த செயல்களில் அவளின் தனித்துவத்தைக் காட்ட அவளுக்குக் வாய்ப்புக் கிடைப்பதால் முதல் முறையாக ஆசிரியையாக இருப்பதில்சந்தோஷமடைந்தாள் பவி.
அவர்கள் குடியிருந்த காலனியிலிருந்து ஐந்து கிலோமீட்டர்த் தொலைவில் பள்ளி இருந்ததால், காலனியின் முக்கால்வாசி சின்ன வயது குழந்தைகள் அங்கேதான் நர்ஸரி வகுப்பில் பயின்று வந்தனர்.அதனால் இவள் வகுப்பு குழந்தைகள் ஒன்றிரண்டு பேரும், அவர்களின் பெற்றோரும் அவளுக்குப் பரிச்சயமானார்கள்.
இந்த ஃபிளாட் அவளுடைய ஸ்கூலுக்கு அருகே இருந்ததால் தான் இங்கே குடி வந்தார்கள். அதையும் தவிர வேறொரு முக்கியக் காரணம் இருந்தது. இந்தக் காலனியின் அமைப்பு அவளுக்கு டவுன்ஷிப்பை நினைவுப்படுத்தியது. சென்னை அவர்களுக்குப் புதிய இடமென்பதால், இதுபோலொரு காலனியில் இருந்தால் சுகந்தியும் பாதுகாப்பாக உணர்வாரென்று அவள் நினைக்க, பதினைந்தாவது மாடியில் இருப்பது அவரிடம் பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று இன்றுதான் உணர்ந்தாள்.
இனித் தினமும் மாலை அல்லது இரவு வேளையில்அம்மாவுடன் வாக்கிங் செல்ல வேண்டும் என்று பவியின் எண்ணவோட்டங்கள் ஜெய்யின் நினைவில் ஆரம்பித்து சுகந்தியின் நலனில் முடிந்து போய் ஒரமாக இளைப்பாற, அவளைத் தூக்கமும் மெதுவாகத் தழுவிக் கொண்டது.
அதே மதிய வேளையில் ருக்மிணியின் வற்புறுத்தலின் பேரில் டைனிங் டேபிளில் விநாயகர் சதுர்த்தி விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான் ஜெய்.வாசல் அழைப்பு மணி ஒலித்தவுடன் கதவைத் திறந்த பாலகிருஷ்ணன்,
“உள்ளே வாங்கோ மாமா…உடகாருங்கோ..ருக்மிணி வந்திடுவா.” என்றார்.
“நேக்கு டயமில்லே..கிளம்பிண்டே இருக்கேன்..காலம்பற பூஜைலே, உங்காத்துக்கு வந்து உங்க புள்ளையாண்டான் ஜாதகத்தை வாங்கிண்டுப் போக சொன்னா மாமி அதான் கடைசியா “D” பிளாக்லே இப்பதான் பூஜை முடிச்சிட்டூ நேரே இங்க ஓடி வரேன்.. இந்தாங்கோ மாமி.” என்று கிட்சனிலிருந்து வெளியே வந்த ருக்மிணி கையில் அந்தப் பிரசாதக் கவரைக் கொடுத்தார் சாஸ்திரிகள் மாமா.
“என்னதிது மாமா?” என்று அவர் கேட்க,
“D” பிளாக்ல புதுசா வந்திருக்கா..உங்களாட்டம் பிள்ளையார் நைவேத்தியத்துக்கு அவா ஆத்துலேர்ந்து கொழுக்கட்டை பண்ணி கொண்டு வந்திருந்தா..அதை உங்களுக்குக்காக கொண்டு வந்தேன்.” என்றார் சாஸ்திரிகள்.
அவர் கையிலிருந்து பிரசாதத்தை வாங்கி டைனிங் டேபிளில் வைத்து விட்டு, பூஜை அறைக்குச் சென்று ஜெய்யின் ஜாதகத்துடன் வந்தார் ருக்மிணி.
“பிள்ளையார் பாதத்திலே வைச்சிட்டூ எடுத்திண்டு வந்திருக்கேன்..இன்னைக்கு நீங்களே ஜெய்யைப் பார்த்தவுடன கேட்டுட்டேள்..இத்தனை நாளா இவன் அங்கே இருக்கப் போறானா இங்கே திரும்பி வரப் போறானான்னு தெரியாம இருந்தது..இப்ப இங்கேயே வந்துட்டன்.” என்று சொல்லி அவரிடம் ஜாதகத்தைக் கொடுத்தார்.
“இனிமே நீங்க இங்கே தானா..அமெரிக்கா கிடையாதா?” என்று சாஸ்திரிகள் ஜெய்யிடம் நேரடியாகக் கேட்க,
ஒரு நிமிடம் அவருக்கு உண்மை நிலவரத்தை விளக்க நினைத்த ஜெய் அதை அடுத்த நிமிடத்திற்குத் தள்ளிப் போட்டு,”இனிமே இங்கதான்.” என்று சொல்ல,
“அமெரிக்கான்னா சுலபமா அமைஞ்சிடும்..இங்கேயேன்னா கொஞ்சம் கஷ்டம் தான்..தேடணும்.” என்றார்.
“என்ன மாமா செய்யறது..முன்னாடியே கல்யாணம் பண்ணியிருந்தாலும் அவன் திரும்பி வர்றச்சே அவளும் வந்துதானே ஆகணும்.” என்றார் ருக்மிணி.
“அதெல்லாம் முன்ன மாமி..இப்ப அப்படியில்லே..ஆம்படையா அமெரிக்காலே, ஆஸ்திரேலியாவுலே..ஆத்துக்காரன் இங்கேன்னு இரண்டு குடித்தனமும் ஆன்லைன்லே அமோகமா ஓடிண்டு இருக்கு..பார்த்துக்கறது, பேசறது, சண்டைப் போடறதுன்னு பேஷா நடக்கறது.” என்றார்.
“அந்த மாதிரி எங்காத்துக்கு ஒத்துவராது..என் புள்ளைக்கூட இருக்கற மாதிரி பொண்ணைப் பாருங்கோ.” என்றார் ருக்மிணி.
“வேற ஊரா இருந்தா பரவாயில்லையா? இல்லை சென்னைலேதான் வேணுமா?”
“எந்த ஊரா இருந்தாலும் பரவால்லே மாமா..நாங்களே ஊர் ஊரா சுத்திட்டூ இப்பதான் சில வருஷமா சென்னைலே இருக்கோம்.” என்றார் பாலகிருஷ்ணன்.
“புள்ளையாண்டான் இங்கே எந்தக் கம்பனிலே வேலை பார்க்கறன்?” என்று அவர் கேட்க,
அப்போது,
“இப்போதைக்கு வேலைலே இல்லே.” என்றான்.
சாஸ்திரிகள் மாமாவிற்கு அவர் காதில் விழுந்தது சரியா என்று சந்தேகம் வந்தது.
“மாமி..உங்க புள்ளையாண்டான் என்ன சொல்றர்..இப்போதைக்கு வேலைலே இல்லையா?” என்று தெளிவுப்படுத்திக் கொள்ள கேட்க, மாமாவின் அந்தக் கேள்வியை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் ருக்மிணி விழிக்க, பாலகிருஷ்ணன் ஆபத்பாண்டவனானார்.
“மாமா..அவனுக்கு வேலை கிடைக்கறது பெரிய விஷயமில்லே..அவன் முடிவுக்காக நிறைய பேர் காத்திண்டிருக்கா..அவன் தான் அவாளைக் காக்க வைச்சுண்டு இருக்கான்.” என்றார்.
ருக்மிணியிடமிருந்து ஜெய்யின் ஜாதகத்தை வாங்கி க்கொண்ட சாஸ்திரிகளின் முகபாவத்தைக் கவனமாகப் படித்து கொண்டிருந்தான் ஜெய்.
‘விநாயகர் சதுர்த்தி அன்னைக்கு பெரிய பிஸ்னஸ் அமையறதேன்னு நினைச்சுண்டேன்..இப்ப இந்த ஜாதகத்தைத் திரும்பி கொடுக்கவும் முடியாது..இவனுக்கு ஒரு வேலை கிடைச்ச அப்புறம்தான் இதைவெளியே விடணும்.’ என்று மனத்தினுள் நினைத்தவர்,”மாமி…இப்போதைக்கு உங்களுக்கு ஏத்த மாதிரி ஜாதகம் எதுவும் என்கிட்டே இல்லை..நான் ஒரு காரியம் பண்றேன், உங்க பையன் ஜாதகத்தை நேக்கு தெரிஞ்சவாகிட்டே கொடுத்து வைக்கறேன்..வரேன் மாமி.” என்று வெறும் வார்த்தையாக வாக்குறுதி அளித்தார் சாஸ்திரிகள்.
“ரொம்ப சந்தோஷம் மாமா..கொடுத்து வைங்கோ மாமா.” என்று அவரை வழியனுப்பி வைத்தார் ருக்மிணி.