அத்தியாயம்-4

வாசல் அழைப்பு மணி ஒலிக்க, பவி கதவை திறந்தவுடன்,”எல்லாம் இடத்திலேயும் மனுஷா ஒரே மாதிரிதான் இருக்கா.” என்று பேசியபடி உள்ளே நுழைந்தார் சுகந்தி.

“என்ன ம்மா ஆச்சு?”

“நோட்டீஸ் போர்ட்லே போட்ட நேரத்துக்குப் பூஜை நடக்காது போல..நாலு பிளாக்கிற்கு நாலு பிள்ளையார்..நாலு தனித் தனி பூஜை..எல்லாரும் அவா அவா இஷ்டத்துக்குப் பூஜைக்கு வரா..நம்ம டவுன்ஷிப் போல இங்கேயும் மனுஷா நடுவுலே பாகுபாடு..மூணு பெட்ரூம் பிளாக்லே தான் முதல் பூஜை..அது இரண்டு பிளாக் இருக்கு..அங்கே முடிச்சிட்டூ அடுத்து இரண்டு பெட்ரூம்..அப்புறம் தான் சிங்கில் பெட்ரூம் பிளாக்..பிள்ளையார் நடுவலேயும் பாகுபாடு..நம்ம பில்டிங் பிள்ளையார் பாவம்..இன்னும் அவரோட டர்ன் வரலை. நைவேத்தியதிற்கு காத்திண்டிருக்கர்..அதான் ஆத்துப் பிள்ளையாருக்கு முதல்லே பூஜையை முடிச்சிடலாம்னு வந்திட்டேன்.” என்றார் சுகந்தி.

உடனே, பூஜைக்கு வேண்டியவற்றை பிள்ளையாருக்கு முன்பு எடுத்து வைத்தபடி,

“ஏன் பாகுபாடு இல்லாம ம்மா..மும்பை சித்தி விநாயகர் வேற.. மற்ற விநாயகரெல்லாம் வேற..கடவுளுக்கும் இந்தக் காலத்திலே கரெக்ட் கான்டாக்ட்ஸ் வேணும் ம்மா..நாம நினைச்சது நமக்கு நடந்ததுன்னா நம்ம பிள்ளையாருக்கு வெறும் அர்ச்சனையும் தக்‌ஷணையும் தான்..பெரிய மனுஷாளுக்கு அவா நினைச்சுது நடந்ததுன்னா அவா பிள்ளையாருக்கு தங்கக் கவசமும் கும்பாபிஷேகமும்.” என்றாள் பவி.

“கலிகாலம்..கடவுளுக்கே கரெக்ட் கான்ட்க்ஸ் தேவைப்படறது.” என்றார் சுகந்தி.

“விடு..இப்போ நம்மாத்து பிள்ளையாருக்கு பூஜை பண்ணி அவரை நம்மளோட கான்டக்ட் லிஸ்ட்லே சேர்த்துப்போம்..அவரோடதுலே நம்மளை எப்போ சேர்த்துக்கணும்னு அவருக்குதான் தெரியும்.” என்று சொல்லி, பிள்ளையாரின் முன் வேண்டிக் கொண்டிருந்த பவிக்கு தெரியவில்லை, ஜெய்யை அவருடைய கான்டாக்ட் லிஸ்டில் ஏற்கனவே சேர்த்துக் கொண்டு, அவளுடைய இன்ஸ்பிரேஷனை அவருடைய பர்த்டே செலிபிரெஷனுக்கு அழைத்து வந்திருக்கிறாரென்று.

அவர்கள் வீட்டுப் பூஜை முடிந்ததும், சமைத்து வைத்ததை டைனிங் டேபிளில் கொண்டு வந்து வைத்தாள் பவி.  

“பவி..கீழே பூஜைக்கு போயிட்டு வந்து சாப்பிடலாமா?” என்று கேட்டார் சுகந்தி.

“வேணாம் ம்மா..நோக்கு லேட்டாயிடுத்து..இன்னைக்கு காலம்பற டிஃபன் இல்லையே..டிரெக்ட்டா சாப்பாடு தானே.” என்றாள் பவி.

“ஒரு நாள் தானே ஒண்ணுமாகாது” என்று மறுத்தவர், திடீரென்று,”நேக்கு இன்னைக்கு ருக்மிணி மாமி நினைவுக்கு வந்தா.” என்றார்.

அவர்கள் உரையாடலில் சம்மந்தமே இல்லாமல் திடீரென்று மினி மாமியைக் கொண்டு வந்தவுடன்,”ஏன் மா?” என்று கேட்டாள் பவி.

“நம்ம டவுன்ஷிப்லேயும் இப்படித் தானே எல்லாரும் ரொம்ப பிகு பண்ணிப்பா..ஒன்பது நாள் நவராத்திரி பூஜைலே ஒரே நாளுக்கு எல்லாரும் போட்டி போடுவா, ஒரே சண்டையாகும்..ருக்மிணி மாமி வந்த அப்புறம்தான் எல்லாரும் அடங்கிப் போனா..ஒரே நாளுக்கு எல்லாரும் அடிச்சிண்டேள்னா அடுத்த வருஷத்திலேர்ந்து பொது பூஜை வேண்டாம் அவா அவா ஆத்துலே பூஜையை வைச்சுக்கோங்கோன்னு அடிச்சு சொன்னதாலே தான் எல்லாரும் கப்சிப்புன்னு சைலெண்ட்டானா..

ஒரே சாஸ்திரிகளை வைச்சு, ஒரே நாள்லே, நாலு இடத்திலே, நாலு பூஜை செய்யணும்னா..எல்லாரையும் விரட்டி வேலை வாங்கறத்துக்கு மாமி மாதிரி ஓர் ஆள் வேணும்.” என்றார் சுகந்தி.

“மாமியை அதிலே அடிச்சுக்க முடியாது..என்னையும் விரட்டி விரட்டி வேலை வாங்கிண்டு இருப்பா..அவாத்து வாசல்லே கோலம் போடச் சொல்லுவா…அவாத்து தோட்டத்துப் பூவை தொடுத்துத் தரச் சொல்லுவா. அவாத்து பாலை வாங்கி வைக்கணும், அதைக் காய்ச்சணும்.. அதிலே காப்பியும் கலந்து கொடுக்கணும்.” என்று ருக்மிணியைப் பற்றி குறை சொன்னாள் பவி.

“மாமி பாவம் டீ..எல்லாமக் காரியமும் நன்னா செய்ய வரும்..ஆனா உடம்பு தான் ஒத்துழைக்காது..வெரைட்டியா சமைக்கத் தெரியும்..அழகா ரங்கோலி போடத் தெரியும்..லேடீஸ் கிளப்புலே மாமிதான் ஆல் இன் ஆல்..

கீது பிறந்து கொஞ்ச வருஷம் கழிச்சு தான் ஜெய் பிறந்திருக்கான்..அவன் பிறந்த போது மாமிக்கு ஏகப்பட்ட ஹெல்த் பிராப்ளம்ஸ்..ஜெய்க்கும் முடியாமப் போயிடுத்து..அவன் பிழைச்சதே பகவான் கிருபைலேதான்னு அவனுக்கு மிரூத்யுஞ்ஜெய்ன்னு பெயர் வைச்சா..ஜெய்யைக்கூட சின்ன வயசுலே கீதுதான் பார்த்துப்பாளாம்.” என்று சுகந்தி சொல்ல,

“கீதா அக்காக்கு கூடு (வெல்லம்) கட்டி பிறந்த போது நீதானே ம்மா பார்த்துண்டே..மாமிக்கு அப்போவும் முடியாமப் போயிடுத்து.” என்று சொன்ன பவிக்கு ஆச்சர்யமாக இருந்தது, ‘கூடுக்கட்டி’ என்ற செல்லப் பெயரை, அத்தனை வருடங்கள் கழித்து, சிறிது கூட யோசிக்காமல் அவள் உபயோகித்தது.

“நிஜமாவே மாமாவும் மாமியும் இடிஞ்சுப் போயிட்டா..அந்தக் குழந்தையும் பிழைச்சு வந்தது பகவான் கிருபைலேதான்..நம்ம ஹாஸ்பிட்டல் பற்றிதான் நோக்கு தெரியுமே..அதான் மாமி ஒரு மாசம் போல வைச்சிண்டு அப்புறம் மாமியார் ஆத்துக்கு அனுப்பி வைச்சுட்டா….புன்யாஜனம், நாமகர்ணமெல்லாம் உடம்பு சரியான அப்புறம் சென்னைலே தான்னு சம்மந்தியம்மாகிட்டே ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டா.. புள்ளை பெத்து கீதா பொழைச்சு வரட்டும்னு எல்லாத்தையும் பொறுத்துப் போயிண்டிருந்தா.” என்று சுகந்தி பழைய நினைவுகளில் மூழ்க, பவியும் அதில் மூழ்கிப் போனாள்.

“கீதா அக்கா அங்கே இருந்த ஒரு மாசம் நானும்தான் மாமிக்கு ஒத்தாசை பண்ணினேன்..பத்தாவது படிப்புக்கு நடுவுலே ஆஸ்பத்திரிக்கும் நம்ம ஆத்துக்கும் அலைஞ்சிண்டு இருந்தேன். கீதா அக்காவுக்குப் பத்தியமா நீ சமைச்சுக் கொடுத்த…டெய்லி சமையல் நான் தான் பார்த்துண்டேன்..ஜெய்யும் அப்பாவும் நேக்கு ரொம்ப ஹெல்பா இருந்தா..மார்கெட்லேர்ந்து காய் வாங்கிண்டு வருவான் ஜெய்..அப்பா நேக்கு காய் நறுக்கித் தருவா, கூட்டுக்கு மிக்ஸிலே அரைச்சுத் தருவா.” என்றாள் பவி.

“ருக்கு மாமி பாவம் டீ..கீதா மாமியார்கிட்டே மெட்ராஸ்லே அவாத்திலே பிரசவத்தை வைச்சுக்கலாம்னு எவ்வளவோ சொல்லியிருக்கா..அந்த மாமி தான் கேட்டுக்கலே..தலைப் பிரசவத்தைப் பிறந்தாத்துலே தான் வைச்சுக்கணும்னு சொல்லிட்டா..

நாம தான் உன்னோட பாட்டிக்காகன்னு அந்த ஊருக்குப் போனோம்..மாமிக்கு என்ன தலையெழுத்து..ரிஜனல் ஆபிஸ் கேட்டும் கிடைக்காம.. கடைசி நாலு வருஷத்துக்குன்னு அங்கே வந்து நன்னா மாட்டிண்டுட்டா..

ஏற்கனவே ஜெய்யோட படிப்பைப் பற்றி மாமி கவலைப்பட்டிண்டிருந்தா…அந்த வருஷம் அவன்  பன்னெண்டாவதுலே வேற இருந்தான்..ஆனா அவன் ரொம்ப புத்திசாலி அதான் டியுஷனே இல்லாம படிச்சு பனெண்டாவதுல ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்துட்டன்..

நீ பத்தாவதுலே நல்ல மார்க் வாங்கணும்னு நான் உன்னோட லைப்ரரி பழக்கத்தை நிறுத்தலாம்னு நினைச்சுண்டிருந்தேன். அவன் தான் உன்னோட பாட்டு கிளாஸை நிறுத்தினா தான்  நோக்கு 90% வரும்னு உங்கப்பாகிட்டே சொன்னான்..அதே போல தான் ஆச்சு.” என்று பழைய விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்த சுகந்தி, சிறிது மௌனத்திற்குப் பிறகு,

“நாமளும் அங்கேயிருந்து கிளம்பி வந்த அப்புறம் மாமி எப்படிச் சமாளிச்சிண்டாளோ?” என்று அவருக்கு ஏற்பட்ட அவல நிலையை மறந்து ருக்மிணிக்காகப் பரிதாபப்பட்ட சுகந்தி, ருக்மிணி சொன்னது போல், அவர் ஒரு சாது, அப்பாவி மனுஷி என்று நிரூபித்தார். அதே போல் அவரது மகள் பவி ஒரு முரடு என்று நிரூபித்தாள். 

“ஆயிரம் பேரை ஆட்டிப் படைப்பா மாமி..அவாளை எப்படி நம்ம டவுன்ஷிப் சமாளிச்சுதோன்னு நீ கவலைப்படணும்.” என்று வெடுக்கென்று பதில் அளித்தாள் பவி.

“அப்படிச் சொல்லாத பவி..என்கிட்டே மாமி நன்னாதான் பழகினா..என்னை எல்லா இடத்துக்கும் அழைச்சிண்டு போவா..உங்கப்பாவுக்கும் பாலகிருஷ்ணன் மாமாவுக்கும் இரண்டு கிரேட் (grade) வித்தியாசம்னு உங்கப்பா சொல்லுவா..உங்கப்பாவை ஆபிஸ்லே நன்னா நடத்தினர் மாமா..மாமியும் என்னை அவாத்து மனுஷியாட்டம் நடத்துவா..அவாத்துலே எல்லாத்துக்கும் நம்மளையும் சேர்த்துப்பா.”

“நீயும் தான் அவாளை நம்மாத்துக்கு எதுகெடுத்தாலும் கூப்பிடுவ.”

“நாம வேறென்னு தெரிஞ்சும் ருக்கு மாமி நம்மகிட்டே பேதம் பார்க்கலே.” என்றார் சுகந்தி.

“மாமியும் நாமளும் ஸேம் இல்லையா?” என்று பவி கேட்க,

“இல்லே..ஸேம் கோத்திரம் இல்லை…ஸேம் பிரிவு இல்லை..அவா உசத்தி…நாம அவாளுக்கு கீழே..நமக்கும் கீழேயும் இருக்கா..இந்தக் காலத்திலேயும் நிறைய பேர் இதெல்லாம் பார்க்கறா..நர்மதா, அஷ்வினி கல்யாணத்து போதுதான் நேக்கே தெரிஞ்சுது..இப்பவும் சில பேர் உட்பிரிவு ஒண்ணா இருந்தாதான் ஜாதகத்தையே கேட்கறா.” என்றார் சுகந்தி.

“போதும் ம்மா..இரண்டு பேரும் ஒரே பிரிவான்னு பார்க்கக்கூடாது, இரண்டு பேரும் பிரியமா, பிரியாம இருப்பாளான்னு பார்த்து தான் கல்யாணம் செய்யணும்.” என்றாள் பவி.

“நீ சொல்றது சரி..உங்கப்பாக்கும் நேக்கும் எல்லாம் பார்த்துதான் கல்யாணம் நடந்தது..ஆனா அது எல்லாம் பொய்யா போயிடுத்து.” என்று வருத்தப்பட்டார் சுகந்தி.

அவரது மன வருதத்தைப் போக்கும் விதமாக,“நீயும் அப்பாவும் பிரியமாதான் இருந்தேள் ம்மா..நாம ருக்கு மாமியை பற்றிதான் பேசிண்டிருந்தோம்..மாமி பேதம் பார்க்கலேன்னு நீ சொல்லிண்டிருந்த.” என்றாள் பவி.

“மாமி இப்ப எத்தனை பேரன், பேத்திகளைப் பார்த்திண்டிருக்காளோ?” என்று பவியின் கூற்றிற்குச் சற்றும் சம்மந்தமில்லாமல் பதில் சொன்னார் சுகந்தி.

“என்ன ம்மா சொல்ற? “

“ஜெய்க்கு கல்யாணமாகியிருக்கும்னு சொல்றேன்..இப்ப அவனுக்கு 28/29 வயசுயிருக்கும்..நாம அவளோட உறவு வைச்சிண்டு இருந்திருந்தா சமாராதனைலேர்ந்து சீமந்தவரைக்கும் எல்லாம் தெரிஞ்சிருக்கும்.” என்றார் சுகந்தி.

அவள் இன்ஸ்பிரேஷனுக்கு கல்யாணமாகியிருக்கலாம் என்று கேட்டவுடன் அதற்கு மேல் அந்தப் பேச்சை தொடர விரும்பாமல்,

“வா ம்மா..கீழே பூஜைக்குப் போயிட்டு வரலாம்.” என்று சுகந்தியைக் கிளப்பிக் கொண்டு அவர்கள் பிளாக் பிள்ளையார் பூஜையில் கலந்து கொள்ளச் சென்றாள் பவி.

அவர்கள் பிளாக்கின் நுழைவாயில் அருகே சிறிய டேபிளில் அமைதியாக அமர்ந்திருந்தார் பிள்ளையார். அவரைச் சுற்றி குடும்பமாக, கூட்டமாக நின்று கொண்டிருந்தனர் அந்தப் பில்டிங்வாசிகள்.  அந்தக் கூட்டத்தைப் பார்த்து,

“என்ன டீ..இன்னும்மா பூஜை முடியலை.” என்று கிசுகிசுத்தார் சுகந்தி.

“அப்படி தான் தெரியறது.” என்று பதில் சொன்னாள் பவி.

அப்போது தேங்காயை உடைத்து அதை தனித்தனியாக ஒவ்வொரு பையிலும் போட்டு வைத்த சாஸ்திரிகள்,”யாருக்காவது விட்டு போயிருந்தா இப்பவே சொல்லிடுங்கோ.” என்று குரல் கொடுத்தார்.

“இன்னும் இரண்டு பேர் வரணும்.” என்று கூட்டத்திலிருந்து குரல் வந்தது.

“வராதவாளைப் பற்றி கேட்கலே..வந்தவாளைப் பற்றி கேட்கறேன்..ஒவ்வொரு தடவையும் இப்படிதான் நடக்கறது..”A” பிளாக்லதான் சொன்ன டயத்துக்கு எல்லாம் டான் டான்னு நடக்கறது..அந்த மாமி வந்து ஒரு சத்தம் போட்டா போதும் எல்லாரும் அடங்கிப் போறா..இன்னைக்கு காலம்பறதான் அவா புள்ளையாண்டான் அமெரிக்காலேர்ந்து வந்திருக்கான்..அவனையும் அழைச்சிண்டு பூஜைக்கு டயத்துக்கு வந்துட்டா..மனுஷாளை சாப்பாட்டுக்கு காக்க வைச்சா மகா பாவம்னு சொல்லுவா..பகவானைக் காக்க வைச்சா என்ன சொல்றது..கலிகாலம்னுதான் சொல்லணும்.” என்று சொல்லிக் கொண்டே பிரசாதத்தை நைவேத்தியம் செய்து பிள்ளையாருக்கு தீபாராதனையைக் காட்டி பூஜையை முடித்தார்.  

ஒவ்வொருத்தராக வந்து அவரவர் பூஜை சாமானை எடுத்துச் சென்ற பின் அவளுடைய டிஃபன் பாக்ஸை எடுக்கப் போன பவியிடம்,

“புதுசா நீங்க?” என்று விசாரித்தார் சாஸ்திரிகள்.

“ஆமாம் மாமா.” என்றாள் பவி.

“நைவேத்தியத்துக்குப் இந்த மாதிரி கொழுக்கட்டையை நான் பார்த்ததில்லே..உப்புக் கொழுக்கட்டையை பிள்ளையார் ஷேப்ல செய்திருக்கேள்..நன்னா இருக்கு..”A” பிளாக்ல ஒரு மாமி வருஷா வருஷம் விடாம செய்யறா..அவாளுக்கு அப்புறம் நீங்கதான்..மத்தவா எல்லாரும் வெறும் பழம்தான்..

அந்த மாமியாத்துக்கு இப்ப போகணும்..அவாளுக்குக் கொடுக்கறத்துக்கு உங்க பிரசாதத்திலேர்ந்து கொஞ்சம் எடுத்துக்கறேன்.” என்றார் அந்த சாஸ்திரிகள்.

“எடுத்துகோங்க மாமா..இங்க எங்களுக்கு யாரையும் தெரியாது இல்லேன்னா நானே பிரசாதத்தை என் கையாலே கொடுத்திருப்பேன்.” என்றாள் பவி. 

பவியின் பிரசாதத்தை ஒரு கவரில் போட்டுக் கொண்டே பவியை விசாரிக்க ஆரம்பித்தார் அந்த சாஸ்திரிகள்.

“எந்த ஃபளோர்?”

“பதினைஞ்சு”

“ரொம்ப உயரத்திலே இருக்கேள்.” என்று ஜோக் அடித்தார்.

அதற்கு சிறு புன்னைகையைப் பதிலாக உதிர்த்த பவியைப் பார்த்து,”ஆத்துலேர்ந்து யாரும் வரலேயா?” என்று கேட்டார்.

“அம்மா வந்திருக்கா” என்று சொல்லி ஓரத்தில் நின்று கொண்டிருந்த சுகந்தியைச் சுட்டிக் காட்டினாள் பவி.

“மாமி..நமஸ்காரம்.” என்று சுகந்தி அருகில் வந்தார் சாஸ்திரிகள்.

“நமஸ்காரம் மாமா.” என்றார் சுகந்தி.

“இங்க நான் தான் எல்லாத்துக்கும்..கணபதி ஹோமத்திலேர்ந்து கல்யாணம் வரைக்கும்..பொண்ணு ஜாதகம் இருந்தா கொடுங்கோ..நல்ல இடமாப் பார்த்து சொல்றேன்.” என்றார் மாமா.

“ஜாதகம் ஆத்துலேதான் இருக்கு.” என்று அப்பாவியாகப் பதில் சொன்னார் சுகந்தி.

“நோ பிராப்ளம்..ஜாதகப் பொருதத்தைக் கடைசியாப் பார்த்துக்கலாம்….அட்ஜெஸ்ட் செய்துக்கலாம்..என்ன படிச்சிருக்கா..எங்க வேலைப பார்க்கறான்னு சொல்லுங்கோ.” என்றார்.

“பி ஏ. பி எட்..படிச்சிருக்கா..பக்கத்திலே இருக்கற பள்ளிக்கூடத்திலே நர்ஸரி டீச்சரா இருக்கா.” என்றார் சுகந்தி.

“பிரமாதமான இடம் பார்த்து சொல்றேன்..டீச்சர் பொண்களுக்கு இப்ப டிமாண்ட் அதிகம்..குழந்தை பிறந்தா ஸ்கூல் அட்மிஷனுக்கு அலைய வேண்டாம் பாருங்கோ..உங்க பொண்ணு அவ டீச்சர் கோட்டாலே வருஷா வருஷம் நர்ஸரி அட்மிஷனுக்கு ரெக்கமெண்ட் செய்யலாம்..இவ ஒருத்திதானா இல்லே இவளுக்கு அக்கா, தங்கை யாராவது இருக்காளா?” என்று கேட்டார்.

“நேக்கு ஒரு புள்ளை இருக்கான்..இவளோட தம்பி..படிச்சிண்டு இருக்கான்.” என்றார் சுகந்தி.

சுகந்தியின் தோற்றமே அவருடைய கணவர் உயிருடன் இல்லை என்பதை தெரியப்படுத்தியதால்,“உங்காத்து மாமா எங்க வேலை பார்த்திண்டு இருந்தர்?” என்று எல்லை மீறி அவர் தகவல் சேகரிக்க ஆரம்பித்தவுடன்,

“மாமா..அம்மாக்கு சாப்பிட டயமாயிடுத்து..நாங்க கிளம்பறோம்.” என்று சொல்லி புறப்பட்ட பவியிடம், அவளது டிஃபன் பாக்ஸுடன் ஒரு கார்டையும் நீட்டி,”என் கார்ட்…நாலு நம்பர் இருக்கு..எதுலே வேணும்னாலும் காண்டக்ட் செய்யலாம்.” என்றார்.

அவருடையக் கார்டைப் பெற்று கொண்டு லிஃப்டில் ஏறிய பவி,”நோக்கு அறிவே கிடையாதா..எல்லாத்தையும் எல்லார்கிட்டேயும் சொல்லிண்டு இருப்பியா.” என்று சுகந்தியின் மேல் கோபப்பட்டாள்.

அவள் கல்யாணத்தைப் பற்றி பேசியதால்தான் கோபம் கொண்டிருக்கிறாள் என்று புரிந்து கொண்ட சுகந்தி மௌனம் காத்தார்.

அம்மா, பெண் இருவரும் வீட்டிற்கு வந்து மதிய உணவை முடித்துக் கொண்டு குட்டி தூக்கம் போட்டனர்.   முயற்சி செய்யாமல் சுகந்தியை உறக்கம் அணைத்துக் கொள்ள, அவள் எண்ணங்கள் துரத்தியதால் எவ்வளவு முயற்சி செய்தும் அவளை கண்டு தூரமாக ஓடிய தூக்கத்தைப் பவியால் தொடக்கூட முடியவில்லை.

அதனால் தூக்கத்தைத் துரத்திவிட்டு அவள் மூளையின் மூலைகளில் மறைந்திருந்த அவளின் இன்ஸ்பிரெஷனைப் பற்றிய இன்ஃபர்மெஷன் கலெக்‌ஷன் பிராஸஸை ஆரம்பித்தாள் பவி. 

*******************

இந்தப் பதிவு வரை படிச்ச வாசகர்களுக்காக A2I2 பற்றி ஒரு சின்ன விளக்கம் :

வெறும் புளியைக் கரைச்சு ரசம் வைக்கறவங்க பெயர் “cook”

பைனாப்பிள் பழத்திலே ரசம் வைக்கறவங்க பெயர் “chef”

பத்தடி கிட்சனுக்குக் கதவும், கண் பார்வைலே, கை எட்டற இடத்திலே அலமாரியும் செய்து கொடுக்கறவர் “carpenter”

கிட்சன் கதவை முன்னாடிலிருந்து பார்த்தா கதவாகவும், பின்னாடிலேர்ந்து அதை அலமாரியாவும் உபயோகப்படுத்தற மாதிரி டூ இன் ஒன்னா செய்து கொடுக்கறவர் “interior designer”

இந்த மாதிரி கத்துகிட்டதோட கற்பனையைச் சேர்க்கறத்துக்கு பெயர் தான் A2I2..

இது ஆர்ட் படிக்கறவங்களுக்கு மட்டும் முக்கியமில்லை, அறிவியல் படிக்கறவங்களுக்கும் முக்கியம்.

இதைதான் கதைலே ஜெய் கரெக்டர் மூலம் சொல்லயிருக்கேன்.  அறிவியல் வளர்ச்சிக்கு இது அவசியம்.

காலம் காலமா ஆட்டுக்கல்லுலே கையாலதான் இட்லி, தோசைக்கு அரைச்சுக்கிட்டு இருந்தோம்.

ஒருத்தர் அவரோட கற்பனைக்கு வடிவம் கொடுத்ததுனாலே அதே கல்லை வைச்சுதான் இப்பவும் மாவு அரைக்கறோம் ஆனா கரெண்ட் மூலம் வெட் கிரைண்டரா. அதுதான் A2I2

In science, imagination turns into innovation..