அத்தியாயம் – 3

“இன்னைக்காவது இந்த சூரிய பகவானைப் பார்க்கறதை விடக்கூடாதா..தலைக்கு மேலே வேலை இருக்கு.. ஆத்துப் பிள்ளையாருக்கு கொழுக்கட்டை, சுண்டல், வடை, பாயசம்…பில்டிங் பிள்ளையாருக்குத்  தனியாக் கொழுக்கட்டை.” என்று சமையலறையில் சுகந்தி புலம்பிக் கொண்டிருந்தார்.

அந்த ஃபிளாட்டின் ஒரே படுக்கையறையை ஒட்டியிருந்த ஒரே பால்கனியில் நின்று கொண்டு, உதிக்கும் சூரியனையைப் பார்த்தபடி “ததோ யுத்த பரிச்ராந்தம்” என்று ஆதித்ய ஹிருதயம் சொல்லிக் கொண்டிருந்தாள் ஷாம்பவி. ஐந்து நிமிடங்கள் அவளின் பதிலிற்காக காத்திருந்த சுகந்தி,

“பவி..ப்ளீஸ் வா மா..நாழி ஆகறது.” என்று குரல் கொடுத்தார்.

அதற்கு மேல் சுகந்தியைத் தவிக்க விடமால் கிட்சனுக்கு சென்ற ஷாம்பவி,

“எதுக்கு இப்படி டென்ஷனாகற..பதினொரு கொழுக்கட்டை பண்றத்துக்கு எத்தனை நாழி ஆகப் போகறது?” என்று கேட்டாள்.

“ஏன் டீ அரைமணியாவது ஆகாதா? தேங்காயைத் துருவி, வெல்லத்தைச் சேர்த்து, பூர்ணத்தைக் கிளறி, சொப்பு ரெடி பண்ணி..”என்று அவர் முடிக்கும் முன்,

“சரி..ஒரு மணி நேரம்..ஓகே வா..நீ வாச ரூமிலே போய் பேசாம உட்காரு..உன் கைலே வந்து சேரும் நைவேத்தியம்..முதல்லே பில்டிங் பிள்ளையாருக்கு..அப்புறம் ஆத்துப் பிள்ளையாருக்குப் பண்றேன்.” என்றாள் ஷாம்பவி.

“நானும் உதவி செய்யறேன் டீ..நீ என்துக்குத் தனியாக் கஷ்டப்படணும்..உன்னை ஒத்தாசைக்குதான் கூப்பிட்டேன்.” என்றார் சுகந்தி.

“இது ஒண்ணும் புதுசு இல்லை..பிள்ளையாருக்குக்காக ஒவ்வொரு விநாயகர் சதுர்த்திக்கும் நான் தான் கொழுக்கட்டை பண்ணின்டு இருக்கேன்.”

“நீ சொல்ல வேண்டாம்..நேக்கே தெரியும்..அப்புறம், நோக்கு பிரசாதம் கொடுக்கக் கூடாதுன்னு நான் சொன்ன அந்த விநாயகர் சதுர்த்தி பற்றி பேசுவ..ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தி அன்னைக்கும் இதுதானே நம்ம ஆத்துலே நடக்கறது.” என்றார் சுகந்தி.

“ஆமாம்..நீ தான் நேக்கு கொடுக்கலே..அப்பா நேக்கு பிரசாதத்தைக் கொடுத்தா.” என்று சுகந்தியிடம் சொன்ன பவி, அவள் அப்பாவைத் தவிர வேறொருவனும் அவளுக்குகாக, அவனுடைய பங்கைக் கொண்டு வந்து கொடுத்தான் என்று மனத்தில் நினைத்துக் கொண்டாள்.

கடந்த சில வருடங்களாக, பவி இப்படிச் சொன்ன பின், மௌனமாவது சுகந்தியின் வழக்கம். ஆனால், இன்று, அதற்கு மாறாக,

“அந்த மனுஷனுக்கு அப்பவே தெரிஞ்சிருக்கணும்..அடுத்த விநாயகர் சதுர்த்திக்கு அவர் இருக்க போகறதில்லேன்னு..அதான் நான் கோவிச்சிண்டதைக் கண்டுக்காம நோக்கு பிரசாதத்தைக் கொடுத்தர்..

அன்னைக்கு பிரசாதம் வேணும்னு நீ கத்தின கத்து அடுத்த தெரு வரைக்கும் கேட்டது..நோக்கு வாய் கொழுப்பு ஜாஸ்தியாகறது, அதனாலே, நோக்கு பிரசாதம் கொடுக்கவே கூடாதுன்னு உங்கப்பாகிட்டே கண்டிப்பா சொன்னேன்..ஆனா,  நோக்கு கொடுக்காம சாப்பிட்டது மனசுக்கு ஒப்பலை, அதான், கோவில்லேர்ந்து வந்த அப்புறம், அவர் கையாலேயே நோக்கு பிரசாதத்தைக் கொண்டு வந்து கொடுத்தர்..அதுக்கு நான் அவரை ரொம்ப கோவிச்சிண்டேன்..பைத்தியக்காரி நான்.” என்று கண் கலங்கினார் சுகந்தி.

“அம்மா, நேக்கு வாய் கொழுப்பு ஜாஸ்தின்னு நீ மட்டுமில்லை பூரா டவுன்ஷிப்பும் அப்படி தான் சொல்லும்..ப்ளீஸ்..அழாத…இந்த ஆத்துலே இது முதல் பிள்ளையார் சதுர்த்தி..நல்லபடியா கொண்டாடுவோம்.” என்றாள் ஷாம்பவி.

அதற்கு,“நேக்கு இங்கே பிடிக்கலை.. நாள் பூரா ஆத்து உள்ளேயே அடைஞ்சு இருக்கேன்..பதினைஞ்சாவது மாடியோட கோடி வீடு..மனுஷாளே பார்க்க முடியலே..பறவைகள்தான் நம்மளைப் பார்க்க வருது..பால்கனிலேர்ந்து குனிஞ்சு கீழே பார்த்தா தலையைச் சுத்தறது..திருச்சிலே ஆத்தை விட்டு இறங்கினா ஒரே கடைகன்னிதான்..இங்கே நல்ல கடைக்கு ஆட்டோ, பஸ், ட்ரெயின் ஏதாவது ஒண்ணைப் பிடிச்சு பத்து கிலோமீட்டர்ப் போக வேண்டியிருக்கு..திருச்சி நல்லாதான் இருந்தது அதையெல்லாம் விட்டிட்டூ சென்னைக்கு எதுக்கு டீ  வந்தோம்?” என்று கேட்டார் சுகந்தி.

“பத்தாயிரம் ரூபாய்க்கு இரண்டு பஸ் மாறிப் போய் பாடம் சொல்லிக் கொடுத்திண்டு இருந்தேன்..இங்கே முப்பதாயிரம் ரூபா கொடுத்து, பக்கத்திலே இருக்கற ஸ்கூலுக்கு ஸ்கூல் பஸ்ஸே அழைச்சிண்டும் போய், திரும்ப கொண்டு வந்தும் விடறது..அடுத்த வருஷம் படிப்பை முடிச்சிட்டூ தீபக் வரும் போது வேலை தேடறத்துக்கு சென்னை தான் சௌகரியம்..

இந்த காலனிலே 500 ஃபிளாட்ஸ் இருக்கு..சிங்கில், டபுள், ட்ரிபிள்னு எல்லாம் தனித்தனியா நாலு திசையைப் பார்த்திண்டு..நாலு கேட்டோட..நாலு பார்க்கோட..நடுவுலே பெரிய கம்மியுனிட்டி ஹாலோட..இராத்திரிக்கும் பயமில்லாம ஜெ ஜென்னு இருக்கு..

நோக்குதான் பதினைஞ்சாவது மாடியைப் பிடிக்கலை..நேக்கு பிடிச்சிருக்கு….எட்டாயிரம் வாடகை இந்த வீட்டுக்கு இல்லை.. இந்த பால்கனிலேர்ந்து கிடைக்கற பிரைவெட் வானம், சூரியன், நிலா, நட்சத்திரங்களோட வியூக்காக..சென்னைலே எங்கே ம்மா இந்த மாதிரி வீடு கிடைக்கும்?.. நோக்கு மனுஷா வேணும்னா கீழே பார்க்லே போய் உட்கார்ந்துக்கோ.” என்று பேசிக் கொண்டே வேலை செய்து கொண்டிருந்த ஷாம்பவியைப் பார்த்து கொண்டிருந்தார் சுகந்தி. 

கடந்த பத்து வருடங்களாக கணவன் சுதர்ஷனின் இடத்தை நிரப்புவது ஷாம்பவிதான்.  ஓர் அம்மாவாக அவரால் செய்ய முடியாததை, செய்யத் தயங்கியவைகளை ஷாம்பவி தான் செய்து முடித்தாள்.

சுதர்ஷனின் ஸெட்டில்மெண்ட் பணத்தில் அவருடைய தம்பி பங்கு கேட்ட போது,”பணம் எதுவும் கொடுக்க முடியாது சித்தப்பா.” என்று மறுத்து, உடனே மூட்டை முடிச்சைக் கட்டிக் கொண்டு திருச்சிக்கு வந்த பின், சுகந்தியின் அண்ணனோடு ஒரே வீட்டில் இருந்தால் சரிப் படாதென்று, தனியாக வீடு பார்த்து, தீபக்கை ஸ்கூலில் சேர்த்து, வயதுக்கு மீறிய பொறுப்புக்களை ஏற்று, இன்று, அவர்கள் குடும்பத்தை இந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறாள்.  

தலையில் ஈரத் துண்டுடன்,  சாதாரணக் கைத்தறி புடவையில் வழியும் வேர்வையைப் பொருட்படுத்தாமல் வேகமாக சமைத்துக் கொண்டிருந்த மகளைப் பார்த்துப் பரிதாபம் ஏற்பட்டது அந்தத் தாய்க்கு. திருச்சியில், கல்லூரியில் சேர்ந்ததிலிருந்து வீட்டிலேயும் புடவை உடுத்திக் கொள்ளும் பழக்கம் ஏற்பட்டிருந்தது பவிக்கு.  பள்ளிப் பருவம் வரை சல்வார் கமீஸ், ஜீன்ஸ், டி ஷர்ட், பேண்ட் உடுத்திப் பழக்கப்பட்டிருந்தவளிடம் கல்லூரிக்குக் புடவையில் தான் செல்ல வேண்டும் என்றவுடன், பிரச்சனை செய்யாமல் அதையே அவளுடைய தினசரி உடை ஆக்கிக் கொண்டாள்.  

ஒரு சின்ன விஷயத்திற்கும் வாக்குவாதம், வீம்பு, பிடிவாதம் செய்த பவி எப்படி, எப்போது, எதையுமே ஏற்று கொள்ளும் மனோபாவத்தை, மனப்பக்குவத்தை, மனோபலத்தை பெற்றாள் என்று சுகந்திக்குத் தெரியவில்லை.  

அவளுடைய விடுமுறை சமையல்கட்டில் கழிந்து போவதை விரும்பாமல்,  அவர் உட்கார்ந்திருந்த சோபாவிலிருந்து எழுந்து கிட்சனுக்கு வந்த சுகந்தி,

“நாம இரண்டு பேரும் சேர்ந்து பண்ணினா கிடுகிடுன்னு வேலை முடிஞ்சிடும்..நோக்கும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்க முடியும்..நாளைக்கு ஸ்கூலுக்குப் போகணுமே நீ.” என்றார்.

“நம்ம இரண்டு பேருக்குச் சமைக்கறது ஒண்ணும் பெரிய விஷயமில்லே..தீபக் இருந்தாதான் கொழுக்கட்டையும், வடையும் பண்ணி மாளாது..நல்ல வேளை இன்னைக்குப் பிள்ளையாருக்கு மட்டும் பண்ணினா போதும்..உன் புள்ளையாண்டானுக்கும் சேர்த்து பண்ண வேண்டாம்.”

“ஒரு காலத்திலே நீ ஒருத்தியே பத்துக்கு மேல சாப்பிடுவ..இப்போ இரண்டுக்கு மேலே சாப்பிட மாட்டேங்கற..யாருக்காக பண்றது..நேக்கு ஒரு விள்ளல் போதும்.” என்றார் சுகந்தி.

“அது அந்தக் காலம்..சைக்கிள்லே ஸ்கூலுக்குப் போயிண்டு இருந்தேன்..இப்போ குழந்தைகளோட கிளாஸ்லே விளையாடறதோட சரி..காலனிலே வாக்கிங் போகக் கூட டயம் இல்லை..இங்கே வந்து மூணு மாசமாயிடுத்து..இராத்திரி ஒரு கேட்தான் திறந்திருப்பான்னு இப்போ தான் தெரிஞ்சுது..ஒரு நாள் நானும் நீயும் பூராக் காலனியையும் ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு வரலாம் ம்மா.” என்றாள் பவி.

“இந்த இடமே நேக்குப் புரியலே..சூரியனை வைச்சுதான் நம்ம பில்டிங்கைக் கண்டு பிடிக்கணும்..நாலு பில்டிங்கும் ஒரே மாதிரி, பார்க் ஒரே மாதிரி..எதுக்கு இந்த மாதிரி கட்டினாளோ?” என்றார் சுகந்தி.

“நீ பயப்படாம பால்கனிலேர்ந்து பார்த்தேன்னா எல்லாம் அழகாத் தெரியும்..பொம்மை லெகோ ஸிட்டியாட்டம்..500 ஃபிளாட்ஸைக் கண்டபடி கட்டாம, ரசிச்சு, கற்பனைக்கு வடிவம் கொடுத்து கட்டியிருக்கா..பொம்மையை நிஜமாக்கியிருக்கா..ஒவ்வொருத்தரும் அவாளோட ஸ்கில்லை அப்ளை செய்திருக்கா..பவர் பேக்-அப், வேஸ்ட் டிஸ்போஸல் கூட..எல்லாத்தையும் ரீசைக்கிள் செய்யறா..A2I2.” 

“எல்லாத்துக்கும் A2I2.. அதேயே சொல்லிடூ..அது என்னதுன்னு கேட்டாலும் பதில் வராது.” என்று அலுத்துக் கொண்டார் சுகந்தி.

சுகந்தியுடன் பேசிக் கொண்டிருந்த ஷாம்பவியின் மனம், பத்து வருடங்களுக்கு முன் இதே விநாயக சதுர்த்தியன்று அவளுக்கு அறிமுகமான A2I2 நிகழ்வுக்குச் சென்று, மீண்டு, அந்த நிகழ்விலிருந்து நிகழ்காலத்திற்கு வந்தது அவள் நினைவலைகள்.

கடந்த சில மாதங்களாக, ஓயாமல் மனத்தில் அடித்துக் கொண்டிருந்த ஜெய்யின் நினைவலைகளைக் கட்டுப்படுத்த முடியாமல், அதற்குக் கட்டுப்பட்டு திருச்சியிலிருந்து சென்னைக்கு குடிப்பெயர்ந்தாள் ஷாம்பவி. 

பட்டதாரியான பின், ஆசிரியைப் பயிற்சி பெற்று, திருச்சியில், ஒரு துவக்கப் பள்ளியில் சின்ன குழந்தைகளுக்குப் பத்தாயிரம் ரூபாய்க்கு எல்லாப் பாடங்களையும் சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தாள். முப்பதாயிரம் ரூபாயில், வெறும் நர்ஸரி குழந்தைகளுக்கு மட்டும் பாடம் சொல்லிக் கொடுக்க, சமீபக் காலமாகப் பிரபலமாகிக் கொண்டிருந்த ஒரு இண்டர்நேஷ்னல் பள்ளியின் விளம்பரத்தைச் செய்தித்தாளில் பார்த்து, விண்ணப்பித்து, அதில் தேர்வாகி, இப்போது மூன்று மாதமாக சென்னைவாசி ஆகியிருந்தாள் ஷாம்பவி. 

இந்த இடமாற்றத்தைச் சுகந்தியால் சுலபமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  மகளுடைய எதிர்காலத்தை நினைத்துக் கவலையானவர்,

“நல்ல சம்பளத்துக்கு வேற ஸ்கூல்லே வேலை தேடப் போற, எம் ஏ படிக்க போறேன்னு சொல்லிண்டு இருந்தவ..திடீர்னு சென்னைக்குப் போகப் போறோம்னு சொல்லிட்ட..அண்ணா, மன்னி இரண்டு பேரும் இன்னும் உன் மேல் கோவமா தான் இருக்கா..

நர்மதாக்கும் அஷ்வினிக்கும் நல்ல இடமாப் பார்த்துக் கல்யாணம் பண்ணி வைச்ச மாதிரி நோக்கும் ஒரு நல்ல இடமாப் பார்த்திண்டு இருந்தான் அண்ணா..இப்போ இங்கே வந்தாச்சு..அவன் அங்கேயும் நாம இங்கேயும் இருந்தா எப்படி ஒத்துப் போய் இடம் பார்க்கறது?” என்று கணவர் இல்லாததால் மற்றக் குடும்ப கவலைகளைப் பகிர்வது போல், கல்யாணப் பெண்ணான பவியிடமே அவளுடைய கல்யாண கவலையைப் பகிர்ந்து கொண்டார் சுகந்தி.

“சொன்னேன்..அப்படித் தான் சொன்னேன்..இல்லேங்கலே..வேற ஸ்கூல் மாறணும்னு நினைச்சேன்..மாறிட்டேன்..பத்தாயிரத்தை விட அதிகச் சம்பளத்துக்குதான் வேலை பார்க்கணும்னு நினைச்சேன்..பார்க்கறேன்..ஏம் ஏ படிக்கணும்னு நினைச்சேன்..படிப்பேன்..எல்லாம் திருச்சிலேயே நடக்கும்னு சொன்னேனா? இல்லையே..சென்னைலே தான் நடக்கப் போகறதுன்னு நேக்கும் ஐடியா இருக்கலை மா..

என்னோட கல்யாண விஷயத்தைப் பற்றி கவலைப்படாத..தீபக் ஒரு வேலைக்கு போன அப்புறம் அதைப் பற்றி யோசிக்கலாம்.” என்றாள் பவி.

“ஏன் டீ பவி..உங்கப்பாவோட பணமெல்லாம் இருக்கா இல்லே கரைஞ்சு போயிடுத்தா..நாமாட்டும் எதுலேயும் பட்டுக்காம ஆத்தோட இருந்திட்டேன்..இப்போ தீபக் வேலைக்குப் போன அப்புறம் நோக்கு கல்யாணத்துக்குப் பார்க்கலாம்னு நீ சொன்னவுடனதான் கவலை வந்திடுத்து.” என்றார் சுகந்தி.

“எல்லாம் இருக்கு ம்மா..உன் பெயர்லே தான் இருக்கு..கொஞ்சம் போல தீபக் படிப்புக்குச் செலவாகறது..நர்மதா, அஷ்வினி இரண்டு பேர் கல்யாணத்துக்கும் மாமாக்கு உதவி பண்ணினோம்.. அதைப் பற்றி நோக்கே தெரியும்..பாக்கி அப்படியே தான் ம்மா இருக்கு..

மத்த சின்ன செலவெல்லாம் நம்மளோட சின்ன பிஸ்னஸ்லே வந்த வருமானத்தை வைச்சு பார்த்திண்டாச்சு.. மளிகைச் சாமான், பால், தயிர், மோர்…அப்புறம் புக்ஸ் வாங்கிண்டிருந்தேனே அதையும் சேர்த்து தான் சொல்றேன்.” என்று சுகந்தியின் பணக் கவலைக்குக் கடிவாளம் போட்டாள் பவி.

பவி ஒரு புத்தகப் பைத்தியமென்று சுகந்திக்கும் தெரியும்.  பவிக்கு நெருங்கிய பிரண்ட்ஸ் என்று யாருமேயில்லை.  அவருடைய அண்ணா பெண்கள் இருவரும், அவளை ஒத்த வயதில் இருந்ததால் திருச்சிக்குக் குடிப்பெயர்ந்த பின் பிரண்டுகளின் தேவையில்லாமல் போனது.  எனவே, புத்தகங்கங்களுடன் சினேகிதமானாள்.  

‘சுதர்ஷன் உயிரோடு இருந்திருந்தால், பவியைக் கண்டிப்பாக உயர் கல்வி படிக்க வைத்திருப்பார்’ என்று எப்போதும் போல் நினைத்தார் சுகந்தி.  பவியின் நிறைவேறாத உயர் கல்வி எண்ணங்களிலிருந்து அவளின் அடுத்த கட்ட வாழ்க்கைக்கு மறுபடியும் தாவியது அவர் மனது.

மௌனமாக அமர்ந்திருந்த சுகந்தியிடம்,”நோக்கு நேத்திலேர்ந்து ஏதோ யோஜனை..திடீர்னு பணம் இருக்கான்னு கேட்கற..இன்னைக்கு எல்லாப் பேச்சும் என் கல்யாணத்துலே வந்து நிக்கறது..என்னென்னு சொல்லிடூ.” என்றாள் பவி.

“நேத்திக்கு அண்ணா ஃபோன் பண்ணினன்..நாம இரண்டு பேரும் தனியா இருக்கறது பிடிக்கலேன்னு சொன்னன்..திரும்ப திருச்சிக்கே வந்துடுங்கறான்…நோக்கு ஒரு நல்ல இடம் வந்திருக்காம்..திருச்சிலே நாம இருந்த தெருக்கு அடுத்த தெருவுலே தான் அவா இருக்காளாம்..தைப் பொறந்து கல்யாணத்தை வைச்சிண்டா சரியா இருக்கும்ங்கறான்..தீபக்கு பரீட்சை மே மாசம்தானே.” என்று நேற்றிலிருந்து அவரை அலக்கழித்த விஷயத்தை வெளியிட்டார் சுகந்தி.

பவியிடமிருந்து பதில் வரவில்லை. அதற்குப் பதிலாக ஒரு தட்டில் நைவேத்தியக் கொழுக்கட்டைகள் அவர் கண்முன் ஆஜராகின. 

பில்டிங் பிள்ளையாரின் நைவேத்தியத்திற்காகப் பவி தயார் செய்திருந்த கொழுக்கட்டைகளைப் பார்த்து,

“என்ன டீ இது? உப்புக் கொழுக்கட்டையைப் பார்த்தா குட்டி பிள்ளையாராட்டமே இருக்கு.” என்று வியந்தார் சுகந்தி.

“சும்மா டிரை பண்ணினேன் மா..வேற வேற ஷேப்லே எப்பவும் பண்ணுவோம்..இன்னைக்கு இரண்டும் ஒரே ஷேப் கொஞ்சம் வித்தியாசமான லுக்கோட..அதுதான் உப்புன்னு எப்படி கண்டுபிடிச்ச?” என்று கேட்டாள் பவி.

“திதிப்புக் கொழுக்கட்டைக்கு மிளகுலே கண்ணு வைக்க முடியுமா? டேஸ்ட் கெட்டுடாது.” என்றார் சுகந்தி.

“குட்..பார்த்துவுடனேயே கண்டுபிடிச்சிட்டே.”

“எல்லாம் உன்னாலே தான்..உன்னோட கைவண்ணத்தை இதுவரைக்கும் கேக்லே தான் காட்டிண்டு இருந்த..இன்னைக்குக் கொழுக்கட்டைலேயுமா?” என்றார்.

“யெஸ்..எல்லாமே A2I2 மா.” என்றாள் பவி.

“என்னமோ போ..நான் கேட்டதுக்குப் பதில் வரலே..அண்ணாக்கு என்ன சொல்லட்டும்?” என்று சுகந்தி மறுபடியும் கல்யாணப் பேச்சை ஆரம்பித்தார்.

ஒரு டிஃபன் பாக்ஸில் கொழுக்கட்டைகளைப் போட்டுக் கொண்டிருந்த பவி, விநாயகர் சதுர்த்தி அன்று, அவளுடைய கல்யாணத்தை தள்ளிப் போடுவதற்கு பிள்ளையாரே அவளுக்குச் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கிறார் என்று உணர்ந்து, அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டவள், சுகந்தியின் புறம் திரும்பி,

“சித்தப்பாவோட வேண்டவே வேண்டாம்..மாமாகூட ஒரே ஆத்துலே இருக்க வேணாம் தனியா இருப்போம்..தீபக் விருப்பப்பட்ட கோர்ஸ், காலேஜ்..நேக்கு பி ஏ, பி எட் படிப்பு.. டீச்சர் வேலைன்னு எல்லா முடிவையும் எடுத்தது நான்… 

அதனாலே நேக்கு இப்போ கல்யாணம் வேணுமா? வேண்டாமான்னு? நான் தான் முடிவு பண்ணுவேன்..இந்த ஸ்கூல்லே ஒரு வருஷமாவது வேலை பார்க்கணும்னு நினைக்கறேன்.. அதுக்குள்ளே தீபக்கு ஒரு நல்ல வேலை கிடைச்சிடும்…என் கல்யாணத்தைப் பற்றி அடுத்த விநாயகர் சதுர்த்திக்கு அப்புறம் பேசலாம்..இப்போ நீ இந்த நைவேத்தியத்தை நம்ம பில்டிங் பிள்ளையார் பூஜைக்கு எடுத்திண்டு போ.”என்றாள்.

பவி சொன்னதில் இருந்த நியாயத்தை உணர்ந்த சுகந்தி, அதற்கு மேல் பவியைக் கல்யாணத்திற்கு வற்புறுத்தவில்லை.  

அவள் கொடுத்த டிஃபன் பாக்ஸுடன் சுகந்தி கீழே சென்றவுடன், வாசல் கதவைத் தாழ் போட்டுவிட்டு வந்து, சமையல் வேலையில் மூழ்கிய பவியின் மனது பழைய நினைவுகளில் மூழ்கியது.  ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தியன்றும் அவளை ஜெய்யின் நினைவுகள் ஆட்கொள்வது வழக்கம். ஆனால், இன்றோ, அவனின் நினைவுகள் அவளை நிழல் போல் தொடராமல், நிஜம் போல் தொட்டுக் கொண்டிருந்தன. திடீரென்று ஏற்பட்ட அந்த மாற்றம் ஏன் என்று புரியாமல் குழப்பத்தில் இருந்தாள் பவி.

கடைசியாக, அவனை இதே போல் ஒரு விநாயக சதுர்த்தி அன்றுதான் சந்தித்தாள் என்பதாலா? இல்லை அதுவரை எல்லாம் ஆண்களையும் அசடாக எண்ணிக் கொண்டிருந்தவளுக்கு, அவளைத் தாண்டி வரச் சொல்லி, அவள் வாழ்க்கையில் ஏற்படவிருந்த துயர் நிகழ்விற்கு, மனதளவில் அவளை  முன்பே தயார்ச் செய்து, ஆசானாக வழி நடத்தியதாலா? 

அந்நியன் ஒருவனுக்கு அவள் மனைவி ஆவதற்கு முன், அறியாப் பருவத்திலேயே வேறொருவனைக் கணவனாக அவள் மனது ஏற்று கொண்டு விட்டதா? என்ற கேள்விக்கு விடை கண்டுபிடிக்கவே சுகந்தியிடம், இன்று, ஒரு வருடம் கெடு கேட்டாள். 

அந்தக் கேள்விக்கு விடை தேடுமுன், அவளுடைய இன்ஸ்பிரேஷன் வேறொருத்திக்குக் கணவனாகிப் போனானா? என்ற கேள்விக்கு விடை கண்டுபிடிக்க வேண்டிய டெஸ்பரெஷனில் (desperation) இருந்தாள் பவி.

******************

கதை வந்ததற்கு முக்கிய காரணம், இரண்டு “மூன்றுகள்,”  “two sets of 3s’”

Thoughts, Bots, Gods

Gossips, discussions, research.

முதல் ஸெட்தான் கதையே. அதனாலே அதைப் பற்றி தனியாச் சொல்ல எதுவுமேயில்லை.

இரண்டவாது ஸெட் இல்லைன்னா இந்தக் கதையை எழுதியிருக்கவே முடியாது.

முதல் பதிவிலேர்ந்து இந்தப் பதிவுரை நீங்க படிச்சது நான் கேட்ட வாழ்க்கைக் கதைகளை அடிப்படையா வைச்சு எழுதினது. ஜெய், பவி இருவர் மனநிலையையும் அதே போல சூழ்நிலைலே இருந்தவங்க சொன்னதை வைச்சு எழுதியிருக்கேன். 

மற்றவங்க வாழ்க்கைக் கதையைப் பற்றி கேட்கறது, பேசறது எல்லாம் வம்புதாங்க..

so these three episodes were based on just gossips..