சட்டென்று அழுகையை நிறுத்தி, புறங்கையால் அவளது கண்ணீரைத் துடைத்து கொண்டாள் பவி.
“உன்னை விரும்பறான்னு ஜெய் என்கிட்டே தான் முதல்லே சொன்னான்..அதுக்கு நான் அவன்கிட்டே சொன்னேன்,’சுதர்ஷன் உயிரோட இருந்திருந்தா நீ ஆசைப்பட்ட வாழ்க்கையை நோக்கு அமைச்சு கொடுத்திருப்பான். ஆனா அவன் இல்லாததுனாலே கிடைச்ச வாழ்க்கையை நீ வாழ்ந்திண்டு இருந்தா அதை நான் கலைக்க மாட்டேன்னு’..அப்ப நேக்கு ஜெய்யோட விருப்பம் முக்கியமாப் படலே உன்னோட வாழ்க்கைதான் முக்கியமாப் பட்டது..
நீயும் விருப்பப்பட்டதுனாலே தான் இந்தக் கல்யாணம் நடந்தது..ஜெய் மேலே நோக்கு விருப்பமில்லா இருந்திருந்தா, நோக்குப் பிடிச்ச இடத்தில்லே உங்கப்பா ஸதானத்திலே உன் கல்யாணத்தை நடத்தி வைச்சிருப்பேன்..அதனாலே சுதர்ஷன் இல்லையேன்னு நீ நினைக்காத நான் இருக்கேன்.” என்றார் பாலகிருஷ்ணன்.
அதற்கு,’சரி’ என்று கலங்கிய கண்களுடன் தலையசைத்தாள் பவி. அவளருகே நின்று கொண்டிருந்த தீபக்கிடம்,
“நான் சொன்னது பவிக்கு மட்டுமில்லே நோக்கும் சேர்த்துதான்..மேலே படிக்கணுமா, வேலைக்குப் போகணுமா…நீ என்ன ஆசைப்படறேயோ அதை பண்ணு..இனி உங்களைப் பார்த்துக்க வேண்டிய பொறுப்பு எங்களோடது.” என்று பாலகிருஷ்ணன் சொன்னவுடன்,
அதுவரை அம்மாவையும் அக்காவையும் சமாதானம் செய்து கொண்டிருந்த தீபக்கிற்கு அழுகை வந்தது.
“மாமா.” என்று அவரருகே வந்து அவரை அணைத்துக் கொண்டான்.
அதைப் பார்த்து சுகந்தியும் பவியும் மீண்டும் கண் கலங்க, “பவி..கண்ணைத் துடைச்சிக்கோ..நான் சொன்னதைக் கரெக்ட்டா மனசுலே வாங்கிண்டியா?..ஜெய்யே நோக்கு ஏதாவது பிராப்ளம் கொடுத்தா நீ என்கிட்டேவந்து சொல்லலாம்..உன் அப்பாவா நான் அவனைப் பார்த்துக்கறேன்..எப்பவும் உன் சந்தோஷம் தான் நேக்கு முக்கியம்.” என்றார் பாலகிருஷ்ணன்.
அதைக் கேட்டு,”அப்பா” என்று அதிர்ச்சியுடன் ஜெய் விளிக்க, “அப்பா” என்று அன்புடன் விளித்தாள் பவி.
“முதல்லே நீங்க மூணு பேரும் கொஞ்சம் வெளியே போங்கோ..அவளுக்குப் புடவையை சரி பண்ணி விடணும்.” என்று ஆண்களை அறையிலிருந்து வெளியேற்றினார் ருக்மிணி.
பவியின் புடவையை அவர் சரி செய்வதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சுகந்தியிடம்,
“கீதுக்கு புடவை கட்டிவிட தெரியாதுன்னுதானே உங்காத்துலேர்ந்து யாரையாவது கூட வைச்சுக்கோன்னு சொன்னேன்..இப்ப பாரு.. முடிச்சு லூஸ் ஆயிடுத்து…வா..நீயே இவளுக்கு கட்டிவிடு.” என்றார் ருகிமிணி.
“நான் வேண்டாம் மாமி..நீங்களே கட்டி விடுங்கோ..இனி அவ உங்காத்து பொண்ணு.”என்று மறுத்தார் சுகந்தி.
“சுதர்ஷனுக்கு அப்புறம் உங்க எல்லாருக்கும் ஒண்ணும் செய்யலேன்னு எங்காத்து மாமாக்கு இருந்த மனக்குறை மறைஞ்சுப் போய் இன்னைக்குதான் மனசு நிறைஞ்சு போயிருக்கு..நோக்கும் அப்படித்தான் இருக்கணும்..
உன் மச்சினர், ஓர்ப்பிடியை நறுக்குனு கேள்வி கேட்டு அவாளே வைச்சே சுமங்கலி பிரார்த்தனை, சமாராதனை, இன்னைக்கு கல்யாண வரை நடத்தியாச்சு..இப்ப பவி எங்காத்து பொண்ணாயிட்டா, ஜெய் உங்காத்து பையனாயிட்டான்…அவனுக்காக வந்து புடவையைக் கட்டி விடு.” என்று சுகந்திக்கு ஆர்டர போட்டார் ருக்மிணி மாமி.
அந்த இடத்திலிருந்து அசையாமல் கலங்கிய கண்களுடன் சுகந்தி அப்படியே அமர்ந்திருக்க,
“இங்க பாரு சுகந்தி….ஜெய்க்கு பவி மேலே பிரியம்னு நேக்கு கொஞ்ச நாள் முன்னாடிதான் தெரிஞ்சுது..அன்னைலேர்ந்து தினமும் நான் பகவான்கிட்டே ‘என் புள்ளைக்கு அவனுக்கு பிடிச்ச வாழ்க்கையை அமைச்சு கொடுக்க வழி காட்டுன்னு’ வேண்டிண்டேன்..
கீது கூட சொன்னா..’அம்மா, பவிக்கு கல்யாணமாகி இரண்டு குழந்தைகூட இருக்கலாம்னு’….மிருத்யுஞ்ஜெய்யை பகவான் கைவிட மாட்டார்ன்னு நேக்கு அசைக்க முடியாத நம்பிக்கை..அவர் கைவிடலே..ஆறு மாசமாப் பக்கத்திலே இருந்தவளை எங்க கண்ணுக்கு காட்ட ஸமிக்ஷாவோட பிறந்த நாள் தேவைப்பட்டது..அந்த க்ஷணத்திலே எல்லாம் மாறிப் போயிடுத்து..அந்த மாற்றம் நம்மாளாலே இல்லை நாம நம்பிக்கை வைக்கற பகவனாலேதான்…
கல்யாணம் நல்லபடியா நடந்து முடிஞ்சிடுத்து…பெரியவா எல்லாருக்கும் நமஸ்காரம் பண்ணிட்டூ சாப்பிட போகணும்.. எழுந்து வா.. இன்னைக்குதான் முதல் தடவையா ஒன்பது கஜம் கட்டிக்கறா..உதவி பண்ணு.” என்று சுகந்திக்கு மறுபடியும் கட்டளையிட்டார் ருக்மிணி.
அதன்பின் சுகந்தியும் வந்து உதவ, இருவருமாக சேர்ந்து பவிக்குக் கூரைப் புடவையின் முடிச்சை இறுக்கி, சொருக வேண்டிய இடத்தில் சொருகி, அதை நேர்த்தியாகக் கட்டிவிட்டனர்.
அதற்குள் வெளியே இருந்து,”அம்மா, சீக்கிரமா வா ம்மா..எல்லாருக்கும் நமஸ்காரம் பண்ண அப்பா கூப்பிடறா.” என்றான் ஜெய்.
“வரேண்டா..இவன் நேக்கு மேலே… வென்னீரைக் கொட்டிப்பன்.” என்று அலுத்துக் கொண்ட ருக்மிணி,”ஜாக்கிரதை..நோக்கு பழக்கமில்லே அதனாலே எதையும் நீயா லூஸ் பண்ணிடாதே..எல்லாம் ஒரே ஒரு முடிச்சுலே இருக்கு.” என்று பவியை எச்சரிக்கை செய்தார்.
“எங்காத்துலே இதைக் கட்டிண்டு தான் சாப்பிடணும்..ஆத்துலே மடியா கட்டிக்க காட்டன்லே ஒண்ணு தனியா வாங்கியிருக்கேன்.” என்றார் ருக்மிணி.
அதற்குபின் மணமக்கள் இருவரும் நமஸ்காரம் செய்து அன்றைய தினத்திற்கான உடற்பயிற்சியை செய்து முடித்தனர்.அதே உடையில் இருவரும் பந்தியில் உட்கார்ந்து சாப்பிடும் போது, மறுபடியும் பவிக்கு அந்தப் புடவை சங்கடத்தைத் தர, அதைக் கவனித்த ஜெய்,
அப்போது அவர்கள் அருகிலும் எதிரிலும் அமர்ந்திருந்தவர்கள் அவர்கள் இருவரும் என்ன பேசுகிறார்கள்? என்று சுவாரஸ்யமாக பார்க்க, அந்தப் பார்வைகளில் சங்கடமடைந்த பவி,”நான் உங்களண்ட அட்வைஸ் கேட்டேன்னா..பேசாம சாப்பிடுங்கோ..எல்லாரும் நம்மளையே பார்க்கறா.” என்றாள்.
“நீ நன்னா சாப்பிடறத்துக்குதான் நான் சொல்யுஷன் கொடுத்தேன்.” என்றான் ஜெய்யும் விடாமல்.
“அது முடியாதுண்ணா.” என்றாள் புது மனைவி அவளுடைய புதுக் கணவனிடம்.
“ஏன்?” என்று கேட்ட ஜெய், பவியின் மறுப்பிற்குப் பின் இருந்த காரணத்தை அறியும் ஆவலில், அவளது முகத்தைப் படிக்க முயல,
“ஏன்னு கேட்டாதீங்கோ..அண்ட் என்னை அப்படி உத்து உத்து பார்க்காதீங்கோ.” என்றாள் பவி.
“ஏன்?” என்று மறுபடியும் கேட்டான் ஜெய்.
அவர்களைத் தாண்டி அமர்ந்திருந்த ருக்மிணியோ,”பேச்செல்லாம் அப்புறம்..சீக்கிரம் சாப்ட்டு முடிங்கோ..கிரஹப்பிரவேசம் பண்ணனும்..அப்படியே மண்டபத்தையும் காலி பண்ணனும்.” என்றார்.
உடனே,”அம்மா.” என்று ஜெய் அவரைக் கூப்பிட, அவளுக்காகதான் அவன் ருக்மிணியைக் கூப்பிடுகிறான் என்று புரிந்து கொண்ட பவி, அவளது இடதுக் கையால் அவனது வலது தொடையைக் குத்த, அதை சற்றும் எதிர்பார்த்திராத ஜெய்,“ஆ” என்று கத்த, சாப்பிட்டு கொண்டிருந்த அனைவரும்,”என்ன டா.” என்று பதைபதைக்க,”தொண்டைலே ஏதோ குத்திடுத்து.” என்றான் தொடையில் குத்தப்பட்டவன். ஆனால், பவி நினைத்தது போல் அதற்குபின் அவன் அமைதியாக சாப்பிடாமல், அவள் குத்தியதற்குப் பழிவாங்க, அவன் இலையில் இருந்த பாதியை அவள் இலைக்கு மாற்றினான்.
அதைப் பார்த்தவர்கள்,”என்ன டா இப்பவே பவியைப் பலமா பார்த்துக்கற?” என்று கேட்க,
அதன்பின், அவள் இலையில் அவன் எடுத்து வைத்த பண்டங்களை அவளுடன் சேர்ந்து சாப்பிட ஆரம்பித்தான் ஜெய்.அவனின் அந்த செய்கையில் அங்கே இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
“ஜெய்..என்ன டா பண்ற?” என்று கேட்டார் ருக்மிணி.
அதற்குள் பவியே அவன் கைகளைத் தட்டிவிட முயற்சிக்க, அவனோ அவள் கைகளைத் தட்டிவிட்டு,”நீயும் சாப்பிடு..எல்லாரையும் இக்னோர் பண்ணு.” என்றான்.
“என்ன ஜெய் அமெரிக்கா போய் எச்சையெல்லாம் விட்டுட்டியா?” என்று ஒரு மாமி விஷமமாக கேட்க,
ஒரு நொடி அவர் முகத்தைப் படித்த ஜெய்,“எச்சலா..அதெல்லாம் ஆத்துலே பார்க்க முடியும்..ஆத்துக்காரியோட பார்க்க முடியுமா?இல்லை ஆத்துக்காரரோட பார்க்க முடியுமா?” என்று விஷமமாகப் பதில் கொடுக்க, அதைக் கேட்ட அந்த மாமி ஒரு நொடி அதிர்ச்சியாகி, அடுத்த நொடி வெட்கப்பட்டார். அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், பவியின் அருகே குனிந்து, அவள் காதில்,
“மாமி என்னை டெர்ட்டி(dirty) இந்தியன்னு சொன்னா..நான் மாமியை ஃபிரென்சுன்னு (french) சொன்னேன்..நாங்க இரண்டு பேருமே கரெக்ட்.” என்று சொல்ல, ‘என்ன டா இராத்திரி பேச வேண்டியதெல்லாம் இவன் பட்ட பகல்லே பேசறான்.’ என்று பவி மனதுள் நினைக்க, அவள் மனத்தைப் படித்த ஜெய், ”இராத்திரி பேச வேண்டியதெல்லாம் பகல்லே ஏன் பேசறான்னு நினைக்கறேயா?” என்று கேட்க, ‘ஐயோ இந்த ஜெய்தான் நாம பத்து வருஷம் முன்னாடி பழகின ஜெய்யா?’ என்று மருட்சியுடன் பவி பார்க்க, அவள் பயத்தையும் சரியாகப் படித்த ஜெய்,”என்னடா பத்து வருஷம் முன்னாடி பார்த்து, பழகின ஜெய்யான்னு சந்தேகம் வர்றதா?” என்று கேட்க,
அதை கேட்டு, சாப்பிட்ட உணவு பவியின் தொண்டையில் மாட்டிக் கொள்ள, அவர்கள் எதிரே, அருகே அமர்ந்திருந்த அனைவரும்”என்ன ஆச்சு?” என்று பதற்றமடைய, ஒரு டம்பளர் தண்ணீரை அவளிடம் கொடுத்து,
“ரிலாக்ஸ்.” என்றான் ஜெய்.
அவன் கேள்விக்கு அவள் சரியாக பதில் சொல்லாதது அத்தனை தூரம் கொண்டு போய் விடும் என்று பவி எதிர்பார்க்கவில்லை.அதனால் மேற்கொண்டு பேசாமல், அமைதியாக சாப்பிட ஆரம்பித்தாள்.அவர்கள் இருவரும் ஒரே இலையில் சாப்பிடுவதை எல்லாரும் ஃபோடோ எடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது,“பவி.” என்று மெதுவாக அழைத்தான் ஜெய்.
காது கேட்காதது போல் களத்திலிருந்தைக் காலி செய்து கொண்டிருந்தாள் பவி.
“டோண்ட் ஷாம் (sham) ஷாம்பவி.” என்றான் ஜெய்.
அதற்குமேல் அவள் பதில் பேசாமல் இருந்தால் அவன் வேறு ஏதாவது பிரச்சனையைக் கிளப்பி விடக்கூடும் என்று எண்ணிய பவி,”என்ன?” என்று கேட்டாள்
“இந்த மாதிரி புடவை எத்தனை வாங்கிண்ட?” என்று கேட்டான்.