அத்தியாயம் – 25

பாலகிருஷ்ணன் தினசரி பூஜையில் இருக்க,

“இன்னைக்கு சுகந்தியாத்துக்கு ஒரு நடை போய் ஒரு விஷயம் பேசிட்டு வரணும்.” என்று காலை டிஃபன் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜெய்யிடம் சொன்னார் ருக்மிணி.

“என்கிட்டே சொல்லியிருக்கலாமே ம்மா..நான் டெய்லி காலம்பற போறேனே.” என்றான் ஜெய். 

“நானே போய் கேட்டுக்கறேன்.” என்று பதில் சொன்னவர்,’இவன் போய் பவிக்கு எப்ப நாளுன்னு யார்கிட்டே கேட்ட முடியும்? சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டான்’ என்று மனதுள் புலம்பினார்.

“முகூர்த்த நாள் குறிக்க பவியோட நாள் எப்பன்னு தெரியணும் அவ்வளவுதானே.” என்று எப்போதும் போல் ருக்மிணியின் மனத்தைப் படித்தான் ஜெய்.

அதைக் கேட்டு “பகவானே..பகவானே..பகவானே.” என்று மூன்று முறை சொல்லி, தப்பு செய்தது போல் அவரது கன்னத்தில் போட்டுக் கொண்டார் ருக்மிணி.

“ஸே..பாட்டே..பாட்டே..பாட்டே.” என்று எப்போதும் போல் சொல்லி சிரித்த ஜெய்..”இன்னைக்கு சாயந்திரம் அவளை மீட் பண்ணுவேன்..இல்லேன்னா நாளைக்கு காலம்பற அவாத்துக்குப் போகும் போது அவகிட்டேயே கேட்டுச் சொல்றேன்.” என்றான்.

“சாயந்திரம் அவளை கேட்லேர்ந்து அழைச்சிண்டு வரப் போனேன்னா ஒரு லிட்டர்ப் பால் வாங்கிண்டு வந்துடூ..அப்படியே அவகிட்டே தயாரா இருக்கச் சொல்லு..கீதுவோட மாமியார் இன்னைக்கு அவளைப் பார்க்க வரேன்னு சொல்லியிருக்கா.” என்றார் ருக்மிணி.

இப்போதெல்லாம் தினமும் காலையில் பவியைச் சந்தித்தபின் தான் அவனுடைய சைக்கிள் பயிற்சி முடிகிறது. சில நாள்கள், மாலை வேளையில், அவளுடைய ஸ்கூல் பஸ் வரும் நேரத்தில் அவளுக்காக கேட்டருகே ஜெய் காத்திருக்க, இருவரும் சேர்ந்து வீடு வரை நடந்து வந்தனர்.

 டிசம்பர் லீவில் வீட்டிற்கு வந்திருந்த தீபக், அமெரிக்கன் நின்ஜா அவர்கள் ஆத்து மாப்பிள்ளை ஆகப் போவதை நம்பமுடியால்,

“அம்மா, அமெரிக்கன் நின்ஜாவா இருந்தாலும் என் கண்ணுக்கு எப்ப அத்திம்பேரா தெரியணுமோ அப்பதான் தெரிவர்னு நீ சொன்னது சரி.” என்று சுகந்தியிடம் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் பகிர்ந்து கொண்டான்.

“டேய்..நான் அப்படியாடா சொன்னேன்?” என்று செல்லமாக சுகந்தி அவனைக் கடிந்து கொள்ள,

“பின்னே என்ன ம்மா..அன்னைக்கு மீட்டிங்க்லே அத்திம்பேர் என் பக்கத்திலேதான் நின்னுண்டு இருந்தார்..அப்புறம் காலம்பற நான் வாக்கிங் போனபோதெல்லாம் ஹலோ சொல்லுவர்..அப்பெல்லாம் நேக்கு அவர் தான் நம்மாத்து மாப்பிள்ளைன்னு தெரியவே இல்லையே.” என்று சுகந்தியிடம் அங்கலாய்த்தவன், ஜெய்யின் முன்னே பவியைக் கேலி செய்து பாடாய்ப் படுத்தினான்.

“அத்திம்பேர்..டெய்லி பவி அக்கா ஆதித்ய ஹிருத்யம் சொல்லிண்டு சூர்ய பகவான் தரிசனத்துக்காக பால்கனிலே தவமிருந்தான்னு நினைச்சேன்..ஆனா இப்பதான் தெரிஞ்சுது, சைக்கிள்லே சுத்திண்டு இருந்த நின்ஜா ஆத்துகாரர் தரிசனத்திற்காகதான் காத்திருந்தான்னு.” என்று கிண்டலடித்தான்.  

“நின்ஜாவா?”

“ஆமாம்..உங்களுக்கு நாங்க இரண்டு பேரும் சேர்ந்து அமெரிக்கன் நின்ஜான்னு பெயர் வைச்சோம்..அவாளைப் போலே ஃபாஸ்ட் அண்ட் ஃபிட்..நீங்க பதினைஞ்சாவது மாடிக்குப் படிக்கட்டுலே ஏறி போவேள்ன்னு நான் சொன்னேன்..பவி அக்கா சொன்னா நின்ஜாவெல்லாம் தாவிதான் போவான்னு.” என்று அவனுக்கும் பவிக்கும் இடையே நடந்த உரையாடலை ஜெய்யுடன் பகிர்ந்து கொண்டான் தீபக்.

“ஒரு நாள் ஒரேயொரு நாள் பதினைஞ்சாவது மாடிலேர்ந்து நிமிஷத்திலே கீழே இறங்கி வந்தேன்..கீழே வந்து சேர்ந்த அப்புறம் தான் எப்படி வந்தேன்னு யோசிச்சேன்..இப்பதான் புரியறது..பவியைப் பார்க்க பறந்து வந்தேன்னு.” என்று ஜெய்யும் அவன் பங்கிற்குக் பவியைக்  கேலி செய்தான்.

அவருக்கு வாய்ப்பு கிடைத்த போதெல்லாம், 

“நீங்க விரும்பி சாப்பிட்ட கேக், சாக்லெட் எல்லாம் ஷாம்பவி அவங்க கையாலே பண்ணிக் கொடுத்தது..தீபாவளி அன்னைக்கு உங்க வீட்டு வாசல்லே கோலம் போட்டது கூட உங்க மருமகதான் தான்..மாமியாரே! மருமகளுக்கே தெரியாம அவளை எவ்வளவு வேலை வாங்கியிருக்கீங்க.” என்று ருக்மிணியைக் கிண்டல் செய்தார் மிஸஸ் ஸென். அதற்கு, ருக்மிணியோ சற்றும் அசராமல்,

“அவ கையாலே காப்பி மட்டும் வாங்கி குடிக்க விட்டு போயிடுத்து.” என்று பதில் கொடுத்தார்.

அன்று மாலை, ஸ்கூலிருந்து திரும்பிய பவியுடன் பேசிக் கொண்டே பால் வாங்க கடைக்குச் சென்றான் ஜெய்.  அங்கே அந்தக் கடைக்காரர் அவர்கள் இருவரையும் பார்த்து,

” அன்னைக்கு ஒரே வீட்டுக்குதான் ஒரு லிட்டர் பாலும் போச்சா..ஏன் ஸர் இவங்கதான் முன்னாடியே வாங்கிட்டு போனாங்களே நீங்க இவங்களுக்கு ஒரு ஃபோன் செய்து பால் வாங்கிட்டாங்களான்னு கேட்டிருந்தீங்கன்னா நான் ஒரு மணி நேரம் வெயிட் செய்யாமக் கடையை மூடிட்டு நேரத்தோடு வீடு போய் சேர்ந்திருப்பேனில்லே..

ஏம்மா நீயாவது பால் பேக்கெட் வாங்கிட்டேன்னு ஸருக்கு ஃபோன் செய்திருக்கலாமில்லே..இனி ஒருத்தருக்கொருத்தர் முதல்லே பேசிக்கோங்க அப்புறம் கடைக்குப் ஃபோன் போடுங்க..என்னோட ஃபோன் நம்பரையும் ஸர்கிட்டேயிருந்து வாங்கிக்கோங்க ம்மா.” என்று அந்த மழை நாளில், அவர்கள் இருவருக்கும் இடையே ஃபோனில் உரையாடலை நிகழ்த்தியவர் கோபத்தில் ஆரம்பித்து ஆலோசனையில் முடித்தார்.

கடைக்காரர் சுட்டிக் காட்டிய அந்தச் சம்பவம் சட்டென்று ஜெய்யின் நினைவிற்கு வந்தது.  பவிக்கும் அந்த மழை இரவும் சுகந்தியின் வேதனையான முகமும் மனதில் வந்து போனது.

“ஜெய்..அன்னைக்கு ஃபோன்லே கடைக்காரர் உன்கிட்டே தான் பேசிண்டிருந்தார்ன்னு நேக்குத் தெரியவே இல்லை..நான் அப்ஸெட்டா இருந்தேன்..அன்னைக்குதான் சித்தப்பா எங்காத்துக்கு வந்து உமாக்கு கல்யாணம் ஃபிக்ஸ்ஸாயிடுத்துன்னு அம்மாகிட்டே சொல்லியிருக்கர்..அதைக் கேட்டு அம்மாக்கு ரொம்ப கஷ்டமாயிடுத்து..நேக்கும் தான்..அதான் மழைன்னுகூட பார்க்காம வாக்கிங் கிளம்பிட்டேன்..சித்தப்பாக்கு இரண்டு தடவை காப்பி கலந்து கொடுத்து ஆத்துலே இருந்த பால் எல்லாம் தீர்ந்து போயிடுத்து..வாக்கிங் முடிஞ்சு திரும்பி போகும் போது பால் வாங்கிண்டு போக இந்தக் கடைக்கு வந்தேன்.” என்றாள் பவி.

“அன்னைக்கு நாங்க வைஷ்னோ தேவி கோவிலுக்கு போயிட்டு திரும்பி வரும்போது தான் இவருக்கு ஃபோன் பண்ணி பால் பாக்கெட்டைத் தனியா எடுத்து வைக்க சொன்னேன்..விஜயதசமி அன்னைக்கும் நாங்க வைஷ்னோ தேவி கோவில் போயிருந்தோம்..ஒரே கூட்டம்..தரிசனம் செய்யாம திரும்பி வந்திட்டோம்..இன்னொரு நாள் அழைச்சிண்டு போறேன்னு எங்கம்மாக்கு நான் பிராமிஸ் பண்ணியிருந்தேன்..அதான் அம்மாவை அழைச்சிண்டு..” என்று அவன் பேசி முடிக்குமுன்,

“நானும் அம்மாவும் கூட விஜயதசமி அன்னைக்கு பூரி ஜகன்னாதர் கோவிலுக்கும் வைஷ்னோ தேவி கோவிலுக்கும் போயிருந்தோம்..கூட்டத்திலே ஒரு மணி நேரம் வெயிட் பண்ணி அம்பாளைத் தரிசனம் பண்ணிட்டு தான் ஆத்துக்கு வந்தோம்.” என்றாள் பவி.

“ரியலி.” என்று யோசனையாக கேட்டான் ஜெய்.

“ஆமாம்..வரிசைலே நின்னதுலே அம்மா டயர்டாயிட்டா அதனாலே கோவில் வாசலேர்ந்து ஆட்டோ பிடிச்சு ஆத்துக்கு வந்தோம்.” என்றாள் பவி.

“அம்மாவைத் திரும்ப அம்பாள் கோவிலுக்கு அழைச்சிண்டு போன அந்த நாள் தான் அங்கே உன்னோட சித்தப்பாவை எங்கப்பா பார்த்தர்.  உங்களைப் பற்றி எதுவும் விசாரிக்கறத்துக்கு முன்னாடி அவர் பொண்ணுக்குக் கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணியிருக்குன்னு விஷயத்தை சொல்லிட்டூ உடனே கிளம்பி போயிட்டர்..

உன்னோட சித்தப்பா பொண்ணுக்குக் கல்யாணம்ன்னு கேள்விபட்ட உடனேயே எங்கப்பா திடமா சொல்லிட்டா நோக்கும் கல்யாணமாகி இருக்கும்னு..ஆனா என்னாலே அதை ஏத்துக்கவே முடியலே..கோவில்லேர்ந்து ஆத்துக்கு வந்த அப்புறம் உன்னைப் பற்றி எங்கம்மாகிட்டே சொன்னேன்…’முன்னாடியே சொல்லியிருந்தா உன் சித்தப்பாகிட்டே நேரடியாவே விசாரிச்சிருப்பேன்னு எங்கம்மா சொன்னா.’ என்று கடைக்காரரிடம் ஆரம்பித்த பேச்சு ருக்மிணியிடம் ஜெய் அவன் மனத்தைத் திறந்ததில் முடிந்தபோது, அவர்களை இணைக்க கடவுளும் இடைவிடாது முயன்றிருக்கிறார் என்று உணர்ந்தாள் பவி.

விஜயதசமி அன்று அவர்களின் சந்திப்பு மிஸ்ஸானதற்குக் காரணமானவனுக்கு அவர்களின் முதல் சந்திப்பும் அதை சார்ந்த சூழ்நிலையும் புதிராக இருந்தது.  அந்தச் சந்திப்பைப் பற்றி ஜெய்யின் மனது ஓயாமல் ஆராய்ந்து கொண்டிருந்ததால் பவியின் மனத்தினை படிக்க அவன் விழையவில்லை. எனவே, ஜெய் அவளுடைய கணவனாகும் வரை அவனின் AI ஆக்ட்டிவிஸம் பற்றி அறியாமல், அறியாமையில் இருந்தாள் பவி. 

அந்தக் கல்யாண மண்டப வாசலில், சௌ. ஷாம்பவி  வெட்ஸ் சிரஞ். மிரூத்யுஞ்ஜெய் என்று பெரிய போர்ட் வைக்கப்பட்டிருந்தது.

முகூர்த்தம் முடிந்து ஒரு மணி நேரமான பின்னும் மேடையில் அமர்ந்து ஜெய்யும் பவியும் கணவன், மனைவியாக அவர்கள் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் இருவரையும் சாஸ்திரிகளையும் தவிர மேடையில் வேறு யாருமில்லை.  

“இனிமே நீங்க இரண்டு பேரும் தம்பதியா போய் வந்திருக்கிற பெரியவா எல்லார்கிட்டேயும் ஆசிர்வாதம் வாங்கிக்கலாம்.” என்று சொன்ன சாஸ்திரிகள், அத்துடன் நிற்காமல்,

“விநாயகர் சதுர்த்தி அன்னைக்கு தான் உன் மாமியார் அவா புள்ளைக்குக் கல்யாணத்துக்குப் பார்க்கணும்..பூஜையெல்லாம் முடிஞ்ச அப்புறம் அவாத்துக்கு வந்து ஜாதகத்தை வாங்கிண்டு போகச் சொன்னா..அதை வாங்கிக்கப் போன போது தான் உங்காத்து பிரசாதத்தை ருக்மிணி மாமி ஆத்துலே கொடுத்தேன்..கொழுக்கட்டையை சின்ன, சின்ன பிள்ளையாராட்டம் பண்ணியிருந்தேளே.” என்று நினைவு கூர்ந்தார் சாஸ்திரிகள். 

அதற்கு,’ஆமாம்.’ என்று தலையசைத்தாள் பவி.

அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய அன்று அவன் சாப்பிட்ட, சின்ன பிள்ளையார் போன்ற கொழுக்கட்டை பிரசாதம் அவன் இன்ஸ்பிரேஷன் செய்ததா? எப்படி அது அவனுக்குத் தெரியாமல் போனது?’ என்று யோசனையானான் ஜெய்.  அவன் யோசனையை உணராது வேறொரு சங்கடத்திலிருந்த அவன் சகதர்மிணியோ அவளருகே சிலையாய் அமர்ந்திருந்த கணவனை லேசாக “ஜெய், ஜெய்” என்று விளிக்க, அவனிடம் அந்த அழைப்பபு போய்ச் சேரவில்லை. ஆனால், அவர்களருகே அமர்ந்திருந்த சாஸ்திரிகளைப் போய்ச் சேர்ந்தது.  

உடனே,”ஆத்துக்காரரைப் பெயர் சொல்லி அழைக்கப்படாது..இப்பதான் கல்யாணமாகியிருந்தாலும் இதெல்லாம் உடனே பழகிக்கணும்.” என்று அட்வைஸ் செய்தார். 

‘சரி, சரி’ என்று தலை அசைத்தபடி, கண்களால் சுகந்தி, தீபக் இருவரையும் தேடிக் கொண்டிருந்தாள் பவி.

“அந்த ஜாதகம் இன்னும் என்கிட்டேயேதான் இருக்கு..இவருக்கு ஒரு வேலை கிடைச்ச அப்புறம் தெரிஞ்சவா எல்லார்கிட்டேயும் ஒரு காபி கொடுக்கலாம்னு இருந்தேன்..வேலை கிடைச்சிடுத்தா உங்காத்துகாரருக்கு?” என்று அவர் நழுவவிட்ட பிஸ்னஸ் வாய்ப்பை பற்றி அறிய, விட்ட இடத்திலிருந்து அவரது பேச்சை தொடர,

அதைக் காதில் வாங்காமல் இருந்த பவியிடம், மீண்டுமொருமுறை,

“இப்போ வேலைலே இருக்காரா?” என்று அவர் கேட்க,

இந்த முறை,”இல்லே மாமா.” என்று பவி பதில் சொல்ல,

“என்ன இன்னும் வேலை கிடைக்கலேயா…டீச்சருக்கு நல்ல இடமா அமையும்னு உங்கம்மாகிட்டே சொன்னேன்..உன்னோட ஜாதகம் கேட்டேன்…உங்கம்மா உன்னோட ஜாதகமும் கொடுக்கலே..நேக்கு ஃபோனும் செய்யலே.”என்று சாஸ்திரிகள் எல்லை மீறி பேச ஆரம்பித்தவுடன், சமைந்திருந்த ஜெய் சட்டென்று எழுந்து கொண்டான். அவனுடன் சேர்ந்து பவியினால் எழுந்து கொள்ள இயலவில்லை. 

அவளின் சங்கடம் புரியாமல், சாஸ்திரிகளுடன் பேச்சைத் தொடர விரும்புகிறாள் என்று நினைத்த ஜெய்,“எழுந்துக்கோ.” என்று அவளை அதட்டினான். 

சுகந்தியையும் தீபக்கையும் கண்களால் தேடிக் களைத்துப் போன பவி ,“செத்த அம்மாவைக் கூப்பிடுங்கோ.” என்றாள் ஜெய்யிடம்.  அவளுக்கு ஏதோ பிராப்ளம் என்று புரிந்து கொண்ட ஜெய், மேடைக்கு கீழே நின்று கொண்டு, கீதுவின் உறவினர்களோடு பாலகிருஷ்ணனும் ருக்மிணியும் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து,

“அம்மா, இங்கே மேலே வாயேன்.” என்று குரல் கொடுத்தான். அவன் குரலைக் கேட்டு திரும்பிய பாலகிருஷ்ணன், “நீங்க இரண்டு பேரும் மேடைலேர்ந்து இறங்கி வாங்கோ..பெரியவா எல்லாருக்கும் நமஸ்காரம் பண்ணனும்..காத்திண்டிருக்கா.” என்றார்.

“வரோம் ப்பா..அம்மா, நீ முதல்லே இங்கே வா.” என்றான் ஜெய்.

 ”எதுக்கு டா?” என்று கேட்க,

“பவி உன்னைக் கூப்பிடறா.” என்றான். அதைக் கேட்ட பவி,

‘பிள்ளையாரப்பா..மினி மாமியும் இன்னைலேர்ந்து அம்மான்னு எப்படி மறந்து போச்சு என் மரமண்டைக்கு.’ என்று அவளையே அர்ச்சனை செய்து கொண்டிருந்தாள். அப்போது மேடையேறி வந்த ருக்மிணி, எழ முடியாமல் உட்கார்ந்திருந்த பவியிடம்,”என்ன ஆச்சு பவி?” என்று விசாரித்தார்.

“முகூர்தத்துக்கு நாழியாயிடுத்துன்னு அவசரப்படுத்தினதுனால கூரைப் புடவையைச் சரியா கட்டலே..கால் வேற மரத்துப் போயிடுத்து..நேக்கு எழுந்துக்கவே பயமாயிருக்கு.” என்று புது அம்மாவிடம் சரணடைந்தாள் பவி.

“எல்லாம் டயத்துக்கு நடக்கணும்னு நான் தான் சீக்கிரமே உன்னை அழைச்சிண்டு வரச் சொன்னேன்..யாருக்கு இப்ப மடிசார் கட்டிக்க தெரியறது..எல்லாரும் ரெடிமேட்லே வாங்கிப் போட்டுக்கறா..என் கையைப் பிடிச்சிண்டு நீ மெதுவா எழுந்துரு..எங்கேயாவது நெகிழ்ந்திருக்கான்னு நான் பார்க்கறேன்.” என்றார் ருக்மிணி.

ருக்மிணியின் கையைப் பிடித்து எழுந்து கொண்டாள் பவி.  அவள் சொன்னது போல் பின்புறம் அவள் புடவை நெகிழ்ந்திருக்க, அதை எடுத்து லேசாக சொருகி விட்ட ருக்மிணி, ஜெய்யிடம்,”நீ இங்கேயே வெயிட் பண்ணு..அவ இல்லாம மேடைலேர்ந்து இறங்க வேண்டாம்..நான் ரூமுக்கு அழைச்சிண்டுப் போய் புடவையைச் சரியா கட்டிவிட்டு அழைச்சிண்டு வரேன்.” என்று சொல்லி, பவியை மேடைக்குப் பின்புறம் இருந்த அறைக்கு அழைத்துச் சென்றார்.

அந்த அறையின் மூலையில் கலங்கிய கண்களுடன் அமர்ந்திருந்தார் சுகந்தி. அவரை அணைத்துச் சமாதானம் செய்து கொண்டிருந்தான் தீபக். பவியும் ருக்மிணியும் அறைக்குள் நுழைந்ததைப் பார்த்து பதற்றமடைந்த சுகந்தி,”என்ன ஆச்சு பவி..என்ன ஆச்சு மாமி.” என்று கேட்டார்.

அதற்குள் சுகந்தியின் அழுத முகத்தைப் பார்த்து பவிக்குப் பதற்றமானது. “என்னடா தீபக்? அம்மா ஏன் டா அழறா?” என்று விசாரித்தபடி சுகந்தி அருகில் சென்று அவளும் அவரை அணைத்து கொண்டு,”என்ன ம்மா? என்று கேட்க,

“ஒண்ணுமில்லே க்கா.” என்று தீபக் பதில் சொல்லி கொண்டிருக்கும் போதே கட்டுப்படுத்த முடியாமல் அழ ஆரம்பித்தார் சுகந்தி. சுதர்ஷன் இல்லாதத்தை நினைத்து அவர் அழுகிறார் என்று உணர்ந்த பவிக்கும் அழுகை வந்தது. அதைப் பார்த்து,

“சுகந்தி..பகவான் கிருபைலே எல்லாம் நல்லபடியா நடந்திடுத்து..அழுகைய நிறுத்து.” என்றார் ருக்மிணி.

ஆனால் அம்மாவிற்கும் பெண்ணிற்கும் அத்தனை நாள் அவர்கள் மனத்தில் புதைத்து வைத்திருந்த ஆதங்கங்கள் அந்த அழுகையில் வெளியேறே, இருவரும் ஒருவரையொருவர் கட்டிக் கொண்டு அழுகையைத் தொடர்ந்தனர்.

சுகந்தியை மட்டும் சமாதானம் செய்து கொண்டிருந்த தீபக், பவியையும் சேர்த்து சமாதானம் செய்ய முயன்று தோற்றுக் கொண்டிருந்தான்.

அப்போது,”ருக்கூ..பெரியவா எல்லாரும் வெயிட் பண்றா.” என்று சொல்லிக் கொண்டே லேசாக சாத்தியிருந்த கதவைத் தட்டிவிட்டு அறையினுள் ஜெய்யுடன் நுழைந்தார் பாலகிருஷ்ணன்.

அங்கே அழுது கொண்டிருந்த சுகந்தியையும் பவியையும் பார்த்து,”என்னாச்சு ருக்கூ? யாராவது எதாவது சொன்னாளா?” என்று கேட்டார்.

பாலகிருஷ்ணன் அறையில் நுழைந்தவுடன் அழுகையைக் கட்டுப்படுத்தி கொண்டு எழுந்து நின்ற சுகந்தி,”அதெல்லாம் ஒண்ணுமில்லே மாமா.” என்றார்.  பவியோ அவளுடைய அம்மாவைக் கட்டிகொண்டு அவளது அழுகையைத் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

“பவி..அழுகையை நிறுத்து.” என்று குரலை உயர்த்தினார் பாலகிருஷ்ணன். அதுவரை யாரிடமும் அந்த தொனியில் அவர் பேசி ஜெய், ருக்மிணி கேட்டதே இல்லை.