அத்தியாயம் – 24

பவியின் வீட்டை அவர்கள் இருவரும் அடைந்த போது வாசல் கதவில் இருந்த ஆட்டோமேட்டிக் பூட்டுடன் போராடிக் கொண்டிருந்தார் சுகந்தி. அதைப் பார்த்து,

“என்ன ம்மா ஆச்சு?” என்று பவி கேட்க,

அதுவரை அவள் எங்கே போனாளோ? என்று கவலையிலிருந்த சுகந்தி அவள் குரலைக் கேட்டவுடன் கோபமானார்.  பூட்டுடன் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டே அவள் புறம் திரும்பாமல்,

“உன்னை தேடிண்டு வர தான் இதைப் பூட்டிண்டு இருக்கேன்..பூட்டியாச்சு ஆனா சாவியை வெளிலே எடுக்க முடியலே உள்ளேயே மாட்டிண்டு இருக்கு..நீ போய் எத்தனை நாழியாயிடுத்து..இவ்வளவு நேரம் எங்கே இருந்த? மழை வேற ஜாஸ்தியாயிடுத்து.” என்று சொல்லும் போதே,

“நீ நகரு..நான் பார்க்கறேன்.” என்று குடையை கதவருகில் வைத்துவிட்டு பூட்டில் மாட்டிக் கொண்டிருந்த சாவியால் வாசல் கதவைத் திறக்கும் முயற்சியில் பவி இறங்க, அவளுக்கு இடம் கொடுத்து விட்டு பின்னால் ஒதுங்கிய சுகந்தி அப்போதுதான் ஸமிக்‌ஷாவைக் கவனித்தார்.

சுகந்தியைக் கண்டு கொள்ளாமல் பவியின் அருகில் போய் நின்று கொண்ட ஸமிக்‌ஷா,”ஆன்ட்டி…..கதவை ஓர் உதை உதைச்சா சாவி கீழே விழுந்திடும்..உதைக்கட்டுமா?” என்று கேட்டாள்.

“வேண்டான்டி ம்மா..இது வாடகை வீடு.” என்று பதற்றத்துடன் பதிலளித்தார் சுகந்தி.

“ஆட்டோமேட்டிக் கதவைப் பூட்டறத்துக்கு சாவி வேண்டாம்..திறக்கறதுக்குதான் சாவி வேணும்..நீங்க ஏன் தப்பா கதவைப் பூட்டினேள்?” என்று சுகந்தியை ஸமிக்‌ஷா கேள்வி கேட்கும் போது லிஃப்டின் கதவு திறந்து கொண்டது. அதே சமயம் பவியும் வீட்டின் கதவை திறக்க,

“அம்மா..உள்ள வா..கதவைத் திறந்தாச்சு.” என்றாள் பவி.

பவியின் அழைப்பு சுகந்தியின் காதில் விழவில்லை அவரது கவனம் திறந்திருந்த லிஃப்டிலிருந்து வெளியே வந்த கூட்டத்தின் மீது இருந்தது. அப்போது ஸமிக்‌ஷா,

“ருக்கு பாட்டி, இந்தப் பாட்டி கதவை தப்பா பூட்டிட்டூ சாவியை எடுக்க முடியாம கஷ்டப்பட்டா..நானும் ஆன்ட்டியும் தான் ஹெல்ப் பண்ணினோம்.” என்று வீட்டுக்கு வெளியே அவள் நின்று கொண்டிருந்த காரணத்தை யாரும் கேட்காமலேயே உரைத்தாள்.

‘ருக்கு பாட்டி’ என்ற அழைப்பில் ருக்மிணியை அடையாளம் கண்டு கொண்ட சுகந்தி,”மாமி, நீங்களா? இங்கே எப்படி?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

“திருச்சிலே இருக்க வேண்டிய நீ “D” பிளாக்லே இருக்கும் போது சென்னைவாசி நான் சென்னைலேதானே இருக்கேன்.” என்று சிரித்தபடி பதிலளித்தார் ருக்மிணி.

“இவ உங்க பேத்தின்னு நேக்கு அடையாளமே தெரியலே..தெரிஞ்சிருந்தா உடனே உங்களைப் பார்க்க வந்திருப்பேன்..பவிக்கு உங்களை அடையாளம் தெரிஞ்சிருக்கு அதான் ஆத்துக்கே அழைச்சிண்டு வந்துட்டா..உள்ளே வாங்கோ..எல்லாரும் வாங்கோ..

நான் சென்னைக்கு வந்து ஆறு மாசம் ஆகறது.. இங்கே ஒரு ஸ்கூல்லே பவிக்கு வேலை கிடைச்சுது அதான் திருச்சிலேர்ந்து இங்கே குடி வந்திட்டோம்..இப்ப மறுபடியும் அங்கேயே போயிடுவோம்னு நினைக்கறேன்..பவிக்கு கல்யாணம் பேசிண்டு இருக்கேன்..மாப்பிள்ளை திருச்சி தான்.” என்று சந்தோஷமாக, மூச்சு எடுக்காமல் பேசிக் கொண்டே  அனைவரையும் வீட்டினுள் அழைத்து சென்றார் சுகந்தி.

சுகந்தி பேசியதைக் கேட்டவுடன், வீட்டினுள் சோஃபாவை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த பவியின் கண்களும் வீட்டிற்குள் நுழைந்த ருக்மிணியின் கண்களும் சந்தித்து கொண்டன. 

கீதுவும் அவள் கணவரும் அமைதியாக இருக்க, பாலகிருஷ்ணன் சங்கடமாக உணர்ந்தார். ஜெய்க்கு உற்சாகம் வடிந்து போனது. ஆனால் அதை வெளிக்காட்டாமல் பவியின் முகபாவத்தை ஆராய்ந்து கொண்டிருந்தான்.  ருக்மிணி மட்டும் அதிர்ச்சியடையாமல் சாதாரணமாக இருந்தார். 

“வாங்கோ மாமா..உட்காருங்கோ..எல்லாரும் உடகாருங்கோ..கீது, ஜெய் உங்க இரண்டு பேரையும் பார்த்து எத்தனை வருஷமாயிடுத்து..கீது நீ ருக்கு மாமி போலவே இருக்க..ஜெய் நீ அதே மாதிரி இருக்க ஆனா ரொம்ப ஒல்லியா போயிட்ட..குழந்தைகள் நீங்கெல்லாம் தான் மாறிப் போயிட்டேள், பெரியவாளாயிட்டேள்..பவியும் கொஞ்சம் மாறி இருக்கா..தீபக் நிறைய மாறிட்டான்..மாமாவும் மாமியும் அப்படியே தான் இருக்கா..நானும் அப்படியே தான் இருக்கேன்.” என்று சுகந்தி மறுபடியும் விடாமல் பேச, அதை இடைமறித்து,

“சுகந்தி..முதல்லே எங்களுக்கு குடிக்க கொஞ்சம் ஜலம் கொண்டு வா..அப்புறம் நான் சொல்றதை நீ நிதானமாக் கேட்டுகோ..அதுக்கு அப்புறம் நீ என்ன சொல்றேயோ அதை நாங்க கேட்டுக்கறோம்.” என்று கண்டிப்பானக் குரலில் பேசினார் ருக்மிணி.

அவர் ஏதோ முக்கியமான விஷயம் பேசப் போகிறார் என்று புரிந்து கொண்ட சுகந்தி தண்ணீர் எடுத்து வர கிட்சனிற்கு செல்ல, பவியிடம்,”ஸமிக்‌ஷாக்கு ஏதாவது புஸ்தகத்தை கொடுத்து உன் பெட்ரூம்லே அவளை உட்காத்தி வை.” என்று கட்டளையிட்டார் ருக்மிணி.  

உடனே, வரவேற்பறையிலிருந்த புத்தக அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து ஸமிக்‌ஷாவிடம் கொடுத்து அவளைப் படுக்கையறைக்கு அழைத்துச் சென்றாள் பவி.  படுக்கையறைலிருந்து பவி திரும்பி வந்த போது சுகந்தியும் தண்ணீருடன் திரும்பியிருந்தார்.   அவர்கள் அனைவரும் தண்ணீர் அருந்திய பின்,

“சுகந்தி..உன்கிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசணும் அதான் இத்தனை இராத்திரிலே என் பொண்ணு, மாப்பிள்ளையோட வந்திருக்கேன்..

எங்காத்து மாமாவைப் பற்றி, என்னைப் பற்றி, சின்ன வயசு ஜெய்யைப் பற்றி நோக்கு முன்னாடியே தெரியும்..ஆனா இப்ப இருக்கற ஜெய்யைப் பற்றி எதுவும் தெரியாது அதான் அவனையும் எங்ககூட அழைச்சிண்டு வந்திருக்கேன்..

ஆறு வருஷம் முன்னாடி அமெரிக்காவுக்குப் படிக்க போனவன், படிப்பு முடிஞ்சவுடனே அங்கேயே வேலை பார்த்திண்டு இருந்தான்..இப்பதான் மூணு மாசமா சென்னைலே எங்களோடவே இருக்கான்..நன்னா படிச்சிருக்கான் ஆனா இப்போதைக்கு ஒரு வேலைலே இல்லை..அவன் படிப்புக்கும் அனுபவத்துக்கும் ஈஸியா வேலை கிடைச்சிடும்..இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னு நீ யோசிக்கற..காரணமிருக்கு..

எங்க எல்லாருக்கும் பவியைப் பிடிச்சிருக்கு..முக்கியமா என் புள்ளைக்குப் பவியைப் பிடிச்சிருக்கு..அதனாலே பவியை ஜெய்க்குக் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படறேன்..  இன்னைக்கு கார்த்திகை மாசத்தோட கடைசி முகூர்த்த நாள்ன்னு சம்மந்தம் பேச உங்காத்துக்கு வந்திருக்கேன்..எங்களோட ஆசையை நான் சொல்லிட்டேன் இனி உன்னோட இஷ்டம் என்னென்னு நீ சொல்லு நாங்க கேட்டுக்கறோம்.” என்று கல்யாண விஷயத்தைக் குழப்பமில்லாமல் பேசி முடித்தார் ருக்மிணி.

ருக்மிணி பேசி முடித்தவுடன் அந்த அறையில் ஏற்பட்ட அமைதியே அங்கே இருந்த அனைவரின் அமைதியற்ற மனநிலையை எடுத்துக் காட்டியது. சில நிமிடங்கள் கழித்து அந்த அமைதியை உடைத்தார் சுகந்தி.

“நேக்கு என்ன சொல்றதுன்னே தெரியலே மாமி..எங்காத்துக்கு மாப்பிள்ளையா ஜெய் வர நான் கொடுத்து வைச்சிருக்கணும்…அவர் போன அப்புறம் எங்கண்ணா தான் எனக்கும் என் குழந்தைகளுக்கும் எல்லாமா இருக்கான் அதனாலே அவனைக் கேட்காம நான் பவிக்கு கல்யாணம் பேச முடியாது மாமி..அதுவும் இப்பதான் அவன் சொன்ன இடத்துக்கு நான் சம்மதம் சொன்னேன் அதை வேண்டாம்னு நான் எப்படி சொல்லுவேன் மாமி.”என்று கேட்டார் சுகந்தி.

அந்தச் சங்கடமான கேள்வியை ருக்மிணி சரியாக கையாளுவதில் தான் அவர்கள் வந்த காரியத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது என்று அமர்ந்திருந்த அனைவரும் அறிந்திருந்ததால் அவர்களைப் பதற்றம் தொற்றிக் கொள்ள, ருக்மிணியோ சிறிதும் பதற்றப்படாமல்,

“இங்கே பாரு சுகந்தி..குழந்தைகள் விருப்பப்படற வாழ்க்கையை அமைச்சு கொடுக்கற வாய்ப்பு எல்லாப் பெத்தவாளுக்கும் அமையறதில்லே..நேக்கு அந்த மாதிரி ஒரு வாய்ப்பை பகவான் ஏற்படுத்தி கொடுத்திருக்கர்..ஜெய் விருப்பத்தை நிறைவேற்ற நான் விருப்பப்படறேன்..நோக்கும் அந்த மாதிரி வாய்ப்பு திருச்சி வரன் மூலம் தான் அமையறதுன்னா தாராளாம பவியை அந்த மாப்பிள்ளைக்கே கல்யாணம் பண்ணிக் கொடு.” என்றார்.

பவிக்கு ஜெய் மீதிருந்த விருப்பத்தை அறிந்திருந்தும் அதை வெளிப்படையாக சுகந்தியிடம் வெளிப்படுத்தாமல் அவராகவே அதை உணரும் விதத்தில் சாதுர்யமாக ருக்மிணி பேசியது அறையில் இருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

ருக்மிணி சொன்னதைக் கேட்ட பின் தான் அவர் செய்யவிருந்த செயலின் வீர்யம் சுகந்திக்கு உறைத்தது.  பவியின் மறுப்பைப் பொருட்படுத்தாமல் வீம்பிற்காக அவள் வாழ்க்கையைப் பாழ் செய்ய நினைத்தது எத்தனை பெரிய தவறு என்று மனம் வருந்தியவர், பவியின் மீது பார்வையை திருப்ப, பவியோ அலைபாய்ந்து கொண்டிருந்த அவளது மனதை அடக்கி அமைதியாக அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

அத்தனை களேபரத்தில், அமைதியாக, எந்த பாதிப்பையும் வெளிக்காட்டாமல், நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மகளின் செய்கை சுகந்தியைச் சிந்தனையில் ஆழ்த்தியது.  

வரவேற்பறையில் அமர்ந்திருந்த அனைவரும் பட்டு வேஷ்டி, புடவையில் இருந்ததை முதன்முறையாக கவனித்தவர், அவர்களின் வருகை திட்டமிட்ட செயல் என்ற முடிவுக்கு வந்தார்.  அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்த பவிக்கு அவர்கள் வருகைக்கான காரணமும் தெரிந்திருக்க வேண்டும் என்று அவர் உணர்ந்த அந்த தருணத்தில் அவருடைய மகளின் மனத்தையும் உணர்ந்தார் சுகந்தி. பவியின் மனத்தை உணர்ந்த பின், அவருடைய கணவர் சுதர்ஷன் உயிரோடு இருந்திருந்தால் அந்த சூழ்நிலையில் என்ன செய்திருப்பாரோ அதை போல் செய்ய முடிவெடுத்தார்.

“அவளுக்கு விருப்பம் இருக்கலே மாமி..நான் தான் அவளைக் கட்டாயப்படுத்திண்டு இருந்தேன்..இப்ப அவ அமைதியா இருக்கறதே அவ விருப்பத்தை நேக்கு சொல்லிடுத்து..நான் எங்கண்ணாகிட்டே இதைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லிடறேன் மாமி..என் புள்ளைகிட்டேயும் ஒரு வார்த்தை கேட்டுக்கறேன்..அதுக்கு அப்புறம் நாம மேலே பேசலாம்.” என்று சொல்லி உடனேயே  திருச்சியிலிருந்த அண்ணணிடம் ஃபோன் மூலம் அனைத்தையும் பகிர்ந்து கொண்டார் சுகந்தி. 

அதற்குபின் தீபக்கிற்கு ஃபோன் செய்து, அங்கே நடப்பவற்றை அவனிடம் சொன்னவர், அவன் வேண்டுகோளின்படி ஃபோனை பவியிடம் கொடுத்தார்.  அந்தப் புறம் தீபக் என்ன கேட்டான் என்று அங்கிருந்தவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால், வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்து முதல்முறையாகப் புன்னகைத்த பவி “அமெரிக்கன் நின்ஜா டா” என்று தீபக்கிடம் கிசுகிசுத்தாள்.  

அதற்குள் அவர் கொண்டு வந்திருந்த பையிலிருந்து பூ, பழம், வெற்றிலை பாக்கு, சாக்லெட், பட்டுப் புடவை என்று சகலத்தையும் பித்தளைத் தாம்பாளத்தில் அடுக்கினார் ருக்மிணி.

அதைப் பார்த்து, ஆச்சரியமடைந்து,“மாமி..எல்லா ஏற்பாடோட தான் எங்காத்து வந்திருக்கேள்.” என்றார்.

நிச்சயதார்த்தம் முடிந்த கதையாகி போனதால்,“தை பொறந்து முதல் முகூர்த்தத்திலே கல்யாணத்தை வைச்சுக்கலாம்.” என்று அடுத்த கட்டமாக கல்யாணத்தை திட்டமிட ஆரம்பித்தார் ருக்மிணி.

“மாமி..ஒரு மாசத்திலேயா?”

“நடுவுலே மார்கழி வந்துடுத்து..இல்லேன்னா அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை வைச்சிருப்பேன்.”

“மாமி..எங்கண்ணாவை வரச் சொல்லியிருக்கேன் அவன் வந்த அப்புறம் மற்ற விஷயம் பேசலாம்..தை பொறந்து தாம்பூலம் மாத்திக்கலாம்.” என்றார் சுகந்தி.

“நேக்கு இதுக்கு மேலே தாங்காது டீ மா..இப்பவே நீ தாம்பாளத்தை வாங்கிக்கோ.” என்றார் ருக்மிணி.

“மாமி..நான் எப்படி?” என்று தயக்கத்துடன் சுகந்தி கேட்க,

“கீது..நீயும் மாப்பிள்ளையும் மாமி சார்பா தாம்பாளத்தை வாங்கிண்டு பவியை அந்தப் புடவையைக் கட்டி அழைச்சிண்டு வா..அதுக்கு அப்புறம் அவளும், ஜெய்யும் சேர்ந்து சாமிக்கு நமஸ்காரம் பண்ணட்டும்.” என்றார் ருக்மிணி.

புடவை கட்டிக் கொள்ள பவி படுக்கையறைக்குள் நுழைந்தவுடன், அவள் படித்துக் கொண்டிருந்த புத்தகத்துடன் வரவேற்பறை சோபாவிற்கு இடம் பெயர்ந்தாள் ஸமிக்‌ஷா.

நிச்சயதார்த்தப் பட்டுப் புடவையிலிருந்த ஷாம்பவியும் பட்டு வேஷ்டியிலிருந்த ஜெய்யும் சேர்ந்து முதலில் சாமியிடத்திலும் பின் அங்கே இருந்த பெரியவர்களுக்கும் நமஸ்காரம் செய்தனர். அதைப் பார்த்து கொண்டிருந்த ஸமிக்‌ஷா,

“வாட்ஸ் ஹப்பனிங்?” என்று கீதுவிடம் கேட்டாள்.

“ஜெய் மாமாக்கு பவி மாமியோட கல்யாணமாக போகறது.” என்றாள் கீது.

“ரியலி..எப்ப?”

“நெக்ஸ்ட் மந்த்.” என்றார் ருக்மிணி.

“மாமி..அத்தனை சீக்கிரமா என்னாலே முடியவே முடியாது..கல்யாணத்துக்கு எல்லாம் ஏற்பாடும் செய்யறதுக்கு எங்கண்ணா திருச்சிலேர்ந்து வரணும்..தீபக் பெங்களூர்லேர்ந்து வரணும்.” என்று மறுப்புத் தெரிவித்தார் சுகந்தி.

“அவா இரண்டு பேரும் வந்தா மட்டும் போதும்..எல்லாம் ஏற்பாடும் பண்றத்துக்கு நாங்க இருக்கோம்..பொழைச்சுக் கடந்து சாஸ்திரிகள்கிட்டே பேசி முகூர்த்த நாளை குறிக்கப் போறேன்..இந்தா என் மாட்டுப் பொண்ணு பண்ணின இந்த சாக்லெட்டை சாப்பிடு..நல்லபடியா நிச்சயதார்த்தம் நடந்தாச்சு.” என்று சுகந்திக்கு சாக்லெட் கொடுத்து, பவியை அஃபிஷியலாக மாட்டுப் பொண்ணாக்கி கொண்டார் ருக்மிணி.

“அது எப்படி மாமி..பவிக்குன்னு செய்யவேண்டியதைப் பற்றி நாம பேசவே இல்லையே.” என்று மறுபடியும் சுகந்தி ஆரம்பிக்க,

“நீ ஒண்ணும் செய்ய வேண்டாம்..பகவான் எங்களுக்கு எல்லாம் நிறையவே கொடுத்திருக்கர்..ஜெய்யும் நிறைய சம்பாதிச்சு வைச்சிருக்கான்..எல்லாம் பவியோடதுதான்..அவ மட்டும் எங்காத்துக்கு வந்தா போதும்..எதுவும் கொண்டு வர வேண்டாம்.” என்று கண்டிப்பாகப் பேசினார்  ருக்மிணி.

அதற்கு சுகந்தி பதில் சொல்லுமுன்,

“நோ..நான் ஒத்துக்க மாட்டேன்….ஐ இன்ஸ்பயர்னு மாமி தானே என் கேக்லே ஸ்பெஷல் மெஸெஜ் எழுதியிருந்தா..அதனாலே பாட்டி ஆத்துக்கு பவி மாமி  வர்றச்சே இங்க இருக்கற எல்லாப் புக்ஸையும் எடுத்திண்டு வரணும் அப்பதான் நேக்கு பாட்டி ஆத்துலே போர் அடிக்காம இருக்கும்…அப்படி தானே மாமா.” என்று ஜெய்யிடம் கேட்டாள் ஸமிக்‌ஷா.

“கரெக்ட்..உன் மாமி அவளோட புக்ஸோட நம்மாத்துக்கு வந்தா போதும்.” என்று முதல்முறையாக அவன் வாயைத் திறந்தான் ஜெய்.

“புக்ஸ் மட்டும் போதுமா நோக்கு..பவி மாமியோட சாக்லெட் வேண்டாமா? என்று ருக்மிணி கேட்க,

“பவி மாமி உங்க வெட்டிங்க்கு நீங்க நிறையே சாக்லெட்டும் பண்ணிக் கொண்டு வாங்கோ.” என்றாள் ஸமிக்‌ஷா.

அதைக் கேட்டு அங்கே இருந்தவர்கள் சிரிக்க, அந்த இரவு பொழுது அவர்கள் அனைவரும் எதிர்பார்க்காத விதத்தில் இனிமையாக முடிந்தது.

நிச்சயதார்த்தத்தை நல்லவிதமாக நடத்தி முடித்த நிம்மதியில் உறங்குவதற்காக ஏற்பாடு செய்து கொண்டிருந்தவரைப் பின்னாலிருந்து இறுக்கமாக அணைத்து செல்லம் கொண்டாடிக் கொண்டிருந்த ஜெய்யிடம்,”டேய்…நீ வாயைத் திறக்காம இருந்தது பெரிய விஷயம்..தாங்க்ஸ் ஃபார் ஒப்லைஜிங் (obliging).” என்றார் ருக்மிணி.

”சுகந்தி மாமி ஆத்துலே யு வேர் மைண்ட் ப்ளோயிங் (mind blowing).” என்று சொல்லி அவர் கன்னத்தில் முத்தமிட்டான் ஜெய்.

“டேய்.. நான் மினி டார்லிங்…நாட் பவி டார்லிங்.” என்று குறும்பாகச் சொன்னார் ருக்மிணி.