மழை லேசாகத் தூறிக் கொண்டிருக்க, அதை உணராமல், அந்தப் பூங்காவில் இருந்த இருவருமே மற்றொருவரின் அருகாமையை உண்மையா? என்று அலசி, ஆராய்ந்து, சகல செல்களாலும் அதைச் சார்ந்த உணர்வுகளாலும் உணர முயற்சி செய்து கொண்டிருந்தனர்.
அவள் முகத்தைக் கைகளால் மூடி அமர்ந்திருந்த பவியின் எதிரில் கால்களை அகட்டி, கைகளைப் பேக்கெட்டில் விட்டபடி நின்று கொண்டிருந்த ஜெய், அவளாக தலை நிமிர்ந்து அவனைப் பார்க்கும் வரை சலிக்காமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
படபடத்துக் கொண்டிருந்த அவளது மனத்தை சமநிலைக்குக் கொண்டு வர பாடுபட்டுக் கொண்டிருந்த பவிக்கு அந்தப் படபடபிற்குக் காரணமானவன் அமைதியாக நின்று கொண்டிருந்தது அவளுள் கோபத்தை ஏற்படுத்தியது. அதில் அதுவரை அவளிருந்த மனநிலை மாறி பத்து வருடத்திற்கு முன்பிருந்த ஷாம்பவி ஆனாள்.
மெதுவாக அவள் கைகளை அகற்றி, அவளெதிரே நின்று கொண்டிருந்தவனை நிதானமாக பார்த்த பவி,”நான் ஸேம் ஷாம்பவி..நீ வேற ஜெய்.” என்றாள்.
அவள் பதிலில் புன்னகைத்த ஜெய்,“யெஸ்..இந்த ஜெய் கொஞ்சம் ஃபாஸ்ட்.” என்றான்.
“எங்காத்துலே எங்கம்மா மட்டும் தான் இருக்கா.” என்று அப்பாவியாக பதில் சொன்னாள் பவி.
“கமான் பவி..நான் சொன்ன எங்காம் இனி உன்னோட ஆம் தானே.” என்று சலித்துக் கொண்டான் ஜெய்.
“ஜெய்..நீ கேட்டதுக்கு நான் “யெஸ்” சொல்லலே.” என்றாள் பவி.
“வொய்..ஆர் யு மரீட், கமிடட், விடோட், டிவொர்ஸ்ட்?” என்று பொறுமையிழந்து கேட்டான் ஜெய்.
அவனுக்கு பதில் சொல்லாமல் அவனை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் பவி.
அவளுடைய பதிலிற்காக காத்திருந்தவன், சில நொடிகள் கழித்து,
“ஐயாம் வெயிட்டீங்.” என்றான்.
அதற்கு,“நீ லேட் ஜெய்.” என்றாள் பவி.
“நோ..நாம இரண்டு பேரும் இப்ப, இங்கே கரெக்டா மீட் பண்ணியிருக்கோம்.” என்று பவியின் கூற்றை மறுத்தது ஜெய்யின் AI.
“எங்கம்மா நேக்குத் திருச்சிலே மாப்பிள்ளை பார்த்திருக்கா…என் கல்யாண விஷயத்துலே என்னோட பிடித்தத்தை எங்கம்மா கேட்கப் போகறதில்லை.” என்று பவி பதில் அளித்த அந்த க்ஷணத்தில், அவனைப் பிடித்திருக்கிறது என்று அவள் அம்மாவிடம் பவி சொல்ல போவதில்லை என்று உணர்ந்த ஜெய்யின் AI, அவர்கள் இருவரையும் இணைக்ககூடியஅத்தனை சாத்தியக்கூறுகளையும் அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தது.
“எழுந்துக்கோ..மழை ஜாஸ்தியாகறத்துக்கு முன்னாடி நான் ஆத்துக்குப் போகணும் இல்லை மினி மாமி என்னைத் தேடிண்டு வந்துடுவா.” என்றான் ஜெய்.
“அவ்வளவு தானா? என்னைப் பார்த்த அப்பறம், உன்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு நான் சொன்ன அப்புறமும் எதுவுமே நடக்காத மாதிரி அப்படியே உங்காத்துக்கு கிளம்பிப் போயிடுவியா?” என்று கோபப்பட்டான் ஜெய்.
“உன்னைக் கண்ணாலாப் பார்க்கணும்னு நினைச்சேன்..பார்த்துட்டேன்..அது போதும் நேக்கு.” என்றாள் பவி.
“நேக்கு அது போதாது..இப்போ நான் மட்டும் எங்காத்துக்கு போகலே நீயும் என்னோட எங்காத்துக்கு வர்ற.”என்று சொல்லி பவியின் கையைப் பிடித்து அவளை எழுப்பினான் ஜெய்.
“நோ..நான் உன்னோட எங்கேயும் வர மாட்டேன்.” என்று பதில் சொன்ன பவியின் குரல் தோய்ந்திருந்தது.
பவியின் கைகளைப் பற்றி, அவள் கண்களைப் பார்த்து,”உன் கல்யாண விஷயத்திலே உன்னோட பிடித்தத்தை உங்கம்மா கேட்காம இருக்கலாம் ஆனா என்னோட கல்யாண விஷயத்திலே எங்கம்மா என் பிடித்தத்தைதான் கேட்பா..பவிக்கு ஜெய் போலே சுகந்தி மாமிக்கு மினி மாமிதான் ரைட் சாய்ஸ்..ட்ரஸ்ட் மீ.” என்று பவிக்கு புரிய வைக்க முயன்றான் ஜெய்.
ஜெய்யின் ‘ட்ரஸ்ட் மீ’யில் முழுவதுமாக கரைந்து போன பவி அதற்கு மேல் அவனுடன் வாதிடாமல்,தலையசைவில் அவளது சம்மதத்தை தெரிவித்தாள். மழைத் தூறலில் நனைந்தபடி அவர்கள் இருவரும் ஜெய்யின் ஃபிளாட்டை சென்றடைந்தனர்.வாசல் கதவு திறந்தே இருக்க, உள்ளே ருக்மிணி புலம்பிக் கொண்டிருந்தது வெளியே இருந்த பவிக்குத் தெளிவாகக் கேட்டது.
“அவ்வளவு அர்ஜெண்டா எங்கே போனானோ..எதுக்கு போனானோ?..கொஞ்ச நாழிலே அவன் வரலே நானே போய்ப் பார்க்கப் போறேன்..அப்பாவும் புள்ளையும் ஒண்ணுத்தையும் வாய்விட்டுச் சொல்லாம என்னை இப்படியே படுத்தி எடுங்கோ.” என்று அவர் சொல்லி முடிக்கவில்லை, அப்போது,
“அம்மா.” என்று வாசலிருந்து அழைத்தான் ஜெய்.
அவன் குரலைக் கேட்டு வரவேற்பறையில் இருந்த அனைவரும் வாயில் புறம் திரும்பிப் பார்த்தனர்.வாசலில் ஜெய் மட்டும் நின்று கொண்டிருக்க அவனருகே சுவரையொட்டி நின்று கொண்டிருந்த பவி யார் கண்ணிலும் படவில்லை.
“சின்ன குழந்தையாடா நீ….நேத்திலேர்ந்து விடாம தூறிண்டிருக்கற மழைலே நீயும் விடாம நனைஞ்சிண்டிருக்க..எதுக்கு டா இப்படி ஈர டிரெஸ்லே வாசல்லே நின்னுண்டு இருக்க..உள்ள வாயேன் டா.” என்றார் ருக்மிணி.
வீட்டினுள் வராமல் வாசலில் புன்சிரிப்புடன் நின்று கொண்டிருந்த ஜெய் அவரை மேலும் எரிச்சல்படுத்த,
“ஆர்த்தி எடுத்து உன்னை ஆத்து உள்ள அழைக்க இன்னைக்கு ஆவணி அவிட்டமா டா? வா டா உள்ள.” என்று சத்தம் போட்டார்.
அவரது கோபத்தைப் பொருட்படுத்தாமல்,“ஆவணி அவிட்டமா இருந்தாதான் ஆர்த்தி எடுப்பியா? ஆத்துக்காரியோட வந்தா ஆர்த்தி கிடையாதா?” என்று குறும்பாக ஜெய் கேட்க,
அவன் சொன்னது புரியாமல், வாசல் கதவருகில் வந்த ருக்மிணி, அதன் சுவரையொட்டி நின்று கொண்டிருந்த பவியைப் பார்த்து, அதிர்ச்சியாகி,“பகவானே” என்று கூச்சலிட்டார்.
“நோ.. நோ..ஸே பவி..ஷாம்பவி.” என்று சொன்ன ஜெய் பவியின் கையைப் பற்றி அவளை வீட்டிற்குள் அழைத்து வர, அப்போது, ருக்மிணியின் கூச்சலைக் கேட்டு, அறைக்குள் உடை மாற்றி கொண்டிருந்த ஸமிக்ஷா, ஷிம்மியில் வெளியே ஓடி வர, அங்கே அவளுடைய மாமாவுடன் நின்று கொண்டிருந்த ஷாம்பவியைப் பார்த்து,”பாட்டி, இந்த ஆன்ட்டி தான் பர்த்டே கேக் பண்ணி கொடுத்தா.” என்று அங்கே இருந்த அனைவருக்கும் பவியை அறிமுகப்படுத்தி வைத்தாள்.
அதைக் கேட்டவுடன் பாலகிருஷ்ணனிற்கும் ருக்மிணிக்கும் பவிதான் நிவேதிதாவின் டீச்சர் என்று புரிந்து போனது. அதே போல் பவிக்கும் ஸமிக்ஷாவைப் பார்த்தவுடன் அவள் வந்திருப்பது நிவேதிதாவின் அடுத்த வீடு, அமெரிக்கன் நின்ஜாவின் வீடு என்று புரிந்து போனது.
அவரெதிரில் நின்றிருந்த பவியை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்த ருக்மிணி,”பவி..புடவைலே உன்னை சட்டுன்னு அடையாளம் தெரிலே.. ஆனா கிட்டே வந்து பார்த்த போது நீதான்னு கன்ஃபர்ம் ஆயிடுத்து..வா உள்ள வா.” என்று அவளின் மற்றொரு கையைப் பிடித்து சோஃபாவில் அமர வைத்தார்.
பவியின் அருகில் ருக்மிணியும் அமர்ந்து கொள்ள, அவர் காலடியில் அமர்ந்த ஜெய்,”நான் உன்கிட்டே பவியைப் பற்றி எதையும் சொல்லவே மாட்டேங்கறேன்னு நீ மனசு கஷ்டப்பட்ட இல்லே..அதான் அவ என் கண்ணுலே பட்டவுடனே நம்மாத்துக்கு அழைச்சிண்டு வந்துட்டேன்..இனி எல்லாம் உன்னோட பொறுப்பு.” என்றான்.
ஜெய் சொன்னது புரியாமல்,“என்ன டா சொல்ற?” என்று கேட்க,
“என் கல்யாண விஷயத்திலே நேக்குப் பிடிச்சதை தான் நீ செய்வேன்னு இவகிட்டே நான் சொல்லியிருக்கேன்.”
“அதுக்கு தான் பகவான்கிட்டே விடாம பிரார்த்தனை பண்ணிண்டு இருந்தேன் டா.” என்றார் ருக்மிணி.
“அதனால் தான் அவளை நேரே இங்கே அழைச்சிண்டு வந்தேன்..இனிமேதான் அவாத்துக்குப் போகணும்.” என்றான் ஜெய்.
இப்போது அவன் சொன்னதை சட்டென்று புரிந்து கொண்ட ருக்மிணி, ஒரு முடிவிற்கு வந்து,
“கூடுகட்டி..உன் பர்த்டே ஸ்பெஷல் டேயாயிடுத்து..நீ போய் கிடுகிடுன்னு திரும்ப பட்டு பாவாடையைப் போட்டிண்டு வா…லேட்டாக்காத.” என்று ஷிம்மியில் அங்கே நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ஸமிக்ஷாவிற்கு ஆர்டர் போட்டார்.
அதுவரை அனைத்தையும் மௌனமாக பார்த்துக் கொண்டிருந்த பாலகிருஷ்ணன், பவியிடம்,”அம்மா சௌக்கியமா பவி?” என்று விசாரித்தார்.
அதற்கு பவி பதில் சொல்லுமுன்,”அவகிட்டே என்ன கேள்வி..இப்ப கொஞ்ச நாழிலே சுகந்தியை நேர்லே பார்க்கற போது தெரிஞ்சுடும்.” என்று சொன்னவர் அதே கதியில் கீதுவின் கணவரிடம்,
“மாப்பிள்ளை, இவ ஷாம்பவி..ஜெய் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்ட பொண்ணு..இன்னைக்கு கார்த்திகை மாசத்தோட கடைசி முகூர்த்த நாள்..ஜெய்க்கும் இவளுக்கும் கல்யாணம் நிச்சயம் பண்ணிடலாம்னு நினைக்கறேன்..இவளோட ஆம் “D” பிளாக்லேதான் இருக்கு..இந்த ஆத்து மாப்பிள்ளையா ஜெய்க்கு கல்யாணம் பேசி முடிக்க நீங்களும் எங்களோட வரணும்.” என்று அழைப்பு விடுத்தார்.
அடுத்து கீதுவிடம்,”ஒரு பைலே பூ, பழம், வெத்தலைப் பாக்கு, பீரோலேர்ந்து தீபாவளிக்கு வாங்கின புதுப் பட்டுப் புடவை , இவ பண்ணின சாக்லெட் எல்லாத்தையும் எடுத்து வை..அதோட பெரிய பிராஸ் பூஜா தாலி..தாம்பாளத்தையும் வை..என்ன பவி நான் சொன்னது கரெக்ட்டா..பிராஸ் தாலி தானே.” என்று பவியிடம் புன்சிரிப்புடன் கேட்டார் ருக்மிணி.
ருக்மிணியின் அதிரடி திட்டத்தை கேட்டு அதிர்ச்சியான பாலகிருஷ்ணன்,”ருக்கூ அவசரப்படாத.”என்று எச்சரிக்கை செய்தார்.
பாலகிருஷ்ணனின் எச்சரிக்கையைக் கேட்டு பவியின் முகம் வாடிப் போனது. அவளை மாட்டு பொண்ணாக ஏற்க பாலகிருஷ்ணனிற்கு விருப்பமில்லையோ என்று சஞ்சலமடைந்தாள் பவி. பவியின் முக வாட்டத்தைக் கண்டு கொண்ட ருக்மிணி,
“இங்கே பாருங்கோ பவிக்கும் ஜெய்யைப் பிடிச்சிருக்கு..அதான் ஜெய் கையைப் பிடிச்சிண்டு நம்மாத்துக்கு வந்திருக்கா..அது ஒண்ணுதான் நேக்குத் தெரிய வேண்டியிருந்தது..பாக்கி எல்லாம் தேவையில்லாத விஷயம்..
மாப்பிள்ளையோட அப்பாவா, சம்மந்தியா லட்சணமா நம்ம சம்மந்தியைப் பார்க்க வேற டிரெஸ் மாத்திண்டு வாங்கோ இல்லை நீங்க ஆத்துலேயே உட்கார்ந்திண்டு அவசரத்தைப் பற்றி ஆராய்ச்சி பண்ணிண்டு இருங்கோ..நான் நம்மாத்து மாப்பிள்ளையை அழைச்சிண்டு போய் சுகந்தியை என் சம்மந்தி ஆக்கிக்கறேன்.” என்றார்.
“நான் அவசரப்படாதேன்னு சொன்னது எதுக்குன்னு நோக்குப் புரியலேயா ருக்கூ? எந்த முடிவும் நம்ம கைலே மட்டும் கிடையாது”
அடுத்த பத்து நிமிடங்களில் அந்த வீட்டிலிருந்த அனைவரும் பட்டுப் புடவைக்கும் பட்டு வேஷ்டிக்கும் மாற, நடப்பதை நம்ப முடியாமல் பார்த்து கொண்டிருந்த பவியின் அருகில் வந்த ருக்மிணி,”நம்மாத்து பூஜை ரூம்லே நமஸ்காரம் பண்ணிட்டூ உங்காத்துக்கு கிளம்பலாம்.” என்றார்.
ருக்குமிணியுடன் சேர்ந்து அந்த வீட்டு பூஜையறையில் இருந்த பகவான்களுக்கு பவி நமஸ்காரம் செய்த போது அவளது மனபாரம் சற்று குறைந்திருந்தது. பவியோடு சேர்ந்து நமஸ்கரித்து கொண்டிருந்த ருக்மிணியின் மனதோ இறகு போல் லேசாக இருந்தது.
இப்படியொரு அதிசயத்தைப் பகவானால்தான் அரங்கேற்ற முடியும் என்று மனமுருகி அனைத்துக் கடவுள்களுக்கும் நன்றி சொல்லிக் கொண்டிருந்த ருக்மிணி,
“இன்னைக்கு சாயந்திரம் இதே இடத்திலே தான் பகவான்கிட்டே ஜெய்யோட விருப்பம் நிறைவேற வழி காட்டுணு வேண்டிண்டேன்..பத்து வருஷம் முன்னாடி விட்டுப் போன தொடர்பை எப்ப, எப்படி புதுப்பிக்கணும்னு அவருக்குத் தெரிஞ்சிருக்கு அதான் பக்கத்திலேயே இருந்த உன்னை இன்னைக்குதான் அவன் கண்ணுலே காட்டியிருக்கர்..என் வேண்டுதலைக் காது கொடுத்து கேட்டு நிறைவேத்தி வைச்ச அப்புறம் நான் அதைப் பற்றி கேள்வியோ சந்தேகமோ வைச்சுக்கூடாது..
அதனாலே இந்த ஆத்து மாட்டுப் பொண் நீதான்…இனி உங்கம்மாதான் அவ விருப்பத்தைச் சொல்லணும்…அதைதான் மாமா அவசரப்படாதேன்னு என்கிட்டே சொன்னர்..உன்னை வேண்டாம்னு அவர் சொல்லலே.” என்று பவியின் மனசஞ்சலத்தை நீக்கினார் ருக்மிணி.
ருக்மிணியின் கூற்றிலிருந்த உண்மையை உணர்ந்த பவிக்கு சுகந்தி என்ன சொல்ல போகிறார் என்று கவலையானது.
அவர்களிருவரும் பூஜையறையை விட்டு வெளியே வந்தவுடன் சோஃபாவில் அமர்ந்திருந்த ஸமிக்ஷா, பவியிடம் ஒரு பிளேட்டை நீட்ட, அதில் ஜெய் மிச்சம் வைத்த கேக் துண்டு இருந்தது.
“ஆன்ட்டி..நல்ல வேளை ஜெய் மாமா கொஞ்சுண்டு எடுத்திண்டா இல்லேன்னா என் பர்த்டே கேக்கை நீங்க டேஸ்ட் பண்ணியிருக்கவே முடியாது.” என்றாள்.
அந்த கேக் துண்டை வாயில் போட்டுக் கொண்ட பவி,”ஹாப்பி பர்த் டே ஆராதனா.” என்றாள்.
“உங்களுக்கு எப்படி அந்தப் பெயர் தெரியும்..அது நேக்கு ருக்கு பாட்டி வைச்ச பெயர்..அதை எங்க பாட்டி மாத்திட்டா.” என்றாள்.
“நோக்கு இந்தப் பெயர் தான் வைக்க போறான்னு உன் ருக்கு பாட்டி நீ பிறந்த போது சொல்லிண்டு இருந்தா.”
அவர்கள் பேச்சைக் கேட்டு கொண்டிருந்த ருக்மிணி, “மூணு பெயர்லே என்னோடது தான் லாஸ்ட் சாய்ஸ்..அதனாலே அந்தப் பெயரை யூஸ் பண்றதில்லை..நீயும் இனி இவளை ஸமிக்ஷான்னே கூப்பிடு..
வெளிலே மழை ஜாஸ்தியாயிடுத்து.. ஒரு குடையை எடுத்திண்டு இவளை அழைச்சிண்டு உங்காத்துக்கு நீபோயிண்டிரு நாங்க எல்லாரும் ஆத்தைப் பூட்டிண்டு உன் பின்னாடியே வரோம்.” என்று பவியை அவர்களுக்கு முன் கிளப்பினார் ருக்மிணி.
“பாட்டி, நீங்கெல்லாம் எப்படி வருவேள்? ஆன்ட்டியோட ஆம் எங்கே இருக்குண்ணு நோக்குத் தெரியாதே.” என்று கவலையுடன் கேட்டாள் ஸமிக்ஷா.
“கவலைப்படாதே கூடுகட்டி..வீடு கண்டுபிடிக்க முடியாட்டா அந்த பிளாக் வாசல்லே நிக்கறோம் நீ வந்து அழைச்சிண்டு போ.” என்றார் ருக்மிணி.
“மாமி..எங்காமும் பதினைஞ்சாவது மாடிதான்..லிஃப்டோட வலது புறத்திலே இரண்டாவது ஃபிளாட்..வாசல்லே சின்னதா கோலம் போட்டிருக்கும்.” என்று வீட்டின் அடையாளத்தை விவரித்தாள் பவி. ஸமிக்ஷாவைப் போல் பவியும் கவலைப்படுவதைப் பார்த்து ருக்மிணிக்கு சிரிப்பு வர, அதை அடக்கியபடி,
“நேக்கு வீடு கண்டுபிடிக்க முடியாட்டா அந்த ஃபளோர்லே இருக்கற அத்தனை ஃபிளாட் கதவையும் தட்டி விசாரிச்சிடுவேன்..கவலைப்படாத..நாங்க உடனே வந்திடறோம்.” என்றார்.
அதன்பின் ஒரு குடையை எடுத்துக் கொண்டு ஸமிக்ஷாவும் பவியும் மற்றவர்களுக்கு முன்னே புறப்பட்டனர்.