பர்த்டே பார்ட்டி ஆரம்பித்து அரைமணி நேரமாகியிருந்தது.அந்தப் பிளாக்கின் குழந்தைகளுக்கு நடுவில் பட்டுப் பாவாடை, தோடு, ஜிமிக்கி,வளையல் என்று வளைய வந்து கொண்டிருந்த பர்த் டே கேர்ள் ஸமிக்ஷாவிற்கும் சாதாரண நாட்களில் ஷார்ட்ஸில் சுற்றிக் கொண்டிருந்த ஸமிக்ஷாவிற்கும் சம்மந்தம் இல்லாமல் இருந்தது.
குழந்தைகளின் எண்ணிக்கையைச் சரி பார்த்து சந்தோஷமடைந்தவள்,“ருக்கு பாட்டி கேக் கொண்டு வந்து வைங்கோ.” என்று அவருக்கு ஆர்டர் போட்டாள்.
கீது, கீதுவின் கணவருடன் பால்கனியின் நின்று பேசிக் கொண்டிருந்த ஜெய்யிடம்,
“டேய் ஜெய்..ஃபிரிஜ்ஜிலிருந்து கேக்கை கொண்டு வந்து டேபிள் மேலே வை டா.” என்றார் ருக்மிணி.
வீட்டின் வரவேற்பறையின் அமைப்பு பார்ட்டிக்காக மாற்றப்பட்டிருந்தது.செண்டர் டேபிளைத் தவிர அங்கேயிருந்த சேர்களும் சோஃபாக்களும் ஒரம் கட்டப்பட்டிருந்தன.பலூன்களாலும் ஃபெஸ்டூன்களாலும் வரவேற்பறை அலங்கரிக்கப்பட்டிருந்தது.
ஃபிரிஜிலிருந்து கேக்கை எடுக்க வரவேற்பறைக்குள் ஜெய் நுழைந்த போது, மிஸஸ் ஸென்னும் வீட்டிற்குள் நுழைந்தார்.
“குட் ஈவினிங் ஆன்ட்டி..வாங்க.” என்று அவரை வரவேற்றான் ஜெய்.
“உன்னைப் பார்க்க முடியறதில்லை..சைக்கிள்லேயே குடியிருக்கேன்னு உங்கம்மா சொல்றாங்க.” என்றார்.
“வீக்கெண்ட் மட்டும்.” என்று சொல்லிப் புன்னகைத்தான் ஜெய்.
“ஜெய்..கேக்கை வெளியே எடுத்து வை.” என்று சமையலறையிலிருந்து மறுபடியும் குரல் கொடுத்தார் ருக்மிணி.
ஃபிரிஜ்ஜைத் திறந்து, கேக் அட்டைப் பெட்டியைக் கொண்டு வந்து சென்டர் டேபிளின் மீது வைத்தான் ஜெய்.
“மாமா, என்ன கேக்குன்னு பார்க்க நேக்கு ஆசையா இருக்கு..பினாக்கி அங்கிள் கொண்டு வந்தபோது திறந்து பார்க்கணும்னு சொன்னேன், பாட்டி கூடாதுன்னு சத்தம் போட்டா.” என்றாள் ஸமிக்ஷா.
அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு, அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட மிஸஸ் ஸென்,”உனக்குப் பிடிச்ச மாதிரி இருக்கும்..அப்படித் தான் நிவேதிதா டீச்சர் பினாக்கிகிட்டே சொன்னாங்க.” என்றார்.
அப்போது அங்கே வந்த ருக்மிணி,”பினாக்கியும் சுஷ்மிதாவும் இன்னும் வரலையே.” என்றார்.
“அவங்க கொஞ்சம் நேரம் கழிச்சு வருவாங்க..அவங்க பார்ட்டிக்கு வந்தா பிளாக்லே இருக்கற மற்ற பேரண்ட்ஸ்அவங்களைக் கூப்பிடலையேன்னு தப்பா நினைச்சுப்பாங்க அதனால் தான் என்னோட வரலே.” என்றார்.
“நீங்க சொல்றது கரெக்ட்..பர்த்டே பார்ட்டி குழந்தைகளுக்கு மட்டும் தான் ஆனா நீங்க பக்கத்திலே இருக்கறதுனாலே உங்களைக் குடும்பத்தோட வரச் சொன்னேன்..அதுவும் கேக், சாக்லெட் இரண்டும் உங்களாலே தானே.” என்றார் ருக்மிணி.
“பாட்டி..பேசினது போதும்..வா கேக் கட் பண்ணனும்.” என்றாள் பொறுமையைப் பறக்க விட்டு கொண்டிருந்த ஸமிக்ஷா.
“இருடீ வரேன்..உங்க தாத்தாவைக் காணுமே.” என்ற சொல்லி அறையைச் சுற்றிப் பார்வையை சுழல விட்டார் ருக்மிணி.
“பால்கனிலே காய்ஞ்சிண்டு இருந்த துணியை உள்ள ஸ்டாண்டுக்கு மாத்திண்டு இருக்கா ம்மா அப்பா..மழை வர்ற மாதிரி இருக்கே.” என்றாள் கீது.
“அண்ணா, வாங்கோ..அதை அப்புறம் பண்ணிக்கலாம்.” என்று குரல் கொடுத்தார் ருக்மிணி.
அவர்களது படுக்கையறையிலிருந்து உடனே வெளியே வந்த பாலகிருஷ்ணன்,”இன்னைக்குப் பார்ட்டிக்கு டெக்கரெட் பண்ணினதுலே டெய்லி வேலை நின்னுப் போயிடுத்து..அதான் இப்ப பண்ணிண்டு இருந்தேன்.” என்று விளக்கம் கொடுத்தார்.
“பாட்டி, தாத்தா..எங்கேயும் போகாதீங்கோ..இப்ப கேக் கட்டிங்.” என்று சொல்லி அவர்கள் இருவரையும் அவளருகே இழுத்து வைத்துக் கொண்டாள் ஸமிக்ஷா.
ருக்மிணியின் உதவியுடன் கேக் இருந்த அட்டைப் பெட்டியின் நான்கு புறத்தையும் ஸமிக்ஷா திறந்தவுடன், அதனுள்ளே, அவளுக்குப் பிடித்த ஸ்ட்ராபெர்ரி மற்றும் சாக்லெட் ஃபிளேவரில் ஒருபுத்தகத்தைப் போல் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பக்கமும் ஒரு ஃபிளேவரில், ஒரு நிறத்திலென்று பிரவுன், பிங்க் என்று மாறி மாறி இரண்டு நிறங்களில், லேயர்களில் திறந்த புத்தகத்தின் பக்கங்களைப் போல் உருவாக்கப்பட்டிருந்த அந்தக் கேக், பார்க்கவே பிரமாதமாக இருந்தது.
கேக்கின் மேல் பகுதியில், திறந்திருந்த அந்த ஸ்ட்ராபெர்ரிபக்கத்தில், சாக்லெட் ஸிரப்பினால் ஆங்கிலத்தில், ‘I nspire’ என்று எழுதியிருந்தது. முதல் எழுத்து ‘I’ பெரிய ஸைஸில் இருக்க அதை தொடர்ந்து சற்று இடைவெளி விட்டு சின்ன ஸைஸில் எழுதப்படிருந்தன மற்ற எழுத்துகள்.
“கேக்லே ஹாப்பி பர்த்டேன்னு எழுதாம ’இன்ஸ்பையர்னு’ எழுதியிருக்கே..ஏன் ?”என்று முக வாட்டத்துடன் கேட்டாள் ஸமிக்ஷா.அதற்கு என்ன பதில் சொல்வதென்று அங்கே இருந்த பெரியவர்கள் யாருக்குமே தெரியவில்லை.அவர்களுக்கும் அது புரியவில்லை. அதுவரை சந்தோஷமாக கேக்கை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஸமிக்ஷாவின் மகிழ்ச்சி வடிந்துப் போனது.அவளைச் சுற்றி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த மற்ற குழந்தைகளும் கேக்கைப் பார்த்தவுடன் அமைதியாயினர்.
சற்று தூரத்தில் நின்றபடி அந்தக் கேக்கையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த ஜெய்யின் மனது ‘கேப்பிட்டல் A2I2’ என்று பீப் (beep) செய்தது.அந்தக் கேக்கிலிருந்து பார்வையை அகற்றாமல் ஸமிக்ஷாவின் அருகே வந்தான் ஜெய்.
அவள் உயர்த்திற்கு குனிந்து கேக்கை உற்றுப் பார்த்தவன், தீவிரமானக் குரலில்,”இட்ஸ் எஸ்பெஷல் மெஸெஜ்.(Its a special message)” என்றான்.
“நேக்குப் புரியலேயே மாமா..என்னது அது?”
அந்த அறையில் இருந்த அனைவரும் ஜெய்யைப் பார்த்து கொண்டிருக்க, அமைதியாகக் கேக்கைப் பார்த்து கொண்டிருந்தான் அவன்.
“இந்தக் கேக் ஒரு திறந்த புத்தகம்..அதோட இந்தப் பக்கத்திலே..அதாவது உன்னோட பர்த்டே அன்னைக்கு புக்கிட்டேயிருந்து ஒரு ஸ்பெஷல் பர்த்டே மெஸெஜ்.. ஒரேயொரு ‘I’ யை உபயோகிச்சு..
‘Inspire’ ரோட முதல் எழுத்து ‘l’ யை வைச்சு ‘I inspire’ ந்னு புக்கே உன்கிட்டே பேசற மாதிரி எழுதியிருக்கா..’Inspire’ ல வர்ற அந்த ‘I’ புக்கையும் டினோட் பண்றது…புக்ஸ் ஆர் இன்ஸ்பிரெஷனல் (books are inspirational)..ஸோ நோக்கு புக்ஸ் ரொம்பப் பிடிக்கும்னு சொன்னதுனாலே இந்த மாதிரி மெஸெஜோட கேக் பண்ணி கொடுத்திருக்கா..விச் மீன்ஸ் நீ இன்ஸ்பெயர்ராக உங்கப்பாகிட்டே சொல்லி இன்னும் நிறைய புக்ஸ் வாங்கிப் படி.” என்று விளக்கினான் ஜெய்.
“ஹை..அப்பா நேக்கு இன்னும் நிறைய புக்ஸ் வாங்கித் தா” என்று உடனே அவளுடைய அப்பாவிற்கு ஆர்டர் போட்டாள் ஸமிக்ஷா.அதற்கு பின் பர்த்டே பார்ட்டி களை கட்டியது.குழந்தைகளின் ஆட்டமும் பாட்டமும் முடிவில்லாமல் நீண்டு கொண்டே போனது.இரண்டு மணி நேர்த்திற்குப் பின் பார்ட்டிக்கு வந்திருந்த குழந்தைகளுக்கு ரிடர்ன் கிஃப்ட் கொடுத்து அவர்களைக் கிளப்பினார் ருக்மிணி.
குழந்தைகள் வெளியேறிய பின் பால்கனியில் இருந்த சேரில் அமர்ந்துபினாக்கியுடன் பேசிக் கொண்டிருந்தான் ஜெய்.பாலகிருஷ்ணனும் கீதுவின் கணவரும் வரவேற்பறையை ஒழுங்குப்படுத்த,கீதுவும் சுஷ்மிதாவும் வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்து அளவளாவிக் கொண்டிருந்தனர்.டேபிளில் இறைந்து கிடந்த சாமான்களைச் சரி செய்து கொண்டிருந்தார் ருக்மிணி.
அதே டேபிளில் குழந்தைகள் இருவரும் ஸமிக்ஷாவிற்கு வந்திருந்த பரிசு பொருட்களை மிஸஸ் ஸெனின் மேற் பார்வையில் பிரித்துக் கொண்டிருந்தனர். அப்போது,
“ஜெய்,அந்த டீச்சருக்கு எத்தனை பணம் கொடுத்தான்னு பினாக்கிகிட்டேவிசாரிச்சு அவனுக்குக் கொடுத்திடு.” என்று குரல் கொடுத்தார் ருக்மிணி.
“எத்தனை பணம் கொடுத்தீங்க பர்த்டே கேக் அண்ட் சாக்லெட்டுக்கு?” என்று கேட்டபடி அவனின் பர்ஸைப் பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்தான் ஜெய்.
“அவங்க பணம் எதுவும் வாங்கிக்கலே.” என்று சொல்லி ஜெய்யை ஆச்சரியத்தில் ஆழ்த்தினான் பினாக்கி.
“ஏன்?”
“எனக்கும் ஆச்சரியம்தான்..இந்தக் காலத்திலே புக்ஸ் படிக்கற பழக்கம் இருக்கற குழந்தைகளைப் பார்க்கறதே ரேர்…ஸமிக்ஷாவோட அந்தப் பழக்கத்தை ஆதரிக்கணும் அதனாலே அவளோட பர்த்டேக்கு என்னோட கிஃப்ட்கேக், சாக்லெட்ஸுன்னு அவங்க சொன்னாங்க..அவங்களும் நிறைய புக்ஸ் படிக்கறாங்க..அவங்களோட அந்த சின்ன “D” பிளாக் ஃபிளாட்லே ஜாஸ்தி புக்ஸ் தான் இருந்திச்சு.” என்றான் பினாக்கி
கேக்கின் அட்டைப் பெட்டியை திறந்ததிலிருந்து அட்டைப் பூச்சி போல் அந்தக் கேக்கிலேயே ஒட்டிக் கொண்டிருந்த அவனது மனத்தை ஓய்வில்லாமல் ஆராய்ந்து கொண்டிருந்த அவனது AIயால் ஒரு முடிவிற்கு வர முடியவில்லை.
அப்போது லேசாக மழை தூற ஆரம்பிக்க,பினாக்கியும் ஜெய்யும் பால்கனியிலிருந்து வரவேற்பறைக்கு மாறினர்.
“என்ன டா? உள்ளே வந்துட்டேள்?” என்று கேட்டார் பாலகிருஷ்ணன்.
“லேசா மழை தூறர்து.” என்றான் ஜெய்.
அப்போது குழந்தைகள் இருவரும் ஓடிப் போய் பால்கனியில் நின்றனர்.
“நோ..உள்ள வாங்க.” என்று இருவரையும் சத்தம் போட்டார் ருக்மிணி.ஸமிக்ஷா உடனே உள்ளே வர, நிவேதிதா பால்கனியிலிருந்து வர மறுத்தாள்.
அவரது கையிலிருந்த சாக்லெட்டைக் காட்டி,”உன்னோட டீச்சர் பண்ணிக் கொடுத்த சாக்லெட் வேண்டாமா நோக்கு..சமத்தா உள்ள வந்துடு…நோக்கு நிறையே தர்றேன்.” என்று பேரம் பேசினார் ருக்மிணி.உடனே வீட்டிற்குள் ஓடி வந்த நிவேதிதா ருக்மிணி எதிர்பார்க்காததைச் செய்தாள்.அவர் கையிலிருந்த சாக்லெட்டைப் பறித்து, பிரித்த அடுத்த நொடியே அவளுடைய வாய்க்குள் போய் இருந்தது அந்த சாக்லெட்.
“நாட்டி.” என்று சொல்லி அவளிடம் அவளுக்காக பேக் செய்திருந்த கேக்கையும் சாக்லெட்டையும் கொடுத்தார் ருக்மிணி.அதன் பின் மிஸஸ் ஸென்னின் குடும்பம் விடைபெற்றுக் கொண்டது. டேபிளின் மீது கேக்கின் ஒரு சிறு பகுதி மிஞ்சியிருந்தது.