அத்தியாயம்-22-1

“ஜெய்..நீ கேக் சாப்பிடவே இல்லையே டா…கொஞ்சம் தான் மிஞ்சி இருக்கு..நீ எடுத்துக்கோ.” என்று சொல்லி, ஒரு பிளேட்டில் மீதமாகியிருந்த கேக்கை அவன் முன் கொண்டு வைத்தார் ருக்மிணி. அவன் முன் வைத்த அந்தக் கேக்கை உற்றுப் பார்த்து கொண்டிருந்த ஜெய்யை வினோதமாகப் பார்த்தனர் அனைவரும்.

“என்ன டா..எடுத்துச் சாப்பிடாம இத்துணுண்டு கேக்கை வேடிக்கை பார்த்திண்டு இருக்க..நன்னா பண்ணியிருக்கா டா..நோக்கு அவா பண்ற சாக்லெட் மட்டும் தான் பிடிக்கறதா? கேக் பிடிக்கலையா? போன தடவையும் நீ நிவியோட பர்த்டே கேக் சாப்பிடவே இல்லை..வெறும் சாக்லெட் தான் சாப்பிட்ட..இந்த தடவையாவது கேக்கை சாப்பிட்டுப் பார்.” என்றார் ருக்மிணி.

ருக்மிணி சொன்னது ஜெய்யின் காதில் விழுந்ததா என்று தெரியவில்லை.  ஒருவேளை அவனுக்கு கேக் பிடிக்கவில்லையோ என்று நினைத்தவர், ஒரு சாக்லெட்டை எடுத்து வந்து அவன் வாயில் போட எத்தனித்த போது,”நோ” என்று கத்தினான் ஜெய்.

அவனின் கடுமையான மறுப்பைக் கேட்டு ருக்மிணியின் கண்கள் நீர் கோத்தன. “குழந்தையோட பர்த்டேன்னு தான் நோக்கு சாக்லெட் தந்தேன்..அதையும் வேணாம்னு சொல்றே..ஏன் டா இப்படி இருக்க? என்ன டா ஆச்சு நோக்கு?” என்று பயத்துடன் கேட்டார்.

அவனைச் சுற்றி அவனது குடும்பம் கலவரத்துடன் இருப்பதைப் பார்த்து, அந்தத் தட்டிலிருந்த கேக்கின் சிறு பகுதியை எடுத்து வாயில் போட்டு கொண்ட ஜெய்யினுள் ஏற்பட்ட உணர்வு அவன் AIக்கு அப்பாற்பட்டிருந்தது.  சட்டென்று எழுந்து கொண்டவன்,

“அம்மா, நான் கொஞ்சம் நாழி வெளியே போயிட்டு வரேன்.” என்று சொல்ல,

”மழை பெய்யப் போகறது டா..ஏற்கனவே நேத்து நனைஞ்சு இருக்க.” என்ற ருக்மிணியின் கரிசனத்தைப் பொருட்படுத்தாமல் வீட்டை விட்டு வெளியேறினான். பதினைந்தாவது மாடியிலிருந்து படிக்கட்டுக்களில் பாய்ந்து இறங்கிய அந்த அமெரிக்கன் நின்ஜா அடுத்த சில நிமிடங்களில் கீழ் தளம் வந்து சேர்ந்திருந்தான்.

 அவன் பிளாக்கிலிருந்து வெளியே வந்த ஜெய், தூறல்களில் நனைந்தபடி, மெதுவாக நடந்து “D” பிளாக்கின் முன்னால் இருந்த பூங்காவை அடைந்தான்.  அந்த மழை இரவில் சுற்று சுவரின் மீது எரிந்து கொண்டிருந்த விளக்குகளின் வெளிச்சத்தில் வெறிச்சோடி தெரிந்த பூங்காவின் தனிமைதான் அவனுக்கு அப்போது தேவைப்பட்டது.  பூங்காவினுள் நுழைந்தவன் அதன் மறுகோடியில், பிளாக்கின் நுழைவாயிலைப் பார்த்தபடி இருந்த கல் இருக்கையில் அதன் ஈரத்தைப் பொருட்படுத்தாமல் அமர்ந்து கொண்டான்.  

“நன்னா நடந்துதா?” என்று ஃபோனில் விசாரித்துக் கொண்டிருந்தார் சுகந்தி.

படுக்கையறையின் பால்கனியிலிருந்து மழைத் தூறலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பவிக்கு, வரவேற்பறையில் அமர்ந்து, தீபக்குடன் ஃபோனில் பேசிக் கொண்டிருந்த சுகந்தியின் பேச்சு தெளிவாக காதில் விழுந்தது.

தீபக்குடன் பேசி முடித்தபின் படுக்கையறைக்கு வந்து கட்டிலின் மேல் அமர்ந்தபடி பால்கனியிலிருந்த பவியுடன் பேச ஆரம்பித்தார் சுகந்தி.

“கார்த்திகை மாசம் கடைசி முகூர்த்த நாள் இன்னைக்கு அதான் நிச்சயதார்த்தம் வைச்சிருக்கா..எல்லாம் நல்லபடியா நடந்துதாம்..மாப்பிள்ளை ரொம்ப வசதியான இடமாம்..ஃபங்ஷன் நடந்தது பெரிய ஹோட்டலாம்..மஞ்சுளா அக்காதான் தீபக்கிட்டே  நாம இரண்டு பேரும் வரலையான்னு விசாரிச்சிருக்கா..சித்தியும் சித்தப்பாவும் ரொம்ப பிஸியா இருந்ததாலே இவனோட சரியா பேச முடியலேயாம்..

மாப்பிளையும் உமாவும் நம்ம சொந்தக்கார எல்லாரோடேயும் ஒரு ஃபோட்டோ எடுத்திண்டாலாம்.. அதை நோக்கும் தீபக்கும் அனுப்பி வைக்கறேன்னு சித்தப்பா சொல்லியிருக்கானாம்.” என்று தீபக்குடன் பேசியதை ஒப்பித்தார் சுகந்தி.

சுகந்திக்குப் பதில் சொல்லாமல் மழை மேகங்களால் ஏற்கனவே இருண்டிருந்த வானத்தை இரவு நேர இருட்டில் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் பவி.  இன்று முழுவதும் அவள் மனது ஒரு நிலையில் இருக்க மறுத்தது.  அவள் எண்ணங்களைச் சிதற விடாமல் பிரயத்தனம் செய்து அவள் பிராமிஸ் செய்தபடி அந்தக் கேக்கை வடிவமைத்தாள்.  அதுவும் அந்த திறந்திருந்த பக்கத்தில் சாக்லெட் ஸிரப்பினால் ’இன்ஸ்பயர்’ என்று எழுதிய போது அவள் மனம் முழுவதும் அவளுடைய இன்ஸ்பிரெஷனே நிறைந்திருந்தான்.  

‘பிள்ளையாரப்பா..சீக்கிரமா நேக்கு ஒரு பதில் சொல்லு..என்னாலே இதுக்கு மேலே முடியவே முடியாது.’ என்று அரற்றிய அவள் மனத்தை அமைதிப்படுத்தி அந்த மெஸெஜை அழகாக எழுதி முடித்தாள்.

“பவி..இப்படிப் பேசாம இருந்தா என்ன அர்த்தம்? நான் ஒருத்தி இங்கே பைத்தியமாட்டாம் தனியா பேசிண்டு இருக்கேன்.” என்று சத்தம் போட்டார் சுகந்தி.

‘நான் ஒருத்தி இங்கே பைத்தியமாட்டம் ஒருத்தனையே நினைச்சிண்டு இருக்கேன்.’ என்று மனதிற்குள் பதில் சொல்லிக் கொண்டாள் பவி.

“சரி..நீ பேச வேண்டாம்..நான் பேசறதைக் கேட்டுக்கோ..உங்கப்பாக்கு அப்புறம் நம்மளோட நல்லது, கெட்டது எல்லாத்துக்கும் அண்ணா தான் நம்மகூட இருந்திருக்கன்..நான் போன அப்புறம் நோக்கும் தீபக்கும் அவனும் அவன் மாப்பிள்ளைகளும் தான்..அதனாலே அவன் சொல்ற இந்த இடத்திலே நான் சம்மந்தம் பேசப் போறேன்..இப்ப நோக்கு கிறிஸ்மஸ் ஹாலிடேஸ் வரும் அப்ப நாம இரண்டு பேரும் திருச்சி போறோம்..தை பொறந்து நிச்சயதார்த்தம் வைச்சுக்கலாம்..உமா கல்யாணத்துக்குப் போகும் போது நோக்கு நிச்சயதார்த்தமாவது ஆகியிருக்கணும்னு நான் ஆசைப்படறேன்…நீ என்கூட  வரலேன்னாலும் நான் தனியா போய் பேசி முடிக்கப் போறேன்.” என்று கடுமையாகப் பேசினார் சுகந்தி.

அதைக் கேட்டு அதுவரை அமைதியாக பால்கனியில் அமர்ந்திருந்த பவி சட்டென்று எழுந்து கொண்டு,”நான் கொஞ்ச நாழி வாக்கிங் போயிட்டு வரேன்.” என்று சொல்லி சுகந்தியின் பதிலை எதிர்பார்க்காமல் புறப்பட்டாள்.  

“மழை தூறிண்டு இருக்கு..இப்ப எதுக்கு போகணும்?” என்று அவர் கேட்டதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் வாசல் கதவைத் திறந்து வெளியே வந்தாள் பவி.

லிஃப்டிலிருந்து வெளியே வந்தவள், அவர்கள் பிளாக்கின் வாயிலில் சில நொடிகள் நின்று யோசனை செய்தபின், எதிர்புறம் இருந்த பூங்காவிற்குள் நுழைந்தாள். அவள் மனம் பாரமாக இருந்தது.  பகவானின் மீது பாரத்தை போட்டவள் இனி அந்தப் பாரத்தை அவள்தான் சுமக்க வேண்டும் என்று சற்று முன் சுகந்தியின் பேச்சிலிருந்து தெரிந்து போனது.  

அவளின் மறுப்பையோ விருப்பத்தையோ இனி ஒருபோதும் அவளுடைய கல்யாண விஷயத்தில் சுகந்தி கேட்க போவதில்லை என்று உணர்ந்தவள்,’பிள்ளையாரப்பா, உன்கிட்டே என்ன கேட்டேன்? என் இன்ஸ்பிரெஷனை என் கண்ணுலே காட்டுன்னுதானே கேட்டேன்..கல்யாணம் பண்ணிக்கவா கேட்டேன்.’ என்று கடவுளை அவளுடைய மனக்கூண்டில் ஏற்றி நெக்குருகிக் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள் பவி.   

“D” பிளாக்கின் நுழைவாயிலைப் பார்த்தபடி பூங்காவின் ஒரு கோடியில் அமர்ந்திருந்த ஜெய், அதன் லிஃப்டிலிருந்து வெளியே வந்த அந்த இளம் பெண்ணை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். பிளாக்கின் நுழைவாயிலில் நின்றபடி சில நிமிடம் யோசனை செய்தவள், ஒரு முடிவுக்கு வந்து, அவன் அமர்ந்திருந்த அதே பூங்காவினுள் நுழைந்ததைக் கவனித்தான். 

அந்த மழை இரவில் அவனைப் போலவே அவளும் தனிமையைத் தேடி வந்திருப்பது அவர்களின் ஒரே மனநிலையை அவனுக்கு உணர்த்தியது. அந்தப் பூங்காவில் அவளைத் தவிர வேறொருவனும் அமர்ந்திருக்கிறான் என்ற பிரக்ஞை இல்லாமல், மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தவள் கடந்து வந்த விளக்கு கம்பத்தின் வெளிச்சம் அவளை முழுமையாக நனைத்த ஒவ்வொரு நொடியையும் தவறவிடாமல் ஜெய்யின் AI அதை ’பவி..பவி’ என்று ஜெய்க்குப் பீப் செய்தது. அவனருகே அவள் வந்தவுடன், மென்மையாக,

“ஹாய் இன்ஸ்பிரெஷன்.” என்றான் ஜெய்.

அவனின் இன்ஸ்பிரெஷன் என்ற விளிப்பில் அதே இடத்தில் பிரேக் போட்டது போல் நின்றாள் பவி. அவள் மனதுள் எப்போதும்  மந்திரம் போல் அவள் உச்சரித்துக் கொண்டிருந்த அந்த வார்த்தையை செவி வழியாக கேட்ட போது ஒரு க்ஷணம் உறைந்து போனாள்.  அடுத்த நொடி அவளைச் சுற்றி பார்வையை ஓட்டியவளின் விஷனில் கல் இருக்கையில் அமர்ந்திருந்த அவளுடைய இன்ஸ்பிரெஷன் விழுந்தான். அங்கே வெளிச்சம் குறைச்சலாக இருந்ததால் அது ஜெய்தான் என்று பவிக்கு அடையாளம் தெரியவில்லை. ‘இவனா பேசினான்? இல்லே நானே கற்பனை பண்ணிண்டேனா?’ என்று குழம்பியவள், அவளின் கற்பனைதான் என்று முடிவுக்கு வந்து, அவள் நடையைத் தொடர முனைந்த போது, அவளெதிரே போய்,

“அப்ப நோக்கு ஷார்ட் ஃப்ரேம் அண்ட் ஷார்டர் ஹேர்(short frame and shorter hair)..இப்ப டாலர் ஃப்ரேம் அண்ட் லாங்கர் ஹேர் (taller frame and longer hair)..லிட்டில் ஓல்டர் (little older)..மச் ப்ரிட்டியர் (much prettier) ஸேம் பவி (same bhavi)..மை ஷாம்பவி (my shambhavi).” என்று சொன்னது ஜெய்யின் AI. 

அதே சமயம் கண்கள் விரிய அவனை அதிர்ச்சியுடன்  பார்த்து கொண்டிருந்த பவியைப் பார்த்துக் கண் சிமிட்டி, “கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று கேட்டது ஜெய். அதற்கு பவியின் ரியாக்‌ஷன் ஜெய் முற்றிலும் எதிர்பார்க்காதது.

”பிள்ளையாரப்பா.” என்று கூச்சலிட்டு, அதற்கு மேல் நிற்க முடியாமல், அதுவரை ஜெய் அமர்ந்திருந்த அதே கல் இருக்கையில் முகத்தைக் கைகளால் அழுந்த மூடியபடி சடாரென்று அமர்ந்து கொண்டாள் பவி.

ஜெய்யின் திருமணப் பிரபொஸிஷன் (preposition) கேட்டு பவியினுள் பீஸார் இமொஷன் (bizarre emotion).

AI + Jay = Mrityunjay