அத்தியாயம் – 21

“ஹலோ…கம்..கம்..வெல்கம்”. என்று சொல்லி, அவள் வீட்டு கதவைத் திறந்த பவியின் எதிரில் மிஸஸ் ஸென், நிவேதிதாவுடன் பத்தாவது பிறந்த நாளைக் கொண்டாடவிருக்கும் அந்தப் பெண் குழந்தை.

பவியின் வீட்டு வரவேற்பறைக்குள் நுழைந்த மிஸஸ் ஸென்னிற்கு அங்கே இருந்த அத்தனை பொருட்களும் அதன் அவசியத்தை உணர்த்தின.  எந்த வித படோபடமோ, அலங்காரமோ இல்லாமல் ஸிம்பிலாக அவளைப் போலவே அழகாக இருந்தது பவியின் வீடு. ஒரே ஒரு பொருள் மட்டும் அபரிதமாக இருந்தது அந்த வரவேற்பறையில். புத்தகங்கள். 

சமையலறையிலிருந்து வெளியே வந்த சுகந்தி,”நமஸ்தே..வாங்கோ.” என்று மிஸஸ் ஸென்னைப் பார்த்து கை குவித்தார்.

உடனே, சுகந்தியின் அருகில் வந்து,”உங்களுக்குதான் கஷ்டம் கொடுக்கறேன்..நிவேதிதா பர்த்டேக்கு நீங்க தான் கேக் செய்தீங்கன்னு எனக்குத் தெரியாது..அவ டீச்சர் தான் செய்து கொடுத்தாங்கன்னு நினைச்சேன்..அதனால் தான் இந்தப் பொண்ணோட பாட்டி இவ பர்த்டேக்கு கேக் செய்து தர முடியுமான்னு டீச்சர்கிட்டே கேட்கச் சொன்ன போது, டீச்சர் சார்பா, செய்து தருவாங்கன்னு நானே அவங்களுக்கு வாக்கு கொடுத்திட்டேன்.” என்றார்.

“கேக் பேக் பண்றது மட்டும் தான் நான்..மற்ற எல்லாத்தையும் டிசைட் பண்றது பவிதான்..நிவேதிதாக்கு என்ன பிடிக்கும்னு அவளுக்குத் தெரியும் அதனாலே அவளுக்குப் பிடிச்ச மாதிரி கேக் பண்ண முடிஞ்சுது…இந்தக் குழந்தைக்கு என்ன பிடிக்கும்னு அவ சொன்னதான் பவியாலே அவளுக்குப் பிடிச்ச மாதிரி கேக் பண்ணித் தர முடியும்..அதான் அவளை ஆத்துக்கு அழைச்சிண்டு வரச் சொன்னா.” என்று விளக்கினார் சுகந்தி.

அதுவரை மௌனமாக அமர்ந்திருந்த அந்தப் பெண் குழந்தை, சுகந்தியிடம்,” பாட்டி, நேக்கு புக்ஸ் படிக்க ரொம்பப் பிடிக்கும்..எங்காத்துலே என் ரூம்லே ஒரு அலமாரி நிறையே புக்ஸ் இருக்கு..என்னோட மாமா பர்த் டே கிஃப்டா எனக்குப் பிடிச்ச புக்ஸ் ஆர்டர் பண்னியிருக்கா..புக்ஸ் தான் என்னோட பெஸ்ட் பிரண்ட்ஸ்..

அப்புறம் நேக்கு ஸ்ட்ராபேரி, சாக்லெட் பிளேவர் பேஸ்ட்ரீஸ் ரொம்பப் பிடிக்கும், ஹோம்மேட் சாக்லெட்ஸும் பிடிக்கும்…நிவி குட்டி பர்த்டேக்கு நீங்க கொடுத்த சாக்லெட்டை நானும் மாமாவும் தான் சாப்பிட்டு முடிச்சோம்..ரொம்ப டெலிஷியஸா இருந்தது.” என்று படபடவென்று பேசினாள் அந்தப் புத்தகப் புழு.

அவள் பேசுவதைக் கவனமாக கேட்டு கொண்டிருந்த பவி,”உன் பெயர் என்ன?” என்று அவளிடம் கேட்டாள்.

“என் பெயர் ஸமிக்‌ஷா..எங்க பாட்டி ஆத்துக்கு  வந்திருக்கேன்..அம்மா, அப்பா இல்லாம தனியா ஸ்டே பண்ண  வந்திருக்கேன்…இதுதான் ஃபர்ஸ்ட் டைம்.” என்றாள் ஸமிக்‌ஷா.

அமெரிக்கன் நின்ஜாவின் நீஸா இவள்? என்று யோசித்தபடி,“உன் பர்த்டேயை செலிப்ரெட் பண்ண பாட்டி ஆத்துக்கு வந்திருக்கியா?” என்று கேட்டாள் பவி.

“இல்லை..லீவுக்கு வந்திருக்கேன்..இது என்னோட ஸ்டார் பர்த்டே..என்னோட இங்கிலீஷ் பர்த்டேயை அந்தப் பாட்டியோட செலிப்ரெட் பண்ணிட்டேன்..அம்மா, அப்பா இரண்டு பேரும் இந்தப் பர்த்டே பார்ட்டியை அட்டெண்ட் பண்ண நாளைக்கு இங்கே வருவா அப்புறம் நானும் அவாகூடவே எங்காத்துக்குப் போயிடுவேன்.” என்று அவள் பர்த்டே ப்ரோகிராமை விவரித்தாள்.

“உன்னோட இந்த ஸ்டார் பர்த்டேக்கு நோக்கு பிடிச்ச மாதிரி கேக் பண்ணித் தரேன்.” என்றாள் பவி.

“தாங்க்ஸ் ஆன்ட்டி.” என்றாள் ஸமிக்‌ஷா.

அதுவரை மிஸஸ் ஸென்னின் மடியில் அமர்ந்திருந்த நிவேதிதா எழுந்து வந்து பவியின் மடியில் அமர்ந்து கொண்டாள்.  அதைப் பார்த்து,

“போன வருஷம் இந்த மாதிரி இவ யாரோடேயும் பழகலே…இந்த வருஷம் தான் இப்படி மாறி இருக்கா..ஸமிக்‌ஷா வீட்டுக்குப் போய் அவ மாமாவோட ஆல்ஃபட்ஸ், ஷேப்ஸ் வைச்சு விளையாடறா..யார் எந்த டிரெஸ் போட்டாலும் அதுலே இருக்கற கலர்ஸ் ஷேப்ஸ்யெல்லாம் கரெக்டா சொல்றா..இந்த வருஷத்திலே உங்ககிட்டேயிருந்து அவ நிறைய கத்துகிட்டிருக்கா..நானும் நிறைய கத்துக்கிட்டேன்.” என்றார் மிஸஸ் ஸென்.

“இந்த சின்ன வயசுலேதான் குழந்தைங்களுக்குப் பிடிச்ச மாதிரி கத்துத் தர முயற்சி செய்ய முடியும்..அதுக்கு அப்புறம் பெரிய கிளாஸ்லே ஸ்கூல் விருப்பப்படி தான் டீச்சர்ஸ் கத்துக் கொடுக்க முடியும்..அதனால் தான் என்னாலே முடிஞ்ச அளவு எல்லாக் குழந்தைகளுக்கும் அவங்க விரும்பற முறைலே இந்த பேஸிக்ஸைக் கத்துக் கொடுக்க முயற்சி எடுக்கறேன்..முன்னாடி நான் வேலை பார்த்த ஸ்கூல்லே எனக்கும் இந்த மாதிரி பாடம் கத்துக் கொடுக்க சுதந்திரம் இருக்கலே..அதான் இந்த ஊருக்கு, இந்த ஸ்கூலுக்கு வந்தேன்.” என்றாள் பவி.

“நீங்க சென்னை இல்லையா? பெங்களூரா?” என்று கேட்டார் மிஸஸ் ஸென்.

“நாங்க திருச்சி..என் பையன் பெங்களூர்லே படிக்கறான்..நானும் இவளும் மட்டுதான் இந்த வீட்லே இருக்கோம்..இந்த வேலைக்காகதான் இந்த ஊருக்கு வந்தோம்..ஆறு மாசமாதான் சென்னைலே இருக்கோம்.” என்றார் சுகந்தி.

“ஹிந்தி நல்லா பேசறீங்க.” என்றார் மிஸஸ் ஸென்.

“பவியோட அப்பா வட இந்தியாவுலே வேலை பார்த்திட்டு இருந்தார்… ஹிந்தி, கேக் பேக்கிங் எல்லாம் அங்கே இருந்த போது கத்துண்டேன்.” என்றார் சுகந்தி.

அதற்குள் ஸமிக்‌ஷாவும் நிவேதிதாவும் கிளம்பலாம் என்று குரல் எழுப்ப, புறப்பட தயாரானார் மிஸஸ் ஸென்.

“எத்தனை மணிக்கு கேக் வேணும்?” என்று கேட்டாள் பவி.

“நாளைக்கு சண்டே..எல்லாரும் வீட்லதான் இருப்பாங்கன்னு ஆறு மணிக்கு பார்ட்டி ஆரம்பிக்கறாங்க..அஞ்சரை மணி போல வந்து கேக்கை எடுத்துக்கிட்டு போறோம்.” என்றார் மிஸஸ் ஸென்.

“கேக்கை எடுத்துக்கிட்டு போக யார் வருவாங்க?” என்று கேட்டார் சுகந்தி.

“கேக், சாக்லெட் இரண்டையும் எடுத்திண்டு போக என்னோட மாமா வருவா.” என்று பதில் சொல்லி கேக்குடன் சாக்லெட்டையும் கன்ஃபர்ம் செய்து கொண்டாள் ஸமிக்‌ஷா.

“எங்களுக்கு உன்னோட மாமாவைத் தெரியாதே.” என்று விளையாட்டுப் போல் சொன்ன சுகந்தியின் தயக்கதைப் புரிந்து கொண்ட மிஸஸ் ஸென்,

“நிவேதிதா அப்பாவை அனுப்பறேன் நான்..அவன் பவி மேமை ஸ்கூல்லே சந்திச்சிருக்கான்.” என்று சுகந்தியின் தயக்கத்தைப் போக்கினார் மிஸஸ் ஸென்.

“அவரையே அனுப்புங்கோ.” என்று சொன்ன சுகந்தியும் அதை அமைதியாக  கேட்டுக் கொண்டிருந்த பவியும் அறிந்திருக்கவில்லை அமெரிக்கன் நின்ஜா அவர்களுக்கு அறிமுகமில்லாத அந்நியன் அல்லயென்று.

“கேக், சாக்லெட்டு இரண்டும் என்ன ரேட்டுன்னு சொல்லுங்க..இப்பவே கொடுத்திடறேன்..அவங்க என்கிட்டே பணம் கொடுத்து அனுப்பியிருக்காங்க.” என்றார் மிஸஸ் ஸென்.

அம்மாவும் மகளும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.  அவர்கள் இருவரும் வேறு விஷயங்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்ததால் பணத்தைப் பற்றி யோசிக்கவே இல்லை.

“நிவேதிதா அப்பா கேக் எடுத்திட்டு போக வரும் போது அவர்கிட்டே சொல்றேன்.” என்று அப்போதைக்கு மனத்தில் தோன்றிய பதிலைச் சொன்னாள் பவி.

அவர்கள் விடைபெற்றுக் கொண்டு சென்ற பின்,

“எதுக்கு பவி கேக் பண்ணிக் கொடுக்க ஒத்துண்ட?” என்று கேட்டார் சுகந்தி.

“நானும் நீயும் வேற எதுவும் பண்ணாம ஒருத்தரோட ஒருத்தர் சண்டைதான் போட்டுண்டு இருக்கோம் அதான் ஒரு மன மாற்றத்துக்கு கேக் பண்ணிக் கொடுக்கறேன்னு சொன்னேன்..நோக்கு பண்ண முடியாதுன்னா நானே பண்ணிக் கொடுக்கறேன்.” என்றாள் பவி.

“நான் மாட்டேன்னு சொல்லலேயே..இன்னைக்கு சொல்லி நாளைக்குப் பண்ணித் தர முடியுமா?”

“திருச்சிலே, காலம்பற சொல்லி சாயந்திரம் பண்ணிக் கொடுத்திருக்கோம்..நேத்திக்கு காலம்பறேயே என்கிட்டே சொல்லிட்டா..உன்கிட்ட கேட்டுண்டு தான் நான் அவளாக்கு பிராமிஸ் பண்ணியிருக்கணுமா..நீ சொல்றதை நான் இந்த விஷயத்திலேயும் கேட்கணுமா?” என்று கோபமாகக் கேட்டாள் பவி.

“எந்த விஷயத்திலே நீ என் பேச்சைக் கேட்கற? இவ்வளவு நாள் ஆத்துக்குப் பெரியவளா நான் செய்ய வேண்டிய எல்லாத்தையும் நீதான் பண்ணின…இப்ப நான் பெரியவளா இருந்து பண்ணனும் நினைக்கறத்துக்கு நீ ஒத்துக்க மாட்டேங்கற.” என்றார் சுகந்தி.

“உமாவுக்கு சித்தப்பா கல்யாணம் ஃபிக்ஸ் பன்ணிட்டான்னு நீ அர்ஜெண்ட்டா பார்க்கற மாப்பிள்ளைக்கு நான் கழுத்தை நீட்டணுமா?” என்று கத்தினாள் பவி.

“யாரும் அர்ஜெண்ட்டா பார்க்கலே..பிள்ளையார் சதுர்த்திலேர்ந்து அண்ணா இந்த வரனைப் பற்றி சொல்லிண்டு இருக்கான்..நீதான் அடுத்த பிள்ளையார் சதுர்த்தி வரைக்கும் டயம் கேட்டிருந்தா..நானும் அப்ப சரின்னு சொன்னேன்..இப்ப நேக்கு அது சரியாப் படலை..அக்காவை வைச்சிண்டு தங்கைக்குக் கல்யாணம் பண்ணினா ஊர் வம்பு பேசும்.” என்றார் சுகந்தி.

“அம்மா, ப்ளீஸ்.” என்று சொல்லி வாக்குவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாள் பவி.

“அம்மா, ப்ளீஸ்.” என்று ருக்மிணியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான் ஜெய்.

“டேய்..நேத்து நைட் வந்து படுத்தவன் நீ…காலைலே டிஃபன் சாப்டிட்டூ திரும்ப படுக்கைலே விழுந்தவன்…இப்ப மணி நாலாகறது..எழுந்துக்கோடா..ஆறு மணிக்கு ஸமிக்‌ஷா பர்த்டே பார்ட்டி டா. மத்தியானத்திலேர்ந்து அப்பாவும் மாப்பிள்ளையும் தான் எல்லாத்தையும் ஒதுக்கி வைச்சு டெக்கரெட் பண்ணிண்டு இருக்கா..வந்து ஹெல்ப் பண்ணுடா..என்னதான் இருந்தாலும் அவர் நம்மாத்து மாப்பிள்ளை டா.” என்றார் ருக்மிணி.

“நீதான் ஒரே பிடிவாதமா கூடுகட்டி பர்த்டேவை நம்மாத்துலே கொண்டாடணும்னு இருக்க.” என்றான் ஜெய்.

“முதல் பர்த்டேலேர்ந்து எல்லா பர்த்டேவும் அவாத்துலதான் நடந்திருக்கு..இந்த தடவை நம்மகூட லீவுலே வந்து இருக்கேன்னு சொன்னா கூடுகட்டி..அப்ப பார்த்து அவ நட்சத்திரப் பிறந்த நாள் வருதுன்னு உங்கப்பாகிட்டே சொல்லிண்டு இருந்தேன்..எப்பவும் போல ஒரு பாயசத்தை பண்ணி பகவானுக்கு நைவேத்தியம் பண்ணிடுன்னு உங்கப்பா சொன்னர்…

நேக்குதான் மனசு கேட்கலே..இந்தத் தடவை குழந்தை நம்மளோட இருக்கா அதனாலே பார்ட்டி பண்ணலாம்னு முடிவு பண்ணினேன்..ஸமிக்‌ஷாவும் ஓகே பாட்டின்னு சொலிட்டா..மிஸஸ் ஸென்கிட்ட சொல்லி நிவேதிதா டீச்சர்கிட்டேயே முட்டை போடாத கேக் பண்ணித் தர சொல்லியிருக்கேன்.” என்றார் ருக்மிணி.

“நோக்கு தான் நன்னா கேக் பண்ண வருமே..எதுக்கு அவாகிட்டே சொன்ன?” என்று கேட்டான் ஜெய்.

“அவகிட்டே சொன்னா பர்த்டே கேக்கோட சாக்லெட்டும் கிடைக்கும் டா..நோக்கு அந்த சாக்லெட் பிடிக்குமே.” என்று ருக்மிணி சொன்ன போது ஜெய்யினுள் ஏற்பட்ட உணர்வை அவனால் என்னவென்று பிரித்து பார்க்க முடியவில்லை. அந்த க்ஷணம் அம்மாவின் அன்பும் அடைப்புக்குறியுனுள் அடை(ட)க்க முடியாத ஒன்று என்று புரிந்து கொண்டான்.

“இங்கே வா.” என்று சொல்லி அவரை இழுத்து அணைத்துக் கொண்டான். ஜெய்யின் அணைப்பு ஏற்படுத்திய உணர்வை ருக்மிணியாலும் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை.  எனவே, எப்போதும் போல்,

“போதும் டா..பத்து வயசுப் பையனாட்டம் நடந்துக்கற..இன்னிக்கு ஸமிக்‌ஷாக்குதான் ஸ்பெஷல் டே..நோக்கு இல்லை.” என்றார்.

ருக்மிணி, ஜெய் இருவருமே அறிந்திருக்கவில்லை அன்றைய தினம் அவர்கள் அனைவருக்குமே ஸ்பெஷல் டேயென்று.

“அரைமணி நேரம் கழிச்சு எழுந்து  வரேன் ம்மா..நேத்து திரும்பி வரும்போது கொஞ்சம் மழைலே நனைஞ்சிட்டேன்..உடம்பு ஒரு மாதிரியா இருக்கு.” என்றான் ஜெய்.

“அதுக்கு தான் சொன்னேன்..இந்த தடவை வரலைன்னு அவாகிட்டே சொல்லிடுன்னு..சைக்கிள்லேயே பாண்டிச்சேரி வரை போயிட்டு வர்றது சும்மா வா அதுவும் மழைக் காலத்திலே.” என்றார் ருக்மிணி.

“சிதம்பரம் வரை போனேன் மா.” என்று அவரை திருத்தினான் ஜெய்.  

“டேய்..நீ என்கிட்டே சொல்லவே இல்லை.”

“இப்பதான் சொல்லிட்டேனே.”

“எல்லாம் முடிஞ்ச அப்புறம் தான் என்கிட்டே எல்லாம் சொல்ற.” என்று மன வருதத்துடன் ருக்மிணி பேச,  அது முழுக்க முழுக்க உண்மை என்பதால் ஜெய் அவன் வாயை மூடிக் கொண்டான்.

கோவிலிருந்து திரும்பிய இரவிற்குப் பின் எவ்வளவு முயற்சி செய்தும் ஜெய்யின் வாயிலிருந்து வார்த்தைகளை வரவழைக்க முடியவில்லை ருக்மிணியால்.  பவியைப் பற்றிய பேச்சை அவர் ஆரம்பிக்கும் போதெல்லாம் இன்று போலவே பதில் பேசாமல் மௌனமானான் ஜெய். 

ஆனால், எப்போதும் போல், அவரது முயற்சியைக் கைவிடாமல்,

“ஜெய்..இப்ப உன் இடத்திலே உன்னோட ஸோஷியல் பாட் இருந்தா, அம்மான்னு  என்கிட்டே அடங்கிப் போய் எல்லாத்தையும் ஒண்ணுவிடாம ஒப்பிச்சிடும்.” என்று அவனுடன் வம்பு பேசி அவன் வாயைத் திறக்க முயற்சி செய்தார்.

“அம்மான்னா குழந்தைகள் பயப்படணுமா?..எல்லா ஊர்லேயேயும் வீட்லேயும் அப்படிக் கிடையாது..ஊருக்கு ஊர், வீட்டுக்கு வீடு அம்மா, அப்பா, கணவன், மனைவி, அக்கா, தங்கை, அண்ணன், தம்பி உறவெல்லாம் வித விதமா இருக்கு..

ஒரே மாதிரியா எப்படி ம்மா மனுஷா இருக்க முடியும்?அதனாலே அம்மாக்கு அடங்கின மாதிரி, அப்பாவுக்குப் பயப்படற மாதிரியெல்லாம் பொதுவா ப்ரோகரம் எழுத முடியாது..சில வார்த்தைகள் கேட்டுதான் அது அடங்கிப் போகும்..அதை சொல்ற ஆளைப் பார்த்து இல்லை..என்னோட ஸோஷியல் பாட் என் மாதிரி தான் யோசிக்கும்..நான் என்னைக்கு உன் பேச்சை கேட்டு நோக்கு அடங்கிப் போயிருக்கேன்? பேராசைதான் நோக்கு.”என்றான் ஜெய்.

“வாயைத் திறந்து பேசிட்டான்..என் முயற்சி வீணாப் போகலே..பகவானே.” என்று மனதிற்குள் பகவானிற்கு நன்றி சொன்னார் ருக்மிணி.

அவர் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஜெய்,”வாயைத் திறந்து பேசிட்டான்னு பகவானுக்கு நன்றி சொல்றியா?” அவரது மனதை தப்பாமல் படிக்க,

“ஜெய்.” என்று அதட்டினார் ருக்குமிணி

“ஸே  தாங்க்ஸ் பாட்.” என்று சொல்லி விட்டு அவனது தூக்கத்தை மறுபடியும் தொடர்ந்தான் ஜெய்.

ஜெய்யின் அறையை விட்டு வெளியே வந்த ருக்மிணியின் வாடிய முகத்தைப் பார்த்து,”என்ன மா?” என்று விசாரித்தாள் கீது.

கீதுவுக்கு பதில் சொல்லாமல் பூஜை அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டார் ருக்மிணி. அவர் பின்னாடியே உள்ளே வந்த கீது அவரருகில் அமர்ந்து கொண்டு,”என்ன மா? ஜெய் ஏதாவது சொல்லியிருந்தா தப்பா எடுத்துக்காதே..அவன் அப்படி தான்.” என்றாள்.

“அப்படி ஏதாவது என்கிட்டே அவன் சொல்லியிருந்தா அன்னைக்கே அம்பாள் சன்னிதிலேயே எல்லாத்தையும் முடிச்சிருப்பேனே..எல்லார் மனசுள்ளே இருக்கறதைப் படிக்கறவனோட மனசுள்ளே என்ன இருக்குண்னு பகவான் தானே படிக்க முடியும்..என் புள்ளை மனசுள்ளே இருக்கறதைப் படிச்சு அதை ஏன் நேக்கு அவர் சொல்லலேன்னு கேட்டிண்டு இருக்கேன்.” என்றார். 

“என்ன ம்மா சொல்ற நீ? ஜெய் மனசுலே என்ன ம்மா இருக்கு?”

“அவன் மனசுலே பவி இருக்கா..நோக்கு நினைவிருக்கா கீது..ஸமிக்‌ஷா பிறந்த போது நேக்கு ஒத்தாசையா இருந்தாளே மிஸஸ் சுகந்தி சுதர்ஷன்..அவளோட பொண்ணு தான் பவி..சுதர்ஷன் அப்பவே போய் சேர்ந்திட்டர்..அதுக்கு அப்புறம் சுகந்தியோட காண்டாக்ட் இல்லே..இப்ப அவா எங்கே இருக்கா? எப்படி இருக்கான்னு தகவல் இல்லை..

கொஞ்ச நாள் முன்னாடி வைஷ்னோ தேவி கோவில்லே சுதர்ஷனோட தம்பியைப் பார்த்தோம்..அவர் பொண்ணுக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆகியிருக்குண்ணு உங்கப்பாகிட்டே சொன்னர்..அவரோட பொண்ணு பவியை விட வயசுலே சின்னவ..அன்னைக்குதான் ஜெய் மனசுலே பவி இருக்காண்ணு நேக்குத் தெரிய வந்தது..தங்கைக்குக் கல்யாணமாகும் போது அக்காக்கு ஆகாமவா இருக்கும்? அப்படியே ஆகாம இருந்தாலும்..நான் எங்கே போய் அவளைத் தேடறது..

அப்பாக்கும் புள்ளைக்கும் அவாதான் புத்திசாலின்னு நினைப்பு..என் காதுலே ஒரு வார்த்தை போட்டிருந்தா  பவியைப் பற்றி அவளோட சித்தாப்பாகிட்டே நேரடியா விசாரிச்சிருப்பேன்..அவளுக்குக் கல்யாணமாகியிருந்தா ஜெய்க்கு கொடுத்து வைக்கலே..கல்யாணம் ஆகாமயிருந்தா, ஜெய்க்குதான் கொடுத்து வச்சிருகுன்னு நம்மாத்துக்கு அவளைக் கையோட கூட்டிண்டு வந்திருப்பேன்.” என்று மனம் விட்டு மகளிடம் பேசினார் ருக்மிணி.

ருக்மிணி சோன்னதைக் கேட்டு ‘ஐயோ’ என்றானது கீதுவுக்கு.”அவளுக்கு மேலே இரண்டு பொண்ணு இருந்திருந்தா அவளுக்கு இதுவரைக்கும் கல்யாணமாகாம இருக்க சான்ஸ் இருக்கு..சுகந்தி மாமிக்கு அவ ஒரே பொண்ணு ம்மா..இப்ப அவளுக்கு 26 வயசு இருக்கும் ம்மா..கல்யாணமாகி இரண்டு குழந்தை கூட இருக்கலாம்.” என்று கீது சொன்னவுடன்,

“நேக்கும் அது புரியறது கீது..ஆனா ஜெய்யோட வாழ்க்கைலே அவனே நம்பாத போதுகூட  பகவானைத் தவிர வேற யாரையும் அவன் விஷயத்திலே நான் நம்பினதில்லே..பிழைக்க மாட்டான்னு நினைச்சவனைப் பிழைக்க வைச்சு இப்பவரைக்கும் அவனுக்கு எந்தக் குறையுமில்லாம எல்லாத்தையும் நடத்தி கொடுக்கறது அவர்தான்.. அவனுக்குப் பவி மேலே பிரியம்னு கேள்விபட்டதிலேர்ந்து ஏதாவது வழிக்காட்டு பகவானேன்னு பிரார்த்தனைப் பண்ணிண்டு இருக்கேன்.” என்றார் ருக்மிணி.