காற்றும் மழையும் வலுக்க, நல்லபடியாக வீடு போய்ச் சேர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், வாகன நெரிசலில் விழி பிதுங்கி கொண்டிருந்தது சென்னை.
ஒரு டிராஃபிக் சிக்னலில், பத்து நிமிடங்களாக ஊர்ந்து கொண்டிருந்த போது, காரில் ஏற்பட்டிருந்த மௌனத்தைக் கலைத்தார் ருக்மிணி.
“ஏண்ணா..ஆத்துக்குப் போய் சேர எத்தன் நாழி ஆகும்? என்று கேட்டார்.
“நேக்குத் தெரியாது டீ..இதே இடத்திலே பத்து நிமிஷமா சென்ட்டிமீட்டர் சென்ட்டிமீட்டரா நகர்ந்துண்டு இருக்கோம்..இதே மாதிரி இன்னும் இரண்டு சிக்னல் இருக்கு.” என்றார்.
“ஆத்துலே பால் இல்லை ண்ணா..காலம்பற பால்காரனுக்கே பால் சரியா வரலேன்னு அரை லிட்டர்தான் கொடுத்தான்..அப்புறமா ஒரு லிட்டர் கொடுக்கறேன்னு சொன்னான்..ஆனா நாம கிளம்பற வரைக்கும் ஆளைக் காணும்..இங்கே வழிலேயே பால் பேக்கெட் வாங்கிண்டு போயிடலாமா?” என்று கேட்டார்.
“இந்த மழைலே முதல்லே காரை பார்க் பண்ணனும் அப்புறம் கடையைத் தேடிக் கண்டுபிடிக்கணும்..அதெல்லாம் முடியாத காரியம்.” என்று மறுத்தார் பாலகிருஷ்ணன்.
“அப்ப பாலுக்கு என்ன பண்றது?” என்று கேட்டார் ருக்மிணி.
“உன் ஃபோனிலேர்ந்து நம்ம காலனி கடைக்காரருக்கு ஃபோன் பண்ணி ஒரு லிட்டர்ப் பால் தனியா எடுத்து வைக்கச் சொல்லு.” என்றார் பாலகிருஷ்ணன்.
அவர்கள் சம்பாஷணையில் கலந்து கொள்ளாமல் மழையைத் தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் ஜெய். அப்போது,
“ஜெய்..அப்பாவோட ஃபோன்லேர்ந்து கடைக்காரருக்குப் ஃபோன் போட்டு பால் பேக்கெட்டைத் தனியா எடுத்து வைக்கச் சொல்லுடா.” என்றார் ருக்மிணி.
அதற்கு ஜெய்யிடம் எந்தப் பிரதிபலிப்புமில்லை.
“உன் ஃபோன் என்ன ஆச்சு?” என்று பாலகிருஷ்ணன் கேட்க,
“கோவிலுக்குக் கிளம்பற அவசரத்திலே ஆத்துலேயே விட்டுட்டேன்..இன்னைக்கு தான் மறுபடியும் வைஷ்னோ தேவி தரிசனத்துக்கு என்னை அழைச்சிண்டு போகணும்னு இவனுக்குத் தோணியிருக்கு..அதான் அவன் கூப்பிட்டவுடனே சட்டுன்னு கிளம்பி வந்துட்டேன்..
பிரமாதமான ஏகாந்த தரிசனம்..மழைன்னு கோவிலே காலியா இருந்தது..அதனால் தான் உங்களுக்கு சுதர்ஷனோட தம்பியை அடையாளம் தெரிஞ்சுது..கூட்டமிருந்திருந்தா கண்டு பிடிச்சிருக்க முடியுமா?..
என்னையும் நீங்க கூப்பிட்டிருக்கணும் ண்ணா..மழைலே பிராகாரம் முழுக்க ஈரமா இருந்தது அதான் ஜெய் கையைப் பிடிச்சிண்டு மெதுவா நடந்து வந்தேன்..நான் வர்றத்துக்குள்ளே அவர் புறப்பட்டுப் போயிட்டர்..சுகந்தி பற்றி நீங்களே விசாரிச்சிருக்கலாம் .” என்றார் ருக்மிணி.
“அவன்கிட்டே என்னத்த விசாரிக்க? நேக்கு அவனை அடையாளம் தெரிஞ்ச மாதிரி அவனுக்கும் என்னை அடையாளம் தெரிஞ்சுது. ஆனா, அவனே வந்து பேசலே..நானா அவன் இருக்கற இடத்துக்குப் போன அப்புறம் தான் என்னை அடையாளம் தெரிஞ்ச மாதிரி,’மாமா, சௌக்கியமான்னு? விசாரிக்கறான்..
‘நான் நன்னா இருக்கேன்..நீ எப்படி இருக்கேன்னு கேட்டேன்?..ரொம்ப நன்னா இருக்கேன்..பொண்ணுக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆகியிருக்கு..அதுக்குதான் சென்னை வந்தேன்னு’ சொன்னான்..அவ்வளவுதான்..மேலே நான் எதுவும் கேட்கறத்துக்கு முன்னாடி,’மழை வர்ற மாதிரி இருக்கு..வரேன் மாமான்னு.’ சொல்லிட்டூ கிளம்பிப் போயிட்டான்.” என்றார் பாலகிருஷ்ணன்.
“ஏண்ணா அவனோட சம்மந்தி ஆம் இந்தப் பக்கமா..அதான் இந்தக் கோவிலுக்கு வந்திருந்தானா? அவன் பொண்ணுக்கு எப்ப கல்யாணமாம்?” என்று கேட்டார் ருக்மிணி.
“ருக்கூ..செத்த நேரம் சும்மா இரு..அவன்கிட்டே பேசின எல்லாத்தையும் கோவில்லேயே உங்க இரண்டு பேர்கிட்டேயும் சொல்லிட்டேன்…நீயா இப்ப எதையும் எக்ஸ்ட்ராவா சேர்க்கப் பார்க்காத.” என்று மனைவியைக் கடிந்து கொண்டார் பாலகிருஷ்ணன்.
“அவன் பொண்ணுக்கு இப்ப கல்யாணமாகறதுன்னா ஷாம்பவிக்கு முன்னாடியே ஆயிருக்கணும்..நம்மளோட காண்டாக்ட்லே இருந்திருந்தா சுமங்கலிப் பிரார்த்தனைலேர்ந்து சீமந்தம் வரைக்கு ஆத்து மனுஷியாட்டம் நம்மளை அழைச்சிருப்பா சுகந்தி..மிஸ் ஆயிடுத்து.. இவன்கிட்டேயே கேட்டு அவளோட திருச்சி விலாசத்தை நீங்க வாங்கியிருக்கலாமே.” என்று அங்கலாய்த்தார் ருக்மிணி.
“திருச்சி விலாசத்தை அப்புறமா வாங்கிக்கலாம்.. நீ இப்ப முதல்லே நாளையோட காப்பி விவகாரத்தைக் கவனி..பால் பேக்கெட்டை வாங்கு.” என்று ருக்மிணியின் எண்ணவோட்டத்தை திசைத் திருப்பினார் பாலகிருஷ்ணன்.
“டேய் ஜெய்..சொன்னேடா ஃபோன் பண்ணச் சொல்லி..சும்மா வேடிக்கை பார்த்திண்டு வர்ற.” என்று கோபப்பட்ட ருக்மிணி அறிந்திருக்கவில்லை கோவிலில் பவியின் சித்தப்பாவைச் சந்தித்ததிலிருந்து ஜெய்யும் அவனின் AIயும் மின்னல் வேகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனரென்று.ருக்மிணியை மேலும் சோதிக்காமல் கடைக்காரருக்கு ஃபோன் செய்தான் ஜெய்.
அவருடன் பேசிக் கொண்டே,”அம்மா ஒரு லிட்டர் தான் இருக்காம்..இன்னொரு கஸ்டமருக்கும் ஒரு லிட்டர் வேணுமாம்..இப்ப கடைலே இருக்காளாம் அந்தக் கஸ்டமர்.” என்றான்.
“எல்லாரும் சாயந்திரமே பால் வாங்கிண்டு போயிருப்பா அதனால் தான் ஒரேயொரு பேக்கெட் மிஞ்சி போயிருக்கு..நமக்கு ஒரு லிட்டர் வேணும் டா.” என்று ருக்மிணி சொல்ல,
“நமக்கு அரை லிட்டர்த் தனியா எடுத்து வைச்சிட்டூ அவாளுக்கு அரை லிட்டர்க் கொடுக்கறேன்னு சொல்றர்..அவர் சீக்கிரம் கிளம்பணுமாம்..நம்மளோட பால் பேக்கெட்டை யார் ஆத்துலே கொடுக்கறது? அந்த கஸ்டமர்கிட்டேயே கொடுக்கட்டுமான்னு கேட்கறார்..நோக்கு ஓகே தானே.” என்று கேட்டான்.
“நமக்கு அரை லிட்டர்ப் போதாது டா ஆனா அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாம்..அவாளுக்கு அரை லிட்டர்க் கொடுச் சொல்லிடு…யார்கிட்டேயும் நம்ம பால் பேக்கெட்டைக் கொடுக்க வேண்டாம்..நாம வர்றதுக்கு கொஞ்சம் லேட்டாகும் அதுவரைக்கும் கடையைத் திறந்து வைச்சிருக்கணும்னு சொல்லிடு.” என்றார் ருக்மிணி.
“ஸர்..நீங்க அவங்களுக்கு அரை லிட்டர் கொடுத்திடுங்கோ..நாங்க டிராபிக்ல மாட்டிண்டு இருக்கோம் வீடு வர்ற கொஞ்சம் லேட்டாயிடும்…யார்கிட்டேயும் எங்களோட பால் பேக்கெட்டைக் கொடுக்க வேணாம்..நாங்களே உங்க கடைக்கு வந்து வாங்கிக்கறோம்.” என்று கடைக்காரருக்கு தகவல் கொடுத்தான் ஜெய்.
“அவாளும் காலை காப்பிக்கு அரென்ஜ் பண்ண கொட்டற மழைலே கடைக்குவந்திருக்கா போலே.” என்று அறிமுகமில்லாத அந்த கஸ்டமரின் நோக்கத்தை ஆராய்ந்து கொண்டிருந்தார் ருக்மிணி.
பவி வீட்டினுள் நுழைந்த போது முழுவதுமாக நனைந்திருந்தாள்.
ஷாலைப் போர்த்திக் கொண்டு கதவைத் திறந்த சுகந்தி, “என்ன டீ..இரண்டு ரவுண்டுக்கு இவ்வளவு நாழியாயிடுத்து..உன்னை இத்தனை நாழியாக் காணலையேன்னு கீழே வரலாம்னு நினைச்சிண்டிருந்தேன்..நீயே வந்துட்டே..முழுக்க நனைஞ்சுப் போயிருக்க…போய் டிரெஸ் மாத்திண்டு வா..சாப்டிட்டு படுத்துகலாம்.” என்றார்
“குடை கொண்டு போனது பிரயோஜனமில்லை ம்மா..பால் வாங்க கடைக்குப் போயிருந்தேன்..அங்கே இரண்டு அரை லிட்டர்ப் பேக்கெட்தான் இருந்தது..கடைக்காரர் வேறொரு கஸ்டமரோட ஃபோன் பேசிண்டிருந்தார்..அவா அதைத் தனியா எடுத்து வைக்க சொல்லிண்டு இருந்தா..இந்த மழைலே நானும் பாலுக்குதான் வந்திருக்கேன்னு சொல்லி, அவாகிட்டே எனக்காக பேசி, நேக்கு ஒரு பேக்கெட் கொடுத்தர்..அவா ஒத்திண்டிருக்காட்டா நாளைக்கு காலைலே டிகாக்ஷன் காப்பிதான் குடிச்சிருக்கணும்.” என்றாள் பவி.
“அவாளுக்குப் பால் தேவையிருந்தும் அதை நமக்காக விட்டுக் கொடுத்திருக்கா..அந்தக் கடைக்காரரும் நமக்காக அவாகிட்டே பரிஞ்சுப் பேசியிருக்கர்..லோகத்திலே நல்ல மனுஷாளும் இருக்கான்னு பகவான் நமக்கு காட்டறர்.” என்றார் சுகந்தி.
சுகந்தியின் பேச்சின் போக்கைப் புரிந்து கொண்ட பவி வாயைத் திறக்கவில்லை. சுயநலவாதி சித்தப்பா, அவளுடைய கல்யாணம்இரண்டையும் பற்றி பேச அம்மாவிற்கு வாய்ப்புக் கொடுக்காமல், வழக்கமான வேலைகளைச் செய்து முடித்து விட்டு உறங்கச் சென்றாள். ஆனால் அவளது முயற்சி வீணாய்ப் போனது. உறங்க வந்த மகளிடம் அவர் சொல்ல நினைத்த விஷயத்தை தெரியப்படுத்தி விட்டுத் தான் உறங்கினார் சுகந்தி.
“நீ வாக்கிங் போயிருக்கறச்சே அண்ணாக்கு ஃபோன் போட்டு உமா கல்யாண விஷயத்தைச் சொன்னேன்..பிள்ளையார் சதுர்த்திலேர்ந்து உன் கல்யாண விஷயமா அவன் நம்ம பின்னாடி அலைஞ்சிண்டிருக்கானாம்.. நாம தான் பிடிகொடுக்கலேன்னு என்னை ரொம்ப கோவிச்சிண்டான்..பொழைச்சுக் கடந்து பேசறேன்னு சொல்லியிருக்கான்..நாளைக்கு நோக்கு நல்லபடியா விடியட்டும்.” என்றார்.
சுகந்திக்குப் பதில் சொல்லாமல் அமைதியாக படுத்திருந்த பவியின் மனத்தில் வெளியே பெய்து கொண்டிருந்த மழையின் பேரிரைச்சலைவிட ‘ஜெய்’ என்ற இரைச்சல் தான் ஓங்கியிருந்தது.
ஜெய் மேல் அவளுக்கு ஏற்பட்டிருந்த உணர்வை அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.ஆனால், அதே போல் உணர்வு வேறு யார் மீதும் ஏற்படாத போது தான், அது, அவன் மீது மட்டும் ஏற்பட்ட பிரேத்யேகமான உணர்வு என்று அவளுக்குப் புரிந்தது. அவளுடைய கல்யாணப் பேச்சை ஆரம்பித்தவுடன் தான் அவளது மனத்தின் ஆழத்தில் புதைதிருந்ததை அலசி ஆராய வேண்டிய அவசியம் அவளுக்கு ஏற்பட்டது.அதற்குபின் அந்த உணர்வுகள் அவளை முழுமையாக ஆக்கிரமிக்க ஆரம்பித்தவுடன் அவளின் ஆதியும் அந்தமும் ஜெய் மட்டுமே என்றாகிப் போனது.
இன்றுவரை அவளுடைய அம்மாவிடம் கூட பகிர்ந்து கொள்ளாத விஷயங்களை, சங்கடமான சூழ்நிலைகளை ஜெய்யிடம் சாதாரணமாக பகிர்ந்து கொண்டிருக்கிறோம் என்று எண்ணியபடி படுத்துதிருந்த பவி, அவளுடைய தற்போதைய இக்கட்டான சூழ்நிலைக்குத் தீர்வு காட்ட, சகல தெய்வங்களுக்கும் கோரிக்கை வைத்தபடி அவளை அறியாமலேயே தூங்கிப் போனாள்.
“இன்னைக்கு எல்லாம் லேட்டாயிடுத்து..வேலையை முடிச்சிட்டு தூங்கறத்துக்கு நாழியாகிடும்..கடைக்காரர் நல்லவர் டா..நமக்காக வெயிட்பண்ணிண்டு இருந்தர்…சாயந்திரம் கோவிலுக்குப் புறப்படறச்சே இத்தனை மழை கொட்டும்னு நான் நினைக்கவே இல்லை..நல்ல வேளை எங்கேயும் மாட்டிக்காம, பத்திரமா அம்பாள் நம்மளை ஆத்துலே கொண்டு வந்து சேர்த்திட்டா..
ஜெய், நான் சொன்னேனோல்யோ அம்பாள் மனசைப் படிக்க முடியாதுன்னுட்டு..இப்ப நோக்கு புரிஞ்சிருக்கும்..இன்னைக்கு நமக்கு மட்டும் ஸ்பெஷல் தரிசனமாட்டம் இருந்தது டா..அதான் அம்பாள் அழகைப் பார்த்திண்டே இருந்தேன்…இந்த மாதிரி தரிசனம் விஜயதசமி அன்னைக்கு கிடைச்சிருக்காது டா..
இன்னைக்கு அங்கே போனதும் நல்லதாப் போச்சு..சுதர்ஷனோட தம்பியையும் பார்த்திட்டோம்..சுகந்தி பற்றி அவர் எதுவும் சொல்லாததே அவ நல்லபடியா இருக்கான்னுதான் அர்த்தம்..அப்படி ஏதாவது முக்கியமா இருந்தா அவனே சொல்லியிருப்பன்..கல்யாணம், கார்த்தின்னு அவாத்துலே எல்லாம் நல்லபடியா நடந்துண்டு இருக்கே.” என்று ருக்மிணி சாதாரணமாகப் பேச,
“அம்மா, கொஞ்சம் பேசாம இரேன்..நோக்கு இன்னொருத்தர் மனசைப் படிக்க தெரியுமா? நேக்குத் தெரியும்..நான் அதை இப்ப டெலிபரெட்டா (deliberate) பண்ணிண்டு வரேன்..அவரோட நடத்தை நார்மல் ஸீக்வன்ஸ்லே (normal sequence) வராது..இட்ஸ் அனாமலி (anomaly)..
இவ்வளவு வருஷம் கழிச்சு அப்பாவைப் பார்த்திருக்கர்..சுதர்ஷன் மாமாவோட அப்பா கிளோஸா இருந்தான்னு தெரியும்.. மாமி, பவி, தீபக் யாராவது ஒருத்தரைப் பற்றியாவது அப்பாகிட்டேஅவர் சொல்லியிருக்கணும்..மாமா அவாளை விட்டிட்டு போனதுக்கு இப்ப நன்னா இருக்காளா? இல்லை கஷ்டப்படறாளான்னு கொஞ்சமாவது கன்வே பண்ணியிருக்கணும்..அவாளைப் பற்றி எதுவுமே சொல்லாம இருந்தது நேக்குத் தப்பா படறது..
நானும் நீயும் வர்றத்துக்கு முன்னாடியே அந்த இடத்திலிருந்து அவர் புறப்பட்டு போனது நேக்கு சந்தேகத்தைக் கிளப்பறது..உன்கிட்டே மாட்டிண்டா அவரை நாக்கை பிடுங்கற மாதிரி நறுக்குனு நீ கேட்டிடுவேன்னு தெரியும் அதான் உன்னைப் பார்க்கமா ஓடிப் போயிட்டர்..
சுதர்ஷன் மாமாதான் அவருக்கும் நமக்கும் காமன் ஃபாக்டெர் (common factor) அதனாலே சாதாரணமாச் சரியா போக வேண்டிய கணக்கு இன்னைக்கு மிச்சம் மீதியோட ஆரம்பமாயிருக்கு..
நீ கொஞ்சம் வேகமா நடந்து வந்திருக்கணும் ம்மா..என்னோட கணக்கைச் சரி பண்றத்துக்கு அவரை ஒரே ஒரு கேள்வி நீ கண்டிப்பாக் கேட்டிருக்கணும்னு ம்மா.” என்றான் ஜெய்.
“உன்னோட கணக்கைச் சரி பண்ண கேள்வியா? என்ன கேள்வி டா?” என்று ருக்மிணி சாதாரணமாகக் கேட்க,
“ஜெய்..வேண்டாம்..விடு..உங்கம்மா மனசைக் குழப்பாத..நீயும் குழம்பிக்காத..முடிஞ்சு போன விஷயம்னு நினைச்சுக்கோ…ஆத்துலே பெரியவ கல்யாணமாகாம இருந்தாநார்மலா சின்னவளுக்குக் கல்யாணம் பேச மாட்டா டா.” என்று ஜெய்யைக் கட்டுப்படுத்த முயன்றார் பாலகிருஷ்ணன்.
ஆனால் ஜெய்க்கு அந்தக் கேள்விக்குப் பதில் தெரிய வேண்டியிருந்தது.
பாலகிருஷ்ணனின் கெஞ்சலைப் புறக்கணித்து விட்டு,“பவிக்கு கல்யாணமாயிடுத்தான்னு கேட்டிருக்கணும் ம்மா அப்பதான் என் கணக்கு சரியாகியிருக்கும்.” என்று நிதானமாக ருக்மிணியிடம் சொன்னான் ஜெய்.
அதைக் கேட்டு அதிர்ச்சியானார் ருக்மிணி.
எப்போதும் போல் அவர் மனதைப் படித்த ஜெய், “பவிக்கு கல்யாணமாயிடுத்தான்னு தெரிஞ்சுண்டா என்னோட கணக்கு எப்படி சரியாகும்னு நினைக்கற…அவ மேல நேக்கு ஸ்பெஷல் ஃபிலீங்கஸ் இருக்கு..அவளுக்கும் என் மேலே இருந்திருக்கணும்..அதான் யார்கிட்டேயும் சொல்ல முடியாத சில விஷயங்களை என்கிட்டே மட்டும் ஷேர் பண்ணிண்டா..சுதர்ஷன் மாமா உயிரோட இருந்திருந்தா அவதான் இந்த ஆத்து மாட்டுப்பொண் ஆயிருப்பா..
அப்பா சொன்ன மாதிரி பொதுவா அக்காவுக்கு கல்யாணம் செய்யாம தங்கைக்கு கல்யாணம் பண்ண மாட்டா..ஆனா பவியோட சித்தப்பா பொதுவிலே சேர்த்தியில்லை..அதனாலே பவிக்கு கல்யாணம் ஆகியிருக்கலாம்னு என் மனசு ஒத்துக்க மாட்டேங்கறது..அவளுக்கு என்ன ஆச்சுன்னு நேக்குத் தெரிஞ்சுக்கணும்..அவளை நான் சந்திக்கணும்.” என்றான் ஜெய்.
அதிச்சியிலிருந்து வெளி வந்த ருக்மிணியும் மகனின் மனப்போக்கு புரியாமல் பால்கிருஷ்ணனும் ஒரே போல்,“நீ எதுக்கு டா அவளை மீட் பண்ணனும்? என்று கேட்க,
“அவளை நேர்லே பார்த்தா தானே என்னைக் கல்யாணம் பண்ணிப்பாளான்னு அவகிட்டே நான் கேட்கமுடியும்.” என்று தெளிவாகப் பதில் கொடுத்தான் ஜெய்.
அதைக் கேட்டு, பெற்றோர் இருவரும் “ஜெய்” என்று அவர்களது அதிர்ச்சியை வெளியிட்டனர்.
“ஜெய்..வேண்டாம் டா.” என்று மறுத்தார் பாலகிருஷ்ணன்.
“அப்பா..டரஸ்ட் மீ..அவளை நேர்லே பார்த்த அப்புறம் அவகிட்டே என்ன பேசணும்? அவளை என்ன கேட்கணும்னு நேக்குத் தெரியும்..நீங்க சுகந்தி மாமியோட அட்ரெஸைக் கண்டுபிடிங்கோ..உங்களாலே முடியாதுன்னா நானே கண்டுபிடிக்கறேன்.” என்று சொல்லிவிட்டு அவனறைக்குச் சென்று விட்டான் ஜெய்.
“இப்பதான் அவ மட்டும் ஸ்பெஷல்ன்னு அவனுக்குப் புரிஞ்சு இருக்கு..எல்லார் மனசையும் சரியாப் படிக்க ஆரம்பிச்ச அப்புறம் தான் அவனோட மனசை சரியாப் படிச்சிருக்கான்…அதான் பவியைப் பற்றி தெரிஞ்சுக்க அமெரிக்காலெர்ந்து கிளம்பி வந்துட்டான்.” என்றார்.
“நீங்க இதை என்கிட்டே முன்னாடியே சொல்லியிருக்கணும் ண்ணா..இன்னைக்கு நான் கண்டிப்பா ஜெய்காக பவியோட சித்தப்பாகிட்டே அந்தக் கேள்வியைக் கேட்டிருப்பேன்..அப்படி பவிக்கு இன்னும் கல்யாணம் ஆகலைன்னு தெரிய வந்திருந்தா அடுத்த முகூர்தத்திலேயே என் புள்ளைக்கு அவளைக் கல்யாணம் பண்ணி நம்மாத்துக்கு மாட்டு பொண்ணா அழைச்சிண்டு வந்திருப்பேன்.” என்றார் ருக்மிணி.
“ஜெய்தான் உளறான்னா நீயும் அவனோட சேர்ந்து உளறாதே ருக்கூ..சுதர்ஷனோட தம்பி அவனோட பொண்ணுக்கு கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணியிருக்கான்..அவனோட அண்ணா பொண்ணுக்கு கல்யாணம் ஆகாம அவன் பொண்ணுக்கு பண்ண முடியுமா? அவனோட சொந்தக்காரா கேள்வி கேட்க மாட்டாளா?” என்று வெடித்தார் பாலகிருஷ்ணன்.
“அவனோட சொந்தக்காரா அவனை எப்ப கேள்வி கேட்டா? அப்படி கேட்டிருந்தா சுகந்தி ஏன் திருச்சிக்குப் போகணும்..அண்ணா குழந்தைகள் மேலே பாசமிருந்தா அவாளை அனாதையா விடுவானா..
என் புள்ளை சொல்றது சரி..யாரா இருந்தாலும் இத்தனை வருஷம் கழிச்சு பார்க்கறசே சுகந்தியைப் பற்றி ஒரு வார்த்தையாவது பேசியிருப்பா..இவன் பேசாம போனது நெருடலா இருக்கு..என்கிட்டே பவியைப் பற்றி ஒரு வார்த்தை ஜெய் சொல்லியிருந்தா இதுக்குள்ளே எப்படியாவது அவளைப் பற்றி கண்டு பிடிச்சிருப்பேன்..மூணு மாசமா என் மனசை அவன் படிச்சிண்டு இருக்கான் ஆனா அவன் மனசை நான் படிக்கலேயா ண்ணா..
இப்ப யாரைகிட்டேபோய் பவியைப் பற்றி விசாரிக்கறது? பகவானே நீ தான் வழி காட்டணும்.” என்று எப்போதும் போல் கடவுளிடம் வேண்டுகோள் வைத்தார் ருக்மிணி.
அவனறையில் படுத்துக் கொண்டிருந்த ஜெய்யின் மனத்தை முழுமையாகப் பவி ஆக்கிரமித்துக் கொண்டாள்.பத்து வருடங்களுக்கு முன் எந்த வித தயக்கமுமில்லாமல் அவனிடம் சகலத்தையும் பகிர்ந்து கொண்ட அவளுக்கும் அவனுக்கும் இடையே ஏற்பட்டிருந்த உணர்வு அவர்கள் இருவருக்கு மட்டும் பிரத்தியேகமானது என்று அந்த க்ஷணத்தில் சந்தேகமேயில்லாமல் உணர்ந்தான் ஜெய். அவளை நேரில் சந்திக்கும் போகும் அந்தத் தருணத்தைப் பற்றி யோசித்தபடி உறங்கிப் போனான்.