அத்தியாயம் – 2

பத்து வருடங்களுக்கு முன், அந்த மாலை வேளையில், பவியைத் தவிர அவள் வீட்டினர் மூவரும் பிள்ளையார் கோவிலுக்கு சென்றிருந்தனர்.  வரவேற்பறை சோஃபாவில் குப்பற படுத்தபடி டிவியைப் பார்த்துக் கொண்டு, சிப்ஸ் பாக்கெட்டைப் காலி செய்து கொண்டிருந்தாள். எப்போதும் போல், வாசல் அழைப்பு மணியை ஒருமுறை ஒலிக்க விட்டு, அவள் வீட்டிற்குள் நுழைந்தான் ஜெய்.

யார் வந்திருப்பது என்று தலையை மட்டும் திருப்பிப் பார்த்த பவி, வந்திருப்பது ஜெய் என்றவுடன் அவள் செய்து கொண்டிருந்த முக்கியமான வேலையைத் தொடர்ந்தாள். அவளெதிரே அமர்ந்த ஜெய் அவன் கையிலிருந்த டிஃபன் பாக்ஸை செண்டர் டேபிளில் வைத்தான்.

‘என்னது?’ என்று கேட்காமல், தொடர்ந்து டி வி பார்த்து கொண்டிருந்தாள் பவி. அவள் புறக்கணிப்பைப் புறக்கணித்துவிட்டு, அவள் அருகிலிருந்த டி வி ரிமோட்டை எடுத்து டி வியை அணைத்தான் ஜெய். அதுவரை படுத்து கொண்டிருந்தவள், எழுந்து அமர்ந்து அவனை முறைத்தாள்.

“நீ எதுக்கு ஆர்ப்பாட்டம் பண்ணினியோ அதுதான் அது உள்ளே இருக்கு.” என்றான் அமைதியாக. உடனே, அவன் கொண்டு வந்திருந்த டிஃபன் பாக்ஸை திறந்து, அதிலிருந்த கொழுக்கட்டைகளைப் பரபரவென்று சாப்பிட்டு முடித்தாள் பவி. பின், நிதானமாக டிஃபன் பாக்ஸை மூடி டேபிளில் வைத்தவள், அவளெதிரே அமர்ந்திருந்த ஜெய்யிடம்,

“டி வியைப் போடு.” என்றாள்.

“மிச்சம் இருக்கற சிப்ஸ் பாக்கெட்டை காலி செய்ய டி வி வேணுமா?” என்று கேட்டான் ஜெய்.

“வேற என்ன பண்றது? எல்லோரும் வடை, பாயசம், கொழுக்கட்டை எல்லாம் சாப்பிடுவா நேக்கு மட்டும் மோர்ச் சாதமா?” என்று கேட்டாள் பவி.

“அதை அமைதியாக் கேட்காம அடுத்த தெருவரைக்கும் கேட்கற மாதிரி ஆர்ப்பாட்டம் செய்வியா?” என்று கேட்டான் ஜெய்.

“நம்ம இரண்டு ஆத்தை தவிர வேற யாருக்கு இங்கே தமிழ் தெரியும்? அப்படியே தெரிஞ்சாலும் நேக்கு கவலை இல்லை..சுண்டல், கொழுக்கட்டைதான் முக்கியம்.” என்று அழிச்சாட்டியமாகப் பேசினாள் பவி.

“இவ்வளவு தெளிவா இருக்கறவ எதுக்கு நீ ஆத்துலே இல்லேன்னு உங்கம்மாகிட்டே சொன்ன..என்கிட்டே அதைச் சொல்லாம இப்போ நான் கொண்டு வந்த பிரசாதத்தைச் சாப்பிட மட்டும் எப்படி வாயைத் திறந்தியோ அதே மாதிரி இருந்திருக்கணும்.” என்று அவளின் அந்தரங்க விஷயத்தைப் பற்றி அசால்ட்டாக பேசினான் ஜெய்.

அவள் ஆத்தில் இல்லை என்ற செய்தி ஜெய் வரை எப்படி போனது என்று யோசித்த பவியும் அவனின் அந்த பேச்சில் அதிர்ச்சியடையாமல், “நைவேத்தியத்துக்கு அப்புறம் நான் பிரசாதத்தைச் சாப்பிட்டா என்ன ஆயிடும்?..அதனால் தான் சாப்பிட்டேன்..காலம்பற நான் ஆத்துலே இருந்தவரைக்கும் வேலை செய்யறதுக்கு ஓகே..அதுக்கு அப்புறம் நாட் ஓகே..எல்லாம் ஹம்பக்.” என்று பதில் சொன்ன பவியின் கண்கள் பனித்திருந்தன.

“குட்..நீ கில்டியா ஃபீல் செய்திருந்தா பிள்ளையார் இராத்திரி என் கனவுலே வந்து ஏன் நோக்கு பிரசாதத்தைக் கொடுத்தேன்னு கேட்டு என்னைத் தண்டிச்சிருப்பர்..இப்போ நீ, நான் இரண்டு பேரும் நாட் கில்ட்டி.” என்றான்.

“நோக்கு யார் சொன்னா நான் ஆத்லே இல்லேன்னு?” என்று அவனைக் கேட்டாள் பவி.

“யாருமில்லே..நீ ஏன் கோவிலுக்கு வரலைன்னு உங்கம்மாகிட்டே எங்கம்மா கேட்டா..உங்கம்மா காரணத்தையும் உன் கதையையும் சொன்னா..நான் அதைக் கேட்டிண்டு இருந்தேன்.” என்றான்.

“நேக்கு நீ பிரசாதம் கொண்டு வந்தது மினி மாமிக்குத் தெரிஞ்சா என்ன பண்ணுவ?” என்று ஜெய்காகக் கவலைப்பட்டாள் பவி.

“அம்மாக்குத் தெரிய வராது..நீ சாப்பிட்டது என்னோட ஷேர்.” என்றான்.

“அப்ப நோக்கு?”

“சுகந்தி மாமி உங்காத்து பிரசாதம்னு கொடுத்ததை நான் சாப்பிட்டேன்.. உன்னோட ஷேர்..பிரசாதம் பண்ட மாற்றம்.” என்றான் ஜெய்.

எல்லாவற்றையும் தெளிவாக யோசிக்கும் ஜெய்யைத் திணற வைக்க ஆசை வந்தது பவிக்கு.

“ஜெய்..நீ இத்துணுண்டுதான் சாப்பிடுவியா? நேக்கு இது போறாது..இன்னும் நாலு திதிப்பு கொழுக்கட்டை, கொஞ்சம் நிறைய சுண்டல் சேர்த்து நீ கொண்டு வந்திருக்கலாம்…பசி வயத்தைக் கிள்ளறது.” என்றாள் ஒரு சிப்ஸ் பாக்கெட், பத்து கொழுகட்டையைத் சாப்பிட்டு முடித்திருந்த பவி.

“நீ எங்கம்மாகிட்டே என்னை மாட்டி விட பார்க்கறேயா?” என்று கரெக்டாக கேட்டான் ஜெய்.

“யார்கிட்டே மாட்டிண்டாலும் நீதான் ஜெயிப்ப..ஏன்னா நீ மிரூத்யுஞ்ஜெய்.” என்றாள் பவி.

“நீ பசிக்கறதுன்னு சொல்றது ஷாம் (sham) …உன்னை நேக்குத் தெரியும் ஷாம்பவி.” என்றான் ஜெய்.

அவள் சொன்ன பொய்யை அவன் கண்டு பிடித்துவிட்டான் என்றவுடன்,”நீ கிளம்பு..எல்லாரும் கோவில்லேர்ந்து வர்ற நாழியாச்சு.” என்று ஜெய்யை அங்கிருந்து விரட்டினாள் பவி.

ஆனால் ஜெய் கிளம்புவதாக இல்லை.

“ஜாலியா டி வி பார்த்திண்டு இருக்க..பரீட்சைக்குப் படிக்கலையா?” என்று அவனும் சுகந்தியைப் போல் கேட்க,

“எங்கம்மாக்கு உன்னை ஏன் பிடிக்கறதுன்னு இப்பதான் நேக்குப் புரியறது..எப்ப பார்த்தாலும் படிப்பை பற்றியே தான் பேசுவியா..நோக்கு வேற டாபிக் தெரியாதா?” என்று கேட்டாள் பவி.

“படிக்கறத்துக்குதான் ஸ்டடி லீவுலே ஊருக்கு வந்திருக்கேன்.” என்றான் ஜெய்.

“போன வருஷம் முழுக்க பத்தாவது பத்தாவதுன்னு சொல்லி  டி வி யே பார்க்க விடலே..இப்பவாவது பார்க்கறனே..அடுத்த வருஷம் எப்படியும் முடியாது.” என்றாள் பவி.

“எந்த குருப் எடுத்திருக்க?” என்று கேட்டான் ஜெய்.

“ஹுமனிடீஸ்.” என்றாள் பவி.

அவளை “ஏன்?” என்று பார்வையிலேயே கேட்டான் ஜெய். பத்தாவது பரீட்சையில் பவி 90% பெற்றிருந்தாள்.

“நேக்கு இஷ்டம்.” என்று அவன் பார்வையைப் புரிந்து கொண்டு பதில் சொன்னாள் பவி.

“படிச்சு முடிச்சிட்டூ என்ன செய்யப் போற?” என்று கேட்டான் ஜெய்.

“இன்ஜினியரிங் படிச்சு முடிச்சிட்டூ நீ என்ன செய்யப் போற?” என்று அவனைக் கேட்டாள் பவி.

“நேக்குப் பிடிச்சதை செய்வேன்.”

“நானும் நேக்குப் பிடிச்சதை செய்வேன்.. ஆர்ட் இஸ் பியுட்டிஃபுல். (Art is beautiful)” என்றாள் பவி.

“ஐ க்நோ (know)…உங்காத்து முன்னாடி போட்டிருக்கற கோலம்..உங்காத்து தோட்டம்..எல்லாத்திலேயும் பியுட்டி தெரியறது.” என்றான்.

அதற்கு,“ஜெய்..நோக்கும், அப்பாக்கும் தான் என்னைப் புரியறது..அம்மா, கம்ப்ளீட் வேஸ்ட்.” என்றாள் பவி.

“சுகந்தி மாமியும் உன்னைப் பற்றி அதே மாதிரி நினைக்கலாம்..யு ஆர் எ கம்ப்ளீட் வேஸ்ட்டுன்னு. (You are a complete waste)”

“ஏன்?”

“அப்ளிகேஷேன் (application) இல்லாத இமஜினெஷன் (imagination) வேஸ்ட்..கோலம், தோட்டம் எல்லாம் தாண்டி வா பவி.” என்றான் ஜெய்.

“டிபிகல் ஸையன்ஸ் ஸுடண்ட் ஆடீட்டியுட். (Typical science student attitude)”என்றாள் பவி.

“நேக்கும் ரசனை, கற்பனை, அப்ளிகேஷன் எல்லாம் வேணும்..நீ தோட்டத்திலே வைச்சு இருக்கற பூவோட வாசனையைப் பாட்டில்லே பர்ஃயுமா (perfume) கொண்டு வர்றத்துக்கு முதல்லே உன் தோட்டத்தை, அந்த பூக்களோட அழகை அட்மையர் (admire) செய்யத் தெரியணும், அதோட வாசனையை ரசிக்கத் தெரியணும், அப்புறம் அதே வாசனையை எப்படி பாட்டில்லே கொண்டு வரலாம்ங்கறத்துக்குக் கற்பனை வேணும், அந்தக் கற்பனைக்கு வடிவம் கொடுத்து செயல்படுத்தணும்..நீ ரசனை, கற்பனையோட நின்னு போயிடற..டோண்ட் ஸ்டாப்.. அப்ளை யுவர் ஸெல்ஃப் பவி..அட்வர்ஸிடிலேயும்.(apply yourself in adversity too)” என்றான் ஜெய்.

ஒரே ஒரு நிமிடம் ஜெய் சொன்னதை மனத்தில் வாங்கி, யோசித்த பவி,”ஸையண்டிஸ்ட்..ஒண்ணை நீ கணக்குலே சேர்த்துக்காம விட்டிட்ட.. அட்மிரேஷன் (admiration), இமஜினெஷன் (imagination),அப்ளிகேஷன் (application) நீட்ஸ்   இன்ஸ்பிரேஷன் (inspiration)..அது இல்லேன்னா ஆர்ட்டும், ஸையன்ஸும் அம்போன்னு வேஸ்ட் ஆயிடும்.” என்றாள்.

“ஃபைன்..இட்ஸ் A2I2 தென்..நேக்கு நீ இன்ஸ்பிரேஷன், நோக்கு நான்..நாம இரண்டு பேரும் அம்போன்னு வேஸ்ட் ஆக மாட்டோம்..ஓகே?” என்று சொல்லி பவியை நோக்கி கை நீட்டினான் ஜெய்.

“ஃபைன்..இட்ஸ்  A2I2.” என்று சொல்லி அவன் கையைக் குலுக்கினாள் பவி.  அந்த க்ஷணம், பொதிப்பருவத்தில் இருந்த இருவரும், ஒருவரையொருவர் பார்த்துக் கொண்ட போது, சின்ன தீப்பொறி பற்றிக் கொண்டது. 

பத்து வருடங்களாகியும் அந்தத் தீப்பொறி தணிந்து போகாமல் தணலாக மாறி அவனுள் இன்றும் தகித்துக் கொண்டிருந்தது. அந்த தீப்பொறி பெரும் தீயாக மாறாமல் போனதற்கு காரணம் அவனா? இல்லை பவியின் வாழ்க்கையில் ஏற்பட்ட அட்வர்ஸிட்டியா என்று யோசித்துக் கொண்டிருந்தான் ஜெய்.  

ஜெய்யின் யோசனையைக் கலைத்தது ருக்மிணியின் குரல்.

“காரை ஓரமா நிறுத்துங்கோன்னா..அந்தக் கடைலே பிள்ளையார் நன்னா லட்சணமா இருக்கர்..வாங்கிண்டு போயிடலாம்.” என்று காரை நிறுத்தி, களிமண்ணில் உருவாக்கிய பிள்ளையார்ச் சிலையை வாங்கி வரப் போனார்கள் பாலகிருஷ்ணனும் ருக்மிணியும்.