அத்தியாயம்-2-1

அவர்கள் திரும்பி வர எடுத்துக் கொண்ட பதினைந்து நிமிடங்களில், அவன் ஃபோனில் வந்திருந்த மெஸேஜுகளுக்குப் பதில் அனுப்பிக் கொண்டிருந்தான் ஜெய்.  அப்போது, காரின் டேஷ்போர்டில் இருந்த பாலகிருஷ்ணனின் ஃபோன் ஒலிக்க, அதை எடுத்த ஜெய், அழைப்பது கீதா என்றவுடன், ஓபன் செய்து பேச ஆரம்பித்தான்.

“சொல்லு க்கா.” என்றான்.

“ஆத்துக்கு வந்திட்டியா டா.” என்று கேட்டாள் கீதா.

“லேண்டாகி இரண்டு மணி நேரமாயிடுத்து..இன்னும் ஆத்துக்குப் போய்ச் சேரலே..அம்மாவும் அப்பாவும் பிள்ளையார் வாங்கிண்டு வரப் போயிருக்கா..நான் கார்லே வெயிட் பண்ணிண்டு இருக்கேன்.” என்றான்.

“இரண்டு பிரம்மச்சாரிகளை ஆத்துக்கு அழைச்சிண்டு போறாளாக்கும் அம்மாவும் அப்பாவும்.” 

“நான் வந்து இறங்கினதுலேர்ந்து அம்மாவே சும்மா இருக்கா..நீ எதுக்கு ஆரம்பிக்கற க்கா.” என்று கேட்டான் ஜெய்.

“ஏன் டா என் வாயை மூடற..அமெரிக்காலே இருந்தாலாவது பொண்ணைப் பெத்தவா உன்னை ஆதரிப்பா..இப்ப நீ இங்கேயே வந்துட்டே..அதுவும் இனிமேதான் ஒரு வேலையை தேடிக்கணும்..எங்கே போய் நோக்கு பொண்ணைத் தேடறதுன்னு கவலைலே இருக்கா அம்மா.” என்றாள் கீதா.

“ஏன் அமெரிக்காலே இருந்தாதான் நேக்கு ஆம்படையா கிடைப்பாளா..இங்கே இருந்தா கிடைக்க மாட்டாளா?” என்று ஆத்திரமாகக் கேட்டான் ஜெய்.

“அப்படி இல்லை டா..நமக்குத் தோது படற இடமா அமையணும்னு அம்மா நினைக்கறா.” என்றாள் கீதா.

“நேக்கு என்ன தோதுப்படும்னு நேக்குதான் தெரியும்..அம்மாக்கு இல்லை.அண்ட் ஐயாம் ஆன் ஸபாட்டிக்கல் (sabbatical). ”

“நீ பர்மனெண்டா இங்க வர்ற மாதிரிதான் அம்மா நேக்கு சொன்னா அதான் கேட்டுட்டேன்.. தெரியாமச் சொல்லிட்டேன் மன்னிச்சுடூ..”

“விடு க்கா…அங்கே இருக்கறவாளுக்கு நான் அங்கே திரும்பி வரணும்..நேக்கு அங்கே திரும்பப் போக வேணாம்” என்றான் ஜெய்.

“அப்ப என்ன டா செய்யப் போற?”

“கார்பரெட் ஆர் அண்ட் டி (corporate R and D) ஆஃபர்ஸ் இருக்கு..ப்ளஸ் யுரொப்பியன் யுனிவர்ஸிட்டீஸ் (European Universities) ஆஃபர் இருக்கு.அண்ட் நேக்கு ஒரு வருஷம் டயமிருக்கு.”

“சரி டா..யோசிச்சுப் பண்ணு..அம்மாகிட்டே நான் சாயந்திரமா ஃபோன் செய்யறேன்னு சொல்லு..நேக்கும் ஊருபட்ட வேலை இருக்கு..எல்லாத்தையும் ஒதுக்கி வைச்சிட்டுதான் உன்கிட்டே பேசிண்டிருக்கேன்..நீ ஸெட்டில் ஆன அப்புறம் ஒரு நடை எங்காத்துக்கு வந்துட்டூ போ..ஸமிக்‌ஷாக்கு உன் மூஞ்சியே மறந்து போயிடுத்து.” என்றாள் கீதா.

“வர்றேன் க்கா.” என்று சொல்லி ஃபோன் அழைப்பைத் துண்டித்தான் ஜெய்.

கீதா சொன்னதில் இருந்த உண்மையை அவனால் ஏன் ஏற்று கொள்ள முடியவில்லையென்று ஜெய்க்குப் புரியவில்லை.  அவன் நிரந்தரமாக இந்தியா திரும்ப முடிவெடுத்திருந்தான். ஆனால், அவனுடைய முடிவை மாற்றிக் கொள்ள, அவனுக்கு ஒரு வருடம் கெடு கொடுத்திருக்கிறது அவன் வேலை பாரத்துக் கொண்டிருந்த பல்கலைக்கழகம்.  அந்தத் தகவலை அவன் ருக்மிணியி, பால கிருஷ்ணனிடம் இதுவரை பகிர்ந்து கொள்ளவில்லை. அவனுடைய இன்ஸ்பிரேஷுனுக்கு என்னவாயிற்று என்று கண்டுபிடிக்க முடியாத ஃபரஸ்ட்ரெஷனில் (frustration) எடுத்த முடிவு இது.

அவனுடைய பதினொன்றாம் வகுப்பிலியிருந்து கல்லூரியின் இரண்டாம் வருடம் வரை வட இந்தியாவில் இருந்த ப்பளிக் செக்டர் கம்பெனியின் ப்ளாண்ட்டில் வேலை பார்த்தார் பால கிருஷ்ணன். அங்கேதான் ஷாம்பவியின் அப்பா சுதர்ஷன்னும் பாலகிருஷ்ணன் கீழ் வேலை பார்த்து வந்தார்.  அவன் முதல் வருடம் கல்லூரியில் இருந்த போது, எதிர்பாராதவிதமாக, மாரடைப்பில் சுதர்ஷன் இறந்து போனதால் அந்த ஊரை விட்டு செல்ல நேர்ந்த அவர் குடும்பத்தாருடன் உறவு விட்டுப் போனது பாலகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு.  பாலகிருஷ்ணன் பணியிலிருந்து ஒய்வுப் பெற்று சென்னையில் ஸெட்டில் ஆன பின்பு காலப் போக்கில் அவரோடு வேலை பார்த்தவர்களுடனும் உறவு மறைந்து போனது.

கடந்து காலத்தை யோசித்தபடி ஜெய் அமர்ந்திருந்த போது, மனையில் பயபக்தியுடன் பிள்ளையாரை ஏந்தியபடி காருக்கு வந்தார் ருக்மிணி.  அவன் இருந்த இடத்திலிருந்தே கையைப் பின்பக்கம் நீட்டி காரின் பின் கதவைத் திறந்து விட்டான் ஜெய்.  பிள்ளையாரை ஜாக்கிரதையாக ஸீட்டில் வைத்த பின், ருக்மிணியும் அருகில் அமர்ந்து கொண்டார்.  பாலகிருஷ்ணன் காரைக் கிளப்பியவுடன்,

“அண்ணா, நான் இப்போ நூத்தம்பது.” என்றார் ருக்மிணி.

“ஸீரியஸ்லி?” என்று நம்ப முடியாமல் கேட்டான் ஜெய்.

“ஆமாம் டா. இன்னைக்கு காலம்பற ஆத்தைவிட்டு கிளம்பினதிலேர்ந்து இதுவரைக்கும் அத்தனை பிள்ளையார் பார்த்திருக்கேன்.”

“நான் நினைச்சேன் இரண்டு நாளா பார்த்திண்டு வரேள்ன்னு.”

“நான் எங்கடா வெளிலே போறேன்..கீது ஆத்துக்குக்கூட போய் ரொம்ப நாளாச்சு.” என்றார் ருக்மிணி.

“இப்பதான் அப்பா ஃபோன்லே கீதாக்கா பேசினா.” என்றான் ஜெய்.

“என்னவாம் டா?”

“ஜென்ரல்லா விசாரிச்சா..அவளுக்கு நிறைய வேலையிருக்கு அதனாலே உன்கிட்டே சாயந்திரமாப் பேசறேன்னு சொல்லச் சொன்னா..என்னை ஒரு நடை அவாத்துக்கு வந்து போகச் சொன்னா.” என்றான்.

“என் பொண்ணுக்கு அப்படி ஒரு பொல்லாத மாமியார்..வியநாயகர் சதுர்த்திக்கு உட்கார்ந்த இடத்திலேயே ஊருபட்ட கொழுக்கட்டை பிடிக்கலாம்..ஆனா அந்த மாமி ஒரே இடத்திலே உட்கார்ந்திண்டா இடுப்பு பிடிச்சுக்கறதுன்னு சொல்றா..எல்லாம் வேலையும் கீது தலைலே தான் விழறது..அவ சொன்ன மாதிரி ஒரு நடை நீ அவாத்துக்குப் போயிட்டு வந்துடு..இல்லேன்னா மாமி ஏதாவது சொல்லுவா.” என்றார் ருக்மிணி.

“காமெடி பண்றியா? நான் இன்னும் நம்மாத்துக்கே போகலே.” என்றான் ஜெய்.

“இப்ப இல்லை டா” என்று ஜெய்யிடம் ருக்மிணி சொல்லிக் கொண்டிருந்த போது கார் பெரிதாக குலுங்க,“மெதுவா போங்கோன்னா.” என்றார் பாலகிருஷ்ணனிடம்.

“ஏற்கனவே மெதுவாதான் போயிண்டிருக்கேன்..சீக்கிரமா ஆத்துக்குப் போக வேணாமா?” என்று கேட்டார் பாலகிருஷ்ணன்.

“நான் பிள்ளையாருக்காக சொன்னேன்.” என்றார் ருக்மிணி.

“நான் உன் புள்ளையாண்டானுக்காக சொன்னேன்.” என்றார் பாலகிருஷ்ணன்.

“பரவால்லே ப்பா..மெதுவாவே போங்கோ..ஆத்துக்குப் போய் நான் தூங்கதானே போறேன்.” என்றான் ஜெய்.

“ஏன் டா..கொஞ்ச நாழி முழிச்சிண்டு இருந்தா இரண்டு பூஜையும் முடிஞ்சிடும்.” என்றார் ருக்மிணி.

“இரண்டா?” என்று ஜெய் கேட்க,

“முதல்லே நம்ம பில்டிங் பிள்ளையாருக்கு..அப்புறம் நம்மாத்துப் பிள்ளையாருக்கு…இரண்டும் சேர்த்து இருபது கொழுக்கட்டை..ஒரு கிண்ணம் சுண்டல்..நேக்கு அவ்வளவுதான் முடியறது..டெய்லி சமையலே பிரம்மப் பிரயத்தனமா இருக்கு.” என்றார் ருக்மிணி.

“நீ ஏன் ம்மா கஷ்டப்படற? சமையலுக்கு ஆள் போட்டுக்கோ.” என்றான் ஜெய்.

“அதெல்லாம் சல்லடை போட்டுச் சலிச்சுட்டேன்..வீட்டு வேலைக்கே ஆள் கிடைக்க கஷ்டமா இருக்கு..சமையலுக்கு எங்கே போகறது? 500 ஃபிளாட்ஸ் இருக்கற காலனி..சிட்டிலேர்ந்து பத்து கிலோமீட்டர்.. வீட்டு வேலைக்கு ஆள்கள் பஸ்லேயும் ட் ரெயின்லேயும் வரா..அவா வர்ற டயத்துக்கு நாம அட்ஜெஸ்ட் செய்ய வேண்டியிருக்கு..ஆத்தை எப்போ பெருக்கி, துடைச்சா என்ன? அரைமணி நேரம் லேட்டானா ஒண்ணும் ஆகாது.. ஆனா ஆகாரத்தை டிலே பண்ண முடியுமா..டயத்துக்கு வயித்துக்குப் போட்டாகணுமே.” என்று அங்கலாய்த்தார் ருக்மிணி. 

“இங்கேயே நோக்கு ஒண்ணும் செய்ய முடியலை..அமெரிக்காவுக்கு வந்து என்ன செய்யறதா இருந்த?” என்று கேட்டான் ஜெய்.

“அங்கே எல்லாத்துக்கும் மெஷின் டா.” என்றார் ருக்மிணி.

“அவனுக்குப் போய் மெஷினைப் பற்றி சொல்றியா..10 வருஷம் கழிச்சு நோக்கு ஜெய்யைப் பார்க்கணும்னா அவனைப் போல இருக்கற ஒரு பாட்டை (bot) அனுப்பி வைப்பான்..அது மெஷின்னு தெரியாம அவன்னு நினைச்சிண்டு அதுகிட்டேயும் நீ இப்படித் தான் பேசிண்டு இருக்க போற.” என்றார் பாலகிருஷ்ணன்.

“பார்க்கறத்துக்கு வேணும்னா அவனைப் போல இருக்கலாம்..அவனைப் போல என்கிட்டே பேசி, சிரிக்க முடியுமான்னா அதுக்கு?” என்று கேட்டார் ருக்மிணி.

“சொல்லு டா ஜெய் உங்கம்மாகிட்டே..எந்த மெஷினோட வேலை பார்க்கறேன்னு” என்றார் பால கிருஷ்ணன் 

பாலகிருஷ்ணன் சொன்னது காதில் விழுந்தாலும் பதில் சொல்லாமல் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஜெய் A2I2 தான் அவனை AIயில் தள்ளியதோ என்று எண்ணிக் கொண்டிருந்தான். அதன் விளைவாகதான், சமீபக் காலமாக அவனுள் B2I2 ஸைலண்டாகப் போட்டி போட்டுக் கொண்டிருந்தது.

“என்ன டா ஜெய்? எதுலே டா?” என்று ருக்மிணியும் கேட்க, 

“AI (Artificial Intelligence) ல..பாட்ஸோட (bots) ..நீ பேசினா உன்னைப் புரிஞ்சுண்டு அது பதில் சொல்லணும், நீ பேசாம இருந்தா ஏன்னு அது கண்டு பிடிக்கணும்..நான் இரண்டு லெவல்லையும் இருக்கேன்.” என்றான்.

“நிஜமாவா டா..அந்த மாதிரியெல்லாம் ஆச்சுன்னா லோகம் தாங்காது டா.” என்றார் ருக்மிணி.

“ஏன் மா?” என்று ஜெய் கேட்க,

“நான் பேசாம இருந்தா அது ஏன்னு கண்டுபிடிச்சிடும்னு சொல்றியே..அப்ப என் மேலே நேக்கே பயம் வந்திடும் டா.” என்றார் ருக்மிணி.

“அந்த நாள் சீக்கிரமா வராதான்னு இருக்கு நேக்கு..நீ கண்ட மாதிரி நினைக்கறதெல்லாம் ஒழிஞ்சுப் போகும்.” என்றார் பால கிருஷ்ணன்.

“நான் மட்டுமா மனசுல கண்டதை நினைக்கறேன்..லோகத்திலே இருக்கற எல்லாரும்தான் நினைக்கறா.” என்றார் ருக்மிணி.

“நீ உன்னைப் பற்றி மட்டும் கவலைப்படு..மற்றவாளைப் பகவான் பார்த்துப்பர்.” என்றார் பால கிருஷ்ணன்.

அவருக்குப் பதில் சொல்ல நினைத்த ருக்மிணியை அவசரமாக இடைமறித்தான் ஜெய். 

“அம்மா, நீ என்ன சொல்லணும்னு நினைக்கறீயோ அதை நான் சொல்லட் டான்?” என்று கேட்டான் ஜெய்.

“சொல்லு.” என்றார் ருக்மிணி.

அவனுக்கு கிடைத்த அந்த வாய்ப்பை மிஸ் செய்ய விரும்பவில்லை ஜெய். B2I2 தான் AI ஆராய்ச்சியின் அடிப்படை.  எனவே,

“கலிகாலத்திலே எங்கேயிருந்து பகவான் பார்த்துப்பர்..இனி பாட் (bot) தான் பார்த்துபார்.” என்று சொல்லி முடித்த ஜெய்யின் கையை பின்னாலிருந்து கிள்ளி, “நான் மனசுல நினைச்சதை அப்படியே சொல்லிட்டே டா..பகவானே” என்று உரக்கச் சொன்ன ருக்மிணி, ‘இவனோட இனி ஜாக்கிரதையா இருக்கணும்.’ என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டார்.

அவர் முகபாவத்தைப் பார்த்து கொண்டிருந்த ஜெய் அவர் பகவானுக்கு நன்றி சொன்னவுடன், அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டே, “நோ.. நோ..நோ பகவானே ஸே “பாட்டே” (bottae)” என்றான்.

“ஜெய்..பிள்ளையாரைப் பக்கத்திலே வைச்சிண்டு பகவானைக் கேலி பண்ணாத.” என்று கண்டித்தார் ருக்மிணி.

காரின் பின் ஸீட்டில் கம்பீரமாக அமர்ந்திருந்த களிமண் பிள்ளையாரைப் பார்த்து,”பிள்ளையார் சுழி போட்டு பிராஜெக்ட் ஆரம்பிக்கற உன்னோட பரம பக்தனைத் திட்டு வாங்க வைக்கறேயே.” என்று பிள்ளையாருடன் பேசியவனைப் பார்த்து,

“என்ன டா..பிள்ளையார்கிட்டே போய் பிரண்டாட்டம் பேசிண்டிருக்க?” என்று கேட்டார் ருக்மிணி.

“நோக்குத் தெரியாது மா..அவர் பர்த்டேகாகன்னுதான் என்னை  இன்னைக்கு வரவழைச்சிருக்கர்.” என்றான் ஜெய்.

உண்மையில், இரண்டு இன்ஸ்பிரெஷனையும் சேர்ப்பதற்கான ஸ்பெஷல் மிஷின் (mission), பிள்ளையார் பர்த்டே இன்விடேஷனிலிருந்து ஆரம்பமானது என்று ஜெய், பவி இருவருமே அறிந்திருக்கவில்லை.