“அவன் ஒரு பேச்சுக்கு சொல்றான்..இனிமே நம்மாத்துக்கு எங்கே வரப் போறான்..கல்யாணத்துக்கு தான் இப்பவே நேர்லே கூப்பிட்டாச்சே.” என்றார் சுகந்தி.
அதற்கு, பட்டென்று,“வர வேண்டாம்..நிம்மதி.” என்றாள் பவி.அதற்கு பின் மௌனமானார் சுகந்தி. அப்போது பவியின் ஃபோன் அழைக்க, அழைப்பை ஏற்று,
“சொல்லு டா” என்றாள்.
“ஆமாம்..இன்னைக்கு இங்கே வந்திட்டுப் போனர்..பெங்களூர்ல தான்..சென்னைலே..நேக்கு விவரம் தெரியாது..அம்மாகிட்டே பேசிக்கோ.” என்று சொல்லி அவளுடைய கைப்பேசியை சுகந்தியிடம் கொடுத்தாள் பவி.
“என்ன டா? என்று ஆரம்பித்தவர் அதன் பின் அந்தப் புறம் தீபக் சொல்வதை கேட்டு கொண்டிருந்தார் சுகந்தி.அவன் பேசி முடித்த பின்,
“உன் ஃபோன் நம்பர் மிஸ் ஆயிடுத்துன்னு சொன்னான் டா அதான் நான் திரும்ப கொடுத்தேன்..மெஸெஜ் அனுப்பியிருக்கானா? நன்னா இருக்காது டா.. நிச்சயதார்தத்துக்கு நம்ம உறவுக்காராளும் வருவா..நீ போய் தலையைக் காட்டிட்டு வந்துடு..கல்யாணத்துக்கு நீ வர வேண்டாம்..நானும் பவியும் போயிட்டு வரோம்.” என்று சொல்லி ஃபோன் அழைப்பைத் துண்டித்தார்.
“நான் ஒண்டியா வேற என்ன செய்ய முடியும்? அதுக்குள்ளே உன் கல்யாணத்தையா நடத்த முடியும்?..பெரியவ நீ இருக்கும் போது அவன் பொண்ணுக்கு கல்யாணம் பேசியிருக்கான்..உங்கப்பா இருந்திருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா நமக்கு?..
அவனைக் கேள்வி கேட்க யாருமில்லே அதனாலே அவன் இஷ்டத்துக்கு நடந்துக்கறன்.. நம்மளை நடத்தறான்..அண்ணா இல்லையேன்னு வருத்தம் கிடையாது.. மன்னின்னு நேக்கு மரியாதை கிடையாது..அண்ணவோட குழந்தைகள் மேலே அன்பு கிடையாது..எல்லாம் என் தலையெழுத்து.” என்று சொல்லி கண்ணீர் வடித்தார் சுகந்தி.
சுகந்தியின் கண்ணீரைப் பார்த்து பவியின் மனது பாரமாகிப் போனது.அவரை அவளோடு அணைத்துக் கொண்டு,
“ப்ளீஸ்.. அழாதே ம்மா..நம்மகூட பகவான் இருக்கும் போது பிறத்தியார் தயவு எதுக்கு..நடக்கறது எல்லாத்தையும் பகவான் பார்த்திண்டிருக்கர்..அவருக்குத் தெரியும் எப்ப எதை செய்யணும்னு….நீ கவலைப்படாதே..
நான் வாக்கிங் போயிட்டூ கேட் பக்கத்திலே இருக்கற கடைலேர்ந்து ஒரு லிட்டர்ப் பால் வாங்கிண்டு வரேன்..இராத்திரி தயிருக்கு உறைக்கணும்..நாளைக்கு காலை காப்பிக்கும் பால் வேணுமே.” என்று சொல்லி, கையில் ஒரு துணிப்பையையும் பர்ஸையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் பவி.
“ஒரு நாள் தயிர், பால் இல்லேன்னா ஒண்ணுமாயிடாது..வாக்கிங் வேணாம் பவி..மழை வர்ற மாதிரி இருக்கு.” என்றார் சுகந்தி.
“பரவால்லே ம்மா..குடை எடுத்திண்டு போறேன்..கிடுகிடுன்னு இரண்டு ரவுண்டு அடிச்சிட்டு பாலை வாங்கிண்டு வந்திடுறேன்.” என்று சுகந்தி மறுபடியும் மறுக்கும் முன், வாசல் கதவை சாத்திக் கொண்டு வெளியேறினாள் பவி.
சுகந்தியின் அழுத முகத்தையும் வேதனையும் பார்த்துக் கொண்டு அவளால் வீட்டினுள் இருக்க முடியவில்லை.இரண்டு ரவுண்டு போக நினைத்தவள், ஐந்து ரவுண்டு முடிந்த பின்னும் வீட்டிற்குத் திரும்பிப் போக விரும்பாமல் மெயின் கேட்டின் அருகிலிருந்த பூங்காவில் போய் உட்கார்ந்து கொண்டாள்.
மழைக் காலமாதலால் பூங்கா பச்சை பசேல் என்று கண்ணிற்குக் குளிர்ச்சியாக இருந்தது.அதை வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தவளின் மனம் தான் வாடி இருந்தது. சற்றுமுன் பகவான் பார்த்துக் கொள்வார் என்று சொன்னவளுக்கு பிள்ளையார் சதுர்த்தி அன்று விநாயகரிடம் வேண்டிக் கொண்டது நினைவுக்கு வந்தது.அவளுடைய இன்ஸ்பிரெஷனை அவள் கண்ணில் காட்டிக் கொடுத்து, அவளது தவிப்பை அவர் தீர்த்து வைப்பார் என்று நம்பிக் கொண்டிருந்தது இப்போது முட்டாள்தனமாகப்பட்டது.
இதுவரை அப்பா இல்லாமல் அனைத்தையும் சமாளித்தவளுக்கு முதல்முறையாக அவர் உயிரோடுஇருந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. சுதர்ஷன் இருந்திருந்தால் இன்று அவளுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்கமா? என்று கேள்வி இத்தனை வருடங்கள் கழித்து அவளுக்குள் எழுந்தது. அந்த நொடி, அவளுடன், அவளுக்காக என்று அவளுடைய அப்பா செய்த எல்லாக் காரியங்களும் அவள் மனதை ஆக்கிரமித்துக் கொண்டன.
அவருடன் சேர்ந்து பேட்மிண்டன் விளையாடிய நாள்கள்,சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்த தினங்கள், சைக்கிளின் கேரியரில் அவரை உட்கார வைத்து டவுன்ஷிப்பை ரவுண்ட் அடித்த நாள்கள், தீபக்குடன் சேர்ந்து மூவருமாக பந்து விளையாடிய மாலைப் பொழுதுகள், அவளுக்காக சுகந்தியிடம் அவர் சிபாரிசு செய்த தருணங்கள். அவளது தேவைகேற்ப தந்தையாக, தோழனாக இருந்தவர், ஜெய்யின் மீது அவளுக்கு ஏற்பட்டிருந்த விருப்பத்தை அறிந்து, அவளுக்கேற்ற தோழனாக, துணையாக அவன் இருப்பானென்று உணர்ந்து, அவளுடைய ஆசையை அவர் நிறைவேற்றி இருப்பார் என்று உணர்ந்த க்ஷணத்தில் முழுவதுமாக உடைந்து போய், அப்பா, அப்பா என்று அவள் அரற்ற, அவளை அணைத்து ஆறுதல் அளிக்க கூட துணையில்லாமல், தனிமையில், கண்களில் கண்ணீருடன் அமர்ந்திருந்தாள் பவி.
மாலை நேரம் வெளிச்சம்மறைந்து போய் மழைக்கால இருட்டு சூழ்ந்திருக்க அப்படியே சிலையாக அமர்ந்திருந்தவளைக் காரின் ஹாரன் ஒலி நடைமுறைக்கு கொண்டு வந்தது. இனியும் பூங்காவில் தாமதிக்க முடியாதென்று முகத்தைத் துடைத்துக் கொண்டு பால் வாங்க கடையை நோக்கிச் சென்றாள் பவி.
கடையில் கூட்டமில்லை.கடையினுள் அவள் நுழைந்தவுடன் மழைத் தூறல் ஆரம்பித்தது.அவரது கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த கடைக்காரர்,
“என்ன வேணும்?” என்று அவளிடம் சைகையில் கேட்க,
“ஒரு லிட்டர்ப் பால்.” என்று சொல்லி அவள் பர்ஸிலிருந்து பணத்தை எடுத்து கவுண்டரில் வைத்தாள்.
உடனே,“ஸர்..உங்களுக்கு எவ்வளவு லிட்டர்ப் பால் வேணும்னு சொன்னீங்க?” என்று ஃபோனில் கேட்டார் அந்தக் கடைக்காரர்.
“ஒரு லிட்டரா வேணும்?..கொஞ்ச வெயிட் பண்ணுங்க..செக் பண்ணி சொல்றேன்.” என்று ஃபிரிஜை திறந்து பார்த்தார்.அதில் இருந்தது இரண்டு அரை லிட்டர்ப் பால் பேக்கெட்டுகள்.
உடனே ஃபோனில் இருந்தவரிடம்,”ஸர்..என்கிட்டே ஒரே ஒரு லிட்டர்ப் பால் தான் இருக்கு..இங்கே கடைலே கஸ்டமர் ஒருத்தங்க ஒரு லிட்டர்க் கேட்கறாங்க..உங்களுக்கு அரை லிட்டர் எடுத்து வைக்கறேன் அவங்ககிட்டே அரை லிட்டர்க் கொடுத்திடறேன்..ஓகே வா?” என்று அவர் கேட்கும் போதே,
வெளியே மழை வலுப்பதைப் பார்த்து,“ஸர்.” என்று பவி குரல் கொடுக்க,
“கொஞ்சம் இரு ம்மா..பேசிக்கிட்டிருகேன்.” என்று அவளைக் காத்திருக்க வைத்த கடைக்காரர்,கைப்பேசியில்,
“நானும் சீக்கிரமாக் கடையை மூடிட்டு வீடு போய்ச் சேரணும்..நீங்க வர்ற வரைக்கும் வெயிட் செய்ய முடியாது..யார் வீட்லேயாவது கொடுத்திட்டுப் போகட்டுமா?..இங்கே வந்திருக்க கஸ்டமர்கிட்டேயே உங்களோட பால் பேக்கெட்டையும் கொடுத்திடறேன்..அவங்க வீட்லே போய்நீங்க வாங்கிக்கங்க.” என்று அவர் சொல்லி கொண்டிருக்கும் போதே,
“எனக்கு பால் வேணாம்..அவாளுக்கு ஒரு லிட்டர் தேவை போலிருக்கு…அவங்களுக்கே கொடுத்திடுங்கோ.” என்று கவுண்டரில் வைத்த பணத்தை எடுக்கப் போன பவியிடம்,
“கொஞ்சம் பொறு ம்மா..மழை காலத்திலே சிக்னல் சரியா இல்லை..அந்த ஸர் பேசறது கேட்க மாட்டேங்குது..நீங்க சொல்லுங்க ஸர்.” என்று அந்தப் புறம் சொன்னதைக் கவனமாக கேட்டுக் கொண்டு ஃபோன் அழைப்பைத் துண்டித்தார் கடைக்காரர். அதன் பின்,
“இந்தாங்க ம்மா..அரை லிட்டர் உங்களுக்குக் கொடுக்கச் சொன்னாங்க…நீங்க கொஞ்சம் லேட்டா வந்திருந்தாலும் ஒரு லிட்டரை அவங்களுக்கே ஒதுக்கி வைச்சிருப்பேன்..அப்படிச் செய்த பிறகு அதிலிருந்து உங்களுக்குகாக அரை லிட்டர் எடுத்துக் கொடுத்திருக்க முடியாது..வாக்கு கெட்டு போயிடுச்சுன்னா வியாபாரம் கெட்டுப் போயிடும்.” என்று சொல்லி, பணத்தை எடுத்துக் கொண்டு, பவியின் கையில் அரை லிட்டர்ப் பால் பேக்கெட்டைக் கொடுத்தார்.
பாலை வாங்கிக் கொண்டு,“தாங்க்ஸ்” என்று நன்றி சொல்லி விட்டு படியிறங்கிய பவியை மறுபடியும் அழைத்தவர்,”என் ஃபோன் நம்பர் இருக்கா உங்ககிட்டே இல்லைன்னா நம்பர் எடுத்துக்கோங்க..ஃபோன்லே தகவல் சொன்னா போதும் சாமானைத் தனியா எடுத்து வைச்சிடுவேன்..இவங்களைப் போல எல்லாரும் நல்ல மாதிரி கிடையாது..அவங்க சாமானை வேற யாருக்கும் விட்டுத் தரமாட்டாங்க.” என்றார் அந்தக் கடைக்காரர்.
“என்கிட்டே உங்க நம்பர் இல்லைங்க..அடுத்தமுறை கடைக்குவரும்போது உங்க நம்பர் வாங்கிக்கறேன்.” என்று பதில் சொல்லி விட்டு, பால் பேக்கெட்டைத் துணிப்பையில் போட்டுக் கொண்டு, குடையை விரித்து, வீசிய காற்றில், கொட்டும் மழையில், உடைந்து போயிருந்த அவளது மனதை ஒட்ட வைத்தபடி, இந்த விஷயத்தில் அம்மாவை எப்படிச் சமாளிப்பது, சமாதானம் செய்வது? என்று யோசித்தபடி வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தாள் பவி.
காரின் கண்ணாடி வழியாக வெளியே கொட்டிக் கொண்டிருந்த மழையும் அடித்துக் கொண்டிருந்த பலத்த காற்றும் ஜெய்யை நடைமுறைக்கு கொண்டு வந்தன.
“அப்பா, நான் வண்டி ஓட்டட்டுமா? காத்து பலமா அடிக்கறது.. மழையும் பெரிசாப் பெய்யறது.” என்று கோவிலிருந்து புறப்பட்டதிலிருந்து மௌனமாக இருந்த ஜெய் முதல்முறையாக வாயைத் திறந்தான்.
“வேணாம் டா..கோவிலுக்கு வரும்போது நீதானே ஓட்டின..இருட்டிலே இந்த ரோடு நோக்கு பழக்கமில்லை..அதனாலே இத்தனை மழைலே நீ ஓட்ட வேண்டாம்..நானே ஓட்டறேன்.” என்று பதில் சொன்ன பாலகிருஷ்ணனுக்குத் தெரியும், ஜெய்யின் தற்போதைய மனநிலையில் அவன் கார் ஓட்டுவது உசிதமில்லையென்று.