அத்தியாயம் – 18

அந்த மாலை வேளையில் பாலகிருஷ்ணனோடு வாக்கிங் சென்றான் ஜெய்.

“என்ன டா? காலைலே மழைலே சைக்கிளிங் செய்ய முடியலேன்னு இப்ப என்கூட வந்திருக்கியா?’ என்று கேட்டார் பாலகிருஷ்ணன்.

“ஆமாம் ப்பா…தீபாவளிக்கு அப்புறம் இப்படி தான இருக்கு..காலம்பற மழை..மத்தியானம் வெய்யில்..இராத்திரி திரும்ப மழை.”

காலனியின் மெயின் கேட் வழியாக வெளியே சென்று சுற்று சுவரை ஒட்டி நடந்தனர்.

“இந்த ஃபிளாட்டுக்கு வந்து ஆறு வருஷம் மேல ஆயிடுத்து..இந்த ஊர் அப்ப எப்படி இருந்ததோ அதே போல தான் இப்பவும் இருக்கு..மழைக் காலத்திலே காம்பவுண்ட் சுற்றி தேங்கற தண்ணி அப்படியே இருக்கும்..வேற எங்கேயும் போகறத்துக்கு வழியே இல்லை.” என்று சொல்லிக் கொண்டே தேங்கியிருந்த தண்ணீர்க் குட்டைகளைத் தவிர்த்தபடி பேச்சையும் நடையையும் தொடர்ந்தனர் அப்பாவும் பிள்ளையும்.

“இந்த ஏரியா இம்ப்ரூவ் ஆகலே டா..புதுசா யாரும் வீடு கட்டிண்டு வரலே..நம்ம அக்கம் பக்கத்திலே வேற எந்த காம்ப்ளெக்ஸும் வரலே..மெயின் ரோட்லதான் நிறைய பில்டிங் வந்திருக்கு…பின்னாடி கேட் பக்கம் இப்ப கொஞ்சம் கடைகள் வந்திருக்கு..ஆனா அவசரத்துக்கு மெயின் கேட்  கடைதான்..ஏதாவது எக்ஸ்ட்ரா தேவைன்னா அவனுக்கு முதலே ஃபோன் செய்யணும் இல்லை நாம தான் மெயின் ரோட் வரைக்கும் போய் வாங்கணும்..

நல்ல ஆஸ்பத்திரி, ஸ்கூலுக்கு அஞ்சு, பத்து கிலோ மீட்டர்ப் போக வேண்டியிருக்கு..அன்னைக்கு நீ தான் மிஸஸ் ஸென்னை ஆஸ்பத்திரிக்கு அழைச்சிண்டு போனே..நீ இருந்திருக்கலேன்னா அந்த மாமி தான் தனியா ஆட்டோலேயோ டாக்ஸிலேயோ போயிருப்பா..

எங்களுக்கும் அதே நிலைமைதான்..ஏதோ இதுவரைக்கும் உடம்புக்கு ஒண்ணுமில்லை எல்லாம் நல்லபடியா போயிண்டிருக்கு..இனி பகவான் விட்ட வழி..நீ என்ன முடிவுலே இங்கே வந்திருக்கேன்னு தெரியலே..ஸபாட்டிக்கல்னு பினாக்கிகிட்டே சொல்லியிருக்க..எங்ககிட்டே பர்மனெண்டா வந்திட்டேன்னு சொன்ன..உன்கிட்டே விசாரிக்கணும்னு உங்கம்மா சொன்னா..நான் தான் அதெல்லாம் வேணாம்னு சொல்லிட்டேன்..உனக்கு எப்ப தோன்றதோ அப்ப நீயே சொல்லுவேன்னு அவளைச் சத்தம் போட்டேன்.” என்றார் பாலகிருஷ்ணன்.

பாலகிருஷ்ணனுக்கு என்ன பதில் சொல்வதென்று ஜெய்க்குத் தெரியவில்லை.  அவன் இந்தியாவிற்குத் திரும்பி வந்ததற்கானக் காரணத்தை மறைக்க விரும்பவில்லை. ஆனால், அந்த காரணத்தை எப்படி அவருக்கு விளக்குவதென்றும் அவனுக்குப் புரியவில்லை.  

மனிதர்களின் உணர்வுகளையும் எண்ணங்களையும் மெஷினிற்கு உணர்த்தும், மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவனுக்கு பெரும் தடையாக இருந்தது அவனின் தனிப்பட்ட உணர்வுகளும் எண்ணங்களும்.  

சில வருடங்களாக அவனைக் கல்யாணம் செய்து கொள்ள வற்புறுத்தி  கொண்டிருந்த ருக்மிணிக்குச் சம்மதம் சொல்லாமல் தட்டிக் கழித்துவனுக்கு அதற்கான காரணம் பிடிபட்ட போது அது உண்மையா? இல்லை மாயையா? என்று தெரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதைத் தெரிந்து கொண்ட பின் தான் அவனுடைய இல்லற வாழ்க்கையை ஆரம்பிக்க முடியும் என்ற முடிவுக்கு வந்திருந்தான் ஜெய். அந்தக் காரணம் உண்மைதான் என்று சமீபக்காலமாக உணர்ந்து கொண்டிருந்தவனுக்கு அதை எப்படி இப்போது  பாலகிருஷ்ணனிடம் பகிர்ந்து கொள்வதென்று யோசனையானது.

“டேய்..பதில் சொல்லாம வந்தா எப்படி டா..நேக்கு உன்னை மாதிரி மனசைப் படிக்க தெரியாது..நீயா வாய்விட்டு சொன்னாதான் புரியும்.” என்று வெளிப்படையாகப் பேசினார்.

“அப்பா, சுகந்தி மாமியைப் பற்றி விசாரிச்சேளா?” என்று பேச்சை ஆரம்பித்தான் ஜெய்.

“உங்கம்மாகிட்ட சொன்னேனே டா..ஜுனியருக்கு ஜுனியர் விசாரிச்சிருக்கான்..தீபாவளி வாழ்த்தோட டீடெயில்ஸ் அனுப்பியிருந்தான்..சுகந்தி மாமி திருச்சிலேதான் இருக்கா..சுதர்ஷனோட தம்பி அதே ஊர்லேதான் இருக்கான்.” என்றார் பாலகிருஷ்ணன்.

“யார்கிட்டே விசாரிச்சார் ப்பா?”

“மிஸஸ் ஜோஷியோட பொண்ணுகிட்டே..தீபாவளி ப்ரோகிரமிற்காக டிவுன்ஷிப் கோவிலுக்கு வந்திருக்கா..அவகிட்டே தான்  கேட்டிருக்கான்..அவ அவளோட அம்மாகிட்டே கேட்டு சொல்லியிருக்கா…சுதர்ஷனோட தம்பி ஆத்துக்குப் பக்கத்திலேதான் மிஸஸ் ஜோஷி இருக்கா.” என்றார் பாலகிருஷ்ணன்.

“அப்பா, மாமியோட ஃபோன் நம்பர் இல்லை அட்ரெஸ் கிடைக்குமா?’ என்று கேட்டான் ஜெய்.

அவன் கேள்வியை வழக்கமான விசாரிப்பு என்று எடுத்துக் கொண்ட பாலகிருஷ்ணன்,

“டிசம்பர் மாசத்திலே ஸமிக்‌ஷா நம்மாத்துக்கு வந்து தங்கறேன்னு சொல்லியிருக்கா..அவ வந்து போன அப்புறம் திருச்சி போக உங்கம்மா பிளான் போட்டிண்டிருக்கா..அப்ப சுகந்தி மாமியோட அட்ரெஸ், ஃபோன் நம்பர் இரண்டும் கேட்டு வாங்கிக்கலாம்..திருச்சி தீர்த்தயாத்திரையும் ஆயிடும் சுகந்தி மாமியைப் பார்த்த மாதிரியும் ஆயிடும்.” என்றார்.

குடும்பத்தோடு போய் மாமியைச் சந்திக்குமுன் பவியைப் பற்றி தற்போதைய விவரத்தைக் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று ஜெய்க்கு உணர்த்தியது அவனது AI,

“நேக்குப் பவியைப் பற்றிதான் தெரிஞ்சுக்கணும்..ஐ யாம் இண்டரெஸ்டட் ஒன்லி இன் ஹர். (i’m interested only in her.)” என்று அவனது மனதை வெளியிட்டது ஜெய். 

அதைக் கேட்டு,

“என்னடா சொல்ற ஜெய்” என்று அவரது அதிர்ச்சியை வெளியிட்டார் பாலகிருஷ்ணன்.

“ஐ ஹட் ஸ்பெஷல் ஃபீலிங்க்ஸ் ஃபார் ஹர்(I had special feelings for her)..ஐ ஸ்டில் டு (I still do)…எனக்கு அந்த வயசுலேப் புரியலே பா.. இப்பதான் புரியறது.” என்றான் ஜெய்.

இப்போது ஜெய் சொன்னதை கேட்டு, அவரது மனத்தில் தோன்றுவதை அவருடைய மகனுக்கு எப்படிப் புரிய வைப்பது என்று யோசனையானது பாலகிருஷ்ணனுக்கு.  அவனுடைய அப்பாவின் மனதில் தோன்றியதைப் படிக்க ஜெய்யின் AIக்கு சிரமமாக இல்லை. எனவே,

“நீங்க என்ன நினைக்கறேள்னு நேக்குத் தெரியும்..பவிக்கு அந்த மாதிரி உணர்வோ, எண்ணமோ ஏற்படமா இருந்திருக்கலாம்..அப்படி ஏற்பட்டிருந்தா கூட இப்ப அதைப் பற்றி பேசறதோ இல்லை அவளைச் சந்திக்கறதோ உசிதமில்லை..பிகாஸ் ஷீ குட் பி மேரிட்(because she could be married).. மே பி எ மதர் டூ (may be a mother too)..கரெக்டா?.. என்று கேட்டவன், அவர் பதில் அளிக்குமுன்,

பட் டு மூவ் ஃபார்வர்ட் வித் மை லைஃப் (but to move forward with my life).. நேக்குத் தெரிஞ்சுக்கணும் ப்பா..உங்களாலே அவளைப் பற்றி விசாரிக்க முடியுமா?” என்று பாலகிருஷ்ணனிடம் கேட்டான் ஜெய்.

ஜெய்யின் கேள்விக்கு உடனே பதில் சொல்லாமல் சிறிது நேரம் சிந்தனைவயப்பட்ட பாலகிருஷ்ணன்,

“அந்தக் குடும்பத்துக்கு அவாளோட இக்கட்டான நேரத்திலே நான் எந்த உதவியும் செய்யலை டா..சுதர்ஷனோட ஸெட்டில்மண்ட் பணம் எத்தனை நாளைக்கு வந்திருக்கும்?..அதை வைச்சிண்டு அவா எத்தனை நாள் சமாளிச்சிருப்பா? அதுக்கு அப்புறம் எப்படிச் சமாளிச்சாளோ?..அவா மூணு பேரும் என்ன கஷ்டப்பட்டாளோ? இப்ப எப்படி இருக்காளோ?..

இவ்வளவு வருஷம் கழிச்சு நம்மளை அவா பார்க்கற போது சுதர்ஷனோட ஞாபகமும் அந்த வாழ்க்கையும் தான் அவாளுக்கு நினைவுக்கு வரப் போகறது..அந்த நேரத்திலே மிஸஸ் சுதர்ஷன் கண்டிப்பா உணர்ச்சிவசப் படுவா..அந்த சுழ்நிலையை எப்படிச் சமாளிக்க போறேன்னு நான் யோசிச்சிண்டிருந்தேன்..அதனாலே அவாளை நேர்லே சந்திக்கற போது என் மனச் சாந்திக்காக என்னாலே முடிஞ்ச உதவியை அந்தக் குடும்பத்துக்கு இப்பவாவது செய்யணும்னு நினைச்சிண்டு இருந்தேன் டா..இப்போ உன் மனசுலே இருக்கறதைக் கேட்ட அப்புறம் திருச்சி போக வேண்டாம்னு நேக்குத் தோண்றது டா..

சுதர்சனுக்கு உன் மேலே  பிரியம் இருந்தது..அவன் பொண்ணு மேலே ரொம்ப பிரியம் இருந்தது..அவன் உயிரோட இருந்திருந்தா கண்டிப்பா நோக்குப் பவியைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருப்பன்..இப்போ .நீ சொன்னதைக் கேட்ட அப்புறம் நேக்கு என்னோட மனச் சாந்தி முக்கியமாப் படலே..போனது போகட்டும்..இதை இப்படியே விட்டிடு டா.”என்று அவரின் மனத்தை மகனிடம் பகிர்ந்து கொண்டு, நடந்தது நடந்தவைகளாகவே இருக்கட்டுமென்று விண்ணப்பித்தார் பாலகிருஷ்ணன்.

ஆனால் ஜெய்யினால் அதை ஒப்புக் கொள்ள முடியவில்லை.

“சுதர்ஷன் மாமா உயிரோட இருந்திருந்தா முதல்லே அவர்கிட்டே தான் என் மனசுலே இருக்கறதை சொல்லியிருப்பேன்..இப்ப அந்த மாதிரி யோசிச்சு ஒண்ணும் ஆக போகறதில்லை..இனி நாம இதுலே என்ன பண்ண முடியும்னுதான் யோசிக்கணும்.” என்றான்.

“மெஷினோட வேலை பண்ணி பண்ணி நோக்கு எல்லாம் மரத்து போயிடுத்தா? மனுஷனா இருக்க மறந்து போயிடுத்தா? இல்லை நீயும் மெஷினாவே மாறி போயிட்டியா? என்று பாலகிருஷ்ணன் கோபமடைய,

“அப்பா..  நான் எதையும் மறந்தும் போகலே நேக்கு எதுவும் மரத்தும் போகேலே..ஐ டீல் வித் மைண்ட்ஸ் (I deal with minds)…மைண்ட்லேர்ந்துதான் மெஷினுக்குப் பாதை அமைக்கறேன்..நாட் தி அதர் வே (Not the other way)..என்னோட எண்ணங்களை நான் முழுசாத் தெரிஞ்சுண்டாதான் அடுத்த கட்டமா என்னாலே அதை மெஷினுக்குக் கொண்டு போக முடியும்..அப்படி என்னை நானே தெரிஞ்சுக்க பண்ணின முயற்சிலேதான் பவி எங்கேயும் போகலே எனக்குள்ளே தான் இருக்கான்னு நேக்குத் தெரிஞ்சுது..

அம்மா என்னோட கல்யாண பேச்சை ஆரம்பிச்சதுலேர்ந்து பவியைப் பற்றி நேக்கு உறுத்திண்டுதான் இருந்தது..இங்கே திரும்பி வந்ததுலேர்ந்து அவளைப் பற்றிதான் நாந்-ஸ்டாப்பா யோசிச்சிண்டு இருக்கேன் ப்பா…நேக்குத் தெளிவா தெரிஞ்ச அப்புறம் தானே பவியைப் பற்றி நான் உங்ககிட்டே சொல்லி இருக்க முடியும்..அதுக்கு முன்னாடி பவியைப் பற்றி இப்படியொரு எண்ணம் நேக்கு இருக்குன்ணு உங்ககிட்டே  நான் சொல்லியிருந்தாலும் அம்மா ஒத்துண்டிருப்பான்னு நினைக்கறேளா? என்றான் ஜெய்.

“ஜெய்..உனக்காக உங்கம்மா எதையும் ஒத்துப்பா…இப்ப நீ அவ மேலே பழியைப் போடாத..இதுக்கு முழுக்க முழுக்க நீதான் காரணம்..உனக்கு எப்ப முதல்லே பவியைப் பற்றி இந்த மாதிரின்னு தெரிய வந்ததோ அப்பவே நீ எங்ககிட்டே சொல்லியிருக்கணும்..அந்த ஆபர்சூனிட்டி மிஸ் ஆயிடுத்து..

இப்ப உனக்காக பவியை பற்றி விசாரிக்க போனா அது வேற எங்கேயாவது போகும்..என்ன டா நீ யோசிச்ச நாந்-ஸ்டாப்பா?..அந்தக் குழந்தைக்கும் உன் மேலே ஆசையிருந்து அதை நிறைவேற்றி வைக்க அவ அப்பா இல்லாம போனதுனாலே அவ வேற வாழ்க்கையை ஏத்துண்டு வாழந்திண்டு இருந்தா உன்னாலே என்ன செய்ய முடியும்?.. நீ அவளைப் பற்றி விசாரிக்கறேன்னு தெரிய வந்தா அவளுக்கு எப்படி இருக்கும்?.. அதை யோசிச்சு பார்த்தியாடா? அந்தக் குழந்தையோட வாழ்க்கை நரகமா போயிடும் டா ஜெய்…அது மஹாபாவம்..எங்கேயிருந்தாலும் பவி நன்னா இருக்கணும் டா..

மிஸஸ் சுதர்ஷனோட அட்ரெஸ், ஃபோன் நம்பர் இனி நமக்குத் தேவையில்லை…நாம திருச்சி போகப் போகறதில்லை..உங்கம்மாவை நான் சமாளிச்சுக்கறேன்..பவியைப் பற்றி உன்னோட உணர்வை நீயே டீல் பண்ணிக்கோ.. இதுக்குதான் நீ இந்தியா திரும்பி வர்றேன்னு தெரிஞ்சிருந்தா நானே உன்னை வர வேணாம்னு சொல்லியிருப்பேன்.” என்று அந்த விஷயத்திற்கு அப்போதே ஒரு முடிவு கட்டினார் பாலகிருஷ்ணன்.

“அவளைப் பற்றி எல்லாத்தையும் யோசிச்சு பார்த்திட்டேன் பா..இப்ப நீங்க சொன்னதைப் பற்றி பல தடவை யோசிச்சிருக்கேன்..தட் பிராஸஸ் வாஸ் பெயின்ஃபுல் (That process was painful)…அவளோட இப்போதைய வாழ்க்கையைக் கலைக்கக் கூடாதுன்னுதான் தனிப்பட்ட முறைலே  அவளைப் பற்றி நான் விசாரிக்கலே….என்னைப் பற்றி எதுவும் சொல்லாம இப்ப அவ எப்படியிருக்கான்னு மட்டும் நீங்க விசாரிங்கோ ப்பா..ப்ளீஸ் எனக்காக.” என்றான் ஜெய்.

 அதற்கு, “ஜெய்.. நீ சுயநலவாதி டா.” என்றார் பாலகிருஷ்ணன்.

பாலகிருஷ்ணனின் ‘சுயநலவாதி’ என்று குற்றச்சாட்டில் குற்றவாளி போல் உணர்ந்தான் ஜெய்.

அடுத்த வந்த நாள்களில் அப்பா, மகன் இருவரும் நேரடி பேச்சு வார்த்தையைத் தவிர்த்தனர். ஜெய்யினால் பாலகிருஷ்ணன் மனம் புண்பட்டிருந்தது. ஆனால் அதே சமயம் ஜெய்யின் மன நிம்மதிக்காக, அவனின் எதிர்கால வாழ்க்கைகாக பவியைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தார் பாலகிருஷ்ணன்.

ஸ்கூலிருந்து திரும்பிய பவி சோர்ந்து போய் அமர்ந்திருந்த சுகந்தியிடம்,“அம்மா, அவர் என்னைக்கும் சுய நலவாதிதான்..இது புதுசா என்ன?” என்றாள்.

அதற்கு, “தெரியும் பவி..ஆனா இந்த அளவுக்குன்னு நான் நினைச்சுக்கூட பார்க்கலே.” என்றார் சுகந்தி.

“நேக்கு ஒண்ணும் ஸர்ப்ரைஸிங்கா இல்லை.” என்று விட்டேத்தியாகப் பதில் சொல்லிவிட்டு அவளுடைய தினசரி வேலைகளில் ஈடுபட்டாள் பவி.

“மாப்பிள்ளை பெரிய படிப்பு படிச்சிருக்கானாம்.. பெங்களூர்லே பெரிய கம்புயுட்டர் கம்பெனிலே வேலை பார்க்கறானாம்..அவனுக்கு அங்கே சொந்த ஃபிளாட் இருக்காம்..அவனோட அம்மா, அப்பா இங்கே சென்னைலே சொந்த ஃபிளாட்லே இருக்காளாம்..அவாளைப் பார்த்து நிச்சயதார்த்தத் தேதி ஃபிக்ஸ் பண்ண வந்திருக்கான்.” என்றார் சுகந்தி.

சுகந்தி சொன்னது காதில் விழுந்தாலும் கண்டு கொள்ளாமல், ஒரு தட்டில் அவளுக்கு வேண்டிய சிற்றுண்டியை போட்டுக் கொண்டாள் பவி.  காபி கலப்பதற்காக பாலைத் தேடியவள்,

“எங்கம்மா பால் பாத்திரத்தை வைச்சிருக்க..ஃபிரிஜ்லேயா?” என்று கேட்க,

“பால் தீர்ந்து போயிடுத்து..காலைலே பத்து மணி போலே பாக்கி அரை லிட்டரைக் கொண்டு வந்து கொடுக்கறேன்னு சொன்னான்..ஆனா வரலே..உன் சித்தப்பாக்கு நேத்து பாலையும் சேர்த்து இரண்டு தடவை காப்பி போட்டு கொடுத்தேன்..கொஞ்சம் வெங்காயப் பக்கோடா பண்ணிக் கொடுத்தேன்.” என்றார் சுகந்தி.

“தெரியறது..தட்டிலே போட்டிண்டிருக்கேன்.” என்று சொன்ன பவியிடம் டேபிள் மீது இருந்த ஸ்வீட் பேக்கெட்டைக் காட்டி,”நல்ல செய்தின்னு ஸ்வீட் வாங்கிண்டு வந்திருந்தான்..எடுத்துக்கோ.” என்றார் சுகந்தி.

அந்த ஸ்வீட் பேக்கெட்டை தொட்டுக்கூட பார்க்காமல், அமைதியாக அவளுடைய டிஃபனை சாப்பிட ஆரம்பித்தாள் பவி. மகளின் அமைதியைச் சட்டை செய்யாமல் அவருடைய பேச்சை தொடர்ந்தார் சுகந்தி.

“மாப்பிள்ளை ஆத்துக்காரா உன் சித்திக்கு தூரத்து உறவாம்.  இன்னைக்கு காலம்பற தான் சென்னை வந்திருக்கான். தெரிஞ்சவா ஆத்துலே தங்கிண்டு சம்மந்தி ஆத்துக்குப் போய் எல்லாம் ஃபிக்ஸ் பண்ணிட்டு நேக்கு ஃபோன் போட்டான்.  நாம சென்னைக்கு வந்தது அவனுக்குத் தெரியாதோனோ அதனாலே இங்கே தான் இருக்கோம்னு தெரிஞ்சுவுடனே ஆத்து அட்ரெஸ் கேட்டிண்டு  நேரே இங்கே நம்மாத்துக்கே வந்துட்டான்.. என்னையும் நேர்லே பார்த்து, நம்ம எல்லாரையும் நிச்சயதார்த்தம், கல்யாணம் இரண்டுத்துக்கும் சேர்த்து இப்பவே அழைச்சுட்டன்..

சித்திரை பொறந்து சென்னைலே கல்யாணம்..கார்த்திகைலே பெங்களூர்லே நிச்சயதார்த்தம்..நம்மளோட நெருங்கின உறவுக்காரா, மாப்பிள்ளையோட வேலை பார்க்கறவா, பிரண்ட்ஸ்காக நிச்சயதார்த்தம்..கல்யாணத்துக்கு உறவுக்காராளை மட்டும் கூப்பிடப் போறானாம்..நாம இப்ப இங்க இருக்கறது அவனுக்கு வசதியா போயிடுத்தாம்…

நீ ஸ்கூல்லேர்ந்து வந்த அப்புறம் உன்னையும் பார்த்திட்டுக் கிளம்ப சொன்னேன்…’கல்யாணம் முடிவு பண்ணியிருக்கேன் கோவிலுக்குப் போகணும்..பக்தி புஸ்தகத்திலே வந்த வைஷ்னோ தேவி கோவில், ஜகன்னாதர் கோவில் இரண்டும் பக்கத்திலேதானே இருக்கு அங்கே போயிட்டூ அப்படியே  பிரண்ட் ஆத்துக்குப் போயிடறேன்..மழையா வேற  இருக்கு..இன்னைக்கு டயமில்லே.. பவியை அடுத்த தடவை மீட் பண்றேன்னு’ சொன்னான்…நானும் கட்டாயபடுத்தலே..அடுத்த தடவை நம்மாத்திலேயே தங்கறேன்னு சொல்லியிருக்கான்.” என்றார் சுகந்தி.

“இங்கே எதுக்கு தங்கணும்? இன்னைக்கு எங்கே தங்கினாரோ அங்கேயே தங்கச் சொல்லு இல்லை ஹோட்டல்லே தங்கச் சொல்லு.” என்று சிடுசிடுத்தாள் பவி.