வாசலில் நின்டிருந்த மிஸஸ் ஸென்னிடம்,“பெரிய பிளேட்டா?” எதுக்கு?” என்று கேட்டார் ருக்மிணி.
“ரங்கோலி போட்டிக்கு.” என்றார் மிஸஸ் ஸென்.
“ஓ..இன்னைக்குதானே ரங்கோலி போட்டி..பிளேட்லே ரங்கோலி போடப் போறேளா?” என்று ஆச்சரியப்பட,
“ஆமாம்,தரைலே போட எனக்கு உதவி தேவை..அப்புறம் போட்டி முடிஞ்ச பிறகு அதை கிளீன் செய்யணும்..அதான் நிவேதிதாதோட டீச்சர்கிட்டே சின்ன கோலமா டிசைன் கேட்டேன்..அவங்க சின்ன டிஸைன்னா பேப்பர்லே போட்டு க்கொடுத்தாங்க..நானும் பேப்பர்லே நிறைய தடவை அதைப் போட்டு பழகிட்டேன்..போட்டிலே அதையேபெரிய தட்டுலே போடச் சொல்லி ஐடியா கொடுத்திருக்காங்க..உங்க வீட்லே பெரிய ஸைஸ் தட்டு இருக்கும்னு நிவேதிதாவோட டீச்சர் தான் சொன்னாங்க.” என்றார் மிஸஸ் ஸென்.
“பெரிய பிளேட்ன்னா தேடிப் பார்க்கணும்..நீங்க வெயிட் பண்ணனும்.” என்ற ருக்மிணியிடம்,
“பூஜைக்கு யூஸ் செய்யற பிராஸ் பிளேட்..இருக்கறதுலேயே பெரிசா கொடுங்க.” என்று அவருக்கு தேவை ஒரு பெரிய பித்தளைத் தாம்பாளமென்று விளக்கினார் மிஸஸ் ஸென்.
“பித்தளைத் தாம்பாளத்தைக் கேட்கறேளா? அதை தேய்க்கணுமே..அதைக் கிளீன் பண்ணி கம்மியுனிட்டி ஹாலுக்கே கொண்டு வந்துடறேன்..நீங்க எப்படிக் கோலம் போடறேள்னு பார்த்திண்டே என்னாலே முடிஞ்ச உதவி உங்களுக்குச் செய்யறேன்.” என்று மிஸஸ் ஸென்னிற்கு வாக்களித்தார் ருக்மிணி.
“சரி..நீங்க நேரா ஹாலுக்கு வந்திடுங்க..நான் வீட்லேர்ந்து மற்ற சாமானோடு போயிடறேன்..தாங்க்ஸ் மிஸஸ் கிருஷ்ணன்.” என்று சொல்லி விடைபெற்றுக் கொண்டார் மிஸஸ் ஸென்.
அன்று சாயந்திரம் நடந்த ரங்கோலி போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தில் வெற்றி பெற்று, ருக்மிணி, ருக்மிணியின் தாம்பாளத்துடன், வெற்றி புன்னகையுடன் வீடு திரும்பினார் மிஸஸ் ஸென்.
அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தவுடனையே,”ஏன் ண்ணா..மிஸஸ் ஸென்னுக்கு ரங்கோலி போட்டிலே செகண்ட் பிரைஸ்..முதல் பரிசு கொடுத்திருக்கலாம் ஆனா கொடுக்கலே.” என்று வரவேற்பறையில் அமர்ந்து பத்திரிக்கை படித்துக் கொண்டிருந்த பாலகிருஷ்ணனிடம் அந்த சந்தோஷமான விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார் ருக்மிணி.
“வாழ்த்துகள் மிஸஸ் ஸென்.” என்று வாழ்த்தினார் பாலகிருஷ்ணன். அதற்கு,
“நிவேதிதா டீச்சரோட ஐடியாதான் எல்லாம்..நம்ம காலனிலே எல்லாத்தையும் ரீசைக்கிள் பண்ற மாதிரி இந்த ரங்கோலியை ரீசைக்கிள்ட் திங்க்ஸ் வைச்சு செய்யலாம்னு அவங்கதான் ஐடியா கொடுத்தாங்க.. என்னாலே பெரிசா போட முடியாதுன்னு சொன்னவுடனே ஒரு தட்டிலே கோலம் போட்டு அதுக்கு ரங்கோலி தாலின்னு (rangoli thaali) புது பெயர் வைச்சிடுங்கன்னு சொன்னாங்க.” என்றார் மிஸஸ் ஸென்.
“அண்ணா.. நம்ம டவுன்ஷிப்லே பூஜா தாலி போட்டி நடக்குமே அதே ஐடியாவை ரங்கோலி போட யூஸ் செய்திருக்கா..தாம்பாளம் நடுவுலே கலர் கோலம், அதைச் சுற்றி விளிம்புலே தீபம், பூஅலங்காரம்..பிரமாதமா இருக்குண்ணா.” என்றார் ருக்மிணி.
“நிவேதிதா டீச்சர் சொன்னாங்க அந்த தாலியை அப்படியே தீபாவளி அன்னைக்கு வீட்டுக்கு முன்னாடி வைச்சு கோலமா ரீயுஸ் செய்துக்கலாம்னு.” என்றார் மிஸஸ் ஸென்.
“நீங்க அந்தத் தாம்பாளத்தை என்கிட்டே கொடுங்கோ..நான் சாமி ரூம்லே வைச்சிட்டு வரேன்..தீபாவளி அன்னைக்கு எங்காத்து வாசல்லே கோலத்துக்குப் பதிலா இதை வைச்சிடறேன்.” என்று சொல்லி, ஜாக்கிரதையாகத் தாம்பாளத்தைக் கொண்டு போய் அவர்கள் வீட்டுப் பூஜை அறையில் வைத்தார் ருக்மிணி.
சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு விடைபெற்றுக் கொண்டார் மிஸஸ் ஸென்.அவர் சென்றவுடன், இரவு சமையல் வேலையில் ருக்மிணி பிஸியாகி விட, ரங்கோலி போட்டி பற்றிய பேச்சு அத்தோடு நின்று போனது.
சில மணி நேரங்கள் கழித்து, டைனிங் டேபிளில் இரவு உணவை வைத்து விட்டு ஜெய்க்குக் குரல் கொடுத்தார் ருக்மிணி.
“ஜெய் .” என்று அவர் அழைத்தவுடன்,
“சாப்பிட வரேன்.” என்று பதில் அளித்தான் ஜெய்.
டைனிங் டேபிளில் அமர்ந்த பாலகிருஷ்ணன், “என்ன டீ இது? கொஞ்ச நாழியா நம்ம ஆத்துலேகாப்பி பொடி வாசனை வர்றது? டிகாக்ஷன் போட்டிருக்கியா?” என்று கேட்டார்.
அப்போது அங்கே வந்த ஜெய், ருக்மிணி பதில் சொல்லுமுன்,,”நேக்கு ஒரு தர்மாஸ்லே காப்பி போட்டு வைச்சுடூ..இராத்திரி கொஞ்சம் வேலை இருக்கு.” என்றான்.
“இரு டா..இரண்டு பேரும் என்னைப் பேச விடுங்கோ..காப்பி வாசனை வர்றத்துக்குக் காரணம் காப்பி பொடிதான் ஆனா டிகாக்ஷன் போடலே அதுமேலதான் ரங்கோலி போட்டிருக்கு.” என்று சொன்னவர், பூஜை அறைக்கு சென்று அங்கேயிருந்த தாம்பாளத்தைக் கொண்டு வந்து டைனிங் டேபிள் மீது வைத்தார்.
அந்த டேபிளின் மீது விழுந்த விளக்கின் வெளிச்சத்தில், காப்பி பொடியின் பிரவுன் நிறப் பின்னணியில், மஞ்சள், சிகப்பு, வெள்ளை மூன்று கலர்களை உபயோகித்து, வட்ட வடிவில் போடப்பட்டிருந்த ஸன்ஸ்கார் பாரதி ரங்கோலி, பிரவுன் நிற குவார்ட்ஸ் கல்லில் மூவர்ணத்தால் வடிக்கப்பட்டு, காலத்தால் அழியாத பிரமிப்பை ஏற்படுத்தியது.
அந்த தாம்பளத்தின் விளிம்பு முழுவதும் பழைய சிடிகளை வெட்டிச் செதுக்கபட்ட விதவிதமான வண்ணப் பூக்களும், அகல் விளக்குகளும் நெருக்கமாக விளிம்பே தெரியாமல் மாறி மாறி ஒட்டப்பட்டிருந்தன. அந்தச் செய்றகை வெளிச்சதில் அவை இயற்கையான பூக்கள், தீபங்கள் போல் ஒளிர்ந்தன.
கண்ணைப் பறித்த தாம்பாளத்திலிருந்து கண்களை எடுக்க முடியாமல்,“A2I2..இந்த ரங்கோலியைப் போட்டது யாரும்மா?” என்று கேட்டான் ஜெய்.
“மிஸஸ் ஸென் தான் ரங்கோலி போட்டா..ஐடியாவெல்லாம் நிவேதிதா டீச்சரோடது..ரீசைக்கிளைக் கான்செப்டா வைச்சு பண்ணியிருக்கா..யூஸ்ட் காப்பி பவுடரைப் பேஸா வைச்சு அது மேலே ரங்கோலி போட்டு,யூஸ்ட் சிடி வைச்சு அகல் விளக்கு, பூ எல்லாம் ஒரே மாதிரி வெட்டி கலர் பண்ணியிருக்கா..
இதுலே முக்கியமான விஷயம் என்னென்னா நாங்க போட்டரங்கோலியை மத்தவா போலே அழிக்காம அப்படியே திரும்ப ஆத்துக்கு கொண்டு வந்ததுதான்…ரீஸைகிள்ட், ரீயுஸபள் ரங்கோலி (recycled, reusable rangoli) தீபாவளி அன்னைக்கு நேக்கு கோலம் போடற வேலை மிச்சம்..இதை நம்மாத்து வாசல்லே வைச்சிட போறேன்.” என்றார் ருக்மிணி.
“தாம்பாளம் நம்மளதா இருக்கலாம், உழைப்பு உங்க இரண்டு பேரோடதா இருக்கலாம் ஆனா ஐடியாவெல்லாம் அந்த டீச்சரோடது..தீபாவளி அன்னைக்கு அவாத்து வாசல்லதான் வைக்கணும்.” என்று நியாயமாகப் பேசினார் பாலகிருஷ்ணன்.
“அவ இங்கே இல்லை ண்ணா..அவ பிரதரோட தீபாவளி கொண்டாட பெங்களூர் போயிருக்கா..எல்லாத்தையும் எப்படி பண்றதுன்னு மிஸஸ் ஸென்னுக்கு முன்னாடியே சொல்லிக் கொடுத்திட்டா..முதல்லே தாம்பாளத்துலே மறக்காம கோந்து தடவணும்னு பத்து தடவை நியாபகப்படுத்திட்டு போயிருக்கா..
நானும் கூட அவளை ஒரு தடவை பார்த்துப் பேசணும்..அவ பண்ணிக் கொடுத்த சாக்லெட் ஸமிக்ஷாக்கும் ஜெய்க்கும் ரொம்பபிடிச்சிருந்தது..அதான் நமக்கு கொஞ்சம் சாக்லெட் பண்ணி கொடுத்தா காசு கொடுத்திடலாம்னு நினைச்சிண்டிருக்கேன்.” என்றார் ருக்மிணி.
அவர்கள் சாப்பிட ஏதுவாக அந்த தாம்பாளத்தை டைனிங் டேபிளிலிருந்து அகற்றி மறுபடியும் பூஜை அறையில் கொண்டு போய் வைத்தார் ருக்மிணி.அவனின் இரவு உணவை முடித்துக் கொண்டு அவனது கைப்பேசியோடு பூஜையறைக்கு சென்ற ஜெய்யிடம்,
“என்ன டா ஃபோனோட பூஜை அறைக்குப் போற?” என்று கேட்டார் ருக்மிணி.
“அந்த ரீஸைகிள்ட், ரீயுஸபள் ரங்கோலியை ஒரு ஃபோட்டோ எடுக்கப் போறேன்.” என்றான் ஜெய்.
“நன்னா எடுத்துக்கோ..இந்த மாதிரி யோசிக்க உன் பாட்டாலே முடியுமான்னு நேக்குத் தெரியலே.” என்றார் ருக்மிணி.
“ஏன் முடியாது..இந்த எண்ணவோட்டத்தை டேட்டாவா மாற்றி அதுக்கு கொடுத்தா இந்த மாதிரி நிறைய காம்பினேஷனைப் பிரமாதமா கொடுக்கும்.” என்றான் ஜெய்.
உடனே அதற்கு பதில் சொல்ல விழைந்த ருக்மிணியைப் பார்த்து,”நீ சொல்ல நினைக்கறதை நானே சொல்றேன்..’அது ப்ரொடெக்டிவிட்டி (productivity) நாட் கிரியெடிவிட்டி (creativity).’ என்று சொல்லி அவரை அசர வைத்து,
“மனுஷாகிட்டேயிருந்து தான் அந்த முதல் விதை, ஒரிஜனல் ஐடியா மெஷினிற்குப் போகறது ம்மா..இல்லேன்னு நான் மறுக்கலை.. பட் வீ ஹியுமன்ஸ் ஹவ் லிமிடெஷன்ஸ்(we, humans have limitations)..பாட்ஸ் டோண்ட்( Bots don’t).” என்று ருக்மிணியின் வாயை மூடினான் ஜெய்.
அன்றிரவு, உறங்குமுன்,”ஏண்ணா அந்த ரங்கோலிலே யூஸ் செய்திருக்க காப்பி பொடி நேக்கு பவியோட காப்பியை ஞாபகப்படுத்தறது..சுகந்தி ஆத்து காப்பிலே இந்த மாதிரி வாசனைதான் வரும்.” என்றார் ருக்மிணி.
“நோக்கு இப்ப திருச்சி போய் சுகந்தி ஆத்துலே பவி கையாலே காப்பி குடிக்கணும்..அதானே.”
“இல்லை ண்ணா.” என்று மறுத்தார் ருக்மிணி.
அதற்கு,“மிஸஸ் சுதர்ஷன் திருச்சிலேதான் இருக்காளாம்..அந்த ஜுனியர் அவன் தீபாவளி வாழ்த்தோட இந்த தகவலையும் அனுப்பியிருந்தான்..அவாளோட ஃபோன் நம்பர் வேணுமான்னு கேட்டான்..இப்போ வேணாம்னு நான் சொல்லிட்டேன்..இத்தனை வருஷம் கழிச்சு ஃபோன்லே பேசறது மரியாதையா இருக்காது..நம்ம திருச்சி ப்ரோக்ரம் ஃபிக்ஸ் ஆனவுடனே ஃபோன் நம்பர், அட்ரெஸ் இரண்டும் வாங்கி கொடுக்கறேன்னு சொல்லியிருக்கான்.” என்றார் பாலகிருஷ்ணன்.
“நீங்க சொல்றதும் ரொம்ப சரி ண்ணா..முதல் நாள் அங்கே ஹோட்டல்லே தங்கிப்போம்..அப்புறம் ஃபோன்லே அவளைப் பார்க்க வர போறோம்னு சொல்லிட்டு அவ ஆத்துக்குப் போகலாம்.” என்றார் ருக்மிணி.
தீபாவளி தினத்தன்று ஜெய்யின் வீட்டு வாசலில் பவியின் ஐடியாவில் உருவான ரங்கோலி தாலி தான் அனைவரையும் வரவேற்றது.வாழ்த்து சொல்ல வந்த அனைவரும், தவறாமல், அதனுடன் ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொண்டனர்.அந்த ரங்கோலியோடு ஜெய், ருக்மிணி, பாலகிருஷ்ணன் மூவரும் ஒரு குடும்பப்புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மினி மாமி வீட்டின் தீபாவளிக்கு பவியின் ரங்கோலிதான் என்று ருக்மிணி, ஷாம்பவி இருவரும் அறிந்திருக்கவில்லை. அதேபோல் அவனின் இன்ஸ்பிரெஷனின் கைவண்ணம் தான் அந்த ரீசைகிள்ட், ரீயுஸபள் ரங்கோலி கிரியெஷனென்று ஜெய்யும் அவனின் AIயும் உணரவேயில்லை.