அத்தியாயம் – 16

விஜயதசமி அன்று காலையில், வீட்டில் பூஜையை முடித்துக் கொண்டு கோவிலுக்குப் புறப்பட்டு சென்றனர் சுகந்தியும் பவியும்.  பூரி ஜகன்னாதரை தரிசித்த பின் அங்கேயிருந்து ஆட்டோ பிடித்து சற்று தொலைவில் இருந்த வைஷ்னோ தேவி கோவிலைச் சென்றடைந்தனர்.

நவராத்திரி காரணமாகக் கோவிலில் கூட்டம் அதிகமாக இருக்க, அம்பாளைத் தரிசிக்க வரிசையில் நின்று கொண்டனர்.

“திருச்சிலே, நினைச்சா கோவில்லுக்குப் போவோம்..இங்கே ஆத்துப் பக்கத்திலே கோவில் இல்லை அதனால் தான் இவ்வளவு மாசம் கழிச்சு கோவில்லுக்கு வந்திருக்கோம்.” என்றார் சுகந்தி.

“கிட்டே, தூரமெல்லாம் பகவானுக்குக் கிடையாது….அவராக் கூப்பிடணும்..அப்பதான் தரிசனம் கிடைக்கும்.” என்றாள் பவி.

“பிராப்தம் வேணும்..நானும் இதையேதான் தீபக்கிட்டே சொன்னேன்..’திருச்சிலே இருக்கற மாப்பிள்ளை இப்பதான் மாமா கண்ணுக்குத் தெரிஞ்சுதான்னு?’ என்னைக் கேட்கறான்..அடுத்த ஆத்துலே இருந்தாலும் அடுத்த தெருவிலே இருந்தாலும் நம்மாத்துக்கு மாப்பிள்ளையா வரணும்னு விதியிருந்தா தான் நம்ம கண்ணுக்கு அவர் மாப்பிள்ளையாத் தெரிவர்.” என்றார் சுகந்தி.

பவியிடமிருந்து அதற்குப் பதில் இல்லை.  கர்ப்பக்கிரகத்தில் மூன்று சக்தியாக பக்தர்களுக்கு அருள் பாலித்து கொண்டிருந்த அம்பாளின் காலடியில் அலைபாய்ந்து கொண்டிருந்த அவளது மனதை அர்ப்பணித்து,  

‘என் இன்ஸ்பிரெஷனை என் கண்ணுலே காட்டு அம்பாளே.’ என்று ஜெய்யைக் கண்டறியும்  பிரார்த்தனையில் அம்பாளையும் விளித்து, பிள்ளையாருடன் கூட்டுச் சேர்த்தாள் பவி.

கோவினுள் அவர்கள்  நுழைந்ததிலிருந்து தரிசனத்தை முடித்துக் கொண்டு, உள் பிரகாரத்திலிருந்து வெளிப் பிரகாரம் வந்து சேர்ந்த போது ஒரு மணி நேரத்திற்கு மேலாகியிருந்தது.

“அம்மா, நோக்கு சாப்பிட லேட்டாயிட்டுத்தே மா..இவ்வளவு கூட்டமிருக்கும்னு நான் நினைக்கவே இல்லை..ஆனாலும் அம்பாளைத் தரிசிக்காம திரும்பிப் போக மனசு வரலே.” என்றாள்  பவி.

“இத்தனை நாழியாகும்னு நானும் நினைக்கலேடி..கொஞ்சம் தண்ணி கொடு.” என்று வாட்டர் பாட்டிலிருந்து தண்ணீரைக் குடித்த பின், அதே தண்ணீரில் முகத்தையும் அலம்பிக் கொண்ட சுகந்தி அப்படியே வெளிப் பிரகாரத்தில் உட்கார்ந்து கொண்டார்.

மிகவும் களைப்பாகத் தெரிந்த சுகந்தியைப் பார்த்து,“என்ன மா பண்றது நோக்கு?” என்று பதற்றத்துடன் கேட்டாள் பவி.

“கூட்டத்துலே இருந்த போது தலையை சுத்தித்து.” என்றார்.

“ஏன் ம்மா நீ அப்போவே சொல்லலை..வரிசைலேர்ந்து வெளிலே வந்திருக்கலாமே.” என்றாள் பவி.

“அம்பாளைப் பார்க்காம ஆத்துக்குப் போக மனசு வரலே..இன்னைக்கு விஜயதசமி வேற அதான் பல்லைக் கடிச்சிண்டு வரிசைலே காத்திண்டு இருந்தேன்.” என்றார் சுகந்தி.

“கொஞ்ச நாழி இங்கேயே உட்கார்ந்து ரெஸ்ட் எடுத்திண்டிட்டூ கிளம்பலாம் ம்மா.” என்றாள்

சிறிது நேரம் இளைப்பாறியவுடன்,”போதும்..கிளம்பலாம் பவி..மெதுவா நடந்து மெயின் ரோடுக்குப் போய் ஆட்டோ பிடிச்சுக்கலாம்.” என்று எழுந்து கொண்டார் சுகந்தி.

“இந்த வெயில்லே மெயின் ரோடுக்கு நடந்தெல்லாம் போக வேண்டாம் ம்மா..கோவில் வாசல்லே இருக்கற ஆட்டோவைப் பிடிச்சு அவன் கேட்கறதை கொடுத்து ஆத்துக்கு போயிடலாம் .” என்று ஸ்டாண்டில் இருந்த முதல் ஆட்டோவில் ஏறி வீடு வந்து சேர்ந்தனர் பவியும் சுகந்தியும்.

“அம்மா, கூட்டத்தைப் பார்த்தியா? உள்ளே போனா வெளியே வர்றத்துக்கு ஒரு மணி நேரம் மேலே ஆகும்..இன்னொரு நாள் உன்னை அழைச்சிண்டு வரேன்..இன்னைக்கு ஜகன்னாதரைத் தரிசனம் பண்ணியாச்சு..போதும்..ஆத்துக்குப் போகலாம்.” என்று காரை விட்டு இறங்காமல் பார்க்கிங்கில் இருந்த கூட்டத்தைப் பார்த்து முடிவெடுத்தான் ஜெய்.

“டேய்..இன்னைக்கு விஜயதசமி டா..அம்பாளைத் தரிசனம் பண்ணிட்டூ போகலாம்.” என்றார் ருக்மிணி.

“நோ ம்மா….நாம இப்ப உள்ள போனா மாட்டிண்டுவோம்..கிளம்பலாம்.” என்று அவர்கள் காரைக் கிளப்ப ஆரம்பித்தான் ஜெய்.  

“இரு டா..எதுக்கு அவசரப்படற.. வாசல் வரைக்கும் போய் பார்க்கலாம்..கோவில் உள்ள கூட்டம் கம்மியா இருக்கலாமே டா.” என்றார் ருக்மிணி.

“நோ..உன்னைப் பற்றி நேக்குத் தெரியும்..வாசல் வரைக்கும் வந்தாச்சு உள்ள போய் தரிசனம் செய்யாம ஆத்துக்கு போகக்கூடாதுன்னு புது கண்டிஷன் போடுவ..இங்கேயிருந்தே திரும்பி போறோம்.” என்று கண்டிப்புடன் பேசினான் ஜெய்.

“ஏன் டா..உள்ளே போகாம வெளிலே நின்னுண்டு இத்தனை நாழியாகும் அத்தனை நாழியாகும்னு நீ சொல்றதை நான் நம்பணுமா?” என்று அவனுடன் வாக்குவாதம் செய்தார் ருக்மிணி.

“நான் சொல்லலே என்னோட AI சொல்றது.” என்றான் ஜெய்.

“நான் நம்ப மாட்டேன்..யாராவது தரிசனம் முடிச்சிட்டு வர்றவாளை விசாரிங்கோ ண்ணா.” என்று பாலகிருஷ்ணனை விரட்டினார்.

அப்போது, தரிசனம் முடித்து, கையில் பிரசாதத்துடன் கார் பார்க்கிங்ற்கு வந்து கொண்டிருந்த  குடும்பத்தை நிறுத்தி அவர் விசாரிக்க, அந்தக் குடும்பத் தலைவி,”மாமி..தரிசனத்துக்கு ஒரு மணி நேரம் மேலே ஆகறது.” என்று ருக்மிணிக்குத் தகவல் கொடுத்தார்.

அதற்கு,“தாங்க்ஸ்.” என்று அவருக்கு நன்றி சொன்ன ஜெய், ருக்மிணியிடம்,”கன்ஃபர்ம்ட்.” என்று சொல்லி காரை ஸ்டார்ட் செய்தான். அப்பவும்,

“டேய்..ஒரு மணி நேரம் தான் டா..பார்த்திட்டு போகலாம் டா.” என்று ஜெய்யின் மனசை மாற்ற முயன்றார் ருக்மிணி.

“அம்மா..ஒரு மணி நேரம் காத்திருந்ததுக்கு ஒரு நிமிஷம்கூட உன்னாலே நிம்மதியா தரிசனம் செய்ய முடியாது..அந்த வெயிட்டிங் வேஸ்ட்டா போயிடும்.” என்று வீட்டிற்குப் போக அடமாக இருந்தான் ஜெய். அதற்கு பின் வாயைத் திறக்கவில்லை ருக்மிணி.

அவனோடு வாக்குவாதம் செய்யாமல், அதிசயமாக, மௌனமாக உட்கார்ந்திருந்த ருக்மிணியின் மனதை எப்போதும் போல் பிழையில்லாமல் படித்த ஜெய், ரோட்டிலிருந்து கவனத்தை அகற்றாமல்,

“டோண்ட் ஈவன் திங்க் அபௌட் இட்.” என்றான்.

“பகவானே” என்று முதல் முறையாக வாயைத் திறந்தார் ருக்மிணி.

“என்ன டா ஜெய்?” என்றார் பாலகிருஷ்ணன்.

 ருக்மிணியைத் திரும்பிப் பா,“இன்னைக்கு சாயந்திரம் உன்னோட ஆட்டோவிலே கோவிலுக்கு வர்ற மனசுலேயே அம்மா பிளான் போட்டிண்டு இருக்கா..அதுக்குதான் வார்னிங் கொடுதேன்..அண்ட் அம்மா ஸே பாட்டே.” என்றான்.

“நான் சொல்ல மாட்டேன் டா..நேக்கு பகவான் தான்..பார்த்திண்டே இரு..அம்பாள் அவ மனசுலே ஏதாவது பிளான் வைச்சிண்டு இருப்பா..அதான் ‘ருக்கூ இன்னைக்கு நோக்கு தரிசனம் வேண்டாம்னு’ அவ என்னைத் திருப்பி அனுப்பறா..என்னைக்கு அவ நேக்குத் தரிசனம் கொடுக்கறாளோ அன்னைக்கு நோக்குப் புரியும் அவளோட பிளான்..அம்மா மனசைப் படிக்கலாம் டா ஆனா அம்பாள் மனசைப் படிக்க முடியாது டா.” என்று ஜெய்யுடன் வாதிட்ட ருக்மிணி அறிந்திருக்கவில்லை அது நிஜமாகப் போகிறதென்று. 

“அம்மா, ப்ளீஸ்..நான் மனுஷாளைப் படிக்கற, புரியற மெஷினைப் பண்றது மனுஷாளுக்காக தான்..புது உலகத்தை நாம ஒவ்வொரு நொடியும் உருவாக்கிண்டு வரோம்..நீ, நான்  விரும்பினாலும் விரும்பாட்டாலும் இந்த மாற்றம் ஏற்படத்தான் போகறது..

இப்ப யார் மனுஷாகிட்டே அட்ரெஸ் கேட்கறா, எல்லாரும் நவிகேஷன் தான் யூஸ் செய்யறா..அப்படியே நீ அட்ரெஸ் கேளு ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு வழி சொல்லுவான்..எல்லாமே சரியா இருந்தாகூட அந்த வழிலே இருக்கற குறைகள், நிறைகள் அங்கே போன அப்புறம் தான் தெரியும்..இதே நவிகேஷன் யூஸ் செய்தா, எத்தனை வழி, எந்த வழி, எல்லா வழிலேயும் ஒவ்வொரு கிலோமீட்டரும் எப்படின்னு அந்த ரோடோட கண்டிஷன், டிராஃபிக் ஸ்டேடஸ் எல்லாம் நிமிஷத்திலே கொடுத்திடும்..

நான் இப்ப பண்ணிண்டிருக்கறதும் கிட்டதட்ட அதேபோல தான்..ஒவ்வொருதரோட மன நிலையைத் தெரிஞ்சுக்க, புரிஞ்சுக்க, அவா சொல்றதை சொல்லாததை தப்பில்லாம கணிக்கணும், எதிர்பார்ப்பு, ஏமாற்றம் இரண்டுத்தையும் எரர் இல்லாம கையாளணும்…

இன்னைக்கு அந்தக் கோவில்லே ஏன் அத்தனை கூட்டம்? வாய்விட்டு சொல்ல முடியாத விஷயத்தை கோவில்லே இருக்கற தெய்வத்துகிட்டே சொல்ல வரா எல்லாரும்…சில பேருக்கு சந்தோஷமான விஷயம், சில பேருக்குத் துக்கமான விஷயம்..

சந்தோஷம், துக்கம் இரண்டையுமே ஷேர் செய்ய எல்லாருக்கும் ஒரே மாதிரி குடும்ப அமைப்போ, பிரண்ட்ஸ் ஸர்க்கிளோ கிடையாது..அப்படி ஷேர் செய்த அப்புறம் அதுக்கு கிடைக்கற ரியாக்‌ஷன் பாரபட்சமா இருக்கும்…அதனாலே குடும்பத்தை, நெருக்கமான வெளி உறவுகளையும் தாண்டி மனுஷா மனசுக்கு அசைக்க முடியாத ஒரு ஆன்கர் (anchor) தேவைப்படறது..அதுதான் பகவான்னு நாம நினைக்கறோம்.. 

இன்னக்கு இங்க வந்திருக்க எல்லார் விஷயத்தையும், வேண்டுதலையும் அம்பாள் ஒரே போலே கேட்டுண்டாளான்னு நாம அம்பாளை ஆராய்ச்சி பண்ணி நிரூபிக்க முடியாது..அந்த கியாரண்டிதான் கடவுளைக் காப்பாத்திண்டு வருது.. ஆனா பாட்டை ஆராய்ச்சி பண்ணி நிரூபிக்க முடியும்..ஏன்னா அதுக்கு எல்லாரும், எல்லாம் பியுர் டேட்டா..பாரபட்சமில்லாம வேலை பார்க்கும்..பதில் கொடுக்கும்.” என்றான் ஜெய்.

“பகவானும் பாரபட்சம் பார்க்கறதில்லே டா..மனுஷாளுக்குதான் பார்வை குறைபாடு..பாட்டும்  கண்டிப்பாப் பாரபட்சம் பார்க்கும்..அதை உருவாக்கிறது மனுஷன் தானே..எப்படி டா பாரபட்சமில்லாம இருக்க முடியும்..மனுஷாளோட விருப்பு, வெறுப்பு துளியூண்டாவது மெஷினுக்குப் போகும் டா.” என்றார் ருக்மிணி.

அதற்கு, பெரிய புன்னகையுடன்,“மினி..இ லவ் யூ..அந்த பார்ட் தான் இப்ப வேலை பார்த்திண்டு இருக்கேன்..தெரிஞ்சவா, தெரியாதவா, அறிஞ்சவா, அறியாதவா எல்லாரையும் ஒரே மாதிரி பார்க்க, யோசிக்க, நடத்த பழகிக்கறேன்..நீ, ஸென் ஆன்ட்டி, பால்காரன், இஸ்திரிக்காரன்..உங்க எல்லார் கதையைக் கேட்கறது டு ஃபிக்ஸ் மை காக்னிடிவ் பயஸ் (cognitive bias)..பர்ஸெப்ஷன் கரெக்‌ஷன். (perception correction)” என்றான் ஜெய்.

அதைக் கேட்டவுடன்,“டேய்..அப்ப நீ என்கிட்டே அஃபெக்‌ஷனா (affection) பேசினதெல்லாம் கரெக்‌ஷனுக்காகவா? .” என்று வருத்தப்பட்டார் ருக்மிணி. 

“மை டியர் மினி டார்லிங்..நீ என்னோட அஃபெக்‌ஷனெட் அடிக்‌ஷேன் (affectionate addiction).” என்று சொல்லி ருக்மிணியைப் பார்த்து கண் சிமிட்டினான் ஜெய்.

“உன் ஆத்துக்காரிகிட்டே சொல்ல வேண்டியதேல்லாம் உன் அம்மாகிட்டே சொல்லிண்டு இருக்கே..பகவானே.” என்றார் ருக்மிணி.

அப்போதும், எப்போதும் போல், “நோ..நோ..நோ பகவானே..ஸே பாட்டே.” என்றான்  ஜெய்.

“டேய் நேக்கு இப்ப ஸ்ட்ராங்கா ஒரு கப் காப்பி வேணும்..நீ பேசறதெல்லாத்தையும் கேட்டு தலையை வலிக்கறது.” என்றார் ருக்மிணி.

“தலைவலிக்கு காரணம் ஜெய்யோட டாக் இல்லை இப்ப  லன்ச் டயம் ருக்கூ.” என்று மகனை விட்டு கொடுக்காமல் பேசினார் பாலகிருஷ்ணன்.

 ஒரு மணி நேரத்தில் தரிசனத்தை முடித்து கொண்டு கோவிலின் வெளிப் பிரகாரத்தில் சிறிது நேரம் இளைப்பாறி விட்டு வீட்டிற்குச் சென்ற பவி, கோவிலின் வெளியே, காரை விட்டுக்கூட இறங்காமல், ஒரு நிமிடத்தில் புள்ளி விவரத்தை மட்டும் திரட்டி தரிசனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாகும் என்பதால் தரிசனம் செய்யாமல் வீட்டிற்குத் திரும்பி போன ஜெய்.

ஸ்ட் ராங் இன்வொகேஷன் + ஸ்ட்ராங்கர் அப்ஜெக்‌ஷன் = வீக் டிவைன் இண்டர்வென்ஷன்  

(strong invocation) (stronger objection) (weak divine intervention)

பகவானின் பலென்ஸ்ட் ஈகுவெஷன்லே (balanced equation)நோ எக்ஸெப்ஷன்ஸ் (no exceptions)

“அம்மா, ஃபில்டர்லேர்ந்து எடுத்த காப்பி பொடியெல்லாத்தையும் எங்கே காய வைச்சிருக்க?” என்று கேட்டாள் பவி.

“நீ உட்கார்ந்திண்டு இருக்கியே அந்த ஓரத்திலே இருக்கற டப்பாவிலே போட்டு வைச்சிருக்கேன்.” என்றார் சுகந்தி.

“அதுலே இரண்டு ஸ்பூன் நல்ல காபி பொடி சேர்த்துடு.” என்றாள் பவி.

கிட்சனிலிருந்து காப்பி பொடி டப்பாவை எடுத்து வந்து, அதிலிருந்து இரண்டு ஸ்பூன் காப்பி பொடியைக் காய வைத்திருந்த கசண்டோடு கலந்தார் சுகந்தி.

“தாங்க்ஸ் ம்மா..யூஸ் பண்ணின பவுடர்லே ஸ்ட்ராங் வாசனை வராது அதான் துளியூண்டு ஃப்ரெஷ் சேர்த்தேன்.” என்று சொன்ன பவி பால்கனியில் அமர்ந்திருந்தாள்.  அவளைச் சுற்றி பழைய சிடிக்கள் இறைந்து கிடந்தன.  

அவளருகில் வந்தமர்ந்த சுகந்தி,”சிடியை வைச்சு என்ன டீ பண்ணிண்டு இருக்க?” என்று கேட்டார்.

“கம்யூனிட்டி ஹால்லே தீபாவளிக்காக ரங்கோலி போட்டி வைச்சிருக்கா..நிவேதிதாவோட பாட்டிக்கு கலந்துக்க ஆசை..ஆனா அவருக்கு உதவி செய்யறத்துக்கு நிவேதிதா அம்மாக்கு டயம் கிடையாது.. அவாளுக்கும் இந்த வயசுலே குனிஞ்சு, நிமிந்து பெரிய கோலமாப் போட முடியாது..அதானலே என்கிட்டே சின்ன கோலத்தோட டிசைன் கேட்டா..ரொம்ப சின்னதா ஒரு கோலம் அவாளுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கேன்.” என்றாள் பவி.

“சின்ன கோலமெல்லாம் போட்டிலே பரிசு வாங்காது டீ..தீபாவளிக்குப் பெரிய தீபம், ஜோதி டைப் கோலம் போட்டாதான் ஜெயிக்க முடியும்.” என்றார் சுகந்தி.

“பரிசுப் பற்றி அந்தப் பாட்டியே கவலைப்படலே..நீ ஏன் கவலைப்படற.”

“பழைய சிடி, காப்பி பொடி வைச்சு என்ன ஐடியா டீ நோக்கு?”

“மூணு சிடிதான் யூஸ் செய்யப் போறேன்..அதைக் கவனமா ஒரே சைஸில, ஒரே ஷேப்ல வெட்டணும் அப்புறம் அதைக் கலர் செய்யணும்.” என்றாள் பவி.

“என்னைக்கு டீ போட்டி?’

“தீபாவளிக்கு முத நாள்..நாம பெங்களூர் கிளம்பறத்துக்கு அடுத்த நாள்.”

“நீ எப்படி டீ அந்த மாமிக்கு ஹெல்ப் செய்ய முடியும்?..தீபக்கு சாக்லெட் வேற பண்ணிண்டு போகணுமே.”

“எல்லாம் சொல்லிக் கொடுத்தாச்சு..இதெல்லாம் பெயிண்ட் செய்த அப்புறம் அவாகிட்டே ஒப்படைச்சிடுவேன்..அந்தப் பாட்டி வெறுமன ஒரு தாம்பாளத்திலேக் கோலம் போட்டு எல்லாத்தையும் அழகா ஒட்டி அரேன்ஜ் பண்ணினா போதும்..ரங்கோலி ரெடி.” என்றாள் பவி.

“தாம்பாளத்திலேயா?” என்று ஆச்சரியப்பட்டார் சுகந்தி.

“ஆமாம்.”

“தாம்பாளத்துக்கு எங்க டீ போவா அந்தப் பாட்டி?”

“அமெரிக்கன் நின்ஜா ஆத்துலேர்ந்து இரவல் வாங்கிக்கச் சொன்னேன்..பூஜைக்கு யூஸ் செய்யற பிராஸ் (brass) பிளேட்டுன்னு கேட்க சொல்லியிருக்கேன்..நம்மளோடதெல்லாம் இப்ப மாமாவாத்துலேதான இருக்கு.” என்றாள் பவி.

“அவன் ஆத்துலேதான் அடுத்தடுத்து விசேஷம் வந்திண்டிருக்கு அதான் அங்கேயே வைச்சுக்க சொல்லிட்டேன்.”

“அந்த எதித்தாத்து மாமி தான் உபகாரியாச்சே தாம்பாளம் கிடைக்கறதுலே பிராபளமிருக்காது ம்மா.” என்றாள் பவி.