அத்தியாயம் – 15

“என்ன டீ இவ்வளவு சத்தமா இருக்கு?’ என்று பவியிடம் கேட்டார் படுக்கையறையின் கட்டிலில் அமர்ந்திருந்த சுகந்தி.

“டாண்டியா நைட் இன்னைக்கு..அதான் மியூஸிக் சத்தமா கேட்கறது.” என்றாள் பவி.

“சென்னைக்கு எப்ப இதெல்லாம் வந்தது டீ?”

“வெளியூர் மனுஷா வரும் போது அவளோட கலாச்சாரத்தையும் அவா கூடவே கூட்டிண்டு வரா..நமக்கு பிடிச்சதை நாம டைட்டா பிடிச்சுக்கறோம்.” என்றாள் பால்கனியில் அமர்ந்து வானத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பவி.

“நம்ம டவுன்ஷிப்லே நவராத்திரி போது வெறும் பஜன் தான் பாடுவா..அப்புறம் கடைசி மூணு நாள் பெரிய பூஜை நடக்கும்.” என்றார் சுகந்தி.

“இங்கே தினமும் ப்ரோகராம்ஸ்.” என்றாள் பவி.

“யார் சொன்னா? நிவேதிதா பாட்டியா?” என்று கேட்டார் சுகந்தி.

“அவா எல்லாரும் துர்கா பூஜா கொண்டாட  ஊருக்குப் போயிருக்கா..மெயின் கேட் நோட்டீஸ் போர்ட்லே போட்டிருக்கு…பஸ் ஸ்டாப்லேயும் எல்லாரும் பேசிண்டு இருந்தா..பக்தி புஸ்தகத்திலே வந்ததுதே பூரி ஜெகன்னாதர் கோவில் அப்புறம் வைஷ்னோ தேவி கோவில்..அது இரண்டும் இங்கே பக்கத்திலே தான் இருக்காம்..நாளைக்கு ஸ்கூல் லீவு..அந்த இரண்டு கோவிலுக்கும் போயிட்டு வரலாமா?” என்று கேட்டாள் பவி.

“உன் இஷ்டம்..ஆட்டோ பிடிச்சு போகணுமா இல்லை ட்ரெயினா?”

“ஆட்டோலேயே போயிட்டு வந்திடலாம்.” என்று சுரத்தேயில்லாமல் பதில் சொன்ன பவியைப் பார்த்து,

“ஏன் டீ என்னவோ மாதிரி இருக்க? ஸ்கூல்லே ஏதாவது பிராப்ளமா?”

“இல்லை ம்மா..தீபக் ஊருக்குப் போனதிலிருந்து ஒரு மாதிரி இருக்கு..நாளைக்குதான் போகறதா இருந்தான்..ஸரஸ்வதி பூஜைக்கு கூட இல்லாம திடீர்னு கிளம்பி போயிட்டான்.” என்றாள் பவி.

“நேக்கும் வெறிச்சுன்னு ஆன மாதிரி இருக்கு…அவன் ஆத்துலே இருந்தது நன்னா இருந்தது..ஆனா படிப்பு விஷயம்னு அவன் சொல்றச்சே போகாதேன்னு சொல்ல முடியலே..எழுந்துகோ..வாக்கிங் போயிட்டு வரலாம்.” என்றார் சுகந்தி.

“இன்னைக்கு எங்கே போனாலும் ஒரே கூட்டமா இருக்கும் ம்மா.. அதான் வாக்கிங் போக வேணாம்னு பால்கனிலே இருக்கேன்.”

“நீ சொல்றதும் சரி..கம்யுனிட்டி ஹால்லே கூட்டமும் சத்தமும் ஜாஸ்தியா இருக்கும்..எல்லாத்தையும் யோசிச்சு கட்டினவாளுக்கு உள்ளேயே ஒரு கோவில் கட்டணும்னு தோணலையா?..

இங்கேயே ஒரு கோவில் கட்டி விட்டிருந்தா, தினமும் வாக்கிங்லே போய் பகவானைப் பார்த்திட்டு வந்திருக்கலாம்..பெரிசா கட்டியிருக்க வேணாம்..சின்னதா ஒரு பிள்ளையார் கோவில் கட்டியிருக்கலாம்.” என்றார் சுகந்தி.

“போதும் ம்மா..இன்னும் எத்தனை கோவில் புதுசாக் கட்டுவோம்..பராமரிக்க முடியாம, பாதுகாக்க முடியாம பழைய கோவிலே நிறைய இருக்கு..அதுவுமில்லாம எல்லாரும் சேர்ந்து இருக்கற இடத்திலே கோவில் மட்டும் கட்ட முடியாது..அதுக்கு பதிலாதான் எல்லா இடத்திலேயும் பார்க் கட்டி வைச்சிருக்கா..இயற்கையை இரசி, நேசி.” என்றாள் பவி.

“இப்படி தான் நம்ம தோட்டத்தைப் பற்றியும் நீ பேசுவ..டவுன்ஷிப்லே நம்மாத்து தோட்டத்தைப் பார்த்து பொறாமைப்படாதவா கிடையாது..பாட்டு சொல்லி கொடுத்த மிஸஸ் ஜோஷிக்கு எப்பவும் அவாத்து தோட்டத்தைப் பற்றி ஒரே குறை..அவ குழந்தைகள் இரண்டு பேரும் இன்ட்ரெஸ்ட் காட்டலேன்னு வருத்தப்படுவா…மிஸ்டர் ஜோஷியும் அப்படிதான் எல்லாத்திலேயும் விட்டேத்தியா இருப்பர்னு உங்கப்பா சொல்லியிருக்கர்.” என்றார் சுகந்தி.

மிஸஸ் ஜோஷியின் மகன் பிரவீணுக்கு படிப்பு, விளையாட்டு, தோட்டம், பாட்டு எதிலும் நாட்டமிருக்கவில்லை. ஆனால், பாட்டு கிளாஸுக்கு வந்த பெண்களின் மீது நாட்டமிருந்தது.  ஒவ்வொரு பாட்டு கிளாஸின் போதும் அவனறையில் அமர்ந்து கொண்டு பாட்டு கற்றுக் கொள்ள வந்தவர்களைப் பார்ப்பதை வழக்கமாக்கி கொண்டிருந்தான். அவள் மேல் அவன் ஆர்வமாக இருந்தானென்று அவளிடம் கடிதம் கொடுத்த பின் தான் பவிக்குத் தெரிய வந்தது.

முதல்முறை கடிதம் கொடுத்த போது அதை என்ன செய்வதென்று தெரியாமல் பாட்டுப் புத்தகத்திலேயே வைத்தாள் பவி.  அடுத்த முறையும் அவன் கடிதம் கொடுத்த போது பவிக்கு பயமாகிப் போனது.  அவனுடன் அவள் அதிகமாகப் பேசியதில்லை. எனவே, அவன் இரண்டாவது கடிதத்தைக் கொடுத்தபோது, பிரிக்கப்படாத முதல் கடிதத்தையும் சேர்த்து அவனிடமே திருப்பிக் கொடுத்தாள் பவி.

“இந்தா நீ கொடுத்த முதல் லெட்டர்.” என்று அவனிடம் முதல் லெட்டரை அவள் கொடுக்க,

“ஏன் நீ இன்னும் அதை படிக்கலே? இரண்டுத்தையும் சேர்த்து படி.” என்று சொல்லி அவளின் புத்தகத்தில் இரண்டு லெட்டர்களையும் வைத்தான் பிரவீண். அதற்கு மேல் அந்த விஷயத்தை எப்படிக் கையாளவது என்று புரியாமல், குழப்பத்தில், அச்சத்தில், புத்தகத்தை கையில் எடுத்துக் கொண்டு அவன் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தாள் பவி.

அதே யோசனையில் அடுத்த தெருவிலிருந்த அவளது வீட்டிற்கு வேகமாக  நடந்து சென்று கொண்டிருந்த பவியை ஜெய் அழைக்க, அந்த அழைப்பு அவளுக்கு கேட்கவில்லை. அவளருகே வந்து,

“என்ன..கூப்பிட்டது கேட்காம வேகமா போயிண்டு இருக்க?” என்று ஜெய் கேட்க, அதில் திட்டுக்கிட்டுப் போனாலும் அவனுக்குப் பதில் சொல்லாமல் வேகத்தை தொடர்ந்தாள் பவி. 

“என்ன ஆச்சு நோக்கு? பாட்டு கிளாஸ்லே பாடி பாடி குரல் கெட்டுப் போயிடுத்தா? பதில் சொல்ல மாட்டேங்கற?” என்று அவளது மௌனத்திற்கு அவன் காரணம் கேட்க,

“நீ வாயை மூடிண்டு வா.” என்று அதுவரை இருந்த பயம் போய் பிரவீண் மேல் எழுந்த கோபத்தை ஜெய்யின் மீது காட்டினாள் பவி.

“எதுக்கு கோபப்படற? சரியா பாடலேன்னு ஜோஷி ஆன்ட்டி திட்டினாளா? என்று அவளிடம் பரிவு காட்டினான் ஜெய்.

மிஸஸ் ஜோஷி பொறுமைக்குப் பெயர் போனவர் இல்லை.  அவரிடம் கலை அபரிதமாக இருந்தாலும் அதைக் கற்று கொடுக்க வேண்டிய பக்குவத்திற்கு பஞ்சம் இருந்தது.  காலனியின் குழந்தைகள் அவரிடம் பாட்டு படிக்க மறுக்க அதுவே பெரிய, பிரபலமான காரணமாக இருந்தது.

ஜெய்யின் கேள்விக்குப் பதில் சொல்லாமல்,”நீ இங்கே என்ன பண்ணிண்டு இருக்க?” என்று பேச்சை மாற்றினாள் பவி.

“பிஷ்ட் அங்கிள் ஆத்துக்கு வந்திருந்தேன்..குவ்ஸ்சின் பேங்க புக்ஸ் கொடுக்கறேன்னு எங்கப்பாகிட்டே சொல்லியிருந்தார்..வாங்கிண்டு போக வந்தேன் .” என்றான் ஜெய்.

அதைக் கேட்டவுடன் பவியின் மனத்தில் அவளுடைய பிராப்ளத்திற்கு ஜெய்தான் சொல்யுஷன் என்று தோன்றியது.  

“ஜெய்..நேக்கு ஒரு உதவி செய்வேயா?” என்று கேட்டாள்.

“பெரிய உதவின்னா நேக்கு டயமிருக்காது..குவ்ஸ்சின் பேங்க்  ஸால்வ் பண்ணி புஸ்தகத்தை ஒரு வாரத்திலே அவர்கிட்டே திருப்பிக் கொடுக்கணும்.” என்றான் ஜெய்.

“இது டூ மினிட்ஸ் வேலைதான் ஜெய்” என்று சொல்லி, அவளது பாட்டுப் புத்தகத்திலிருந்த இரண்டு கடிதங்களையும் எடுத்து அவனிடம் கொடுத்தாள் பவி.

“என்னது இது?”

“பிரவீண் கொடுத்தான்..இரண்டு லெட்டர்ஸ்..முதல் லெட்டரே நான் திறக்கலே இன்னைக்கு இரண்டாவது லெட்டர் கொடுத்தான்.” என்றாள் பவி.

“பிரவீணா?’ என்று அதிர்ச்சியானான் ஜெய்.

‘ஆமாம்’ என்று தலையசைத்தாள் பவி.

“அவன் ஒரு வருஷம் பிரேக் எடுத்திண்டு ஆத்துலே உட்கார்ந்திண்டு எண்ட்ரன்ஸுக்கு பிரிப்பர்னா பண்ணிண்டு இருக்கான்.” என்றான் ஜெய்.

“அதுக்கு நடுவுலே நேக்கு இரண்டு லெட்டரும் எழுதியிருக்கான்.” என்று பட்டென்று பதில் சொன்னாள் பவி.

பவி கொடுத்த கடிதங்களைக் கையில் வைத்திருந்த ஜெய்க்கு அது காதல் கடிதங்கள் என்று சந்தேகமேயில்லாமல் தெரிந்தது. அதை எப்படி கையாள்வது என்று புரியாமல்,

“அவன் கொடுத்தா உடனே நீ வாங்கிண்டிடுவியா?” அவனும் பட்டென்று கேள்வி கேட்டான்.

“முதல் லெட்டரைக் கொடுக்கற போது நேக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை..அதை வாங்கி என்னோட  பாட்டுப் புஸ்தகத்திலேயே வைச்சுனுட்டேன்..இன்னைக்கு நான் கிளம்பும் போது  இன்னொரு லெட்டரைக் கொடுக்கறான்..முதல் லெட்டரையே படிக்கலேன்னு அவன்கிட்டே அதை திருப்பிக் கொடுத்தேன்..அதை வாங்கிக்காம, இரண்டுத்தையும் சேர்த்து படின்னு என் புஸ்தகத்துள்ளே வைச்சிட்டான்.” என்றாள் பவி.

“ஜோஷி ஆன்ட்டி என்ன பண்ணிண்டு இருந்தா?”

“கிளாஸ் முடிஞ்சுடுத்துன்னு ஆன்ட்டி கிட்சன்லே வேலை பார்க்க போயிட்டா..என்ன பண்றதுன்னு தெரியலை நேக்கு..அவனுக்குப் பதில் சொல்லாம வெளியே ஓடி வந்துட்டேன்.”

“பேச்சு தான் வரலை..பேசாம அவன் கைலே இரண்டுத்தையும் திரும்ப கொடுக்க வேண்டியதுதானே.” என்று மறுபடியும் அவளைக் கோபித்துக் கொண்டான் ஜெய்.

“கொடுத்தேன் ஜெய்..அவன் வாங்கிக்கலே..அப்புறம் ஜோஷி ஆன்ட்டி கிட்சனிலேர்ந்து திரும்பி வந்துட்டா என்ன பண்றதுன்னு நேக்கு பயமா இருந்தது..ப்ளீஸ்..லெட்டரைப் படிச்சு அதுலே என்ன எழுதியிருக்குண்ணு நேக்கு சொல்லு.” என்றாள் பவி.

“நேக்கு என் பாடம் மட்டும் தான் படிக்க தெரியும்..மத்தவா லெட்டரெல்லாம் படிக்க தெரியாது.” என்று சொல்லி, அந்தக் கடிதத்தில் இருந்ததைப் படிக்க ஆர்வமிருந்தாலும் அதை அவளிடமே திருப்பித் தந்தான் ஜெய்.  அவனின் மறுப்பை முற்றிலும் எதிர்பார்க்காத பவி,

“ப்ளீஸ்..நீயே இதை வைச்சுக்கோ..நான் எங்காத்துக்கு கொண்டு போக வேணாடாம்னு பார்க்கறேன்..நோக்கு எப்ப டயம் கிடைக்கறதோ அப்ப இதை படிச்சுட்டூ என்ன எழுதியிருக்குண்ணு நேக்கு சொல்லு.” என்றாள் பவி.

“நீயே படிச்சுக்கோ.”

“ப்ளீஸ் ஜெய்.”

“சரி ஒண்ணு செய்யலாம்..நீ லெட்டர் படிக்கறச்சே உனக்குத் துணையா நான் இருக்கேன்.” என்றான் லெட்டரில் என்ன எழுதியிருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடிவு செய்திருந்த ஜெய். 

ஜெய்யின் உதவியை ஏற்று கொண்ட பவி,

“இப்பவே திறந்து படிக்கலாமா?  ஆத்துக்கு போகறதுக்குள்ளே தெரிஞ்சிடுமே.” என்று அவனுடைய பதிலை எதிர்பார்க்காமல், அவளது பாட்டுப் புத்தக்கதை அவனிடம் கொடுத்து விட்டு, முதல் லெட்டரைப் பிரித்து சத்தமாகப் படிக்க ஆரம்பித்தாள்.

அதற்கு பின் வீடு வந்து சேரும் வரை அவர்கள் இருவரும் விடமால் சிரித்துக் கொண்டிருந்தனர்.  அத்தனை பிழைகளுடன் ஆங்கிலத்தில் காதல் கடிதம் எழுதியிருந்தான் பிரவீண்.  இரண்டு கடிதங்களின் முடிவிலும் பின்குறிப்பாக அவளுக்குப் பிரியமான மொழியில் அவன் பிரியத்தை வெளியிட்டிருப்பதாக எழுதியிருந்தான். அதுவும் கடைசி வரியாக ‘you look petty’ என்று அவன் இரண்டு கடிதங்களிலும் எழுதியிருந்ததைப் படித்த பின் தான் இருவருக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. 

“இதை என்ன பண்றது ஜெய்?” என்று அவனிடம் ஆலோசனை கேட்டாள் பவி.

அவள் கையிலிருந்த கடிதங்களைச் சுக்கல் சுக்கலாகக் கிழித்து சாலையோரத்தில் விட்டெறிந்தான் ஜெய்.

“இன்னொரு லெட்டர் கொடுத்தா என்ன பண்றது?”

அந்தக் கேள்வியில் பிரவீணிற்கும் சைக்கிள் கடை சோட்டூவிற்கும் இருந்த வித்தியாசத்தை உணர்ந்தான் ஜெய்.  பிரவீணைத் தவிர்க்க ஒரே வழி பாட்டுக் கிளாஸைத் தவிர்ப்பதுதான் என்று நினைத்து,

“நோக்கு பாட்டு ரொம்ப பிடிக்குமா?”

“பிடிக்கும் ஆனா அதைவிட லைப்ரரிலேர்ந்து புக்ஸ் எடுத்துப் படிக்க ரொம்ப பிடிக்கும்.”

“படிப்போட பாட்டு கிளாஸ் மேனேஜ் செய்ய கஷ்டமாயிருக்கு..கிளாஸ் போக டயமில்லேன்னு சொல்லிடு.”

“எங்கம்மா ஒத்துக்க மாட்டா…லைப்ரரி புக்ஸ் படிக்க மட்டும் டயமிருக்கான்னு கேட்பா?”

“நீ டிஸ்ட்ராக்ட் ஆறேன்னு உங்கப்பாகிட்டே நான் சொல்றேன்.” என்றான் ஜெய்.

“எங்கப்பா சொன்னா எங்கம்மா கேட்டுப்பா.” என்று அவள் வீட்டின் பவர் ஈகுவேஷனை ஒரு வரியில் வெளியிட்டாள் பவி.

அன்றைய கிளாஸ்தான் பவியின் கடைசி பாட்டுக் கிளாஸானது.  சுதர்ஷனிடம் ஜெய் என்ன சொன்னானென்று தெரியவில்லை. ஆனால் பாட்டுக் கிளாஸ் பற்றிய பேச்சு வீட்டில் முற்றிலுமாக நின்று போனது.

அன்று நடந்தவைகளை இன்று அசைப்போட்டு கொண்டிருந்த பவியின் மனத்தில் பிரவீணைப் போல் ஜெய் ஏன் அவளுக்குக் காதல் கடிதம் கொடுக்கவில்லை? அவனுக்கு அவள் மீது எந்த விதமான ஈர்ப்பும் ஏற்படவில்லையா? என்ற கேள்வி விஸ்வரூபமெடுத்து விடைக்காக ஏங்க ஆரம்பித்தது.