“லைவ் மியூஸிக், டான்ஸுன்னு ஹாலே அல்லோகலப் படறது.” என்று சொல்லிக் கொண்டே வாசல் கதவை திறந்து வீட்டிற்குள் நுழைந்தார் ருக்மிணி.வரவேற்பறையில் வைக்கப்பட்டிருந்த கொலுவின் அலங்கார விளக்குகள் மட்டும் எரிந்து கொண்டிருந்தன.மற்றபடி வீட்டை இருள் சூழ்ந்திருந்தது.
“ஜெய்..ஜெய்..எங்கே டா இருக்க?” என்று அழைத்தபடி, அனைத்து விளக்குகளையும் உயிர்ப்பித்தபடி அவனறைக்குச் சென்றார் ருக்மிணி.அங்கே, பால்கனியில் அமர்ந்து வானத்தைப் பாரத்து கொண்டிருந்த ஜெய்யிடம்,
“டாண்டியா டான்ஸ் பார்க்க நீயும் வந்திருக்கலாம்…இத்தனை பேர் இங்கே குடியிருக்காளான்னு ஆச்சரியமா இருக்கு..குடும்பம் குடும்பமா டான்ஸ் ஆடிண்டு இருக்கா..ஸமிக்ஷாக்கு ரொம்ப பிடிச்சது..அடுத்த தடவை உங்காத்துலே ஸ்டே பண்ற மாதிரி வரேன் பாட்டின்னு என்கிட்டே சொல்லித்து..நவராத்தின்னா ஒன்பது நாள்..என் பொண்ணுக்கு ஒரேயொரு நாள் தான்..அவ ஆத்துலே சரஸ்வதி பூஜையை முடிச்சிட்டூ மத்தியானமா இங்கே வந்திட்டு சாயங்காலம் கிளம்பிப் போறா…என் பேத்தியாவது இங்கே வந்து நம்மளோட தங்கட்டும்.” என்றார் ருக்மிணி.
“அவ அப்படிதான் சொல்லுவா அப்புறம் இராத்திரியான என் பாட்டிகிட்டே கொண்டு போய் விடுங்கோன்னு அழுவா.” என்றார் ருக்மிணியின் பின்னால் ஜெய்யின் அறைக்கு வந்த பாலகிருஷ்ணன்.
“அதெல்லாம் அப்ப ண்ணா..இப்ப அவளுக்கும் பத்து வயசாகப் போகறது..சமத்தா இருப்பா.” என்றார் ருக்மிணி.
“நீங்க சொல்றது சரி ண்ணா..நான் அவளுக்குவைச்ச பெயரை என்னாலே வாய் நிறைய கூப்பிட முடியலை..ஆராதனான்னு கூப்பிட்டா அப்படி கூப்பிடாதீங்கோ..அந்தப் பாட்டி வைச்ச பெயர் ஸமிக்ஷா அப்படியே கூப்பிடுங்கோன்னு சொல்றா.” என்று வருத்தப்பட்டார் ருக்மிணி.
“அதான் சொல்றேன்..திடீர்னு நம்மளோட ஒட்டாது..குழந்தைகள் எல்லாம் அப்படித்தான் சொல்லுவா ஆனா இருக்க முடியாது..உன்னாலே அவளைப் பார்த்துக்கவும் முடியாது.” என்றார் பாலகிருஷ்ணன்.
“பவி, தீபக் இரண்டு பேரையும் என் பொறுப்பிலே விட்டிட்டு அவ மாமியாரைப் பார்த்துக்க சுகந்தி ஆஸ்பத்திரிக்கு போவா..அவா இரண்டும் பேரும் சமத்தா என்கிட்டே இருப்பா.” என்றார் ருக்மிணி.
“அவா இரண்டு பேரும் உன்கிட்டே சமத்தா இருந்ததுக்குக் காரணம் அப்ப சுதர்ஷனும் அவாகூட இருந்தான்….இங்கே நம்மாத்துலே அவளோட அப்பா, அம்மாவை விட்டிட்டூ தனியா ஸமிக்ஷா இருப்பான்னு நினைக்கறேயா? நேக்கு நம்பிக்கை இல்லை.” என்றார் பாலகிருஷ்ணன்.
“எல்லாம் இருப்பா..பக்கத்திலேயே இருந்து நான் பார்த்துக்கறதுக்கு அவ ஒண்ணும் கைக்குழந்தை இல்லை..போர் அடிச்சா எதிதாத்து நிவி குட்டியோட விளையாடட்டும்..இல்லை அவளோட புஸ்தகம் சிலதைக் கொண்டு வந்து படிக்கட்டும்.” என்றார் ருக்மிணி.
அவர்களின் பேச்சில் தலையிடாமல் மௌனமாக அமர்ந்திருந்தான் ஜெய்.அவன் மனது முழுவதும் பவியே நிறைந்திருந்தாள். அவளைப் பற்றி தகவல் அறிய, முதலில், பக்கத்தில் இருக்கும் திருச்சியில் ஆரம்பிக்கலாமா? இல்லை தூரத்தில் இருக்கும் அவள் சித்தாபாவிடம் கேட்கலாமாமென்று அவன் AI ஆராய்ந்து கொண்டிருந்தது. ஜெய் மௌனமாக இருப்பதை உணர்ந்த ருக்மிணி,
“ஏன் டா, இத்தனை வருஷமா ஒரு பண்டிகைக்கும் நீ ஆத்துலே இருந்ததில்லை..இப்ப பிள்ளையார் சதுர்த்திலேர்ந்து இங்கேதான் இருக்க ஆனா பிடிச்சு வைச்ச பிள்ளையாராட்டம் ஆத்துலேயே இருக்க..அவசரம், அவசியத்துக்குதான் வெளியே போற..இன்னைக்கு எங்ககூட டாண்டியா டான்ஸ் பார்க்க வந்திருக்கலாமே.” என்றார்.
“அம்மா..நீ பேசறது நோக்கே நன்னா இருக்கா..ஒவ்வொரு வீக்கெண்டுக்கும் வெளியூருக்குப் போயிண்டிருக்கேன்.. என்னைப் பார்த்து இப்படிச் சொல்ற.” என்று அவனின் AI யைக்கு பவியைப் பற்றிய அகழ்வாராய்ச்சியை அலாட் செய்துவிட்டு ஜெய்யாக ருக்மிணிக்குப் பதில் சொன்னான்.
“அதைக் கணக்குலே சேர்க்க முடியாது..எங்களோட போகறதைதான் சேர்க்க முடியும்.”
“போதும் டா..ரொம்ப நிறையதான் வெளியே வந்துட்டே என்னோட.” என்று அலுத்துக் கொண்டார் ருக்மிணி.
உடனே அவனது சேரிலிருந்து எழுந்து வந்து அவரைக் கட்டிக் கொண்டு,”மை டியர் மினி..டாண்டியா நைட்டுக்கு ஜோடியாதான் போக முடியும்.” என்ற பதிலில், ‘மை டியர்’ என்று ஆரம்பித்தது ஜெய், ‘ஜோடி’ என்று பதிலை சொல்லி முடித்தது அவனின் AI.
“பகவானே..ஜோடிகீடியெல்லாம் இங்கே கிடையாது..எல்லாரும் குடும்பத்தோடதான் வந்திருந்தா.” என்று சொன்ன ருக்மிணிக்கு மட்டும் AI இருந்திருந்தால், ஒரு மாதத்திற்கு முன் ஒரு வருஷம் டயம் கேட்டவன் இன்று டாண்டியா நைட்டிற்கு ஜோடி தேடியது டெஸிஷன் வெரியெஷன் (Decision variation) என்று அவரை அலர்ட் செய்திருக்கும்.
“நீ அமெரிக்காலேர்ந்து வந்ததுலேர்ந்து எந்தக் கோவிலுக்கும் போகலை டா.” என்று ருக்மிணி சொல்லி முடிக்குமுன்,
“திருச்சி போகலாமா?’ என்று கேட்டது ஜெய்யின் AI.
“திருச்சியா?” என்று ருக்மிணி ஆச்சரியப்பட,
“ஆமாம்..அங்கே நிறைய கோவில் இருக்கு..ஒரு வாரம் போதும் எல்லாக் கோவிலையும் பார்க்கறத்துக்கு.”என்றான் ஜெய்.
“ஒரு வாரம் ஆத்தை விட்டிட்டு ஹோட்டல்லே இருக்க என்னாலே முடியாது டா..இங்கே பக்கத்திலே பூரி ஜெகன்னாதர் கோவிலும் வைஷ்னோ தேவி கோவிலும் இருக்கு..நாளைக்குப் பூஜையை முடிச்சிட்டூப் போகலாமா?” என்று கேட்டார் ருக்மிணி.
உடனே திருச்சியைக் கிடப்பில் போட்டுவிட்டு சித்தப்பாவிற்குத் தாவியது ஜெய்யின் AI.
“போகலாம் மா.” என்றான் ஜெய்.
அப்போது பெருத்த ஒலியுடன் அவர்கள் கம்யுனிட்டி ஹாலிலிருந்து வெளியே வந்த கும்பல் ஒன்று புல்வெளியில் நடனத்தைத் தொடர்ந்தது.
“ப்ரோக்ராம் முடிஞ்சிடுத்து போல..அதான் எல்லாரும் வெளியே வந்துட்டா.” என்றார் ருக்மிணி.
“கொஞ்ச வருஷம் முன்னாடி அந்தப் பிளாண்ட்டிலே என்னோட ஜீனியர் ஒருத்தன் வேலை பார்த்திண்டிருந்தான் அவன் தான் சொன்னான்.” என்றார் பாலகிருஷ்ணன்.
“அவளோட பொண்ணு ஓகேவா பாடுவா..பையன் தான் ஒண்ணுத்துக்கும் பிரயோஜனம் இல்லை.” என்று இடைமறித்தார் ருக்மிணி.
“நோக்கு யாருமே பிரயோஜனமில்லே..பிரவீண் அப்பவே அவன் அம்மாவோட பஜனையெல்லாம் ஆர்கனைஸ் செய்வான்..அவளோட பாட்டு கிளாஸையும் அவன் தான் பார்த்திண்டான்.” என்றார் பாலகிருஷ்ணன்.
பாட்டு கிளாஸைப் பார்த்துக் கொள்ளவில்லை பிரவீண், பாட்டு படிக்க வந்த பெண்களைப் பார்த்து கொண்டிருந்தான் என்று பாலகிருஷ்ணனிடம் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை ஜெய்.
ஆனால் அந்த நொடியில் அவன் மனத்தில், பிரவீணைப் போல் அவனும் பவிக்குக் காதல் கடிதம் கொடுத்திருந்தால் அவள் அதை யாருடனாவது பகிர்ந்து கொண்டிருப்பாளா? இல்லை அவனுக்குப் பதில் கடிதம் கொடுத்திருப்பாளா? என்ற கேள்வி தசமி அன்று வதம் செய்யப்படும் பத்து தலை ராவணனைப் போல விஸ்வரூபமெடுத்து பதிலிற்காகக் காத்திருக்க ஆரம்பித்தது. அதே சமயத்தில்,
“இப்ப உங்களுக்குத் தெரிஞ்சவா யாரும் அங்கே இல்லையா ப்பா?” என்று பவியைப் பற்றி தற்போதைய தகவல் திரட்டும் வேலையில் இறங்கியது அவனின் AI.
“அந்த ஜுனியரைதான் விசாரிக்கணும் டா…ஆனா அவனே இப்ப அங்கே இல்லே.”
“ஏண்ணா அந்த ஜுனியருக்கு ஜுனியர் யாராவது ஸப்ஜுனியர் இருப்பா..அவாகிட்டே சுதர்ஷனோட தம்பி பற்றி விசாரிக்க சொல்லுங்கோ..அவன் மூலம் சுகந்தியோட அட்ரெஸ் கிடைச்சா ஒரு வாரம் திருச்சிலே இருக்கறது நேக்குப் பிராப்ளமில்லே..சுகந்தி ஆத்துலே இருக்கறது நம்ம ஆத்துலே இருக்கற மாதிரி தான்.” என்றார் ருக்மிணி.
“இது நல்ல ஐடியா ருக்கூ..நேக்குத் தோணவே இல்லை.. நேக்கும் சுதர்ஷனுக்கும் காமனா தெரிஞ்சவாளை நான் தேடிண்டிருந்தேன்..நீ சொன்னதை அந்த ஜுனியர்கிட்டே சொல்றேன்..அவனுக்குத் தெரிஞ்சவா யாராவது கண்டிப்பா இருப்பா..சுகந்தியோட அட்ரெஸ் கிடைச்சவுடனே திருச்சிக்குப் போகலாம்..சுதர்ஷன் இருந்திருந்தா அவனாத்திலே தானே தங்கியிருப்போம்.” என்று ருக்மிணியின் ஐடியாவிற்கு ஆதரவளித்தார் பாலகிருஷ்ணன்.
“என்னோட ஐடியா இல்லை ண்ணா இது.. ஜெய்யோடதுதான்..திருச்சி போகலாம்னு அவன் தானே ஆரம்பிச்சான்….திருச்சி ப்ரோகரம் நடக்க பகவானே வழி காட்டறர்.” என்று பரவசமானார் ருக்மிணி.
மகளைப் பற்றி ஆரம்பிக்கும் எல்லா பேச்சுக்களும் அவள் அப்பாவிடமும், அம்மாவிடமும் போய் முடிவது நார்மல் கான்வர்ஸென்ஷன் (normal conversation) என்று ஜெய்யும், லோ ஸ்டாண்டர்ட் டிவியெஷன் (low standard deviation) என்று ஜெய்யின் AIயும் நினைத்ததற்குப் பெயர் அப்ஸலுயுட் கன்விக்ஷன் (absolute conviction).
பக்கத்தில் இருக்கும் பவியை தூரத்தில் தேட நினைக்கும் ஜெய்க்கு அவளின் அருகாமையை உணர்த்த போவது பகவானின் அனுக்கிரகமா? பாட்டின் பராக்கிரமமா? ட்ரிக்கி குவஸ்சின் (tricky question).