அத்தியாயம் – 10

அந்தக் காலை வேளையில் டிஃபன் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜெய்யை நிம்மதியாக சாப்பிட விடவில்லை ருக்மிணி. நேர்காணலுக்கு வந்திருந்த விண்ணப்பதாரர் போல் அவனைக் கேள்விகளால் தாக்கிக் கொண்டிருந்தார்.

“என்ன டா ஒரு நாளை போல காலம்பற விடியறத்துக்கு முன்னாடி சைக்கிள்ள கிளம்பினா சூர்யோதயம் ஆன அப்புறம் ஆத்துக்கு வர..இன்னைக்காவது சீக்கிரமா வந்திருக்கலாமே..உன்கிட்டே பேசணும்னு காத்திண்டு இருந்தேன்..நேத்து நான் திரும்பி வரும் போது உன் கதவு சாத்தியிருந்தது.” என்றார் ருக்மிணி.

“D” பிளாக் பக்கத்திலே ஸன்ரைஸ் நன்னா இருக்கு அதனாலே டெய்லி சூர்ய பகவானைப் பார்த்து ஆதித்ய ஹிருதயம் சொல்லிட்டு ஆத்துக்கு வரேன்.”

“குளிக்காமயா?”

“யா.”

அதற்கு மேல் ஜெய்யின் செய்கையை விமர்சிக்க விரும்பாமல் பேச்சை மாற்றினார் ருக்மிணி.

“வேற என்ன பேசினா டா?’

“அம்மா..எல்லாத்தையும் நோக்கு ஒரு வார்த்தை விட்டுப் போகாம காலை காப்பி போதே சொல்லிட்டேன்…இப்ப திரும்ப கேட்கற..திருப்தியில்லேன்னா ஸென் ஆன்ட்டியைக் கேளு.” என்று அலுத்துக் கொண்டான் ஜெய்.

“அவாளை எதுக்கு கேட்கணும்? லேட்டா போனாலும் நீ போனயோனோ..எப்படி டா அந்த மாதிரி முடிவு எடுத்தா?” அஸோஸியேஷன் மோசமாயிடுத்து.” என்றார் ருக்மிணி.

“என்ன மோசம்? இவ்வளவு பெரிய ஏரியாவை மெயிண்டெயின் செய்யணும், இங்கே வேலை செய்யறவாளுக்கு சம்பளம் கொடுக்கணும்..24×7 செக்யுரிட்டி..எல்லாத்துக்கும் பணம் வேண்டாமா? அதனால் தான் கமியுனிட்டி ஹால்லே நடக்கற ஃப்ங்ஷன்லே வாடகைக்கு இருக்கறவாளும் ஓனர்கிட்டேயிருந்து லெட்டர் வாங்கி கொடுதிட்டூ, பணத்தைக் கட்டிட்டு கலந்துக்கலாம், அவாளும் ஹாலை வாடகைக்கு எடுத்துக்கலாம்னு முடிவு செய்திருக்கா.” என்றான் ஜெய்.

“நிறைய ஓனர்ஸ்தான் இங்கே இருக்கா டா..சிட்டிலேர்ந்து இவ்வளவு தூரத்திலே யார் வாடகைக்கு வருவா..முக்கால்வாசி வாடகைலே இருக்கறது சிங்கிள் பெட்ரூம் ஃபிளாட்ஸ்தான்..இங்கே நம்ம பிளாக்லே மிஸஸ் ஸென் மட்டும் தான் வாடகைக்கு இருக்கா..அவ பையனோட பிரண்ட் ஃபிளாட் இது..அவளுக்கு இந்த முடிவைக் கேட்டு சந்தோஷமா இருந்திருக்கும்..இந்த வயசுலேயும் ஒவ்வொரு வருஷமும் ஏதாவது போட்டிலே கலந்துக்கணும்னு ஆசைப்பட்டிண்டிருந்தா.. அவ வாடகைக்கு இருந்ததாலே இதுவரைக்கும் கலந்துக்க முடியலே..இந்த வருஷம் நிச்சயம் கலந்துப்பா.” என்றார் ருக்மிணி.

“நம்ம ஆத்துக்கு எதிர்லேயே வாடகைக்கு ஆள் இருக்கறச்சே நீ ஏன் இப்படி பேசற? என்று ஜெய் கேட்க,

“மிஸஸ் ஸென் போல எல்லாரும் கிடையாது..சரியா விசாரிக்காம, சில சமயம் யார் யாரையோ வாடகைக்கு வைச்சு வம்பா போயிடறது..மூணு மாசம் மேல ஃபிளாட்டை பூட்டி வைச்சிட்டூ வெளியூருக்குப் போயிடறா..ஓனரும் மெயிண்டனஸ் கொடுக்கறதில்லை..வாடகைக்கு இருக்கறவாளைக் கேட்டா மறந்திட்டோம்னு சொல்றா..

இதெல்லாம் பார்க்கறச்சே..பேசாம கீது ஆத்துக்குப் பக்கத்திலேயே ஃபிளாட் வாங்கிண்டு இருந்திருக்கலாம்.” என்று சொல்லிக் கொண்டிருந்த ருக்மிணியின் மனத்தில் நகரத்தின் முக்கியமான பகுதியில் இருந்த அவருடைய மகளின் ஃபிளாட் கண்முன் வந்தது.  இரண்டு சிறிய படுக்கையறைகள், சிறிய ஹால், அதைவிட சிறிய கிட்சன், ஒரே ஒரு பால்கனி, இருபத்தி நாலு மணி நேரமும் வாகனப் போக்குவரத்து என்று மனிதர்களுக்கு முக்கியமானத் தூக்கத்தை தியாகம் செய்து, அந்தப் பகுதியில் அவர் வாழ்ந்த சில மாதங்கள் மனத்தில் வந்து போனது.  அவரின் முகத்தையைப் பார்த்து கொண்டிருந்த ஜெய்,

“சும்மா வெளிலே இந்த மாதிரி பேசற..மனசுக்குள்ளே வேற ஏதோ நினைச்சிண்டு இருக்க.” என்றான்.

உடனே, “பகவானே..உன் எதிர்க்க நான் எதையும் நினைக்க முடிய மாட்டேங்கறது டா ஜெய்..என் முகத்தைப் பார்க்காம தட்டைப் பார்த்து சாப்பிடு..இவ்வளவு படிச்சது ஜோசியக்காரனாகவா டா..அடுத்து என் கையைப் பார்த்து எதையாவது உளற போறியா?” என்று கோபமாகக் கேட்டார் ருக்மிணி.

“கையெல்லாம் வேணாம்..உன் வாய்தான் இனிமே.. ஒரே ஒரு வார்த்தையை வைச்சு அடுத்து என்ன சொல்லப் போறே? யாரைச் சொல்லப் போறேன்னு கண்டு பிடிக்கப் போறேன்.” என்றான் ஜெய்.

“ஏன் டா..என்னை வைச்சு ஆராய்ச்சி செய்யறத்துக்குதான் அமெரிக்காலேர்ந்து மூட்டையைக் கட்டிண்டு இந்தியா வந்திருக்கியா?” என்று ருக்மிணி கோபப்பட,

“இல்லைன்னு நோக்கே தெரியும்..இதெல்லாம் ஸ்டரக்சர்டா நடந்திண்டு இருக்கு..யு ஆர் நாட் பார்ட் ஆஃப் தட் (You are not part of that)..பட் யு ஆர் தி ஃபன் பார்ட் ம்மா (but you are the fun part amma).” என்று சொல்லிs சிரித்தான் ஜெய்.

அப்போது அவரது காலை பூஜையை முடித்துக் கொண்டு டேபிளில் வந்து அமர்ந்தார் பாலகிருஷ்ணன்.  அவரிடம் ஜெய்யைப் பற்றி புகார் வாசித்தார் ருக்மிணி.

“நேத்து அஸொஸியேஷன் மீட்டிங்கலே என்ன நடந்ததுன்னு  இவன்கிட்டே கேட்டா, என் மனசுல நடக்கறதைப் பற்றி சொல்லிச் சிரிச்சிண்டு இருக்கான்..என்னத்த சொல்ல..நாமளே மீட்டிங்கிற்க்குப் போயிருக்கணும்..உங்களோட ஈவினிங் வாக்கிங் முடிச்சிட்டூ நாம புறப்பட்டுப் போனதாலதான் டிராஃபிக்ல மாட்டிண்டோம்..மீட்டிங்குக்கு வர முடியலே..ஒரு நாள் வாக்கிங் போகாம இருக்க மாட்டேளா..ஒரு கேட் வழியா வெளிலே போயிட்டு இன்னொரு கேட் வழியா உள்ள வர வேண்டியது..எதுக்குன்னு கேட்கறேன்.” என்று பாலகிருஷ்ணன் மீதும் கோபப்பட்டார் ருக்மிணி.

“நீ ரொம்ப படுத்தற ருக்கூ….நவராத்திரிக்கு நேர்ல போய்தான் உன் பொண்ணைக் கூப்பிடணும்னு சொல்ற..நீ சொல்ற நேரத்துக்கு நான் கிளம்பணும்..நேத்து நீ ஜெய்யை அழைச்சிண்டு போயிருக்கணும்..அவனும் கீதுவைப் பார்த்த மாதிரி இருந்திருக்கும்.” என்றார் பாலகிருஷ்ணன்.

“நானும் இவனை அழைச்சிண்டு போகலாம்னு தான் இருந்தேன்..ஆனா இவனுக்கு திடீர்னு வேலை வந்திடுத்து..நாம இரண்டு பேரும் நேர்ல போய் கூப்பிடாட்டா மாமியும் தப்பா நினைச்சுப்பா.” என்றார் ருக்மிணி.

“தப்பா நினைச்சுக்கட்டும்..திரும்ப ஒரு நாள் அவாத்து கொலுக்கு வேற அவ்வளவு தூரம் நாம போகணும்..ஆனா மாமி மட்டும் நம்மாத்துக்கு ஒரு தடவையும் வரலை..அதே தூரத்தைக் காரணம் காட்டி இருந்த இடத்திலேர்ந்து அசைய மாட்டா.” என்றார் பாலகிருஷ்ணன்.

“என்ன பண்றது? கீது தலையெழுத்து..நாம லோக்கலா இருந்து கூட அவளுக்கு ஒரு நாள்கூட நம்மளோட வந்து தங்க முடியறதில்லை..நவராத்திரிக்கு மட்டும் வந்து தலையைக் காட்டிட்டு போவா..எல்லாம் மாமி ராஜ்ஜியம்தான்..என் பொண்ணுக்கு எங்க வாய்ஸ்?..

ஏன் டா அவளை மாதிரி அப்பிராணிக்கு, வாயில்லாப் பூச்சிக்கு ஒரு பாட் பண்ணிக் கொடு..அவ பேச நினைக்கறதை அது பேசட்டும்..மாமிக்கு பாடமா இருக்கும்.” என்று பெற்ற மகளின் மேல் பரிதாபப்பட்டுப் பெற்ற மகனிடன் பாட்டிற்கு புரொடக்‌ஷன் டிமாண்ட் வைத்தார் ருக்மிணி.

“டன்..முதல்லே கீதுக்குதான்..சின்ன டிவைஸ்ஸா (device) பண்ணித் தரேன்..சீர்வரிசைலே விட்டுப் போயிடுத்துன்னு சொல்லி கொடுத்துடு..அப்பதான் இத்தனை வருஷம் கழிச்சு மாமியும் சந்தேகப்படாம சந்தோஷமா வாங்கிப்பா..அதுக்கு அப்புறம் நாம பிஸ்னஸ் ஆரம்பிச்சிடலாம்..பாட்ஸ் ஃபார் பிரைட்ஸுன்னு (Bots for Brides)..ஒண்ணு நம்மாத்துக்கு வர்ற உன் மாட்டுப் பொண்ணுக்கும்..ஓகே வா.” என்று திட்டமிட்டான் ஜெய்.

அவன் திட்டத்தை வாய் பிளந்து கேட்டு கொண்டிருந்த ருக்மிணி,”ஐயோ..இவன் அப்படி ஏதாவது கண்டுபிடிச்சா நேக்கும் தானே பிராப்ளம்.” என்று மனத்தில் நினைக்க,

“என்ன இப்பதான் நீயே நோக்கு பிராப்ளம் கிரியேட் பண்ணிக்கறேன்னு புரியறதா?” என்று அச்சு பிசகாமல் அவர் மனதில் நினைத்தை ஜெய் வெளியே சொல்ல,

அதைக் கேட்டு,“பகவானே” என்று ருக்மிணி கத்த,

“ஸே பாட்டே.” என்று ஜெய் அவரைத் திருத்த,

அவர்கள் இடையே புகுந்து,”ஜெய்..விடுடா உங்கம்மாவை..பாவம்” என்று அதுவரை ருக்மிணி மீது கோபம் கொண்டிருந்த பாலகிருஷ்ணன் மனைவிக்காகப் பரிந்து பேசினார்.

“இவன்கிட்டே பேச ஆரம்பிச்சா டாபிக் எங்கேயோ போயிடறது…நேத்து நடந்த மீட்டிங் பற்றி விசாரிச்சிண்டிருந்தேன்..வாடகைக்கு இருக்கறவாளை கம்யுனிட்டி ஹால் யூஸ் செய்ய அலவ் செய்ய போறாளாம்..இனிமே ஒரு நாளைக்கு நாலு பர்த்டே பார்ட்டி நடக்கப் போகறது.” என்றார் ருக்மிணி.

“அப்படிச் சொல்லலை ம்மா..நானே அங்கே லேட்டாதான் போனேன்..ஒரு கால் பேசிண்டு இருந்தேன் அப்படியே டயமாயிடுத்து..அதுக்குள்ளே ஸென் ஆன்ட்டி கிளம்பி போயிட்டா..வாசல் வரைக்கும் கூட்டம் இருந்தது..என்ன முடிவு செய்தான்னு நேக்கு புரியவே இல்லை..ஒரே சத்தம்..கூச்சல்..அங்கே ஒரு காலேஜ் பையன்கிட்டே ஆன்ட்டி விசாரிச்சிண்டு இருந்தா நானும் ஆன்ட்டி பக்கத்திலே நின்னுண்டேன்…அவன் இங்கே புதுசாம்..”D” பிளாக்லே வாடகைக்கு இருக்கானாம்..ஓனர் சார்பா மீட்டிங்கிற்கு வந்திருக்கான்..அவன் எங்கிட்டே சொன்னது இதுதான்..

பிரைவெட் பார்ட்டிக்கு ஓனர்ஸ்க்குதான் ஃபர்ஸ்ட் பிரிஃபரென்ஸ் அப்புறம் தான் டெனண்ட்ஸ்..மத்த காமன் ஃபங்ஷன் எல்லாத்துக்கும் பணத்தையும் ஓனரோட கன்ஃபர்மெஷன் லெட்டரையும் கொடுத்திட்டூ யார் வேணும்னாலும் கலந்துக்கலாம்.” என்றான் ஜெய்.

“அப்ப நவராத்திரி, தீபாவளி, நியூ இயர் எல்லா பார்ட்டிலேயும் எல்லாரும் கலந்துக்கலாம்.”

“ஆமாம்…இந்த வருஷம் எல்லா பார்ட்டிலேயும் போட்டிலேயும் யாரு வேணும்னாலும் கலந்துக்கலாம்னு சொல்லியிருக்கா..நவராத்திரி, தீபாவளி, கிறிஸ்மஸ், நியூ இயர்னு எல்லாத்துக்கும் பாட்டு, டான்ஸ், குகிங் போட்டின்னு நிறைய கண்டெக்ட் பண்ண போறா.” என்றான் ஜெய்.

“நம்மாத்துலே யார் இருக்கா அதுலே கலந்துக்க?”

“நீ நடுவரா போ..டவுன்ஷிப்ல எல்லாத்துக்கும் நீ தான் நடுவர்.” என்றான் ஜெய்.

“அங்கே நான் யாருக்கு பரிசு கொடுத்தாலும் சரியா இருக்கும்ணு ஒத்துப்பா..மிஸஸ் ஜோஷிக்கு ஒரு தடவை இரண்டாவது பரிசு கொடுத்தேன்…எப்படி முதல் பரிசு கொடுக்கலேன்னு எல்லாரும் ஒரே கேள்வி..எப்பவும் நன்னா பாடுவா ஆனா அன்னைக்கு நன்னா பாடலேன்னு சொன்னவுடனே மத்த ஜட்ஜஸும் ஒத்திண்டா..அவ பஜனையை நாள் பூரா கேட்டிண்டு இருக்கலாம்..அவ பொண்ணுக்கு அவளைப் போல குரல் வளம் இருக்கலே..சுமாரா பாடுவா..அவ பையனுக்குப் பாட்டுலே இன்ட்ரெஸ்ட் இல்லைன்னு சொல்லிட்டான்…

பவி கூட மிஸஸ் ஜோஷிகிட்டே பாட்டு கத்திண்டிருந்தா…ஆனா பாட்டு கிளாஸுக்குப் போகறதுனால படிப்பு கெட்டுப் போகறதுன்னு பிடிவாதமா போக மாட்டேன்னுட்டா.. சுகந்திக்கு ரொம்ப வருத்தம்..அப்படி படிச்சும் பத்தாவதுலே 90% தான் வாங்கினா. ” என்றார் ருக்மிணி.

பவியின் பாட்டு கிளாஸை நிறுத்தியதற்கான உண்மை காரணம் ஜெய்க்கும் பவிக்கும் மட்டும்தான் தெரியுமென்பதால் பவியைப் பற்றி ருக்மிணி சொன்னதை மௌனமாக கேட்டுக் கொண்டான் ஜெய்.

“பாட்டெல்லாம் ஒரு தடவை கத்துண்டா எப்பவுமே மறக்காது..சின்ன வயசுலே கத்துக்கறது எதுவும் மறக்காது.” என்றார் பாலகிருஷ்ணன். 

“அதைத் தான் இப்ப ஆராய்ச்சி பண்ணிண்டு வரேன் ப்பா..நம்ம சின்ன வயசுலே கத்துண்டது, கேட்டது, பார்த்தது, நடந்தது எல்லாம் எத்தனை ஆழத்துலே நமக்குள்ளே இருக்குண்ணு வர்க் பண்றேன்..சிலது மட்டும் சிரமேயில்லாம சட்டுன்னு நம்ம நினைவுக்கு வந்துடறது..சிலது எவ்வளவு முயற்சி செய்தாலும் வர மாட்டேங்கறது.” என்றான் ஜெய்.

“எது டா அவ்வளவு கஷ்டமா இருக்கு நோக்கு?” என்று ருக்மிணி கேட்க,

“சுதர்ஷன் மாமாவோட பையன் தீபக் பத்து வயசுலே எப்படி இருந்தான்னு தெரியும்..இப்ப அதை வைச்சு அவன் எப்படி இருப்பான்னு யோசிக்கறேன் சரியா ஃபேஸ் ஃபார்ம் ஆக மாட்டேங்கறது..

என்னோட AI நான் கொடுக்கற டேட்டா வைச்சுதான் எல்லாத்தையும் கண்டு பிடிக்கும்.. இந்த மாதிரி சூழ்நிலையை சமாளிக்க நம்ம சின்ன வயசோட எல்லா நினைவுகளையும் டிரான்ஸ்ஃபர் செய்ய முடியாது. அதே சமயம் எதையும் ஒதுக்கிடவும் முடியாது.” என்று வெளியே சொன்ன ஜெய் சுதர்ஷன் மாமாவின் பெண்ணின் முகத்தையும் மனதில் ஃபார்ம் செய்ய முயன்று கொண்டிருந்தான் என்பதை வெளியிடவில்லை.

“ஏன் டா ஏற்கனவே இருக்கறதை நீ திரும்ப ஆராய்ச்சி பண்ணிண்டு இருக்கியா? சின்ன வயசு ஃபோடோவைக் கம்புயுடருக்குக் கொடுத்தா அது எல்லா வயசுலேயும் பத்து ஃபோட்டாவை நமக்குத் திரும்பிக் கொடுக்கும்.” என்றார் ருக்மிணி.

“அந்த பத்து ஃபோட்டவை வைச்சிண்டு அதே மாதிரி இருக்கற பத்து பேர்கிட்டே போய் விசாரிக்கணும்..என் டார்கெட் ஒரே ஒரு ஃபோட்டோ..பவியோட சின்ன வயசு ஃபோட்டோவை வைச்சு இப்ப அவ எப்படி இருப்பான்னு காட்டற பத்து ஃபோட்டோவோட நான் வெளிலே போய் பத்து பொண்ணுங்ககிட்டே அவதான் பவியான்னு கேட்டா என்ன நடக்கும்?” என்று கேட்டான் ஜெய்.

“நோக்கு அடி கிடைக்கும்.” என்று சொன்ன ருக்மிணி, தீபக் பற்றி பேசிக் கொண்டிருந்தவன் திடீரென்று பவிக்குத் தாவி அவள் இப்போது எப்படி இருப்பாளென்று ஜெய்க்கு தெரிய வேண்டிய அவசியத்தைப் பற்றி விசாரிக்கவில்லை. லேசாக திறந்த ஜெய்யின் மனத்தை எட்டிப் பார்க்கும் அருமையான வாய்ப்பைத் தவற விட்டனர் ருக்மிணியும் பாலகிருஷ்ணனும்.

“அதானால் தான் நான் ஒரே ஒரு ரிஸல்ட் இல்லை நியர்லி கரெக்ட் ரிஸல்ட் மேலே வேலை பார்த்துண்டு இருக்கேன்.” என்று பதில் அளித்தான் ஜெய்.

“எதுக்கு டா இவ்வளவு கஷ்டப்படணும்..ரொம்ப தெரிஞ்சவா மாதிரி யாரையாவது பார்த்தா அவாகிட்டே போய் பேசிப் பார்க்கணும்..தப்பா போயிடுத்துன்னா பிராப்ளமில்லை..ஸாரி கேட்க வேண்டியது தான்.” என்றார் ருக்மிணி.

“அப்ப மனுஷாளுக்கும் பாட்டுக்கும் வித்தியாசமில்லாமப் போயிடும்..மெஷின்லே எரர் (erro) இருக்க முடியாது ம்மா.”

“இப்ப சொன்னியே இது கரெக்ட்..ஒரு மீட்டிங் போயிட்டு வந்து உன்கிட்டே விஷயத்தை தெரிஞ்சுக்கறதுக்குள்ளே நான் படற பாடு..இதே உன் பாட்டா இருந்தா இதுக்குள்ளே எல்லாத்தையும் ஒண்ணு விடாம கரெக்ட்டா சொல்லியிருக்கும்..அதுக்கு இப்படி சுத்தி வளைச்சு சொல்லத் தெரியாது.” என்று பாட்டை வைத்தே அவனை மடக்கினார் ருக்மிணி.

“நானும் எல்லாத்தையும் சொன்னேன் ம்மா..நீ தான் அதைக் கேட்டுக்காம வேற என்னென்னவோ பேசின.” என்றான் ஜெய்.

“நான் என்ன பேசினாலும் நோக்கு தான் வேற மாதிரி கேட்கறது..இவன் எதிர்க்க ஒண்ணும் பேச முடிய மாட்டேங்கறது ண்ணா.” என்று பாலகிருஷ்ணனிடம் முறையிட்டார் ருக்மிணி.

“நீ ஏன் உள்ள ஒண்ணு வைச்சிண்டு வெளியே ஒண்ணுன்னு பேசற?” இரண்டு ஒண்ணா இருக்கற மாதிரி பேசு.” என்று மனிதர்கள் பின்பற்றுவதற்கு மிகவும் கஷ்டமான விஷயத்தைப் பற்றி எளிதாக பேசினார் பாலகிருஷ்ணன்.

“உங்களுக்கு முடியறதா? மனசுல நினைக்கறதெல்லாத்தையும் அப்படியே வெளிலே சொல்லிண்டு இருக்கேளா?’ என்று கேட்டார் ருக்மிணி.

“எப்பவும் இல்லை…சில சமயத்திலே..சில பேர்கிட்டே..சில விஷயத்திலே..பல சமயத்திலே ஒரே மாதிரிதான் பேசறோம்..செய்யறோம்.” என்று ஒரே வரியில் ஜெய்யின் அடுத்த கட்டத்திற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார் பாலகிருஷ்ணன்.

உடனே,“தட்ஸ் பெட்டர்ன் (pattern) ப்பா..நானும் அதைத் தான் அம்மாகிட்டே சொல்லிண்டு இருந்தேன்..வார்த்தைகளை வைச்சு கண்டுபிடிக்க போறேன்னு..இனி அம்மா பேசற சில வார்த்தைகளுக்கு ஒரு செட் ஆஃப் ஆன்ஸர்ஸ் தயார் செய்து வைக்கப் போறேன்..காலை ஏழு மணிக்கு “ஜெய்” அப்படின்னு குரல் கொடுத்தா, ‘காப்பியைக் கொண்டு வா’ அப்படின்னு பதில் சொல்லப் போறேன்..எட்டு மணிக்கு குரல் கொடுத்தா,’டிபன் சாப்பிட வரேன்னு.’ சொல்லப் போறேன்.” என்றான் ஜெய்.

“ஏன் டா ஏழு மணிக்கு உன்னைக் கூப்பிட்டா அது வெறும் காப்பிக்குதானா?” என்று ருக்மிணி கேட்க,

“நான் இங்க வந்ததிலேர்ந்து உன்னோட பெட்டர்னைக் கவனிச்சிண்டு வரேன் ம்மா..அதனால் தான் சொல்றேன்.” என்றான் ஜெய்.

“உங்கம்மாக்கு எல்லாமே ஸேம் பெட்டர்ன் தான்..காலம்பற ‘கடங்காரனைக் காணலைன்னு’ சொன்னா அது பால்காரனைச் சொல்றான்னு அர்த்தம்..சாயந்திரம் ‘கடங்காரனைக் காணலைன்னு’ சொன்னா அது இஸ்திரிக்காரனை சொல்றான்னு அர்த்தம்.” என்றார் பாலகிருஷ்ணன்.

“ப்ரிலியண்ட் ப்பா..அம்மா பிஹெவியரை எப்படி இப்படி ஸ்டடி பண்ணி வைச்சிருக்கேள்?” என்று ஆச்சரியப்பட்டான் ஜெய்.

அதற்கு பாலகிருஷ்ணன் பதில் சொல்லுமுன்,

“ரிடையர் ஆன அப்புறம் வேற என்ன வேலை உங்கப்பாக்கு..நான் சொல்றதையும் செய்யறதையும் குறை சொல்றதைத் தவிர..ஆராய்ச்சிங்கற பெயர்லே அந்தக் கடன்காரங்களோட பேசறதுதான் நோக்கு இப்ப முக்கியமான வேலையா இருக்கு.” என்றார் ருக்மிணி.

“எல்லாரோடேயும் பேசிப் பார்த்தா தான் பெட்டர்ன் ஃபார்மாகும்..அதுக்கு அவாளோட கதையைக் கேட்கறது தப்பா?” என்று ஜெய் கேட்க,

“பகவானே..அதுக்கு பெயர் வம்பு டா….கடன்காரா.” என்று ஜெய்யைக் கோபித்துக் கொண்டார் ருக்மிணி.

அப்போது, வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல்,”இந்த நேரத்திலே கடன்காரன்னு சொன்னா யாரைச் சொல்றா ப்பா அம்மா?’ என்று கேட்டான் ஜெய்.

“அதை நீதான் கண்டு பிடிக்கணும்..உன்னோட AI வைச்சு.” என்று கழண்டு கொண்டார் பாலகிருஷ்ணன்.

“அம்மா, நீ யாரையெல்லாம் கடன்காரன்னு திட்டுவேன்னு ஒரு லிஸ்ட் போட்டு கொடு..நான் அதை வைச்சு ஃபிட் அண்ட் பிரெடிக்ட் (fit and predict) பண்றேன்..அதுக்கு அப்புறம் உன்னோட ஒவ்வொரு கடங்காரனையும் நீ கனவுலே திட்டினாக் கூட நான் கரெக்டா கண்டு பிடிச்சிடுவேன்.” என்றான் ஜெய்.

“நீ என்னை நிம்மதியா தூங்க விடப் போகறதில்லை..பகவானே.” என்றார் ருக்மிணி.

“நோக்கு நிம்மதியானத் தூக்கம் கிடைக்கணும்னா ஸே பாட்டே.” என்றான் ஜெய் சிரித்துக் கொண்டே. 

ருக்மிணியின் கனவில் வரும் எல்லாக் கடன்காரன்களையும் கரெக்டாகக் கண்டுபிடிக்க முடியும் என்று பெருமை பேசிய ஜெய்க்கு நேற்று நடந்த அஸொஸியேஷன் மீட்டிங்கில் அவன் சந்தித்த காலேஜ் பையன் தான் அவன் இன்ஸ்பிரெஷனின் தம்பி என்று ஜீரோ ஸஸ்பிஷன் (zero suspicion).