அத்தியாயம் – 1

சென்னை சர்வதேச விமான நிலையதிலிருந்து அவனுடைய பேக்கேஜ்  ட்ராலியைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்தான் ஜெய். அரைவலில் அவன் வருகைகாகக் காத்திருந்தனர் பாலகிருஷ்ணனும் ருக்மிணியும்.  அவர்கள் கண்ணில் அவன் பட்டவுடன் அவருடைய கையை அசைத்து,

“ஜெய்..ஜெய்..ஜெய் இங்கே..இங்கே இருக்கேன் அம்மா.” என்று ஆர்ப்பாட்டமாக வரவேற்றார் ருக்மிணி.

ருக்மிணியை நோக்கி கை அசைத்த ஜெய், அடர் நீல நிறத்தில் டீ ஷர்ட், வெளீர் நீல ஜீன்ஸ், க்ரூ கட், தாடி, மீசை என்றால் என்ன என்று கேட்கும் முகம், ஒட்டிய வயிறு, முறுக்கேறிய கைகள், நீண்ட கால்கள் என்று சொல்ஜர் போல் இருந்தான் அந்த சாதாரண ப்ரோஃபஸர்.

அவரருகே வந்த மகனைப் பார்த்து,”என்ன டா இது? நேக்கே கொஞ்ச நாழி உன்னை அடையாளம் தெரியலை..தலை முடியைக் காணும்..கண்ணு உள்ளே போய், கன்னமெல்லாம் ஒட்டிப் போய், சாப்பாடே கண்ணுலே கூட பார்க்காதவனாட்டம்..வீடியோ கால் வேஸ்ட் டா..நல்ல வேளை இங்கேயே வந்துட்ட இப்போ.” என்று விடாமல் பேசி, அவருடைய மகனின் தோற்றம் ஏற்படுத்திய வேதனையை, ஏர்போர்ட் என்று கூட பார்க்காமல், வெள்ளாமாக வெளிப்படுத்தினார் ருக்மிணி.

“செத்த சும்மா இரேன்.” என்று மனைவியைக் கண்டித்தார் பாலகிருஷ்ணன்.

“என்துக்கு..என் புள்ளை இப்படிப் பஞ்சத்திலே அடிப்பட்டவனாட்டாம் வந்திருக்கான்..ஏன்? என் வாயை எதுக்கு மூடறேள்?” என்று அவர் மீது பாய்ந்தார் ருக்மிணி.

அவன் தலையிடும் நேரம் வந்துவிட்டது என்று உணர்ந்த ஜெய், அதுவரை கடைப்பிடித்த மௌன விரதத்தை உடைத்து, அவன் அம்மாவின் மனத்தினையும் உடைத்தான்.

“அம்மா, ஸ்டாப்..இட்ஸ் ரட்டலிங் மீ.”என்று ஜெய் சொல்ல, உடனே,”ஏன் டா..வந்து இறங்கின உடனேயே உன்னைப் பெத்தவகிட்ட இப்படித்தான் பட்டுன்னு பேசுவியா?” என்று கோபமாகக் கேட்டார் ருக்மிணி.

அதற்கு ஜெய் பதில் சொல்லுமுன், அம்மா, மகன் இருவரையும் அமைதிப்படுத்தி, கார் பார்கிங்கிற்கு அழைத்துச் சென்றார் பாலகிருஷ்ணன்.

இரண்டே இரண்டு சாமான்களோடு, ஆறு வருடங்கள் கழித்து, இருபதாயிரம் மையில் பயணம் செய்து, மொத்தமாக இந்தியாவிற்கு மூட்டை முடிச்சோடு வந்திருந்த மகனை ஆச்சரியத்துடன் பார்த்த பாலகிருஷ்ணன்,

“ஏன் டா..இவ்வளவு தானா உன் சாமான்? அங்கே திரும்ப போகற ஐடியா இல்லைன்னு சொன்ன ஆனா எப்போவும் போல இரண்டு சாமானோட வந்திருக்க?” என்று சந்தேகத்துடன் கேட்டார்.

“இங்கேயிருந்து கிளம்பி போகறச்சே எவ்வளவு சாமான் எடுத்திண்டு போனேன்?” என்று பதில் கேள்வி கேட்டான் ஜெய்.

ஜெய்யின் பதிலில், போனதும் வந்ததும் சரியாகிப் போனதால், அந்தப் பேச்சு அத்துடன் முடிந்து போனது என்று மகன், தந்தை நினைப்பை குப்பையில் போட்டார் ருக்மிணி.

“இரண்டோட போனா இரண்டோடதான் திரும்பி வரணுமா? நாலோட வரப்பிடாதா? அவா அவா அமெரிக்காலேர்ந்து அவா ஆத்தையே கூட அழைச்சிண்டு வரா..நீ உன் ஆத்தையும் ஆழைச்சிண்டு வரலை என்னையும் அங்கே அழைச்சிண்டு போகலை.” என்று புலம்பலை ஆரம்பித்தார் ருக்மிணி.

“ருக்கூ..ப்ளீஸ்..நம்மாத்துக்குப் போய்ப் பேசிக்கலாம்.” என்று தற்காலிக முடிவு எடுத்தார் பாலகிருஷ்ணன்.

ஏர்போர்ட்டிலிருந்து வெளியே வந்தவுடன், ஜி.எஸ்.டி ரோட்டில், வண்டிகளின் சங்கமத்தில் சேர்ந்து கொண்டனர்.

அமைதியாக, வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மகனை, அவ்வப்போது பார்த்துக் கொண்டு, கார் ஓட்டிய பாலகிருஷ்ணன், வீடு போய் சேரும் வரை, அந்த அமைதி நிலைத்தால்  பிள்ளையாருக்கு மூன்று தேங்காய் வடல் போடுவதாக வேண்டிக் கொண்டார்.  

அன்று வினாயக சதுர்த்தி. சென்னை நகரில், மூலைக்கு மூலை பிள்ளையார் முளைத்திருந்தார்.  அத்தனை பிள்ளையாரையும் தரிசித்தபடி, மனத்தில் எண்ணிக்கை வைத்துக் கொண்டிருந்தனர் பாலகிருஷ்ணனும் ருக்மிணியும்.

திடீரென்று,”ஏன்னா..அங்க பாருங்கோ..மூணு பிள்ளையார் ஒரே இடத்திலே..மூணு தாமரைப் பூ மேல..தங்க கலர்ல.” என்று உற்சாகமாகக் குரல் கொடுத்தார் ருக்மிணி.

அவர் சுட்டிக் காட்டிய இடத்தை, வண்டி ஓட்டிக் கொண்டிருந்த பாலகிருஷ்ணனால் பார்க்க முடியவில்லை.  அதில் மேலும் உற்சாகமடைந்த ருக்மிணி,”நான் உங்களைப் பீட் பண்ணிட்டேன்..இன்னும் ஆறு பார்த்தா சென்சூரி அடிச்சிடுவேன்.” என்றார்.

“சாயந்திரம் நான் வாக்கிங் போற வழிலே, இன்னொரு ஸைட் இருக்கற கேட் பக்கத்திலே பந்தல் போட்டு பிள்ளையார் வைச்சிருக்கா..அதைப் பார்த்துட்டேன்னா நானும் நீயும் ஈக்வல் ஆயிடுவோம்.” என்று போட்டியில் இன்னும் அவர் தோற்கவில்லை என்று தெரியப்படுத்தினார்  பாலகிருஷ்ணன்.

அவர்களின் உரையாடலைக் கேட்டு,” இன்னைக்குதானே விநாயகர் சதுர்த்தி?”என்று கேட்டான் ஜெய்.

“ஆமாம் டா..நீ டிக்கெட் எடுத்த போதே சொல்லிட்டேன்..விநாயகர் சதுர்த்தி அன்னைக்கு விடியற்காலைலே வந்து இறங்கறேன்னு..நீயும் வேற நாளைக்கு டிக்கெட்டை மாற்றிக்க மாட்டேன்னுட்ட..அதான், அம்மாவும் நானும் உன்னை ஆத்துக்கு அழைச்சிண்டு போற வழிலே, பிள்ளையாரையும் ஆத்துக்கு அழைச்சிண்டு போலாம்னு பிளான் போட்டு ஏர்போர்ட்டுக்கு வந்தோம்.” என்றார் பாலகிருஷ்ணன்.

“என்ன ப்பா இது? சென்னைலேயா இப்படி? இத்தனை பிள்ளையார் பந்தல்?” என்று வியப்புடன் கேட்டான் ஜெய்.

“சில வருஷமா இந்த மாதிரிதான் இங்கேயும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடறா..ஆத்துக்குப் பிள்ளையாரை கொண்டு வந்து, பூஜை பண்ணி, அடுத்த நாள் புனர்பூஜை பண்ணி, ஆற்றிலே, குளத்திலே, கிணத்திலே போடாம, தெருவிலே இருக்கற பெரிய பந்தல்லே கொண்டு போய் வைச்சிடறா..எல்லாப் பிள்ளையாரையும் ஒண்ணா எடுத்திண்டு போய், எல்லாரும் சேர்ந்து டான்ஸ் ஆடி, பாட்டுப் பாடி சமுத்திரத்திலே கரைச்சிட்டு வரா..

அன்னைக்கு கூட்டத்தைக் கண்ட்ரொல் செய்ய எல்லா இடத்திலேயும் டிராஃபிக் டிவெர்ஷன், பிள்ளையாரை விஸர்ஜனுக்கு ஜாக்கிரதையா கொண்டு போக போலீஸ் பந்தோபஸ்து..கடவுளை நம்பி நாம இருக்கோம் ஆனா கடவுளுக்கே காவல் தேவைப்படற கலிகாலம் இது.” என்றார் பாலகிருஷ்ணன்.

“இப்போ ஆறு, குளம், கிணறு எங்கன்னா இருக்கு..அதான் எல்லாரும் சேர்ந்து சமுத்திரத்திலே போய் கரைச்சிட்டு வரா..இனி பத்து நாள் பிரமாதமா ஜெ ஜென்னு இருக்கும்..

ஒவ்வொரு பில்டிங்க்கும் ஒரு பிள்ளையார்….அந்தக் காலத்திலே நம்ம டவுன்ஷிப் முழுசுக்கும் ஒரே பிள்ளையார் தான்..அவருக்கு பத்து நாளும் ஒவ்வொருத்தரா பூஜை செய்வோம்..இப்போ அந்த மாதிரி கியூவெல்லாம் கிடையாது..எந்த பிள்ளையாருக்கும் எந்த நேரத்திலேயும் பூஜை செய்யலாம்..முதல் பூஜை நம்ம பில்டிங்கல்லே என்னோடதுதான்.” என்றார் ருக்மிணி.

“ஏன் டீ..பிளாண்ட் டவுன்ஷிப்லேயும் நம்மளோடது தான் முதல் பூஜை..மறந்துட்டியா?” என்றார் பாலகிருஷ்ணன்.

“நான் அங்கே இருந்த நாலு வருஷத்தை மறக்கணும்னு நினைக்கறேன்..நீங்க ஏன்னா ஞாபகப்படுத்தறேள்?” என்று கேட்டார் ருக்மிணி.

“ஏன் டீ மறக்கணும்னு நினைக்கற? ஸமிக்‌ஷா குட்டி அங்கதான் பிறந்தா.” என்றார் பாலகிருஷ்ணன்.

“அது என்னவோ உண்மைதான்..கீதாவுக்கு அங்கதான் பிரசவம் பார்க்கணும்னு நம்ம தலையெழுத்து..எல்லாம் உங்களாலே வந்தது..ரிடையாகறத்துக்கு முன்னாடி ரிஜினல் ஆபீஸ் கிடைக்கும்னு கனவு கண்டிண்டு இருந்தேன்..அது கனவாப் போய், திரும்ப ஆரம்பிச்ச இடம்.. பிளான்ட் போயிட்டோம்.” என்றார் ருக்மிணி.

“நேக்கு நன்னா இருந்தது..என் கனவு நிஜமாச்சு..பிளாண்ட்ல நான் கொண்டு வரணும்னு நினைச்ச நிறைய சேன்ஜஸ் கொண்டு வந்தேன்..அதனாலே நிறைய பேரோட அன்பை சம்பாதிச்சிண்டேன்..நோக்கும் நிறைய பேர் உதவியா இருந்திருக்கா.. கீதுக்குத் துணையா ஆஸ்பத்திரிலே தினமும் இராத்திரி மிஸஸ் சுதர்ஷன் தான் இருந்தா.” என்றார் பாலகிருஷ்ணன்.

“சுகந்தி ஒத்தாசையாதான் இருந்தா யார் இல்லைன்னு சொன்னா….அவ பொண்ணுதான் கொஞ்சம் முரடு..அவ அம்மா சொன்னதை என்னைக்கு அவ கேட்டிருக்கா? ஒரு நாளாவது வாயைத் திறக்காம நேக்கு உதவி பண்ணியிருப்பாளா..எப்போவும் எல்லாத்துக்கும் பிடிவாதம் தான்…

நாள் கிழமைன்னா அவா ஆத்து வாசல்ல கோலம் போடறவ நம்மாத்துக்கும் சேர்த்து போட்டா என்ன குறைஞ்சு போயிடுவா? அவ அம்மா போடுன்னு சொன்ன அப்புறமும் உங்காத்துப் பையனை என் சைக்கிளுக்கு காத்து அடிச்சு கொடுக்க சொல்லுங்கோ அப்போ நான் கோலம் போடறேன்னு என்கிட்டேயே தைரியமா சொன்னா.” என்று பன்னிரெண்டு வருடம் முன்பு நடந்ததை பன்னிரெண்டு நிமிடத்திற்கு முன்பு நடந்தது போல் பேசினார் ருக்மிணி.

“அப்போ அவ குழந்தை டீ.. ஆத்து வேலைலே அவ அம்மாக்கு ஒத்தாசையா இருந்தா..நோக்கும் இருக்கணும்னு நீ எதிர்பார்க்கலாமோ?” என்று கேட்டார் பாலகிருஷ்ணன்.

“ஏன் இருக்கப்பிடாது? உங்க கீழேதான் சுதர்ஷன் வேலை பார்த்தார்..என் கீழே சுகந்தி இருந்தா..அதனால் தான் பவியைக் கோலம் போடச் சொன்னேன்..டெய்லி ஒண்ணும் போட சொல்லலை.. நாள் கிழமேன்னாதான் போடச் சொல்வேன்…லேடீஸ் கிளப் விஷயமா வெளியே போனா அவளைப் பால் வாங்கி வைக்க சொல்லுவேன்..அப்படியே அதை காய்ச்சி காப்பி போட்டு தரச் சொல்லுவேன்..சுகந்தியோட கைமணம் தான் அவளுக்கும்.. அதனால் தான் சுகந்தி இல்லாத போதும் காப்பி கேட்பேன்.” என்று பாலகிருஷ்ணனின் கீழ் ஆபிஸில் வேலை பார்த்த சுதர்ஷனின் குடும்பத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வர நினைத்ததை நியாயப்படுத்திக் கொண்டிருந்தார் ருக்மிணி.

“ஸமிக்‌ஷா பொறந்த போது அந்தக் குழந்தை பவியும் சமத்தா ஆத்தைப் பார்த்திண்டு நமக்கு சமைச்சு கொடுத்தது.” என்று பாலகிருஷண்னும் பவியின் புகழ் பாட,

அதற்கு “பவிக்குப் பதினெஞ்சு வயசு..பத்தாவது படிச்சிண்டிருந்தா..பச்சை குழந்தையில்லே.” என்று பதில் கொடுத்தார் ருக்மிணி

“இவன் பன்னெண்டாவது..அவ பத்தாவது..இரண்டும் படிப்பை விட்டிட்டு ஆஸ்பத்திரிக்கும் ஆத்துக்கும் அலைஞ்சுதுகள்..சுதர்ஷனும் பத்து வயசு தீபக்கைப் பார்த்துக்க லீவு போட்டான்…அந்த இக்கட்டான நேரத்திலே அவாதான் நமக்குத் துணையா இருந்தா.” என்றார் செய்ந்நன்றியை மறக்க விரும்பாத பாலகிருஷ்ணன்.

“நான் இல்லைன்னு சொன்னேனா..இல்லே என்னத்தை தப்பா சொல்லிட்டேன்..சென்னைலே பிரசவத்தைப் பார்த்துக்கலாம்னு நான் சொன்னதை, கீதாவோட மாமியார் காது கொடுத்து கேட்டுகலை..நீங்களும் எல்லாத்தையும் சமாளிச்சிடலாம்னு சொன்னேள்.. அதனால் தான் அவளை நம்மாத்துக்கே அழைச்சிண்டு வந்தோம்..

நான் கண்டேனா..ஸமிக்‌ஷாக்கு பிராப்ளமாகும்னு..மூணு நாள் மேல இன்கூபேட்டர்லே வைப்பான்னு..என் நல்ல காலம் அந்த மாமி வாய்லே விழுந்து புறப்படாம எல்லாம் நல்ல படியா நடந்தது..இதுலே நீங்க செஞ்சது எதுவும் உங்க கண்ணுக்குத் தெரியாதே..

யாராவது ரிடையராகறத்துக்கு முன்னாடி அந்தக் காட்டிலே போய் மாட்டிப்பாளா? நீங்க மாட்டிண்டேள்..நான் மாட்டிண்டேன்..என் பொண்ணும் புள்ளையும் மாட்டின் டா..என் பொண்ணு புள்ளை பெத்து பொழைச்சு வந்தா..என் புள்ளை நல்லபடியா ஸ்கூல் படிப்பை முடிச்சான்….எல்லாம் நான் வேண்டற தெய்வந்தான் என்னைக் காபாத்தித்து..கடைசி ஒரு வருஷம் ஒருத்தரும் இல்லாம நான் பட்டப்பாடு நேக்குதான் தெரியும்.” என்றார் ருக்மிணி.

“நான் நல்லபடியா ரிடையராகி வந்தேன்..கீதுக்கு ஸமிக்‌ஷா கிடைச்சா..ஜெய்க்கு நல்ல காலேஜ்லே ஸீட் கிடைச்சது. நமக்கு எல்லாம் நல்ல விதமாதான் நடந்தது..மிஸஸ் சுதர்ஷனுக்கு அப்படி இல்லையே.” என்று வருத்தத்துடன் சொன்னார் பாலகிருஷ்ணன்.

“நல்ல நாளும் அதுவுமா எதுக்கு இப்போ அதைப் பற்றி பேசறேள்..சுகந்திக்குக் கொடுத்து வைச்சது அவ்வளவுதான்..ஆபிஸுக்கு போன சுதர்ஷன் ஹார்ட் அட்டாக்லே பொசுக்குன்னு போவார்னு யார் கண்டா..எல்லாம் சுகந்தியோட தலையெழுத்து..நாம அங்கேயிருந்து கிளம்பறத்துக்குள்ளே அவ கிளம்பணும்னு எழுதி வைச்சிருக்கு.”

அதுவரை மௌனமாக இருந்த ஜெய்,

“சுகந்தி மாமியைப் பற்றி ஏதாவது தகவல் தெரிஞ்சுதா ப்பா?” என்று கேட்டான்.

“இல்லை டா..விசாரிச்சிண்டு இருக்கேன்…சுதர்ஷனைத் தெரிஞ்சவா யாரையுமே நான் இதுவரைக்கும் பார்க்கலை..அங்கேயே இருந்திருந்தா ஏதாவது நியூஸ் கிடைச்சிருக்கும்…இன்னைக்கு அவன் உயிரோட இருந்திருந்தா என்னைவிட பெரிய லெவல் போயிருப்பான்..கொடுத்து வைக்கலை.” என்று மறுபடியும் வருத்தப்பட்டார் பாலகிருஷ்ணன்.

“சுதர்ஷன் மாமாக்கு அந்த ஊர்ல ரிலெடிவ்ஸ் இருந்தாலே ப்பா.” என்றான் ஜெய்.

“அவனோட சொந்த ஊர் அங்கே பக்கத்திலேதான்….ரொம்ப வருஷம் முன்னாடி அங்கே ஸெட்டிலான தமிழ்க் குடும்பம்..அவன் தம்பியோட இருந்த அவன் அம்மாக்காக தான் டிரான்ஃஸ்பர் வாங்கிண்டு வந்தான்..அவன் அம்மா கொஞ்ச நாள்லேயே போயிட்டா..சுதர்ஷனும் போன அப்புறம் அவனோட தம்பி தான் அவாளைக் கொஞ்ச நாள் பார்த்துண்டான்..ஆனா அவனுக்கும் மிஸஸ் சுதர்ஷனுக்கும் ஒத்துவரலேன்னு அவளோட அண்ணா அவளைத் திருச்சிக்கு அழைச்சுண்டுப் போயிட்டார்.” என்றார் பாலகிருஷ்ணன்.

“கொஞ்ச நாள்ன்னு அவன் நினைக்கலே.. இரண்டு குழந்தைளோட இருக்கறவளுக்கு யாரு காலம் பூரா சாதம் போடுவான்னு நினைச்சான்..பென்ஷனும் கிடையாது..வந்த ஸெட்டில்மெண்ட் வைச்சுதான் வாழ்க்கையை ஓட்டணும்..அவன் பணத்தைக் கேட்டிருப்பான் அதான் ஊரோட போயிட்டா சுகந்தி…

அவ சாது, அப்பாவி…அதான் சுதர்ஷன் அவரோட பாதி சம்பளத்தை அவா அம்மாக்கும் தம்பி குடும்பத்துக்கும் செல்வழிச்சதைப் பற்றி ஒரு கேள்வி கேட்கலே..ஆனா சுதர்ஷனாட்டம் கிடையாது அவரோட தம்பி..நேக்கு அவனை நேர்லே சந்திக்கற சந்தர்ப்பம் கிடைச்சா நன்னா நாக்கைப் பிடுங்கிற மாதிரி ‘அண்ணா குடும்பத்தை ஆதரிக்கலேயேன்னு’ நறுக்குன்னு கேட்பேன் என்று அத்தனை வருடங்கள் கழித்தும் ஆதங்கத்துடன் பேசினார் ருக்மிணி.

“அவ சாதுங்கறதுனாலே அங்கே இருக்க முடியாம ஊரோட போயிட்டா..பவிக்குப் பதினெட்டு வயசாயிருந்தா அவளுக்கு வேலை போட்டுக் கொடுத்திருக்கலாம்..தீபக் அவளைவிட சின்னவனாயிட்டான்..மிஸஸ் சுதர்ஷன் ஓர் இரண்டு வருஷம் பல்லைக் கடிச்சிண்டு அங்கேயே இருந்திருக்கலாம்..நானும் என்னாலே முடிஞ்ச உதவியைப் பண்ணியிருப்பேன்.. ரிடையராகறத்துக்கு முன்னாடி எப்படியாவது பவிக்கு ஒரு வேலை ஏற்பாடு செய்திருப்பேன்.” என்றார் பாலகிருஷ்ணன்.

“கடைசியா இதே போல ஒரு விநாயகர் சதுர்த்தி அன்னைக்குதான் எல்லாரும் சேர்ந்து சாயந்திரமா டவுன்ஷிப் பிள்ளையார் கோவிலுக்குப் போனோம்..தீபக் மட்டும் கூட வந்திருந்தான்…நீயும் பவியும் வரலை.” என்றார் ருக்மிணி.

அதற்குபின் காரிலிருந்த மூவரும் வெவ்வேறு காரணத்திற்காக மௌனமாயினர்.  பாலகிருஷ்ணனிற்கு சுதர்ஷனின் நினைவுகள், ருக்மிணிக்கு சுகந்தியின் நினைவுகள், ஜெய்க்குப் பவியின் நினைவுகள்.

இன்று அவன் நாடு திரும்பியதற்குக் காரணம் அவனும் பவியும் கடைசியாக சந்தித்துக் கொண்ட நாள் விநாயக சதுர்த்தி தான். சமீபக் காலமாக பவியின் நினைவுகள் அவனைத் துரத்திக் கொண்டிருந்தன. அதைத் துரத்த முடியாமல் அதைத் துரத்திக் கொண்டு இந்தியாவிற்கு திரும்பி இருந்தான் ஜெய்.