Advertisement

Epilogue (2)

தானே தன் திறமையால் நீட் தேர்வில் வெற்றி பெற்று மேற்படிப்பு படிப்பேன், எங்கு இடம் கிடைத்தாலும் அம்மாவும் உடன் வருவார், குழந்தைகள் பார்த்துக் கொள்வதில் பிரச்சனை இருக்காது என கணவனிடம் சொல்லியிருந்தாள் மலர்.

மனைவியிடம் வாதமே செய்யாமல் உன் விருப்பம் போல என சொல்லி அவளிடம் அமைதியாகவே இருந்தான் பிரவாகன். ஆனால் சத்தமில்லாமல் காய் நகர்த்தி அவனது கல்லூரியில்தான் மலர் படிக்கும் படி அமைத்துக் கொண்டான். பின்னே பிள்ளைகளையும் மனைவியையும் பிரிந்து இருப்பானா என்ன?

பிரவா, மலர் இருவரது குழந்தைகள் அர்னவ், பிரணவ் இருவரும் முதல் வகுப்பில் படிக்கின்றனர். நான்கு மணிக்கு அவர்கள் வீடு வரும் போது மலரும் வீட்டில் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான்.

 அவளால் வர முடியாத போது கோவம் கொள்ளவும் செய்வான்.

“நான் என்ன வேணும்னா வராம இருக்கேன்? சில சமயம் இப்படி ஆகிடுது, வீட்ல பார்த்துக்க ஆளுங்க இருக்காங்க, அத்தை இருக்காங்க, அப்படியும் உங்களுக்கு கவலைனா நீங்க போங்க” என சொல்லி விட்டாள்.

“உனக்கு என் தங்கைக்கு எல்லாம் கொஞ்சமும் பொறுப்பு கிடையாது, வேணும்னே எல்லாத்தையும் இழுத்து விட்டுக்க வேண்டியது” என சாடினாலும், “குழந்தைங்க இருந்தா வெளியிலேயே போகாம எந்த வேலையும் பார்க்காம வீட்லேயே கிடக்கணும்னு அவசியம் இல்ல. புரிஞ்சுதா?” என பதில் கொடுப்பாள்.

அந்த விஷயத்தில் விஷ்ணுவும் மிருணாவுமே எடுத்துக்காட்டாக இருக்க அவனால் பதிலே பேச முடியாது.

வேறு வழியின்றி குழந்தைகளை பார்க்க அவன்தான் வீடு செல்வான்.

இன்றும் அப்படியே வேலை முடியவும் தனக்கு அழைக்க சொல்லி மனைவிக்கு செய்தி அனுப்பியவன் தமனிடம் அவனது வேலை சம்பந்தமான கட்டளைகளை இட்டு விட்டு அவனே புறப்பட்டான்.

குழந்தைகளை அழைக்க பள்ளிக்கு செல்லும் கார் இப்போதுதான் புறப்பட்டிருக்க தானே சென்று அழைத்துக் கொள்வதாக தகவல் தந்தவன் நேராக பள்ளிக்குதான் சென்றான்.

அப்பாவை கண்டதும் அர்னவ், பிரணவ் இருவரும் ஓடி வந்தனர். உடன் வந்திருந்த டிரைவர் பிள்ளைகளின் பைகளை பெற்றுக் கொண்டு காருக்கு சென்று விட, பிள்ளைகள் இருவரையும் ஒரு சேர தூக்கிக் கொண்டான் பிரவா.

“இறக்கி விடுங்க டாட், நானே வருவேன்” என்றான் அர்னவ். அப்பாவின் கழுத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டான் பிரணவ்.

இருவரும் இரு வேறு குணங்கள் உள்ளவர்களாகத்தான் இருந்தனர். அர்னவ் முகத்தோடு முகம் மோதி கொஞ்சியவன் அவனது விருப்ப படி அவனை மட்டும் இறக்கி விட்டான். பெரிய மனிதன் போல விடு விடு என காரை நோக்கி நடந்து சென்றது வாண்டு.

அர்னவ்’வை ரசனையாக பார்த்துக் கொண்டே செல்லமாக அவனை “அம்மா கோண்டு!” என்றவன், “அப்புறம் லட்டு, இன்னிக்கு ஸ்கூல்ல ரைம்ஸ் சொன்னீங்களா? எல்லாரும் க்ளாப் பண்ணினாங்களா?” என பிரணவ்’விடம் விசாரித்தான்.

அப்பாவின் கன்னத்தை பிடித்துக்கொண்டவன், அவன் சொன்ன பாடலில் ஏதோ தவறை சுட்டிக் காட்டி ஆசிரியர் திருத்தியதாகவும் அவர் தவறாக சொல்லித் தருவதாகவும் சொன்னான்.

“அப்படியா?” என விழி விரித்தான் பிரவா.

“நீ சொல்லி தந்ததுதான் கரெக்ட், மிஸ் தப்பு” என்றான் பிரணவ்.

பிரவாகன்தான் ஏதோ தவறாக சொல்லி தந்து விட்டான். ஆனால் தான் சொல்வதுதான் சரியாக இருக்கும் என சொல்லும் தன் மகனின் தன் மீதான நம்பிக்கையை நினைத்து அவனுக்கு பூரிப்பாக இருந்தது.

“ஓஹோ… டாடிதான் ஏதோ தப்பா சொல்லிட்டேன், கரெக்ட் பண்ணிக்கடா கண்ணா” என்றான் பிரவா.

“நோ நோ மிஸ்தான் தப்பு, டாட் எப்பவும் கரெக்ட்தான்” மழலையில் பிரணவ் சொல்ல, “உன் அம்மாவுக்கு தெரிஞ்சா ஒரு ரைம்ஸ் ஒழுங்கா சொல்லித் தர தெரியாதான்னு கேட்டு என்னை டின் கட்டிடுவா, வீட்டுக்கு போய் எது சரின்னு தெரிஞ்சுக்கலாம்” என சொல்லிக் கொண்டே நடந்தான்.

அவர்கள் வீடு வரவும் கேர் டேக்கர்கள் பிள்ளைகளை கவனித்தனர். பெரும்பாலும் பிள்ளைகளை மலரே பார்த்துக் கொள்வாள், அவள் இல்லாத சமயங்களில் கேர் டேக்கர்கள்தான். ஆனால் பிரவா உடனிருப்பான்.

தன் மக்களை நினைத்து அரசிக்கு மிக்க மகிழ்ச்சி. அதன் காரணமாக அவரது உடல் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டார். பேர பிள்ளைகளோடு மகிழ்வோடு நேரம் செலவு செய்கிறார்.

செல்வத்தின் மனதிலிருந்து தாட்சாயிணி என்றுமே மறையப் போவதில்லை. ஆனால் விமலாவின் மனக் குமுறலை கேட்டதிலிருந்து அவரிடம் இன்னும் நெருங்கியிருக்கிறார். பணி ஓய்வு பெற்று விட்டவர் எங்கு சென்றாலும் மனைவியை விட்டு செல்வதில்லை. வாயோதிகத்தில் துணையின் அருமை இன்னும் புரியுமே.

தாரிகா அமெரிக்கா வாழ் மருத்துவரை மணந்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகி விட்டாள்.

வீடு வந்த மலரிடம் எப்படி வந்தாய் என பிரவா கேட்க கிஷோர் அவனுடைய காரில் கொண்டு வந்து விட்டதாக சொன்னாள். அவன் முறைக்க, “சும்மா என்ன முறைப்பு? நீங்க கூப்பிட வந்தா என்னை மட்டும் வீட்டுக்கு அனுப்பிட்டு நீங்க ஹாஸ்பிடல்லேயே இருப்பீங்க, அதான் அவனோட வந்திட்டேன்” என்றாள் மலர்.

“இப்ப மட்டும் என்ன? நான் ஹாஸ்பிடல்தான் போகணும். பிரணவ் ரைம் மாத்தி சொல்றான், கரெக்ட் பண்ணிடு” என்றான்.

“நீங்க தப்பா சொல்லி கொடுத்தீங்கன்னு சொல்லுங்க”

“எஸ், நான்தான் சொல்லி கொடுத்தேன். ஒரே மாதிரி படிக்கணுமா என்ன? நாங்கலாம் கிரியேட்டிவ் லேர்னர்ஸ், அப்படித்தான் புதுசு புதுசா படிப்போம்” என்றான்.

“அப்ப ஸ்கூல்லேயும் போய் சொல்லுங்க”

“சொல்ல மாட்டேன்னு நினைச்சியா?” என கேட்டவனை அவள் முறைக்க, “போடி இஞ்சிமொரப்பா!” என்றவன் மீண்டும் மருத்துவமனை புறப்பட தயாரானான்.

“தமன் பார்த்துக்க மாட்டாரா? இருங்களேன், அண்ணி வர்றதா சொல்லியிருக்காங்க” என்றாள்.

“என் அக்காவுக்கு என்னை பார்க்கணும்னா அக்காவே சொல்லும். உனக்கு வேணும்னா நேரடியா கேளு, இருக்கேன்” என அவளை சீண்டலாக பார்த்துக் கொண்டே சொன்னான்.

“ம்ம்… இருங்க. ஒன் வீக் ஆகுது நாம சேர்ந்து இருந்து” என்றவளால் அவன் முகத்தை நேராக சந்திக்க முடியவில்லை.

அவளை நெருங்கியவன், “சேர்ந்து இருந்து ஒன் வீக் ஆகுதா? நேத்து கூட உன் கழுத்து தாலி என் கழுத்துல கிடந்துச்சே… எப்படி மலர்? அதெல்லாம் கனவா?” எனக் கேட்டான்.

பதில் சொல்ல முடியாமல் நாணத்தால் சிவந்து போனாள். அவன் மீண்டும் சீண்டலாக ஏதோ கேட்க, “நான் அதை மீன் பண்ணல, சும்மா இப்படி பசங்களோட சேர்ந்து இருக்கிறத சொன்னேன்” என்றாள்.

“ஹப்பாடா! அப்ப அது கனவில்லைதானே? இன்னிக்கு நைட்டும் எனக்கு வேலை இருக்கா?” என ஆசையாக கேட்டான்.

வாயை திறக்காமல் சிரிப்பை அடக்கிக் கொண்டு மேலும் கீழும் தலையாட்டினாள்.

“நாளைக்கு ஈவ்னிங் ஃப்ரீ பண்ணிக்கிறேன். இன்னிக்கு பசங்கள சீக்கிரம் தூங்க வை, நைட் சீக்கிரம் வந்திடுறேன்” கிசு கிசுப்பாக சொல்லி விட்டு மலர்ந்த முகமாக சென்றான்.

 ‘டெரர் பீஸ்னு ஹாஸ்பிடல்ல எல்லாரும் சொல்லிக்கிறாங்க, என்கிட்ட மட்டும் எப்படி இருக்கார்!’ மனம் விம்ம அவனது கம்பீர நடையை ரசித்து பார்த்தவள் பார்வையை விட்டு அவன் மறையும் வரை அவனை விட்டு கண் எடுக்கவில்லை.

இத்தனை வருடங்களில் இருவருக்குள்ளும் புரிதலும் வந்திருந்தது. அவனது சில செயல்களை ஏற்றுக்கொள்ள மனம் இல்லா விட்டாலும் நிதர்சனம் என்னவென மலருக்கு புரிந்திருக்கிறது. வயதும் அனுபவமும் கூட நிதானமும் கை வந்திருக்கிறது.

பெரும்பாலான விஷயங்களை பணம்தான் தீர்மானிக்கிறது என்றாலும் சில சமயங்களில் அப்படி இல்லை என பிரவாகனும் புரிந்து கொண்டுள்ளான். ஆகவே மலரின் நற்செயல்கள் மீது அவனுக்கும் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

தண்டவாளங்கள் போலதான் மலரும் பிரவாகனும். தொழில் முறை வாழ்க்கையில் அவர்களுக்கான இடைவெளி கொடுத்து கொள்கின்றனர்.

 தங்கள் துணைக்கு தேவைப்படும் நேரங்களில் தோள் கொடுத்து கொள்கின்றனர். மற்ற படி அவரவர் கொள்கை கருத்துக்களில் பெரிதாக தலையிட்டுக் கொள்வதில்லை.

பெரிதான பேச்சுக்கள் கூட அவர்களுக்கு தேவையாக இருப்பதில்லை. ஒருவரின் அருகாமையே மற்றவருக்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தருகிறது.

தன் மக்களோடு கீர்த்தி வந்தாள். அவளது பெண்கள் கல்லூரியில் படிக்கின்றனர். கீர்த்தியிடம் பேசி அவளை சம்மதிக்க வைத்து மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தை அவளையே ஏற்க வைத்து விட்டாள் மலர்.

வருங்காலத்திலும் அக்காவின் பிள்ளைகளிடமே கல்லூரி நிர்வாக பொறுப்பை கொடுக்க நினைத்திருக்கிறான் பிரவாகன். இது பற்றி மலருக்கு தெரியும், அவர்கள் விருப்ப படவில்லை என்றால் கட்டாயம் செய்யக் கூடாது என சொல்லி வைத்திருக்கிறாள்.

இப்போதெல்லாம் குகன் இலவச மருத்துவமனையின் எந்த ஒப்பந்தத்திற்கும் விண்ணப்பிப்பது இல்லை. மலரின் வேண்டுகோளை கீர்த்தி செயல் படுத்தியிருந்தாள்.

விளையாடிக் கொண்டிருக்கும் போதே அர்னவ், பிரணவ் இருவருக்கும் சண்டை. கீர்த்தி சமாதானம் செய்து பார்த்தாள். மஹிஷா, மஹிமா, ஹ்ருதிக் என அனைவரும் சமாதானம் செய்து பார்த்து விட்டனர். ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டே நல்ல சத்தம் போட்டு அழுதனர்.

மாமியாரோடு பேசிக் கொண்டே இவர்களை கவனித்திருந்த மலர் இவர்களின் அருகில் வந்து, “ஷட் அப்!” என சற்று சத்தமாக சொல்ல வாயை மூடிக் கொண்டனர்.

“இதுல மட்டும் அப்படியே மாமாவேதான் இவனுங்க” கிண்டலாக சொன்னாள் மஹிமா.

“ஆமாம் நீ ரொம்ப கண்ட” மறுப்பது போல சொன்னாலும் கீர்த்தியின் முகத்தில் அவளது கூற்றை அங்கீகரிக்கும் சிறு புன்னகை.

“இவனுங்களுக்கு அவன் தேவலாம், என்னமா அவனுங்கள டிஃபெண்ட் பண்ணிக்கிறானுங்க” என்றாள் கீர்த்தி.

சண்டை போடாமல் சத்தம் வராமல் விளையாட வேண்டும் என சொல்லி அவர்களை அனுப்பி வைத்தாள் மலர். எப்போதுமே பிள்ளைகளிடம் அவள் கண்டிப்புதான். அடிக்க மாட்டாள், திட்ட மாட்டாள், ஆனால் கோவமாக பார்த்தாலே கட்டுப்பட்டு விடுவது போலதான் மகன்களை பழக்கியிருந்தாள்.

பிள்ளைகளை கண்டிக்கும் போது பிரவாகனால் கூட தலையிட முடியாது. அப்படி ஏதாவது சப்போர்ட் செய்தான் என்றால் அன்றைய இரவு அவளிடம் அவன் தொலைந்தான்.

வழக்கம் போல மிருணா, லயா இருவருடன் காணொளி அழைப்பில் பேசினார்கள். வரும் மாதத்தில் பிள்ளைகளுக்கு விடுமுறை வரும் போது எங்கு செல்லலாம் என முடிவு செய்தார்கள். பின் கீர்த்தி கிளம்பி விட்டாள்.

மகன்கள் உறங்கிய பிறகுதான் பிரவாகன் வந்தான். மறக்காமல் பிரணவ் ரைம்ஸ் சொல்வதில் திருத்தம் செய்தாயா என மனைவியிடம் விசாரித்துக் கொண்டான்.

அவர்களின் தனி படுக்கையறைக்கு வந்தனர். இரவு உடையில் சிறு பெண் போல தெரிந்த மனைவியை அள்ளிக் கொள்ள துடித்தது அவனது மனம்.

அவன் அவளை நெருங்கி வரவும், “புள்ளைங்களோட சேர்ந்து நானும் தூங்கியிருப்பேன், இவ்ளோ லேட்டாவா வருவீங்க? நாளைக்கு பார்த்துக்கலாம்” பொய்யாக வீம்பு செய்தாள்.

“அப்படியா? நாளைக்கும் நான் உன்னை கவனிக்கணும், அதைத்தானே இன்டைரக்டா சொல்ற?” எனக் கேட்டான் பிரவா.

“சேச்ச அதெல்லாம் இல்ல, நான் தூங்க போறேன்” என்றவள் அறையை விட்டு வெளி நடப்பு செய்ய போனாள். ஆனால் அவள் எதிர் பார்த்தது போல அவளை தடுத்து நிறுத்தவில்லை பிரவாகன்.

கதவு வரை போனவள் கோவமாக திரும்பி பார்க்க, படுக்கையில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு படுத்திருந்தவன், “நீ யாரு… என்ன நினைச்சு பேசுவ… எல்லாம் எனக்கு தெரியும். உன் மூச்சு காத்து வச்சே உன் மூட் என்னன்னு பிரிடிக்ட் பண்றவன்டி நான்” என்றான்.

“அப்படியா அப்படியா…” கேட்டுக் கொண்டே வேகமாக அவனருகில் வந்தவளை இழுத்து தன் மீது போட்டுக் கொண்டான்.

அவளுக்கு மூச்சு வாங்க, “உன் மூட் மீட்டர் ரொம்ப சூடா இருக்கு மலர்” என ரகசியமாக சொன்னான்.

அவனிடமிருந்து அவள் விடுபட முயல, சட்டென அவளை விட்டவன், “என்னடி இப்போ? உனக்கும் ஆசைன்னு சொன்னா குறைஞ்சு போயிடுவியா? சொல்லாத, எனக்கு இந்த விஷயத்துல எந்த ரோஷம் மானம் வெக்கமும் இல்லை. உம்மேல எவ்ளோ ஆசைன்னா…” என்றவன் அவனுக்கு தெரிந்த வகையில் உணர்த்தினான்.

நொடி நேரம் அவனிடமிருந்து விலகியவள், “வாயால சொன்னாதான் உங்களுக்கு தெரியுமா?” எனக் கேட்டு அவன் மீதான அவளது அன்பை ஆசையை உணர்த்த ஆரம்பித்தாள்.

ஒருவர் மீதான மற்றொருவரின் பேரன்பு என்றுமே வற்றாமல் இருக்கட்டும்! இவர்கள் வளமாக வாழட்டும்!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement