Advertisement

அத்தியாயம் -9(3)

‘என்ன இப்படிலாம் பேசுறார்?’ என பார்த்திருந்த பரத் பெரியவர்கள் முன்னிலையில் பேச வேண்டாமே என நினைத்து அமைதி காத்தான்.

‘நான் சொல்லியும் கேளாமல் இதென்ன?’ என்பது போல செல்வமும் பார்த்தார்.

“நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன் சார்” என்றாள் மலர்.

“எஸ் எஸ்…. சொல்லிட்டதான். அதனால என்ன மலர், இப்போ உடம்பு முடியலை உனக்கு, சரியா யோசிக்க முடியாது. ஒரு வாரத்துக்கு அப்புறம் வந்து இப்படி சொல்ல மாட்ட. இல்ல இதையேதான் சொல்லுவேன்னு உனக்கு கான்ஃபிடெண்ட் இருந்தா… தாராளமா சொல்லு, ஏத்துக்கிறேன்” என்றான்.

“பிரவா!” மகனை அடக்க பார்த்தார் அரசி.

“என் லவ் எவ்ளோ டீப்னு இன்னும் மலர்கிட்ட எக்ஸ்பிளைன் செய்யலம்மா, தெரிஞ்சா ஓகே சொல்வா. அதைத்தான் சொன்னேன்” என்றான் பிரவா.

மலர் அடுத்து பேசப் போவதற்குள் பார்வையால் மகளை அடக்கிய செல்வம், “சரிங்க, ஒரு வாரத்துக்கு அப்புறம் வந்து முடிவு சொல்வா என் பொண்ணு” என்றார்.

பரத் முதுகில் லேசாக தட்டிய பிரவாகன், “என்னடா நீ உன் அக்கா மாதிரி இல்லையே, பேசவே மாட்டேங்குற. டாக்டர் ஆக போற… நல்லா போல்டா இரு” என்றான்.

கோவம் கொண்ட பரத் ‘வெடுக்’ என எழுந்து அக்காவின் அறைக்கே சென்று விட்டான்.

‘இது உனக்கு தேவைதான்’ எனும் விதமாக கீர்த்தி பார்க்க, ‘இவன் அக்காவை நான் கட்டும் போது அப்பவே பெரிய மனுஷ தோரணை காட்டுவான். அவன்கிட்டேயும் அப்படி நடக்க ஒரு சில்வண்டு இருக்கானே!’ என வியப்பாக பார்த்திருந்தான் குகன்.

அரசிக்கு அப்படியே விட்டு செல்ல மனமில்லை. மலரை பார்த்து வருகிறேன் என சொல்லி விட்டு எழுந்து சென்றார்.

“என்னவாம் க்கா அவருக்கு? கஷ்டபட்டெல்லாம் படிக்காத, உனக்கு நான் சீட் தர்றேங்கிறார். இவர்கிட்ட நான் கேட்டேனா? சரியான அலட்டல் பீஸ், ஓவர் ஆட்டிடியூட், ஊசிப் போன வெங்காய பஜ்ஜி. புடிக்கலைன்னு சொன்னா போ வேண்டியதுதானே? இந்தாளை கட்டிக்க அப்படியே நீ ஓகே சொன்னாலும் நான் ஓகே சொல்ல மாட்டேன். இவரை எல்லாம் என் அக்கா ஹஸ்பண்ட்டா ஏத்துக்க முடியாது” என சொல்லிக் கொண்டிருந்தான் பரத்.

அரசியை கண்டு விட்டு மகனை அதட்டி வாயை மூட சொன்னார் விமலா. பரத் பேசியதை கேட்காதது போல உள்ளே வந்தார் அரசி. மரியாதைக்காக எழுந்து நின்றாள் மலர்.

அவளது கையை பிடித்துக்கொண்டவர், “உன்னை விரும்புறேன்னனு அவன் சொன்னதும் பெருசா ஒரு நம்பிக்கை, உன்னால எல்லாம் சரியாகும்னு நினைச்சு ஆசையோட வந்தேன். கொஞ்சம் நல்லா யோசிச்சு நல்ல முடிவா சொல்லும்மா” என சொல்லி விட்டு வெளியேறினார்.

பிரவாகன் குடும்பம் சென்றதும் அவனை பற்றி சொன்ன மலர், “சரியான ஈகோ பிடிச்சவர். அகந்தை, ஆணவம், கொழுப்பு எல்லாமே அளவுக்கு அதிகம் உள்ள ஆள். எம்மேல லவ்னு சொல்றதெல்லாம் கடைஞ்செடுத்த பொய். அந்தாளுக்கு திடீர்னு என்ன பைத்தியம் புடிச்சதுன்னு தெரியலை, என்ன அயோக்கியத்தனம் செய்றதுக்காக இந்த ட்ராமான்னும் புரியலை” என்றாள்.

“பயமுறுத்தாத மலர். லவ் இல்லைனா ஏன் குடும்பத்தோட வந்து பொண்ணு கேட்க போறார்? வசதி வாய்ப்பெல்லாம் பார்க்கிறவங்க இல்லையாம் அவங்க. விஷ்ணுவை அவங்க வீட்டு பொண்ணுக்கு கேட்ருக்காங்க, விஷ்ணுதான் மாட்டேன்னு சொல்லிட்டு போய்டுச்சு. ஒரு வேளை நீ மாட்டேன்னு சொன்னதுல அதிகமா பேசுறார் போல” என்றார் விமலா.

“அவதான் சொல்றால்ல விமலா. அவர் லவ் உண்மையாவே இருக்கட்டும், அவங்க நல்லவங்காளே போகட்டும். மலருக்கு இஷ்டம் இல்லைனா அதுக்கு மேல பேசுறதுக்கு ஒண்ணுமில்ல” என மனைவியின் வாயை அடைத்த செல்வம், மகளை பார்த்து, “இனி அங்க நீ வேலை பார்க்க வேணாம் மா, ரிசைன் பண்ணிடு” என்றார்.

இதுவரை அப்படி எதுவும் மலர் யோசித்திருக்கவில்லை. என்னதான் தைரியசாலி என்றாலும் பிரவாகனின் நடத்தை ஆழமான அச்சத்தை அவளுள் விதைத்திருக்க அப்பா சொல்லவும் சரியென சொல்லி விட்டாள்.

வீடு வந்த பின், “இந்த பொண்ணு இல்லைனா என்ன பிரவா? நம்ம அந்தஸ்துக்கு ஏத்தது போல வேற இடம் பார்க்கலாம்” ஆறுதல் கூறுவதாக எண்ணி சொன்னான் குகன்.

ஏற்கனவே கடுப்பில் இருந்த பிரவாகன், “எங்க குடும்பத்துல இதுவரைக்கும் நடந்த கல்யாணம் எல்லாம் அந்தஸ்து பார்த்துதான் நடந்ததா மாமா?” எனக் கேட்க குகனின் முகம் சுண்டிப் போனது.

“டூ மச் பிரவா! கூப்பிட்டு வச்சு அவமான படுத்துறியா அவரை? உன் லட்சணம் தெரிஞ்சுதான் உன்னை வேணாம்னு சொல்லிட்டா மலர்” என சத்தம் போட்டாள் கீர்த்தி.

“இன்னும் ஒரு மாசத்துல எங்க கல்யாணம், என் லட்சணம் என்னன்னு சீக்கிரம் அவ தெரிஞ்சுக்குவாக்கா. மாமாவை இன்சல்ட் செய்ய சொல்லலை நான், மலரை அவ வசதிய வச்சு யாரும் இன்சல்ட் செய்றதை விரும்பல நான். காட் இட்” என்றான் பிரவா.

குகனை அத்தனை அவனுக்கு பிடிக்காதுதான், ஆனால் மரியாதை குறைவாகவோ, குத்திக் காட்டியோ இதுநாள் வரை ஒரு வார்த்தை என்ன ஒரு பார்வை கூட பார்த்தது இல்லை. இப்போது மலருக்காக பேசுகிறேன் என அவன் சொன்னதில் கீர்த்தியும் அசந்து விட்டாள்.

“சாரி பிரவா, நான் அப்படி மீன் பண்ணலை. அந்த பொண்ணு வேணாம்னு மறுக்கவும் உனக்கு ஆறுதல் சொல்லணும்னு ஏதோ பேசிட்டேன்” என்றான் குகன்.

“இட்ஸ் ஓகே மாமா, இனிமே அப்படி பேசாதீங்க. ஏன்னா இனிமே எனக்கே அவதான் பாஸ்!” என சொல்லி சென்றவனை புரியாமல் பார்த்தனர் மற்றவர்கள்.

“பிடிக்கலைன்னு சொல்ற பொண்ணை கிட்னாப் பண்ணிட்டு வந்து கல்யாணம் செய்ய போறியா?” சத்தமாக கேட்டாள் கீர்த்தி.

மாடிப் படிகளில் ஏறிக் கொண்டே, “வேற வழியில்லைன்னா அப்படியும் பண்ணுவேன்” என்றவன், நின்று அக்காவை பார்க்க திரும்பினான்.

அழுத்தம் நிறைந்த பார்வையோடு, “பட் கிட்னாப்பிங்கு எல்லாம் அவசியம் இல்லாம ஜாம் ஜாம்னு எங்க கல்யாணம் நடக்கும்” என உறுதியோடு சொல்லி விட்டு மீண்டும் படிகளில் ஏறினான்.

தமன் புறப்பட தயாராக அவனை பிடித்துக்கொண்ட கீர்த்தி, “என்ன ஆச்சு உன் பாஸுக்கு? உண்மையை சொல்லு” எனக் கேட்டாள்.

“லவ்ல தலைகுப்புற விழுந்திட்டார் பாஸ்” என தமன் சொல்ல, கீர்த்திக்கு ஆ என கத்த வேண்டும் போலிருந்தது.

சென்னையில் ஒரு மருத்துவமனையில் முன் அனுமதி பெறப் பட்டு திரைப்படம் ஒன்று படமாக்க பட்டுக் கொண்டிருந்தது. மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருக்கும் கதாநாயகன் கண் விழித்ததும் தன்னை விட்டு சென்று விட்டாள் என எண்ணிக் கொண்டிருந்த கதாநாயகி அவன் முன்னால் நின்று கொண்டு பேசுவது போன்ற காட்சி.

ஆடை மாற்றம் செய்யவென கதாநாயகி கேரவன் சென்று கொண்டிருக்க அந்த காட்சிக்கான வசனத்தை சொல்லிக் கொடுத்துக் கொண்டே அவளுடன் நடந்து கொண்டிருந்தாள் மிருணா.

“வேணாம்னு சொல்லிட்டு நீ வந்தா அப்படியே விட்ருவேனா? உன் கடைசி மூச்சு வரைக்கும் இப்படித்தான் துரத்திக்கிட்டே வருவேன். என்கிட்ட மாட்டிகிட்டு முழிக்கணும் அப்படிங்கிறதுதான் உன் விதி” சொல்லிக் கொண்டே மிருணா நிமிர, அவள் எதிரில் விஷ்ணு.

“கம் அகைன்…” விஷ்ணு சொல்ல, திகைத்த மிருணா, “அது… நீங்க இங்க…” என வார்த்தை கிட்டாமல் தடுமாறினாள்.

சுற்றிலும் பார்த்த விஷ்ணு, “சினிமா ஷூட்டிங்கா? நீங்க ஏதோ பேசுனீங்களே… என்கிட்டதான் சொல்றீங்கன்னு தப்பா நினைச்சிட்டேன். சாரி” என சொல்லி அகன்று சென்றான்.

கதாநாயகி தள்ளி நின்று கைப்பேசியில் பேசிக் கொண்டிருக்க தனியாக பேசிக் கொண்டிருந்த தன் மடத்தனத்தை நொந்து கொண்ட மிருணாவின் பார்வை அனிச்சையாக விஷ்ணுவின் மீது படிந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement