Advertisement

அத்தியாயம் -9(2)

“நேத்து லவ் வந்து இன்னிக்கு பொண்ணு பார்க்க போலாங்கிறான் ம்மா.விட்டா நாளைக்கே தாலி கட்டுறேன்னு சொல்வான். இவன் நடத்தை விசித்திரமா இல்ல? இன்னும் இவனை நீ நம்புறியாம்மா?” கீர்த்தி கேட்க கண்களில் ஒருவித மிரட்சியோடு மகனை பார்த்தார் அரசி.

“அவளுக்கு அவங்க வீட்ல மாப்பிள்ளை பார்க்கிறாங்க ம்மா. ஒரு இடம் அமையற அளவுல இருக்கு. மலர் இல்லைனா எனக்கு கல்யாணமே இல்லை. அவசர படலைனா அவ எனக்கு வைஃபா வர்றது நடக்காம போய்டும்” என்றான்.

மகளை முறைத்த அரசி, “கல்யாணம் நடந்து முடியுற வரை வாயை திறக்காத நீ” கண்டிப்போடு சொல்ல, முகத்தை திருப்பிக் கொண்டு சென்றாள் கீர்த்தி.

மாலை நான்கு மணி அளவில் சோம்பியே இருக்க மனமில்லாமல் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள் மலர். நீளமான ஸ்கர்ட், தளர்வாக டீ ஷர்ட் என இருந்தாள். காலையில் போட்ட போனி டெயில், முடிகள் கலைந்து போய் காற்றில் பறந்து கொண்டிருந்தது.

“இப்பதான் காய்ச்சல் விட்டது, அதுக்குள்ள எதுக்குடி தண்ணில நிக்குற?” என சத்தம் போட்டார் விமலா.

“தண்ணில எங்க நிக்கிறேன், தரையிலதான் நிக்கிறேன். பைப்லேர்ந்துதான் தண்ணி போகுதும்மா. எனக்கு சூடா டீ தாயேன்” எனக் கேட்டாள் மலர்.

“பார்க்க டாக்டர் மாதிரியா இருக்க? வா, தலைல எண்ணெய் வச்சு வாரி விடுறேன், ரெண்டு பேரும் சேர்ந்தே டீ குடிக்கலாம்”

“டாக்டர்னா எப்பவும் ப்ரிஸ்க்கா இருக்கணுமா ம்மா? எனக்கு உடம்பு முடியலை, இப்படித்தான் இருப்பேன். டீ ப்ளீஸ்…”

“எது சொன்னாலும் எதித்து எதித்து ஏதாவது பேசிக்கிட்டு” சலித்துக் கொண்டே உள்ளே செல்லப் போன விமலா, வீட்டின் முன் வந்து நின்ற காரை கண்டு விட்டு அங்கேயே தேங்கினார்.

 பிரவாகன், அரசி, கீர்த்தி, குகன், ஹ்ருதிக், தமன் ஆகியோர் காரிலிருந்து இறங்கினர். அரசி முன்னரே சொல்லியிருக்க செல்வத்தை அழைத்துக் கொண்டு கோபாலும் வந்து விட்டார்.

யார் என்ன என ஒன்றும் புரியாமல் பொதுவாக “வாங்க” என அழைத்தார் விமலா.

இப்படி குடும்பத்தோடு வந்து நிற்பவனை கண்டு விட்ட அதிர்வில் கையில் இருந்த பைப்பில் கவனம் வைக்காமல் போனாள் மலர். பைப்பை தன்னை அறியாமல் அவளது பக்கமாக திருப்பி விட்டாள். தண்ணீரில் அவள் முகம், உடல் எல்லாம் நனைந்து போக அவள் சுதாரிக்கும் முன் அவளருகில் வந்து நின்ற பிரவா பைப்பை பிடுங்கி கீழே போட்டான்.

அவளது நாசியில் தண்ணீர் சென்றிருக்க பலமாக இருமிக் கொண்டிருந்தாள். “ஈஸி… ஈஸி மலர்” என்றவன், அவனது கைக்குட்டை எடுத்து நீட்டி, “முகத்தை துடைச்சிட்டு சீக்கிரம் உள்ள போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிக்க” என அக்கறையாக சொன்னான்.

இத்தனை உரிமையாக மலரிடம் நடந்து கொள்பவன் யார் என நினைத்த விமலா கணவரை பார்க்க, “பொண்ண உள்ள கூட்டிட்டு போ” என கடிந்து கொண்டார் செல்வம்.

ஒன்றும் புரியா விட்டாலும் கணவரின் வார்த்தையை அமல் படுத்த எண்ணிய விமலா மகளை நோக்கி செல்ல, அவர் அருகில் வந்த கோபால், “மலரை பொண்ணு கேட்டு வந்திருக்காங்க” சின்ன குரலில் சொன்னார்.

“வாங்க வாங்க” என நன்றாக வரவேற்ற விமலா, மலரின் கையை பிடித்து அழைத்து சென்று அறையில் விட்டு, “ஃப்ரெஷ் ஆகி வேற நல்ல ட்ரெஸ் போட்டுக்கோ” என சொல்லி மீண்டும் ஹால் வந்தார்.

இவர்கள் யார் என தெரிய வரவும் விமலாவுக்கு கொஞ்சம் பீதி கலந்த மகிழ்ச்சி.

மலரை பிரவாகன் விரும்புகிறான் என அதையேதான் இங்கும் சொன்னார்கள். இன்னும் மகளுக்கு திருமணம் செய்வதா வேண்டாமா என முடிவே எடுத்திராத செல்வம் என்ன பேசுவது என குழம்பிப் போனார்.

அரசியும் கோபாலும் பேசிய பின் நிஜமாகவே தன் பெண் மீது பிரவாகன் பிரியம் கொண்டிருக்க, வீடு தேடி வந்து பெண் கேட்கிறார்கள் என நம்பிய விமலாவுக்கு பயம் நீங்கி சந்தோஷம் மட்டுமே நிலைத்திருந்தது.

“திடீர்னு வந்து கேட்டா என்ன பதில் சொல்லன்னு தெரியலை, என் பொண்ணு விருப்பம்தான் எல்லாம். டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்றோம்” என்றார் செல்வம்.

“கண்டிப்பா மாமா. மலருக்கு இப்படி நான் அவளை விரும்பறது நிஜமா, சரின்னு சொல்லலாமான்னு நிறைய தடுமாற்றம் இருக்கு. உங்க பொண்ணை ரொம்ப விரும்பித்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறேன், நீங்க நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு மலரை நல்லா பார்த்துப்பேன். நீங்களாம் மலர்கிட்ட எடுத்து சொல்லுங்க” என்றான் பிரவாகன்.

‘ஆஹா எத்தனை பெரிய மனிதன், எத்தனை பணிவும் அடக்கமுமாக பேசுகிறான்!’ என செல்வமே நினைக்க விமலாவை கேட்க வேண்டுமா?

அரக்க பறக்க காபி தயாரித்து அனைவருக்கும் கொடுத்த விமலா, மலரின் அறைக்கு செல்ல தலை முடியை மட்டும் அவிழ்த்து விரித்து போட்டுக் கொண்டு இன்னும் ஈர ஆடையை கூட மாற்றாமல் நாற்காலி ஒன்றில் கோவாவேசமாக அமர்ந்திருந்தாள்.

“என்னடி நீ இப்படி உட்கார்ந்திருக்க? வந்தவங்களுக்கு ஒரு மரியாதை இல்லை?” என கோவப்பட்டார் விமலா.

தோளில் புரண்ட கூந்தலை அள்ளி கிளிப்பிற்குள் அடைத்துக் கொண்ட மலர், “மரியாதைதானே… கொடுத்திட்டா போச்சு” என சொல்லி வெளியே செல்ல பார்த்தாள்.

அவளின் கையை பிடித்து நிறுத்திய விமலா, “ரெண்டு போட்டேன்னா தெரியும். நீ ஏதாவது தரக் குறைவா நடந்தாலும் பேசினாலும் அப்பாவுக்குதான் அசிங்கம். நம்ம வீடு தேடி வந்திருக்காங்க, உன் சம்மதம் இல்லாம என்ன செய்ய போறோம் நாங்க? ஒழுங்கா ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா” என அவள் மறுக்க முடியாத படி சொன்னார்.

மலர் அப்படியே நிற்க, கொஞ்சம் தாஜா செய்வது போல சொல்லி அவளை சுடிதார் ஒன்றை மாற்றிக் கொள்ள செய்து அழைத்து வந்தார். அவர்கள் ஹால் வரும் நேரம் பரத்தும் வந்திருக்க பிரவாகன் தன் பக்கத்தில் அவனை அமர வைத்துக்கொண்டு ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.

மலரை தன் பக்கத்தில் அமர வைத்துக் கொண்ட அரசி, “உடம்பு முடியலைன்னு பிரவா சொன்னான். இப்போ எப்படி இருக்கு ம்மா?” என விசாரித்தார்.

நன்றாக இருப்பதாக சொன்ன மலர், பிரவாகனை முறைக்க அவனோ மென்மையாக சிரித்தான். இதை அனைவரும் கவனித்துதான் இருந்தனர். பார்ப்பவர்களுக்கெல்லாம் பிரவாகன் மலரை மிகவும் நேசிக்கிறான் போல என்ற பிம்பம்தான் ஏற்பட்டது.

குகன் கீர்த்தியின் முகத்தை புன்னகையோடு பார்க்க அவள் சலிப்பாக பார்த்தாள்.

தன் பெண்ணின் மனம் புரிந்தது போல, “மலருக்கு டயர்டா இருக்கும், உள்ள அழைச்சிட்டு போ விமலா” என்றார் செல்வம்.

 மகளுக்கு விருப்பமில்லை போல, அல்லது நாங்கள் எடுத்து சொல்லி புரிய வைக்க வேண்டுமோ என்ற நினைவில் இருந்த விமலா, மலரின் அருகில் வந்து நின்று அவளை எழ சொன்னார்.

எழுந்து நின்ற மலர் அனைவரையும் பொதுவாக பார்த்து, “சார் ஏன் இப்படி நடக்கிறார்னு எனக்கு தெரியலை. துளியும் விருப்பமில்லாத சின்ன விஷயத்தை கூட எதுக்காகவும் சமரசம் செஞ்சுக்கிட்டு செய்றதுல எனக்கு உடன்பாடு கிடையாது. அப்படி இருக்கிற நான் என் லைஃப் விஷயத்துல ரிஸ்க் எடுக்க நினைப்பேனா? இதுக்கு நான் தயாரா இல்லை. இது நடக்காது” என அறிவித்தாள்.

அரசி கவலையும் வருத்தமுமாக பார்க்க, ‘இந்த பொண்ணுக்கும் எம்பையன் மாதிரியே மழுங்கின மூளை போல’ என நினைத்துக்கொண்டார் கோபால்.

“என்ன கீர்த்தி இதெல்லாம்?” மனைவியிடம் ரகசிய குரலில் கேட்டான் குகன்.

“உங்க மச்சான் கூப்பிட்டதும் என்கிட்ட கூட கேட்டுக்காம விழுந்தடிச்சு ஓடோடி வந்தீங்கதானே? அப்போ அவன்கிட்டேயே கேளுங்க” என கீர்த்தியும் ரகசிய குரலில் சொல்ல, பேசாமல் வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டான் குகன்.

விமலா அனைவரையும் சங்கடமாக பார்க்க, பிரவாகன் கைப்பிடிக்குள் இருந்த பரத், ‘எப்படி இவரிடமிருந்து விடுபட்டு எழுவது?’ என நெளிந்தான்.

அரசியை பார்த்த செல்வம், “ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்திருந்தா இப்படி ஆகியிருக்காது. என் பசங்க விருப்பத்துக்கு மாறா இதுவரைக்கும் எதையும் நான் செய்தது இல்லை. நீங்க புரிஞ்சுக்கணும்” என்றார்.

பரவாயில்லை என்ற அரசி மகனை பார்க்க அலட்டிக் கொள்ளாமல் அமர்ந்திருந்தவன், “மலர் யோசிக்கட்டும் சார், ஒரு வாரம் லீவ்ல இருக்காங்கதானே… நல்லா யோசிச்சி பார்த்திட்டு இந்த பதிலை சொல்லட்டும். மலரோட விருப்பம் ரொம்ப முக்கியம் இல்லயா?” என்றான்.

“ஒரு வாரத்துல எதுவும் மாறிட போறது இல்லைங்க சார். உலகம் சுத்துறது நின்னு போனாலும் என் முடிவு இதுதான்” என்றாள் மலர்.

பரத்தை பார்த்த பிரவா, “யூ க்நோ பரத்? உன் அக்காவோட இந்த பட பட பேச்சுலேயும் தைரியத்திலேயும்தான் நான் விழுந்திட்டேன், உன் அக்காவோட கோவம் கூட க்யூட் இல்ல?” என்றான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement