Advertisement

பேரன்பு பிரவாகம் -9

அத்தியாயம் -9(1)

“என்னடா இது?” மகனின் தோளில் மலரின் முகத்தை பார்த்து விட்டு அதிர்ச்சியோடு கேட்டார் அரசி.

“உன் மருமகளை எவ்ளோ லவ் பண்றேன்னு இப்பவாவது உனக்கு புரியுதாம்மா? முறையா பேசி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிடு” என்றான் பிரவாகன்.

மலரின் உருவம் இருந்த இடத்தை கீர்த்தி தன் கை வைத்து அழுத்திப் பார்க்க, “க்கா என்ன செய்ற நீ? வலிக்குது விடு” என்றான் பிரவாகன்.

“பெர்மனெண்ட் டாட்டூவா இது?” என சந்தேகமாக கேட்டாள்.

“பின்ன? நாலு மணி நேரம் வலி பொறுக்க பொறுக்க போட்டுக்கிட்டேன்” என்றான்.

“நேத்திக்கு மலர் மயங்கி விழுந்தப்பதான் நீ லவ்னு புரிஞ்சுகிட்டதா தமன் சொன்னான். எப்படா போய் இத போட்டுக்கிட்ட?” எனக் கேட்டாள் கீர்த்தி.

“இந்த விசாரணை எல்லாம் உனக்கெதுக்கு? உன்னை மாதிரியே அவளுக்கும் என் லவ் மேல டவுட், என்ன செய்யலாம்னு யோசிச்சேன், இதான் தோணிச்சு, உடனே போட்டுக்கிட்டேன்”

“மலர் இன்னும் ஓகே சொல்லலை, நடக்குமா இல்லையான்னு தெரியாம பெர்மனெண்ட் டாட்டூ போட்டா என்னடா அர்த்தம்?”

“அவளை தவிர யாரையும் கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு அர்த்தம்”

“மலர் ஒதுக்கலைனா என்ன செய்வ?” என கீர்த்தி கேட்க, “ஏன் இப்படி பேசுற கீர்த்தி, நமக்கு கூட அந்த பொண்ணை பிரவாவுக்கு செய்யலாம்னு தோணவே இல்லை பாரு. நல்ல பொண்ணு, கோபாலுக்கு தெரிஞ்ச பொண்ணாம். போய் பேசி பார்க்கலாம்டி” என்றார் அரசி.

கீர்த்திக்கு இன்னும் தம்பியின் மீது நம்பிக்கை வரவில்லை, ஆனால் இந்த டாட்டூ கொஞ்சமாக குழப்பியது. விருப்பமில்லாதவள் முகத்தை ஏன் வரைந்து கொள்ள வேண்டும்? விடலை பருவத்தில் கூட பெண் தோழிகள் என யாருமில்லை, ஒரு வேளை நிஜமாகவே மலர் இவனை கவர்ந்து விட்டாளோ… பலவிதமாக சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

“லவ் பண்றேன், பொண்ணு கேளுங்கன்னா இப்படி இருந்தா என்ன அர்த்தம்? நார்மல் மனுஷன் நான், கல்யாணம் பத்தி எனக்கும் ட்ரீம்ஸ் இருக்கு. என் மிச்ச லைஃப் மலரோடன்னு முடிவு பண்ணிட்டேன். அம்மாவும் பொண்ணும் டிஸ்கஸ் பண்ணிட்டு அரை மணி நேரத்துல வந்து சொல்லுங்க” என்ற பிரவா, கோப்புகளை எடுத்துக் கொண்டு வருமாறு தமனுக்கு உத்தரவிட்டு விட்டு அலுவலக அறைக்கு சென்றான்.

மகளிடம் ஆலோசிக்கவெல்லாம் இல்லை அரசி, கோபாலின் கைப்பேசிக்கு அழைத்து மலரின் ஜாதகம் கிடைக்குமா என கேட்டார்.

விஷ்ணு செய்த வேலையால் எங்கே அக்கா கோவமாக இருப்பாரோ என நினைத்துக் கொண்டிருந்த கோபாலுக்கு அரசியின் அழைப்பு ஆறுதலாக இருந்தது. பெரிய மனிதர்களின் உறவை தக்க வைத்துக் கொண்டால்தானே பின்னால் ஏதேனும் காரியம் ஆகும்.

ஏன் எதற்கு என்றெல்லாம் தோன்றினாலும் நேரடியாக விசாரிக்காமல், “அக்கா…” என மட்டும் அழைத்தார்.

பிரவாகன் மலரை விரும்புவதாகவும் திருமண பேச்சு எடுப்பதற்கு முன் பொருத்தம் பார்த்துக் கொள்ள விரும்புவதாகவும் அரசி சொல்ல, ‘அந்த பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டத்தை பாரேன்!’ என மனதில் வியந்து போனார் கோபால்.

மாப்பிள்ளை பார்க்க சொல்லி மலரின் ஜாதகத்தை இவரிடம் கொடுத்து வைத்திருந்தார் விமலா. அதை புகைப்படம் எடுத்து அரசிக்கு அனுப்பி வைத்தார். நாமக்கல் ஜோதிடர் நல்லமுத்துவிடம் கைப்பேசியில் பேசி விட்டு மலர், பிரவாகன் இருவரது ஜாதகங்களையும் வாட்ஸ் ஆப் செய்து வைத்தார் அரசி.

பொருத்தம் பார்த்த நல்லமுத்து, “இந்த பையனுக்கு இந்த பொண்ணுதான் மா சரி. எப்பேர்ப்பட்ட மரமும் புயலுக்கு முன்னாடி நிமிந்து நிக்க முடியாது, பாம்புன்னா மகுடிக்கு மயங்கிதான் ஆகணும். இவரை வளைச்சு தான் பக்கம் இழுத்து கொண்டு வர்ற அமைப்பு இந்த பொண்ணு ஜாதகத்துல இருக்கு. ஆரம்பத்துல கஷ்ட பட்டாலும் எதிர்காலத்துல நல்லா வாழுவாங்க” என்றார்.

பிறகென்ன அரசியின் மகிழ்ச்சிக்கு கேட்கவும் வேண்டுமா?

“ஜாதகம்லாம் ஒரு அளவுக்குத்தான் பார்க்கலாம் மா. மலர் விருப்பம் பத்தி, அவங்க வீட்ல உள்ளவங்க சம்மதம் பத்தி எதையும் யோசிக்காம கல்யாணமே முடிஞ்சுட்ட மாதிரி எதுக்கு இவ்ளோ ஹைபர் ஆகுற?” என கோவப்பட்டாள் கீர்த்தி.

“நடக்கும்னு நம்புனாத்தானே கீர்த்தி அது நடக்கும். நெகடிவா பேசாத. மலருக்கு ரொம்ப நல்ல மனசு, கொஞ்சம் கொஞ்சமா ஃப்ரீ பிளாக் கூடா சரியாகும். அவளை அவ்ளோ விரும்புறவன் அவ சொன்னா கண்டிப்பா கேட்டுப்பான்”

“ஆனா அம்மா…”

“வேற எதுவும் சொல்லாத, வா அவனோட அக்காவா பொறுப்பா அவன் கல்யாணத்தை நடத்திக் கொடு” என்றவரிடம் கீர்த்தியால் வேறு எதுவும் பேச முடியவில்லை.

கோப்புகளில் கையெழுத்து இட வேண்டிய பக்கங்களை தமன் எடுத்து வைக்க, வலது தோள் பட்டையை தடவிக் கொண்ட பிரவாகன், “நெஞ்சுல முதுகுல கழுத்துலன்னு எங்க பார்த்தாலும் பெருசா பெருசா டாட்டூ போட்டுக்கிறானுங்களே… எப்படி மேன்? பெயின் கில்லர் கொடு முதல்ல” என்றான்.

நேற்றும் பிரவாகனுக்கு வலி நிவாரணி தேவை பட்டதால் மேலும் தேவை படக்கூடும் என கையோடு வைத்திருந்த வலி நிவாரணி மாத்திரை எடுத்துக் கொடுத்தான் தமன்.

“என் லைஃப்ல இதெல்லாம் போட்டதே இல்லை, ஸ்டமக் அப்செட் ஆகித் தொலையுது” எரிச்சலாக சொல்லிக் கொண்டே மாத்திரையை விழுங்கினான்.

“நம்ம ஹாஸ்பிடல் டாக்டர்கிட்டேயே காட்டியிருந்தா என்ன சைட் எஃபெக்ட் வரும்னு பார்த்து அதுக்கும் டேப்லெட் கொடுத்திருப்பாங்க சார், நீங்கதான் வெளில வாங்க சொல்லிட்டீங்க”

“டாட்டூ சென்டருக்கும் நம்ம ஹாஸ்பிடலுக்கும் ஏழு கிலோ மீட்டர் டிஸ்டன்ஸ், அவ்ளோ நேரம் நான் வலியில கஷ்ட படுறதை நீ ரசிச்சு பார்க்கலையேன்னு கவலையா உனக்கு?”

“அவ்ளோ வலிங்குலா சார்? அவன்தான் ரெண்டு சிட்டிங்ல போட்டுக்கலாம்னு சொன்னாந்தானே சார்?”

தமனை பார்த்து கடுப்பாக சிரித்த பிரவா, “அவ்ளோ டைம் இல்லை என்கிட்ட?” என்றான்.

“அவசர படாம பொறுமையா நடந்தா…” என இழுத்தான் தமன்.

“பொறுமையா நடக்கவா? டிலே பண்ண பண்ண எல்லாம் குடி முழுகிப் போய்டும்யா” சிடு சிடுத்தவன், “நேத்து உன்கிட்ட என்ன சொன்னேன்? அவளோட போட்டோ எடுத்திட்டு வான்னுதானே? இப்படி உர்ருன்னு இருக்கிற போட்டோவையா எடுத்திட்டு வருவ? சிரிச்ச மாதிரி உள்ள போட்டோ கிடைக்கலியா உனக்கு?” எனக் கேட்டான்.

“மேடம் போட்டோவோட அஞ்சு நிமிஷத்துல கிளம்பியிருக்கணும் நீ ன்னு ஆர்டர் போட்டுட்டீங்க? மலர் மேடம் வேலைக்கு சேர்ந்தப்போ கொடுத்திருந்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோதான் அர்ஜென்ட்டுக்கு கிடைச்சது. அப்படி ஒண்ணும் உர்ருன்னு இல்லைங்க சார், மேடம் நல்லா அழகாதான் இருக்காங்க”

“ஓஓஓஓ ஹோய்… என்ன மேன் என்ன? அவ என் பிராப்பர்டி. என்னை தவிர எல்லாருக்கும் சிஸ்டர் மாதிரி… புரிஞ்சதா?”

தலையாட்டிக் கொண்ட தமன், “சிரிச்ச முகமா இன்னோரு டாட்டூ வேணும்னா லெஃப்ட் சைட் ஷோல்டர்ல…” என சொல்லிக் கொண்டிருக்க, கையிலிருந்த பேனாவை கொண்டு அவனது தலையில் தட்டினான் பிரவா.

“ஓகே ஓகே சார் போட வேணாம்னா விடுங்க. ஆனா இப்படி பெர்மனெண்ட் டாட்டூ போட்டுக்கிட்டீங்களே சார், அம்மாவையும் அக்காவையும் ஒத்துக்க வச்சிடுவீங்கன்னு தெரியும், மலர் மேடம் ஒத்துப்பாங்களா சார்? ஒரு வேளை முடியவே முடியாதுன்னு சொல்லிட்டா என்ன பண்ணுவீங்க சார்? டாட்டூவ அழிக்கிறது இன்னும் பெயின் ஃபுல் பிராசஸ் சார்” மண்டைக்குள் குறு குறு என இருந்ததை வாய் விட்டு கேட்டான் தமன்.

“அவ சம்மதிப்பா, அந்த நம்பிக்கை இல்லாமலா இவ்ளோ ரிஸ்க் எடுக்கிறேன்? நினைச்சதை எப்படி நடத்திக்கணும்னு எனக்கு தெரியும் தமன்” கையெழுத்துக்கள் போட்டுக் கொண்டே அழுத்தமாக சொன்ன பிரவாகன் அவனை நிமிர்ந்து அர்த்தமாக பார்த்தான்.

அவனது பார்வையை படித்த தமன், “ஐயையோ சார், நீங்க என்ன பேசலாம்னு சொல்லியிருக்கீங்களோ அது மட்டும்தான் என் நினைவுல இருக்கு, மத்தது எல்லாத்தையும் மறந்து போயிட்டேன். ஒரு வார்த்தை எக்ஸ்ட்ராவா என் வாய்லேருந்து வராது” என்றான்.

“மறந்து போனது திரும்ப எப்பவாவது நினைவுக்கு வந்தா சொல்லு தமன், கவனிச்சு விடுறேன் உன்னை”

“என்னை மொத்தமா கோமால படுக்க வச்சிடுவீங்கன்னு தெரியாதா சார்? என்னை நம்புங்க சார்” என தமன் சொல்லிக் கொண்டிருக்க அரசி வந்தார்.

இருவருக்கும் நல்ல பொருத்தம் என அரசி கூற, “ம்ஹூம்? குட் மா” என்றான் பிரவாகன்.

அம்மாவுக்கும் பின்னால் கைகளை கட்டிய வண்ணம் முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள் கீர்த்தி. அவளை எட்டிப் பார்த்தவன், “என் அக்கா என்ன சொல்றாங்க?” எனக் கேட்டான்.

“அவளால உன்னை இன்னும் நம்ப முடியலை. போக போக புரிஞ்சுக்குவா. எப்ப பொண்ணு கேட்க போலாம்னு முடிவு பண்ணிட்டோம்னா மாப்பிள்ளைய அழைச்சிட்டு வருவா” என்றார் அரசி.

“இன்னிக்கு நல்ல நாள்தானே?” எனக் கேட்டான் பிரவா.

 “என்னடா அவசரம்? மாப்பிள்ளைக்கு சொல்ல வேணாமா…” என அரசி கேட்டுக் கொண்டிருக்கும் போதே குகனின் கைப்பேசிக்கு பிரவாவின் கைப்பேசியிலிருந்து அழைப்பு சென்று கொண்டிருந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement