Advertisement

அத்தியாயம் -8(2)

தர்மேந்திரனை தன்னை பார்க்க வரும் படி முதல் நாளே பிரவாகன் சொல்லியிருக்க கடந்த ஒரு மணி நேரமாக காத்திருந்தவர் வெளியில் வந்த தமனிடம், “என்னப்பா எவ்ளோ நேரம்?” என சலிப்பாக கேட்டார்.

சரியாக அந்த நேரம் தமனின் கைபேசியில் அழைத்த பிரவாகன், “இன்னும் அரை மணி நேரம் வாய மூடிகிட்டு அந்தாளு உட்கார்ந்திருந்தா உள்ள அனுப்பு, ஏதாவது வாய தொறந்தா அங்கேயே காத்து கிடக்கட்டும்” என சொல்லி வைத்தான்.

“சார் முக்கியமான வீடியோ கான்ஃபரன்ஸ்ல இருக்கார். வெயிட் பண்ணுங்க” என சொல்லி சென்று விட்டான் தமன்.

முக்கால் மணி நேரத்துக்கு பின்னரே தர்மேந்திரன் அறைக்கு வர அனுமதி தந்தான் பிரவாகன்.

எந்த விசாரிப்பும் இல்லாமல் அவர் முன் காகிதம் ஒன்றை நீட்டியவன், “ஃப்ரீ பிளாக் பொறுப்பிலிருந்து விலகுறேன்னு நீங்க கொடுக்க போற லெட்டர்” என்றான்.

“பிரவா என்னப்பா இது? என்ன நடந்ததுன்னு இப்படி செய்ற?” பதட்டமாக கேட்டார்.

“அங்க என்ன பண்ணி வச்சிருக்கீங்க? போட்டோ போட்டு கிழி கிழின்னு கிழிக்கிறா ஒருத்தி. அந்த பிளாக்கோட தலைவலி எனக்கு வேணாம்னுதானே இருக்கேன், திரும்ப திரும்ப எனக்கு குடைச்சல் வந்திட்டே இருக்கு. பெட்டர் நீங்க இதுல ஸைன் பண்ணிட்டு வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுங்க. நான் வேற ஆள பார்த்துக்கிறேன்” என்றான்.

“உன் தங்கச்சியோட மாமியார் வீட்ல அவளுக்கு ரொம்ப தொந்தரவு கொடுக்கிறாங்க தம்பி, ஒரு வாரமா அவ என் வீட்லதான் இருக்கா. அவளை பத்தின கவலையில இந்த ஒரு வாரமாதான் கொஞ்சம் கவன குறைச்சலா இருந்திட்டேன். அந்த நேரம் பார்த்து வார்டு வார்டா போய் போட்டோ எடுத்து வச்சிருக்கு அந்த டாக்டர். என்னை பழி வாங்க அப்படி நடக்குது போல” என்றார்.

பிரவாகன் முறைத்துக் கொண்டே, “நல்லா கம்பி கட்டுறீங்க?” என்றான்.

 “நீதானே கேம்ப் எல்லாத்துக்கும் அனுப்பி விட சொன்ன அந்த பொண்ண, அந்த காண்டுலதான் என்னை பழி வாங்க இப்படி அந்த அறிவு கெட்ட…” என பேசிக் கொண்டிருந்தவரின் வாயை வேகமும் சத்தமுமாக மேசையில் ஒரு தட்டு தட்டி மூட செய்தான்.

தர்மேந்திரன் திகைப்பாக பார்த்திருக்க, “மலர் பத்தி தப்பா ஒரு வார்த்தை யாரும் பேசக்கூடாது அண்ட் இதுதான் லாஸ்ட் வார்னிங் உங்களுக்கு. பணத்தை அளவோட சுரண்டுங்க, பத்மநாதன் அங்கிள் அடுத்த வாரம் இன்ஸ்பெக்ஷன் வருவார் அங்க, வார்ட்ஸ் நீட் அண்ட் டைடியா இல்ல…” என்றவன் அந்த காகிதத்தை கண்களால் காட்டினான்.

நான் அப்படி செய்கிறேன் இப்படி செய்கிறேன் என இரண்டு நிமிடங்களுக்கு நீட்டி முழக்கி விட்டு மலரை மனதுக்குள் வறுத்தெடுத்துக் கொண்டே கிளம்பினார் தர்மேந்திரன்.

மலருக்கு நிஜமாகவே காய்ச்சல் என தகவல் சொன்னான் தமன்.

“எப்ப சரியாகும் அவளுக்கு? எப்ப எங்க மேரேஜ் பத்தி பேசுறது நான்?”

“சார்… இதுக்கெல்லாம் பதில் எனக்கெப்படி தெரியும்?” பாவமாக கேட்டான் தமன்.

இரண்டு நிமிடங்கள் ஆழ்ந்த யோசனையில் இருந்தவன், “ஏன் டைம் வேஸ்ட் பண்ணனும், அம்மாவை போய் பொண்ணு கேட்க சொல்றேன். பத்மா அங்கிளை போன்ல ரிப்போர்ட் பண்ண சொல்லு, மத்த அப்பாயிண்ட்மெண்ட்ஸ் கேன்சல் பண்ணிடு” என சொல்லி எழுந்து நின்றான்.

முக்கிய கோப்புகளில் கையெழுத்து இட வேண்டும் என தமன் நினைவு படுத்த, தயாரான உடன் வீட்டுக்கு எடுத்து வரும் படி பணித்தவன் புறப்பட்டு விட்டான்.

கீர்த்தி அவளது ஏழு வயது மகன் ஹ்ருதிக் உடன் பிறந்த வீட்டுக்கு வந்திருந்தாள்.

“என்னடா ஸ்கூல் போகலையா?” எனக் கேட்டுக் கொண்டே ஒற்றைக் கையால் தூக்கி மருமகனை கொஞ்சி கீழே விட்டான் பிரவாகன். ரிமோட் காருடன் விளையாடிக் கொண்டிருந்த ஹ்ருதிக் மீண்டும் விளையாட ஆரம்பித்து விட்டான்.

அம்மாவும் அக்காவும் கவலை நிறைந்த முகங்களுடன் காணப் பட அவர்களின் பக்கத்தில் வந்தமர்ந்தமன் அக்காவை பார்த்து “உனக்கு என்ன பிரச்சனை? எதுவா இருந்தாலும் தட்டி தூக்கிடலாம், அதுக்கு ஏன் மூஞ்சிய இப்படி வச்சிருக்க?” எனக் கேட்டான்.

“எனக்கென்னடா பிரச்சனை? சும்மா உலகத்தை வளைச்சிடுவேன் ரேஞ்சுக்கே பேசிக்கிட்டு…” எரிச்சலாக சொன்னாள் கீர்த்தி.

“ஹ்ருதிக் அழைச்சிட்டு இந்த டைம் வந்திருக்க, முகமும் சரியில்லை, அதனால ஏதோ பிராப்லம்னு நினைச்சேன். அப்படி எதுவும் பிராப்லம் இல்லைனா ஹேப்பி. இப்போ நான் கொஞ்சம் பேசணும்” என்றான்.

“எனக்கு எந்த பிராப்லமும் இல்லை. ஹ்ருதிக்கு கோல்டு, அம்மா இவனை பார்க்கணும்னு சொல்லிட்டிருந்தாங்க, அதனால அழைச்சிட்டு வந்தேன். ஆனா வேற பிரச்சனை வந்திருக்கு” என்றாள் கீர்த்தி.

“ஓகேக்கா… எதுக்கு இப்படி சுத்துற, டக்குன்னு மேட்டருக்கு வா” இப்போது பிரவா எரிந்து விழுந்தான்.

“விஷ்ணு அவங்க வீட்ல சண்டை போட்டுட்டு சென்னை போயிட்டாராம்” என்றாள் கீர்த்தி.

ஆமாம், திருமண பேச்செடுத்த அடுத்த இரண்டு நாட்களாக விஷ்ணுவை சுற்றி வளைத்து கோபாலும் ஹரியும் இம்சை செய்த வண்ணம் இருந்தனர். அப்பாவுக்கும் அவனுக்கும் வாக்குவாதமாகிப் போய் சிறு சண்டையாகியும் விட்டது. அவன் வேலை பார்த்த மருத்துவமனைக்கு சென்னையிலும் கிளை உண்டு. அவசரமாக அங்கு மாற்றல் வாங்கிக் கொண்டு சென்று விட்டான்.

“இந்த சம்பந்தமே வேணாம்னு சொல்லிட்டாராம்” கவலையாக சொன்னாள் கீர்த்தி.

பிரவா அவனது அம்மாவை பார்க்க, எதுவும் பேசா விட்டாலும் விஷ்ணு மாப்பிளையாக வேண்டும் என்ற அபிலாஷை வைத்திருந்தவரது கண்களில் அது நிராசையாகிப் போன வருத்தம் தெரிந்தது.

“அவன் ஒருத்தன்தா ஆம்பளையா? வேற நல்ல பையனா பார்ப்போம். இல்லை அவனைதான் இந்த வீட்டு மாப்பிள்ளையா ஆக்கணும்னா சொல்லுங்க, நான் நடத்தி வைக்கிறேன்” என்றான் பிரவாகன்.

அரசி கோவமாக பார்க்க, அவனது வலது தோளில் சுள் என அடி கொடுத்தாள் கீர்த்தி. ஆ என அதீதமாக அலறியவன் தோள் பட்டையை தடவிக் கொண்டான்.

“ஓவர்டா இது, அவ்ளோ வலிக்குதா உனக்கு?” என்றாள் கீர்த்தி.

“இல்லயில்லை, அத விடு. விஷ்ணு பத்தி நீங்க ரெண்டு பேரும் முடிவு பண்ணி சொல்லுங்க. மிருணாவுக்கு சொல்லிட்டீங்களா, அவ என்ன சொல்றா? இது ஒரு பெரிய விஷயம் இல்லை. என்ன நடக்கணும்னு மட்டும் சொல்லுங்க, இந்த வீட்ல இருக்கிறவங்களுக்கு கவலை பரம விரோதியா மட்டும்தான் இருக்கணும்” என்றான்.

“எங்களுக்கு ஆசைதான். அதுக்காக விருப்பம் இல்லாத பையனை மல்லுகட்டி மிருணாவுக்கு கட்டி வைப்பியா? அவ லைஃப் என்னாகிறது? மிருணாகிட்ட சொல்லியாச்சு. அவளும் உனக்கு முதல்ல கல்யாணம் பண்ண சொல்லிட்டா, அவ அடுத்த வருஷம் பண்ணிப்பாளாம்” என்றார் அரசி.

“தென்?”

“எங்களுக்கு அதுல கொஞ்சம் வருத்தம் டா. விடு, உனக்கு சில பொண்ணுங்க ஜாதகம் பொருந்தியிருக்கு. போட்டோஸ் பாயோடேட்டா எல்லாம் இருக்கு, நீ பார்க்கிறியா இப்போ?” எனக் கேட்ட கீர்த்தி அருகில் இருந்த கோப்பை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.

வாங்கியவன் மீண்டும் அது இருந்த பழைய இடத்திலேயே வைத்தவன், “இதுக்கெல்லாம் அவசியம் இல்லை. அம்மா ஹாஸ்பிடல் வந்தப்போ ஃப்ரீ பிளாக் அழைச்சிட்டு போனாளே…” பிரவாகன் சொல்லிக் கொண்டிருக்க, “அன்புமலர்” என்றாள் கீர்த்தி.

“நினைவு இருக்கா உனக்கு? குட், அவளை லவ் பண்றேன். வீட்டுக்கு போய் பொண்ணு கேளுங்க” என பட்டென சொன்னவனை மற்ற இருவரும் ஆ என பார்த்தனர்.

முதலில் சுதாரித்தவள் கீர்த்திதான்.

“எப்போலேருந்து லவ் உனக்கு? நம்புற படி ஏதாவது கதை சொல்லு கேட்கிறேன்” என்றாள்.

“ஏன் எனக்கு லவ் வரக்கூடாதா?” எனக் கேட்டான்.

சில நாட்களுக்கு முன் நோயாளிக்காக மருந்து எடுத்த போது கடுமையாக நடந்து கொண்டது, அவள் தன்னுடன் ஒரே பேட்டரி காரில் வரக்கூடாது என நினைத்தது அவளை பார்க்கும் போதெல்லாம் எரிச்சலான முக பாவத்தை காட்டியது அனைத்தையும் வரிசை படுத்தினாள் கீர்த்தி.

“எதையும் இல்லைனு சொல்லலையே… அப்ப பிடிக்கல, அப்புறம் பிடிச்சிடுச்சு” என்றான்.

இருக்குமோ என அரசி மகனை நம்பி விட, கீர்த்திக்குத்தான் தம்பி மீது சந்தேகமாகவே இருந்தது. கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைந்து கொண்டிருந்தாள்.

கோப்புகளில் கையெழுத்து பெற தமன் வரவும் அவனை பிடித்துக்கொண்டாள் கீர்த்தி. அவன் வாய் திறக்காமல் பிரவாவின் முகத்தை பார்க்க, ‘சொல்’ என்பது போல கண்களால் அனுமதி தந்தான்.

“ஆமாம் மேடம், நிஜமா லவ்தான் பண்றார் சார். அவருக்கே அது லவ்னு தெரியலை. நேத்து மலர் மேடம் மயங்கி விழுந்திட்டாங்க, அப்ப சார் எப்படி துடிச்சி போயிட்டார் தெரியுமா? அப்பதான் லவ்னு உணர்ந்தார்” ஏற்கனவே என்ன கேட்டால் எப்படி பேச வேண்டும் என பிரவாகன் சொல்லிக் கொடுத்திருந்ததை அட்சரம் பிசகாமல் சொன்னான் தமன்.

கீர்த்திக்கு சந்தேகம் தீரவில்லை. பிரவாகன் கண் பார்வை படாத படி தமனை தோட்டத்திற்கு அழைத்து சென்றாள். பிரவாகன் அலட்சிய சிரிப்போடு அங்கேயே அமர்ந்திருந்தான்.

தமனிடம் குறுக்கு விசாரணை நடத்தி முடித்திருந்தவள் கோவமாக தம்பியிடம் வந்து நின்றாள்.

 அவன் புருவம் உயர்த்தி சிரிக்க, “லவ்னு பொய் சொல்ற நீ. அந்த பொண்ணு உன்னை மூடன் டக்குன்னு ஏதோ கோவத்துல பேசியிருக்கு. உன்கிட்ட திமிரா நடக்கிறதா ஃபீல் உனக்கு. ஃப்ரீ பிளாக்ல நடக்கிற கோளாறை எல்லாம் புட்டு புட்டு வைக்கிறான்னு அவளை எதுவும் செய்ய முடியாம கல்யாணம் செய்ய பார்க்கிற” என்றாள்.

இதென்ன சொல்கிறாள் என அரசி குழப்பமாக பார்க்க, பெரும் குரலெடுத்து சிரித்தான் பிரவாகன்.

“அம்மா, இவன் அந்த மலர் பொண்ணை டார்ச்சர் செய்ய நினைச்சு மேரேஜ் பண்ணிக்க பார்க்கிறான்” என்றாள்.

அரசி மகனை பார்க்க, “அக்கா பேசுறதுல ஏதாவது லாஜிக் இருக்கா. மலரை டார்ச்சர் பண்ண கல்யாணம்தான் பண்ணிக்கணுமா நான்?அந்த காரணத்துக்காக கல்யாணம்னா எனக்கும் சேர்த்து பனிஷ்மென்ட் கொடுத்துக்கிற மாதிரி இல்லையாம்மா?” எனக் கேட்டான்.

இப்போது அரசி மகளை பார்க்க, “ஐயோ அம்மா… என்ன காரணமோ… ஆனா கண்டிப்பா லவ் இல்லை. இவனை நல்லா விசாரி. மலருக்கு ஏதாவது தீங்கு செய்யணும்னு நினைச்சான்னா தம்பின்னு கூட பார்க்க மாட்டேன்” என்றாள்.

“ரெண்டு பேரும் இப்படி பேசுறதை நிறுத்துங்க” என அதட்டலிட்ட அரசி, “நிஜமா லவ் பண்றியா மலரை?” என அவனது கண்களை உற்றுப் பார்த்துக் கொண்டே கேட்டார்.

“அவளை கல்யாணம் பண்ணிகிட்டு சந்தோஷமா வாழணும்னு ஆசை படுறேன் மா. நம்பும்மா” என்றான்.

“நிஜமாதானே?” மகிழ்ச்சியோடு கேட்டார் அரசி.

ஆம் என தலையாட்டிய பிரவாகன் அவனது சட்டையின் மேலிரு பட்டன்களை விடுவித்து வலது பக்க சட்டையினை இறக்கி விட்டு தோள் பட்டை நன்றாக தெரியுமாறு காட்டினான்.

மகனை நெருங்கி வந்த அரசி விழிகளை விரித்துக் கொண்டு பார்க்க, கீர்த்தியோ குழப்பமும் வியப்புமாக தம்பியை பார்த்திருந்தாள்.

அவனது தோள் பட்டையில் அன்புமலரின் அழகிய முகம் டாட்டூவாக வரையப் பட்டிருந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement