Advertisement

பேரன்பு பிரவாகம் -8

அத்தியாயம் -8(1)

தன்னை விரும்புவதாகவும் திருமணம் செய்து கொள்ள ஆசை படுவதாகவும் பிரவாகன் கூறி சென்ற அதிர்ச்சி மெல்ல விலக தமனை கோவமாக பார்த்தாள் மலர்.

“சொல்லுங்க மேடம், என்ன செய்யணும்? உங்க ஆர்டரை அப்படியே செய்யணும்னு சார் எனக்கு ஆர்டர் போட்ருக்கார்” என்றார் தமன்.

“உங்க எம் டியோட பிளான் என்ன? உங்களுக்கு தெரியாம இருக்க வாய்ப்பில்லை” என்றாள் மலர்.

“பிளானா? அவரை தப்பா நினைக்கிறீங்க நீங்க, சார் நிஜமா உங்களை லவ் பண்றார்…”

“ஷட் அப் அண்ட் கெட் அவுட்!” என இரைந்தாள் மலர்.

தமன் ஓரமாக சென்று அமர்ந்து கொள்ள பத்மநாதன் உள்ளே வந்தார். அவரிடம் தான் நலமாக இருப்பதாக சொன்னவள் உடனே வீட்டுக்கு செல்ல விரும்புவதாக கூறினாள். அவளுக்கு இப்போதைய தேவை ஓய்வுதான் என கருதியவரும் சலைன் நிறுத்த சொல்லி விட்டு அவள் புறப்பட தயார் படுத்த சொன்னார்.

ஓய்வறை சென்று வந்த மலர் கேப் புக் செய்ய போக, “மேடம், சாரோட கார் உங்களுக்காக வெயிட்டிங்” என்றான் தமன்.

இன்னும் பிரவாகன் மலரை ப்ரொபோஸ் செய்தது பத்மநாதனுக்கு தெரியாதே. அவரும் குழப்பமாக மலரை பார்த்தாள்.

“உங்க ஃப்ரெண்ட் சன்தானே சார் எம் டி. அவர்கிட்ட சொல்லி வைங்க… என்கிட்ட விளையாட நினைச்சா கண்டிப்பா பெருசா ஏதாவது செய்திடுவேன். ஹராஸ் பண்றார்னு கம்ப்ளைண்ட் பண்ணுவேன், சோசியல் மீடியால அவர் செய்ற அநியாயத்தை எல்லாம் வீடியோ எடுத்து போட்டு விடுவேன். சீப்பா நடக்க வேணாம்னு சொல்லுங்க” என்றாள்.

“என்னம்மா நீ திடீர்னு ஏதேதோ சொல்ற? பிரவா என்ன பண்ணினான்?” என பத்மநாதன் கேட்க, “சார் உங்ககிட்ட பேசணுமாம்” என்ற தமன் அவனது கைபேசியை அவரிடம் கொடுத்தான்.

கைபேசி இணைப்பில் இருந்த பிரவாகன், “மலர் கோவமா இருக்கா, அதைவிட அதிகமா டயர்டா இருக்கா. பேசி டைம் வேஸ்ட் பண்ணாம சீக்கிரம் வீட்டுக்கு அனுப்பி வைங்க அங்கிள்” என்றான்.

‘இரண்டு மணி நேரத்திற்குள் உனக்குள் நடந்த மாற்றம் என்னடா?’ என மனதில் தோன்றிய கேள்வியை நேரடியாக அவனிடம் கேட்க இயலாமல், “எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு, புரியுற மாதிரி பேசு பிரவா” என்றார்.

சன்னமாக சிரித்தவன், “மலரை என் மிஸஸ் ஆக சொன்னேன். ஷாக் ஆகிட்டா. அவ்ளோதான் அங்கிள்” என்றான்.

“பிரவா!” என பத்மநாதனும் அதிர்ச்சி அடைய, “மலரை கிளம்ப சொல்லுங்க” என சொல்லி வைத்து விட்டான்.

மலர் கேப் புக் செய்து விட்டு காத்திருக்க, மருத்துவமனை உள்ளே நுழைய விட மறுக்கின்றனர், வாயிலில் கூட காரை நிறுத்த விட மாட்டேன் என்கிறார்கள், திரும்ப செல்கிறேன், சாலையின் முகப்புக்கு நடந்து வாருங்கள் என்றான் கேப் டிரைவர்.

மலர் கோவமாக தமனை பார்க்க, “கேம்பஸ் வெளில கூட சார் சொன்னது மட்டும்தான் மேடம் நடக்கும். கேம்பஸ் உள்ள கேட்கணுமா? ப்ளீஸ் வாங்க…” என பணிவாக சொன்னான் தமன்.

இயலாமையிலும் கோவத்திலும் கண்கள் கலங்க மூக்கு விடைக்க பத்மநாதனை பார்த்தாள்.

“என்ன நடக்குதுன்னு சத்தியமா எனக்கு தெரியலை மலர். இந்த நிலைல உன்னால சண்டை போட்டுட்டு இருக்க முடியுமா? இப்போதைக்கு பிடிவாதம் செய்யாம அவன் கார்லேயே வீட்டுக்கு போ, மெதுவா பேசலாம்” என்றார்.

“கேப் உள்ள வரலைனா என்ன சார்? எனக்கு கால் இருக்கு” என ரோஷமாக சொன்னவள் லேப்டாப் பையை முதுகில் மாட்டிக் கொண்டு விறு விறுவென வெளியேறினாள்.

காஷுவாலிட்டியிலிருந்து நுழைவு வாயில் அத்தனை தூரமில்லை. சக்தி திரட்டி அங்கு வந்து விட்டவளுக்கு சாலை முகப்பு வரை நடக்க முடியும் என தோன்றவில்லை. ஆட்டோ ஏதவாது பிடிக்க முடியுமா என இவள் பார்த்துக் கொண்டிருக்க அவளருகில் வந்து நின்றது பிரவாகனின் கார்.

எரிச்சலடைந்தவள் ஓரடி தள்ளி நிற்க, பின் இருக்கையில் அமர்ந்திருந்தவன் கண்ணாடியை இறக்கி விட்டு, “கமான் மலர், என்ன செஞ்சிடுவேன்னு அவ்ளோ பயம் உனக்கு?” என்றான்.

மலருக்கு தலை வலி எடுத்திருந்தது. காய்ச்சல் வருவதற்கு முன் என்னென்ன செய்யுமோ அத்தனையும் இருந்தது. அவனுக்கு பதில் சொல்லாமல் சாலையில் காலியாக சென்று கொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தியவள் நிம்மதி கொண்டவளாக அதில் ஏறப் போக அவளது கையை பற்றியிருந்தான் பிரவாகன்.

எப்போது காரை விட்டு இறங்கினான் என இவளுக்கு தெரியவில்லை. “இந்த பிரவாகனோட வைஃப் ஆக போற… இப்படி ஆட்டோலலாம் போய்கிட்டு… வா…” என்றவன் அவளை காரில் ஏற்றியிருந்தான்.

நல்ல நிலையில் இருந்திருந்தால் கத்தி கூச்சல் போட்டு ஏதாவது செய்திருப்பாள். சோர்வும் உடல் சுக கேடும் சேர்ந்து கொண்டு அவனோடு போராட முடியாமல் செய்து விட்டது.

மலரின் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தது கார்.

“ஏன் இப்படிலாம் செய்றீங்க?” எனக் கேட்டாள் மலர்.

“ஒண்ணுமில்லதாவனே லவ் பண்ற பொண்ணுக்காக என்னென்னவோ செய்றான், பிரவாகன் இது கூட செய்யலைனா எப்படி மலர்?”

“தயவுசெஞ்சு இன்னொரு முறை லவ்னு சொல்லாதீங்க. ஒரே பேட்டரி கார்ல உங்க கூட வர்றத கூட ஏத்துக்க முடியாத ஆளு நீங்க. காலைல கூட உங்க ஆட்டிடியூட் வேற மாதிரி இருந்தது. இப்ப எதுக்காக இந்த காதல் நாடகம்?”

“நாடகமா? அன்னிக்கு உன்னை பேட்டரி கார்ல ஏத்தாம போனது இன்னிக்கு இப்படி பிராப்லம் ஆகும்னு தெரியலை மலர். மனுஷ மனம் மாறிட்டேதானே இருக்கும்? காலைல நீ மயங்கி விழுந்ததும் என் ஹார்ட் நின்னு போன மாதிரி…”

“ஸ்டாப் த புல் ஷிட்!” அடிக்குரலில் சீறியவளுக்கு அதற்கு மேல் பேச தெம்பில்லாமல் போனது. எப்போது வீடு சென்று எப்போது படுக்கையில் விழுந்து கண்களை மூடுவோம் என இருந்தது.

டிரைவரின் பார்வை அவனுக்கு முன்னிருந்த கண்ணாடியை தொட்டு மீண்டது. சில வருடங்களாக பிரவாகனிடம் டிரைவராக இருப்பவனுக்கு பிரவாகனின் பேச்சும் மலரின் பேச்சும் அதிசயமாக இருந்தது. முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் சீராக கார் செலுத்த கூட கொஞ்சம் சிரமம் இருந்தது.

இறுகி கடினமாகியிருந்த பிரவாகனின் முகம் நொடியில் சாதாரணமானது.

“புல் ஷிட் புனிதமானது மலர்” என கொஞ்சம் நக்கலாக சொன்னான்.

இனி நீ மட்டும் பேசிக் கொள் எனும் விதமாக கண்களை மூடி சாய்ந்து அமர்ந்திருந்தாள் மலர். அவளின் நிலை புரிந்தது போல எதுவும் பேசாமல் மேலும் அவளை தொந்தரவு செய்யாமல் அமைதியாக இருந்தான் பிரவாகன்.

மலரின் வீடு வரவும், “இறங்கி நடந்து போக முடியுமா? இல்லை தூக்கிட்டு போய் விடவா?” எனக் கேட்டான்.

காரின் கதவை திறந்து கொண்டு அவனை திரும்பியும் பாராமல் வீட்டுக்குள் ஓடி சென்று விட்டாள் மலர்.

முதலாளியின் அடுத்த கட்டளைக்காக டிரைவர் காத்திருக்க, “டிரைவ் பண்ணும் போது கவனம் ரோட்ல இருக்கணும் மிஸ்டர் குமார்” என்றான்.

பயந்து போன டிரைவர் அவன் கண்களை காண முடியாமல் தலை குனிய, “கல்யாணம் ஆகிடுச்சுதானே உனக்கு?” எனக் கேட்டான்.

ஆம் என அவன் தலையசைக்க, “லவ் மேரேஜ்தானே?” என விசாரித்தான்.

அதற்கும் அவன் ஆம் என்க, “எப்படிடா?” எனக் கேட்டான்.

“பொண்ணுங்களுக்கு அழகு அந்தஸ்து இதெல்லாம் விட அக்கறையா நடந்துகிட்டா ரொம்ப பிடிக்கும் சார், அத விட உனக்காக எத வேணும்னாலும் செய்வேன்னு காட்டணும்” என்றான் குமார்.

பிரவாகன் ஏதோ யோசனையாகிப் போக, “எது வேணும்னாலும்னா உங்களால முடிஞ்சத இல்லைங்க சார், நீங்க இதெல்லாம் பண்ணுவீங்களான்னு நினைச்சு கூட பார்க்க முடியாத அளவுக்கு ஏதாவதுங்க சார்” என்றான் குமார்.

ஒரு பக்கம் வளைந்து நெளிந்த சிரிப்புடன் கைபேசி எடுத்து சில நிமிடங்கள் ஆராய்ந்தவன் அடுத்து எங்கு செல்ல வேண்டும் என கூற குழப்பமாக பார்த்தாலும் வேறு கேட்க இயலாமல் முதலாளி சொன்ன இடத்திற்கு காரை விட்டான் குமார்.

வீடு வந்ததுமே அப்படியென்ன இரவு பகலாக உனக்கு டியூட்டி என மகளை பிடித்துக்கொண்டார் விமலா.

“ம்மா எனக்கு என்னவோ செய்யுது, ப்ளீஸ் சாப்பிட ஏதாவது கரைச்சு கொடு” என சோர்ந்த குரலில் மலர் சொல்ல பயந்து விட்டார் விமலா. அவளது உடல் லேசாக சுடுவதை உணர்ந்து வேறு கேள்விகள் கேட்காமல் ரசம் சாதத்தை குழைய பிசைந்து ஸ்பூன் கொண்டு ஊட்டி விட்டார்.

பாதி கிண்ண சாப்பாட்டை முடித்தவள் போதும் என கூறி விட்டு காய்ச்சல் மாத்திரை ஒன்றையும் போட்டுக் கொண்டு உறங்க சென்று விட்டாள்.

இரவு கண் விழித்தவளுக்கு காய்ச்சல் இல்லை என்றாலும் அத்தனை சோர்வாக இருந்தது. விமலா வற்புறுத்தி இரண்டு இட்லிகள் சாப்பிட வைத்தார். பரத் வந்து அக்காவுக்கு தலை பிடித்து விட அப்பாவிடம் கைபேசியில் பேசிக் கொண்டிருந்த அகிலாவும் தங்கை கஷ்ட படுகிறாள், திருமணம் செய்து வைத்து மேலே படிக்க வைக்கலாமே என சொல்லிக் கொண்டிருந்தாள்.

ஆமாம், ஜாதகம் பார்த்து வந்திருந்த விமலாதான் பெரிய மகளிடம், “கல்யாண நேரம் இருக்கு, இப்ப எப்படியும் கல்யாணம் நடந்திடும்னு ஜோசியர் சொன்னார். நாம டிலே பண்ணிட்டே இருந்தா வந்த நல்ல சம்பந்தம் தவறிப் போய்டும். அப்பாகிட்ட நீ பேசு” என சொல்லியிருந்தார்.

மகளின் உடல்நிலை சரியானதும் திருமணம் பற்றி இன்னொரு முறை அவளிடம் அபிப்ராயம் கேட்கலாம் என நினைத்தார் செல்வம்.

நடு இரவில் மீண்டும் மலருக்கு காய்ச்சல். ஒரு வாரம் விடுப்பு எடுக்க சொல்லி விட்டார் விமலா. மலருக்குமே இப்போதைக்கு ஒரு பிரேக் தேவைப்பட விடுப்பு சொல்லி விட்டாள்.

அன்று காலையில் மருத்துவமனை வந்த பின்னர்தான் மலர் விடுப்பு எடுத்திருக்கிறாள் என்ற விஷயம் பிரவாகனுக்கு தெரிய வந்தது. தமனிடம் என்னவென விசாரிக்க சொன்னான். மலருக்கு காய்ச்சல் என விவரம் சொன்னான்.

“நிஜமாவேவா தமன்?” என சந்தேகமாக கேட்டான்.

“அரை மணி நேரத்துல வெரிஃபை பண்ணிட்டு சொல்றேன் சார்” என்றவன் தள்ளி சென்று விட்டான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement