Advertisement

அத்தியாயம் -7(2)

இரவுப் பணி முடித்து விட்டு வீடு செல்ல புறப்பட்டாள் அன்புமலர். அவளது கைபேசிக்கு அழைத்த பத்மநாதன், ஜே சி ஐ க்காக தமிழில் வகுப்பு எடுக்க பட வேண்டியதை நினைவு கூர்ந்தார்.

“பத்து நாள் முன்னதான் கிளாஸ் எடுத்தேனே சார், அதுல நீங்க சொன்ன சில கரெக்ஷன்ஸ் கரெக்ட் பண்ணிட்டேன். அடுத்த கிளாஸ் எப்போன்னு சொன்னா பிரிப்பேர்டா இருந்துக்கிறேன் சார்” என்றாள்.

“இன்னிக்கு பத்து மணிக்கு ஆடிட்டோரியம் ஹால்ல கிளாஸ் அரேஞ் பண்ணியிருக்கு ம்மா, பிரவாவும் வர்றான்” என்றார்.

தனக்கு இரவுப் பணி என்பதை சொன்னவள் அடுத்த வாரம் வைத்துக்கொள்ளுங்கள் என கேட்டுக் கொண்டாள். மலருக்கு இரவு பணி என்பது அவருக்கு தெரியாது.

“அடடா முன்னாடியே தெரியாம போய்டுச்சு மா. பிரவா இன்னிக்கு பார்க்கணும்னு சொன்னதால கேட்டேன், நான் பேசிக்கிறேன். நீ ரெஸ்ட் எடும்மா” என சொல்லி விட்டார்.

பிரவாகன் பெயரை கேட்டதும் சோர்வாக இருக்கையில் அமர்ந்து விட்டாள். அவளது கணிப்பை பொய் ஆக்காமல் பத்து நிமிடங்களில் மீண்டும் அழைத்த பத்மநாதன் தயங்கிய குரலில், “இன்னிக்கு கிளாஸ் நடந்தே ஆகணும்னு சொல்லிட்டான் மா. என்னால பேச முடியலை, சாரி மலர்” என்றார்.

“இட்ஸ் ஓகே சார், என் லேப்டாப் வீட்ல இருக்கு. வீட்டுக்கு போயிட்டு ரெஃப்ரெஷ் ஆகிட்டு ஷார்ப் டென் க்கு வந்திடுறேன். ஒரு மணி நேர கிளாஸ்தானே…” என மலர் சொல்ல, “அவன்கிட்ட கொஞ்சம் பார்த்து பேசும்மா. சின்ன வயசிலேருந்து அவனை தெரியும் எனக்கு. நாம நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு ஈகோ உள்ளவன்” என எச்சரிக்கை செய்தார்.

“பத்து மணிக்கு வந்திடுறேன் சார்” என சொல்லி அழைப்பை துண்டித்து விட்டாள்.

மலர் வீடு செல்லும் போது செல்வம் கால்நடை மருத்துவமனைக்கும் பரத் கோச்சிங் சென்டருக்கும் சென்றிருக்க விமலா மட்டும்தான் இருந்தார்.

எங்கேயோ கிளம்பி தயாராக இருந்த விமலா மகளிடம் உணவு தயாராக இருப்பதாக சொல்லி, “வீட்ட லாக் பண்ணிட்டு தூங்கு, நான் வந்து திறந்துக்கிறேன்” என்றார்.

எங்கே செல்கிறார் என கேட்க கூட மலருக்கு தோன்றவில்லை. மீண்டும் மருத்துவமனை செல்கிறேன் என்றால் புலம்பி திட்டி வேலையை விட்டு விடு என சொல்லவும் வாய்ப்பிருக்கிறது என்பதால் எதுவும் சொல்லாமல் அறைக்குள் சென்று விட்டாள்.

வேகமாக குளித்து முடித்து சாப்பிட்டவளுக்கு உறக்கம் கண்களை சுழற்றியது. அவசரமாக லேப்டாப்பில் ஏதோ வேலை செய்தாள். தனது வாகனத்தில் செல்வது சரியாக இருக்காது என்பதால் கேப் புக் செய்து கொண்டு மருத்துவமனை புறப்பட்டாள்.

பத்து ஐந்திற்கு ஆடிட்டோரியம் வந்த போது வகுப்புக்காக வந்திருந்த மருத்துவ பணியாளர்கள் அமைதியாக காத்திருந்தனர்.

முதல் வரிசையில் அமர்ந்திருந்த பத்மநாதன், “லேட் ஆகிடுச்சு வாம்மா” என சொல்லிக் கொண்டே அவளது கையிலிருந்த லேப்டாப் வாங்கி ப்ரொஜக்டரில் இணைக்கும் படி அவரது குழுவில் இருந்த வேறொருவரிடம் கொடுத்தார்.

சோர்வாக தெரிந்த மலரை பார்த்து எக்களிப்பாக சிரித்தான் பிரவாகன். பதிலுக்கு நக்கலான புன்னகையை உதிர்த்தவள் மேடையேறி டயஸ் சென்று நின்றாள்.

கழிவுகள் மேலாண்மை மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு இரண்டையும் பற்றிய வகுப்பு. சொல்ல வேண்டியவை பற்றி தெளிவாக புரியும் விதத்தில் விளக்கியவள், “இப்ப சில போட்டோஸ் வரும், பார்த்திட்டு என்ன நினைக்குறீங்கன்னு சொல்லுங்க” என்றாள்.

 ஸ்லைடு ஷோ மூலமாக அடுத்தடுத்த புகைப்படங்கள் வரிசையாக வந்தன.

எல்லாம் இலவச பிரிவு வார்டுகளின் போட்டோக்கள். பத்மநாதனின் முகத்தை கோவமாக பார்த்தான் பிரவாகன். முன்னர் அவள் எடுத்த வகுப்பில் இது போல எதுவுமில்லை. அவருக்கே இது புதிது என இருக்க, என்ன செய்வது என சங்கடமாக பார்த்தார்.

உங்களிடம் பின்னர் பேசிக் கொள்கிறேன் என்பது போல பார்த்தவன் திரையில் கவனத்தை வைத்தான்.

வலிப்பு வரும் நோயாளிகள் மற்றும் வயது முதிர்ந்த நோயாளிகள் இருந்த படுக்கைகளில் பாதுகாப்பான பக்கவாட்டு தடுப்பு இல்லாமல் இருந்தது.

 சலைன் செலுத்த ஸ்டாண்ட் இல்லாமல் ட்ரெஸிங் செய்ய பயன்படும் காஸ் துணி மூலம் கட்டி தொங்க விட பட்டிருந்தது.

 வார்டுகளில் இருக்கும் மருந்து கப்போர்டுகளில் பெரும்பான்மையான ட்ரேக்கள் காலியாக இருந்தன.

கழிவறைகளின் நிலை மோசமாக இருந்தது. கழிவு மேலாண்மை சரியான முறையில் பின்பற்ற படாமல் இருந்தது. இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். இலவச பிரிவின் நிலையை அந்த படங்கள் பேசின.

எதை தான் வந்து பார்க்க மாட்டேன் என பிரவாகன் அடமாக இருந்தானோ அந்த இலவச பிரிவின் நிலையை அவனது சம்மதமின்றியே அவனுக்கு காட்டிக் கொண்டிருந்தாள் மலர்.

அரசி மேடத்திடம் காட்ட வேண்டும் என தயார் செய்ததை புத்தி சாலித்தனமாக இன்றைய வகுப்பில் புகுத்தி விட்டாள். பிரவாகன் பார்ப்பதால் பலன் இருக்குமா என அவளுக்கு தெரியாது, ஆனால் அவளால் ஆன முயற்சி.

இது தவறானது, சுகாதார சீர்கேடு, ஆபத்தானது என வகுப்பில் பங்கேற்றவர்கள் கருத்து கூறினார்கள். பின் எவ்வாறு பின்பற்ற பட வேண்டும் என்பதை விளக்கி வகுப்பை நிறைவு செய்தவள் சந்தேகங்கள் இருந்தால் கேட்கும் படி கூறினாள். சிலர் கேள்விகள் கேட்டு தெளிந்தனர்.

“வெரி எஃபக்டிவ் கிளாஸ்” தன்னை மறந்து வாய்விட்டு சொன்னார் பத்மநாதன்.

அனைவரும் கலைந்து செல்ல லேப்டாப்பை அணைத்து கையில் எடுத்துக் கொண்டு கீழே வந்தாள் மலர்.

பிரவாகன் என்ன சொல்வானோ என பத்மநாதன் பார்த்திருக்க, “எக்ஸலண்ட் டாக்டர் அன்புமலர்!” என சிரித்த முகமாக சொன்னான்.

“தேங்க்ஸ்!” என பெயருக்காக சொன்னாள் மலர்.

வேறு ஏதேனும் அசம்பாவிதமாக இவன் யோசிப்பதற்குள் மலரை அனுப்பி விட வேண்டும் என நினைத்த பத்மநாதன் வாயை திறப்பதற்குள், “இன்னொரு பேட்ச் க்கும் எடுக்கட்டும் அந்த எக்ஸலண்ட் கிளாஸை” என்றான் பிரவாகன்.

மலரும் பத்மநாதனும் அதிர்வாக பார்க்க, “இன்ஃபார்ம் பண்ணுங்க அங்கிள்” என்றான் பிரவாகன்.

மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் வகுப்பு எடுக்க முடியாதே. பகுதி பகுதியாக பிரித்து வகுப்பு எடுத்தால்தான் வார்டுகளில் பணி தடை படாமல் நடக்கும். இன்னொரு பகுதிக்கு வேறொரு நாள் எடுத்து கொள்ள சொல்லலாம் எனதான் பத்மநாதன் நினைத்திருந்தார்.

“மலர் நைட் ஷிஃப்ட் முடிச்சிட்டு வந்திருக்காங்க. நீ செய்றது சரியில்லை பிரவா” என துணிவோடு சொன்னார் பத்மநாதன்.

“நான் செய்றது எல்லாமே சரியாத்தான் இருக்கும் அங்கிள். கிளாஸ் அரேஞ் பண்ண லேட் செய்ய செய்ய… பாவம் டாக்டர் அன்புமலருக்குத்தான் வீட்டுக்கு போக டிலே ஆகும்” என்றான்.

புன்னகைத்த மலர், “நான் ரெடி சார், எம் டி சார் இன்னொரு முறை ஃப்ரீ பிளாக் கண்டிஷனை பார்த்த மாதிரி இருக்கும்” என்றாள்.

“பாருங்க அங்கிள், டாக்டருக்கே பிராப்லம் இல்லை” என பிரவாகன் சொல்ல, மலரை பாவமாக பார்த்தார் பத்மநாதன்.

அடுத்த அரை மணி நேரத்தில் அடுத்த வகுப்பு நடந்தது. முடியும் தருவாயில் மலருக்கு கண்களை இருட்டுவது போலிருந்தது. சமாளித்து எப்படியோ வகுப்பை நிறைவு செய்து விட்டாள். கூட்டம் கலைய மேடையிலிருந்து இறங்கிய மலர் மயக்கமடைந்து படிகளில் உருண்டாள்.

பிரவாகனே இதனை எதிர்பார்த்திருக்கவில்லை.

 காஷுவாலிடியில் இருந்தாள் மலர். அவளுக்கு சலைன் ஏறிக் கொண்டிருந்தது. மயக்கம் உறக்கமாக மாறி விட்டது. இரண்டு மணி நேரம் கடந்துதான் மெல்ல கண் விழித்தாள்.

அருகில் அமர்ந்திருந்த பத்மநாதன், “ஆர் யூ ஓகே மலர்?” எனக் கேட்டார்.

ஆம் என அவள் தலையசைக்க அவளது கைபேசி அலறியது. செவிலியர் எடுத்துக் கொடுத்தார். விமலாதான் அழைத்தார்.

இவள் ஏற்றுப் பேச, “தூங்காம எங்க போயிட்ட மலர்? உன் ஸ்கூட்டர் கூட வீட்ல இருக்கு, ரெஸ்ட் எடுக்காம எதையாவது இழுத்து விட்டுக்க போற” என்றார்.

“ஹாஸ்பிடல்ல ஒரு எமர்ஜென்ஸிம்மா. உன் போன் நாட் ரீச்சபிள், அப்பாகிட்ட இன்ஃபார்ம் பண்ணிட்டுதான் வந்தேன். கொஞ்ச நேரத்துல நானே கூப்பிடுறேன்” என்றவள் அழைப்பை துண்டித்து விட்டாள்.

அவளை காண்பதற்காக வந்தான் பிரவாகன். அவன் மேல் அதிருப்தியில் இருந்த பத்மநாதன் கோவமாக எழுந்து வெளியில் சென்று விட்டார்.

அவளருகில் வந்து நின்ற பிரவாகன், “இப்போ எப்படி இருக்கு?” எனக் கேட்டான்.

மலர் முகத்தை திருப்பிக் கொள்ள, அருகில் நின்றிருந்த தமனை அர்த்தமாக பார்த்தான்.

“சார் ஏதோ பெர்சனலா பேசணுமாம்” என சொல்லி அங்கிருந்தவர்களை தள்ளி போக செய்த தமன் அவனும் தள்ளி நின்று கொண்டான்.

தாடையை தடவிக் கொண்டு அவளை பார்த்துக் கொண்டிருந்தான். அவள் திரும்புவதாக இல்லை.

ஏளனமாக புன்னகைத்தவன் உடனே முகத்தை தீவிரமாக மாற்றிக் கொண்டு, “யோசிச்சு பார்த்தேன், உன் இன்டென்ஷன் தப்பு இல்லை. நாளுக்கு நாள் உன் கேரெக்டர் என்னை அட்ராக்ட் பண்ணிட்டே இருக்கு. நான் உன்கிட்ட சரண்டர்” என்றான்.

 ‘என்ன சொல்கிறான் இவன்?’ என திடுக்கிட்டு போய் அவசரமாக அவன் பக்கமாக திரும்பினாள் மலர்.

“ஐ லவ் யூ அண்ட் ஐ வான்ன மேரி யூ” முகத்தில் பெரிதான பாவனைகள் இல்லாமல் பி ஏ வுக்கு கடிதம் டிக்டேட் செய்வது போல கூறினான்.

இவன் பேசுவது நிஜத்தில்தானே என எண்ணி குழப்பமாக பார்த்தாள்.

 மீண்டும் ஒரு முறை அதையே சொன்னான்.

 பட்டென எழுந்தமர்ந்த மலர், “ஆர் யூ ஜோக்கிங்? அடுத்து என்ன திட்டம் ஓடுது உங்க மனசுல?” எனக் கேட்டாள்.

“மயக்கம் ஆனதுல குழம்பி போயிருக்க போல, இந்த ட்ரிப்ஸ் முடிஞ்சதும் உன் வீட்ல விட சொல்லியிருக்கேன். நல்லா ரெஸ்ட் எடுத்திட்டு நாளைக்கு வா, நம்ம ஃப்யூச்சர் பத்தி நாம ரிலாக்ஸா பேசலாம்” என்றவன், “தமன்…” என அழைத்தான்.

ஓடி வந்து அருகில் நின்ற தமன், “சார்…” என்க, “டேக் கேர் ஆஃப் ஹெர்” என கட்டளையிட்டு விட்டு, மலரை பார்த்து அக்கறையாக சிரித்து விட்டு அங்கிருந்து வெளியேறினான்.

மலருக்கு மீண்டும் மயக்கம் வருவது போலிருந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement