Advertisement

பேரன்பு பிரவாகம் – 7

அத்தியாயம் -7(1)

விஷ்ணுவை பற்றி நன்றாக விசாரித்து விட்டான் பிரவாகன். அவனுக்கு முழு திருப்தி. ஜாதக பொருத்தமும் சிறப்பாக இருப்பதாக ஜோதிடர் சொல்ல மிருணாளிணிக்கு விஷ்ணுவின் புகைப்படத்தை அனுப்பி வைத்து அவனை பற்றிய விவரங்களையும் சொன்னார் அரசி.

இந்த இடம் முடிந்து விடும் என்ற நம்பிக்கையோடு அம்மா சொல்லியிருக்க இவனைத்தான் கல்யாணம் செய்ய போகிறோம் என்ற கண்ணோட்டத்தில்தான் விஷ்ணுவின் புகைப்படத்தை பார்த்தாள் மிருணா.

அமைதி தவழும் அவனது முகம் அவளையும் கவரத்தான் செய்தது.

“சரிம்மா ஆனா நான் பேசணும்னு சொல்லியிருக்கேன், மறந்திடாத” என்றாள் மிருணா.

“ஏற்பாடு செய்றேன். இந்த வாரமே நீ இங்க வர்ற மாதிரி இருக்கும்” என சொல்லி விட்டு அழைப்பை துண்டித்த அரசி, உடனே கோபாலுக்கு அழைத்து தன் விருப்பத்தை சொன்னார்.

எப்போது அக்காவிடமிருந்து அழைப்பு வரும் என கடந்த இரண்டு நாட்களாகவே காத்துக் கொண்டிருந்தவருக்கு ஜாக்பாட் அடித்தது போல அப்படியொரு ஆனந்தம்.

“மிருணா போட்டோ அனுப்புறேன், விஷ்ணுக்கிட்டேயும் காட்டிட்டு புள்ள விருப்பத்தையும் கேட்டு சொல்லு தம்பி”

“மாட்டேன்னா சொல்ல போறான்? அதெல்லாம் புடிச்சு போய்டும் க்கா”

“இல்லை தம்பி ஏற்கனவே…” என அரசி ஆரம்பிக்க அவரை பேசவே விடவில்லை கோபால்.

“அவங்க யாரு என்னன்னு தெரியாது, அதனால வீம்பு புடிச்சு போய் வேணாம்னான். நீங்க அப்படியாக்கா? அவன் சரின்னு சொல்லிட்டான்னு வச்சுக்கோங்க க்கா” என உறுதியாக சொன்னார் கோபால்.

“சரி தம்பி, அப்புறம்… விஷ்ணு எங்க வீட்டு மாப்பிள்ளையானப்புறம் வேற ஹாஸ்பிடல்ல பிராக்டீஸ் செய்றது நல்லா இருக்காதுன்னு சொல்றான் பிரவா. உனக்கு நேரம் இருக்கிறப்போ சொல்லு தம்பி, பிரவா பேசணும்னு சொன்னான். முடிஞ்சா விஷ்ணுவையும் கூட அழைச்சிட்டு போ. சரியா வராதுன்னா விஷ்ணு வீட்ல இருக்க நேரம் பார்த்து சொல்லு, பிரவாவே வருவான்” என்றார்.

“பிரவா தம்பிக்கு ஆயிரம் வேலை இருக்குமே, நானே போய் பார்க்கிறேன் அக்கா” என்றவர் அன்றே சந்திக்க வரலாமா எனவும் கேட்டு நேரத்தை உறுதி செய்து கொண்டு பேச்சை முடித்தார்.

அருகிலிருந்த ஹரியிடம் விஷயத்தை சொல்ல, “ஃபர்ஸ்ட் விஷ்ணுகிட்ட சொல்லுங்க, அவன் சம்மதம் சொல்லாம நீங்க என்ன போய் பார்க்க போறீங்கப்பா?” எனக் கேட்டான்.

“முதல்ல நான் போய் பார்த்து பேசிட்டு வர்றேன் டா. மனசு மாறிட்டா என்ன செய்றது? கனவுல கூட நினைச்சு பார்க்க முடியாத வாழ்க்கை உன் தம்பிக்கு கிடைக்க இருக்க வேணாம்னு சொல்வானா? இல்லை சொல்லத்தான் நான் விட்ருவேனா? அடேய்… கோடி ரூபாங்கிறதே அவங்களுக்கு தூசிக்கு சமம்டா” இன்னும் ஏதேதோ சிலாகித்தவர் உடனே வீடு சென்று விட்டார்.

தேவகியாலும் நம்பவே முடியவில்லை. கணவரை போல பேராசை பிடித்தவர் இல்லை, ஆதலால் அவ்வளவு பெரிய இடத்தில் மகனை கேட்டார்களா எனும் வியப்பு மட்டுமே அவரிடம். மற்றபடி மகனின் மனதுக்கு பிடித்தது போல அவனை நன்றாக பார்த்துக் கொள்ளும் பெண்தான் அவருக்கு வேண்டும்.

மிருணாவின் போட்டோ பார்த்ததும் தேவகிக்கும் பிடித்துப் போனது. தான் போய் பிரவாகனிடம் பேசி விட்டு வருவதாகவும் மகனை ஒத்துக் கொள்ள செய்ய வேண்டியது உன் பொறுப்புதான் எனவும் கூறி விட்டு கிளம்பி சென்றார் கோபால்.

பிரவாகனும் விஷ்ணு வரவில்லையா எனதான் கேட்டான். அவனால் உடனே வர முடியவில்லை, இரண்டு நாட்களில் அழைத்து வருவதாக சொன்னார்.

கல்லூரி நிர்வாகத்தை மிருணாளியின் கணவனிடம் கொடுத்து விடப் போகும் தன் திட்டத்தை பிரவாகன் சொல்ல, கோபாலுக்கு மயக்கம் வராத குறைதான். என் தங்கை விஷ்ணுவை நேரில் பார்த்து பேசிய பின் திருமண தேதி குறித்து விடலாம் என்றான் பிரவாகன்.

மெல்ல ஹரி பற்றி சொன்னவர், “உங்களுக்கு இன்னும் நெருங்கின உறவு ஆகப் போறோம்ல தம்பி, அப்போ விஷ்ணுவோட அண்ணனும் மதிப்பா இருந்தாதானே உங்களுக்கு கௌரவம்?” எனக் கேட்டார்.

“என்ன செய்யணும் நான்?” சுற்றி வளைக்காமல் பிரவாகனும் நேரடியாக கேட்டான்.

கோபால் தன் எண்ணத்தை சொல்ல, மோவாயில் கை வைத்து சில நொடிகள் யோசித்தவன், “சித்தப்பாகிட்ட சொல்லிடுறேன். ஃப்ரீ பிளாக்குக்கு தேவையான சர்ஜிகல் ஐட்டம்ஸ் நீங்க சப்ளை செய்ற மாதிரி செஞ்சிடலாம்” என்றான்.

வாயெல்லாம் பல்லாகிப் போக, “தர்மேந்திரன் மாமாவை இப்பவே போய் பார்க்கட்டுமா தம்பி?” எனக் கேட்டார்.

“நானே சொன்ன பிறகு அவரை பார்த்து என்ன செய்ய போறீங்க? அங்க நாம விரும்பின இடத்திலேருந்து எதையும் வாங்க முடியாது. சில ப்ரொஸீஜர்ஸ் இருக்கு. கொட்டேஷன் பார்த்து எது கம்மியா இருக்குன்னு ட்ரஸ்ட் மெம்பெர்ஸ் முடிவு பண்ணி அவங்கதான் கான்ட்ராக்ட் தருவாங்க” என பிரவாகன் சொன்னதுமே கோபாலின் முகம் சின்னதாகி விட்டது.

“ப்ச்… அது ஒண்ணும் பெரிய டீல் இல்லை. மெம்பெர்ஸ் எல்லாரும் நமக்கு வேண்டிய பட்டவங்கதான். கொட்டேஷன் வாங்குறதுலாம் சும்மா ஐ வாஷ்க்கு. என்ன அமௌன்ட் கோட் பண்ணணும்னு முன்னாடியே உங்களுக்கு தகவல் வந்திடும். அந்த கவலைய விடுங்க. கல்யாணம் முடிஞ்ச அடுத்த மாசத்திலிருந்து நீங்க சப்ளை செய்ற மாதிரி செஞ்சுக்கலாம்” என்றதும் பழையபடி கோபாலின் முகம் பிரகாசம் அடைந்தது.

“அப்புறம் நீங்க இருக்க வீட்ல வசதி பத்தாது. மிருணா வாழப் போற வீட்ல எல்லா வசதிகளும் இருக்கணும். மிருணா இங்க வரும் போது விஷ்ணுவோடு சேர்ந்து டிஸ்கஸ் பண்ணி எப்படி பட்ட வீடு வேணும்னு சொல்லட்டும்”

மேசையில் இருந்த தண்ணீரை பருகி தன்னை நிதான படுத்திக் கொண்டார் கோபால். இதற்கு மேல் பிரவாகன் எந்த ஆனந்த அதிர்ச்சி அளித்தாலும் அவரால் தாங்க முடியாது என்ற நிலை.

“அவ ஏதோ பேசணும்னு சொல்லிட்டு இருக்கா. பெருசா என்ன கேட்க போறா, அவளுக்கு படம் டைரக்ட் பண்ணனும். விஷ்ணுவை ஓகேன்னு சொல்ல சொல்லுங்க, அடுத்த வருஷத்துக்குள்ள அவ படம் பண்ணிடுவா, அதுக்கு நான் கேரண்டி” என்றான்.

“மிருணாவோட ஆசைய நிறைவேத்தி வைக்கிறதுதான் நமக்கு முக்கியம் தம்பி, நான் சொல்லிடுறேன்” என பவ்யமாக சொன்னார் கோபால்.

“குட், அப்புறம் மாமா?” பிரவாகன் உறவுமுறை சொல்லி அழைக்கவும் கோபாலுக்கு புல்லரித்து விட்டது.

‘வேறு என்ன?’ என்பது போல அவன் பார்க்க, “மிருணா வந்ததும் சின்னதா எங்கேஜ்மெண்ட் வச்சிடலாமா தம்பி?” எனக் கேட்டார்.

“ஏன் மனசு மாறிடுவோம்னு பயமா மாமா?”

“சேச்ச…” என அசடு வழிய சிரித்தார்.

“ம்ம்… அப்புறம்…” எனக் கேட்ட பிரவா கைக் கடிகாரத்தை பார்க்க, புரிந்தது போல கிளம்புகிறேன் என சொல்லி எழுந்து நின்றார் கோபால்.

இப்படியாக தங்கைக்கு திருமணம் பேசி முடித்தான் பிரவாகன்.

அன்றைய இரவில் விஷ்ணுவின் வரவிற்காக ஆவலாக காத்திருந்தார் கோபால். தானும் பேசி எப்படியாவது தம்பியை சம்மதிக்க வைத்து விட வேண்டும் என ஹரியும் அப்பாவின் வீட்டில்தான் இருந்தான்.

“நேரத்துக்கு சாப்பிட கூட செய்யாம ஏன் உட்கார்ந்திருக்கீங்க? வாங்க, அவன் வர இன்னும் நேரமிருக்கு” என்றார் தேவகி.

“வயிறெல்லாம் சந்தோஷத்துல நிறைஞ்சிருக்கு, சாப்பாடு கொள்ளுமா?” என்ற கணவரை நன்றாக முறைத்தார் தேவகி.

“வீட்டுக்கு வந்திருக்க அதிர்ஷ்டம் பத்தி இவளுக்கு சரியா புரியலை டா ஹரி” என்றார் கோபால்.

“என்ன அதிர்ஷ்டமோ, பொண்ணு பார்க்க நல்லா இருக்கா. விஷ்ணுவை நல்லா பார்த்துகிட்டா போதும்” என்றார் தேவகி.

“ம்மா… கோடிஸ்வர வீட்டு பொண்ணு. நாமதான் அந்த பொண்ணை நல்லா பார்த்துக்கணும். மெடிக்கல் காலேஜ் எம் டி ஆகப்போறான் விஷ்ணு. பங்களா கட்டி தர போறாராம் பொண்ணோட அண்ணன். அவங்க ஹாஸ்பிடல் கான்ட்ராக்ட் கிடைக்க போறதால நம்ம சர்ஜிகல் ஸ்டோர் கூட பெருசா டெவலப் ஆகிடும்” என அடுக்கினான் ஹரி.

“அந்த பொண்ணை புடிச்சிருக்கு, கல்யாணத்துக்கு சரின்னு விஷ்ணு சொன்னாதானேடா எல்லாம்?” எனக் கேட்டார் தேவகி.

“சரின்னு சொல்லாம தப்புன்னு சொல்லிடுவானா? எல்லாரும் எடுத்து சொல்வோம், கேட்கலைனா கால்ல விழுந்தாவது சமம்திக்க வைக்கணும்” என்றான் ஹரி.

“இந்த கல்யாணத்தால கிடைக்க போற லாபத்தை பத்தி இப்பவே அவன்கிட்ட ஏன் சொல்லணும்? இப்படி ஒரு வரன் வருது, எங்களுக்கு வயசாகிடுச்சு, உன் கல்யாணத்தை பார்க்கணும் அப்படின்னு நயமா பேசி சம்மதிக்க வைக்கலாம்” என்றார் கோபால்.

“அற்புதம் ப்பா, இன்னும் என்னென்ன திட்டம் வச்சிருக்கீங்க?” கோவமாக கேட்ட விஷ்ணுவின் குரலில் மற்ற மூவரும் திகைதுப் போய் பார்க்க, கோவமாக நின்றிருந்தான் விஷ்ணு.

பேச்சு மும்முரத்தில் எப்போது வந்தான் என இவர்கள் யாரும் கவனிக்கவே இல்லை. ஆனால் இவர்கள் பேசிய அனைத்தையும் கேட்டிருந்தான்.

சமாளிப்பாக, “வாடா” என அழைத்த கோபால், மனைவியை பார்த்து, “பார்த்திட்டு நிக்காம புள்ளைக்கு சாப்பாடு எடுத்து வை” என அதட்டல் போட்டார்.

அப்பாவின் எதிரில் இருந்த ஒற்றை சோபாவில் சட்டமாக அமர்ந்து கொண்ட விஷ்ணு, “கொஞ்ச நாள் முன்னாடிதானே என் கல்யாணத்தை வியாபாரம் ஆக்காதீங்கனு சொல்லி நீங்க பார்த்த இடத்தை வேணாம்னு சொன்னேன்? திரும்பவும் உங்க வேலைய ஆரம்பிச்சிட்டீங்களா ப்பா?” என கோவமாக கேட்டான்.

“டேய் டேய் பொறுமையா கேளுடா. இந்த முறை வந்திருக்க சம்பந்தம் ரொம்ப பெருசு டா. என் வாழ்க்கையும் சேர்ந்து உன் கைலதான் இருக்குடா” என்றான் ஹரி.

விஷ்ணு இறுக்கமான முகத்தோடு அமர்ந்திருக்க, ஹரி பேச்சை எடுத்து விட்ட படியால் வேறு வழியின்றி அனைத்தையும் சொன்னார் கோபால்.

வரப் போகும் வசதி வாய்ப்புகள் பற்றி சொன்னவர் இன்னார் வீட்டு பெண் என மட்டும்தான் சொன்னார். மிருணாவின் பெயர், படிப்பு, இன்றைய வேலை என எதை பற்றியும் சொல்லியிருக்கவில்லை.

“எனக்கு விருப்பமில்லைன்னு சொல்லிடுங்க” ஒரு வரியில் முடித்துக் கொண்ட விஷ்ணு அவ்வளவுதான் எனும் ரீதியில் எழுந்து கொண்டான்.

கோபாலும் ஹரியும் அவர்களால் முடிந்த மட்டும் பேசிப் பார்த்தார்கள். பெண் அழகாக இருக்கிறாள், போட்டோ பார்த்தால் உனக்கும் பிடிக்கும், கல்யாணம் செய்து கொள் என தேவகியும் சொல்லி பார்த்தார்.

அசைந்து கொடுக்காத விஷ்ணு அமைதியாக இரவு உணவை முடித்துக் கொண்டு உறங்க சென்று விட்டான்.

எடுத்த உடன் இப்படித்தான் பிடிவாதம் செய்வான், மெல்ல அவனது மனதை மாற்றி விடலாம் என எண்ணிக் கொண்ட கோபால் சாப்பிடாமலே உறங்க சென்றார்.

“என்ன செஞ்சாவது அவனை சம்மதிக்க வைம்மா” என அம்மாவிடம் சொல்லி விட்டு கவலையோடு புறப்பட்டு சென்றான் ஹரி.

உறங்க செல்வதற்கு முன் மிருணாவுக்கு ஏதோ குறு குறுப்பாக இருந்தது. கைபேசி எடுத்து விஷ்ணுவின் படத்தை பெரிது படுத்தி பார்த்தவளின் உதடுகளில் அழகிய சிரிப்பு.

Advertisement