Advertisement

அத்தியாயம் -6(3)

கணவருக்கு அழைத்து சொன்ன விமலா, “டியூட்டி டாக்டர்ன்னுதான் இப்படி ஒர்க் லோட் அதிகம் ஆகுது. மலரை பொண்ணு கேட்ட அந்த இடத்திலேர்ந்து திரும்பவும் இன்னிக்கு கேட்டாங்க, கல்யாணம் முடிச்சிட்டு பி ஜி பண்ணட்டுமே. ரெண்டு நாள் திண்டுக்கல் போயிட்டு வந்தே இளைச்சு போன மாதிரி இருக்கா” என கவலையாக சொன்னார்.

“அவதான் தெளிவா நீட் பாஸ் பண்ணி பிஜி பண்ணிக்கிறேன்னு சொல்றாளே. நாம கம்பெல் பண்ண முடியாது விமலா” என்றார் செல்வம்.

“நல்லது எதுன்னு பார்த்து நாமதான் சொல்லணும். அவளுக்கு கல்யாணம் செய்யலாமா படிக்க வைக்கலாமான்னு ஜாதகம் பார்க்க போறேன்”

“நல்லது எதுன்னு டிஸ்கஸ் பண்ணி நாமதான் முடிவு செய்யணும். மலரை பத்தி எதுவுமே தெரியாத ஜோசியர் இல்லை”

“என் திருப்திக்கு நான் ஒரு முறை பார்த்திட்டு வர்றேன்” என உறுதியாக சொல்லி வைத்து விட்டார் விமலா.

வெகு சில மருத்துவமனைகள் மட்டுமே இப்படி நெகடிவ் பிரஷர் மற்றும் பாசிட்டிவ் பிரஷர் கொண்ட வார்டுகள் வைத்திருக்கும்.

அறையின் உள்ளே இருக்கும் காற்றழுத்தம் அறைக்கு வெளியே இருக்கும் காற்றழுத்தத்தை விட குறைவாக இருந்தால் அவை எதிர்மறை அழுத்த அறைகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த அறைகளின் கதவைத் திறக்கும்போது, அறைக்குள் இருக்கும் மாசுபட்ட காற்று அல்லது பிற ஆபத்தான துகள்கள் மாசுபடாத பகுதிகளுக்கு வெளியே செல்லாது.

மோசமான தொற்றுநோய்கள் கொண்ட நோயாளிகள் நெகடிவ் பிரஷர் வார்டில் வைக்கப் பட்டு வைத்தியம் பார்க்க படுவார்கள். அதை போலவே எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவான நோயாளிகள், அவர்களுக்கு வேறு ஏதேனும் தொற்று ஏற்பட்டால் மிகவும் ஆபத்து என்கிற போது பாசிட்டிவ் பிரஷர் வார்டில் தங்க வைக்கப் படுவார்கள். இந்த வார்டுகளில் வெளியிலிருந்து எந்த தொற்றும் உள்ளே சென்று விடாது.

இரவு பத்து மணிக்கு மருத்துவமனை வந்தவள் நெகடிவ் பிரஷர் வார்டு இருக்கும் நான்காவது மாடிக்கு லிஃப்ட் மூலம் வந்தடைந்தாள். முகப்பில் இன்னொரு வார்டும் அப்படி தயார் செய்ய பட்டுக் கொண்டிருக்க அதை பார்வையிட வந்திருந்தான் பிரவாகன்.

இது போன்ற வேலைகளை அவனே சென்று பார்க்க வேண்டும் என இல்லைதான். இன்னும் மலர் வராதது தெரியும், பத்து மணி போல வருவாள் என்ற கணிப்பு இருக்க, என்னிடம் அதிகமாக பேசினால் இப்படித்தான் அலைக்கழிக்க படுவாய் என பார்வையால் மிரட்ட எண்ணி வந்திருந்தான்.

ஆயிரத்தெட்டு அதி முக்கிய வேலைகள் குவிந்து கிடக்க எம் டி இங்கு ஏன் வந்திருக்கிறார்? வேலைகளை மேற்பார்வை செய்தாகி விட்ட போதும் எதற்காக கிளம்பாமல் நிற்கிறார்? என மனதிற்குள் மட்டுமே தமனால் நினைக்க முடிந்தது.

அவனை காணாதது போல கடந்து சென்றாள் மலர். தன்னை தவிர்த்து சென்ற அவளது செய்கை அவனை சினமூட்ட அவளை சீண்டிப் பார்க்க வேண்டும் என உள்ளுக்குள் உந்துதல்.

அவள் பின்னால் ஓடி வந்த தமன், “டாக்டர்… உங்களை எம் டி சார் கூப்பிடுறார்” என்றான்.

திரும்பியவள் அப்போதுதான் அவனை கவனிப்பது போல பாவனை செய்து கொண்டே அருகில் வந்து வணக்கம் சொன்னாள். பதில் மரியாதை செய்யாதவன், தமனை தள்ளியே நிற்கும் படி கண்களால் சொல்ல நான்கடி தள்ளிப் போய் நின்று கொண்டான் தமன்.

மலரை அலட்சியமாக ஏறிட்டவன், “உங்க பாட்டனார் ஹாஸ்பிடல்ல நினைச்ச நேரத்துக்கு வந்து போக இருக்கலாம்தான்” என்றான்.

ஏன் தாமதம் என நேரடியாக கேட்டால் சாதாரணமாக விளக்கம் சொல்லலாம், குதர்க்கமாக பேசுபவனின் முகத்தை காணக் கூட அவளுக்கு பிடிக்கவில்லை. பார்வையை திருப்பிக் கொண்டவள், “மதியம் ரெண்டு மணி வரை டியூட்டில இருந்தேன், அதான் லேட்டா வர்றேன்” என்றாள்.

“ஃப்ரீ பிளாக்ல இருக்க ரூல்ஸ் இங்க செல்லுபடி ஆகாது. இங்க பங்சுவாலிட்டி ரொம்ப முக்கியம்”

“இங்க என்ன ரூல்ஸ்னு எனக்கு தெரியாது, தெரிஞ்சதைதானே நான் ஃபாலோ பண்ண முடியும்?”

“வேலை பார்க்க போற இடத்துல உள்ள எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சுக்க வேணாமா?”

“நான் உங்களை மாதிரி இல்லை சார், சுத்தி நடக்கிற எதையும் தெரிஞ்சுக்காம, எனக்கு எல்லாம் தெரியும்னு மேதாவியா இருக்க மாட்டேன். கண்டிப்பா தெரிஞ்சுக்கிறேன். ஆனா யார்கிட்ட கேட்கிறது… ஓ அதான் நீங்க இருக்கீங்களே… சொல்லுங்க சார்… நீங்க ஏன் இங்க வந்து நிக்கிறீங்க? அங்க என்ன வேலை நடந்திட்டு இருக்கு? காலைல என் டியூட்டி முடிஞ்சிடுமா, இல்லை ஒரு வாரம் கன்டினியூவா இங்கதான் இருக்கணும்னு புது ரூல் போடுவீங்களா?”

“ம்ம்ம்… அடங்க மாட்டீல்ல நீ?”

“ஓ இங்க டாக்டர்ஸா இருக்கிறவங்க உங்களுக்கு அடங்கி போகணும்ங்கிறதும் எங்க ஜாப் டீஸ்கிரிப்ஷன்ல வருமா சார்? நோட் பண்ணிக்கிறேன்” அசராமல் பதில் தந்தவள், “இங்கேயே அவ்ளோ டியூட்டி டாக்டர்ஸ், பி ஜி ஸ்டூடன்டஸ் இருக்கும் போது ஃப்ரீ பிளாக்லேர்ந்து என்னை இங்க வரவச்சு இங்க உள்ள படி நடன்னா… ஒண்ணு நான் எல்லாம் அறிஞ்ச ஞானியா இருக்கணும் இல்லைனா அதை சொல்ற நீங்க…” என்றவள் அவன் முகத்தை உற்று பார்த்தாள்.

‘சொல்லு நீ’ என திமிரோடு அவன் நின்றிருக்க, மேலும் ஏதாவது பேசி வம்பை வளர்க்க விரும்பாமல் சுதாரித்தவள், “நான் போகலாமா சார்?” எனக் கேட்டாள்.

“கண்ணுல விளக்கெண்ணெய் போட்டுட்டு தப்பு கண்டுபிடிக்கிறதுல மேடம் பலே கில்லாடி இல்லயா… அதனாலதான் உங்களுக்கு இங்க டியூட்டி. ரீசன்ட்டா ஃபங்ஷன் ஆக ஆரம்பிச்சிருக்க வார்ட். உங்க ஃபீட்பேக் சொல்லுங்க டாக்டர் அன்புமலர்” அவளது பெயரை சொல்லும் போது அழுத்தமும் நக்கலுமாக சொன்னான்.

“சூர் சார்” என்றவள் கண்களிலும் திமிர் தெரிந்தது.

அவளது முகத்தை நோட்டமிட்டவன், “அடிக்கடி மெடிக்கல் கேம்ப்ஸ், திடீர்னு நைட் ஷிஃப்ட்” என சொல்லி இளக்காரமாக சிரித்தவன், “இதோட நிக்காம இன்னும் தொடரும் போல இது. மூடன் அப்படின்னா இடியட்தானே? எந்த இடியட் இப்படி உங்களை கஷ்ட படுத்துறான்?” என எள்ளலாக கேட்டான்.

“எந்த தியரியா இருந்தாலும் அதை ப்ரூவ் பண்ணணும். எனக்கு சிரமமே வைக்காம நீங்க இடியட்னு நான் சொன்ன தியரியை நீங்களே ப்ரூவ் பண்ணினதுக்கு தேங்க்ஸ் சார்.. தேங்க்ஸ் அ லாட்!” என புன்னகை முகமாக சொன்னவள், சட்டென முகத்தை இறுக்கமாக்கி, “இன்னொன்னு சொல்லட்டுமா? டக் தெரியுமா டக்? க்வாக் க்வாக்னு கூவிக்கிட்டு போகுமே டக். இந்த க்வாக்’ க்குக்கு பயந்த ஆள் நானில்லை” என சொல்லி நிதானமாக திரும்பி இன்னும் நிதானமாக நடை போட்டாள்.

அறிவாளி ஆனால் அதிக பிரசங்கி, அசட்டு தைரியம் கொண்டவள், உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நீதி நேர்மை என பிதற்றுபவள். நோயாளிகளின் பால் அக்கறையாக கனிவாக இருக்கிறாள். யாரை பற்றி என்ன சொல்கிறோம் விளைவுகள் என்ன எனத் தெரியாமல் பேசுகிறாள். என் உயரம் பற்றிய கவலையே இல்லாமல் என்ன செய்து விடுவாய் என நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வாயாடுகிறாள்.

 எனக்கு இருபத்தி ஒன்பது வயதாகிறது, முதுகுக்கு பின் பேசுபவர்கள் ஏராளமானர்கள் உள்ளனர், இப்படி முகத்திற்கு நேரே மூடன், வாத்து எனவும் ஒருமையிலும் யாரும் பேசியதுண்டா என யோசித்தவனுக்கு இளக்கார சிரிப்பு உதயமாகியது.

பிரவாகனுக்கு இவளை போன்ற பெண் மிகவும் புதிது. அடி ஆழ் மனம் இன்னும் இன்னும் இவளிடம் வம்பு செய்யும் படி அவனை தூண்டி விட்டது. என்னிடம் அவளை அடி பணிய செய்யா விட்டால் நான் என்ன ஆண் பிள்ளை? என்ற எண்ணம் தலை தூக்கியது.

தள்ளியே நின்றிருந்த தமன் பிரவாகனின் அருகில் வந்து, “சார்…” என அழைத்தான்.

மலர் செல்லும் திசையிலேயே பார்வையை வைத்திருந்த பிரவாகன், “நமக்கு அடங்காம யாராவது இருந்தா என்ன செய்யணும் தமன்?” எனக் கேட்டான்.

“அடக்கணும் சார்” என்றான்.

“என்ன செஞ்சும் திமிராவே இருந்தா எப்படி அடக்கிறது?” என கோவமாக பிரவாகன் கேட்க, என்ன சொல்ல என விழித்தான் தமன்.

“திமிர் புடிச்சவங்க வீக்னெஸ் தெரிஞ்சா ஈஸியா அடக்கிடலாம்தானே?” என சீறினான்.

தலையை மேலும் கீழுமாக ஆட்டினான் தமன்.

“அவ கண்ணுல என்னை கண்டா தெரியுற இந்த திமிர் மறையணும். அவளை பத்தி எல்லாம் தெரியணும் எனக்கு” என கட்டளையிட்டான்.

“யாரை பத்தி சொல்றீங்க சார்?”

“பார்த்த நாள்லேர்ந்து என் மூளைக்குள்ள உட்கார்ந்துகிட்டு குடையறாளே ஒருத்தி அவளை பத்தித்தான்” என பிரவாகன் சொல்ல, ‘உங்க மூளைய குடையற ஆள எனக்கெப்படி தெரியும்?’ என மனதில் நினைத்த வண்ணம் அவனையே பார்த்த படி நின்றிருந்தான் தமன்.

“என் கூடவே இருக்க… எவன்னு தெரியலையா உனக்கு? இதோ இப்ப என்கிட்ட கண்ண உருட்டி உருட்டி பேசிட்டு போனாளே ஒருத்தி… அவளை பத்தி…” கடுஞ்சினத்தோடு சொன்னவன் விறு விறுவென நடக்க ஆரம்பித்தான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement