Advertisement

அத்தியாயம் -6(2)

கீர்த்தியை வீட்டுக்கு வரவழைத்து விஷயத்தை சொன்னார் அரசி. அவளுக்கும் திருப்தியே. பிரவாகன் வீடு வரும் வரை காத்திருந்து அவனிடம் தானே விவரத்தை சொன்னாள் கீர்த்தி.

கீர்த்திக்கு குகனை பார்த்த போது வசதி அளவில் வித்தியாசம் மிக அதிகம்தான். அப்போதே அப்பாவிடம், “இன்னும் நல்ல வசதியா இருக்கிற பையனா பார்க்கலாமே ப்பா. அக்காவுக்கு என்ன குறைனு வசதி குறைவான இடத்துல செய்யணும்?” என கேட்டிருக்கிறான் பிரவாகன்.

“நம்மகிட்டயே போதுமான அளவு வசதி இருக்கே பிரவா. வசதிய நாம உருவாக்கி கொடுத்தா கீர்த்தியோட மதிப்பு அங்க அதிகம்தானே?” என்ற தந்தையை புரியாமல் பார்த்தான்.

“என் வீட்ல அவ்ளோ வசதி இல்லை. உன் அம்மாவ என் சொந்த பந்தம் எப்படி பார்க்கிறாங்க? அவ சொல்லுக்கு ஏதாவது எதிர் சொல் உண்டா? ஏன்?” என மகேந்திரன் கேட்க, புரிந்தது எனும் விதமாக சிரித்தான் பிரவாகன்.

“வசதியான இடத்துல சாதாரண மருமகளா இருக்கிறத விட என் பொண்ணாலதான் அந்த வசதின்னா செல்வாக்கான மருமகளா இருப்பா. நல்ல படிச்ச திறமையான நல்ல கேரக்டர் உள்ள பையனா இருந்தா போதும். தேவையான வசதிய என் பொண்ணு ஏற்படுத்தி தருவா. காலத்துக்கும் அவளுக்கும் நமக்கும் அவ புகுந்த வீட்ல மதிப்பு இருந்திட்டே இருக்கும்” என மகேந்திரன் சொன்னதை பிரவாகனால் மனமுவந்து ஏற்றுக்கொள்ள முடிந்தது.

இன்றும் தங்களை போல் அத்தனை வசதிகள் இல்லாத விஷ்ணுவை மிருணாவுக்கு மாப்பிள்ளை ஆக்கலாம் என அக்காவும் அம்மாவும் யோசனை கூற அப்பாவின் கொள்கையை நினைவு படுத்திக் கொண்டவன், “பையனை பத்தி விசாரிக்கிறேன், மிருணாவுக்கும் பிடிச்சா எனக்கு சம்மதம்” என சொல்லி விட்டான்.

எங்கே வேண்டாம் என சொல்வானோ என பயந்து போய்தான் கீர்த்தியும் உடன் இருந்தாள். அவனுடைய உடனடி சம்மதம் கூட பயத்தைதான் கொடுத்தது. கேட்கவும் செய்தாள்.

“வசதியான வீட்டு பசங்கள்ல ஒழுங்கா இருக்கிறவன் ரொம்ப கம்மி. டாக்டர் மாப்பிள்ளை வேணும்னு நான் முன்னாடியே முடிவு பண்ணினதுதான். வசதிய நாம ஏற்படுத்திக் கொடுத்தா போச்சு. மிருணாவை நல்லா பார்த்துகிட்டா மட்டும் போதாதா?” என சொல்லி சென்று விட்டான்.

“அவனே சரிங்கும் போது நீ ஏன் டி குடையுற?” எனக் கேட்டார் அரசி.

“மிருணாவுக்கு வர்ற மாப்பிள்ளை வச்சு நாம ஒண்ணு நினைச்சா இவன் வேற நினைக்கிறான் போலம்மா. நீ சொன்னத வச்சே விஷ்ணு இவன் நினைக்கிறதுக்கு ஏற்ப நடக்க மாட்டார்னு தோணுது. மிருணா லைஃப்ல சிக்கல் வராம இருக்கணும்” என்றாள்.

“ஏதாவது சொல்லி பயமுறுத்திட்டே இருக்காத என்னை” தலையை பிடித்துக்கொண்டார் அரசி.

“உன்னை பயப்படுத்த சொல்லலைமா. பின்னாடி என்னல்லாம் நடக்கும்னு ஐடியா இருந்தாதானே நாம அதுக்கு தயாரா இருக்க முடியும்? ஒரு வேளை நாம சொல்றதையோ பிரவா சொல்றதையோ மிருணா ஹஸ்பண்ட் மறுத்தா கம்பெல் செய்யக் கூடாது. சுய விருப்பத்தை மீறி நிர்பந்தப் படுத்தி எதையும் செய்ய வைக்கிறது சரி கிடையாதும்மா”

“நிறைய பேசி என்னை குழப்பாத கீர்த்தி. ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகட்டும் முதல்ல. நல்ல விஷயங்கள் தானா நடக்கும்” என தனக்கும் சேர்த்தே ஆறுதல் சொன்னார் அரசி.

இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் கோவையிலேயே கண் மருத்துவ முகாம் நடந்த போது மலரும் அனுப்ப பட்டிருந்தாள். இப்போது திண்டுக்கல் அருகே இருக்கும் மலை கிராமங்களில் இரண்டு நாள் மருத்துவ முகாம் என சொல்லி மீண்டும் சென்று இன்றுதான் திரும்பியிருந்தாள்.

“ஸ்ட்ரேஞ் மலர். வருஷம் ஒரு முறையோ ரெண்டு முறையோதான் கேம்ப் போற மாதிரி இருக்கும். வேற ஆளே இல்லாத மாதிரி அடிக்கடி உன்னை ஏன் போக சொல்றாங்க?” எனக் கேட்டான் கிஷோர்.

“என்னவா இருக்கும்னு நினைக்கிற?” அலட்டிக் கொள்ளாமல் கேட்டாள் மலர்.

“வேணும்னு உன்னை அலைய வைக்க செய்ற மாதிரி இல்லியா?”

“என்ன நினைச்சு செய்றாங்களோ… இது எனக்கு கஷ்டமா இல்லை. நான் இதைவிட பெருசா எதிர்பார்த்தேன்”

“உனக்கு ஓவர் தைரியம்தான். நிஜத்தை சொல்லு, உண்மையா பிரவாகன் சார்கிட்ட அப்படி பேசினியா நீ?”

“ரெண்டு மூணு தடவ கேட்டுட்ட நீ” மதிய உணவை முடித்துக் கொண்டு பேசிக் கொண்டே இலவச பிரிவு வந்து விட்டனர்.

காலில் அறுவை சிகிச்சை முடிந்த நோயாளி ஒருவர் முதன்மை பிரிவிலிருந்து இலவச பிரிவுக்கு மாற்றப் பட்டுக் கொண்டிருந்தார்.

இலவச பிரிவில் அனுமதிக்க பட்டாலும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்வதில்லை, வாரத்தில் ஒரு நாள்தான் இங்கு எலும்பு முறிவுக்கான அறுவை சிகிச்சை நாள். ஆகவே அங்கு பணம் கட்டி அறுவை சிகிச்சை செய்து கொண்டு தங்கும் வாடகையை குறைக்க இங்கு மாறிக் கொள்வார்கள்.

“ஏன் இப்படி கஷ்ட படணும் இவங்க, ஜி ஹெச் போய்டலாம்தானே?” எனக் கேட்டான் கிஷோர்.

“அங்கேயும் எல்லாம் உடனே உடனே நடக்குதா கிஷோர்? இவங்க இருக்கிற இடத்துக்கு போக வர வசதியாவும் இருக்கணும், அடிபட்ட உடனே பக்கமா இருக்குன்னு இங்க அழைச்சிட்டு வந்திருப்பாங்க, ஜி ஹெச் தூரம், இங்கேயே வைத்தியம் பார்க்கலாம்னு முடிவு பண்ணியிருப்பாங்க. இலவசமா எல்லாம் செய்றோம்னு சொல்லிக்கிட்டா செய்ய வேண்டியதுதானே? யாரை ஏய்க்க இப்படி செய்றாங்க?”

 “உயிருக்கு ஆபத்தான நிலைல இருந்த டெலிவரி ஆன பேஷண்ட்டை விலை உயர்ந்த மருந்து கொடுத்து காப்பாத்தினதா சோசியல் மீடியால பரப்பி விட்டாங்கதானே? அதை பார்த்திட்டு நம்பிக்கையோட எத்தனை பேர் இங்க வருவாங்க? பாதி ஃப்ரீ பாதி பணம் கட்டித்தான் செஞ்சுக்கணும்னு தெரிய வரும் போது சிலர் ஏமாந்து திரும்பி போறாங்க, சிலர் இன்னும் அலையனுமா இங்கேயே பார்க்கலாம்னு முடிவுக்கு வந்திடுறாங்க. நிஜத்துல பேஷண்ட்ஸ் உயிரோட மட்டுமில்ல உணர்வோடையும் விளையாடிட்டு இருக்காங்க. பேதடிக் கிஷோர்” அத்தனை கவலையும் ஆதங்கமுமாக இருந்தது மலரின் குரல்.

ஆமோதிப்பாக கேட்டு கொண்ட கிஷோராலும் வேறு பேச முடியவில்லை.

ரிஷப்ஷனில் இருந்தவர்கள் சுற்றறிக்கை ஒன்று வந்திருப்பதாக சொல்லி அவளிடம் அதை காட்டினார்கள். எதிர்மறை அழுத்தம் ( negative pressure ) கொண்ட வார்டில் காற்று மூலம் பரவும் தொற்றுநோயால் பாதிக்க பட்ட ஐந்து நோயாளிகள் அனுமதிக்க பட்டிருப்பதாகவும் அங்கு இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு மலருக்கு இரவு நேர டியூட்டி எனவும் குறிப்பிட பட்டிருந்தது.

அதிர்ந்த கிஷோர், “இது அநியாயம் மலர், சும்மா விடாத இத. நீ ஃப்ரீ பிளாக்லதான் டியூட்டி டாக்டர், பெய்ட் பிளாக் ஏன் போக சொல்றாங்க? கேள்வி கேளு” என்றான்.

மலருக்கும் கோவமாகவும் சலிப்பாகவும் இருந்தது. அதைவிட அதிகமாக சோர்வாக இருந்தாள். இது போல பணிகள் பற்றி பயமோ கவலையோ அவளுக்கு இல்லை. தகுந்த பாதுகாப்புடன்தான் இருக்க போகிறாள். ஏன் இருபத்து நான்கு மணி நேரமும் செவிலியர், சுகாதார பணியாளர்கள் என அங்கு பணி செய்து கொண்டுதான் இருப்பார்கள். இவள் இல்லையென்றாலும் வேறு மருத்துவர் பணி பார்க்க வேண்டும்தான்.

ஆனால் நேற்று காலை கேம்ப் முடித்து வந்தவள் இன்றுதான் பணிக்கு திரும்பியிருக்க இன்றைய இரவிலிருந்து இரவுப் பணி என்பது நிச்சயமாக பணிச்சுமைதான். வேண்டுமென்றே செய்கிறார்கள் என தெரிந்து கொள்ள அற்புத அறிவு அவசியமில்லை.

சூப்பரிண்ட்டெண்ட் ஏகாம்பரத்தை காண சென்றாள். அன்பு மருத்துவமனையில் நீ டியூட்டி டாக்டர், அது இலவச பிரிவு பணம் செலுத்தும் பிரிவு எங்கு பணி சொன்னாலும் சென்றுதான் ஆக வேண்டும். சுழற்சி முறையில் பணி கொடுக்க படுகிறது, கடந்த வாரம் ஒருவர் பணியில் இருந்திருப்பார், இந்த வாரம் நீ, அடுத்த வாரம் வேறொருவர் செல்வார், மறுக்க முடியாது என கண்டிப்போடு சொன்னார் ஏகாம்பரம்.

தனக்கு ஓய்வு வேண்டும் என மலர் சொன்னதற்கு, “கேம்ப் போய் அதைத்தானே செய்திட்டு வந்திருப்பீங்க டாக்டர்?” என நக்கலாக கேட்டார்.

கண் துடைப்புக்காகத்தான் மருத்துவ முகாமகள் நடத்த படுகின்றன. தூர பயணம் என்பதை தாண்டி யாரும் சிரத்தை எடுத்து முகாமை சிறப்பாக நடத்துவது இல்லை. ஆனால் மலர் அவளது பணியை சமரசம் செய்து கொள்ளாமல் செய்து அவளது குழுவினரையும் செய்ய வைத்து வந்திருந்தாள். அந்த தர்க்கம் இவரிடம் எடுபடாது எனும் போது மேலும் பேச அவளுக்கு பிடிக்கவில்லை.

தானே வேலையை விட்டு சென்றால் என்ன என யோசித்தவள் நொடியில் முடிவை மாற்றிக் கொண்டாள். அவளை பொறுத்த வரையில் அநியாயம் செய்வது தவறு என்றால் அதை கண்டு ஒதுங்கிக் கொள்வது மாபெரும் தவறு.

 இலவச பிரிவின் நிர்வாகத்தை சீர் செய்ய தன்னால் இயன்ற முயற்சிகளை செய்து விடுவது என முடிவு கட்டியிருந்தவள், ‘என்னால் சமாளிக்க முடிந்த வரை இங்குதான் இருப்பேன்’ என்ற உறுதியோடு வெளியேறினாள்.

இரவுப் பணிக்கு திரும்ப வேண்டும் என்பதால் அப்போதே வீட்டுக்கு புறப்பட்டு விட்டாள்.

இலவச பிரிவில் மருத்துவர்கள் மற்றும் மற்ற மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறை உண்டு. எப்போதாவது பகலில் அரை நாள் பணி செய்து விட்டு இரவும் பணிக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். இங்கு அதிக பணிகள் இருப்பதில்லை என்பதாலும் கூடுதல் நேர பணிக்கு இன்சென்ட்டிவ் கொடுக்கப் படும் என்பதாலும் இதை பற்றி ஊழியர்கள் யாரும் பெரிது படுத்திக் கொள்வதில்லை.

 பகல் நேரம் பணி செய்து விட்டு வருவதால் அன்றைய தினம் தாமதமாக வரலாம். முன் மாலையில் வீடு வந்தவள் இரவு எட்டு மணிக்கு எழுவது போல அலாரம் வைத்துக் கொண்டு அம்மாவிடமும் சொல்லிக் கொண்டு படுத்து விட்டாள்.

“இதென்ன இன்னிக்கு நைட் போட்ருக்காங்க. உடம்பு என்னாகிறது? அதென்ன சின்ன ஹாஸ்பிடலா ஆள் இல்லைனு உன்னை டியூட்டிக்கு போட” என அங்கலாய்த்தார் விமலா.

“ரொட்டேஷன் படி எனக்குதான் டியூட்டி வருதும்மா இப்போ” என்றாள் மலர்.

“படிக்கிறப்பதான் ராப்பகலா கஷ்ட பட்டு படிச்ச. வேலைக்கு போயும் இப்படின்னா… என்னத்த சொல்ல. டாக்டருக்கு படிக்காம அகிலா மாதிரியே என்ஜினீயருக்கு படிச்சிருக்கலாம் நீயும்” என்ற அம்மாவுக்கு சிரிப்பை பதிலாக கொடுத்து விட்டு கண்களை மூடிக் கொண்டாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement