Advertisement

பேரன்பு பிரவாகம் -6

அத்தியாயம் -6(1)

தனக்கு இப்போது திருமணம் வேண்டாம் என்பதில் உறுதியாக நின்று விட்டான் விஷ்ணு. உன் திருமணத்தை பார்க்க ஆசை படுகிறேன் என அன்பாக சொல்லியிருந்தால் தன் முடிவை பரிசீலனை செய்திருப்பானோ என்னவோ. வசதியான இடம், இந்த பெண்ணை செய்து கொண்டால் வாழ்க்கையில் செட்டில் ஆகி விடுவாய் என கோபால் கூற வேண்டவே வேண்டாம் என சொல்லி விட்டான்.

கிளினிக் அமைக்க பார்த்திருந்த இடம் கூட கை நழுவி போய் விட்டது. வேறு எங்கேனும் வாடகைக்கு இடம் பார்க்கலாமா என கூட யோசித்தான். எதுவும் சரியாக அமையவில்லை, ஆகவே ஒரு பிரபல மருத்துவமனையில் பணிக்கு சேர்ந்து விட்டான்.

“இப்படி மாச சம்பளம் வாங்கவா டாக்டருக்கு படிக்க வச்சேன், வர்ற அதிர்ஷ்டத்தை வேணாம்னு சொல்ற நீ” என கோவப்பட்டு கத்தினார் கோபால்.

“கோடிக்கணக்குல உங்ககிட்ட பணம் வாங்கி படிக்கலப்பா நான். மெரிட்ல படிச்சேன். பி ஜி பண்ண ஸ்காலர்ஷிப்ல லண்டன் போனேன். பணம் சம்பாதிச்சு கொடுக்கிற பொருள் இல்லை நான்” என விஷ்ணுவும் கோவப்பட்டான்.

தேவகி எப்போதுமே தானாக எந்த முடிவுகளும் எடுத்து பழக்க படாதவர். மூத்தவன் ஸ்ரீதர் அத்தையின் ஒரே மகளான தர்ஷிணியை திருமணம் செய்து கொண்டான். அரசு வேலையில் இருப்பவன் மாமியார் ஊரான நெய்வேலிக்கே பணி மாற்றம் பெற்றுக் கொண்டு அங்கேயே சென்று விட்டான்.

இரண்டாவது மகன் ஹரி படித்துக் கொண்டிருக்கும் போதே வீட்டை எதிர்த்து ஸ்வேதாவை காதல் திருமணம் செய்து கொண்டான். திருமணத்திற்கு பின் மிகுந்த கஷ்டம், ஸ்வேதா வீட்டில் ஏற்றுக்கொள்ளவே இல்லை. ஒரு குழந்தையும் பிறந்த பின் மனமிறங்கி ஏற்றுக்கொண்டார் கோபால்.

காந்திபுரத்தில் சர்ஜிகல் ஸ்டோர் வைத்திருக்கிறார் கோபால். அவரது அப்பா காலத்தில் ஸ்டோர் சொந்தமாக இல்லாமல் வாடகைக்கு நடத்தி வந்தார். இவர்தான் சொந்தமாக ஸ்டோர் நிறுவினார். மருந்து மாத்திரைகள் தவிர்த்து மருத்துவமனையில் பயன் படுத்த படும் பலவித பொருட்கள் சரிஜிகல் ஸ்டோரில் கிடைக்கும்.

அறுவை சிகிச்சை செய்ய உபயோக படும் ஆயுதங்கள், ட்ரெஸிங் செய்ய பயன்படுத்த படும் பிளாஸ்டர்கள், நோயாளிகளுக்கு உபயோக படும் பல வித குழாய்கள், ஊசி மருந்து செலுத்த உதவும் சிரிஞ்சுகள், வாக்கர், வீல் சேர், பெட் பேன் போன்றவை கிடைக்குமிடம்.

சில மருத்துவமனைகளுக்கு தொடர்ந்து பல வருடங்களாக கோபால்தான் சப்ளை செய்து வருகிறார். நல்ல வருமானமும் வருகிறது. நில புலன்கள், வங்கி நிதி இருப்பு என நிறைவான சேமிப்பும் வைத்திருக்கிறார். என்ன இருந்தும் திருப்தி கொள்ளாமல் இன்னும் வேண்டும் என்பதுதான் கோபாலின் எண்ணம்.

பிள்ளைகளுக்கு இன்னும் சொத்து பிரித்து தரவில்லை. இன்னும் சேர்க்க வேண்டும், தான் வாழாத சொகுசு வாழ்க்கையை தன் மகன்கள் வாழ வேண்டும் என்ற ஆசை கொண்டவர்.

சரியான வேலைகள் எதுவும் இல்லாத ஹரியை தன்னுடன் வைத்துக் கொண்டார். மாமனார் வீட்டில் வசிக்க வந்த ஆறு மாதங்களில் கூட்டு குடும்பத்தில் வாழ முடியாது என தனிக்குடித்தனம் அழைத்து சென்று விட்டாள் ஸ்வேதா. அவர்கள் காந்திபுரம் அருகில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர்.

விஷ்ணுவை வசதியான வீட்டு மாப்பிள்ளையாக்கி விட்டால் இவனிடமும் பெரிய பையனிடமும் பேசி ஹரிக்கே இந்த வீட்டையும் கடையையும் கொடுத்து விடலாம் என திட்டம் வைத்திருந்தார் கோபால். விஷ்ணு ஒத்துக் கொள்ளாமல் போக அதனை முன்னிட்டு அப்பாவுக்கும் மகனுக்கும் மனஸ்தாபம்.

சின்ன சின்ன மருத்துவமனைகளில் சப்ளை செய்வதால் என்ன பெரிய லாபம் கிடைக்கிறது? ஏதேனும் பெரிய மருத்துவமனைக்கு மொத்தமாக சப்ளை செய்யும் வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என ஹரி யோசனை சொல்லியிருந்தான்.

கோபாலுக்கும் தனது ஒன்று விட்ட அக்கா அன்பரசியிடம் இது சம்பந்தமாக ஏதேனும் உதவி கேட்டால் என்ன என தோன்றியது.

ஸ்டோர் ஆரம்பிக்கும் போது சொந்தமாக வீடு கட்டும் போது என சில முறை உதவி கேட்டு சென்றிருக்கிறார்தான். அரசியும் மறுக்காமல் உதவியிருக்கிறார். அவரது கணவர் மகேந்திரனுக்கு கோபலை அவ்வளவாக பிடிக்காது. ஒட்ட விட மாட்டார். மாமாவின் கோவத்திற்கு ஏன் ஆளாக வேண்டும் என நினைத்து இவரும் ஒதுங்கியே இருந்தார்.

மகேந்திரனின் மறைவுக்கு பின்னர் அரசியின் உடல்நலன் குன்றிய போது ஓரிரு முறை மனைவியோடு சேர்ந்து பார்த்து வந்திருக்கிறார். பின் யாரையும் பார்ப்பதை அரசி குறைத்துக் கொள்ள, கோபாலும் அங்கு செல்வதில்லை. இப்போது திடீரென செல்வதில் தயக்கம் இருந்தாலும் காரியம் சாதித்துக் கொள்ள வேண்டுமே என கருதி மனைவியோடு புறப்பட்டு விட்டார்.

கோபாலும் தேவகியும் அரசியின் வீடு சென்ற போது பிரவாகன் அங்கு இருக்கவில்லை. செக்யூரிட்டியிடம் தன்னுடைய விசிட்டிங் கார்ட் கொடுத்தனுப்பி விட்டு வெளியிலேயே தங்களது காரில் காத்திருந்தனர். உள்ளே வர சொல்லி அழைப்பு வந்தது.

தன் அறையிலிருந்து வரவேற்பை வந்து காத்திருந்தார் அரசி. தம்பியையும் அவரது மனைவியையும் நன்றாகவே கவனித்தார். அடிக்கடி வந்து செல்லவில்லையே என குறை பட்டுக் கொண்டார்.

“எங்கக்கா… உங்களுக்கு முடியாம போன சமயத்துல வந்ததுதான். அப்புறமா நீங்க யாரையும் பார்க்கிறதில்லைனு சொல்லிட்டாங்க, ரெண்டு முறை வந்திட்டு உங்களை பார்க்க முடியாமலே திரும்பிட்டேன்” என்றார் கோபால்.

“ப்ச்… அப்ப என் நிலைமை அப்படித்தான் இருந்தது தம்பி. திடீர்னு தவறிப் போவார்னு நினைக்கல. எல்லாம் வெறுத்த மன நிலைல இருந்தேன். நீ தப்பா எதுவும் நினைச்சுக்காத” என்றார் அரசி.

“ஐயையோ தப்பா நினைக்கிறதாவது… என்னை மறந்து போயிருப்பீங்கன்னு கூட நினைச்சேன். உங்களுக்கு எம்மேல பாசம்னு சொன்னா எம்பயன் விஷ்ணு நம்பக்கூட மாட்டான்” என்றார்.

தேவகியும், “உங்கள பத்தி அடிக்கடி பேசுவார். இதெல்லாம் உண்மையான்னு உங்ககிட்டயே கேட்க போறதா சொல்வான் விஷ்ணு” என்றார்.

ஸ்ரீதர் திருமணத்திற்கு அரசி சென்றிருக்கிறார். அதற்கு பின் ஹரி திருமணம் பற்றியெல்லாம் அவர் அறிந்திருக்கவில்லை. அனைவர் பற்றியும் விசாரித்தார். கோபாலின் மூன்று பிள்ளைகளையுமே பார்த்திருக்கிறார், ஆனால் விஷ்ணு இப்போது எப்படி இருப்பான் என எண்ணி பார்க்க கற்பனையாக எந்த உருவமும் வரவில்லை.

கோபாலே தன் குடும்பத்தினர் புகைப்படங்களை கைபேசி வாயிலாக காட்டினார். அமைதி ததும்ப இருந்த விஷ்ணுவின் முகத்தை பார்க்கவுமே அரசிக்கு நல்லெண்ணம் ஏற்பட்டு விட்டது.

ஹரி பற்றி வருத்தமாக சொன்ன கோபால், விஷ்ணு அவனுக்கு வந்த நல்ல சம்பந்தத்தை கூட வேண்டாம் என சொல்லியதையும் கவலையாக சொன்னார்.

“அவங்களா… எனக்கு நல்லா தெரியுமே. ஏன் வேணாம்னு சொல்லிட்டான்?” என அரசி விசாரிக்க மகனை பற்றி புகாராக ஏதும் சொல்லி விடுவாரோ என நினைத்த தேவகி அவனது மனவோட்டம் பற்றி கூறினார்.

இந்த காலத்தில் இப்படி ஒரு பையனா என வியப்பாக நினைத்த அரசி விஷ்ணுவை பற்றி மேலும் விசாரித்தார்.

“இந்நேரம் தனியா ஆஸ்பத்திரி ஆரம்பிச்சிருக்க வேண்டியவன் க்கா. இப்போ மாச சம்பளத்துக்கு வேலை பார்க்கிறான்” என அவன் பணியிலிருக்கும் மருத்துவமனை பெயரையும் கூறினார்.

“அடடா… நம்ம ஹாஸ்பிடல் வர சொல்லியிருக்கலாமே தம்பி” என்றார் அரசி.

“நான் சொல்லிப் பார்த்தேன் க்கா. நமக்கு தெரிஞ்ச பொண்ணு கூட அங்கதான் டாக்டரா இருக்கு. சொந்தக்காரங்ககிட்ட வேலை பார்க்க கூடாதுன்னு சொல்லிட்டான். பொழைக்க தெரியாத ஆளுக்கா அவன்” என்றார் கோபால்.

மலர்தான் அந்த தெரிந்த பெண் என்பதை விசாரித்து அறிந்து கொண்ட அரசி, “நீயே விஷ்ணுவுக்கு கிளினிக் ஆரம்பிச்சு தர வேண்டியதுதானே?” எனக் கேட்டார்.

“அவன் எதுக்கும் ஒத்து வர மாட்டேங்குறான் க்கா” என்றார் கோபால்.

“சும்மா எப்பவும் அவனை குறை சொல்லாதீங்க, அவன் கால்ல நிக்கணும்னு நினைக்கிறான். ரோஷக்காரன் கூட. ஒரு கெட்ட பழக்கம் உண்டா, அதிர்ந்து பேசுவானா?” என ஆதங்கப் பட்டார் தேவகி.

விஷ்ணுவை பற்றிய நல் அபிப்ராயம் அரசிக்கு மேலும் மேலும் கூடியது. கோபால் எப்படி தான் வந்த விஷயத்தை பற்றி ஆரம்பிப்பது என யோசனை செய்து கொண்டிருக்க, “விஷ்ணு ஜாதகம் இருக்கா?” எனக் கேட்டார் அரசி.

குழப்பம் அடைந்தாலும் கோபாலுக்கு லேசாக பொறி தட்ட இப்போதைக்கு தான் வந்த விஷயம் பற்றி பேச வேண்டாம் என முடிவு செய்து, “போன்ல இருக்குதுங்க க்கா. ஏதும் உங்களுக்கு தெரிஞ்ச இடம் இருக்குதுங்களா க்கா. இருந்தா சொல்லுங்க, இந்த முறை வசதி பத்தியெல்லாம் அவன்கிட்ட பேசாம தேவகிய விட்டு பொறுமையா பேச சொல்லி கல்யாணத்தை முடிச்சிடுறேன்” என்றார்.

“அவசர படாத தம்பி. ஜாதகத்த என் நம்பருக்கு அனுப்பி விடு. நான் இந்த வாரத்துக்குள்ள உனக்கு சேதி சொல்றேன். அப்படியே விஷ்ணு போட்டோ ஒண்ணும் அனுப்பு” என்றார் அரசி.

ஜாதக பொருத்தம் பார்க்க வேண்டும், மிருணாவுக்கு பிடிக்க வேண்டும், கீர்த்தியிடம் ஆலோசிக்க வேண்டும், பிரவாகன் சம்மதிக்க வேண்டும்… இத்தனை விஷயங்கள் இருக்க உடனே தன் பெண்ணுக்குத்தான் பார்க்கிறேன் என உடைத்து சொல்லாமல் மூடி மறைத்தே பேசினார்.

ஆனால் கோபாலுக்கு பிடி பட்டு போனது. அப்படியே அவரது மகளுக்காக இல்லா விட்டாலும் அரசி சொல்லும் இடம் சாதாரண இடமாக இருக்க போவதில்லை. இந்த முறை விஷ்ணுவை எப்படியாவது சரி கட்டி விட வேண்டும் என முடிவு கட்டிக் கொண்டவர் ஹரி சொன்னது பற்றி ஏதும் சொல்லாமலே விடை பெற்று கிளம்பினார்.

Advertisement