Advertisement

அத்தியாயம் -5(3)

அமைதியாக இருந்த கீர்த்தி சில நிமிடங்களுக்கு பின், “மிருணாவுக்கு டாக்டர் பையனை பார்க்க போறதா சொன்னானே. வர்ற பையன் நல்லவரா இருந்தா கொஞ்சம் கொஞ்சமா அவர் கைக்கு பொறுப்பு வர்ற மாதிரி செய்யலாம். ஆனா வர்ற பையனும் அதெல்லாம் எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லைனு சொல்லிட்டா கஷ்டம்” என்றாள்.

“நல்ல பையனாதான் நாம பார்ப்போம், பின்னாடி எப்படி மாறுவாங்கன்னு நமக்கு இப்பவே எப்படி தெரியும் கீர்த்தி?”

“பிரவா, மிருணா ரெண்டு பேருக்குமே குணம் உள்ள நல்லவங்களா பார்த்து கல்யாணம் செய்து வைப்போம். யாராவது ஒருத்தர் பிரவா மனசை மாத்தி ஃப்ரீ பிளாக்குக்கு விடிவு கிடைக்க செய்யட்டும்” என்றாள் கீர்த்தி.

“அப்படி நல்லவங்களா எங்க போய் தேடுறது?”

“இன்னிக்குத்தான் ஜாதகம் பார்த்திருக்கோம். தேட ஆரம்பிப்போம், கண்டிப்பா நல்லது நடக்கும்”

“எதுக்கும் பிரவாகிட்ட ஜோசியர் சொன்னது பத்தி சொல்லி புரிய வைக்க பார்க்கிறேன்” என்றார் அரசி.

“வீண் முயற்சிதாம்மா அது. அவன்கிட்ட எதுவும் பலிக்காது. உன் திருப்திக்கு பேசு. நான் கிளம்பறேன், தாரிகா ஜாதகம் பொருத்தம் இல்லைனு சொல்லிட்டா அவளுக்கு வேற இடம் பார்க்க ஆரம்பிப்பாங்க” என்ற கீர்த்தி தம்பி வருவதற்கு முன் தன் வீடு கிளம்பி விட்டாள்.

முன்மாலை நேரத்தில் மருத்துவமனையின் ஏழாவது மாடியில் இருக்கும் சொகுசு வார்டில் இருந்தான் பிரவாகன். வார்டு என சொல்லப் பட்டாலும் நட்சத்திர விடுதியின் அறைக்குண்டான அனைத்து அம்சங்களும் அந்த வார்டில் இருந்தது.

மத்திய சுகதார துறை அமைச்சர் குடும்பத்துடன் ஆன்மீக சுற்றுலா என தென்னிந்தியா வந்திருந்தார். இன்று காலை ஏதோ கோயிலில் தரிசனம் முடித்து விட்டு ஓட்டலுக்கு சென்று ஓய்வெடுக்க அவரது அம்மாவுக்கு முடியாமல் போய் விட்டது.

எழுபத்தைந்து வயதாகி விட்டவருக்கு அலைச்சல் ஒத்துக் கொள்ளவில்லை. ஏற்கனவே பல்வேறு உடல் தொந்தரவுகள் வேறு இருந்தது.

கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை கழட்டித் தர மாட்டேன் என பிடிவாதம் செய்தார். உணவு செலுத்தவும் சிறுநீர் வெளியேறவும் டியூப் போட செவிலியர்கள் முயற்சித்துக் கொண்டிருந்தனர். ஒத்துழைப்பு தர மறுத்த மூதாட்டி சிகிச்சை செய்தவர்களை ஏதேதோ திட்டினார்.

அமைச்சரின் மனைவி, மகள் என மற்றவர்கள் யாரும் உடனில்லை. அவரும் அவரது பாதுகாவலர்கள் மற்றும் மூதாட்டிக்கு துணையாக ஒரு பெண் வேலையாள் இருந்தனர். மூதாட்டிக்கும் அந்த பணிப்பெண்ணுக்கு இந்தி தவிர வேறு மொழி தெரியவில்லை.

அமைச்சர் தன் அம்மாவிடம் விளக்கி விட்டு வந்த பின்னரும் மீண்டும் அப்படித்தான் நடந்து கொண்டார். அவராலும் அம்மாவுடனே இருந்து மொழி பெயர்த்து சொல்ல முடியவில்லை.

இது போல மொழி பிரச்சனைகள் ஏற்படும் போது மொழி பெயர்ப்பாளர்களை அழைத்துக் கொள்வார்கள். அதற்கென தனி ஊழியர்கள் கிடையாது. மருத்துவமனை பணியாளர்கள் பணியில் சேர்க்கும் போது வேறு ஏதேனும் மொழி அறிந்தவர்களா என கேட்டு குறித்து வைத்துக் கொள்வார்கள். அவர்களின் பெயர்களை மொழி பெயர்ப்பாளர் பட்டியலில் இணைத்துக் கொள்வார்கள்.

இப்போது இந்தி தெரிந்த யாராவது பெண் மொழி பெயர்ப்பாளர் வேண்டும். அந்த நேரத்தில் ஹிந்தி பேசத் தெரிந்தவர்களில் அன்புமலர்தான் மருத்துவமனையில் இருந்தாள். ஆகவே அவளை அழைத்திருந்தனர்.

சில நிமிடங்களில் அவள் வந்து விட்டாள். ஹாலை தாண்டிக் கொண்டு உள் அறையில் இருந்தார் மூதாட்டி. ஹாலில் அமைச்சரோடு பேசிக் கொண்டிருந்தான் பிரவாகன்.

இவர்களை கண்டு கடமையாக வணக்கம் வைத்து விட்டு அறைக்குள் சென்று விட்டாள்.

திடீரென ஏதோ சத்தம் கேட்டு அமைச்சரும் பிரவாகனும் கூட உள்ளே வந்தனர். செயல்முறைகளுக்கு என தயாராக இருந்த ஸ்டீல் ட்ரேயை பிடித்து தள்ளியிருந்தார் மூதாட்டி.

உடல்நலன் முடியாமல் போனால் புத்தி பிசகி இப்படித்தான் நடந்து கொள்வார், அவரது கைகளை கட்டி விடுங்கள் என ஆங்கிலத்தில் சொன்னார் அமைச்சர்.

ஜே சி ஐ சான்றிதழ் வாங்க தயாராகும் மருத்துவமனை, எடுத்த உடன் அப்படி நோயாளியை அசைய முடியாமல் கட்டுப்பாடுகள் செய்ய இயலாது. அதற்குண்டான விண்ணப்பம் பூர்த்தி செய்து மருத்துவர் நோயாளியின் உறவினர் கையெழுத்து எல்லாம் பெற வேண்டும்.

எனவே செவிலியர் ஒருவர் விண்ணப்பம் பூர்த்தி செய்ய ஆரம்பிக்க அதற்குள் பாட்டியிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள் மலர். அவருக்கு கோவம், உடன் அவரது மருமகள் பேத்தி யாரும் வராமல் வேலைக்கார பெண்ணை அனுப்பி விட்டார்களாம். மகனும் அவர்களை எதுவும் சொல்வதில்லையாம். குடும்பமாக செல்கையில் அவரை உடன் அழைத்து வந்ததை தொந்தரவாக நினைக்கிறார்களாம்.

உடனிருந்த செவிலியர்களையும் தன்னையும் காட்டி பேத்தியாக நினைத்துக் கொள்ளுங்கள், உடம்பு நன்றான பிறகு போய் மருமகளிடம் சண்டை போடலாம் என அவர் போக்கில் சமாதானமாக சொன்னவள் தாத்தா போட்ட சங்கிலியா அதுதான் கழட்டி தர மறுக்குறீர்களா என கேட்டாள்.

லேசாக சிரித்தவர் சங்கிலியை எடுத்துக் காட்டினார். அதில் சின்ன சாவி இருந்தது. அது அவரது லாக்கரின் சாவியாம், நிறைய நகைகள் இருக்கிறதாம், யாரை நம்பியும் தர மாட்டேன் என்றார்.

அதை கழட்டாமல் இ சி ஜி எப்படி எடுப்பதாம் என இடுப்பில் கை வைத்து செல்லமாக முறைத்துக் கொண்டே கேட்டாள் மலர். உடனே கழட்டி அவளது கையில் கொடுத்து விட்டவர் தனக்கு எந்த டியூப்பும் போட வேண்டாம் என சொன்னார்.

அவரது மருத்துவரும் அங்குதான் இருந்தார். பேசிய தொனி வைத்தே புரிந்து கொண்டவர், “அப்ப ஏதாவது சாப்பிடனும் சொல்லுங்க, ஆனா யூரினரி கேதிடர் போட்டுத்தான் ஆகணும்” என்றார்.

மலர் பேசி அவரை சம்மதிக்க வைக்க பிரவாகன் அமைச்சரோடு ஹால் வந்து விட்டான்.

“எங்கம்மா யார் பேச்சையும் கேட்டதா சரித்தரமே இல்லை. இ சி ஜி எடுக்கணும்னா அந்த செயினை ஃபுல்லா பிளாஸ்டர் போட்டு கவர் பண்ணிட்டு எடுப்பாங்க. என்கிட்ட கூட அந்த கீ தர மாட்டாங்க. அந்த டாக்டர்கிட்ட ஏதோ வசியம் இருக்கு” என ஆங்கிலத்தில் சொன்னார் அமைச்சர்.

“எங்க ஹாஸ்பிடல் ஸ்டாஃப்ஸ் எல்லாருமே ரொம்ப கனிவானங்க” என இவனும் பெருமையடித்துக் கொண்டான்.

மலர் கிளம்பி செல்கையில் அவளுக்கு நன்றி தெரிவித்தார் அமைச்சர். அவரது மனைவியிடமிருந்து கைபேசி அழைப்பு வர பால்கனி சென்று விட்டார்.

பிரவாகனுடன் தனியே இருக்கும் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட விரும்பாத மலர், “சார்… தர்மேந்திரன் சார் மீட்டிங்ல…” என ஆரம்பிக்க பார்வையாலேயே அவளை பேச விடாமல் செய்து விட்டான்.

“சென்ட்ரல் மினிஸ்டர் தேங்க்ஸ் சொல்லிட்டார்னா உனக்கும் மினிஸ்டர்னு நினைப்பு வந்திடுமா? பார்க்கிற இடத்துல எல்லாம் பேச நான் உன் பாய் ஃப்ரெண்ட்டா என்ன?” என நக்கலாக கேட்டான்.

பொறுமையானவள் நிதானம் கொண்டவள் என்றாலும் இது போன்ற பேச்சுக்களை எப்படி சகிப்பாள்? பொங்கிக் கொண்டு வந்த கோவத்தை அடக்க முயலவில்லை மலர்.

“எந்நேரமும் ஆர்ட்டிஃபிஸியல் லைட்ஸ் இருக்கிற நாலு சுவத்துக்குள்ள ஒரு மூடன் இருந்தானாம். அடேய்… சூரியன்தான் உலகத்துக்கு வெளிச்சம் கொடுக்கும், அது உதயமாகும், அப்புறமா அஸ்தமனம் ஆகும். தினம் இது நடக்கும்னு சொன்னா கேட்க கூட மாட்டேனுட்டான். நீ என்ன சொல்றது… எல்லா சூரியனும் என் உலகத்துலதான் இருக்குன்னு சொன்னானாம். யாருன்னு தெரியுமா அந்த மூடன்?” கண்கள் சிமிட்டாமல் கோவத்தில் சிவந்த முகத்தோடு கேட்டாள்.

தன்னிடம் ஒருத்தி இப்படி பேசுவது நிஜம்தானா என எண்ணி திகைத்துப் போனவன் இறுகிப் போய் நிற்க, “சந்தேகமே வேணாம், நீதான் அந்த மூடன். அப்புறம் என்ன சொன்ன… என் பாய் ஃப்ரெண்ட்? மூடனுக்கு எல்லாம் அந்த தகுதி கிடையாது, மூடன் நீ!” இளக்காரத்தையும் கடினத்தையும் குழைத்த குரலில் சொன்னவள் வேகமாக அங்கிருந்து வெளியேறினாள்.

பிரவாகனின் காதோரம் இரண்டும் ஜிவு ஜிவு என இருந்தது. உடல் முழுதும் கோவத்தில் துடிப்பதையும் எரிச்சலும் வெப்பமுமாக ஏதோ உணர்வு பரவுவதையும் அவனால் உணர முடிந்தது. கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி எறிந்து அடித்து நொறுக்கும் அளவுக்கு ஆத்திரம் மூண்டிருந்தது.

மத்திய அமைச்சர் புன்னகை முகமாக இவனை நோக்கி வந்து கொண்டிருக்க சட்டென சுதாரிக்க வேண்டிய நிலையாகிப் போனது. அரும்பாடு பட்டு புன்னகையை வரவழைத்துக் கொண்டான் பிரவாகன்.

லிஃப்ட் வழியே தரை தளம் வந்து கொண்டிருந்த மலருக்கு வியர்த்து கொட்டியது. அவளை மீறி பேசி விட்டிருந்தாள். என்ன செய்வானோ என அச்சம் எழ நடந்ததை நினைவுக்கு கொண்டு வந்தவள் தன் மீது தவறில்லை என்ற முடிவுக்கு வந்து நிமிர்ந்து நின்றாள்.

பெரிதாக என்ன செய்து விட முடியும்? வேலையை விட்டு போ என்பான். இவனது வரம்பு மீறிய பேச்சை சகிக்கும் அவசியம் எனக்கில்லை, ஆகவே பதில் பேசினேன். அப்படியொன்றும் இங்குதான் வேலை செய்ய வேண்டும் என எனக்கில்லை.

நிறைய யோசித்துக் கொண்டே இலவச பிரிவு வந்து விட்டாள். அவளது பணி நேரம் முடிந்திருக்க அடுத்த டியூட்டி டாக்டர் வந்திருந்தார். சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டாள்.

பிரவாகனின் அதிர்ச்சியும் கோவமும் இன்னும் குறையவில்லை. மூளையை ட்ரில் மெஷின் வைத்து யாரோ குடைவது போலவே இருந்தது. அவனுடைய அலுவல்கள் தடையின்றி நடந்தாலும் எல்லாம் அரை குறை கவனத்தில் மட்டுமே.

இரவு தாமதமாக வீடு வந்த மகனிடம் பேசினார் அரசி. அவனோ ஏதோ ஹாஷ்யம் கேட்டு விட்டதை போல கைகொட்டி சிரித்தான்.

“பணம் இருந்தா கெட்ட நேரம் கூட நல்ல நேரம்தாம்மா. அது நம்மகிட்ட நிறையவே இருக்கு. என் வைஃப கஷ்ட படுத்த நான் என்ன சேடிஸ்ட்டா? என் தங்கை கல்யாண லைஃப் கஷ்டமாக விட்ருவேனா நான்? இந்த பிரவாகன் அண்ட் அவன் சம்பந்த பட்டவங்க லைஃபை எந்த கட்டமும் நேரமும் நிர்ணயிக்காது. அந்த பவர் என் ஒருத்தன்கிட்டத்தான் இருக்கு. என் பணமும் செல்வாக்கும் இந்த உலகத்துல எதை வேணும்னாலும் வசப் படுத்தி தரும்” தலைகனத்தோடு கர்வமாக சொன்னான் பிரவாகன்.

அரசி கவலையாக மகனை பார்த்திருக்க, அவனது காதுக்குள் ‘மூடன் நீ’ என்ற மலரின் குரல் ஒலிக்க, அவனை பார்த்து அவள் கை கொட்டி சிரிப்பது போன்ற பிரம்மை ஏற்பட்டது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement