Advertisement

அத்தியாயம் -5(2)

“அவனும் ஒரு ஆளா இருந்து கஷ்ட படுறான். நீதான் அதெல்லாம் வேணாம்னு உன் இஷ்டத்துக்கு இருக்க, உன்னை கட்டிக்க போறவர் பார்த்தா என்ன தப்பு?”

“ஆஹா… இதுவும் அண்ணன் சொல்லிக் கொடுத்து பேச சொன்னதா? என்னவோ பண்ணும்மா” என்றாள்.

“இப்ப சரின்னு சொல்லிட்டு பின்னாடி முரண்டு பிடிக்க கூடாது, சொல்லிட்டேன்”

“உங்க எல்லாருக்கும் பிடிச்சா எனக்கும் பிடிச்ச மாதிரிதான். ஆனா கொஞ்சம் பெர்சனலா நான் பையன்கிட்ட பேசுவேன். அப்புறமா கல்யாண அரேஞ்மெண்ட்ஸ் பண்ணுங்க” என்றாள்.

“அதானே பார்த்தேன், எந்த தோட்டாவும் இன்னும் வரலையேன்னு நினைச்சா இதோ சொல்லிட்டியே. என்ன பேச போற?”

“அது… கட்டிக்க போறவனுக்கு மட்டும் தெரிஞ்சா போதும்”

“மிருணா…”

“பயப்படுற மாதிரி எதுவும் இல்லம்மா. இப்படி ஓவரா என்கிட்ட கேள்வி கேட்டா கல்யாணமே வேணாம்னு சொல்லிடுவேன்” என மகள் சொல்ல, அப்படி என்ன பேசி விட போகிறாள், அப்போது பார்த்துக் கொள்ளலாம் என எண்ணி விட்டு விட்டார் அரசி.

மேலும் நாட்களை கடந்த விரும்பவில்லை அரசி. திருமணம் ஆகாத இரண்டு பிள்ளைகளின் ஜாதகங்களையும் பூஜை அறையில் எடுத்து வைத்தவர் பெரிய மகளையும் வீட்டுக்கு வர சொன்னார்.

ஆஸ்தான ஜோதிடர் நல்லமுத்து நாமக்கலில் இருந்து வருகை தந்த போது கீர்த்தியும் வந்திருந்தாள். அவளே தம்பி தங்கைகளின் ஜாதகங்களை எடுத்து வந்து கொடுத்தாள்.

அரசி மூட நம்பிக்கைகள் கொண்டவர் அல்ல. ஆனால் ஜோதிடம் என்பதும் ஒரு சாஸ்திரம், நன்றாக கற்றறிந்தவர் சரியாக கணித்து சொல்வது நடக்கும் என நம்புவர்.

நல்லமுத்துவும் அரை குறையாக ஏதாவது சொல்லி பரிகார பூஜைகள் செய்வித்து பணம் பார்ப்பவர் கிடையாது. பரம்பரையாக ஜோதிடம் பார்க்கும் குடும்பத்தை சேர்ந்தவர். ஜோதிட சாஸ்திரத்தை முறையாக பயின்றவர். இப்படி யார் வீட்டுக்கும் சென்று ஜோதிடம் பார்க்க மாட்டார்.

அரசியின் அப்பா காலத்திலிருந்தே நல்ல பழக்கம். அவர் ஊரில் உள்ள கோயில்களுக்கு அரசி நிறைய கொடைகள் வழங்கியிருக்கிறார். அரசியும் கூட அவரது இருப்பிடம் சென்றுதான் பார்த்து வருவார், இப்போது அதிக தூரம் பிராயாணம் செய்ய இயலாத காரணத்தால் அவர் கேட்டுக் கொண்டதற்காக வீடு வரை வந்திருந்தார்.

இருவருக்குமே திருமணம் செய்யும் நேரம் கூடி வந்திருப்பதாக சொன்னவர் இருவரின் திருமண வாழ்வும் ஏற்ற இறக்கங்கள் கொண்டதாகவும் மற்றவர்களை பயப்படுத்தும் படியானதாகவும் இருக்கும் என்றார்.

அரசி கலக்கமாக பார்க்க, “அதிலேயும் இந்த பையன் கோங்கு மரம் மாதிரி. ஓங்கி உயர்ந்து உறுதியா வளைக்க முடியாத கடினத்தன்மையோட இருக்க இந்த மரம் முழுக்க முள் இருக்கும். அதே குணாதிசியம்தான் இவருக்கும். மத்தவங்க இஷ்டத்துக்கு இவரை வளைக்கிறது அத்தனை சுலபம் இல்லை. மண வாழ்க்கையை இவர் விருப்பத்துக்கு எதிரா அமைச்சு தர முடியாது. வர்ற மனைவியை ரொம்ப கஷ்ட படுத்துவார், பின்னாடி அதை விட அதிகம் கஷ்ட படுவார். சோதனையான காலம்தான் இவருக்கு” இன்னுமே பயமுறுத்தினார் நல்லமுத்து.

“கொஞ்சம் தள்ளிப் போட்டு கல்யாணம் செய்யலாமா?” எனக் கேட்டாள் கீர்த்தி.

 “எல்லார் வாழ்க்கையுமே இப்படிதானே ம்மா? அதுக்காக திருமணம் செய்யாம இருக்க முடியுமா? தாராளமா கல்யாணம் செய்யுங்க, அதுக்கான நேரமும் கூடி வந்திடுச்சு. ஒன்பது கிரகங்களும் வாழ்க்கை முழுக்க சுத்திகிட்டேதான் இருக்கும். அடிப்படையில நம்மளோட நம்ம மூதாதையரோட பாவ புண்ணிய கணக்குத்தாம்மா நல்லது கெட்டதுக்கு காரணம். தர்ம காரியங்கள் நிறைய செய்தா அந்த புண்ணியத்துல உங்க புள்ளைங்களுக்கும் பெரிய துன்பம் வராம போகும்” என்றார்.

“உங்களுக்கு தெரியாததா, என்னால முடிஞ்ச அளவுக்கு செய்றேன்தான்” என்றார் அரசி.

“உங்க பித்ருக்கள் ஆன்மா சாந்தி இல்லாம இருக்காங்க. பரம்பரை சொத்துக்கள்ல வாரிசுகளுக்கு பாத்தியதை இருக்கிற மாதிரி அவங்க பாவ புண்ணியங்கள்லேயும் வாரிசுகளுக்கு பங்கு இருக்கு. முன்னோர் சொத்துக்களை ஆளும் போது அவங்க ஆசைகளை குறையில்லாம நிறைவேத்துற கடமையும் வாரிசுகளுக்கு இருக்கு. அதுல ஏதாவது குறை இருந்தா நிவர்த்தி செய்யுங்க” என்றவர் சில கடவுள் வழிபாட்டுத் தலங்கள் சென்று வருமாறு கூறி எளியோருக்கு அன்னதானம் செய்யும் படியும் சொன்னார்.

அரசிக்கு கவலையாகிப் போனது. அவரது தாத்தா சேதுராமர் நினைவுக்கு வந்தார்.

சேதுராமர் அவரது சிறு வயது காலத்தில் வைத்தியம் பார்க்க வசதி இல்லாமல் தந்தையையும் சில வருடங்கள் கழித்து தங்கையையும் இழந்து விட்டார். அதன் காரணமாக மருத்துவம்தான் படிக்க வேண்டும் என முடிவு செய்து உறுதியோடு படித்தவர் அவரது சேமிப்பை கொண்டு இலவச மருத்துவமனை ஆரம்பிக்க முயன்றார்.

முடியாமல் போக வசதி படைத்த நல்லவர்களிடம் நன்கொடை திரட்டினார். ஆனாலும் நிதி போதவில்லை. வெறும் இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி அளவான ஒரு கட்டிடம் எழுப்பி சிறிய அளவில் வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவரது சேவை மனப்பான்மை கேள்வியுற்ற வாரிசு இல்லாத ஜமீன்தார் ஒருவர் அவரது எண்பது ஏக்கர் இடத்தை மருத்துவமனை ஆரம்பிக்க தானமாக தந்தார். தான்தான் கொடுத்தேன் என விளம்பரம் கூட செய்து கொள்ளவில்லையாம் அந்த நல்லவர்.

அடுக்குமாடிக் கட்டிடங்கள் எழுப்ப பெரும் செலவு ஆகும் என்பதால் ஓடு அல்லது ஓலையால் மேற்கூறை அமைக்கப் பட்ட நீண்ட வார்டுகள் நோயாளிகள் தங்கவென அமைக்கப் பட்டன. அப்படி ஆரம்பிக்க பட்டதுதான் அன்பு மருத்துவமனை.

நோயாளிகளுக்கு உணவு வழங்கவென பெரும் தனக்காரர்கள் நிதியுதவி அளித்தனர்.

சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் தூரத்தில் இருந்தும் கூட நோயாளிகள் இங்கு வந்து பயன் பெற்று சென்றனர்.

அதற்கு பின்னரும் பலரது நன்கொடைகள் கொண்டே அன்பு மருத்துவமனை பெரிய ஸ்தாபனமாக உயர்ந்தது. அந்த காலத்தில் பல மருத்துவர்கள் பகுதி நேரமாகவும் சில மருத்துவர்கள் முழு நேரமாகவும் இங்கு இலவச சேவை புரிந்தார்கள். சில ஆங்கிலேய மருத்துவர்களும் அதில் அடக்கம். தன்னார்வலர்கள் பலரும் சேவையாற்றுவார்களாம்.

ஒரு உயர்ந்த நோக்கத்துக்காக பலரும் உதவி செய்து ஆரம்பிக்க பட்ட மருத்துவமனையினுடைய இன்றைய நிர்வாகத்தின் சீர் கெட்ட நிலைதான் முன்னோர்களின் சாந்தியின்மைக்கு காரணமோ என யோசித்த அரசி அப்படித்தான் இருக்க வேண்டும் என முடிவு செய்து கொண்டார்.

தாரிகாவின் ஜாதகத்தை எடுத்து வந்திருந்த கீர்த்தி அதையும் கொடுத்து தம்பிக்கு பொருந்தி வருகிறதா என பார்க்க சொன்னாள்.

அரசி கேள்வியாக பார்க்க, பின்னர் சொல்வதாக மகள் கண் காட்ட அமைதியடைந்து விட்டார்.

“செய்யணும்னு விருப்ப பட்டா செய்யலாம்மா. ஆனா ரெண்டு பேரும் பாம்பும் கீரியும் போல சண்டை போட்டுக்கிட்டேதான் இருப்பாங்க. சர்ப்பத்தை கீரியால அடக்க முடியுமா? இவரை அடக்குறதும் இந்த பொண்ணால ஆகாத காரியம்” என்றார்.

தாரிகா யாரென விவரம் சொன்ன கீர்த்தி அவளது புகுந்த வீட்டினரின் விருப்பம் பற்றியும் கூறி, “காரணமே சொல்லாம வேணாம்னு சொன்னா மனஸ்தாபம் ஆகும். சரியான காரணத்தோடு சொன்னா யாராலேயும் பேச முடியாது. அதனாலதான் ஜாதகத்தை பார்க்க சொன்னேன். பொருந்தி வந்தாதான் வேற ஏதாவது சொல்லணும், பொருத்தம் இல்லைனா அதையே காரணம் சொல்லிடலாம் இல்லயா?” என்றாள்.

“நல்லதுமா. நான் கூட இந்த பொண்ணும் பையனும் விரும்பறதால பொருத்தம் பார்க்குறீங்களோன்னு நினைச்சிட்டேன். அப்ப இந்த பொண்ணை இந்த பையனுக்கு செய்யாம இருக்கிறதுதான் உத்தமம்” என்றார்.

“வேற எப்படி பட்ட பொண்ண பார்க்கலாம்” என கேட்டார் அரசி.

“அப்படி குறிப்பிட்டு எதுவும் இல்லம்மா. நீங்க பார்க்கிற பொண்ணுங்க ஜாதகம் கொடுங்க, அதுல எது நல்ல பொருத்தம்னு பார்த்து சொல்றேன்” என்றார் நல்லமுத்து.

ஜோதிடர் சென்ற பின் இலவச மருத்துவமனை பற்றிய தனது எண்ணத்தை மகளிடம் சொன்னார் அரசி.

“இருக்கலாம் மா. இவன்கிட்ட சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டான். சித்தப்பா அதுல தின்னு கொழிச்சிட்டு இருக்கார். அவரை அங்கேர்ந்து அப்புற படுத்தினாலே நிர்வாகம் சரி ஆகிடும். என்ன சொல்லி பிரவாகானை ஒத்துக்க செய்ய முடியும்?” என்றாள் கீர்த்தி.

“ஜோசியர் சொன்னதையே சொன்னா கேட்டுக்க மாட்டானா?”

“அவனுக்கு இதுல எல்லாம் நம்பிக்கை இல்லை. நாம எடுத்து சொன்னாலும் நீங்க என்ன சொல்றது நான் என்ன கேட்கிறதுன்னு வீம்பு புடிச்சுகிட்டு வேணும்னே சித்தப்பாவை நீக்க மாட்டான்” என தம்பியை சரிவர புரிந்து வைத்திருந்த கீர்த்தி சொன்னாள்.

“உனக்கு இன்ட்ரெஸ்ட் இருக்குன்னு நான் சொல்றேன், நீ பாரேன் கீர்த்தி”

“சித்தப்பா கையிலேருந்து பிடுங்கி என் மாமனார் கையில கொடுத்திடலாம்னு சொல்றியா? பேராசை பிடிச்சவங்க நிறைய தலையீடு செய்வாங்க, என்னால எவ்ளோ சமாளிக்க முடியும்னு நினைக்கிற? பொறுப்பு என்கிட்ட வர்றது நிரந்தர தீர்வு ஆகாதும்மா. ட்ரஸ்ட் மெம்பெர்ஸ்லேர்ந்து எல்லாத்தையும் மாத்தணும். அங்க நிர்வாகம் செய்ய பயமில்லாத நேர்மையான திறமையான ஆள் வேணும்”

“இதுக்கு என்னதான் செய்றது கீர்த்தி?”

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement