Advertisement

பேரன்பு பிரவாகம் -5

அத்தியாயம் -5(1)

சென்னையின் மத்தியப் பகுதியில் இருந்த அபார்ட்மெண்ட் வளாகத்தில் சகல வசதிகள் கொண்ட வீட்டில் தங்கியிருந்தாள் மிருணாளிணி. அவளுக்கு துணையாக நடுத்தர வயது பெண்மணி காந்திமதி இருந்தார்.

திரைப்பட இயக்குனராக வேண்டும் என்ற கனவில் சென்னை செல்ல போவதாக தங்கை சொன்ன போது பிரவாகனுக்கு அத்தனை விருப்பம் இருக்கவில்லை. பொறியியல், மருத்துவம் எதுவும் வேண்டாம் என சொல்லி விட்டு ஏதோ ஆசையாக விஸ் காம் படித்தாள் என நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு அவளது உறுதி ஆச்சர்யத்தைதான் கொடுத்தது.

மகளை சென்னைக்கு அனுப்புவதில் அதிலும் சினிமா துறை சம்பந்தமாக வேலை பார்க்க அனுப்புவது அரசிக்கும் அத்தனை உஷிதமாக படாத காரணத்தால் எதிர்ப்புதான் தெரிவித்தார்.

ஆனால் மிருணாளிணி விடாப் பிடியாக நின்றாள். கீர்த்தியும் தங்கைக்கு ஆதரவு கொடுத்தாள்.

“போகட்டும் ம்மா. ஆம்பள பசங்களே ஒண்ணும் சாதிக்க முடியாம திரும்ப வர்றாங்க. இவளால என்ன செய்ய முடியும்? பொழுது போக்கா சென்னைய சுத்தி பார்த்திட்டு சலிச்சு போய் திரும்பட்டும்” என அம்மாவிடம் சமாதானம் சொன்னான் பிரவாகன்.

“அப்ப அவளை அனுப்ப ரெடியா இருக்க நீ?”

“ஒரே தங்கை, ஆசையா கேட்டா செய்து கொடுக்கிறது விட வேற வேலை எனக்கு இருக்கா என்ன?”

“எது ஆசைப்பட்டாலும் செய்து கொடுப்பியா? நல்லது கெட்டது பார்க்க மாட்டியா?”

“எடுத்து சொன்னா புரிஞ்சுக்க மாட்டா. அவ ஆசைக்கு அசிஸ்டண்ட் டைரக்டரா இருந்திட்டு போகட்டும். அப்புறமும் ஆசை குறையலைன்னா நானே பணம் தர்றேன், படமும் எடுக்கட்டும். போர் அடிச்சு போயோ இல்லை இந்த தலைவலிலாம் வேணாம்னோ சொல்லிட்டு அவளாவே நம்மகிட்ட வந்திடுவா” என்றான்.

அம்மா மற்றும் அண்ணனின் உரையாடலை கோவத்தோடு கேட்டுக் கொண்டிருந்த மிருணா, “ஆம்பளையா இருந்தாலும் பொம்பளையா இருந்தாலும் திறமையும் முயற்சியும் இருந்தா கண்டிப்பா நினைச்சத சிறப்பா செய்யலாம். நான் பொண்ணுன்னு சொல்லி இப்படி பேசுறது சரி கிடையாது” என்றாள்.

“குட் மிருணா. ஆனாலும் பொண்ணுன்னா சில விஷயங்கள் செய்ய முடியாதுதான். நீ பிரவாகனோட தங்கச்சிங்கிறதால வேணா உன்னால முடியும்” என்றான்.

“டேய் டேய்… ஏன் டா இந்த ஆட்டிடியூட் உனக்கு? உன் சிஸ்டர்ஸ்ங்கிறதால எங்களுக்கு ஸ்பெஷலா கொம்பும் வாலும் இருக்கா என்ன?” எனக் கேட்டாள் கீர்த்தி.

அலட்டலாக சிரித்தவன், “உங்க தலையில எதையும் தூக்கி சுமக்க வேண்டிய அவசியம் இல்லை, நினைச்சத…” என்றவன் ஒரு சொடக்கு போட்டு காட்டி, “அப்படிங்கிறதுக்குள்ள நடத்தி வைக்க நான் இருக்கேன். இல்லை நானாதான் செய்வேன்னாலும் உங்க பின்னாடி நான் இருப்பேன். உங்களுக்கு இல்லாததுன்னு இந்த உலகத்துல எதுவுமே இல்ல. உங்க கொம்பு வால் எல்லாம் நான்தான், புரிஞ்சுதா?” என்றான்.

தம்பியுடன் தர்க்கம் செய்ய விரும்பாமல் தண்ணீர் அருந்தி விட்டு ஓரமாக அமர்ந்து விட்டாள் கீர்த்தி. மிருணா அப்படி எளிதில் விடுபவள் கிடையாது.

“கொம்பு வால் எல்லாம் வச்சுகிட்டு மனுஷங்க மத்தியில தனியா தெரிய விரும்பல நான். அதனால உன் கொம்பை நீயே வச்சுக்க ண்ணா” என சொல்லி அவனது தலை முடியை கொம்பு போல இரு கைகளாலும் பிடித்து விட்டு கிண்டலாக சிரித்தாள்.

“வேணுங்கிறது செஞ்சு தர்றேன்னு சொன்னா கிண்டலா இருக்கா உனக்கு?” அவளது கைகளை விலக்கி விட்டு சிகையை கோதி சரி செய்து கொண்டே கேட்டான்.

“எனக்கு எப்பவுமே அன்பான அக்கறையான அண்ணனா இரு போதும். என் திறமை வச்சுத்தான் ரவிசந்திரன் சார்கிட்ட அசிஸ்டன்ட் ஆகியிருக்கேன். அந்த திறமையை மட்டும் வச்சு படமும் டைரக்ட் பண்ணுவேன். இதுல உன் தயவை நிச்சயம் எதிர்பார்க்க மாட்டேன்” என்றாள் மிருணா.

“ஏன் என் தயவு வேணாம்? பிளாக் மனி எல்லாம் ஒயிட்டா மாத்த ஃபில்ம் ப்ரொட்யூஸ் பண்றது நல்ல சாய்ஸ். ஃப்யூச்சர்ல யூஸ் ஆகும். லாஸ் ஆனாலும் பரவாயில்ல, உன் படம் எல்லாத்தையும் நானே ப்ரொட்யூஸ் செய்றேன் மிருணா”

“ஸ்டாப் அண்ணா, உன் பிராப்லமே இதுதான். முதல்ல பொண்ணா என்னால எதுவும் செய்ய முடியாது திரும்ப வந்திடுவேன்னு சொன்ன. நான் கான்ஃபிடெண்ட்டா பேசவும் நீ ஹெல்ப் பண்றதா சொல்ற. உன் ஹெல்ப் வேணாம்னு சொன்னதும் உன் ஈகோ தலை தூக்கிடுச்சு. நல்லா கேட்டுக்கோ உன் பிளாக் அண்ட் ஒயிட் விளையாட்டுக்கு நான் ஆளில்லை” முகத்தில் அறைந்தது போல பேசினாள் மிருணா.

“என் குட்டி தங்கை மிருணாவா இது? ரொம்ப அழகா பேசுற” என்றான்.

“சமாளிக்காதண்ணா. படம் டைரக்ட் பண்ண சான்ஸ் கிடைக்கலைன்னா கூட விட்டுட்டு என் மனசுக்கு புடிச்ச மாதிரி வேற ஏதாவது செய்வேனே தவிர உன் பணத்துல படம் பண்ண மாட்டேன்” சவால் போல சொன்னாள்.

“ஓ உன் ப்ரொட்யூசர் மட்டும் நல்லவனா ஈகோ இல்லாதவனா இருப்பான்னு நினைப்பா?”

“எப்படி இருப்பாரோ, ஆனா என் கதை புடிச்சு போய் அதுக்காக சான்ஸ் தருவார்”

“அப்படியா? குட் லக்!” என்றான் பிரவாகன்.

“பிரவா!” அதட்டலாக அழைத்தார் அரசி.

“விடேம்மா, அவளுக்கு பிடிச்ச மாதிரி கொஞ்ச நாளை போக்கட்டும்… என்ன நஷ்டம்?”

பெரிய மகள், மகன் இருவரும் மிருணாவுக்கு ஆதரவு கொடுத்து விட வேறு வழியில்லாமல், “போகட்டும், ஆனா ரெண்டு வருஷத்துக்கப்புறம் கல்யாணம் பண்ணி வச்சிடணும்” என கண்டிஷன் போட்டார் அரசி.

இப்போது பிரவாகன் தன் தங்கையை பார்க்க, “ரெண்டு வருஷம் கம்மி. அஞ்சு வருஷம் போகட்டும்” என்றாள்.

“நோ மிருணா, அதுக்கு அம்மா என்ன நானே ஒத்துக்க மாட்டேன். உன் இஷ்டப்படி இரு, அம்மா எப்ப எப்படி சொல்றாங்களோ… அஃப்கோர்ஸ் உனக்கும் பிடிச்ச மாதிரி கல்யாணம் நடக்கும். அதுக்கு ஒத்துக்கிட்டா மட்டும் சென்னை போலாம்” என பிரவாகன் சொன்ன தொனியே அவனது வார்த்தையை மீற முடியாது என்பதை காட்டியது.

மிருணா முறைக்க, “அவன்கிட்ட ஆர்க்யூ பண்ணி டைம் வேஸ்ட் செய்யாத. எந்த வகையிலோ ஸ்மூத்தா நம்ம காரியம் ஆனா சரிதானே? அதான் கொம்பு உள்ளவன் சரின்னு சொல்லிட்டான்தானே. அம்மாவையும் கொஞ்சம் கொஞ்சி சரி கட்டிட்டு உன் பெட்டியை கட்டு” என சுமூகமாக்க பார்த்தாள் கீர்த்தி.

தங்களுக்கு இருக்கும் வீட்டில் தங்கிக் கொள்ள சொன்னான் பிரவா. அவ்வளவு பெரிய வீட்டில் தனியாக இருக்க பிடிக்கவில்லை என மிருணா சொன்னதால் அவளது பெயரில் ஒரு அப்பார்ட்மெண்ட் வீடு வாங்கி துணைக்கு ஆளும் போட்டு தங்கையை சென்னை அனுப்பி வைத்தான்.

எங்கு செல்கிறாள் எத்தனை மணிக்கு வீடு திரும்புகிறாள் எல்லாம் அவனுக்கு தெரிந்து விடும். அவளுக்கே தெரியாமல் அவளின் பாதுகாப்புக்காக ஒரு செக்யூரிட்டி எப்போதும் அவளிருக்கும் இடத்தில் இருப்பான்.

அவளது பணி நிமித்தமாக சில விஷயங்கள் நடத்த அவள் முயலும் போது உடனடியாக நடந்து விடும். தான் பேசித்தான் நடக்கிறது என மிருணா நினைத்துக் கொண்டிருக்க நடத்திக் கொடுத்ததோ அவளது அண்ணனாக இருப்பான். தொலைவில் இருந்தாலும் தங்கையை தன் பாதுகாப்பு வட்டத்தில்தான் வைத்திருந்தான்.

பால்கனியில் வரிசையாக தொங்கிக் கொண்டிருந்த தொட்டிகளில் இருந்த செடிகளின் இலைகளை நாற்காலி ஒன்றில் ஏறி நின்று கொண்டு நீண்ட கத்திரிக் கோலால் ட்ரிம் செய்து கொண்டிருந்தாள் மிருணா.

அவளது அலைபேசி ஒலிக்க எடுத்துக் கொண்டு வந்த காந்திமதி, “இன்னிக்கு வெளில போற வேலை இல்லைங்களா பாப்பா?” எனக் கேட்டார்.

“இல்லக்கா, இன்னிக்கு நடக்க இருந்த ஷூட்டிங் கேன்சல் ஆகிடுச்சு. காலைலதான் எனக்கே தெரியும்” என சொல்லிக் கொண்டே கத்திரிக் கோலை அவரது கையில் கொடுத்து விட்டு கைபேசியை தான் வாங்கிக் கொண்டாள்.

அரசிதான் அழைத்தார். நல விசாரிப்புகளுக்கு பின் இரண்டு வருட கெடுவை நினைவு படுத்தி இன்று ஜாதகம் பார்க்க போவதாக சொன்னவர் எப்படிப் பட்ட பையன் வேண்டும் எனக் கேட்டார்.

திருமணம் குறித்து சமீபமாக அடிக்கடி கேட்டுக் கொண்டேதான் இருக்கிறார் அரசி. சமாளித்து வந்தவள் இன்றும் சமாளிக்க பார்க்க, அவர் விடுவதாக இல்லை. இதற்கு மேலும் தள்ளிப் போட இயலாது என்பதாலும் அண்ணன் தடாலடியாக கோவைக்கே அழைத்து சென்று விடக்கூடும் என்பதாலும் சரி என்றாள்.

“ரொம்ப படுத்துவியோன்னு நினைச்சேன். டாக்டர் பையனா பார்க்கட்டுமா? பிரவா அப்படி பார்க்கலாம்னு சொல்றான்” என்றார்.

“பையன் ப்ரொஃபஷன் பத்தி கவலையில்லை. ஆனா என்னை என் வேலைய செய்ய விடணும். அப்படிப்பட்ட யாரா இருந்தாலும் சரிதான்” என்றாள்.

“யாருடி ஒத்து வருவா? உன் அக்கா எவ்ளோ லட்சணமா அவ குடும்பத்தை பார்த்துகிட்டு அவ வீட்டுக்காரர் தொழிலையும் பார்த்துக்கிறா. பிரவா சொல்றான் நல்ல பையனா பார்த்திடுவோம், நம்ம ஹாஸ்பிடல்ல பிராக்டீஸ் பண்ணட்டும். கொஞ்ச நாள் போனதும் காலேஜ் அட்மினிஸ்ட்ரேஷன் பார்க்க வச்சிடலாம்னு” என மகன் சொன்னதை அப்படியே சொன்னார்.

“எனக்கு மாப்பிள்ளை பார்க்கலையா அண்ணன்? காலேஜ் நடத்த ஆள் பார்க்கிறாரா?” நக்கலாக கேட்டாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement