Advertisement

அத்தியாயம் -4(2)

மதிய உணவு இடைவேளையின் போது பழச்சாறு வாங்கி வைத்துக்கொண்டு அதையும் பருகாமல் ஏதோ போல உணவகத்தில் அமர்ந்திருந்தாள் மலர். அவளை போலவே டியூட்டி டாக்டராக அங்கு பணியிலிருக்கும் கிஷோர் வந்தான்.

“பெருசா இஸ்ஸு ஆகலைதானே, அப்புறம் என்ன மலர்?” என கிஷோர் கேட்ட பின்புதான் சுற்றம் உணர்ந்தாள்.

அரசி மேடம் மூலம் நன்மை பயக்கும் என நம்பியதையும் தர்மேந்திரன் இடையிடுவது பற்றியும் கவலையாக கூறினாள்.

“இன்னிக்கு நாலு மணிக்கு மீட்டிங் சொல்லியிருக்காங்கல்ல? தர்மேந்திரன் வந்து பெரிய தர்மராஜா மாதிரி பேசுவார். தேமேன்னு உட்கார்ந்து கேட்டுட்டு எல்லாத்துக்கும் மண்டைய ஆட்டிட்டு எந்திரிச்சு வரணும். இங்க உன் ஒரு ஆளால எதுவும் செய்ய முடியாது மலர். நீ ரொம்ப உள்ள போகாம இரு” என அறிவுரை கூறியவன், “சாப்பிடலையா?” எனக் கேட்டான்.

“அம்மா ஒரு ஃபங்ஷன் போயிட்டாங்க. லஞ்ச் எடுத்திட்டு வரலை” என்றவளையும் அவள் முன்னிருந்த பழச்சாறையும் பார்த்து விட்டு இரண்டு மீல்ஸ் வாங்கி வந்தான்.

“சாப்பிட தோணல கிஷோர், வேணும்னா நான் வாங்கியிருந்திருக்க மாட்டேனா?”

“இப்படி எல்லாத்தையும் எமோஷனலா கனெக்ட் பண்ணிக்கிறதை நிறுத்து மலர். உன் பி ஜி பிரிப்பிரேஷன்ஸ் என்னாச்சு?” எனக் கேட்டான்.

விஷ்ணு பற்றி ஏற்கனவே இவனிடம் சொல்லியிருப்பதால் அவனது வருகை பற்றி சொல்லி, “அண்ணாவை நேத்து பார்க்க முடியலை. பாவம் என்னை பார்க்க வந்திட்டு மீட் பண்ணாமலே போயிட்டாங்க. இன்னிக்கு போய் பார்க்கணும். அண்ணா ஹெல்ப் பண்ணுவாங்க” என்றாள்.

இப்படி பேசிக் கொண்டே உணவை முடித்துக் கொண்டனர். பழச்சாறை பருக வயிற்றில் இடமில்லை என சொல்லி கிஷோரிடமே கொடுத்து விட்டாள். அவள் கண்ணாடித் தடுப்பு வழியே வெளியே பார்த்துக் கொண்டிருக்க, திடீரென மருத்துவமனை ஊழியர்கள் பலர் காஷுவாலிடியில் கூட ஆரம்பித்தனர். பரபரப்பாக இருந்தது அங்கு.

ஏதோ அவசரம் போல என நினைத்த மலரும் பதற்றத்தோடு எழ அவளது கை பிடித்து அமர வைத்த கிஷோர், “டிசாஸ்டர் மேனேஜ்மெண்ட் (பேரிடர் மேலாண்மை) டெமோ நடந்திட்டு இருக்கு. எமர்ஜென்சி கிரைசிஸ்னு நூறு பேஷண்ட்ஸ் வந்தா எப்படி ஹேண்டில் பண்ணனும்ங்கிறதுதான் இன்னிக்கு டெமோ” என்றான்.

“ஓ… நல்லதுதானே? ஃபயர் ஆக்சிடென்ட் நடந்தா நிலநடுக்கம் மாதிரி இயற்கை சீற்றம் வந்தா எப்படி நடந்துக்கணும்னு கூட பீரியாடிக்கா ட்ரில் நடக்கும்தானே?”

“எப்ப நடத்தணும்னு டைம் பீரியட் கிடையாதா? இங்க வாரத்துக்கு ரெண்டு முறை இப்படித்தான் ஏதாவது டெமோ நடந்துகிட்டு இருக்கு” என சலிப்பாக சொன்னான்.

மலரும் சலிப்பாக அவனை பார்த்தவள், “ஜே சி ஐ செர்டிபிகேட் கிடைக்கிறதுக்குள்ள இங்க உள்ள ஸ்டாஃப்ஸ் ஒரு வழி ஆக போறாங்க” என்றாள்.

“சும்மாவா? மெடிக்கல் டூரிஸம்னு நிறைய ஃபாரீனர்ஸ் ட்ரீட்மெண்ட்டுக்காக இந்தியா வர்றது அதிகம் ஆகிடுச்சே. மேக்ஸிமம் பேஷண்ட்ஸ் சென்னைத்தான் சூஸ் பன்றாங்க, ஜே சி ஐ செர்டிஃபிகேட் கிடைச்ச ஹாஸ்பிடல்னா இனி இங்கேயும் வருவாங்க. இதெல்லாம் பேஷண்ட்ஸ் அட்ராக்ட் பண்றதுக்கு செய்ற பக்கா விளம்பரம்” என்ற கிஷோர் விளம்பர பாணியில், “தரமான நண்டு மார்க் கைலிகள் இன்றே வாங்குங்கள்! தரமான ஜே சி ஐ முத்திரை குத்தப்பட்ட ஹாஸ்பிடலில் இன்றே சேருங்கள்!” என்றான்.

அடக்க முடியாமல் வாய் விட்டு சிரித்தாள் மலர். டிஸ்யூ கொண்டு உதடுகளை நாசூக்காக துடைத்துக் கொண்டவன், “போலாமா?” எனக் கேட்டான்.

“தேங்க்ஸ் கிஷோர். ரொம்ப லோ வா இருந்தேன். இப்போ பெட்டர் ப்பா” என்றாள்.

பேசிக் கொண்டே இலவச பிரிவு வந்து அவரவர் பணி செய்யும் இடங்களுக்கு சென்றனர்.

மாலை நான்கு மணிக்கு தர்மேந்திரன் தலைமையில் மருத்துவர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கலந்தாய்வு கூட்டம் என்றாலும் ஒரு வழி உரையாடல்தான் அது. தர்மேந்திரன் சொல்வதை கேட்டுக் கொள்ள மட்டுமே முடிந்தது.

முன்தினம் அன்புமலர் மருந்து எடுத்த சம்பவத்தை சுட்டிக் காட்டி பேசியவர் இந்த அசம்பாவித சம்பவத்தால் பிரவாகன் மிகுந்த கோவமடைந்ததாகவும் தான்தான் வக்காலத்து பேசி மலருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க விடாமல் செய்து விட்டதாகவும் அளந்து விட்டார்.

அவர் பேசிய தொனியே அவர் பேச்சுக்கு பிரவாகனிடம் மிகுந்த செல்வாக்கு, சித்தப்பா என்ற முறையில் அவரிடம் அவனுக்கு பெருமளவு மரியாதை என்ற தோற்றத்தை கொடுத்தது.

இறந்து விடும் வாய்ப்புகள் அதிகமுள்ள நோயாளிகளை அட்மிட் செய்ய வேண்டாம், எக்காரணம் கொண்டும் தன்னிடம் சொல்லாமல் அதிக பிரசங்கித் தனமாக எதுவும் நடந்து கொள்ளாதீர்கள் என எச்சரிப்பது போலவே பேசினார்.

மறந்தும் நோயாளிகள் நல நிதி பற்றி மூச்சு கூட விடவில்லை மனிதர். தேநீரோடு கூட்டம் கலைந்தது.

சலிப்பும் சோர்வுமாக வீட்டுக்கு புறப்பட்டாள் மலர். பெற்றோர் இன்னும் வீடு வந்திருக்கவில்லை. படித்துக் கொண்டிருந்த பரத்திற்கு தேநீர் கொடுத்தவள் மேலும் அவனை தொந்தரவு செய்யாமல் அவனிடம் சொல்லிக் கொண்டு விஷ்ணுவின் வீடு வந்தாள்.

விஷ்ணுவின் அம்மா தேவகி அவளை வரவேற்று நன்றாக பேசினார். வெளியில் சென்றிருந்த விஷ்ணுவும் சில நிமிடங்களில் வந்து விட்டான்.

சிற்றுண்டியுடன் மேற்படிப்பு சம்பந்தமாக அவனுடன் ஆலோசித்துக் கொண்டிருக்க அவனது அப்பா கோபால் வந்தார். வாம்மா என மலரை வரவேற்றவர், மகனிடம், “கிளினிக் வைக்க நீ போய் பார்த்த இடம் வேணாம் விஷ்ணு. வேற பெரிய இடம் படியுற மாதிரி இருக்கு. அதை முடிக்கலாம்” என்றார்.

விவரம் கேட்டுக் கொண்டவன், “நம்ம பட்ஜெட்குள்ள வராதுப்பா. எடுத்த உடனே பெரிய கடன்ல சிக்க விரும்பல நான். பார்த்த இடமே எனக்கு திருப்திதான், அதையே முடிக்கலாம்” என்றான்.

“பட்ஜெட் பத்தி எல்லாம் எதுக்கு கவலை படுற? ஒரு பெரிய இடத்திலேர்ந்து சம்பந்தம் வருது, அதை முடிச்சிட்டா அவங்களுக்கு இந்த இடம் எல்லாம் ஒரு சமாச்சாரமே இல்லை” என்றார் கோபால்.

“எப்படிப்பா கொஞ்சம் கூட ஷை இல்லாம சொல்றீங்க இதை?” பிடித்தமின்மையை முகத்தில் காட்டி கூறினான் விஷ்ணு.

“இவன்கிட்ட சொல்லும்மா எப்படி முன்னேறுறதுன்னு. எங்கக்கா வீட்டுக்காரர் டாக்டருக்கு படிச்சதால மட்டும் கோடீஸ்வரன் ஆகல. கோடீஸ்வரியான எங்கக்காவை கட்டுனதாலதான் கோடீஸ்வரன் ஆனார். வாய்ப்பு எப்பவும் கிடைக்காது, கிடைக்கும் போது கெட்டியா பிடிச்சுக்கலைனா முட்டாள் ஆகிடுவோம்” என்றார் கோபால்.

“உங்கக்கா கோடீஸ்வரியா?” கிண்டலாக கேட்டான் விஷ்ணு. அவரது கூடப் பிறந்த அக்கா நெய்வேலியில் கணவரோடு வசிக்கிறார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் அவர்கள்.

“கூடப் பொறக்கலைன்னாலும் அன்பரசிக்கா எனக்கு அக்காதான்டா. எங்க ரெண்டு பேரோட அம்மாங்களும் கூட பொறந்தவங்க. நான் சின்னதா இருக்கும் போது என்னை தூக்கி தூக்கி வச்சுக்கும் எங்கக்கா. நான்னா எங்கக்காவுக்கு அவ்ளோ பிரியம்”

“அடிக்கடி இப்படித்தான் கதை சொல்றீங்க. நிஜமா அந்த அத்தைகிட்டயே நீங்க சொல்றது உண்மையான்னு கேட்க போறேன்” என மிரட்டினான் விஷ்ணு.

“கேளேன் டா, நான் என்ன பொய்யா சொல்றேன்? அக்கா கல்யாணத்தப்போ மாப்பிள்ளைக்கு மச்சான் செய்ய வேண்டிய முறையெல்லாம் நான்தான் செஞ்சேன்” என மார் தட்டினார்.

இன்னும் கொஞ்சம் கூட அன்பரசி அக்காவோடு தனது பந்தம் நெருக்கமானது எனும் ரீதியில் பேசியவர், “நாம அரசி அக்காவோட சொந்தம்னு தெரிஞ்சுதான் இந்த சம்பந்தம் வந்திருக்கு. பெரிய சிமெண்ட் ஆலை வச்சிருக்காங்க சென்னைல. பூர்வீகம் பொள்ளாச்சிதான். ஒரு பையன், ஒரு பொண்ணு. தொழில் பையனுக்குன்னாலும் அம்பது ஏக்கர்ல பொள்ளாச்சில இருக்க இடம் பொண்ணுக்குதானாம். தங்கத்திலேயும் வைரத்திலேயும் கிலோ கணக்குல நகை போடுவாங்களாம். சென்னைல ஒரு வில்லா வாங்கி கொடுத்திடுவாங்களாம்” அடுக்கிக் கொண்டே போனார் கோபால்.

விஷ்ணு முகத்தை கடுப்பாக வைத்துக்கொள்ள, “போதும் அங்கிள். பாருங்க அண்ணா இரிடேட் ஆகுறார். அண்ணனுக்கு இப்படி கல்யாணத்தை வியாபாரம் போல ஆக்குறதுல விருப்பம் இல்லை” என்றாள் மலர்.

“நல்ல பொண்ணும்மா நீ. உனக்கே உன் சித்தி ரொம்ப செய்முறை எதிர்பார்க்காம உன்னையும் படிக்க வைக்கிற மாதிரி வசதியான இடமாதான் பார்க்குறாங்க. இப்ப உன்னை கேட்டு வந்த இடம் பத்தி உன் சித்தி சொன்னாங்க. அவங்க ஏன் உன்னை எடுக்க இஷ்ட படுறாங்க… டாக்டர்னா சும்மாவா?”

“ப்பா போதும். விமலா ஆன்ட்டி இவளுக்கு சித்தி இல்லை, அப்படி சொல்லாதீங்க. நீங்க உள்ள போங்க, நான் கொஞ்ச நேரத்துல வந்திடறேன், அப்புறம் கிளினிக் இடம் பத்தி பேசலாம்” என சொல்லி அவரை அனுப்பி வைத்தான்.

“சாரி மலர், அப்பாவை எல்லாம் மாத்த முடியாது” என்றான் விஷ்ணு.

“இட்ஸ் ஓகேண்ணா. நான் தப்பா எடுத்துக்கல. ஆனா நீங்க இவ்ளோ இரிடேட் ஆகாம பொறுமையா அங்கிள்கிட்ட பேசுங்க” என்றாள்.

“பொறுமையாவா? ஏன் என் வைஃபை நான் நல்லா பார்த்துக்க மாட்டேனா? வசதிக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டா அதுல எதுவுமே அர்த்தம் கிடையாது மலர். பணம் சம்பாதிக்க படிக்கல நான், எனக்கு பிடிச்சு போய் படிச்சேன். இப்போ நான் ஃபேமஸ் இல்லாம போனாலும் குடும்பம் நடத்தற அளவுக்கு வருமானம் வராம போய்டுமா எனக்கு? ரெண்டு வருஷத்துல காலூனி நின்னிட மாட்டேனா? கல்யாணத்தை போய் பணத்துக்காக பண்ணிக்க சொன்னா கோவம் வராதா?”

“ஏன் ண்ணா யாரையும் லவ் பண்றீங்களா?” சந்தேகத்தோடு கேட்டாள் மலர்.

“ஏய் வாலு! அப்படி யாரும் இல்லை” என சொல்லி சிரித்தான் விஷ்ணு.

“ஓஹோ வைஃப லவ் பண்ணுவீங்களாக்கும்?” எனக் கேட்ட மலர் அவனது வெட்க சிரிப்பை வைத்து இன்னும் கிண்டல் செய்தாள்.

“எப்படிண்ணா பொண்ணு பார்க்க சொல்லணும் உங்களுக்கு?” என இவள் கேட்டுக் கொண்டிருக்க தேவகியும் வந்து விட்டார்.

“கிளினிக் ஆரம்பிச்சிக்கிறேன், அப்புறமா பார்க்கலாம்னு சொல்லிட்டான் மலர்” என்றார் தேவகி.

“சரிண்ணா லேட்டா பார்க்கலாம். ஆனா எப்படி பட்ட பொண்ணு வேணும்?” என மலர் மீண்டும் கேட்க தேவகியும் ஆர்வமாக மகனிடம் கேட்டார்.

“நிஜமா பெருசா எதிர்பார்ப்பு இல்ல மலர். பட் ஒரு விஷயம், அப்பா சொன்ன மாதிரி இல்லாம என்னை நம்பி எனக்காக ஒரு பொண்ணு வருவான்னு நம்பிக்கை இருக்கு. வர்றப்ப வரட்டுமே” என அமைதியான குரலில் சொன்னான்.

“வரட்டும் வரட்டும் யாரந்த அதிர்ஷ்டக்காரியோ?” என்றார் தேவகி.

“ம்மா இது கொஞ்சம் ஓவர்” என்றான் விஷ்ணு.

“பெத்தவளுக்குத்தான் புள்ள குணம் தெரியும். உன் அண்ணனுங்க மாதிரி இல்ல நீ. உனக்கு வரப் போறவ கொடுத்து வச்சவதான். என்ன மலர்?” என்றார் தேவகி.

“அப்படியா? இருங்க… ஸ்ரீதர் அண்ணாகிட்டேயும் ஹரி அண்ணாகிட்டேயும் போன் பண்ணி சொல்றேன்” என மிரட்டினாள் மலர்.

“லேட் பண்ணாம உடனே சொல்லு” என்ற விஷ்ணு அவனது கைபேசியில் பெரியண்ணன் நம்பரை எடுத்து கொடுத்து, “கால் பண்ணு” என சொல்லி அவளிடம் கொடுக்க, அவளும் அழைப்பு விடுக்க போவதாக சொல்ல, தேவகி கைபேசியை பறிக்க முயல என சின்ன கலாட்டாவானது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement