Advertisement

பேரன்பு பிரவாகம் -4

அத்தியாயம் -4(1)

காலையிலேயே அண்ணன் மகனை பார்க்க அவனது அறைக்கு வெளியில் காத்திருந்தார் தர்மேந்திரன். தமன் மூலம் விஷயம் தெரிந்தாலும் சற்று காக்க வைத்துதான் உள்ளே வர சொன்னான் பிரவாகன்.

“அண்ணி, நீ, கீர்த்தி எல்லாரும் ஃப்ரீ பிளாக் வந்தீங்களாம் நேத்து. என்னப்பா திடீர்னு என்கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லாம” எனக் கேட்டார் தர்மேந்திரன்.

ஒளித்து மறைத்தெல்லாம் பிரவாகன் பேசவில்லை. “ஏன் அங்க யாருக்கும் பேஷண்ட் வெல்ஃபேர் பத்தி அவார்னெஸ் இல்லாம இருக்கு? தேவையில்லாத சீன்ஸ் கிரியேட் ஆகுறதை நான் விரும்பல சித்தப்பா” என்றான்.

“யாரு புதுசா வந்திருக்க டாக்டர் சொன்னதா? எல்லாருக்கும் நல்லாவே தெரியும். அந்த பொண்ணுக்கு தெரியலைங்கிறதுக்காக ஒட்டு மொத்தமா இப்படி சொல்லலாமா பிரவா?”

“டாக்டர் கமலவேணிக்கு கூட தெரியாதாமே?”

“அப்படியா? நான் விசாரிக்கிறேன் பிரவா? ஆனா அப்படி இருக்க வாய்ப்பில்லை”

“வாட்எவர்… இப்ப ஒரு முறை இப்படி ஃபண்ட்ஸ் இருக்கிறது பத்தி எல்லாருக்கும் தெரிய படுத்துங்க. ட்ரஸ்ட் மூலமா வர்ற பணமெல்லாம் எங்க போகுதுன்னு தெரியலை, வார்ட்ஸ் கொஞ்சம் சுத்தமா மெயின்டெயின் பண்ணக்கூடாதா?” என எரிச்சலாக கேட்டான்.

சேதுராமர் பெயரில் ட்ரஸ்ட் ஒன்று இயங்கி வருகிறது. அதன் மூலமாக மாதம் பல கோடி ரூபாய்கள் இலவச மருத்துவமனைக்கு நிதி வருகிறது. அனைத்தையும் முறையாக செலவு செய்தாலே இங்குள்ள பெரும்பான்மையான தேவைகள் நிறைவேறும்.

வருமான வரி ஏய்ப்பு செய்வதற்காக பொய் கணக்கு காண்பிக்க படுகிறது. பிரவாகன் சம்மதத்தோடு நடக்கும் விஷயம்தான். அதாகப் பட்டது அந்த பணத்திலிருந்து ஒரு பைசா கூட வேறு தேவைக்காக எடுக்க சொல்லவில்லை அவன்.

ஆனால் அங்கு நிதர்சனத்தில் செலவாகும் தொகையை விட பன் மடங்கு அதிகமாக செலவீனங்கள் காட்டப் படுவது போல செய்ய சொல்லியிருந்தான். அந்த அதிகப்படியான தொகை மெடிக்கல் காலேஜிலிருந்து வசூலிக்க படும் கட்டண தொகையிலிருந்து செலவு செய்யப் படுவதாக கணக்கு காண்பிக்க படுகிறது.

 தன் சித்தப்பாவும் கொஞ்சம் போல சுரண்டல் செய்து பயன் பெறுகிறார் எனும் அளவில் நினைத்திருந்தான். அவன் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவில் பெருமளவில் பணம் சுருட்டப் படுவதை அவன் அறியான்.

தர்மேந்திரனின் மச்சினரும் பெரிய ஆடிட்டர். அவரது யோசனைகளை கொண்டு எங்கும் எதிலும் பிசிறு வராமல் பார்த்துக் கொள்வார் தர்மேந்திரன். ஆகவே கணக்கு வழக்கில் காணப் படும் ஓட்டைகளை அவனது ஆடிட்டரால் கண்டறிய முடியவில்லை.

அதை விட தர்மேந்திரனுக்கு அனைத்தையும் எளிதாக்கி தரும் வகையில் பிரவாகனின் கவனம் இங்கு இல்லவே இல்லை. அதை பயன்படுத்திக் கொண்டு உறவு என்னும் பெயரில் தர்மேந்திரன் குளிர் காய்கிறார்.

பிரவாகனுக்கு தான் மிகவும் நெருக்கம் எனும் பிம்பத்தை அனைவர் மத்தியிலும் அவர் ஏற்படுத்தியிருக்க அவரை பற்றி இவனிடம் குறை கூறும் தைரியம் யாருக்கும் அறவே இல்லை.

பிரவாகனை பொறுத்த வரையில் இலவச மருத்துவமனை பொருளாதார லாப நோக்கத்துக்கானது அல்ல. விளம்பரத்திற்காகவும் வெளியுலகில் நற்பெயரை வாங்குவதற்காகவும் அதி முக்கியமாக வரி ஏய்ப்பு செய்வதற்காகவும் உதவி செய்யும் கட்டிடம். அதன் நிர்வாகத்தை தலையில் தூக்கி சுமக்கவெல்லாம் அவனுக்கு துளியும் ஈடுபாடு கிடையாது.

அப்பா அவரது தம்பிக்கு கொடுத்த பொறுப்பு, நமக்கு ஆக வேண்டிய காரியம் தடையில்லாமல் நடக்கிறது, சித்தப்பா ஏதாவது செய்து கொள்ளட்டும் என அசட்டையாகத்தான் இருக்கிறான்.

இப்போது புகார் என வெளியில் வந்ததும் அம்மாவின் அதிருப்தியும் சேர்ந்து கொண்டு முதல் முறையாக சித்தப்பாவிடம் கேள்வி கேட்கிறான்.

“என்ன பிரவா ஏதோ போல பேசுறியே. எங்கண்ணன் இருந்திருந்தா இப்படிலாம் என்னை கேள்வி கேட்ருக்க மாட்டார்”

“கேட்டதுக்கு ஆன்சர் பண்ணாம இப்ப உயிரோட இல்லாத என் அப்பாவை இழுக்க வேண்டாம் அண்ட் அவரே இருந்திருந்தாலும் நான் கேள்வி கேட்பேன். அப்பா வழில வந்த பிராப்பர்ட்டி கிடையாது இது. எல்லாம் அம்மா வழில வந்தது. நீங்களும் இங்க ஒரு எம்ப்ளாயி, என்ன அப்பா கூட பொறந்தவர்ங்கிறதால கூட கொஞ்சம் சலுகைகள் கிடைக்குது” என கடினமான தொனியில் கூறினான்.

“நானும் உரிமைப்பட்டவன்னு சொல்லிக்கல பிரவா. ஆனா இது எங்கண்ணன் கொடுத்த பொறுப்பாச்சே… அப்போ அவரை பத்தி பேசாம இருக்க முடியுமா? எல்லாத்தையும் முறையாதான் செலவு செய்றேன். அண்ணன் இருந்தப்பவே டாக்ஸ் பிரச்சனை எதுவும் வராம இருக்க கொஞ்சம் அப்படி இப்படி அட்ஜஸ்ட் செய்றதுதானே? அதுதான் இப்பவும் நடக்குது. யாரும் மேலோட்டமா பார்த்திட்டு வந்து என்னை குறை சொன்னா நீயும் நம்பிகிட்டு கேள்வி கேட்பியா பிரவா?”

“சித்தப்பா ப்ளீஸ்… ஃப்ரீ பிளாக் பத்தி டீப்பா டிஸ்கஸ் பண்ற அளவுக்கு டைம் என்கிட்ட இல்லை. அதைவிட இன்ட்ரெஸ்ட்டும் இல்லை. எனக்கு வேண்டியது ஒண்ணுதான், இனி அங்கேருந்து எந்த கம்ப்ளைண்ட்டும் காத்து வாக்குல கூட என் காதுக்கு வரக்கூடாது. ரெபூடேஷனுக்காக இங்க உயிரை கொடுத்து உழைச்சிட்டு இருக்காங்க எல்லாரும். ரொம்ப ஈஸியா அதை ஸ்பாயில் பண்ண பாரக்காதீங்க” என்றான்.

“பிரவா! நானும் கூடத்தான் என்னால ஆன அளவு உழைக்கிறேன்”

“என்ன சித்தப்பா… என்ன… என்ன சொன்னீங்க?” இடக் கை சுண்டு விரல் கொண்டு இடப் பக்க காதை குடைந்து கொண்டே அவன் கேட்க, என்ன நினைத்துக்கொண்டு இப்படி கேட்கிறான் என புரியாமல் விழித்தார் தர்மேந்திரன்.

“தேவையில்லாத கட்டுக் கதைகள் பத்தி பேச வேணாம் சித்தப்பா” என நக்கலாக அவன் சொல்ல, மறுப்பாக ஏதோ சொல்லப் போனார் தர்மேந்திரன்.

“கேள்வி கேட்டா பதில் மட்டும் சொல்லுங்க போதும்னு ஏற்கனவே சொன்னேனே” என சொல்லி அவரை பேச விடாமல் செய்தவன், “நான் பேசுறதை மட்டும் கேளுங்க” என கட்டளையிட்டான்.

தர்மேந்திரனின் முகம் கறுத்து சிறுத்து போனது. ஆனாலும் அப்படியே விட்டால் தான் உழைக்கவில்லை என்றாகி விடுமே என நினைத்தவர் தைரியத்தை திரட்டி வாயை திறந்தார்.

“நிறைய அப்பாயிண்ட்மெண்ட்ஸ் கொடுத்திருக்கேன். ஆம் ரன்னிங் அவுட் ஆஃப் டைம்” என அவன் சொன்னதில் உடனே பவ்யமாக வாயை மூடிக் கொண்டு விட்டார் தர்மேந்திரன்.

“டாக்டர் கமலவேணிகிட்ட தேவையானது செஞ்சு தர்றேன்னு அம்மா சொல்லிட்டாங்க. அத கொஞ்சம் என்னன்னு பாருங்க. அவங்க கேட்கிறதுல ரொம்ப தேவைங்கிறத… புரிஞ்சுதா… ரொம்ப தேவைங்கிறத மட்டும் உடனே செஞ்சு கொடுத்திடலாம். தேவைப்படுற ஃபண்ட்ஸ் கொடுக்கிறேன். பட் ஃபண்ட்ஸ் நான் தர்றத விட அதிகம் கணக்குல வர்ற மாதிரி பாருங்க. ஆடிட்டர் லக்ஷ்மணை ஈவினிங் போய் பாருங்க. அவர் சொல்ற படி செய்ங்க” என்றான்.

சரி என அவர் சொல்ல, “அங்க பேஷண்ட்ஸோட ஆன்னுவல் டெத் ரேட் அதிகம் ஆகுறதுல நமக்கு என்ன யூஸ்? ரொம்ப கிரிட்டிகல், இங்க வச்சு ட்ரீட் பண்ண முடியாதுன்னா ஏன் கேஸ் எடுக்கிறாங்க? ஜிஹெச் கொண்டு போக சொல்லுங்க. ஒன்னொன்னா நான் டிக்டேட் பண்ணிட்டு இருக்க முடியாது” என்றான்.

“இந்த வாரமே மீட்டிங் போட்டு எல்லாருக்கும் எல்லாத்தையும் சொல்லிடுறேன் ப்பா”

“ஏன் இன்னிக்கு வேற எதுவும் முக்கியமான வேலை இருக்கா உங்களுக்கு? இழுத்தடிக்காம வேகமா செய்யுங்க. அங்க உள்ள ஸ்டாஃப்ஸ் பெய்ட் பிளாக்ஸ்ல கூப்பிட்டாலும் வர வேணாம்னு சொல்லுங்க. இங்கேயும் நான் சொல்லிடுறேன். அதெல்லாம் ஒரு இஸ்ஸுன்னு என் காதுக்கு வந்துச்சு…” பற்களை நெரித்தான்.

“இல்லப்பா நான் பார்த்துக்கிறேன்”

தலையசைத்துக் கொண்டவன், “குட், கிளம்புங்க” என்றான்.

‘ஹப்பா வுட்டுட்டான்!’ எனும் விதமாக பெரிய மூச்சை விட்டவர், “அந்த டாக்டர் அன்புமலரை…” என கேட்டு கேள்வியாக பார்த்தார்.

இருக்கையில் நன்றாக சாய்ந்து கொண்டவன் ஐந்து நொடிகள் கண்களை மூடி யோசித்தான்.

“ரொம்ப சர்வீஸ் மைண்ட் உள்ளவங்களா இருக்காங்க. எவ்ளோ தைரியமா கீ எடுத்து மெடிசின் எடுத்திட்டு போயிருக்காங்க? பிரேவரி அவார்ட் கூட கொடுக்கலாம். அட்லீஸ்ட் அப்ரிஷியேட்டாவது பண்ணிடுங்க” என்றான்.

தர்மேந்திரன் வாயை பிளந்து கொண்டு வியப்பாக அவனை பார்க்க, “ஹாஸ்பிடல் சார்புல மெடிக்கல் கேம்ப் போடும் போது ரொட்டேஷன் பேஸிஸ்ல டாக்டர்ஸ் போவாங்கதானே? இனி டாக்டர் மலர் எல்லா கேம்ப்புக்கும் அது எங்…க நடந்தாலும் போவாங்க. காட் மை பாயிண்ட் சித்தப்பா?” எனக் கேட்டான்.

புரிந்தது எனும் விதமாக சிரித்தவர் உடனே வெளியேறி விட்டார்.

தமனை அழைத்த பிரவாகன், “நம்ம ஐ டி விங்க் மூலமா ஃப்ரீ பிளாக்ல பேஷண்ட் உயிரை காப்பாத்தினது சோசியல் மீடியால வைரல் ஆகணும். அந்த பொண்ணோட ஹஸ்பண்ட், அம்மா ரெண்டு பேரையும் பேச வச்சு வீடியோ வர்ற மாதிரி செய்ய சொல்லு” என சொல்ல உடனே கைபேசியோடு நகர்ந்தான் தமன்.

ஜே சி ஐ க்காக என்ன செய்யப் பட்டு கொண்டிருக்கிறது என வழக்கம் போல ரிப்போர்ட் செய்வதற்காக வந்தார் பத்மநாதன். அடுத்து முதல் நாள் பிரச்சனை குறித்தும் சரத்தை கண்டித்து விட்டது குறித்தும் ரிப்போர்ட் செய்ய வந்தார் டீன்.

வெளிநாடுகளில் இருந்து சிகிச்சை பெற வரும் நோயாளிகளை கவனிக்கவென ஒரு சிறப்புக் குழு இருந்தது. அதன் தலைமை நிர்வாகி வந்து சென்றார்.

வி ஐ பி வார்டில் மிகப்பெரிய சினிமா பிரபலம் ஒருவர் அனுமதிக்க பட்டிருந்தார். வி ஐ பி களுக்கான சிறப்புக் குழுவின் நிர்வாகி வந்து சென்றார்.

இப்படி பிஸியாக பிரவாகன் இருந்தாலும் மூளையின் ஒரு பகுதி மட்டும் அவ்வப்போது மலரை நினைவு படுத்திக் கொண்டே இருந்தது. என்னவோ அவள் மட்டும் தன் உயரம் கண்டு பிரமிக்காமல் சுலபமாக தன்னை அணுக நினைப்பதும் பணி இடை நீக்கம் செய்வதாக நேற்று சொன்ன போது அலட்டிக் கொள்ளாமல் நின்றதும் புகைச்சலை ஏற்படுத்தியது.

இப்போது கூட அவளை பற்றிய சிந்தனை தன் பணிகளில் கவனச்சிதறல் ஏற்படுத்துவத்தை உணர்ந்தவனுக்கு இன்னும் அவள் மீது கோவம் பொங்கியது.

தர்மேந்திரனது அறையில் சூப்பரிடெண்ட்டண்ட் ஏகாம்பரம், கமலவேணி, மலர் மூவரும் இருந்தனர்.

“அப்புறம் நிறைய டான் வேலையெல்லாம் நம்ம டாக்டர்ஸ் பார்க்கிறாங்களாம், கேள்வி பட்டேன்” நக்கலாக கேட்டார் தர்மேந்திரன்.

“பேஷண்ட்டுக்காக மட்டும்தான் அப்படி. அரசி மேடத்துக்கு கூட தெரியும் சார்” என்றார் கமலவேணி.

“எனக்கு சொல்லணும்னு உங்களுக்கு தெரியாதா?” கோவமாக கேட்டார் ஏகாம்பரம்.

“காலைல ஹாஸ்பிடல் வந்ததும் இன்ஃபார்ம் பண்ணலாம்னு இருந்தேன்” என கமலவேணி சொன்னதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை அவர்கள் இருவரும்.

“இன்னொரு முறை இது போல தவறை என்னால ஏத்துக்க முடியாது. உங்க வேலைய மட்டும் பார்த்திட்டு போனா எல்லாருக்கும் நல்லது” என எச்சரிக்கை போல சொன்னார் தர்மேந்திரன்.

மலர் எதுவும் பேசவில்லை. எப்படியும் அரசி மேடம் உறுதி அளித்திருப்பதால் இவரிடம் அமைதியாக போய் விடலாம் என இருந்தாள்.

 அவளது எண்ணத்தை அறிந்தது போல ஏளனமாக சிரித்த தர்மேந்திரன், “உங்க ரிக்குயர்மெண்ட்ஸ் லிஸ்ட் ரெடி ஆகிடுச்சுன்னா ஏகாம்பரம் சார்கிட்ட கொடுங்க. அவர் என்கிட்ட கொடுப்பார்” என்றார்.

அதிர்ந்து போன மலர் கமலவேணியின் முகத்தை பார்க்க மேசையில் தட்டிய தர்மேந்திரன், “புரிஞ்சுதா?” என அதட்டலாக கேட்டார்.

புரிந்தது என சொல்லிய கமலவேணி மலரை அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.

“லிஸ்ட் இவர்கிட்ட ஏன் தரணும்? டைரெக்ட்டா அரசி மேடத்துகிட்டயோ பிரவாகன் சார்கிட்டயோதானே தரணும். அப்பதான கிடைக்க வேண்டியது ஒழுங்கா கிடைக்கும்? நாம இன்னொரு முறை அரசி மேடம்கிட்ட பேசிப் பார்க்கலாம் மேம்” என்றாள் மலர்.

“அதெப்படி முடியும் மலர்? அவங்கள எப்படி கான்ட்டாக்ட் பண்ணுவ? அப்படியே அவங்ககிட்ட சொன்னாலும் என்ன நடந்திடும்? பிரவாகன் ஸாருக்கு தெரியாமதான் இவர் இப்படி பேசிட்டு இருக்காரா? பல வருஷமா நான் இருக்கேன் இங்க. யாராலேயும் எதையும் சீர் செய்ய முடியாது.” விட்டேற்றியாக சொன்னார்.

“டிரை கூட பண்ணாம இப்படி சொன்னா எப்படி மேடம்?”

“உனக்கு சரியா புரியலையா மலர்? இந்த திமிங்கலத்தை மீறி எதுவும் செய்ய முடியாது உன்னால. நீ அமைதியா இரு”

“இந்தாளுகிட்ட லிஸ்ட் கொடுக்கிறதுன்னா லிஸ்ட் ரெடி பண்றதே அட்டர் வேஸ்ட். இவர் செய்ற அநியாயத்தை பார்த்துகிட்டு சும்மா இருக்க சொல்றீங்களா?” ஆதங்கமாக கேட்டாள்.

“இதால உன் நிம்மதி போகுதுன்னா இங்க வேலைய விட்ரு மலர். வேற ஹாஸ்பிடல் போ” என அறிவுரை வழங்கினார்.

எதுவும் பதில் சொல்லாமல் வருகிறேன் என்பது போல தலையசைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement