Advertisement

அத்தியாயம் -38(3)

ஒரு தேநீர் கடையில் குழுமி இருந்தவர்களிடம் பேசி விட்டு அவர்களிடம் விழிப்புணர்வு காகிதங்களை வழங்கிய மலர் நெற்றியில் வடிந்த வியர்வையை ஒற்றி எடுத்துக் கொண்டே நடை போட, வானத்தை நிமிர்ந்து பார்த்த பிரவா, “இன்னிக்கு என்ன மேன் டெம்ப்ரேச்சர்?” என தமனிடம் கேட்டுக் கொண்டே மனைவியை நோக்கி நடந்தான்.

“என்னவா இருந்தாலும் நம்மளால ஒண்ணும் செய்ய முடியாதுங்க ஸார்” என்ற தமனை முறைத்தவன் மலரை சமீபித்து விட்டான்.

கணவனை கண்டவள் என்னவென பார்வையால் கேட்டாள்.

“நீ பண்ற அழிச்சாட்டியம் தாங்க முடியலை மலர், உன்னை கேம்ப்க்கே போக கூடாதுன்னு சொன்னேன், நீ என்னடான்னா இந்த வெயில்ல தெரு தெருவா அலைஞ்சிட்டு இருக்க” என கடிந்தான்.

“நடக்கிறது நல்லதுதானே? என்னை ஸ்ட்ரெயின் பண்ணிக்காமதான் எல்லாம் செய்றேன்” என்றாள்.

“நீ பார்த்த வரை போதும், கிளம்பு உடனே” அவளது கையை பிடித்து இழுத்தான்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்க எங்கிருந்தோ குடையுடன் ஓடி வந்தான் இழந்த வேலையை மலரால் திரும்ப பெற்ற குரு. அங்குதான் அவனது வீடு உள்ளது.

“நல்ல வெயிலுங்க மேடம்” என்றவன் குடை விரித்து அவளுக்கு பிடித்தான். சங்கட பட்டவள் அவளே வாங்கிக் கொண்டு, “கொஞ்ச நேரம்தானே குரு?” எனக் கேட்டாள்.

“இருக்கட்டும்ங்க மேடம், ரெட்டை புள்ள வேற” என இவன் சொல்ல, அவனை முறைத்துக் கொண்டே குடையை தன் கையில் பிடித்துக்கொண்டான் பிரவாகன்.

“வெயிலுக்கு குடை பிடிச்சது ஒரு குத்தமா ஸார்?” பிரவா காதில் கிசு கிசுத்தான் தமன்.

“என் பொண்டாட்டிக்கு இவன் என்னடா குடை பிடிக்கிறது? அப்புறம் நான் எதுக்கு இருக்கேன்?” பிரவாவும் சின்ன குரலில் சொன்னான்.

“இவ்ளோ வெயில்லேயும் குடைக்குள் மழை ஸார், சாதாரண மழை இல்லை, இடி மின்னலுக்கு அப்புறமா வந்த உங்க சாரல் மழை”

“போடா டேய், குடைக்குள்ள என் மலரும் பசங்களும்டா” அனுபவித்து ரசனையாக பிரவா சொல்ல, தன் முதலாளியை இப்படி பார்க்க தமனுக்கு அத்தனை நிறைவாக இருந்தது.

“கொடுங்க என்கிட்ட” ‘நான் வெட்க படவே இல்லையே’ என காட்டிக் கொள்ள பிரயத்தனப் பட்டுக் கொண்டே கணவனின் கையிலிருந்த குடைக்கம்பியை பிடித்தாள்.

“அவர் பசங்கள நீங்க சுமக்குறீங்களாம் மேடம், குடையையாவது எங்க பாஸ் சுமந்துக்குறாராம்”

“ப்ளீஸ் கொடுங்க” கெஞ்சலாக சொன்னாள் மலர்.

“எங்க பாஸ் குடை பிடிச்சதை சுத்தி இருக்கிற எல்லாரும் பார்த்தாச்சுங்க மேடம், இனிமே வாங்கி என்ன செய்ய போறீங்க?” விடாமல் கிண்டல் செய்தான் தமன்.

“முதல்ல தமனை இங்கேருந்து போக சொல்லுங்க” மலர் சொல்ல, அவளை பார்த்துக் கொண்டே, “தமன்…” என்றான் பிரவா.

“என் வைஃப் விட அதிகமா உங்க கூடத்தான் ஸார் இருக்கேன், இவ்ளோ ஏன் மேடத்தை விட அதிக நேரம் என்னோடதான் இருக்கீங்க நீங்க, என்னை போக சொல்வீங்களா?” ஒரு முடிவோடு இருந்த தமன் வம்பு செய்வதை நிறுத்துவதாக இல்லை.

இத்தனை உரிமை வேறெந்த பணியாளருக்கும் கிடையாதே, அவர்கள் சுவாரஷ்யமாக வேடிக்கை பார்த்தனர்.

“அதெப்படிடா என் கூட அதிக நேரம் நீதான் இருக்கன்னு நீயே சொல்லிப்பியா?” பிரவா செல்லமாக தமனை கடிய, “ஓ ஓ ஓஹோ… கரெக்ட்தான் ஸார்” என்றவன் மலரை பார்த்து, “நீங்க வெறும் மலர் இல்லையாம் மேடம், ஸாரோட இதய தாமரை மலராம், எல்லா நேரமும் அவரோடதான் இருக்கீங்களாம்” என்றான்.

தமனை கடிய முயன்ற மலரால் அப்படி செய்ய முடியவில்லை, ஒரு கையால் முகம் மறைத்து கண்களை மூடி “ஹையோ போதும்!” என்றாள்.

“போதும் படுத்தாதடா அவளை, கேம்ப் நடக்கிற இடத்துக்கு போ, நாங்க வர்றோம்” மலரை விட்டு பார்வையை அகற்றாமலே பேசி தமனை அப்புற படுத்தினான் பிரவா.

குருவின் மனைவி எலுமிச்சை பழச்சாறு எடுத்து வந்து வழங்கினாள். மலரும் மற்ற ஊழியர்களும் வாங்கிக் கொள்ள, பிரவா தயக்கமாக பார்க்க, மலரே எடுத்து அவனிடம் கொடுக்க வாங்கிக் கொண்டான்.

குருவின் மனைவியோடு பேசிய மலர் பழச்சாறு பருகியதும் அவளது பணியை பார்க்க நகர பிரவா விடவில்லை.

 வந்ததற்கு ஒருவரையாவது தானம் வழங்கும் படி செய்யாமல் எப்படி வர என அவள் கேட்க, “பிளட் டொனேஷனுக்கு ஆள்தானே வேணும், நான் தர்றேன் மேடம், இன்னும் கூட ஆளுங்க அழைச்சிட்டு வர்றேன் மேடம், நீங்க போங்க” என்றான் குரு.

“தேங்க்ஸ் குரு” என்றவள் எப்படி பட்டவர்களை அழைத்து வரலாம் வரக்கூடாது என அவனுக்கு சொல்லி விட்டு பிரவாகனோடு நடந்தாள். அவன் காரில் ஏற சொல்ல பக்கம்தானே நடந்தே செல்லலாம் என்றாள்.

பெரிய வயிற்றோடு அவள் நடப்பதை பார்க்கவே அவனுக்கு பயமாகத்தான் இருந்தது. இரவிலும் உறங்க முடியாமல் அவளுக்கு நல்ல அவஸ்தைதான். அவளோடு சேர்ந்து அவனும் உறங்குவதில்லை. எதுவும் தொந்தரவு செய்கிறது என வாய் திறந்து சொல்வதே இல்லை மலர். அவள் முகம் மாறினாலே இவன்தான் பதற்றம் கொள்கிறான்.

சென்ற முறை மலரை காண வந்திருந்த கீர்த்தி கூட, “இவ சுமந்தாலும் நீதான்டா அவஸ்தை படுற” என சொல்லியே விட்டாள்.

“ஏன் க்கா இவளுக்கு இப்படி இருக்கே, உள்ள கொஞ்சோண்டு இடத்துல எம் பசங்க எப்படிக்கா கம்ஃபர்ட்டா இருப்பாங்க? அவங்களுக்கும் அவஸ்தையாதான் இருக்குமா?” என சந்தேகம் வேறு கேட்டு அவன் அறிவுக் கூர்மைக்காக அக்காவிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டான்.

ஒரு தனிமை பொழுதில் “மூணு வருஷம் ஆனதும் திரும்ப பிள்ளை பெத்துக்கலாம்” என மலரிடம் சொல்லி, “ப்ரெக்னண்ட் கால தொந்தரவு பிரசவ வேதனை எல்லாத்தையும் கூட தாங்கிக்கலாம், உங்களை சமாளிக்கத்தான் கஷ்டமா இருக்கு. இனியெல்லாம் புள்ள பெத்து தர மாட்டேன்” என இவளும் விளையாட்டாக சொல்வதை ஏற்றுக்கொள்ளாமல் செல்ல சண்டைகள் போட்டான்.

பிரவாகனுக்கு இன்னும் இந்த மகப் பேறு தந்த பிரமிப்பு நீங்கவில்லை. குழந்தைகளின் வரவைத்தான் ஆவலாக எதிர் நோக்கியிருக்கிறான்.

“என்னங்க அமைதியா வர்றீங்க?” எனக் கேட்டாள் மலர்.

“ஒண்ணுமில்ல, எனக்கு ஹாஸ்பிடல்ல வேலை இருக்கு, லேட் பண்ணாம கிளம்புனீனா நல்லாருக்கும்” என்றான்.

“எதிர்பார்த்த அளவு டோனர்ஸ் வரலை, நீங்க கிளம்புங்கப்பா, நான் ஈவ்னிங் வர்றேனே” என்றாள்.

“உன்னை இப்படி இங்க விட்டுட்டு ஒரு வேலையும் ஓட மாட்டேங்குது மலர், சொன்னா புரிய மாட்டேங்குது உனக்கு”

“அட்லீஸ்ட் ரெண்டு டோனராவது வரட்டும்”

“அதான் குரு வர்றானே?”

“ஹான்! குருவை கணக்குல எடுக்காம சொன்னேன்”

“எவடி இவ?” சலித்துக் கொள்ள கேம்ப் நடக்குமிடம் வந்து விட்டது. மலரின் காப்பாளர்கள் இரத்த தானம் செய்து கொண்டிருக்க, திகைப்போடு மலரை பார்த்தவன் சட்டென தமனை பார்க்க அவன் பயத்தோடு ஓரடி பின்னால் நகர்ந்தான்.

“தமன்…” பிரவா இழுத்து அழைக்க, “எவ்ளோ உடம்பு முடியாம போனாலும் மாத்திரை மட்டும்தான் சாப்பிடுவேன் ஸார், ஊசில ப்ரிக் பண்றதுன்னாலே எனக்கு பயம் ஸார், வேணாம் ஸார்” என்றான்.

“ரெண்டு டோனர்ஸ் கிடைக்காம இவ இங்கேருந்து நகர மாட்டாளாம், வாடா, டூ டேஸ் லீவ் வேணும்னாலும் கொடுக்கிறேன்”

“ஒரு வருஷத்துக்கு லீவே வேணாம் ஸார்” சத்தமில்லாமல் அலறினான் தமன்.

மலர் பொறுமையாக அவனிடம் பேசி சம்மதிக்க வைத்து விட்டு திரும்ப, “நானும் டொனேட் பண்றேன், பட் நீதான் எடுக்கணும்” என்றான் பிரவா.

மலர் நம்பாமல் பார்க்க, “டைம் இல்ல மலர்” என்றவன் எங்கே சென்று படுக்க என பார்க்க, மலரே அவனை அழைத்து சென்றாள். அவனுடைய பரிசோதனைகளை செய்தவள் இரத்தம் சேகரிக்க ஆரம்பித்தாள்.

அவன் தானம் செய்து முடித்ததும் மாதுளை பழச்சாறை கொடுத்தாள்.

“நீ குடி, எனக்கு வேணாம், எல்லாம் ஆச்சுன்னா கிளம்பலாம் வா” என்றான்.

“ப்ச்… டயர்டா இருக்கும் உங்களுக்கு, சாப்பிடுங்க” வற்புறுத்தி சாப்பிட வைத்தாள்.

 பழச்சாறு கோப்பையுடன் இவர்களிடம் வந்த தமன், “என் இரத்தத்தை உறிஞ்சி வேலை வாங்குறீங்க ஸார். சண்டேன்னு கூட பார்க்காம வேலைக்கு வர்றவனுக்கு இது தேவைதான், நான் கிளம்பறேன் ஸார்” என்றான்.

“போடா புள்ள பூச்சி!” என்ற பிரவாகன் அவனை வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.

இதற்கு மேலும் கணவனை சமாளிக்க இயலாது என கிஷோரிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு அவனோடு புறப்பட்டு விட்டாள் மலர்.

காரில் அமர்ந்த உடன் கணவனை இழுத்து அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு விலகினாள்.

“தானா வந்து முத்தம் கொடுக்க முன்னூத்தி அம்பது மில்லி ரத்தம் தரணுமாடி நான்? காஸ்ட்லி முத்தம் மலர்” என்றான்.

அவன் முகத்தை திருப்பி இன்னொரு கன்னத்திலும் அழுந்த முத்தமிட்டாள்.

“பேரம் பேசினா இன்னும் கிடைக்குமோ?” அவள் முகத்தை பார்த்து சிரிப்போடு கேட்டான்.

வெட்கமாக சிரித்துக்கொண்டே அவன் இதழ்களை நெருங்கி அவன் ஆசைப் பட்டதை வழங்கி விட்டு விலகினாள். முதல் முறை கொடுத்த இதழ் முத்தம் அதற்கு முன்னர் இவன் தலையில் அவள் அடித்தது எல்லாம் அனிச்சையாக இருவருக்குமே நினைவு வர சிரித்துக்கொண்டனர்.

“எவ்ளோ மாற்றம் உங்ககிட்ட? இன்னிக்கு நீங்க செஞ்சது வேற லெவல்” என்றாள்.

“என்கிட்ட ஒரு மாற்றமும் இல்லை, உன்னை அங்கேருந்து கிளப்பறதுக்காக டொனேட் பண்ணினேன், ஜஸ்ட் ஃபார் யூ!” தோள்களை குலுக்கிக் கொண்டே சொன்னான்.

அவள் அவனை நெருங்கி வர, கவனிக்காதவன் அவளது வயிற்றில் கை வைத்து, “நீங்க பொறந்து வாங்கடா, அப்புறம் ஸாஃப்ட்டா எல்லாம் இவளை ஹேண்டில் பண்ண மாட்டேன்” என்றான்.

முத்தமிட வந்தவள் அவன் தோளில் வலிக்க கிள்ளி வைத்தாள். குனிந்து அவளது வயிற்றில் முத்தங்களிட்டவன், “என்னதான் நீ சுமந்தாலும் என்னால மட்டும்தான் பசங்களுக்கு முத்தம் கொடுக்க முடியும்” என்றான்.

அவனை செல்லமாக அவள் முறைக்க, கண்கள் சிமிட்டி ரசித்தவன் காரை எடுத்தான்.

இடையிடையில் மலரை பிறந்த வீட்டிற்கு அனுப்பினாலும் பெரும்பாலும் அவனுடன் இருக்கும் படிதான் வைத்துக்கொள்வான். பாசம், அதீத அக்கறை என்பதை விட அவளை யாரை நம்பியும் விட பயம் எனதான் சொல்ல வேண்டும். தன்னை தவிர வேறு யாராலும் அவளை பார்த்துக் கொள்ள முடியாது என அவனே நினைத்துக்கொண்டான்.

சிசேரியன் செய்வதற்காக அனுமதிக்க பட்டாள் மலர். பிரவாகனின் முகம்தான் வெளிறிப் போயிருந்தது.

 “உங்களை இன்னும் இன்னும் படுத்தி வைக்க ரெண்டு பேரை அழைச்சிட்டு வந்திடுவேன், மூஞ்ச நல்லா வைங்க” தனக்காக பயந்து நிற்பவனை பெருமை பொங்க பார்த்த வண்ணம் கூறினாள்.

அவள் கைகளை எடுத்து தன் முகத்தில் பதித்து உள்ளங்கைகளில் மென்மையாக முத்தங்கள் இட்டு, “சீக்கிரம் வாங்க, வெயிட் பண்ணிட்டு இருப்பேன்” என்றான்.

தைரியமாகவே அறுவை சிகிச்சை அரங்கம் சென்றாள் மலர்.

செல்வம், விமலா, கீர்த்தி, மிருணா, விஷ்ணு என உறவுகள் குழுமி விட்டனர். யாரிடமும் ஒரு வார்த்தை பேசாமல் ஓரமாக போய் அமர்ந்து கொண்டான் பிரவாகன்.

இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்து விட்டதாக தகவல் வரவும் உடலும் உள்ளமும் சிலிர்க்க எழுந்து நின்றான் பிரவாகன்.

குழந்தைகள் நல மருத்துவர் ஒருவர் ஒரு குழந்தையை ஏந்தியிருக்க செவிலியர் ஒருவர் இன்னொரு குழந்தையை ஏந்தியிருந்தார். பிரவாகனால் வேகமாக துடித்த அவனது இதயத் துடிப்பை உணர முடிந்தது.

பிரவாகனின் மன நிலை புரிந்தவன் போல இரண்டு குழந்தைகளையும் அவன் கையில் வாகாக பிடித்துக்கொள்ள உதவினான் விஷ்ணு.

கை கால் முளைத்த அந்த இரட்டைக் கவிதைகளில் யாரிடம் பார்வை வைப்பது என்றே பிரவாகனுக்கு தெரியவில்லை.

 வசீகரித்த முகங்களும் மினு மினுத்த கரு வண்டு கண்களும் சிவந்த குட்டியான உதடுகளும் மென்மையான கன்னங்களும் பார்க்க பார்க்க அவனுக்கு திகட்டவே இல்லை.

 இவர்கள் என் வாரிசுகள் என்ற நினைவில் அவனுடைய நெஞ்சம் விம்ம தொடங்கியது.

பணம், செல்வாக்கு, அதிகாரம் அனைத்தையும் மீறிய உணர்வு அது. தான் என்ற செருக்கு சரிந்த நேரம் அது. அவனிலிருந்து ஜனித்த உயிர்கள் இந்த பிரபஞ்சத்தின் அதிசயத்தை அவனுக்கு உணர்த்தி விட்டனர்.

அத்தனை பத்திரமாக பிள்ளைகளை பிடித்திருந்தவன் மெல்ல தன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.

மிருணா கண்கள் கலங்க தன் கணவனின் கையை இறுக பிடித்துக்கொண்டாள். சின்ன சிரிப்புடன் ஆதரவாக அவளது தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் விஷ்ணு.

பெரியவர்கள் நிறைவாக பார்த்தனர். கீர்த்தி தன் தம்பியை ரசித்து பார்த்திருந்தாள்.

“பாஸ் நிமிருங்க, ஒரு ஸ்னாப் எடுக்கிறேன்” என்றான் தமன்.

தமன் புகைப்படம் எடுக்க தயாராக கையில் கைப்பேசி வைத்திருக்க, பிள்ளைகளின் முகங்களை இன்னொரு முறை பார்த்துக் கொண்ட பிரவாகன் மெதுவாக நிமிர, ஒரு நொடி அங்கே அசாத்திய மௌனம்.

பிரவாகனின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.

அவனை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும் அந்த கண்ணீர் பெரும் பிரவாகத்துக்கு இணையானது என. அது பேரன்பின் பிரவாகம் அன்றி வேறென்ன?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement