Advertisement

அத்தியாயம் – 38(2)

ஸ்வேதாவும் கர்ப்பிணிதானே. முதல் பிரசவத்தின் போதுதான் இரு குடும்பங்களின் ஆதரவும் இல்லாமல் இருந்தாள். இப்போது வரை பிறந்த வீட்டில் அவளை ஏற்றுக் கொள்ளவில்லை. இரண்டு வயது மகனை வைத்துக்கொண்டு பிரசவத்தை எப்படி சமாளிப்பது என்ற பயம் இப்போது வந்துவிட்டது.

மாமியார் வீட்டில் அனைத்து வேலைகளுக்கும் ஆள் இருக்க அங்கு செல்லலாம் என தோன்றியது. ஆயினும் மாமியாரை ஒரு பொழுது கூட ஒழுங்காக கவனிக்காமல் தனக்கு வேண்டும் என்றதும் தானாக செல்ல தயக்கமாகவும் இருந்தது.

 கணவனிடம் மட்டும், “கடைசி மருமகளும்தான் அவங்கள கவனிச்சுக்கல. உங்க தம்பி மட்டுமா… நீங்களும்தான் அடிக்கடி போய் உங்கம்மாவை பார்த்துகிட்டீங்க. இப்ப மிருணாளினிய மட்டும் வீட்ல வச்சு பார்த்துக்கிறாங்க உங்கம்மா, என்னை கண்டுக்கவே இல்லை. பார்ஷியாலிட்டி காட்டுறாங்க பாருங்க” என குறை சொல்லி அவனை தூண்டி விட்டாள்.

“சொத்துல பங்கு வாங்குறது நம்ம உரிமை, நீங்க நல்ல வேலைல இருக்கீங்க, எங்கப்பாம்மா வேற வெள்ளந்தியா எல்லா சொத்தையும் உங்களுக்கு தர போறாங்க. அதனால உங்க உரிமைய உங்களுக்கு கொடுக்காம ஏமாத்த பார்க்கிறாங்க. மிருணாளினிக்கு எல்லாம் செஞ்சு அவ மூலமா அவ அண்ணனை கவர் பண்ண பார்க்கிறாங்க. உங்க உரிமைய நிலை நாட்டுங்க” என கண்டதையும் சொல்லி ஸ்ரீதரை கோவைக்கு ஏவியிருந்தாள் தர்ஷணி.

 அண்ணன்கள் இருவரும் வந்து அம்மாவிடம் பேசுவதை கேட்க கேட்க விஷ்ணுவுக்கு அலுப்பாக இருந்தது.

“என்ன வேணும்னாலும் பேசலாம்னு என் வைஃபை உள்ள இழுத்து பேசக்கூடாது, அந்த உரிமை உங்க யாருக்கும் இல்லை” என கடிந்து கொண்ட விஷ்ணு, அப்பாவை அழைத்து, உயில் மட்டும் எழுதி வைத்து விடுங்கள், அம்மாவுக்கும் பங்கு இருக்க வேண்டும் என சொன்னான்.

ஸ்ரீதரும் விஷ்ணுவும் செட்டில் ஆகி விட்டனர், ஆகவே எனக்கு கூடுதல் சொத்து வேண்டும் என்றான் ஹரி.

சரி சமமாகத்தான் பிரிக்க வேண்டும், உயில் எல்லாம் வேண்டாம், இப்போதே சொத்தை பிரித்து எங்கள் பெயரில் எழுதி வைத்து விடுங்கள் என்றான் ஸ்ரீதர்.

உயில்தான் எழுதுவேன், இப்போது பிரித்து தர மாட்டேன் என கோபால் சத்தம் போட, மூத்த மகன்கள் இருவரும் வாக்குவாதம் செய்ய தேவகிக்கு அழுகையாக வந்தது.

மலர் அவளது பிறந்த வீட்டுக்கு வந்திருக்க, மிருணாவும் அங்கு சென்றிருந்தாள். ஆகவே இங்கு நடப்பது எதுவும் அவளுக்கு தெரியவில்லை.

மனம் நொந்து போன விஷ்ணு, “ஏன் ப்பா சண்டை போடுறீங்க? சமமா பிரிச்சு ரெண்டு பேருக்கும் கொடுத்திடுங்க, எனக்கு எதுவும் வேணாம், நீங்க ரெண்டு பேரும் என் பொறுப்பு” என்றான்.

இத்தனை காலம் வரை எதற்கும் வாயே திறந்திறாத தேவகி மெல்ல அடியெடுத்து வைத்து அவர்களிடம் வந்து நின்றார்.

“விஷ்ணு சொன்ன மாதிரியே செய்திடுங்க, நாம இவன் எங்க கூப்பிடுறானோ அங்க போய்டுவோம், பெத்தவளுக்கு மூத்த புள்ளதான் கொள்ளி போடணும்னு எல்லாம் எதுவும் பார்க்காதீங்க, நான் போனா எனக்கு எல்லாம் விஷ்ணுதான் செய்யணும்” என்றார்.

பதறிப் போன ஸ்ரீதர் அம்மாவை உரிமையாக கடிய, “பேசாதடா, உனக்கு எப்பவுமே சுய புத்தி கிடையாது. பொறுப்புன்னு வர்றப்போ மட்டும் நைசா இவன் கைல கொடுத்திடுறீங்க, சொத்து மட்டும் கூடுதலா வேணும். வச்சுக்கோங்க அந்த சொத்தை, என் வாழ்க்கைல எனக்கு கிடைச்ச பெரிய சொத்து எம்புள்ள இருக்கான் டா” விஷ்ணுவின் கையை பிடித்துக்கொண்டு கூறினார்.

“அம்மா, நான் வந்து பார்த்துக்கலையா உன்னை? எங்களுக்கு மட்டும் உம்மேல பாசம் இல்லைன்னு பேசாத” என்றான் ஹரி.

“வந்து எட்டி பார்த்திட்டு போனதும் எப்பவோ இவன் சென்னை போனப்போ கூட இருக்கேனு உன் ரூம்ல படுத்து தூங்கி எழுந்து போனதும்… நல்லா பார்த்துகிட்ட டா” குமுறலாக கேட்டார் தேவகி.

“ஏம்மா இப்படிலாம் பேசுற? சொத்துல பங்குங்கிறது உரிமை இல்லயாம்மா?” எனக் கேட்டான் ஸ்ரீதர்.

“அம்மாவை பார்க்கிறதும் உரிமைதான்டா, மாமியாருக்கு முடியாதப்போ பார்க்கிறதும் உரிமைதான்னு தெரியாதா உன் பொண்டாட்டிக்கு?” என அம்மா கேட்க ஸ்ரீதரால் பதில் சொல்ல முடியவில்லை.

என் மனைவியை பார்த்துக் கொள்ளவில்லை, மிருணாவை மட்டும் பார்க்கிறாய் என ஹரி சொல்ல, “நானாடா உங்கள வீட்ட விட்டு போக சொன்னேன்? கூட்டு குடும்பத்துல இருக்க மாட்டேன்னு உன் பொண்டாடிதானே போனா? இப்பவும் அவ இங்க வந்தாலும் வராட்டாலும் பிரசவம் நான்தான் பார்க்க போறேன், கல் மனசு இல்லடா எனக்கு” என்றார் தேவகி.

உன் மச்சானிடம் பேசி சர்ஜிகல் ஸ்டோருக்கு ஒப்பந்தம் கிடைக்கும் படி செய்திருந்தால் எவ்வளவோ உதவியாக இருந்திருக்கும். ஒப்பந்தம் ஒரு முறை கிடைத்ததோடு சரி, நல்ல வாய்ப்பை நீதான் கெடுத்து விட்டாய் என சந்தடி சாக்கில் விஷ்ணுவிடம் குறை படித்தார் கோபால்.

உங்களால்தான் எல்லாம், உங்களை பார்த்துதான் பிள்ளைகளும் பணம் சொத்துதான் பெரிது என நினைக்கிறார்கள், ஏதோ விஷ்ணு என்னை கொண்டு இருக்க வயதான காலத்தில் நாம் தவிக்க வேண்டாம் என கணவரிடம் கோவமாக சொன்னார் தேவகி.

அம்மாவை அமைதியடைய செய்த விஷ்ணு, மனைவியின் சொல் பேச்சு கேட்டு ஆடும் அண்ணன்களிடம் பொறுமையாக பேசினான்.

தர்ஷிணி அவளது பெற்றோரை எப்படி பார்க்கிறாள், பார்க்காதே என அம்மா எப்போதாவது சொன்னது உண்டா? பிறந்த வீட்டின் ஆதரவு இல்லாத ஸ்வேதாவை குறையாக பேசியது உண்டா? ஸ்வேதாவின் பிரசவத்தின் போதுதான் கணவருக்கு பயந்து தேவகி செல்லவில்லை. ஆனால் கோபால் சமாதானம் ஆகி வீட்டிற்கு அழைத்து வந்ததும் பேரனை வளர்த்து கொடுத்தது அவர்தானே என எல்லாம் எடுத்து சொன்னான்.

மூத்த சகோதரர்கள் இருவரும் விஷ்ணு சொல் படி கேட்பதாக ஒத்துக் கொண்டனர். கடையை ஹரிக்கு கொடுத்து விடலாம், வீடு மற்ற நிலங்கள் எல்லாம் பெற்றோரின் காலத்துக்கு பின்னர்தான் பிரிக்க பட வேண்டும். அப்போது கடை பங்கை கழித்து விட்டு ஹரிக்கு கொடுக்கும் படி பார்த்துக் கொள்ளலாம் என விஷ்ணு சொல்ல சம்மதித்தனர்.

ஹரியின் நிலை அப்போதும் உயராமல் இருந்தால் கண்டிப்பாக விஷ்ணு கை கொடுப்பான். இப்போதே சொன்னால் ஹரியிடமும் உத்வேகம் இருக்காது, ஸ்ரீதரும் முரண்டு பிடிப்பான் என்பதால் மனதிற்குள்ளேயே வைத்துக்கொண்டான்.

இப்போது தனித் தனியாக இருப்பது வேறு, பெற்றோரின் காலம் வரை எல்லா பண்டிகையும் இங்கேதான் கொண்டாட வேண்டும், அம்மா ஆசை படும் போது பேரப் பிள்ளைகளை கொண்டு வந்து காட்ட வேண்டும் என விஷ்ணு கூற மறுப்பாக எதுவும் பேசவில்லை அவனது அண்ணன்கள்.

ஸ்ரீதர் உடனே கிளம்பி விட்டான். ஸ்வேதா விருப்ப பட்டால் பிரசவம் வரை இங்கு வந்து இருக்கட்டும், இல்லையென்றால் பிரசவ நேரம் நான் வருகிறேன் என சொல்லி சின்ன மகனை அனுப்பி வைத்தார் தேவகி.

மாமியாரை விட்டால் தனக்கு வேறு நாதி இல்லை எனும் காரணத்தால் இனியாவது அனுசரனையாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தாள் ஸ்வேதா. இது தற்போதைய முடிவு, மனித மனம் மாறிக் கொண்டேதான் இருக்கும். அவளது தேவை முடிந்த பின் எப்படி மாறுவாளோ? ஆனால் அவளின் தயவு தேவகிக்கு தேவை இல்லை, அந்த நிலையில் தன் அம்மாவை விடவே மாட்டான் விஷ்ணு.

வீடு வந்த ஸ்ரீதரை சொத்து விஷயம் என்னவானது என தர்ஷிணியும் சந்திராவும் பிடித்துக்கொண்டனர். அப்பா நிறைய கடன்தான் வைத்திருக்கிறார், ஒரு பங்கு நீயும் கட்ட வேண்டும் என்றார் அம்மா. நல்ல வேலையில் இருக்கிறாய் நான் படிக்க வைத்து பெற்ற வேலைதானே என கேட்ட அப்பா முழு கடனையும் என்னையே கட்ட சொன்னார். நான் சண்டை போட்டு வந்து விட்டேன் என சொல்லி விட்டான்.

அதெப்படி அவ்வளவு கடன் வந்தது என தர்ஷிணி கேள்வி கேட்க, “அடைக்கிற மாதிரி இருந்தாதான் கேட்கணும், நான்தான் முடியாதுன்னு வந்திட்டேனே” என சொல்லி பேச்சை முடித்துக் கொண்டான்.

அம்மாவும் மகளுமாக பேசி பேசி மாய்ந்தனர். சிலர் இப்படித்தான், இதற்கெல்லாம் தீர்வே கிடையாது.

*****

மிருணாவின் பிரசவம் வரை கோவையில் இருப்பது, இடையில் அவளுக்கு செனனை செல்லும் நிலை வரும் போது கூடவே செல்வது, அவள் படம் எடுக்க தொடங்கும் சமயம் குழந்தையோடு நிரந்தரமாக சென்னைக்கே சென்று விடுவது என முடிவு செய்திருந்தான் விஷ்ணு.

குழந்தையும் வர போகும் சமயத்தில் தானும் தன்னுடைய தொழிலில் ஒரு முடிவெடுத்தாக வேண்டும் என நினைத்தவன் சென்னையிலேயே கீழே கிளினிக் மேலே வீடு என அமைப்பு இருக்கும் படி தனி வீடு தேட ப்ரோக்கரிடம் சொல்லி விட்டான்.

அம்மாவிடமும் மனைவியிடமும் தனது முடிவை பற்றி கூற, “எது சரின்னு தோணுதோ செய்டா, வேலைக்கு ஆள் இருக்காங்க, நானும் நல்லாத்தான் இருக்கேன், நீ சென்னைக்கே போகும் போது பழைய படி ஆகிடுவேன். முடிஞ்சப்போ நீ வா, நானும் வர்றேன். எங்களால தனியா முடியாதுன்னு வரும் போது உன்கிட்டேயே வந்திடுறோம்” என சொல்லி விட்டார் தேவகி.

மிருணாதான் தன்னால் கணவனுக்கு நிறைய சிரமங்கள் என கவலை கொண்டாள்.

“உன்னையும் பேபியையும் நல்ல விதமா பார்த்துக்க நினைக்கிறது எனக்கு சிரமமா? செல்வந்தர் வீட்டு சீமாட்டி நான்தான் வேணும்னு கட்டிக்கிட்டீங்களே… இத கூட செய்யலைனா அப்புறம் என்ன நான் மனுஷன்? எதையும் போட்டு குழப்பிக்காம ப்ரெக்னன்ஸிய என்ஜாய் பண்ணிட்டே உன் வேலைல கான்சென்ட்ரேட் பண்ணு. அதுதான் வேணும் எனக்கு” என்றான் விஷ்ணு.

மிருணாவுக்கு தன் கணவனை நினைத்து அத்தனை பெருமிதம்.

*****

அன்று ஞாயிற்று கிழமை. கோவையின் அரசு பள்ளி ஒன்றில் அன்பு மருத்துவமனை சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்று கொண்டிருந்தது. எட்டாவது மாதத்தின் நடுவில் இருந்த மலரும் அங்கு இருந்தாள்.

நாளையிலிருந்து மருத்துவமனை வரக்கூடாது, வீட்டில்தான் இருக்க வேண்டும் என உறுதியாக சொல்லியிருந்தான் பிரவாகன். முகாம் பற்றி நன்றாகவே விளம்பரம் விழிப்புணர்வு பிரச்சாரம் எல்லாம் முன்னரே செய்ய பட்டிருந்தது. ஆயினும் வெகு சிலரே தானம் செய்ய வந்திருந்தனர்.

உடனிருந்த மருத்துவமனை பணியாளர்களை சுற்று புறங்களில் சென்று கேம்ப்பெயின் செய்யும் படி கேட்டுக் கொண்டாள் மலர். ஏற்கனவே விளம்பரம் செய்தாகி விட்டது, மீண்டும் செய்தாலும் அத்தனை பலன் ஒன்றும் இருக்க போவதில்லை, நல்ல வெயில் வேறு, நேர விரயம் என அவர்கள் சோர்வாக சொன்னார்கள்.

அவர்களை உற்சாக படுத்திய மலர் அவளும் உடன் வருவதாக கிளம்பி விட்டாள். அவளது பாதுகாவலர்கள் வெயிலில் அலைய வேண்டாம் என கேட்டுக் கொண்டனர்.

“ரொம்ப நேரம் எல்லாம் இல்ல, அரை மணி நேரத்துல வந்திடுவேன்” என்றவள் சட்டென, “நீங்க எல்லாரும் கூட ப்ளட் டொனேட் பண்ணலாம்” என அவர்களிடம் பேசி பேசியே இரத்த தானம் செய்ய சம்மதம் பெற்று விட்டாள்.

“செய்றோம் மேடம், இப்ப டியூட்டில இருக்கோம்ல மேடம், முடிஞ்சதும் செய்றோம்” என்றார் பாதுகாவலர்.

“நல்லது செய்யணும்னு முடிவு பண்ணிட்டா தள்ளி போடக்கூடாது, மனசு மாறிப் போயிடும்” என்றவள் அப்போதே தானம் கொடுக்க வைத்து விட்டாள்.

அவளும் பத்து பணியாளர்களும் வெளியே செல்ல தயார் ஆனார்கள். கிஷோர் ஐந்து நபர்களை அழைத்து கொண்டு ஒரு பக்கம் செல்ல மற்ற ஐந்து நபர்களுடன் இவள் வேறு பக்கம் சென்றாள்.

பொது இடத்தில் என்னால் சில சங்கடங்களை பொறுக்க முடியாது என உறுதியாக கணவனிடம் சொல்லி அவளுடைய கவனிப்பாளர்களை அவளுடன் வரவிடாமல் செய்திருந்தாள்.

ஜே சி ஐ க்காக சிறப்பான முறையில் தயாராகி விட்டது மருத்துவமனை. பணியாளர்களுக்கிடையில் அந்த உத்வேகம் குறையாமல் இருக்க மெனக்கெட்டு கொண்டிருந்தான் பிரவா. ஞாயிறு என்றாலும் அவனுக்கு முழு வேலை நாள் என்றானது. அவனோடு சேர்ந்து தமனுக்கும் விடுமுறை என்பதே இல்லாமல் போனது.

வெயிலில் அலைகிறாள் மலர் என்ற செய்தி பிரவாகனை வந்தடைய சில நிமிடங்களில் எல்லாம் முகாம் நடக்கும் இடத்திற்கு வந்து விட்டான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement