Advertisement

பேரன்பு பிரவாகம் -38

அத்தியாயம் -38(1)

மிருணா கருவுற்றிருக்கிறாள் என்பதை உறுதி செய்து விட்டான் விஷ்ணு. எதிர் பார்க்காத ஒன்று என்றாலும் அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. குழப்ப மன நிலையில் தெரிந்த மனைவியின் பக்கத்தில் அமர்ந்தவன், “என்ன யோசிக்கிற?” எனக் கேட்டான்.

“கதை பண்ண சொல்லி ஆஃபர் வந்திருக்கு. எல்லாம் ஃபைனலைஸ் ஆனதும் உங்ககிட்ட சொல்லலாம்னு இருந்தேன். இப்போ…” என்றவள் பேச்சை நிறுத்தி விட்டு அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.

“இப்போ? கம்ப்ளீட் பண்ணு” கோவத்தை அடக்கிக் கொண்டு கேட்டான்.

அவனிடமிருந்து கோவமாக விலகியவள், “நம்ம குழந்தை இது, நீங்க நினைக்கிற அளவுக்கு மோசமானவ இல்ல நான்” கோவத்தோடே பேசி விட்டு எழப் போனாள்.

அவளை எழ விடாமல் பிடித்துக்கொண்டவன், “படம் பண்ண போறதா உறுதி ஆகிடுச்சா?”எனக் கேட்டான்.

அவளிடம் இருந்த இரண்டு கதைகளையும் கேட்ட தயாரிப்பாளர் இரண்டுமே பிடித்திருப்பதாகத்தான் கூறினார். ஆனால் அவருக்கு கால்ஷீட் கொடுத்திருக்கும் நாயகனுக்கு இந்த கதைகள் பொருத்தமாக இருக்காது எனவும் அவருக்கு ஏற்றது போல கதை எழுதி வருமாறும் சொல்லியிருக்கிறார். கணவனிடம் விவரமாக சொன்னாள்.

“இப்ப ஸ்டோரி ரெடி பண்ண என்ன தடை உனக்கு?” எனக் கேட்டான்.

“இப்ப பிரச்சனை இல்ல, எல்லாம் ஓகே ஆகி படம் ஸ்டார்ட் ஆகுறப்போ த்ரீ மன்த்ஸ்தான் ஆகியிருக்கும் நம்ம பேபிக்கு, எப்படி என்னால வேலை செய்ய முடியும்?” எனக் கேட்டவள் சில நொடிகள் கடந்து, “இட்ஸ் ஓகே, பாப்பா வளர்ந்ததும் நான் திரும்பவும் ட்ரை பண்றேன்” என்றாள்.

“குழந்தையெல்லாம் நான் பார்த்துப்பேன். இத ஸ்ட்ரெஸ் ஆக்கிக்காம நல்ல படியா ஸ்டோரி எழுது” என்றான்.

நம்பிக்கை இல்லாமல் அவள் பார்க்க, “ட்ரஸ்ட் மீ மிரு, உன் ப்ரெக்னன்ஸியோ பேபியோ உன்னை எந்த விதத்திலேயும் ஸ்டாப் பண்ணாது” என உறுதியாக சொன்னான்.

‘என்னால் முடியுமா?’ என பார்வையால் அவள் கேட்க, இரு கைகளையும் விரித்தான் விஷ்ணு. அவனுக்குள் அடங்கிக் கொண்டாள் மிருணா.

“உன்னால முடியலைன்னா யாரால முடியும்? நீ வேணா பாரு, அம்மா ஆனதுக்கு அப்புறம் இன்னும் கூட மெச்சூர்டா, இன்னும் கூட பொறுமையா மாறிடுவ” என்றான்.

“அப்ப இப்ப அப்படி இல்லயா நான்?”

“இல்லைனு சொல்லலை… வந்து… ம்ம்… கொஞ்சம் அப்படித்தான்” என்றான்.

அவனுக்கு பழிப்பு காட்டியவள், “எனக்கு தெரியும் நீங்க என்னையும் குழந்தையையும் நல்லா பார்த்துப்பீங்க, ஆனா டைம் எப்படி மேனேஜ் பண்ணுவீங்க? இப்பவே ஒரு இடத்துல இல்லாம உங்க பிராக்டீஸ் அஃபெக்ட் ஆகியிருக்கு. எனக்காக பார்த்து திரும்பவும் உங்க காரியர் பாதிக்க பட்டா என்னை என்னால மன்னிக்க முடியாது விஷ்ணு. ரெண்டு நாள் அப்படித்தான் டல்லா இருப்பேன், அப்புறம் சரி ஆகிடுவேன். சும்மா என்னை ஏத்தி விடாதீங்க. நான் பிரேக் எடுத்துக்கிறேன்”

“எதையும் நாம எப்படி ஹேண்டில் செய்றோம் அப்படிங்கிறதுலதான் எல்லாம் இருக்கு. வீ வில் மேனேஜ் மிரு” என அவன் சொல்ல, நிமிர்ந்து அவனது மோவாயில் முத்தம் வைத்து விலகினாள்.

“எம்மேல கோவம் இல்லையே?” எனக் கேட்டான்.

வலிக்காமல் அவனது மூக்கை பிடித்து திருகியவள், “உண்மையா அடி மனசுல குழந்தை ஆசை எனக்கு இருந்தது. ஒரு விஷயத்தை நினைச்சிட்டே இருந்தா நடக்கும்தானே? அதான் நம்மள மீறி நடந்து போச்சு. உங்க மேல கோவம்லாம் இல்லை” என்றாள்.

“அப்ப இதுக்கு நீதான் காரணம், என்னை ப்ளேம் பண்ணக்கூடாது” என்றான்.

“எது நான் காரணமா? பிஸியாலஜி சரியா படிக்காத டாக்டரா நீங்க?” எனக் கேட்டவள் அடுத்து பேசிய பேச்சில் விஷ்ணுவின் முகம் சிவந்து போய் விட்டது.

அவசரமாக அவளது வாயை பொத்தியவன், “டர்ட்டி கேர்ள்! உன்கிட்டதான் கண்ட்ரோல் கிடையாது, உன்னாலதான்” என்றவன்.

“யாருக்கு… எனக்கு கண்ட்ரோல் கிடையாது? நல்லா சொல்வீங்களே விஷ்ணு, போன மாசம் நீங்கதான் என்னை தேடி இங்க வந்தீங்க, இப்பதான் என் நினைப்பு வந்துச்சான்னு நான் சண்டைதான் போட்டேன். பதிலுக்கு சண்டை போடாம பாவமா மூஞ்சிய வச்சிட்டு இருந்தீங்க, அப்பவும் மனம் இறங்காம கோவமாதான் இருந்தேன். பின்னாலேயே சுத்தி சுத்தி வந்தீங்க. நான் ரொம்ப முறுக்கவும் இதோ இப்படித்தான் இடுப்பை வளைச்சு…” என்றவள் அன்றைய தினம் அவளது இடுப்பை அவன் வளைத்தது போலவே அவனை செய்ய வைத்தாள்.

“உங்ககிட்ட என்னை நெருக்கி என் கூட ஐ கான்ட்டாக்ட்ல வந்தீங்க, அப்படியே மனசை இழுக்குற பார்வை…” என்றாள்.

இப்போதும் இருவரது பார்வையும் ஒருவரை ஒருவர் சந்தித்திருக்க, “ஏதோ ஆசையா கிஸ்தான் பண்ண போறீங்கன்னு வெட்கமா நான் கண்ணை மூடினா, ‘சாரி மிரு, கோவ படாத, டூ டேஸ்ல கிளம்பிடுவேன், பாவம்ல நான், கொஞ்சம் சிரியேன்’ அப்படினு விவரமே இல்லாம பேசுனீங்க” என பட படவென பொரிந்தாள்.

அவன் குறும்பான சிரிப்பை அடக்கிக் கொண்டு, “அப்புறம்?” என்றான்.

“அப்புறம்… அப்புறம்… நான்தான் இது வேலைக்கு ஆகாதுன்னு…” என்றவளும் சிரிப்பை அடக்கினாள்.

“புரியுதா… நானா ஆரம்பிக்கல அன்னைக்கு” என்றான்.

“வெளில சொல்லிடாதீங்க” கிண்டலாக சொன்னாள்.

“தேங்க்ஸ் மிரு!” என்றவன் அன்று அவள் தந்ததை இன்று அவளுக்கு திருப்பிக் கொடுத்தான்.

மிருணா அவனிடம் மயங்கி நிற்க, அவள் தலையில் செல்லமாக முட்டியவன், “கொஞ்ச நேரம் முன்னாடி எவ்ளோ டென்ஷன் ஆக்கிட்ட? திருப்பி டென்ஷன் ஆக்காத. வீ ஹேவ் டு பீ இன் கண்ட்ரோல், அட்லீஸ்ட் ஃபார் த ஃபர்ஸ்ட் த்ரீ மன்த்ஸ்” என்றான்.

அசடு வழிய சிரித்தவள் அவன் மார்பிலேயே முகத்தை மறைத்துக் கொண்டாள்.

ஒரு வாரத்திற்கு மிருணாவுக்கு சென்னையில் வேலை இருக்க விஷ்ணுவும் அவளுடனே தங்கி விட்டான். விஷயம் தெரிந்து அரசி, தேவகி என அனைவருக்கும் மகிழ்ச்சி.

தங்கையை பார்க்க அடுத்த நாளே அக்காவையும் உடன் அழைத்துக் கொண்டு வந்து நின்றான் பிரவாகன். இரானில் இருந்து வரவழைக்க பட்ட குங்குமப் பூ, எகிப்திலிருந்து வரவழைக்கப் பட்டிருந்த பேரீச்சம் பழங்கள் என அவன் கொண்டு வந்திருந்தவை பார்த்து வியப்பும் திகைப்புமாக மனைவியை பார்த்தான் விஷ்ணு.

“இதெல்லாம் அண்ணிக்கு வாங்கினதா இருக்கும், எனக்குன்னு ஸ்பெஷல் இன்னும் வந்து சேரல, அதுக்குள்ள இப்படி பார்த்தா எப்படி?” என மிருணா கேட்க, “சரிதான்!” என்றான் விஷ்ணு.

“அக்கா… ‘என் பக்கத்துல உட்கார்ந்திருக்க பவன்யா கிள்ளிட்டே இருக்கா அண்ணா’ன்னு கண்ண கசக்கிட்டே சொன்ன மிருணாவை நினைவிருக்கா உனக்கு? மிருணாவே குழந்தைதான், அவளுக்கு குழந்தை வர போகுதுக்கா” பிரவா சொல்ல சிரித்தாள் கீர்த்தி.

“குழந்தை டாக்டருக்கே விவரம் போதாதுன்னு சொல்ற நீ குழந்தையா? ஓவரா இல்லயா மிரு உன் அண்ணன் சொல்றது?” மனைவியின் காதில் ரகசியமாக கேட்டான் விஷ்ணு.

“என்ன மிருணா மாப்ள என்ன சொல்றார்?” என பிரவாகன் கேட்க, “உங்க தங்கை நாலாங்கிளாஸ் படிச்சப்ப கூட படிச்ச பவன்யாவை எல்லாம் நினைவு வச்சிருக்கிறாரே, என் தங்கைக்கு இந்த விஷயம் தெரியுமான்னு விசாரிச்சிட்டு இருந்தேன்” என்றான் விஷ்ணு.

“அந்த பவன்யாவே நேர்ல வந்து வத்தி வச்சாலும் என் வைஃப் கூலா இருப்பா, எம்மேல அவ்ளோ நம்பிக்கை” என்றான் பிரவா.

“ஆமாம் இவருக்கெல்லாம் அது செட் ஆகாதுன்னு நினைச்சு கூலா இருப்பா மலர்” விடாமல் கிண்டல் செய்தான் விஷ்ணு.

“எது செட் ஆகாது மாப்ள, லண்டன்ல பீடியாட்ரிக்ஸ் படிக்கலையா நீங்க? செட் ஆகுறது பத்திதான் ரிசர்ச் பண்ணிட்டு இருந்தீங்களோ…”

இருவரும் விடாமல் ஒருவர் காலை ஒருவர் வாரிக் கொள்ள, மலர் காணொளி அழைப்பில் வந்தாள். மலர் மிருணாவிடம் பேசிய பின் அரசியும் மகளிடம் பேசினார்.

காந்திமதி காலை உணவு தயாரித்தருக்க அனைவரும் சேர்ந்து சாப்பிட்டனர். அதுவரை கல கலப்பாகவே சென்றது நேரம்.

சில நிமிடங்களில் மிருணா படப் பிடிப்புக்கு புறப்பட தயாராக இந்த சமயத்தில் வேலை எல்லாம் செய்யக் கூடாது என ஆரம்பித்து விட்டான் பிரவா.

“ஏன் செய்ய கூடாது?” எனக் கேட்டான் விஷ்ணு.

மலருக்கு ஏற்பட்ட தொந்தரவு பற்றி கூறிய பிரவா, “அசிஸ்டண்ட் டைரக்டர்னா ஈஸியான வேலையா? அப்படிலாம் ஏன் இவ கஷ்ட படணும், நீங்க என் ஹாஸ்பிடல் வர வேணாம், கோவைலேயே தனியா கிளினிக் ஓபன் பண்ணுங்க, இதான் சரியான டைம் மிருணாவை அங்க ஷிஃப்ட் பண்ண” என்றான்.

“ஆரம்பிச்சிட்டியா பிரவா? இதெல்லாம் எதுவும் பேசக்கூடாதுன்னு கிளம்பும் போதே சொன்னேதானே நான்?” எனக் கேட்டாள் கீர்த்தி.

“நீ சொன்ன, சரின்னு நான் எங்க சொன்னேன் க்கா? யார் ஹெல்ப்பும் இல்லாம இங்க மிருணா எப்படி இருப்பா? இவங்களுக்கு புரியலைன்னா எடுத்து சொல்லி நாமதானே புரிய வைக்கணும்?” என்றான் பிரவா.

“உங்க தங்கை மேல உங்களுக்கு இருக்க அக்கறைக்கு கொஞ்சமும் குறைஞ்சது இல்ல எனக்கு என் வைஃப் மேல உள்ள அக்கறை, நான் ஒரு டாக்டரும் கூட… ஸோ நான் நல்லா பார்த்துப்பேன்னு எம்மேல நம்பிக்கை வச்சு அவ அவளோட வேலைய கன்டினியூ பண்ண விடுங்க” என்றான் விஷ்ணு.

பிரவா எதுவோ சொல்லப் போக, அவனை பேச விடாமல் அதட்டி அடக்கினாள் கீர்த்தி.

புல்லட் எடுக்க கூடாது என மிருணாவிடம் முதல் நாளே கண்டிப்போடு கூறி விட்டான் விஷ்ணு. ஆகவே அவளை காரில் விட்டு வர அவனும் கிளம்பினான். மிருணாவுக்கு ஆயிரம் முறை பத்திரம் சொல்லி அவளின் உடன் பிறப்புகளும் புறப்பட்டு விட்டனர்.

காரில் செல்கையில் பிரவா அவனது அக்காவை முறைத்துக் கொண்டிருக்க, “உன்னை பத்தி தெரிஞ்சுதான் ‘பசங்கள நான் பார்த்துக்கிறேன், நீங்களும் இவரோட போயிட்டு வாங்க’ன்னு சொல்லி என்னையும் உன் கூட அனுப்பி வச்சா மலர். அப்படித்தான் நீயும் நடந்துக்கிற” என்றாள் கீர்த்தி.

“நீ அம்மாலாம் குழந்தைக்காக வீட்ல இருக்கலையா? எது முக்கியம்னு இந்த காலத்து பொண்ணுங்களுக்கு புரியவே மாட்டேங்குது. நீயும் சப்போர்ட் பண்ற”

“அது எங்க சாய்ஸ், மிருணா என்ன பண்ணணும்ங்கிறது அவளோட சாய்ஸ். மலர் என்ன செய்யணும்ங்கிறது…”

“போக்கா எப்ப பார்த்தாலும் அவங்க செய்றதுதான் சரி உனக்கு, ஒரு விஷயத்திலேயாவது என்னை சப்போர்ட் செய்றியா நீ?”

“உனக்கெதுக்குடா என் சப்போர்ட்? நீதான் மத்தவங்கள சப்போர்ட் பண்ண வைக்கிற”

“அதுவும் சரிதான், நான் சரியாதான் செய்றேன் அப்படிங்கும் போது யார் சப்போர்ட்டும் தேவையில்லைதான், தப்பு தப்பா செய்றவங்களுக்குதான் அதெல்லாம் தேவைப்படும்”

“எப்படி பேசுறான் பாரு. உன் அடாவடி பேச்சு எல்லாத்தையும் மலர்கிட்ட சொல்றேன்”

“சொல்லேன் எனக்கென்ன பயமா?”

“இல்லயா?” சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டாள்.

“பயம்னா என்னன்னு கூட தெரியாதுக்கா எனக்கு. ஆனா அவ மூஞ்சு சுண்டி போனா என்னவோ ஆகுது, எனக்கு வேற இளகின மனசா…”

“என்னடா தம்பி?” காது கேட்கவில்லை என்பது போல சைகை செய்து கொண்டே கேட்டாள்.

“யூ க்நொவ் டெண்டர் கோகனட்? எனக்கும் அந்த மாதிரி மனசுக்கா” என அவன் சொல்லிக் கொண்டிருக்க, கொட்டாவி விட்டாள்.

சலுகையாக அக்காவின் தோளில் சாய்ந்தவன், “அவகிட்ட சொல்லாத, மணிக்கணக்கா மூச்சு விடாம ஆர்க்யூ பண்ணுவா. மத்த சமயம்னா கூட சமாளிப்பேன், இப்போல்லாம் ரெண்டு வார்த்தை எக்ஸ்ட்ரா பேசினா மூச்சு வாங்குது அவளுக்கு. என்ன நடந்தாலும் எப்படித்தான் பொண்ணுங்கலாம் இப்படி பேசுறீங்களோ…” என்றான்.

“ஆமாம் ஆர்க்யூ பண்ணினதும் உடனே இவன் அக்ஸெப்ட் பண்ணிக்க போறான்” இப்படியே பேசிக் கொண்டு விமான நிலையம் வந்தடைந்தனர். அங்கிருந்து கோவை புறப்பட்டனர்.

ஒரு வாரம் மிருணாவுடன்தான் இருந்தான் விஷ்ணு. இணைய வழி கன்சல்டேஷன் என்பதால் பெரிதாக அவனுக்கு பிரச்சனைகள் இல்லை. உடன் இருந்து அழைத்து வா என்றே தேவகியும் சொல்லியிருந்தார்.

மிருணாவுக்கு ஓய்வு கிடைக்கவும் கோவை அழைத்து வந்து விட்டான். அம்மா வீடு, அக்கா வீடு என ஒரு வாரம் சீராடியவள் கதை எழுதும் வேலையை தொடங்கி விட்டாள். அவளுக்கு சிரமங்கள் எதுவும் இல்லாமல் மிக சிறப்பாக கவனித்துக் கொண்டான் விஷ்ணு.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement