Advertisement

அத்தியாயம் -37(3)

பேராசியர்கள் மாணவர்கள் இரு தரப்பிலும் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களுக்குள் சுமூக உறவு ஏற்படும் படி செய்து விட்டான் விஷ்ணு.

மருத்துவமனை ஊழியர்களுக்குள் நிலவி வந்த பிரிவினை வாதத்தை சரி செய்ய அனைவரிடமும் பிரவாகனே பேச்சு வார்த்தை நடத்தினான். அவர்களின் பிரச்சனைகளுக்கு மருத்துவமனை டீன் மற்றும் மூத்த மருத்துவர்களின் ஆலோசனைகள் மூலம் தீர்வு கண்டு பிடித்து உடனடியாக செயல்படுத்த வகை செய்தான்.

இப்படியாக ஓரளவு ஆசுவாச நிலைக்கு வந்து விட்டான் பிரவாகன்.

இலவச பிரிவில் ஒரு வார காலம் ஆய்வு செய்த கமிட்டியின் கடைசி நாள் ஆய்வு அன்று.

வழக்கம் போல மருத்துவமனை வந்திருந்த மலர் அந்த நேர்மையான அதிகாரியை சந்திக்க காத்திருந்தாள். அவரும் மறுக்காமல் அவளிடம் பேச நேரம் கொடுத்தார்.

“எவ்வளவோ அனுபவம் உள்ளவர் நீங்க. பழச விட்டுட்டு இப்போதைய நிலைமை என்னன்னு உங்களுக்கு நல்லாவே புரிஞ்சிருக்கும். நீங்க கொடுக்க போற ரிப்போர்ட்டோட இம்பேக்ட் என்னன்னும் உங்களுக்கு தெரியும். ட்ரஸ்ட்ல இருக்கிற பணமும் மாசா மாசம் ட்ரஸ்ட்டுக்கு வர்ற பணமும் கடந்த சில மாதங்களா ரொம்ப முறையா செலவாகிட்டு வருது. எல்லாமே உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். இப்ப ட்ரஸ்ட் கவர்ன்மெண்ட் கஸ்டடிக்கு போனா என்ன ஆகும்னு…” எனும் போது அவளது குரல் உடைந்தது.

தண்ணீர் பாட்டில் எடுத்து அவளிடம் நீட்டியவர் லேசாக புன்னகை செய்தார்.

 தண்ணீர் பருகி விட்டு அவரை கலக்கமாக பார்த்தாள் மலர்.

“நானும் நீங்களும் எங்கெங்கேயோ இருக்கிற இன்னும் கொஞ்ச பேரும் நேர்மையா இருக்க நினைக்கிறது எதனால? ஏதாவது நல்லது நடக்கணும்ங்கிறதுக்காகத்தானே?” என கேள்வி கேட்டார்.

மலர் ஆம் என தலையாட்ட, “ரிப்போர்ட் ரெடியா இருக்கு, இன்னும் ஹார்ட் காபி ரெடி ஆகல. உங்களுக்கு காட்டுறது இல்லீகல். ஆனாலும்…” என்றவர் அவருடைய லேப்டாப்பில் இருந்த ஆய்வறிக்கையை அவளிடம் காண்பித்தார்.

அதனை வாசித்து முடித்தவள் கண்ணீரும் சிரிப்புமாக அவரை பார்த்தாள். உணர்ச்சி மிகுதியில் அவளால் பேச முடியவில்லை. சில நொடிகள் சென்றே, “தேங்க்ஸ்” என்றாள் கர கரத்த குரலில்.

“என் ஃப்ரெண்ட்டோட மகனுக்கு போன மாசம் ஆக்சிடெண்ட்” என சொல்ல ஆரம்பித்தவரின் பேச்சை கவனித்தாள் மலர்.

அவனுக்கு இரத்தம் தேவை பட அவனுடையது அரிதான இரத்த வகை என்பதால் கிடைக்குமோ என பயந்து விட்டனர். ஆனால் சரியான சமயத்தில் கிடைத்து விட்டது. இரத்த தானம் வழங்கியவர் வேறு யாருமில்லை, சுமார் ஒரு வருடத்துக்கு முன் சிக்கலான பிரசவத்தின் போது பெய்ட் பிளாக்கிலிருந்து மருந்து எடுத்து மலரால் காப்பாற்ற பட்ட பெண்ணின் கணவன்தான் அவன்.

தனக்கு யாரென தெரியாத ஒரு உயிரை என்ன செய்தாவது காப்பாற்ற பாடுபட்ட மலர், அவனது மனதிலும் ஒரு உயிரை காக்க தன்னால் இயன்றதை செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தை விதைத்து விட்டாள். ஆறு மாதத்திக்கு ஒரு முறை இரத்த தானம் செய்ய வேண்டும் என தீர்மானமாக இருக்கிறான் அவன். இந்த அதிகாரியும் இவரது நண்பரும் அவனுக்கு நன்றி தெரிவிக்கும் போது அவனே பகிர்ந்து கொண்ட செய்தி இது.

அதனை அப்படியே இவளிடம் பகிர்ந்த அதிகாரி, “நீங்கதான் மலர் அவருக்கு இன்ஸ்பிரேஷன்” என்றார்.

மலர் அவரை ஊன்றி பார்த்திருக்க, “இங்க நடந்திருக்க இந்த நல்ல மாற்றம் உங்களாலன்னு தெரியும், இனியும் இது தொடரும்னு என்னால உணர முடியுது. இந்த ட்ரஸ்ட் சம்பந்தமா இனியும் யாருக்கும் லஞ்சம்னு அழ வேணாம்னு உங்க ஹஸ்பண்ட்கிட்ட சொல்லுங்க, கீப் இன்ஸ்பயரிங் மோர் அண்ட் மோர் பீப்பில் மலர், ஆல் த பெஸ்ட்!” என்றார்.

மலர் அத்தனை உற்சாகத்தோடு பிரவாகனிடம் பகிர்ந்து கொள்ள, விழிகள் விரித்து ‘அப்படியா!’ எனும் பாவனை காட்டியவன், “பரவாயில்லையே… நிஜமா அவராலதான் நம்ம ஊர்ல மழை பெய்யுது போல!” என்றான்.

“கிண்டலா?”

“எவடி நீ? நிஜமாதான் சொல்றேன். நீ மகிழ்ச்சினா நானும் மகிழ்ச்சி!” என்றான்.

அவளிடம் வாய் விட்டு சொல்லவில்லை என்றாலும் ‘ஏதோ ஒரு நல்லது செய்தால் பின்னாளில் எந்த விதத்திலாவது உதவும் போல’ என எண்ணிக் கொண்டான்.

ஆனால் பணம் இல்லாமல் முழுக்க முழுக்க நேர் வழியில் மட்டுமே எதையும் சாதிப்பது இயலாத விஷயம் என்பதில் உறுதியாகத்தான் இருந்தான்.

கமிட்டியின் அறிக்கை சாதகமாக இருந்தாலும் பொறுப்பிலிருக்கும் அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுக்காமல் இருக்க முடியாது. என்ன… அறிக்கை இப்போது சாதகமாக இருப்பதால் தொகை குறைவாக கொடுத்து காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

 கல்லூரி பொறுப்பை நிரந்தரமாக நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என விஷ்ணுவிடம் கேட்டுக் கொண்டான் பிரவாகன்.

“காலேஜ் அட்மினிஸ்ட்ரேஷன்! சாரி, இட்ஸ் நாட் மை கப் ஆஃப் டீ. எப்ப உங்களுக்கு உதவி தேவைப்பட்டாலும் வருவேன், வெளியில இருந்து எனக்கு தெரிஞ்ச சஜ்ஜஸன் சொல்றேன். வீம்பு பிடிச்சு இது வேணாம்னு சொல்லலை, எனக்கு டாக்டர் வேலைதான் பிடிச்சிருக்கு. மிரு சென்னைல இருக்கிறதால இங்க இருந்து வேலை செய்யணுங்கிறதே நடக்காத காரியம்” என சொல்லி விட்டான்.

ஒரு புன் சிரிப்புடன் கேட்டுக் கொண்ட பிரவா மேலும் தன் சின்ன மாப்பிள்ளையை வற்புறுத்தாமல் விட்டு விட்டான்.

தர்மேந்திரன் வெளியில் வர முடியாத படி வகையாக மாட்டிக்கொள்ளும் படி ஏற்பாடு செய்து விட்டான் பிரவாகன். இவனுக்கு பயந்தே தர்மேந்திரனுடன் எல்லா வகையிலும் தொடர்பை துண்டித்துக் கொண்ட ஏகாம்பரம் இலவச பிரிவின் வெளி நோயாளிகள் பிரிவிலேயே அமைதியாக இருந்து கொண்டார்.

கமிட்டியின் அறிக்கை வந்த பிறகு அன்பு நிறுவனத்தின் மீதிருந்த அவதூறு பேச்சுக்கள் மறைய ஆரம்பித்து விட்டன. அனைத்தையும் தன் நிறுவனத்துக்கான விளம்பரமாக மாற்றிக் கொண்டான் பிரவா. அவனுடைய ஐ டி விங் தீயாக வேலை செய்து சரிந்திருந்த நற் பெயரை மீண்டும் தூக்கி நிறுத்தி விட்டது.

இன்னொரு மருத்துவ கல்லூரியில் சிதம்பரம் ஏற்பாடு செய்து வைத்திருந்த பணி அவருக்கு கிட்டவில்லை. அவரது பொறுப்பற்ற தன்மை பற்றிய செய்தி எல்லா இடங்களிலும் பரவியிருந்ததே இதற்கு காரணம்.

சரத்தும் அவருமாக இணைந்து சிறிய அளவில் கிளினிக் ஒன்று ஆரம்பித்தனர். அதுவும் சிறப்பாக ஒன்றும் செயல் படவில்லை. தங்களுக்கு இருந்த நல்ல நிலையை தாங்களே கெடுத்து கொண்டோமே என்ற வருத்தத்தோடு அடுத்து வந்த நாட்களை கடத்த ஆரம்பித்தனர்.

அண்ணனும் பெரியப்பாவும் அன்பு மருத்துவமனையில் இல்லாத நிலையில் தான் மட்டும் இருக்கலாகாது என முடிவு செய்த தாரிகா திடீரென தன் வேலையை விட்டு விட்டாள். ஜே சி ஐ குழுவில் முக்கிய பொறுப்பில் இருந்த அவளது இடத்தை நிரப்ப மிக சரியான ஆள் உடனே கிடைக்கவில்லை.

தாரிகா ஏற்று செய்திருந்த பொறுப்பை தான் ஏற்றுக் கொள்ள முன் வந்தாள் மலர். இந்த நிலையில் அவளால் என்ன படிப்பிக்க முடியும் என தயங்கினான் பிரவாகன்.

“டெலிவரிக்கு இன்னும் நாள் இருக்கே, வேற ஒருத்தர் ட்ரைன் ஆகுற வரை டீச்சிங் ஸெஸன்ஸ் நான் பொறுப்பெடுத்துக்கிறேன்” என முடிவாக சொல்லி விட்டாள்.

தேவகியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. அப்பாவையும் அண்ணனையும் துணைக்கு வைத்து விட்டு மனைவிக்கு சர்ப்ரைசாக இருக்கட்டும் என மிருணாவிடம் சொல்லிக் கொள்ளாமல் சென்னை சென்றான் விஷ்ணு.

விடியற்காலையில் விஷ்ணு வீடு வரும் போது மிருணா விழித்துதான் இருந்தாள். அவனை கண்டதும் கட்டியணைத்துக் கொண்டவள் அழ ஆரம்பித்து விட்டாள்.

“அட என்ன மிரு இது? இப்போ ரீசன்ட்டாதானே மீட் பண்ணினோம், என்னாச்சு?” எனக் கேட்டுக் கொண்டே அவளது முதுகை வருடி விட்டான்.

தேம்பிக் கொண்டே, “ஆம் ப்ரெக்னண்ட் விஷ்ணு!” என்றாள்.

நன்றாக யோசித்த விஷ்ணுவால் ‘இருக்காது’ என்ற வழக்கமான பதிலை இந்த முறை உறுதியாக சொல்ல முடியவில்லை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement