Advertisement

பேரன்பு பிரவாகம் -37

அத்தியாயம் -37(1)

வளைகாப்பு முடிந்து உணவு பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. இங்கு வந்த விஷ்ணு அரை மணி நேரத்தில் எல்லாம் மீண்டும் கல்லூரிக்கு கிளம்பி விட்டான். குகனின் வருகைக்காக காத்திருந்த பிரவாகன் அவன் வந்ததும் புறப்பட தயாரானான்.

“சாப்பிட்டு கிளம்புங்க” என்றாள் மலர்.

“வந்த உடனே என்னவோ கொழ கொழன்னு சாப்பிட கொடுத்தியே… வயிறு ஃபுல், நீ சாப்பிடு, வந்திடுறேன்” என சொல்லி நிற்காமல் சென்று விட்டான்.

ஏற்கனவே நடந்த ராகிங் பிரச்சனை, பேராசியர் ஒருவர் திட்டியது, எங்கள் குறைகளை தீர்த்து வைக்காமல் அலட்சியம் செய்தனர் என பல பிரச்சனைகளை கூறிய மாணவர்கள் ஆக மொத்தத்தில் நிர்வாகம் சரியே இல்லை, விடுதியில் ஏதோ அந்த பெண்ணுக்கு பிரச்சனை ஆகியிருக்கிறது, எங்களிடமிருந்து மறைக்க பார்க்கிறீர்கள் என கிளர்ச்சி செய்ய ஆரம்பித்திருந்தனர்.

பிரச்சனையை மிகவும் நிதானமாகவும் கவனமாகவும் கையாண்டான் விஷ்ணு. எல்லா மாணவர்களுக்கும் விருப்பமான பேராசியர் என யாராவது இருப்பார்களே, யாரென கேட்டறிந்து கொண்டு அவரை முன்னிறுத்தி மாணவர்களிடம் பேசினான்.

விடுதியில் அந்த பெண் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறாள். எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் என்னவென நேர்மையாக விசாரிக்க படும். இந்த நேரம் நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்காமல் போனால் யாருக்கு நட்டம்?

கண்டிப்பாக அந்த பெண் பிழைத்து விடுவாள், இவ்வளவு பெரிய பிரச்சனை ஆக்கினீர்கள் என்றால் வெளியில் கண்ட படி செய்திகள் பரவும், அந்த மாணவி மற்றும் அவளின் பெற்றோரின் மனநிலை எப்படி இருக்கும்? நீங்கள் கூறும் பிரச்சனைகள் அனைத்தையும் ஒரு வாரத்தில் பேசி சரி செய்து தருகிறேன் என்றெல்லாம் அவர்களுக்கு நம்பிக்கை வரும் படி பேசி அவர்களை அமைதி காக்க வைத்து விட்டான்.

காவல்துறையினர் விசாரணை என வந்த போதும் முழு ஒத்துழைப்பு கிடைக்கும் படி செய்தான்.

மீடியாக்கள் மூலமாக இந்த செய்தியை கசிய விடாமல் காப்பதுதான் பெரும் பாடாக இருந்தது. ஏற்கனவே அன்பு நிறுவனம் பற்றி அவதூறுகள் எழுந்திருக்க இந்த செய்தியும் வெளி வந்தால் அவ்வளவுதான் என்ற நிலை. பணத்தை தண்ணீராக கரைத்து செலவழித்து மீடியாக்களின் வாயை அடைத்திருந்தான் பிரவாகன்.

அந்த மாணவியின் மருத்துவத்துக்காக தனியே சிறப்பு மருத்துவக் குழு அமைக்க பட்டிருக்க அவர்கள் அவளின் உயிரை மீட்டு எடுக்க போராடிக் கொண்டிருந்தனர்.

இலவச மருத்துவமனையில் ஆய்வு நடத்த வந்திருந்த குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற சுகதாரத் துறை செயலாளர். அத்தனை கடுமை நிறைந்தவராக இருந்தார். யாரும் அணுகவே பயந்தனர். பிரவாகன் வர அவனிடம் முகம் கொடுத்து கூட பேசவில்லை.

“எந்த ஊர் காரர்டா இந்த எரி மிளகா?” தமனிடம் சின்ன குரலில் கேட்டான் பிரவா.

“கோயம்புத்தூர்காரர்தான் ஸார், கொஞ்சம் சிரிச்சு பேசினாலே அட்வாண்ட்டேஜ் எடுக்கிறாங்கன்னு சர்வீஸ் வந்த புதுசுலேயே சிரிக்கிறதையே மறந்திட்டாராம் ஸார்” என்றான் தமன்.

“சரியா போச்சு, எதுவும் டவுட்னா கூப்பிடட்டும்” என்ற பிரவா அங்கிருந்து வெளியேறி விட்டான்.

பிரவாகன் அங்கிருந்த டியூட்டி டாக்டர் அறையில் இருக்க, மலர் வந்திருப்பதாக தகவல் வந்தது. நம்பாத பார்வையோடு இவன் வெளியில் வர தகவல் உண்மைதான்.

 பட்டுப் புடவை கலைந்து சுடிதாருக்கு மாறியிருந்தாள். கைகள் இரண்டையும் வளையைல்கள் அலங்கரித்திருந்தன. களைப்பான தோற்றத்தோடு வயிற்றில் அணைவாக ஒரு கை வைத்துக்கொண்டு மெல்ல நடந்து வந்தாள்.

வேகமாக அவளை நெருங்கியவன் கண்டனமாக பார்த்துக் கொண்டே, “என்ன செய்ற நீ? எம்மேல நம்பிக்கை இல்லாம வந்தியா?” என கோவமாக கேட்டான்.

“வீட்ல இருக்க முடியலைங்க, ரொம்ப ரெஸ்ட்லெஸா இருந்தது. அதான் வந்திட்டேன்” என்றவளிடம் மேலும் கோவத்தை காட்ட முடியவில்லை.

 அறையில் ஓய்வு எடுக்கும் படி சொன்னான். மறுத்து விட்டவள் ஆய்வு குழு இருக்கும் அலுவலக அறைக்கு செல்ல, “என்னை மட்டுமில்லாம எம்பசங்கள போட்டும் படுத்தறடி” என முணு முணுத்துக் கொண்டே இவனும் அவளை பின் தொடர்ந்தான்.

அதற்குள் ட்ரஸ்ட் உறுப்பினர்கள் வந்து விட்டதாக தமன் சொல்ல அவர்களை மீட்டிங் ஹாலில் இருக்க சொல்லி விட்டான்.

மலரை கண்ட கமிட்டியின் தலைமை அதிகாரி புருவம் சுருக்கி, “டாக்டர் மலர்தானே?” எனக் கேட்டார்.

ஆம் என்றவள் எப்படி தன்னை தெரியும் என கேட்டாள்.

இரண்டு முறை மெடிக்கல் கேம்ப்பில் அவளை கண்டிருப்பதாக சொன்னவர், “ஐ வாஷ்க்கு நடந்த கேம்ப்ல டைம் பாஸ் பண்ணிட்டிருந்த யாரையும் எதுவும் சொல்ல முடியாம நீங்க மட்டும் உங்க டியூட்டிய பார்த்தீங்க” என்றார்.

“அது…” என தடுமாறிய மலர், பின் அவரை நேராக சந்தித்து, “இப்ப அப்படிலாம் கண் துடைப்புக்கு கேம்ப் நடக்கிறது இல்லை ஸார்” என்றாள்.

அவளை ஒரு பார்வை பார்த்தார். அவள் சொன்னதை ஆமோதிக்கிறாரா அல்லது மறுக்கிறாரா என யாராலும் கணிக்க முடியாத பார்வை.

நான்கு வருடங்களுக்கு முன் மருந்துகள் வாங்க விடப்பட்ட கான்ட்ராக்ட் சம்பந்த பட்ட கோப்பை எடுத்து வைத்தார். குகன் நிறுவனத்துக்கு சென்றிருந்தது கான்ட்ராக்ட். அதற்கடுத்த மூன்று மாதங்களில் வேறு ஒரு நிறுவனத்துக்கு கான்ட்ராக்ட் சென்றது போல காண்பிக்க பட்டிருக்க, “இந்த ஃபார்மா கம்பெனி எங்க இருக்கு?” என கேள்வி கேட்டார்.

அந்த மருந்து நிறுவனம் மிகவும் சிறிய நிறுவனம். ஒப்பந்தம் அங்கு கொடுக்க பட்டது போல காண்பிக்க பட்டு குகன் நிறுவனம் மூலமாகவே சப்ளை பெறப்பட்டிருந்தது.

 அரை மணி நேரத்தில் இன்னும் சில கோப்புகளை ஆராய்ந்தவர், “கான்ட்ராக்ட்ல வாங்கினதா சொல்லியிருக்க ட்ரக்ஸ் அந்த கம்பெனிஸ்ல தயாரிக்கிறதே இல்லையே. இந்த ஃபேக் ரெகார்டுஸ் ரொம்ப அழகா தயாரிச்சிருக்கீங்க” என்றார்.

அத்தனை கவனமாக அனைத்தையும் சரி செய்து விட்டதாக நினைத்திருந்த பிரவாகனின் முகம் இருளடைந்து விட்டது.

கமிட்டியின் மற்ற உறுப்பினர்களில் ஒருவர் பிரவாகனுக்கு சாதகமாக ஏதோ பேசி முட்டு கொடுக்க பார்த்தார்.

“எவ்ளோ வாங்கினீங்க இவர்கிட்டேருந்து?” பட்டென கேட்டு அவரது வாயை அடைத்து விட்டார் தலைமை அதிகாரி.

கேம்ப் நடத்த படும் போது பெரும் தொகை செலவழிக்க பட்டிருப்பதாக கணக்குகள் இருக்க, “ரெண்டு கேம்ப் நானே நேர்ல பார்த்திருக்கேன். இவ்ளோ செலவு ஆனதா என்ன?” நக்கலாக கேட்டார்.

“மாசம் ஒரு கேம்ப் நடத்துறோம், ரெண்டு கேம்ப் வச்சு முடிவு பண்ணாதீங்க” என்ற பிரவா குழுவினர் கேட்டதை செய்து கொண்டிருந்த மருத்துவமனை நிர்வாகிகளை அர்த்தமாக பார்த்தான்.

 சமீபத்தில் நடந்த முகாம்களின் செயல் பாடுகள், அதில் பயனடைந்தோரின் விவரங்கள், அது சம்பந்த பட்ட புகைப்படங்கள், காணொளிகள் போன்றவற்றை காட்டினார்கள் நிர்வாகிகள்.

“இது இப்போ, நான் கேட்கிறது பழைய கணக்கு” என்றார்.

“அப்பவும் இப்படித்தான் ஸார், இது போல ப்ரூஃப் வச்சுக்காம போயிட்டோம்” என்றான் பிரவா.

என்ன கேட்டாலும் சமாளித்து பதில் கொடுப்பான் என புரிந்து கொண்டவர், “ஓ! உங்க சித்தப்பா தெளிவா எல்லாம் சொல்லிட்டார். பழைய சூப்பரிண்டெண்ட்டண்ட் ஏகாம்பரம் எங்க… அவரை வர சொல்லுங்க” என்றார்.

ஏகாம்பரம் இப்பொழுது பிரவாகனுக்கு எதிராக செயல் படுவதில்லை. ஆனாலும் விசாரணையில் சொதப்பி விடுவார் என தெரிந்து அதற்கான முன்னேற்பாட்டை முன்னரே செய்திருந்தான் பிரவா.

“மிஸ்டர் ஏகாம்பரத்தை வர சொல்லுங்க” மீண்டும் கூறினார் அதிகாரி.

“அவருக்கு ஹெச் ஒன் என் ஒன் பாசிட்டிவ். (நுரையீரல் சார்ந்த தொற்று ) நெகடிவ் பிரஷர் வார்டுல ஐசொலேட் பண்ணி வச்சிருக்கோம். விசாரணை செய்ற நிலைல இல்லை அவர். நல்லாகி வரட்டும், உங்களுக்கு கோ ஆபரேட் செய்வார்” என்றான் பிரவாகன்.

“வீடியோ கால்ல பேசலாம்தானே?” என்றார் அதிகாரி.

“கான்சியஸ்ல இருந்தா பேசலாம்தான், பட் ஹீ இஸ் கிரிட்டிகல். அவர் கண்டிஷன் பத்தி அவரை ட்ரீட் பண்ற டாக்டர்கிட்ட வேணும்னா வீடியோ கால்ல பேசி தெரிஞ்சுக்கோங்க” என அசராமல் பதில் சொன்ன பிரவா, தமனை ஒரு நொடி ஒரு அழுத்தமான பார்வை பார்த்து திரும்பினான்.

எதிர்மறை அழுத்தம் கொண்ட வார்டில் டிவி பார்த்துக் கொண்டே ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் ஏகாம்பரத்தை கவலைக்கிடமான நோயாளியாக மாற்றம் செய்யும் காரியத்தை நிறைவேற்ற சத்தமில்லாமல் வெளியேறி சென்றான் தமன்.

கணவனின் பொய்யில் நொடி நேரம் திகைத்த மலர் உடனே சுதாரித்து இயல்பாக முகத்தை வைத்துக்கொள்ள, கோவமான அதிகாரி ட்ரஸ்ட் சம்பந்தமாக குடைய ஆரம்பித்து விட்டார்.

அனைத்திற்கும் அரை நொடி கூட யோசனை செய்யாமல் பட் பட்டென பதில்கள் கொடுத்தான். என்ன கேள்விகள் வரலாம் என்ற அனுமானம் இல்லாமலா இருந்திருப்பான்?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement