Advertisement

அத்தியாயம் -36(3)

கோவை வந்தடைந்த மிருணா அக்காவிடமிருந்து வந்த குறுஞ்செய்தி பார்த்து விட்டு கவலை கொண்டாள். வேறு சமயம் என்றால் அவள் அண்ணன் சமாளிப்பான் என தெரியும். ஏற்கனவே பல்வேறு பிரச்சனைகள் ஓடிக் கொண்டிருக்க, இன்று வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி வேறு இருக்க இப்போதா இப்படி ஆக வேண்டும் என நினைத்தாள்.

மிருணாவை அழைப்பதற்காக விமான நிலையம் வந்திருந்த விஷ்ணு அவளது முகக் கலக்கம் கண்டு என்னவென விசாரிக்க அவளும் சொன்னாள். எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தவன் காரெடுத்து விட்டான்.

வீடு வந்த பின், “இறங்கிக்க மிரு, அம்மாவை பார்த்துக்க, உன் அண்ணனை பார்த்திட்டு வர்றேன்” என்றான்.

கண்கள் கலங்க கணவனை அணைத்துக் கொண்டவள், “தேங்க்ஸ்!” என்றாள்.

“எதுக்கு? உன் அண்ணனுக்கும் எனக்கும் ஆகாதுதான். எனக்கு பிரச்சனைன்னா தங்கை ஹஸ்பண்ட்னு ஓடி வந்து நிக்கிறாரே… நானும் என் வைஃபோட அண்ணனுக்காக ஓடிப் போய் நிக்க வேணாமா? இப்ப போய் தள்ளி நிப்பேன்னு நினைச்சியா? நீ வீட்டுக்குள்ள போ” என்றவன் அவள் காரிலிருந்து இறங்கியதும் நேராக அன்பு மருத்துவமனை சென்றான்.

இன்னும் சரியாக விடிந்திருக்கவில்லை. தன் அலுவலக அறையில் இருந்தான் பிரவாகன். விஷ்ணு வந்து சேர அவனை தொடர்ந்து குகனும் வந்து விட்டான். நிச்சயமாக அவன் அவர்களை எதிர்பார்த்திருக்கவில்லை.

என்ன நடந்தது, என்ன செய்திருக்கிறார்கள் எல்லாம் கேட்டுக் கொண்ட விஷ்ணு, “எம் எல் சி ரெய்ஸ் பண்ணாம இருந்தா சட்ட சிக்கல் ஆகும். ஸ்டூடெண்ட்ஸ் விஷயத்துல உங்க பணம் பவர் எல்லாம் வேலை செய்யாது. விசாரிச்ச வரை அந்த பொண்ணுக்கு காலேஜ் அளவுல எந்த பிரச்சனையும் இல்லன்னு சொல்றீங்களே, பெட்டர் எம் எல் சி ரெய்ஸ் பண்ணுங்க” என அறிவுறுத்தினான்.

“விஷயம் வெளில வர விட்டா காலேஜ் ரெப்யூடேஷன் ஸ்பாயில் ஆகிடாதா?” எனக் கேட்டான் குகன்.

“அப்படியே எல்லாம் மூடி மறைக்க முடியாது. பெருசாகாம பார்த்துக்கலாம். ஸ்டூடெண்ட்ஸ் சைட்ல ஏதாவது சின்ன விஷயம் கூட நியாயமா நடக்கலைன்னு தெரிஞ்சா அதுதான் பெரிய ஆபத்தாகிடும். எம் எல் சி காபி உடனே பக்கத்து ஸ்டேஷனுக்கு அனுப்பி விடுங்க” என விஷ்ணு அழுத்தி சொல்ல உடனே செயலானது.

சற்று நேரத்தில் பத்மநாதன், கிருஷ்ணகுமார், கிஷோர் போன்றோரும் வந்து விட்டனர்.

போலீசார் வந்திருப்பதாக தகவல் கிடைத்தது.

அதற்குள் பல்வேறு கற்பனையான காரணங்கள் மாணவர்களுக்குள் உலா வர ஆரம்பித்தன.

கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக பல விதமான புரளிகள் கிளம்பி விட்டன. மாணவர்கள் போராட்டம் செய்ய எத்தனிப்பதாக செய்தி வரவும் எழுந்து நின்றான் பிரவாகன்.

“இன்னிக்கு உங்களால இத பார்க்க முடியாது. நீங்க சம்மதிச்சா நான் ஹேண்டில் செய்றேன். ஃபங்ஷனை அட்டெண்ட் பண்ணுங்க, மலர் எதிர் பார்த்திட்டு இருப்பா உங்களை” என்றான் விஷ்ணு.

 விஷ்ணுவின் புத்திசாலித்தனம் பற்றி அறிந்திருந்த பிரவாகன் அவன் மீது நம்பிக்கை வைத்து அவனுக்கே முழு அதிகாரமும் கொடுத்து விட்டான்.

கமிட்டியை தான் கவனித்து கொள்வதாக கூறி விட்டான் குகன்.

வளைகாப்பு நிகழ்ச்சியை வேறு நாள் தள்ளி வைக்கலாம் என மலர் கூற, “அவன் ஒத்துக்க மாட்டான் மலர். வெளில ஆயிரம் பிரச்சனை வரும், எல்லாத்தையும் சொந்த வாழ்க்கைக்குள்ள கொண்டு வரக்கூடாதுன்னு வேதாந்தம் பேசுவான். ரெண்டு நாள் முன்னாடின்னா கூட ஏதாவது செய்திருக்கலாம். லாஸ்ட் மினிட்ல என்ன செய்ய முடியும்? எல்லாம் நல்ல படியா நடக்கும், நீ மனச கெட்டியா வச்சுக்க” என சமாதானம் செய்தாள் கீர்த்தி.

தேவகி இப்போது நடமாட ஆரம்பித்திருந்தார். ஆனால் வெளி விஷேஷங்களுக்கு செல்வதில்லை. ஆகவே மாமனாருடன் மாமியாரையும் அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தாள் மிருணா.

வீட்டில் வந்து குவிந்திருந்த உறவுகளை எல்லாம் கீர்த்தி, மலர், மிருணா மூவரும் சமாளித்தனர். யாருக்கும் எந்த விவரமும் தெரிய வரவில்லை.

பிரவாகன் எங்கே என்ற கேள்விக்கு, “என் ஹஸ்பண்ட் எவ்ளோ பிஸின்னு நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியனுமா?” என சிரித்த முகமாக அவர்களையே கேள்வி கேட்டாள் மலர்.

உன் வீட்டிலிருந்து இன்னும் யாரும் வரவில்லையா என கீர்த்தியிடம் எழுப்ப பட்ட கேள்விக்கு, “என் மாமனாருக்கு உடம்பு முடியலை. அவருகிட்டேருந்து இன்ஃபெக்ஷன் ஆகி ஒவ்வொருத்தருக்கா முடியாம போய்டுச்சு. ஒண்ணுக்கு மூணு டாக்டர் உள்ள குடும்பம், கூட்டத்துல போய் எல்லாருக்கும் ஃபீவரை பரப்ப வேணாம்னு வர யோசிச்சாங்க. நான்தான் யாராவது ரொம்ப உங்களை தேடினாங்கன்னா ஒரு எட்டு வந்திட்டு போங்கன்னு சொன்னேன். வர சொல்லட்டுமா பெரியத்தை?” எனக் கேட்டு அவர் வாயை மூடிக் கொள்ள செய்து விட்டாள்.

தர்மேந்திரனின் கைது விவகாரம் பற்றி அலசி ஆராயப் பட, “துரோகம் செய்றவங்கள வேற என்ன செய்யணும்? நல்ல விஷேஷம் நடக்கிறப்போ இந்த பேச்சு வேணாமே…” நாசூக்காக கண்டித்து விட்டாள் மிருணா.

செல்வம் வீட்டிலிருந்து அகிலாவின் குடும்பம் மற்றும் அவர்களின் சொந்த பந்தங்களோடு அனைவரும் வந்து விட்டனர்.

வெளித் தோட்டம் ஆடம்பரமான அலங்காரத்தோடு தயாராகியிருந்தது. கணவன் வராமல் எப்படி தான் மட்டும் செல்ல என கலக்கத்தோடு பார்த்திருந்தாள் மலர்.

 பிரவாகனின் கார் பக்கவாட்டு வாயில் வழியாக உள்ளே வருவதாக செய்தி வர, “ஸ்டேஜ்க்கு வந்திடுவான், நீ வா” என அழைத்தாள் கீர்த்தி.

“அவர் வரட்டுமே க்கா, அவரோட வர்றேன்” என மலர் சொல்ல, விமலா ஏதோ சொல்லப் போக, யாரையும் எதுவும் சொல்ல விடாமல் மலரை மட்டும் விட்டு அனைவரையும் அழைத்து சென்று விட்டாள் கீர்த்தி.

சில நிமிடங்களில் அறைக்கு வந்து விட்டான் பிரவாகன். அவனது சோர்ந்த தோற்றமும் சிவந்த விழிகளும் கலைந்த கேசமும் மலரை கலக்கமுற செய்ய ஒரு புன்னகையுடன் குளியலறை சென்று விட்டான்.

குளித்து வந்தவன் கையில் மெரூன் நிற குர்தா, வேஷ்டி என மலர் கொடுக்க வேகமாக தயாரானவன் தலையை கோதி விட்டுக் கொண்டே அவள் பக்கத்தில் வந்து நிற்க, “அந்த பொண்ணு எப்படி இருக்கா இப்போ?” என கவலையாக கேட்டாள் மலர்.

“இம்ப்ரூவிங் மலர், வா போலாம்” என்றவன் அவள் கையை பிடிக்க, அவனது பிடியை விலக்கி விட்டாள்.

அவன் என்னவென பார்க்க, அவளுக்கென சிறு ஹாட்கேஸில் இருந்த சிறு தானிய கஞ்சியை எடுத்து வந்து கொடுத்தாள்.

“டைம் இல்ல மலர்…” என அவன் சொல்லிக் கொண்டிருக்க, கஞ்சியை ஸ்பூனில் எடுத்து அவனிடம் நீட்ட ஒரு வாய் வாங்கிக் கொண்டவன், பின் அவனே வாங்கி மள மளவென சாப்பிட ஆரம்பித்தான்.

“வயித்து பசி கூட மறந்து போயிடும்” கண்டமான மனைவியின் முணு முணுப்பை கண்டு கொள்ளாமல் காலி கேஸராலை வைத்து விட்டு அவளை அழைத்துக் கொண்டு வெளியேற எத்தனிக்க தமனிடமிருந்து அழைப்பு.

அரசு அமைத்த கமிட்டி உறுப்பினர்கள் வந்து விட்டதாக சொன்னவன் அறக்கட்டளை தலைவராகிய இவனும் மற்ற உறுப்பினர்களும் மதியம் போல வர வேண்டியிருக்கும் என்பதை சொன்னான்.

“நல்லா கவனி அவங்கள, ஒரு நாள்ல ஒண்ணும் தெரிஞ்சுக்க முடியாது, அவசர படாம நிதானமா பார்க்க சொல்லு எல்லாத்தையும்” சாதாரணமாக சொன்னான் பிரவா.

“அதான் கவனிச்சாச்சங்களே ஸார், மொத்தம்…” சில கோடிகளை அவன் குறிப்பிட்டு கூற, தன் பேச்சுக்கு காது கொடுத்திருந்த மலரை பார்த்துக் கொண்டே குரலை செருமியவன், “அப்பப்ப லூஸ் டாக் நிறைய பண்ற, நேர்ல வந்து உன்னை டைட் பண்றேன்” என சொல்லி வைத்தான் பிரவா.

“என்னாச்சுங்க…” என மலர் கேட்க, “கெஸ்ட் வந்திட்டாங்களாம். பார்த்துக்க சொன்னேன், கமான் மலர், நல்ல நேரத்துல வளையல் போடணும் உனக்கு” என சொல்லி அடுத்து அவளை எதுவும் பேச விடாமல் செய்து அழைத்து சென்றான்.

கணவனிடம் கைப்பேசியில் பேசி விட்டு வைத்த கீர்த்தி, குகனும் விஷ்ணுவும் சற்று நேரத்தில் வந்து விடுவார்கள் என தங்கையிடம் சொன்னாள்.

“இன்னிக்கு போய் இவ்ளோ பிரச்சனைன்னு கவலை படறதா… இல்ல அண்ணனுக்காக விஷ்ணு போய் நிக்கிறார்னு சந்தோஷ படுறதான்னு தெரியலக்கா” என மிருணா சொல்லிக் கொண்டிருக்க, மலரை தானே கைப்பிடித்து அழைத்து வந்து மேடையில் அமர வைத்தான் பிரவா.

 விமலா மாலையை கையில் எடுத்து தர, அதை வாங்கிக் கொண்டவன் மனைவிக்கு அணிவித்து விட்டு சிரித்தான்.

 அவளும் முயற்சி செய்து சிரிக்க, “தேவையில்லாம டென்ஷன் ஆகாத, எவ்ரிதிங் இஸ் அண்டர் மை கண்ட்ரோல். ஐ பிராமிஸ் யூ… ஃப்ரீ பிளாக் எப்பவும் போல ஃபங்ஷன் ஆகும்” என்றான்.

ஆமோதிப்பது போல தலையசைத்த மலர் புன்னகை செய்ய அவளது முகத்தை கண்களில் நிறைத்துக் கொண்டு விலகி நின்றான் பிரவாகன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement